நட்பு சிறுகதை – நிரஞ்சனன்

நட்பு சிறுகதை – நிரஞ்சனன்




அவன் பெயர் சிவா, திருமண வயது. மென்பொருள் பொறியியல் வேலை செய்கிறான்….. கலகலவென இருக்க மாட்டான், சட்டுன்னு யாரிடமும் பேசி விட மாட்டான், தேவை என்னவோ அதுக்கு மட்டும் தான்….. தன் FB உள்டப்பியுள் கூட அப்படித்தான், இவனிடம் பழகுபவர்களும் இவன் இப்படித்தான் என ஒரு எல்லையோடு இருந்து விடுவார்கள், இவன் அந்த எல்லைக்குள் தான் இருப்பான்.

இவனுக்கு ஒரு பெயரின் மீது ஈர்ப்பு, தன் முகப்புத்தக கணக்கில் அந்த பெயர் கொண்ட நபர்களை மட்டுமே அதிகம் சேர்த்து இருப்பான், வயதோ பாலினமோ பற்றிய, கவலை இல்லை. அதில் ஒரு கணக்கின் மீது ஈர்ப்பு, காலையில் முழிப்பது முதல் இரவில் இமை மூடவது வரை அனைத்தும் சொல்லி விடுவான், எதிர்பக்கமும் இவன் சொல்லுவதை கேட்டுக்கொண்டே இருப்பார்.

சில நேரம் சிரிப்பு, விவாதம் அறிவுரை என சென்றுக் கொண்டே இருக்கும். சிவா தன்னை பற்றிய விசயங்கள் அனைத்தும் கூறுவான் ஆன அவர்களை பற்றி எதுவும் கேட்க மாட்டான், அவர்களா சொன்னால் கேட்டுக் கொள்வான். இருப்பினும் அவரைப் பற்றி அவர் எதுவும் சொன்னது இல்லை, இவனும் கேட்பதில்லை.

பேசியது கிடையாது, எழுத்து மெசேஜ் மட்டுமே, ஆடியோ, இமேஜ் கூட கிடையாது…. இவன் அனுப்புவான் அவளிடம் இருந்து எதுவும் வராது….அது உசார் என்றும் கொள்ளலாம்….. ஆன சிவா எல்லை மீறவே மாட்டேன், அவர் திரும்ப திரும்ப உள்டப்பி வருவதில் இருந்து தெரிந்து கொண்டான், நம் எல்லையில் தான் நாம் இருக்கிறோம் என…..

அலுவலக பணி விசயமா வெளியூர் செல்ல அலுவலகம் நிர்பந்திக்க இவனும் கிளம்ப, எப்படி போகிறான் டிக்கெட் நம்பர் என எல்லாம் சொல்ல, எதிரில் இருப்பவரும் பார்த்து போ என கூற….. இவனும் கிளம்பி ரயில் நிலையம் வந்து தன் தொடர்வண்டி தேடி தன் இருக்கையில் அமர, ஏதோ ஒரு உள்ளுணர்வு, தன்னை தேடி யாரோ வாரங்க என்ற எண்ணம்…..

வண்டி விட்டு வெளியே வந்தான், அப்பெட்டியின் பயணிகள் பட்டியல் ஓட்டி இருந்தது, கவனித்தான்…. அதில் இவன் உள்டப்பியில் பேசும் பெயரும் இருந்தது சிறு மாற்றத்துடன்…… ஒரு வேளை அவரா இருக்குமோ என சந்தேகம் வர, தன் இருப்பை உள்டப்பி வழியா அந்த கணக்குக்கு அனுப்பினான்…..

பதில் இல்ல, பார்க்கவும் இல்ல….. வேர யாராவது இருக்கும், பல பேருக்கு ஒரு போல் பெயர் இருக்குதே, நம்ம கணக்குல கூட நெறய பேர் இருக்காங்க என தன்னை தேற்றிக் கொண்டு இருக்கையில் அமர்ந்து ஜன்னல் பார்த்தவன், பார்த்தபடியே இருந்தான்.

அருகில் யார் அமர்கிரார்கள் என்பதை கூட கவனிக்க வில்லை, வண்டி கிளம்பியது, தென்றலின் வருடல் என வேடிக்கை பார்த்தவனை ஒரு கை உலுக்கியது, யாரடா என திரும்பினாள்,… அதுவரையில் மொபைல் எடுப்பதை தவிர்த்து இருந்தான்…..

ஒரு பெண், அவ்ளோ கலர் கிடையாது ஆனால் முக லச்சணம்,….. என்ன என்றான்? பின் பக்கம் கை நீட்டினாள்…..

பின்னாடி டிக்கெட் பரிசோதகர், தன் டிக்கெட் தேடி காண்பித்தான், எங்க போற என்றார் , பதில் அவளிடம்….

கேன்டீன் ஆள் வந்தார், சாப்பாடு ஆர்டர் என்றான்? அவள் ஆர்டர் கொடுத்தாள் இவனுக்கும் சேர்த்து, விழித்துக் கொண்டு இருந்தான்…

எதுக்கு எனக்கு சேர்த்து நீங்க சொல்லுறீங்க கேட்க வந்தவன், நீங்க அவங்களா என யோசித்த போது அலைபேசி சிணுங்க, இதை பார்க்காமல் விட்டு விட்டோமே என அழைப்பை முடிந்ததும் உள்டப்பி, வரிசையா தகவல் என் தங்கை வருகிறாள் நீ போகும் ரெயிலில், உன் பெட்டி தான், உன் பெயர் சொல்லி இருக்கேன்….. பார்த்துக் கொள் என…..

அப்புறம் தான் அவனுக்கு புரிந்தது, நம்மோட நம் தோழியின் சகோதரி என…..

பின் பேச்சு ஆரம்பிக்க, அவள் பேச தொடங்கினால், எங்க ஊர் இது, நாங்க எல்லாம் யார்….நான் , எங்க ஊர்க்கு வீட்டுக்கு தான் போகிறேன்….. என் அக்கா தான் அவள், அவள் ஒரு விபத்து அப்புறம் தன் செவி/பேச்சு திறன் இழந்து விட்டாள், அதில் இருந்து மீழ நாங்க பார்க்காத மெடிசின் இல்ல….. ஆன இப்போ கொஞ்ச நாள அவளின் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டோம்….

என்னிடம் மட்டுமே கூறுவாள், தாய் தந்தைக்கு அவள் மாறியதே மகிழ்ச்சி…. நீங்க அவளை பார்த்தது இல்லலா, காண்பிக்க வா என்றாள்….. இவன் வேண்டாம் என மறுத்து விட்டான்…..

இவளுக்கு சிறு நெருடல், அக்காவின் நிலை தெரிந்தவுடன் கழட்டி விட பார்க்கிறான் போல, இவனை போய் அக்கா பெருமை அடிக்கிறாளே….. இந்த ஆண் ஜென்மங்கள் இப்படித் தான் என நொந்து கொண்டாள்…..

பிரயாணம் முடியும் முன், முந்தைய நிலையத்தில் இவன் இறங்கி விட்டான், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்டான்…. போன போறான் என்று இவளும் இருந்து விட்டாள்….. அக்காவிடம் இருந்து ஒரு மெசேஜ் “come soon….an excitement waiting for you ….. ” அக்காவின் சந்தோசமான மெசேஜ் அச்சூழ்நிலையை மாற்றியது…. என்னவா இருக்கும் என கூட யோசிக்க வில்லை அவள்…..

வழக்கம் போல தன் வீடு போக, அங்கே வீட்டில்…. நடுவில் இவன், பக்கதில் அக்கா, அம்மா, அப்பா எதிரில் தம்பி என வீடு ஒரே சந்தோச மழை….. பல வருடம் கழித்து அனைவரின் முகத்தில் பார்த்த சந்தோசம்….

இவளுக்கு அப்போ தான் புரிந்தது, இவன் முன்னாடியே இறங்கியது தனக்கு முன் இங்கு வருவதற்கு என்று…….இவளின் பதில் ஆனந்தக் கண்ணீராக மட்டுமே இருந்தது….

நல்ல நட்பும் நல்ல எண்ணமும், நல்லவை தான் செய்யும், என்றென்றும்.

நிரஞ்சனன்

அந்த நொடி கவிதை – சுதா

அந்த நொடி கவிதை – சுதா




நான் சாக மாட்டேன்…
எனச் சொன்னவள் கருவிழி இரண்டும்
காணாது போய்க் கண்ணீர் கன்னம்
தாண்ட என் கைவிரல்களைப் பிடித்தபடி
காற்றோடு காணாதுபோன நொடி…

பெயர் வைத்தவள் பிணம் என்ற பெயரோடு
செல்கையில் என்னைச் செல்லமாய்
அழைத்த வார்த்தை மட்டும்
என் காதுக்குள் நுழைந்த நொடி…

நான்கு சுவற்றுக்குள்
சூழ்ந்த இருட்டின் மத்தியில்
சத்தமாகக் கதறி அழுத அந்த நொடி…

அன்பு சொந்தம் நட்பு
நம்பிக்கை இப்படியான வார்த்தைகள்
அர்த்தமிழந்து போக…அந்தரத்தில்
நூல் இழையில் தொங்கிய அந்த நொடி…

இங்கு அனைத்திற்கும் பிரதானம் பணம்
என்று உணர்ந்த நொடி…
பலரின் பற்கள் ,
மகிழ்ச்சியில் சிரிப்பதற்கு மட்டுமல்ல…
என்னைக் கொரிப்பதற்கும் காத்திருக்கிறது
என்று உணர்ந்த நொடி…

என் தோளில் கை போட்டு
என் தோல்வியை ரசிக்கும் மனிதரை
அடையாளம் கண்ட அந்த நொடி…

என்னைக் குத்திக் கிழித்துக் கூறு போட்டது
நான் கொடுத்த ஊன்றுகோலால்…

என அறிந்த அந்த நொடி…

இப்படியான நொடிகள் பல
நான் இறந்து இறந்து பிறந்த நொடி…
இப்போதும் பிறந்து விட்டேன் மீண்டும்
இறக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்…
இன்னும் எத்தனை நொடிகள் நான்
இறுதியாக இறப்பதற்குள்
இறந்து பிறப்பேன் என்பதுதான் புதிர்…

ஆனால் ஒவ்வொரு இறப்பும்
என்னை மீண்டும் பிறக்க வைத்தது
ஒவ்வொரு விழுதலும் மீண்டும் எழவைத்து…
அட…இதைவிட சுகம் என்ன…என்ற இந்த நொடி…

– சுதா

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘பிரிவு’
*********
பொய்யான கோபம்
பிரிந்திருந்த காலம்
உள்ளமெலாம் உருகி
உருவான கவிதை!

கோபமதை மறந்து
குலவ வந்த நேரம்
கொடுத்தேன் அந்தக் கவிதை
குளிர்ந்ததவள் மனது!

சென்றவளைக் காணோம்
சிந்தனையில் மனது;

தூது வந்த கடிதம்;

துயர் துடைக்குமென்று
பறந்ததெந்தன் மனது
பார்த்துக் கடிதம் இடியாய்,

நற்கவிஞனோடு
நானிருந்தால் உலகம்
நல்ல கவிதை இழக்கும்!
நன்றி சொன்னதெனக்கு!

உந்தன் பிரிவு ஊற்றாய்
உயர்ந்த கவிதை வந்தால்
உலகம் உய்யக் கொடுப்பேன்
உனது நினைவில் வாழ்வேன்!

க(வி)தை வந்தக் கதை

*******************************
உடலுணர்ந்து உள்ளுணர்ந்து
உண்மைகளைத் தாமுணர்ந்து
உவமைதனை ஊறுகாயாய்
உடனிணைத்துக் கவி படைத்தார்
உலகினிலே முதலினத்தார்
உயர்ந்த குலத் தமிழினத்தார்!

வெய்யிலிலே காய்ந்ததினால்
வெப்பமானக் கவிபடைத்தார்;
மழையினிலே நனைந்தப்பின்னே
மழையானக் கவிகொடுத்தார்!

கானகத்தில் கவியெடுத்தார்
கழனியிலே கவியெடுத்தார்;
சேற்றினிலே கவிதைகளை
செழுமையுடன் கண்டெடுத்தார்!

நீரோடை நிலைகளிலும்
நெடிதுயர்ந்த மலைகளிலும்
அன்றலர்ந்த மலர்களிலும்
அலைதுடிக்கும் கடலினிலும்;

அயராது உழைத்தவரின்
அயர்வுகளை வியர்வைகளை
அவர் வளர்த்தக்கன்றுகளை
அவர் வளர்த்தக்காளைகளை;

அவர் செய்தக் களவிகளை
அதிலிருந்த மென்மைகளை
பெயர் சுட்டிப் பேசாமல்
பெருமைமிக்கக் கவிகொடுத்தார்!

புழுப்பூச்சி உயிரினத்தை
புலத்தோடு தாமுணர்ந்து
அதன் வாழ்க்கை முறைகளையே
அணுவணுவாய் கவிபடைத்தார்!

பறவையினக் காதலதை
பாட்டினிலே நயம் படைத்தார்;
பார் வேந்தர் பாடுகளை
பங்கெடுத்துப் புகழ் படைத்தார்!

உடலுணர்ந்து உள்ளுணர்ந்து
உண்மைகளைத் தாமுணர்ந்து
உறுதிமிக்கக் கவிபடைத்தால்
உயிர்வாழும் எந்நாளும்;
உணர்வீரே கவிஞர்களே!

‘இவர்களும் குழந்தைகளே’

*******************************
கையேந்திப் பிழைக்கும்
செல்லங்களே….

நீங்களும்
இந்த தேசத்தின்
குழந்தைகள்தான்
செல்லங்களே!

உங்கள்
கையேந்தல்….
மழையைப் பிடித்தல் அல்ல
மனதைப் பிசைதல்!

சத்தியமாய்
என் முன்னோர்களோ
நானோ
காரணமல்ல…
உங்களின்
இந்த நிலைக்கு!

இதற்கும்
சனாதனந்தான் காரணம்
என்போரை
காரித்துப்புகிறார்
கருணையற்ற
கர்வம் கொண்டக் கூட்டம்!

வளர்ந்து கொண்டு வருகிறதாம்…..
தேசம்!
நீங்களும்தானே
வளர்ந்து கொண்டு வருகின்றீர்?
வறுமையுடன்!

இந்த தேசம்
பண்பாட்டில் உயர்ந்ததாம்;

நாகரீகத்தின்
உச்சம்தானே பண்பாடு?

நாகரீகமே இல்லாத நாட்டில்
பண்பாடு எப்படி
பந்தியில் பருப்பு பரிமாறுகிறது?

உங்களுக்கு
ஒரு இட ஒதுக்கீடு
வேண்டுமென….
போராடத் தலைவன்
இல்லாதது;
உங்கள் தலையெழுத்து
என்கிறது….
புதியதாக
ஒதுக்கீடு பெற்றுள்ள
குபேரர்களின் வாரிசுக்கூட்டம்!

சில்லறைகளைக்கூட
சில பேர்தான் தருவார்கள்;
பெரும்பாலோரிடம்
நோட்டுத்தான் இருக்கிறது
மனது இல்லை!

‘குழந்தைகள் தினத்தை’த்தானே
கொண்டாடினர்?
குழந்தைகளைக்
கொண்டாடியதாதத் தெரியவில்லையே!

குழந்தைகளைக்
கொண்டாடுவோர்
இருந்திருப்பின்…
உங்களைக் கொண்டாட
வந்திருப்பர்!

நானும்
வெட்கப்படுகிறேன்
செல்லங்களே!

உங்களுக்கு
வாழ்த்துகள் சொல்வது
நீங்கள்
இப்படியே வாழவேண்டும்
என்பதாக…..
அர்த்தப்பட்டு விடும் என்பதால்
வாழ்த்த மனம் வரவில்லை!

கையாளாகாதவர்களால்
கண்ணீர்த் துளிகளைத்தான்
உங்களுக்குத் தர இயலும்;
நானுந்தான்.

சுற்றமும்
நட்பும் சூழ்ந்தாலும்… 
*************************************
எப்போதும் வரலாம்;
எனக்கான மரணம்!
அகால மரணமாக
அவஸ்தை மரணமாக
அகவை முதிர் மரணமாக!

சுற்றமும் நட்பும்
சொந்தம் கொண்டாடும்;
மரணத்தில் வந்து
மார்தட்டிக் கூத்தாடும்!

என்னவெல்லாம்
நடக்குமென
எனக்குத் தெரியும்!

நடக்க வேண்டியதை
உயிர் சாசனமாக
ஒரு சில வரிகளில்….

நான்
நட்டு வளர்த்த
பூஞ்செடிகள் தரும்
பூக்களால்…..
போர்த்துங்கள்
என்
பூத உடலை!

நான் வளர்த்த தென்னை மரத்தின்
தென்னை ஓலைகளை
தென்னங் காய்களை…
என் தேகம் செல்ல
பயனாக்குங்கள்!

என்னை
உளமாற நேசிப்போர்
என் மெய்யின் மேல்
ஒரு துளி கண்ணீர்
சிந்துங்கள்!

நான்
படித்தும், படிக்காமலும்
வைத்துள்ள புத்தகங்களை
குழந்தைகளுக்குக்
கொடுங்கள்!

நான்
பயன்படுத்திய
அனைத்து ஆடைகளையும்
என்னுடனே
அனுப்பி விடுங்கள்!

என்
உழைப்பில் சம்பாதித்த
ஒரு ரூபாய் நாணயத்தை
நெற்றியில் வையுங்கள்!

இரத்த உறவுகள்
என் இறப்புக்காக
வீணான செலவுகளை
செய்யாதீர்கள்!

கதை முடிந்த அன்றுடன்
அவரவர் பணிகளைப்
பாருங்கள்!

என் அன்பு மகனே…..
என் நினைவாக
ஒரு மரக்கன்றினை நட்டு. ..
பாதுகாத்து…
வளர்த்துக் கொடு!

அது….
பறவைகளுக்கும்,
பலருக்கும்
பயன் படட்டும்!

‘பாசாங்கு… ‘
***************
பள்ளிக்குச் செல்வதில்
ஏதோ…..
கசப்பு உணர்ந்தபோது
கண்டுபிடித்த
சுயமான வித்தை;
முதல் ஏமாளி
அம்மா!
” அம்மா…. வயிறு
வலிக்குதே”!

படிப்படியாக
ஆசிரியர்களிடம்..!

வீட்டில் பள்ளியைப்பற்றி
பள்ளியில் வீட்டைப் பற்றி
பாசாங்கு காட்டியே…
படிப்பும் முடிந்தது!

பாசாங்கு காட்டாத
மனிதன் நான் எனச்
சொல்பவன். …
பாசாங்கு காட்டுகிறான்
என்று பொருள்!

பாசாங்கு….
நடிப்பின் உச்சம்!

பாசாங்கு என்பது ஒரு கலை!

அது
பறப்பன… ஊர்வன
உட்பட
அனைத்து உயிரினங்களும்
அறிந்து வைத்துள்ள
ஒப்பற்ற உடல் மொழி!

பாசாங்கு பற்றிய
எளிய குறிப்பு

இதோ…..
‘மனைவியிடம் குடிகாரக் கணவன்’
‘கணவனை ஏமாற்றும்
மனைவி’

கற்பனைக் குதிரையைத்
தட்டி விட்டுப் பாருங்கள்,

குடிகாரர்…
மற்றும்
ஏமாற்றும் பெண்கள்!
மிக அற்புதமாக
நடிப்பார்கள்!
ஆம்;
அதுதான் பாசாங்கு!

எவராலும்
உண்மை எது
பாசாங்கு எது
என்று
கண்டு பிடிக்கவே முடியாத
நடிக இமயம்;
‘திருடன்!

அவன்
வேறு யாருமல்ல
நான், நீ, அவன்!

– பாங்கைத் தமிழன்…

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




தமிழ் என்றே முழங்கட்டும் ‌..

தமிழர் குடிக்கிங்கு ஈடு வேறெங்கும் உளதோ இப்புவியினிலே…

தமிழ் பெற்றெடுத்த முக்கூடலே..
தமிழன்னை புகட்டிய தமிழ்ப் பாலே

தான் உயர தம் சுற்றம் வாழ்வினிக்க
தமிழ் உயர தமிழன் வான் சிறக்க
நிலமெங்கும் தமிழ் தமிழ் என்றே
அதிரட்டும் பறை.

தொல்குடித் தமிழினம்
தமிழர் கொண்டே சிறக்கட்டும் இனி.
காணி நிலம் தொட்டு
காணாத நிலமெங்கும்
தலவிருட்சம் முதல் வேர்வரை வழங்கட்டும் இனி தமிழ்க்கனி.

வேற்று மொழி தலைவிரிக்க..
தமிழர் தோள் தமிழ் தாங்கி நிற்க
களையறுப்போம் தமிழ் கெடுக்கும் அன்னிய தலைகளை
வளர்த்தெடுப்போம் தமிழ்க் கலைகளை

இருள் சூழ்ந்த நிசிகள் ஒவ்வொன்றும்..
புலரட்டும் தமிழ்க் காலையாக
மலரட்டும் தமிழ்மாலையாக..

அச்சம் தவிர்..
அடங்க மறு..
தமிழின்றித் தமிழனில்லை
தமிழனின்றி தமிழகம்
இல்லவே இல்லை
என்றே..
கொட்டட்டும் செண்டை..
முழக்கட்டும் பம்பை

திக்கெட்டும் தமிழ் தமிழ்
என்றே கூவட்டும் சங்கு…
திசையெங்கும் தமிழா தமிழா‌
என்றே ஓங்கி ஒலிக்கட்டும்‌‌ இங்கு..

எங்கும்
உடுக்கையும் சிலம்பும் அதிரட்டும்
தமிழர் இசை கொண்டாடட்டும்
உலகம்..

நித்தம் எம் எழுத்தாணி
தமிழ் போற்றியும்
தமிழர் புகழ் பாடியுமே
சிறக்கட்டும்!
***********************

வாழ்வென்பது இங்கு ஒன்று போல..

வனசாதி ரோஜா கூட்டமதற்கு
உடலுரசும் முட்கள்..
திக்குமுக்காடும் இதழ்கள்..

மாளவுமுடியாது..
மீளவுமியலாது ..
அங்ஙனமே..
பூத்தும்
அவ்விடமே மரித்தும்
வாழ்ந்து தான் முடிகின்றன..
மீண்டு வாராமல் தத்தளிக்கின்றன..

தோட்டத்து மலருக்கோ கூந்தல் வாசம்
காட்டு மலருக்கிங்கே சகதியின் சுவாசம்.
ஏனிந்த பாரபட்சம்
எதற்கிந்த வெளி வேஷம்.

வாழ்வென்பதும் ஒருமுறை தான்.
அதில் வீழ்வதென்பதும் ஒன்றாய் இருக்கட்டுமே..
சூடும் மலருக்கே இங்கு இத்தனைத் துயரம்
கதறும் மனிதர் வாழ்வுக்கேது இங்கே உயர்ம்?
************************

அனைத்தும் கடந்தே இனி போவோம்..
மீதத்தை வாழ்ந்தே இனி முடிப்போம்.

எதுவும் இங்கு நிரந்தரமில்லை.

எத்தனை எத்தனை வியன்கள் இங்கு..
அத்தனை அத்தனை விந்தைகளும் உண்டு.

எது நட்பு
ஏது பகை..
யாது துரோகம்..
என்னது விரோதம்..
உணரும் முன்..
வாழ்வே மாயமாகி விடுகிறது..
மனிதவாழ்வே கேள்விக்குறியாகிப் போகிறது..

நண்பன் சிலகாலம் பகை ஏற்கலாம்..
பகைவன் கூட நொடிப் பொழுதில் நட்புண்டு தோள் கொடுக்கலாம்
துரோகியை ஒருக்காலும் அருகில் கொள்ளாது இருக்கலாம்.
உயர் நட்பின் மாண்பை எப்போதுமே கொண்டாடியே தீர்க்கலாம்.

நட்பும் உருமாறலாம்..
பகைமையும் உயர்ந்தோங்கலாம்.
எதுவும் இங்கு சாஸ்வதமில்லை.
மனித வாழ்வும் இங்கு நிதர்சனமில்லை..
மழலைக்கும் இங்கு கரிசனமில்லை.

மனிதன் மட்டும் எப்போதும் தவிக்கின்றான்..
சற்றே தொய்வுற்றால் அழுதே தான் புரளுகிறான்.

மனித வாழ்வு…
அதில் தான் எத்தனைச் சித்திரம்

அமைதிக் கொண்டால் காணலாம்
பன்முக விசித்திரம்.
*************************

– து.பா.பரமேஸ்வரி
சென்னை

நூல் அறிமுகம்: என். சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ – பொன் விஜி

நூல் அறிமுகம்: என். சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ – பொன் விஜி




*நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்*
*நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்*
*நம் அரசாங்கம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்*
*நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்
*நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி*

நண்பர்களே இதை நான் கூறவில்லை, பெரியார் கூறியதாக *ஆசிரியர் சரவணண்*அவர்கள் இக்கட்டுரையில் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஆசிரியர் சரவணன் அவர்கள் தான் சொல்ல வந்த விடயத்தை வாசிப்போர் ஆகிய எங்களை தனது சிந்தனைக்குள் இழுத்துச் செல்வதை இந்த நூல் மிக அழகாக எடுத்துச் செல்கின்றது

இன்று நான் ஒரு *பூப்புனித நீராட்டு* விழாவுக்குச் சென்று வந்தேன். அங்கே சில ஆண்டுகள் தவறவிட்ட எனது நண்பனின் *மச்சானைக் * கண்டேன். அவர் ஒரு *மீன்பிடி* த் தொழிலைக் கொண்ட *சாதிப் பரம்பரையில் வந்தவர். அவரிடம் வழக்கம் போல் உரையாடினேன். அவரோடு சேர்ந்து. *டீ * யும் குடித்தேன். ஒரு சிலர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சென்றனர். அதைப் பொருட்படுத்தாது நாம் உரையாடினோம். நான் எனது *சாதியை * அவரிடம் கூறிவிட்டே தொடர்ந்தோம்.
அவர் கூறிய வார்த்தை என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. *சக நண்பர்களுடனோ அல்லது ஏனைய நமது மொழி பேசும் மக்களிடமோ* நான் கதைக்கும் போது மிகவும் பயந்து பயந்து தான் கதைக்கிறேன் என்றார். *ஏன்*என்று கேட்டேன்,அதற்கு அவர், *எங்கே எனது சாதியைத் தெரிந்துவிட்டால் ** மிகவும் தொலைவில் வைத்துவிடுவார்களோ என்று எண்ணியே அவர் தனது நட்பைப் பாதுகாப்பதாக ஆதங்கப்பட்டார்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு மனிதனின் பிறப்பிடம் எங்கு என்று தெரிந்துவிட்டால், அவன் இன்ன *சாதி * தான் என்று தெரிவதற்குத் தீயைவிட வலுவான *வேகம்* கொண்டு பரப்பக்கூடிய மக்கள் கூட்டம் அலைமோதுவதை அவதானிக்கலாம்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு முன், பின், மற்றும் இன்றைய சூழ்நிலையில், *சாதியின் * கொடுமைகளில் பெரிதாக மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. (விடுதலைப் புலிகள் காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகக் கூறப்படுவது ஒரு சார்பு நிலை என்றே அறியப்படுகிறது).
உலக வளரும் நாடுகளில் *சாதி யின் பங்கு, இலங்கையில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் விட்டாலும், இன்றும் கூட அதன் தாக்கம், பூமியின் நடுப்பகுதியில் தகதகவென்று கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பு பேன்ற மனநிலையில் தான் *ஆதிக்க* சாதியினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அது சங்கிலி போல் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கொடிகட்டிப் பறப்பதை உணரமுடிகிறது.
நண்பர்களே,
# *தலித் – தலித்தியம்* என்றால் என்ன?
# *அருந்ததியர்* என்று குறிப்பிடுவது யாரை?
# *இலங்கையில் வாழும்* அருந்ததியரின் பூர்வீகம் எங்கே?
# *சாதி வசைபாடல் * லின் வடிவம் எப்படி?
# *பஞ்சமரை* விடத் தாழ்த்தப்பட்டவர்கள் யார்?
# *சாதியூறிய* மொழியின் வடிவம் எப்படி?

# *தமிழனுக்குக்* கொடுக்பப்பட்ட நிறம் என்ன?

இது போன்ற 32 வகையான சிறு தலையங்கங்களை உள்ளடக்கி ஆராய்கிறார் ஆசிரியர் *என். சரவணன் அவர்கள்.

*அருந்ததியர் * என்ற ஒரு இனம் *இலங்கையில் * இருப்பதாக இப் புத்தகத்தின் மூலம் அறிந்து ஆச்சரியப்பட்டேன். இதுவரை காலமும் *பஞ்சமரைத் தான், *கிட்ட வராதே * அங்கேயே விலகிநில் என்று ஆதிக்க சாதியினரால் ஒதுக்கப்பட்டவர்கள் என்பதனை, அதனைக் காட்டிலும் மிகக் கீழ்மையான *நீ துப்பரவு செய்யும் வேலைக்குத்தான் லாயக் * என்று போற்றப்படும் இனமான இந்த *அருந்ததியர்* இருந்துள்ளமையும், ஏன் தற்போது கூட அவர்களது அடுத்த நேர சாப்பாட்டிற்குப் *பிச்சை* எடுக்கும் நிலையிலேயே வாழ்ந்து (இலங்கையில்) வருவதை ஆசிரியர் *என். சரவணன்* அவர்கள் தனது மிக நீண்ட தேடலுக்குப் பின் இங்கே பதிவு செய்கிறார்.

குறிப்பாக *சக்கிலியன்* யார்? அவர்கள் *தலித்துக்களில்* இருந்து வேறுபட்டவர்களா?
இது போன்ற கேள்விகளை நாம் எங்களுக்குள்ளே கேட்கும்போது, எங்கள் உள்ளத்தை அது குடைந்து எடுக்கின்றது .
ஆசிரியர் *என். சரவணன் அவர்கள், இங்கே இலங்கையில் மூன்று விதமான *சாதியை * அடிப்படையாகக் கொண்டு, அதனை *வடகிழக்கு, மலையகம், சிங்களமக்கள் * ஆகிய பகுதிகளில் ஏற்பட்டு, நடைமுறை வாழ்க்கையில் அதன் வீரியத்தைப் பல கோணங்களில், பல உதாரணங்களுடன், தனது நேரடி உரையாடல் மூலம் அதனைத் தெளிவாக்குகிறார்.
*சக்கிலியன்* என்ற சொல்லாடல் இந்த உலகத்தைவிட்டு அறவே ஒழித்துக் கட்ட வேண்டும் என்றே ஆசிரியர் கடுமையாக விமர்சிப்பதையும், அதனால் *அருந்ததியர்* தமது வாழ்க்கையில் அனுபவித்துவரும் துன்பங்களை அறிந்து கொள்ள, நண்பர்களே கண்டிப்பாக வாசியுங்கள்.
*தலித்தின் குறிப்புகள் * என்று கொடுத்தாலும், இப் புத்தகத்தில் பலதரப்பட்ட, இந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியே வரமுடியாதா? எனத் துடிக்கும் அவர்களது நிலமையை, ஏன் அவர்கள் *அகமணத்தை * இன்றும் கைவிடாமல் பின்பற்றுகிறார்கள், அவர்களது *குலதெய்வங்கள் * எவரால் *இந்துக் கோயிலாக* மாறியது, எங்கு சென்றாலும் மற்றவர்களால் அரவணைக்கும் *செயலைத் தாங்கிய வண்ணம் நடப்பது, இது போன்ற பல முக்கிய குறிப்புகளை நீங்களும் உற்று நோக்குங்கள் என்று தருகிறார் ஆசிரியர்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட *அருந்ததியர் * அவர்கள் தொடர்ந்தும் தங்களது தாய்மொழியான *தெலுங்கையே* பேசுகிறார்கள். (தமிழும் கதைப்பார்கள்) தங்கள் சமூகத்திலிருந்து வெளியே வருவதற்கான அவர்களது முயற்சிகளை ஆசிரியர் இங்கே எடுத்துக் கூறத் தவறவில்லை. அதன் ஒரு பகுதியாக, அவர்கள் *சிங்கள மொழியைக் * கற்றல், *கிறிஸ்தவ * சமயத்தில் இணைதல், தங்களுக்கென்று சங்கங்கள் அமைத்து அதன் மூலம் தமது உரிமைகளைப் பெற, மாற்ற முயற்சித்தல், இது போன்ற அறியாப்படாத அதிக செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார் ஆசிரியர். அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இதிலே *வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும் * என்ற தலையங்கத்தில் 3 பிரிவுகளாகத் தந்துள்ளார் ஆசிரியர். கண்டிப்பா இதற்காவுதல் வாசிப்பாளர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்றே தோன்றுகின்றது.
உண்மையில் எமது சில உதாசீனமான வார்த்தைகளை *என். சரவணன் அவர்கள் நினைவு படுத்துவது இங்கே குறிப்பிடத்தக்கது.
(உண்மையும் தான்).
குறிப்பாக, இலங்கை மக்கள் *சாதியை* எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள், எதில் எல்லாம் அது ஊடுருவி நிற்கின்றது, புலம்பெயர் வாழ்விலும் அதன் ஆட்டம் எப்படி ஆடுகிறது, இனி வரும் அடுத்த *சந்ததியினரின் * உள்ளங்களில் எப்படி விதைக்கின்றார்கள், வெளியே சொல்லிக் கொள்வது *சாதியாவது மண்ணாங்கட்டியாவது * என்று சொல்லுவார்கள், ஆனால் தங்களது சொந்த வாழ்க்கையில் *உடும்புப்பிடி* போல் இருப்பார்கள். இது போன்ற விடயங்களை உதாரணங்களுடன் வாசிக்கக் கூடியதான ஒரு சிறந்த நூல் என்றே சொல்லலாம்..நான் இங்கு குறிப்பிட்டதைத் தவிர இன்னும் அதிக, உறுதியான பதிவுகளை நீங்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று கூற ஆசைப்படுகிறேன் நண்பர்களே…
இங்கே நான் எல்லாவற்றையும் குறிப்பிட்டு விட்டால் புத்தகத்தை வாசிப்பது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டு விடும், அதனால் மேற்கொண்டு அதிலுள்ள பல உன்னதமான சிந்திக்கக்கூடிய பகுதிகளை இதிலே நான் குறைத்துக் கொள்கின்றேன்.
நன்றிகள்.
பொன் விஜி – சுவிஸ்.
நூல் : தலித்தின் குறிப்புகள்
ஆசிரியர்கள் : என். சரவணன்
விலை: ரூ. 180/-
பக்கம் : 196

வெளியீடு : எழிலினி பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
குழந்தைகள் வயது 10 க்குள் கட்டுரை : சுதா

குழந்தைகள் வயது 10 க்குள் கட்டுரை : சுதா




இப்போ நிறைய பெற்றோர்கள் சொல்ற குறை என்னுடைய குழந்தை என்னோட பேச்சைக் கேட்கவே மாட்டேங்குது. நான் எது சொன்னாலும் எதுத்து பேசுற அடம் பிடிக்குது. எப்போ பாரு போன் வேணும்னு அடம் பிடிக்குது. படிக்க உட்கார்வது இல்லை. இப்படி நிறைய பேரு சொல்ல கேட்டிருக்கேன் ஒரு சின்ன டிப்ஸ். கட்டாயம் நேர்மறையான விளைவுகள் வரும்.

இரவு தூங்கும் பொழுது உங்கள் குழந்தையோடு நேரம் செலவிடுங்கள் தனியாக அவர்களைத் தூங்க விடாதீர்கள். நீங்கள் அருகில் இருக்க வேண்டும். அவர்களின் காலை பிடித்து விடுங்கள். கொஞ்சம் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொண்டு கால்களில் தடவி நன்றாக மசாஜ் பண்ணுங்க அப்படி மசாஜ் செய்யும் பொழுது நிறைய பேசுங்கள். நீங்கள் முதன் முதலில் இதைக் கையாளும் பொழுது உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதையோ உங்கள் செயல்பாட்டையும் கவனம் கொள்ளாது.

ஆனால் நாட்பட நாட்பட குழந்தைகள் உங்களோடு இணைந்து கொள்வார்கள். அன்றைய தினத்தில் உங்களின் செயல்பாடுகளை அதாவது ஆபீஸில் எனலாம் நடந்தது உங்கள் வேலை எவ்வளவு இயல்பாக நீங்கள் முடித்தீர்கள். உங்கள் கஷ்டங்களை அவர்களோடு சொல்வதைவிட நீங்கள் அந்த கஷ்டங்களிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள். ஏனென்றால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று சொன்னால் அவர்கள் கவனிக்க மாட்டார்கள். உங்களின் சந்தோஷமான பக்கங்களையும் குதூகலமான பக்கங்களையும் பகிருங்கள் நீங்கள் பள்ளிக்காலத்தில் எத்தனை சந்தோஷமாக இருந்தீர்கள் உங்களின் நட்பு பத்தி பகிருங்கள். வாரம் இரண்டு முறையேனும் உங்கள் குழந்தைகளின் கால்களுக்கு மசாஜ் செய்யுங்கள் செய்யும் பொழுது கட்டாயம் பேசுங்கள்.

கட்டாயம் மாற்றம் வரும் குழந்தைகளோடு நட்புக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று.

-சுதா 

சாதீயத்தில் ஹைக்கூ கவிதை – ச.லிங்கராசு

சாதீயத்தில் ஹைக்கூ கவிதை – ச.லிங்கராசு




நல்ல வேளை அவள் மீதான காதலைச்
சொல்ல வில்லை அவன்
ஆணவக்கொலையிலிருந்து
தப்பினான்

யாரோ என்பதில் முகிழ்த்த
நட்பு
யார் என்பதில் அழிந்து போனது

எந்த யுக்தியும் பிடிபடவில்லையே
இவன்இன்னார் என்று அறிந்திட
சாதீயம் தொடர்கிறது

பெயரைச் சுருக்கியும் கூட
பெருமிதப்படுகிறது வர்ணம்
கந்தனாம் கபாலியாம்

கலியுகத்திலும் கல்கியாய்
கீதை பாடினால் எங்ஙனம்

ஒழியும் சாதி?

செய்தவன் நெசவாளி சூத்திரன்
தொட்டு தூக்கிப் போடுவதோ
சாஸ்த்திரன்

மதமே இங்கு மதம் பிடிக்க
வைக்க மனிதர்கள் வாழ்க்கை
சூன்யம்

ச.லிங்கராசு

Karkaviyin Kavithaigal 8 கார்கவியின் கவிதைகள் 8

கார்கவியின் கவிதைகள்

குருதிப் பூக்கள்
*******************
இரத்தமும் சதையும் குழகுழப்பில் வழிந்த பூக்கள்..!
குறைகளைச் சொல்லிக் கும்பிட்டுப் பிழைக்கும் குலப் பூக்கள்…!

உடல் மொழியில் வலிகள் மறைத்த பூக்கள்..!
உறுதியான வாழ்க்கைக் காம்புடைய பூக்கள்…!

ஓயாது கடிகாரம் உணர்வாய்க் கொண்ட பூக்கள்..!
வாசனை இல்லாத உறுதிச் சுவாசப் பூக்கள்..!

உளைச்சல் தனை உரமாய்க் கொண்ட ஆலமரப் பூக்கள்..!
மௌனத்தில் பல் இழித்து ரணத்தில் செழித்தப் பூக்கள்….!

காசைக் கரியாக்கும் மகன்கள் முன் உழைத்த பூக்கள்..!
கடுகு டப்பாவில் சேமிக்கும் மனை வங்கிக் கொண்ட பூக்கள்…!
மயங்கும் மாணாக்களை மகனாய்க் கொண்ட பூக்கள்..!

ஆம்…
ஆசைகளின் சவப்பெட்டி குருதிப்பூக்கள்…!
குலம் அறிந்து கும்பிட்ட சோற்றுப் பூக்கள்..!
குட்டக் குட்ட நில்லாது ஓடும் ஆற்றுப் பூக்கள்…!

நீட்டிய கைகளில் ஒரு ரூபாய் – இரு ரூபாய்க் கரிசனப் பூக்கள்..!
உலகை மாற்ற
ஆரம்பித்து
உறவை இழந்த பூக்கள்…!
எதிர்த்த பின்பும் பூக்கும் அதிசய அத்திப்பூக்கள்..!
உருண்டும் புரண்டும் மண் ஒட்டா உழைப்பை இழந்த பூக்கள்…!

உலகெலாம் சுற்றி ஓய்ந்து சுனங்கிய பூக்கள்…!
உயிர் தரித்து,
உலகம் பார்த்து,
உண்மையறிந்து,
உழைத்துச் சேர்த்த
ஆண் பூக்கள்…!

ஓய்வை மறைத்து,
உறக்கம் மரித்து,
உலகம் இழந்து
உருட்டும் பூனையாய்ப்
பெண் பூக்கள்….!

கலம் பெற்று
உறவு கொண்டு
கைப்பிடித்து,
கோல் கொடுத்து,
ஈசல் வழி முதல்
கால் கட்டிலின்
தொட்டில் வரை
தாய்ப் பூக்கள்…!

காலை எழுந்தவுடன்
கண்ணீர்
கண்ணில் கொண்டு,
கையில் பேனைக் கொண்டுத் தர அட்டை ஏந்தும் கல்விப் பூக்கள்…!
அப்பனில்லா விலாசத்தில் அனாதைப் பூக்கள்,
அடிவாங்கி உணவருந்தும் மழலைப்பூக்கள்…!

தரைப் பிறந்து,
தாலாட்டுப் பெற்று
கால் முளைத்து,
கட்டுக் கோப்பான பூக்கள்.
சலனங்கள் நிறைந்த பூக்கள்,
நல்லது கெட்டது நிறைந்த பூக்கள்….!

சாஸ்டாங்கக் காலடிப் பூக்கள்,
மன அழுத்த வெறுப்புப் பூக்கள்…!
ஊருக்கே உழைத்து உறவு வளர்த்த பூக்கள்..!
உள்ளத்தில் வலி கொண்ட – மறைத்த பூக்கள்…!
உளி கொண்ட சிற்பியின் வலிப் பூக்கள்…!
புன்னகையில் புவியை ஆள ஆண்- பெண்ணாய்ப் பூக்கள்….!

கருத்துகள்,
கவலைகள்,
ஏக்கங்கள்,
இயல்புகள்,
ஆசைகள்,
ஐக்கியங்கள்,
யதார்த்தங்கள்,
வாழ்த்துகள்,
கண்கள் வலித்து,
கண்கள் துடித்து,
ஆசை நேரத்தில்
அனைத்தையும் கடந்து செல்லும்,
கவலைகளில் பீதாம்பரி அழைத்த ஆண் பூக்கள்…!
தந்தைப் பூக்கள்…!

அந்த பெண் மனம்
***********************
யாருக்காக பிறந்தது இந்த பெண் பிண்டம்….
அழகான எண்ணங்களுடன், மேனி வண்ணங்களுடன்,
மிளிரும் ஆசைகளுடன் துள்ளிப்பிறந்த பிண்டம்….
பிறந்த இடம் பொறுத்து ஆசைகள் கருகளாயிற்று…..

சென்ற இடமெல்லாம் சிறப்பாக செயல்படுபவள் பெண்..
யாரையும் புண்படுத்தாத மனம் கொண்டவள் பெண்….
எதிர்த்து பேச எண்ணாதவள் பெண்…
எவரையும் எதிர்த்துப்பேச விடாத தைரியம் மிக்கவள் பெண்…

ஏக்கம் நிறைந்தவள் பெண்..
யதார்த்த உலகை ஒருபடி அளவில் அளந்தவள்…

கடுகுமணியை கூட கரம் விட்டு கொட்ட ஆயிரம் யோசனை கொண்டவள்….
கண்டவரின் வார்த்தைகளில் கசங்குபவளும், வாழ்த்துகளில் மின்னுபவளும் பெண்….

கடைசி பருக்கை உண்பவளும் பெண்,
இல்லாத பருக்கைக்கு நீர் நிரம்ப உறங்குபவள் பெண்….
கட்டும் துணியிலிருந்து கைக்குட்டைவரை கசக்கி மடித்துவைத்தவள் பெண்..
மார்துணி விழகாது மானம் காத்தவள் பெண்…

மானஸ்தன்களின் அன்னையும் அவளே,
மங்குனிகளின் தங்கையும்,அக்காளும் அவளே….
செம்பருத்தி செடிகளின் வாசம் பெண்….

மருதாணிகளின் செக்க சிவப்பு பெண்…
அடுப்படி சாம்பலில் கைரேகை பெண்…
அழகிய கோழிகுஞ்சிகளில் இரைப்பருக்கைகளில் பெண்…..

யாதார்த்த உலகமிது..
பெண்களின் யதார்த்தம் அறியா உலகமும் இதுவே….
பெண்மையை போற்றி வணங்குவோம்…

நட்பிற்கும் இதயமுண்டு
****************************
நட்புக்கு ஈடு இணை இங்கே ஏது….
கண்டவரை எல்லாம் கை கோர்த்து கொள்வது நட்புதான்…
காணாமல் பல கோடி வலைதளத்திலும் நட்புதான்..
கண்டிப்பாக நடந்து கொண்டு பிறது மன்னிப்பில் தரை இறங்குவது நட்புதான்…..

நாலு பேர் தவறா சொன்னாலும்,நான் இருக்கிறேன் என்று தோலுக்கு தோல் கொடுப்பது நட்புதான்….
நாற்றம் நிறைந்த சேற்றின் நடுவே இலைகளின் பாதுகாப்பில் அல்லியும் நட்புதான்…
பத்திலிருந்து ஒன்பது ஆன போதும் ஒருபோதும் நிற்காது சுற்றும் கோள்களின் சுழற்சி நட்புதான்….
நான்கு நாட்கள் பார்க்கவில்லை என்றாலும்..நமக்கென்ன என்று இருப்பதும் நட்புதான்..

நமக்கென்ன என இருந்த போதும் நன்றாக இருக்க செய்யும் மறைமுக செயலும் நட்புதான்…..
உலகத்தை ரசிக்க வைப்பது நட்புதான்…
உன்னை முழுவதுமாக உணர வைப்பதும் நட்புதான்….
வயது கடந்தது நட்புதான்-யார் வயது யாரென அறியாது தொடர்வது நட்புதான்…..
கருத்து வேறுபாடு நிறைந்த பொழுதும் வெறுத்து ஒதுக்காத தோழமை நட்புதான்..

இரும்பு கதவு கொண்டதல்ல நட்பு…
இளகிய இதயமும் கொண்டதுதான் நட்பு….
நட்பே துணை….

இறைவி
***********
எல்லாம் அவளாகி போனப் பிறகு வேறு என்ன நான் சொல்லி விடக்கூடும்….
ஆசையாக வாழ்ந்து அனைத்தையும் அனுபவித்து பட்டாம்பூச்சி போல் வாழ்வை அனுபவித்தவள்…
இங்கு நேரம் பார்த்து ஆட்கள் பார்த்து எனக்காக எல்லாம் சேர்த்து வைக்கிறாள்..

அவள் அன்னை தந்தை பிரிந்து என் அன்னை தந்தையை அவள் உடையவராய் ஏற்று அன்பும்,
ஆர்ப்பரிக்கும் பணிவிடைகளையும் சற்றும் மனம் கோணாது,முகம் சுழிக்காது செயல்படுத்துகிறாள்….
என் உடன்பிறப்புகளுக்கு உடன்பிறப்பானால்,என் சொந்தங்களின் புது சொந்தமானால்,..
என் வீட்டு செல்லங்களுக்கு அன்பானால்…அப்பாவின் அன்பும் அவளும் ஓர் மகளானால்….

மாமியார் மருமகளாய் இவர்கள் இல்லை,அம்மை-பெண்ணாய் பயணிக்கின்றனர்…
உடல் வழிகள் ஏராளம் இருந்தாலும் இன்முகத்துடன் என்னருகில்….
அதற்காகவே மணமுடித்தேன்..கைப்பிடித்து கால் பிடித்து அவள் துயரங்கள் நான் துடைப்பேன்….
அறிவில்லா சமுதாயம் பொண்டாட்டி தாசன் என்ற பெயர் சூடும்….

இருக்கட்டும் அது ஓரம்…
சமுதாயம் என் குடும்பத்தை பார்த்ததில்லை…
சமுதாயம் என் உறவுகளை பேணிக்காப்பதில்லை…
சமுதாயம் இல்லறவியலில் துணையில்லை…
சமுதாயம் என்னவளின் தலைவலிக்கு மருந்து இல்லை..

அம்மாவுக்கு அடுத்த இடம் அவளானாள்…அவளே என்றென்றும் அன்னையானாள்….
அன்னை கூட வாழ்நாளில் கடந்து போவார்…
அவள் காலம் முடியும் வரை என் நிழலென அவாள்…
பிள்ளைகளை பற்றிட பாதுகாத்து,பணிகளை அவள் தலைமேல் தான் சேர்த்து…

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதை உடைத்தவள்….
என்னவள்…
என் எல்லாம் அவள்…

என் இதயம் நிறைந்த இறைவி
என் மனைவி….

நொடிக்குள் அடைபட்டோம் நாம்
**************************************
அந்தப் புலனம் செயலியினை
முன்பார்வைக்கு
வைத்துக் கொண்டு
முழுநாளும்
கடந்துவிடுகிறது

அவ்வப்போது ரீஃப்ரஸ்
செய்து கொண்டு
நேற்று அனுப்பிய
‘சாப்பிட்டாயா’
எனும் சொல்லை மட்டும்
இன்றைய செய்திவரை
ஸ்குரோல் செய்து
சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன்….
ஏக்க ஏப்பங்களுக்கிடையே………..

மாதமொரு அப்டேட்களில்
பின்னிப் பிணைந்த
செயலிகளின்
ஆர்ச்சிவ்களில்
புதைந்து கிடக்கும்
எனது
எண்ணை எப்படி நான்
தட்டி எழுப்புவது……..

நான் என்னவோ
உன்னைப் பின்செய்து
உனது

தனிமையாக நீ
நடப்பது போல்
பின்பக்க வருத்தத்தை
நடையில் காண்பிக்கும்

கலர் சேடிங் கொட்டியுள்ள
கடைசி டீபி புகைப்படத்தைப்
பார்த்துக்கொண்டே
நகர்கிறேன்
எனது எண்ணின்
அலையும் நுண்ணலையும்
உன் நுகர்தலுக்கு அருகில் இல்லை என்பதறியாது…

ஒவ்வொரு இரவும்
மறுநாள் விடியலை
மறுபதிவு செய்யாமல்
தொடங்குவதில்லை
என் மறுநாளிடம்
கடன் வாங்கும்
நீ
எடுக்க மறந்த ஆர்ச்சீவ்களிலும்
மற்றும் பலனில்லாமல்
கிடப்பதனால்

மூன்று பின் செட்டப்களின்
மாற்று வழியின்றி
நொடியில் அடைபட்டோம்
நாம்…..

Poruthamanavan Shortstory By N. Jagadeesan பொருத்தமானவன் சிறுகதை - ந. ஜெகதீசன்

பொருத்தமானவன் சிறுகதை – ந. ஜெகதீசன்

அபினவ் காலையிலேயே கார்த்திக்கை போனில் அழைத்தான். இன்று மாலை வேலை முடிந்ததும் இருவரும் காபி கடைக்கு செல்லாம் என்றான். அவன் குரல் வெளிப்படுத்திய தொனியை வைத்து,

“ஏன்.. எதாவது பிரச்சனையா?” என்றான் கார்த்திக்.

“சாயந்தரம் நேர்ல பேசலாமே” சுருக்கமாக சொல்லிவிட்டு போனை வைத்தான்.

கார்த்திக் அபினவ் இருவரும் இரு சக்கர வாகனம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிகளாக பணிபுரிகிறார்கள். அபினவ் மனித வளத்துறையில் மேலாளராகவும் கார்த்திக் தர மேம்பாட்டுத் துறையில் மேலாளராகவும் பணிசெய்து வருகின்றனர்.

இருவரும் மேலாளர்களாக பணிபுரிவதால் பணியிடத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போதும் மன அழுத்தத்தை உணரும்போதும் இந்த மாதிரி ரிலாக்ஸ் செய்ய இருவரும் வெளியே போவதுண்டு. சில நேரங்களில் நீண்ட தூரம் காரில் சென்று அங்கே ஏதாவதொரு உணவகத்தில் சிற்றுண்டி உண்டு விட்டு வருவது கூட உண்டு.

மாலை கக்கன் தெருவிலிருந்த அமுதம் காபி கடையில் இருவரும் உள்ளே நுழைத்தனர். ஒரு ஓரமாக இருந்த மேசையில் அமர்ந்தனர்.

ரெண்டு பாலில்லாத கருப்பட்டி காபியை ஆர்டர் செய்தான் அபினவ்.

“அப்படியே எனக்கு ரெண்டு மெதுவடை” என்று சொன்னான் கார்த்திக். அபினவ்வை பார்த்து “உனக்கு..?” என்றான்.

“எனக்கு பசியொண்ணுமில்ல காபி மட்டும் போதும்”

அபினவ்விற்கு என்ன பிரச்சனையென்று தெரிந்து கொள்ள கார்த்திக்கின் மனம் பரபரத்தாலும் அதைப் பற்றி கேட்காமல் கால அவகாசம் கொடுத்து பொது விஷயங்களை பேசலானான்.

கடை பணியாளர் காபியையும் வடையையும் கொண்டு வந்து மேசையில் வைத்தார். காபியை எடுக்கையில் அபினவ்வின் முகத்தை பார்த்தான் கார்த்திக். அபினவ் முகம் வாட்டத்துடன் இருப்பது மிதமான வெளிச்சத்திலும் நன்றாக தெரிந்தது.

“என்னாச்சு, ஏதாச்சும் பிரச்சனையா” மெதுவான குரலில் கேட்டான் கார்த்திக்.

“ஆமாடா.. இந்த வருஷம் புரமோஷன் லிஸ்ட்ல எம்பேரு வரல”

அதிர்ச்சி அடைந்த கார்த்திக் “என்னடா சொல்ற ?? நீதான் எச். ஆர்ல பெஸ்ட் பெர்மார்மர். ஒனக்கே புரமோஷன் வரலயா? நெஜமாவா சொல்ற? என்னால நம்பவே முடியலடா”

பதிலேதும் பேசாது முதல் மடக்கு காப்பியை மெதுவாக உறிஞ்சினான் அபிநவ்.

கார்த்திக் தொடர்ந்தான் ” உனக்கும் ஜி.எம்முக்கும் ஏதாவது பிரச்சினையா?”

“இப்ப எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த அந்த இன்டர்வியு விஷயத்தை மனசுல வெச்சுட்டு தான் பழி வாங்கிட்டாறோன்னு தோனுது”

“அன்னைக்கு நடந்த இண்டர்வியூ குழப்பத்த பொறுத்தவரைக்கும் உம்மேல ஒரு துளி தப்பும் இல்லையேடா. அப்புறம் ஏன் உன்னோட பதவி உயர்வுல கை வச்சாரு ஜி.எம்?.” புருவங்களை சுருக்கி நிஜமான வருத்தத்துடன் கேட்டான் கார்த்திக்.

தரக்கட்டுப்பாட்டு துறையில் இருக்கும் ஒரு முக்கியமான பணியிடத்தை நிரப்ப ஏழெட்டு மாதங்களுக்கு முன் ஒரு இன்டர்வியூ நடத்தப்பட்டது. தரக்கட்டுப்பாட்டுத் துறை என்பதால் டெக்னிக்கல் தேர்வை கார்த்திக் நடத்துவான். இறுதி நேர்முகத் தேர்வை அபிநவ் நடத்தி ஆட்களைத் தேர்வு செய்வது வழக்கம். ஆகையால் ஜிஎம் கார்த்திகையும் அபினவ்வையும் அழைத்து மணி என்று ஒருவன் இண்டர்வியூவிற்கு வருவான். அவனையே மேற்கண்ட போஸ்ட்டுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

டெக்னிக்கல் டெஸ்ட்டின் போது ஜி.எம் பரிந்துரை செய்த மணி உட்பட மொத்தம் ஆறு பேரைத் தேர்வு செய்து அனுப்பினான் கார்த்திக். இவர்கள் ஆறு பேரும் இறுதி நேர்முகத்தேர்வுக்கு அபினவ்வின் அறைக்கு அனுப்பப்பட்டார்கள். அபினவ்வும் மணி என்பவனையே தேர்வு செய்தான்.

ஒரு வடையை உண்டுவிட்டு “என்னடா அமைதியாயிட்ட?” என்று குரல் கொடுத்தான் கார்த்திக்.

“அந்த பையன் ஜி.எம்முக்கு நெருங்கின சொந்தமாம் டா”

“அதனாலென்ன. நம்ம மேல எந்த ஒரு தப்பும் தப்புமில்லையேடா..”

அபினவ் நிதானமாக பேசினான் “அந்த நேர்முகத் தேர்வுக்கு அப்புறம் அவர் எம்மேல ரொம்ப கடுப்பாயிருட்டாரு. என் கோப்புகளை மட்டும் நிலுவைல போட்ருவாரு. பல நாள் வேலை நேரம்‌ முடிஞ்ச பிறகும் தேவையில்லாமல் ஆஃபீஸ்லயே தங்கி இருந்துட்டு போக சொல்லுவாரு. சம்பந்தமே இல்லாம கோபப்படுவாரு. இப்படியே போய்ட்டிருந்தது. இதெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு என்னோட வேலையில சின்ன தவறு கூட வராமல் பார்த்துக்கிறேன்… அதனால ப்ரமோசன்ல கைவைக்க மாட்டார்ன்னு நம்பிக்கையோட இருந்தண்டா.”

அன்றைய நேர்முகத் தேர்வு நாளின் நினைவுகளில் மூழ்கினான்.

அன்று இறுதிச் சுற்றுக்கு வந்த ஆறு பேர்களும் வறவேற்பறையில் அமர்ந்திருந்தார்கள். அந்த வழியாக உள்ளே வந்த ஜி.எம் உட்கார்ந்திருந்த ஆறுபேரில் ஒருவரைப் பார்த்து கண்ணால் பேசினார். பின் ஜன்னலருகே நின்றவர் யாரும் பார்க்காத போது தமது ஆட்காட்டி விரலை உயர்த்தி அவனுக்கு ரகசிய செய்கை செய்து விட்டு நகர்ந்து சென்றார். இவற்றை கண்ணாடி அறையின் உள் பக்கத்திலிருந்து அபிநவ் பார்த்துக்கொண்டிருந்தான். பொது மேளாளர் பரிந்துரைக்கின்ற ஆள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டான் அபினவ்.

ஒவ்வொருவரின் ரெஸ்யூம், போட்டோ மற்றும் முகவரி ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை பார்த்த பிறகு ஜி.எம் யாரை உண்மையில் பரிந்துரை செய்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டான் அபினவ்.

பின் ஆறுபேரையும் தனித்தனியாக நேர்க்காணல் செய்தான். நேர்காணல் செய்து அவர்களின் தனித்திறன்கள் குடும்ப பின்னணி முதலியவற்றை குறிப்பெடுத்துக் கொண்டான். மணி கிராமப்புறத்தில் இருந்து வந்திருக்கிறான். அவனுக்கு கூர்மையான அறிவும் பிரச்சனைகளை எளிதாக கையாளும் திறனும் இருப்பதாக அபினவ் உணர்ந்தான். அவனது குடும்பமும் பொருளாதாரத்தில் பின்தங்கியதாக இருந்ததை தெரிந்து கொண்டான். ஆறு பேரையும் நேர்முகத் தேர்வு செய்ததில் அந்த காலியிடப் பணிக்கு மணி என்பவன் தான் பொருத்தமானவன் என்று தோன்றியது. துணிந்து மணியை தேர்வு செய்துவிட்டான்!

காபியை இன்னொரு வாய் நிதானமாக உறிஞ்சிய‌ அபினவ் “கார்த்திக் எனக்குள்ள ஒரு சஞ்சலம். உங்கிட்ட ஒண்ணு கேக்கட்டுமா?”

“ம் .. கேளுடா”

“அன்னைக்கு இண்டர்வியூல…” என்று தொடங்கிய அபினவ்வை இடைமறித்த கார்த்திக்

“அதையே திரும்ப திரும்ப ஏன் பேசிட்டிருக்க… அன்னைக்கு நம்மகிட்ட மணின்ற பையன் வருவான் அவனை தேர்வு செய்யுங்கன்னு ஜி.எம் சொல்லியிருந்தாரு. அதை வச்சு நாம மணின்றவனையே தேர்வும் பன்னிட்டம். அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது அவர் குறிப்பிட்ட பையனோட முழுப்பேரு மணிவண்ணன்னு. அவர் அந்த பையன வழக்கமா அழைக்கிற மாதிரி மணின்னே நம்மகிட்டையும் சொல்லிட்டாரு. அன்னைக்கு பார்த்து மணின்ற வேற ஒரு பையனும் இண்டர்வியூக்கு வந்துட்டான். இதுல நம்ம தவறு எதுவுமே இல்லையேடா”

“இருந்தாலும்…. நாம மணியை தேர்வு செஞ்சிட்டம். அந்த வேலைக்கு மணி பொருத்தமானவன் தானா..? அதான் மனசுக்கு சஞ்சலமா இருக்கு. நல்லா யோசிச்சு சொல்”

கார்த்திக் சிறிதும் தயங்காமல் “அந்த மணின்ற பையன் என்னோட டிபார்மெண்ட்ல இருக்குறதால அவனோட திறமையை இப்போ வரைக்கும் நான் தொடர்ந்து கவனிச்சிட்டு தான் வரேன் அபினவ்… பையன் நல்லா வேலை பார்க்குறான். வேலையில் புதுப்புது ஆலோசனைகள் சொல்லி நடைமுறைப்படுத்தறான். நாஞ்சொல்லுவன் மணி நூ…று சதவீதம் அந்த வேலைக்கு பொருத்தமானவன் தான்” என்றான்.

அபினவ் பதவி உயர்வு பற்றிய எண்ணங்களற்று உள்ளுக்குள் இன்னொருமுறை நிறைவாய் உணர்ந்தான்.