தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்


இத்தாலி- 2
லூசினோவிஸ் கோண்டி பசோலினி

இத்தாலிய திரைப்பட மேதைகளில் லூசினோவிஸ்கோண்டி (LUCHINO VISCONTI) குறிப்பிடத்தக்கவர். முப்பதுகளின் இறுதியில் புகழ்வாய்ந்த பிரெஞ்சு திரைப்பட மேதை ழான் ரென்வாரிடம் உதவி இயக்குனராயிருந்தவர். இவரது முதல் திரைப்படம். 1943ல் இயக்கி வெளிவந்தது. இப்படம், OSSESSIONE என்பது, சரியாகச் சொன்னால், ராபர்டோ ரோஸ்ஸெலினி முதல் நியோரியலிஸ திரைப்பட இயக்குனரல்ல. விஸ்கோண்டிதான் என்பதற்கு அவரது ஒஸ்ஸெஷன் சாட்சி. அதனால்தான் ராபர்டோவும் தம் கட்டுரையொன்றில், நியோ ரியலிஸத்தின் தந்தை நான் இல்லை, என்று குறிப்பிட்டிருந்தார். ஒஸ்ஸெஷன்தான் அந்த வகையாக 1943ல் செய்யப்பட்ட முதல் நியோரியலிச திரைப்படம். ஆனால்  அதன் மூலக்கதை ஜேம்ஸ் எம்.கேய்ன் (James M.Caine என்றவர் எழுதிய 1934ல் பிரசாரமான  The Postman Always Rings Twice  என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இப்படம் வெளிவரும் சமயம் கேய்ன் இறந்துவிட்டார். இந்த போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ் எனும் மர்ம நாவல் அதே பெயரில் 1946ல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. இதனால் விஸ்கோண்டியை அவரது படம் ஒஸ்ஸெஷனை முதல் நியோ ரியலிஸத் திரைப்படமாய் எடுத்துக் கொள்ளுவதில்லை.

விஸ்கோண்டியின் அத்திரைப்படம், அன்றைய இத்தாலிய சர்வாதிகாரி முஸ்ஸோலியின் அரசின் ஃபாசிஸ கொள்கையை வன்மையாக எதிர்த்து கண்டிக்கும் ரீதியில் இருந்ததால் இத்தாலியின் பாசிஸ அரசின் அனுமதி வழங்கப்படவில்லை. மூல நாவலை விஸ்கோண்டிக்குப் படிக்கத் தந்தவர் பிரெஞ்சு இயக்குனர் ழான்ரென்வார்தான். அவரிடம் பெற்ற பயிற்சியின் தாக்கம் இந்தப் படத்தில் நன்கு தெரியும் படத்தைப் பார்த்துவிட்டு முஸோலினியின் கலாச்சார அமைச்சராயிருந்த கேய்டனோபோல் வெரெல்லி (Gaetano Polverelli) கக்கூஸ் நாற்றமடிக்கும் படம், என்று விமர்சித்தார்.

Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

ஒஸ்ஸெஷன் ஒரு குற்றம் தொடர்பான கதையாயிருந்த போதிலும் விஸ்கோண்டி அந்த மர்மம் குற்றம் எனும் அம்சத்தை மிக மிக அமுக்கி வாசித்து, பொறாமையுணர்வு, அது தொடர்பாக தவிர்க்க முடியாத கொலை செய்யத் தூண்டும் உளவியல் விசயமாய் கதை வடிவை மாற்றிக் கொண்டார். முக்கிய கதாபாத்திரங்கள் இரண்டு, அவற்றில் ஒன்று வழியிலேயே திருமணம் ஒன்றில் சங்கமித்துவிடும். இத் திருமண நிகழ்ச்சியும், அடுத்து கதா பாத்திரம் அதில் அமிழும் நிகழ்வும் அற்புதமாக காட்சி ரூப சித்தரிப்பை படத்தில் கொண்டு வரப் பட்டிருக்கும். இன்னொரு கதாபாத்திரம் சாலையிலேயே நின்றுவிடும். ஒஸ்ஸெஷன் இத்தாலிய நியோரியலிஸ வகைமையையும், அமெரிக்க திரைப்பட வகைமையையும் இணைந்த பெரிய பெரியதொரு எடுத்துக்காட்டாக இருந்திருக்ககூடும். ஆனால் அவை இரண்டின் மூலத் தன்மைகளிலும் ஏதோ ஒரு குறைபாடு காரணமாக இருவித இயக்கங்களும் இணையாமல் தனித்தனியே இருப்பது தெரியவருவதால், படமும் வேறுபட்டுத் தோன்றுகிறது.

விஸ்கோண்டி 1960ல் இயக்கிய படம், ரோக்கோவும் அவனது சகோதரர்களும் Rocco and His Brothers இப்படத்தின் வாயிலாக, விஸ்கோண்டி, தொடக்கத்தில் தாம் கொண்டிருந்த இத்தாலிய நியோரியலிஸ கோட்பாட்டுணர்விலிருந்து வெளியேறி, உணர்ச்சி வயப்படும் மெலோடிராமா முடிவு கொண்டவிதமான திரைப்படமாக்கலுக்கு வந்தவராகத் தெரிகிறார். இதிலிருந்து அவர் மேற்கொண்டு இசை நாடகத் தன்மை மிக்கதும், பிரம்மாண்டமான ஜோடனைகள் மிக்க கதையாடல்களின் மேல் அமைக்கப்பட்ட சிறந்த திரைப்படங்கள் லெபார்டு Leopard வேங்கை மற்றும் லூட்விக் Ludwig 1972, Damned ஆகியவற்றை இயக்கினார். ரோக்கோ, விஸ்கோண்டியின் கடைசி நியோரியவிஸ படமென்று கூறலாம். ரோக்கோவும் அவன் சகோதரர்களும் விஸ்கோண்டியின் சிறந்த படங்களில் ஒன்று. இப்படத்தின் கருப்பு- வெள்ளை ஒளிப்பதிவை காமிரா கலைஞர் ஜிசெப்பெரோடுன்னோ Giuseppe Rotonno அதியற்புதமாய் செய்திருக்கிறார். ஆவணப் படம் போன்ற நியோரியலிஸ வகைமையையும், ஹாலிவுட் மாதிரி ஸ்டைல் வகைமையையும் கலந்தாற்போன்றதொரு வகைமை. இத்தாலியின் சிசிலி நகரிலிருந்து பிழைப்பு தேடி ஒரு விவசாயக் குடும்பம் மிலன் நகருக்கு வருகிறது. அக்குடும்பத்து சகோதரர்களில் ரோக்கோ என்பவன் முன்னுக்கு வர, ஒரு குத்துச் சண்டைக்காரனாகிறான். இவனுக்கு மூத்தவன் முரடன் பொறுப்பற்றவன். பேராசையும் பொறாமையும் நிரம்பியவன், குடும்பத் தலைவரில்லாத அக்குடும்பத்தின் பொறுப்பு குடும்பத் தலைவியான ரோக்கோவின்

Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்அம்மா மீது விழுகிறது.

ரோக்கோவின் ஒத்துழைப்பிலும் சாந்த குணத்தாலும் தாய் கடினமான கணங்களை சமாளிக்கிறாள். மூத்த மகன் குடும்பத்தைப் பிரித்து நாசமாக்குவதிலும் ஈடுபடுகிறான். சகோதரர்கள் இருவருமே ஆசைப்படும் அழகியும் கவர்ச்சி மிக்கவளுமாய் பெண்ணொருத்தி, ரோக்கோ, பெண்ணுக்காக குடும்பம் சிதறுவதை விரும்பாது, அவளை அண்ணனுக்கே விட்டுக் கொடுத்து காதலைத் தியாகம் செய்கிறான். ஆனால் இறுதியில் அந்தப் பெண் இறந்து போகிறாள். ரோக்கோவாக பிரெஞ்சு நடிகர் ஆலன் டெலான் நடிக்கிறார். பரவாயில்லை. ஆனால் முரட்டுத்தனம், பொறாமை முதலான குணச்சித்திரங்களை நன்கு வெளிப்படுத்தி பாராட்டப் பட்ட மூத்த சகோதரனாய் நடித்த இத்தாலி நடிகர் ரெனாடோ சால்வடோரி நடிப்பில் முந்திவிடுகிறார்.

லூசினோ விஸ்கோண்டி 1963ல் லெபாரடு Leopard வேங்கை என்ற  மகத்தானதும் பிரம்மாண்டமானதுமான வண்ணப் படத்தை இயக்கி வெளியிட்டார். அவரது மிகச் சிறந்த படங்களில் லெபார்டும் ஒன்று. 1965ல் இப்படம் சென்னை குளோப் தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த அரிய பொருள் பொதிந்த அழகியல் செறிவு மிக்க படம் மூன்று வாரங்களில் திரையிடல் நிறுத்தப்பட்டது. பிறகு வந்த From Russia With Love  ஜேம்ஸ் பாண்ட் படம் இதே தியேட்டரில் பத்து வாரங்கள் ஓடியது. சிசிலியில் 1860களில் கரிபால்டியின் இத்தாலிய புரட்சியின்போது நடப்பதான கதை. இத்தாலியின் சிறந்த வரலாற்று நாவலாசிரியர் ஜிசிபேடொமாசி டி லாம்பெடுசா Giusepde Tomasi Di Lampedusaவின்  நாவலைத் தழுவி எடுத்த படம் விஸ்கோண்டியின் திரைக் காவியமென்றே கூறலாம். பகட்டும் படாடோபமும் மிக்க சீமான்களும், சீமாட்டிகளும் நிறைந்த இத்தாலிய நகர்புற உயர்குடிகளின் பிடி தளர்கிறது. மத்தியதர வர்க்கம் எழுகிறது. இந்த எழுச்சிக்கு
தலைமை தாங்கியவர் கரிபால்டி, Garibaldi இவ்வெழுச்சியால் ஓர் ஒன்றிணைந்த புதிய ஜனநாயகம் இத்தாலியில் மலர்கிறது.Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

The Leopard Il Gattopardo-1963 இத்தாலியின் இளவரசர் (இளவரசர் 60 வயதானவர் ஃபாப்ரிஜியோ டி சாலினா Prince Fabrizio Di Salina என்பவரது கதை வழியாக ரிசாரிமெண்டோ இயக்கத்துக்குப் பிந்தைய முக்கிய சமூக மாற்றங்களை படம் சொல்லுகிறது. கரிபால்டியின் புரட்சி படை சிசிலியில் நுழைந்ததும் அரசுப் படையோடு கடுமையான போர் நிகழ்கிறது. போர்க் காட்சி குறைந்த நேரமே இடம் பெற்றாலும் விருவிருப்பானது நகரின் தேவாலய பாதிரியார் இளவரசரோடு ஒட்டிக் கொள்பவர். வேடிக்கையான பாதிரியார். ஃபாப்ரிஜியோ இளவரசருக்கு பாதிரியாரை கிண்டல் செய்யாமலிருக்க முடியாது. ஒரு காட்சியில் இளவரசர் குளித்துக் கொண்டிருக்கும்போது அவசர சமாச்சாரமென்று சந்திக்க வரும் பாதிரியார், இளவரசர் முண்டக் கட்டையாகக் குளிப்பதைப் பார்க்க விரும்பாததைச் சொல்லுவார். அதற்கு இளவரசர் நக்கலாகச் சொல்லுவார்.

பாதிரியார் மனித ஆவியையும், ஆத்மாவையும் நிர்வாண கோலத்தில்தான் மனதில் கற்பித்து ஆசீர்வதிப்பார், என்று கரிபால்டியுடனான சண்டையை இளவரசர் தவிர்க்கும் முடிவோடு, குடும்பத்தோடு டொன்னா ஃபுகட்டா Donna Fugata எனும் ஊருக்கு போகிறார். உலகம் மாறிவரும் யதார்த்ததை அறிந்த சீமான்களில் இளவரசரும் ஒருவர். ஒவ்வொன்றும் அப்படியே இருக்க நாம் விரும்பினால், ஒவ்வொன்றும் மாற்றம் பெற்றாக வேண்டும், என்ற கொள்கையுடையவர் அவர். எனவே தம் இனத் தகுதிக்கும், செல்வாக்குக்கும்  மிகவும் குறைந்த உள்ளூர் மேயரின் பெண்ணை திருமணம் முடிக்க தம் சகோதரனின் மகன் டாங்க்ரெடி ஃபல்கோனெரியை மணமகனாக்க  முடிவு செய்கிறார். அவரது வேங்கை வம்சத்துக்கும் மேயரின் குள்ளநரி வம்சத்துக்கும் இடையேயான திருமண பந்தம் படத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெறுகிறது. இப்பகுதிக் காட்சி மிக அற்புதமாக ஜிசிப்பெ ரோட்குன்னோ Giuseppe Rotonnoவின் காமிராவால் ஒளிப்பதிவாயிருக்கிறது. வங்கத்தின் பிரம்மாண்ட மாளிகைகள் சத்யஜித்ரேயின் சில படங்களில் இடம் பெற்றது போன்று, இப்படத்தில் ஓர் அழகிய அசத்தலான மாபெரும் மாளிகை இக் காட்சிகளில் இடம் பெறுகிறது. ஒளிப்பதிவு அபாரம். மாளிகையின் ஓவியங்கள், சிற்பங்கள், பிரமிப்பூட்டும் மரவேலைப் பாடுகள்… ஆனால் சாலினா வம்சாவளி குடும்பத்தின் ஆண், பெண்களின் முகங்கள் இத்திருமணத்தில் வெளுத்து சோபையிழந்து தோன்றுகின்றன. சினிமா வரலாற்றில் நாவல் ஒன்றைத் தழுவி திரைப்படமாக்கியதில் மிகச் சிறந்த படைப்புகளில் விஸ்கோண்டியின் லேபார்டும் ஒன்று என விமர்சிக்கப்பட்டுள்ளது. இளவரசர் சாதாரண வம்சத்து மேயருடன் திருமண உறவு கொள்ளுவதை விஸ்கோண்டியின் சுய வரலாறு ரீதியான திரைப்பட காட்சியாடல் என்பாருண்டு. பிறப்பில் அதி செல்வாக்கான பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த லூசினோ விஸ்கோண்டி ஒரு பொதுவுடைமைவாத கொள்கையை ஏற்று கம்யூனிஸ்டாகத் திகழ்ந்ததை அவ்வாறு பேசுவார்கள்.

மணமகனாக பிரெஞ்சு நடிகர் ஆலன் டெலான் இளமை, வசீகரமாய் நடிக்கிறார். அவருக்கு இணையாக கிளாடியா கார்டினேல் Claudia Cardinale நடிக்கிறார். சாலினா இளவரசராக படம் முழுக்க வந்துபோகும் மறக்க முடியாத நடிப்பின் மூலம் கொள்ளை கொள்ளுபவர் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகர் பர்ட் லங்காஸ்டர் லங்காஸ்டர் படத்தைக் கையாண்டு நடித்திருக்கிறார். போலவே, விஸ்கோண்டியளவுக்கு எந்த இயக்குனரும் லங்காஸ்டரை இதுவரை வார்த்து நடிக்கச் செய்ததில்லை. தனித்த அதி உயர்ந்த சீமானாகத் தோன்றி நடிக்கும் அதே நேரம் மிகுந்த மனிதநேயம்  கொண்டவராகவும் நடிப்பால் வெளிப்படுகிறார். அவ்வாண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பதக்க விருது லெபார்டுக்கு கிடைத்தது.

லூசினோ விஸ்கோண்டிக்கு மரணம் குறித்தான சிந்தனை சுற்றிச் சுற்றி வந்திருக்க வேண்டும். இப்படத்தில் இறுதிக் காட்சியான பிரம்மாண்ட திருமண ஒப்பந்த ‘‘பால் ரூம் நடனத்தின்போது இளவரசர் ஃபாப்ரிஜியோ ஒரு பெரிய தைல வண்ண ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு மனிதனின் மரண கோலத்தை அவ்வுடலைச் சுற்றியமர்ந்துள்ள பெண்களையெல்லாம் பார்க்கிறார். தன் மரணம் குறித்தும் யோசிக்கிறார். லாம்படூசாவின் நாவலில் இறுதியில் இளவரசர் இறந்துவிடுவதாயிருக்கும் முடிவை கிட்டதட்ட மரணவுணர்வோடு சிம்பாலிக்கலாக விஸ்கோண்டி படத்தில் மாற்றியிருக்கிறார். தொடர்ந்து தாம் இயக்கிய STRANGER DAMNED மற்றும் DEATH IN VENICE ஆகிய படங்களின் முடிவும் மரணத்தையே கொண்டவையாக விஸ்கோண்டி உருவாக்கியிருக்கிறார்.Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

DAMNED 1969ல் விஸ்கோண்டியின் இயக்கத்தில் உருவான மிகச் சிறந்த படம். இப்படம் எழுபதுகளின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதும், சென்னையில் நடந்தேறிய சர்வதேச திரைப்பட விழாவின்போது  இப்படம் பாண்டி பஜாரிலிருந்த ராஜகுமாரி தியேட்டரில் திரையிடப்பட்டது. இரண்டாவது சுற்றில் பொதுத் திரையிடலாக சஃபையர் திரையரங்கில் வெளியானது. இரு தியேட்டர்களில்  திரையிடப்பட்டபோதும் நானும் எழுத்தாளர் மா. அரங்கநாதனும் இரு முறை பார்த்தோம். டாம் டூம் படம் விழாவில் திரையிடப்பட்ட ஆண்டுதான் இந்திய அரசு  தங்க மயில் பரிசை நிறுவியது. அப்பரிசை சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற மிகச் சிறந்த படம் என லூசினோ விஸ்கோண்டியின் டாம்டு
படத்துக்குக் கிடைத்தது.

டாம்டு படத்தின் கதை, ஹிட்லரின் நாஜிக் கட்சி 1933ல் ஜெர்மனியில் அதிகாரத்தைப் பிடித்த காலச் சூழலில் நடக்கிறது. முப்பதுகளின் ஜெர்மன் தொழில் அதிபர் ஒருவரின் குடும்பத்துக்குள் நாஜிஸம் எப்படியெல்லாம் புகுந்து எதிரொலித்தது என்பதை, விஸ்கோண்டியின் படம் நம்மை திகிலுக்கு ஆட்படுத்துகிறது. இவரது திரைப்படங்கள், கதையின் காலத்தின் நகர வீதியமைப்பு, வாகனங்கள், உடைகள், சிகை பேச்சு பாவனையென்று சகலமும், அந்த காலத்துக்கே நம்மை அழைத்துப் போய்விடும். இந்த விஷத்தில் அவருக்கு திலெபார்டு, ரோகோ ஆகிய படங்களில் கலைப் பொறுப்பேற்ற ஆர்ட் டைரக்டர் பியரோ டோசி (PIERO TOSI) பெரிதும் துணை நின்றவர் விஸ்கோண்டி பிரபு குடும்பத்தில் (COUNT LUNCHINO VISCONTI DIMODRONE) 1906ல் இத்தாலியின் மிலன் நகரில் பிறந்தவர். மாபெரும் பிரெஞ்சு திரைப்பட மேதை ழான் ரென்வாரிடம் ஒரு மாதகாலம் மூன்றாவது உதவி இயக்குனராயிருந்து வேணிக் கற்றவர் பலமுறை வீட்டையும், கல்லூரியையும் விட்டு ஓடிப்போன விஸ்கோண்டியை அவரது தந்தை அவரை குதிரைப் படைப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டார். நாஜி எதிர்ப்பாளரும் கம்யூனிஸ்டாகவும் செயலாற்றியதற்காக விஸ்கோண்டி நாஜிகளால் கைது செய்யப்பட்டவர், இவர் திரைப்படங்கள் செய்ததைக் காட்டிலும் மிலன், வியன்னா ஆகிய நகர அரங்கங்களி்ல் நாடகங்களையும், இசை நாடகங்களையும் தான் அதிகளவு இயக்கியவர். DAMNED  படத்தில் ஜெர்மனியில் புகழ் பெற்ற தொழில் நகர் ஒன்றில் மாபெரும் நிஹர் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வதில் தடுமாறி அழிந்துப்போன தொழிலதிபக் குடும்பத்தின் கதை.

ஒரு முக்கிய குடும்ப உறுப்பினனாக பிரிட்டிஷ் நடிகர் டர்க் போகார்டு (DIRK BOGARDE)  நடிக்கிறார். சிறந்த தொழில்  மற்றும் வர்த்தக அதிபருக்கான பெரும் பரிசொன்றை பெறும் பொருட்டு அதற்குப் போட்டியாக விளங்கிய சிலரை மிகத் தந்திரமாய் இவர் கொலை செய்கிறார். இவரது மனைவியாக அற்புதமாய் வந்து சோஃபி எனும் பாத்திரத்தை இன்கிரிட் தூலின் செய்கிறார். இவர்களுக்கு ஒருவித மனநோயாளியான மார்டின் என்ற வயது வந்த மகன். இந்த இருபது வயதுப் பையன் மார்டினை, இவன் அம்மா சோஃபி தன் மன ஆளுமைக்குள் அமுக்கியிருக்கிறாள். அவள் மீது மார்டினுக்கு ஈடிபஸ் (OEDIPUS வகை சரீர ஆசையுண்டு. தன்மீதுள்ள தன் தாயின் ஆளுமையை உடைத்து அதிலிருந்து விடுதலையாகும் வேகத்தில் தன் மீது அவளுக்கு மாறாத பகைமையேற்படும் வண்ணம் மார்டின் தன் தாய் சோஃபியைக் கற்பழித்து வல்லுறவு கொள்ளுகிறான். முடிவில் எல்லோரும் விஷமருந்தி இறக்கிறார்கள். சோஃபியாவாக இங்மர் பெர்க்மனின் ஏழெட்டு சுவீடிஷ் படங்களில் நடித்த இங்ரிட் தூலின் சிறப்பாக நடிக்கிறார். மார்டினாக மிகவும் கடினமான மனோவியாதியாளனாய் அபாரமாய் நடித்திருப்பவர் ஹெல்மட் பெர்ஜர் என்ற ஜெர்மன் நடிகர். நாவலாசிரியர் ஆல்பர்ட் காம்யூவின் (ALBERT CAMUS) மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று அன்னியன் இருத்தலியல் (LA STRANGES) தத்துவத்தின் வாழ்வியல் மாதிரியாக இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையை மிக அற்புதமாயும் எளிமையாயும் தயாரித்து இயக்கினார் லூஷினோ விஸ்கோண்டி, OUT SIDER என்று ஆங்கிலத்தில் கிடைத்த நாவலை நானும்
மா.அரங்கநாதனும் இரு முறை வாசித்தோம். அந்த சமயம்தான், அக்கதையை விஸ்கோண்டி STRANGER என்று படமாக்கி, சென்னை காசினோ திரையரங்கில் திரையிடப்பட்டது. அது ஒரு கோடையில் சென்னையில் கோடை வெயிலின் தகிப்பு பேதலிக்க விடுவதுபோல, படத்திலும் சூரியனின் அல்ஜீரிய வெப்பத்தின் கொடுமையில் சுட்டுக் கொன்றதாகக் கூறுகிறான் அந்நியன் மத்தியான காட்சி பார்த்து முடித்து வெளியில் வந்த சுருக்கிலேயே மாலைக் காட்சிக்கான வரிசையில் நானும் அரங்கநாதனும் போய் நின்றோம். நானும் மா.அரங்கநாதனும் ஒரே சமயத்தில் ஒரே நாளில் தொடர்ந்து இருமுறை பார்த்தும் வெறி தணியாத படம் விஸ்கோண்டியின்  STRANGER.

இப்படத்திற்கு இந்திய திரைப்படத் தணிக்கைக் குழு M சான்றிதழ் அதாவது MATURED AUDIENCE ONLY என்ற அறிவு. மனமுதிர்ச்சி பெற்றவருக்கான பிரத்தியேக சான்றிதழ் வழங்கியிருந்தது. இத்தகைய சான்றிதழ் அபூர்வமாக ஒரு சில படங்களுக்கே வழங்கப்பட்டிருக்கின்றன. காம்யூவுக்கும் விஸ்கோண்டிக்கும் ஒரு நெருங்கின தொடர்புண்டு. நாஜிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இருவருமே பிரான்ஸில் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள்.

மார்சா பிரெஞ்சு அல்ஜீரியாவில் குமாஸ்தா வேலைப் பார்த்துக் கொண்டு சுய சமையல், காதலியுடன் விடுமுறைகளில் உடலுறவு உட்பட்ட இனிய பொழுதுகளாய்  கழிக்கும் இளைஞன். பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்து புரட்சியும், சண்டையுமாய் இருப்பதால் அரபியர் சிலர் இவனோடு வம்பிலிழுக்கின்றனர். இச்சமயம் அவனது அம்மா ஊரில் இறந்துபோகிறாள். சம்பாதித்து தாயைக் காப்பாற்றாது முதியோர் விடுதியில் அவளை சேர்த்திருந்தபோது அவள் இறந்து விடுகிறாள். அவளை ஒரு முறை கூட போய் பார்த்திராத மார்சா இப்போதுபோய் விடுதிக்காரரைப் பார்க்கிறான். இறந்துபோனவளைப் பார்க்காமலேயே திரும்பியும் வந்து விடுகிறான். இவையெல்லாம் இவனைப் பற்றின பெருந்தவறான நடவடிக்கை, இயல்புகளாய் சமூகத்தை உறுத்துகிறது. சமுதாயத்தின் கண்களுக்கு மார்சா ஒரு சராசரி மனிதனுக்கான அடிப்படை குறைந்தபட்ச உணர்வுகளும், மனித நேயமும் ஒரு நிகழ்வுக்கான எதிர்வினையும் இல்லாதவனாய் படுகிறான். உயிர் வாழ்தல், மரணம், உடலுறவுடனான காம உணர்வு என்பனவற்றை அவன் உள்ளார்ந்து உட்சென்று ஈடுபடாது சகலத்தையும் வெளியில் நின்றே வெளிமனிதனாகப் பார்க்கிறான். அதேசமயம் அறிவோடும் உணர்ச்சிகளோடும் இயங்குகிறான். BEING IN NOTHINGNESS என்கிறார் ழான் பல் சார்தர். ஒரு முடிவில்லா நிகழ்காலமாகவே படும் தன் நடப்பியல் வாழ்வில் எந்த எதிர்பார்ப்புமிக்க ஆவலுமற்றவனாய் மார்சா, சிந்திக்க, சிந்தித்து வெளிப்படுத்த தேவையற்றவனாய் தெரிகிறான்.

காதலியுடன் கடும் வெயிலில் ஒரு நாள் கடற்கரையிலிருக்கையில் இரு அரபிய ரவுடிகளுடன் ஏற்படும் மோதலில் ஒருவனை மார்சா கொன்றுவிடுகிறான். கைது, சிறை, விசாரணை, பைபிள் மீது சத்தியம் செய்ய மறுப்பு. இறுதியில் அவனை கில்லடின் முறையில் சிரச்சேதம் எனும் தண்டனை வழங்கப்படுகிறது. இப்படத்தில் மார்சாவாக வரும் புகழ்பெற்ற இத்தாலிய நடிகர் மார்செல்லோ மாஸ்டிரியாயினி மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அன்றைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்படத்திற்கு எழுதிய விமர்சனத்தின் இறுதிவரி: EXISTENCIALISM LIVED OUT, என்று குறிப்பிட்டிருந்தது.

பிரம்மாண்டமான மற்றொரு படைப்பை லூட்விக் எனும் திரைப்படம் வழியே தருகிறார் விஸ்கோண்டி. 1972-ல் விஸ்கோண்டி தயாரித்து இயக்கிய இம்மாபெரும் வரலாற்றுப் படம் லூட்விக் மூன்று பகுதிகளாக தரப்பட்டிருக்கிறது. பிரஷ்ஷியாவை (PRUSSIA) அன்றிருந்த சிறிய ஜெர்மனி, மற்றும் பவேரியா என்பனவற்றை ஒன்றிணைத்து ஓர் அகண்ட ஜெர்மனியாக உருவாக்குவதின் வரலாற்றுப் பகுதி இப்படம் லூட்விக்கின் மகுடாபிசேகம் மிக பிரம்மாண்டமானது. பவேரியாவின் இளவரசனாயிருந்து அரசனாகும் லூட்விக்கின் திருமணம் அவன் மனம் போலவே அவ்வளவு பிரமாதமாயில்லை. அவன் ஒரு மனோவியாதிக்காரன். நரம்பு பலவீனம், உணர்ச்சிவயப்படல், ஓரின பாலுறவு என் பதிலும் இசை, இசை நாடகத்திலும் மிக்க ஆர்வம் கொண்டவன்.

வான் பிஸ்மார்க்கின் அகண்ட ஜெர்மனி உருவாக்கத்தில் பவேரியாவும் சங்கமிக்கத் தயாராகும் 19ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் படம். படத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக இருப்பவர் புகழ் பெற்ற பவேரிஸ,  ஆஸ்திரிய பின்னர் ஜெர்மனியரான  இசை மேதாவியும் இசை நாடகக் கலைஞருமான ரிச்சர்டு வாக்னர் (RICHARD WAGNER) ஹிட்லர் தம் கோப உணர்ச்சிகளின்போது வாக்னரின்  இசையை வைத்து கேட்பதின் மூலம் தணிந்துபோவார் என்பதும் வரலாறு வாக்னராக பழம் பெரும் பிரிட்டிஷ் நடிகர் டிரெவார் ஹோவார்டு (TREVOR HOWARD) அற்புதமாய் நடித்திருக்கிறார். லூட்விக் பாத்திரத்தை பிரமாதமாய் நடித்திருப்பவர் ஹெல்மட் பெர்கர் (HELMUT BERGER).

பியர் பவோலோ பசோலினி (PIER PAOLO PASOLINI) என்ற இத்தாலிய பிரமுகரின்  பெயர் உலகத் திரைப் பட வரலாற்றில் பெரும் பரபரப்பை செய்து வந்த ஒன்று மதரீதியான கெடுபிடிகளை, மத ரீதியான ஒழுக்கவியலின் பல்வேறு தளங்களை, சீமான்களை சீமாட்டிகளை, சமூகத்தின் மிகவும் தாழ்ந்த அடித்தட்டு மனிதர்களை ஏன், மனிதன் வசமுள்ள மிருகங்களையும் கூட, பசோலினியளவுக்கு காட்சி ரூப ரீதியாக திரைப்படங்களில் காட்டியதுமில்லை. அதற்காக வாங்கிக் கட்டியதுமில்லை- வேறெவரும் இறுதியாக பொதுவிடத்தில்  அவர் கொலையே செய்யப்பட்டவர். இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் வறுமையை, வறியவர்கள் குவிந்த சேரிகளையும் அதிகரிக்கச் செய்த அதே சமயம் பக்தியையும் பயமுறுத்தல் சேர்த்து புகட்டியது. இலக்கியங்களும் நாடகமும் பிற நிகழ்த்துக் கலை வடிவங்களும் மனிதனை இவற்றின் தார்மீக, சுழல்களின் அமுக்கலினின்றும் விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது அவற்றுடன் சினிமாவும் கைகோர்த்துக் கொண்டது. அவற்றில் ஒன்றாக வந்தது பசோலினியின் சினிமா. அவர் புகழ் பெற்ற சிறுகதைகளை திரைப்படமாக்கியவர். அவற்றில் முக்கியமானவை இரு படங்கள். ஒன்று, டெக்கமரான் (DECAMERON).Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

டெக்கமரான் கதைகள் கேலியும், கிண்டலும் சமூக நடப்பியலை ஒளிவு மறைவின்றி பச்சையாகக் காட்டி விமர்சிப்பவை. பாலுறவு சமாச்சாரங்கள் அதிகம். டெக்கமரான் கதைகளை எழுதியவர் இத்தாலிய எழுத்தாளர் பொக்காஷியோ BOCCACCIO ஒரு சமயம் நான் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவர் உணவு இடைவேளையில் ஒரு புத்தகத்தை ஒளித்து வைத்துப் படிப்பார். அந்த காலத்தில் பிரேமா பிரசுரம் என்று ஒன்றிருந்தது. அது பெரும்பாலும் துப்பறியும் நாவல்களையும் ஆபாசம் மிக்க சில கதைப் புத்தகங்களையும் பதிப்பித்து வெளியிடும். வரவேற்பு அதிகம். அவற்றில் ஒன்று, நண்பர் ஒளித்து படித்துக் கொண்டிருந்தது. எனக்கு மிகவும் வேண்டியவராதலால் என்னிடம் அதையெல்லாம் காட்டுவார். வாங்கிப் பார்த்தேன். பொக்காஷியோ எழுதிய கதைகள், டெக்கமரான் கதைகள், என்றிருந்தது. எப்படி போகுது? என்று கேட்டேன்.

சரோஜாதேவி கதைபோல இல்ல, படிச்சிட்டு வேணும்னா தாருங்க, என்றார் நண்பர். அப்படித்தான் பொக்காஷியோ அருளிச் செய்த டெக்கமரான் கதைகள் படிக்கக் கிடைத்தது. டெக்கமரான் கதைகள் படிக்கக் கிடைத்தது. டெக்கமரான் கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த ஒன்பது கதைகளைக் கொண்ட வண்ணப்படம் டெக்கமரான் பசோலினியின் அரிய இயக்கத்தில் 1970ல் திரைப்படமாயிற்று. அனேகமாய் தான் இயக்கிய படங்களில் ஏதேனும் ஒரு சிறு பாத்திரத்தில் பசோலினியும் நடித்திருப்பார். ஒரு கதை மிக்க நகைச்சுவையும் கிறிஸ்தவ மடாலயங்கள் குறித்த நக்கல் மிக்கதுமானது. எல்லா மதங்களின் மடாலயங்களிலும் இவ்வகை
கூத்து இருக்கவே கூடும்.

ஒரு கன்னியாஸ்திரீகளின் வசிக்குமிடம், பரந்த செழித்து வளர்ந்த காடும் தோட்டமுமான பகுதிக்குள் ஏராளமான குடியிருப்புகள். அவர்களின் தலைவி நடுத்தர வயதுக்காரி. தோட்டக்கார கிழவனால் அவ்வளவு பெரிய தோட்டத்தை சமாளிக்க முடியாமல் உதவியாள் ஒருவனைக் கொண்டு வருகிறான். அவன் ஒரு இளைஞன், கன்னியாஸ்திரிகளின் இடத்தில் இளைஞனாக ஆண்கள் இருக்க அனுமதியில்லை. ஆனால் ஊமை செவிடாயிருந்தால் இளைஞனும் வந்து வேலை செய்யலாம் என்பதால் தோட்டக்கார கிழவனின் சொந்தக்கார இளைஞன் ஊமை. செவிடு என பொய் கூறி வேலையில் அமர்கிறான். தோட்ட வேலை செய்து கையில் இரு இளம் கன்னியாஸ்திரிகள் கவனிக்கின்றனர். காம இச்சை மேலிட்டு அவனோடு ரகசியமாய் உடலுறவு கொள்ள விழைகையில், ஒருத்தி கேட்கிறாள், சரி, குழந்தை உண்டாகி விட்டால் என்ன செய்வது? என்று அதற்கு மற்றவன் அலட்சியமாய் சொல்லுகிறாள், அது இப்போது கவலையில்லை. ஆனால்  பார்த்துக் கொள்ளலாம் அவனையிழுத்துக் கொண்டு இருவரும் பாழடைந்த அறைக்குள் போகின்றனர். வெளியில் நின்று பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஒருத்தி போகிறாள். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து மற்றவளையும் போக சொல்லுகிறாள். அடுத்தவள் கேட்கிறாள், எப்படியிருந்தது? என்று  ஓ, அருமை, என்கையில் மற்ற கன்னிப் பெண்களும் கவனித்துவிட்டு குடியிருப்புக்குள்ளேயே போலி ஊமையனை அழைத்து உடலுறவுச் சுகம் பெறுகின்றனர். ஒரு நாள் இதைக் கவனித்து கண்டு கொண்ட கன்னிமார் தலைவி ஊமையனை தன் அறைக்கு அழைத்துதனக்கும் உடலுறவுச் சுகமளிக்க கட்டளையிடுகிறாள். அவன் களைத்துப் போய் எழுந்துவிடவும்,  ஏன் முடிக்காது போகிறாய், முடித்துவிட்டுப் போ, என்கிறாள் கன்னிமார் தலைவி. போலி ஊமையன் சலிப்பும் கோபமுமடைந்தவனாக, நான் என்ன மெசினா, ஒரு சமயம் ஒருத்தியோடுதான் முடியும் என்று கத்திவிடுகிறான். தலைவி திடுக்கிட்டு அதிர்ந்துபோய், ஆஹா, ஊமை பேசிவிட்டான், ஊமை பேசிவிட்டான், அற்புதம் அற்புதம் நிகழ்ந்துவிட்டது. என்று கத்திக் கொண்டே ஓடுகிறாள். இப்படியாக மற்ற எட்டு கதைகளும் செக்ஸியும் பக்தியையும் மூட நம்பிக்கைகளையும் எள்ளி நகையாடி  பஸோலினியின் அற்புத இயக்கத்தில் படமாக்கப்பட்டுள்ளன டெகமரான்.

Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்ஆங்கில இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ஜியாஃப்ரி செளஸர் (GEOFFREY CHAUCER) இவர் 1340 வாக்கில் லண்டனில் பிறந்தார். ஏராளமான பயணங்களை மேற்கொண்டவரும், இராணுவம் மற்றும் அரசுப் பணிகளில் பல பதவிகளிலிருந்தவர். ஏராளமான கவிதைகளை எழுதியவர். செளஸர் தமது புகழ் பெற்ற காண்டர்பரி கதைகள் படைப்பை 1387 வாக்கில் எழுதத் தொடங்கியவர். காண்டர்பரி கதைகள் தொகுப்பில் மொத்தம் 24 (இருபத்து நான்கு) கதைகள்  இருக்கின்றன. இவை யாவும் கரடு முரடான ஆங்கில  எழுத்தாயில்லாது  இடைபட்ட ஒரு மொழியில் எல்லா கதைகளையும் கவிதை ரூபத்தில் எழுதியிருக்கிறார் கதையின் முடிவில் தகுந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன. செளஸரின் காலத்தில், பொதுமக்கள் காண்டர்பரி புனித தேவாலயத்துக்கு லண்டனிலிருந்து புனித பயணம் மேற்கொள்ளுவது சாதாரண காட்சி. அது சமயம் இந்த யாத்திரையை மேற்கொண்ட யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தவர், யாத்திரிகர்களை கதை சொல்லவைத்து போட்டி வைப்பது வழக்கம். அவர்களும் நிறைய கதைகளைப் போட்டியில் சொல்லுவார்கள். இந்த நிகழ்வைத் தம் கதைத் தொகுப்புக்கான களமாய் அமைத்து, இங்கிலாந்தின் மத்திய காலத்து சூழலில் கதைகளை எழுதியுள்ளார். சில கதைகள் பொக்காஷியோவின் டெக்கமரான் கதைகளை ஒத்திருக்கின்றன. The CANTERBURY TALES  தொகுப்பின் முதல் பதிப்பு WILLIAM CAXTON ன் அறிமுக உரையோடு 1470ல் அச்சு வடிவில் வெளிவந்தது. காண்டர்பரி கதைகளில் தமக்கு உகந்ததாயும் ரசிகர்களைக் கவரக்கூடியதுமாய் தேர்ந்தெடுத்து  THECANTERBURY TALES  என்ற வண்ணப் படத்தை பிரமிக்கும்படியான காட்சியமைப்புகளோடு பஸோலினி 1971ல் இயக்கினார். பணக்கார கிழட்டு கணவர்கள், அவர்களின் பாலுறவுகள், இளம் மனைவிகளின் கள்ளக் காதலுறவுகள் பாவிகளின் நரகப் பயணம், சாத்தானின் ஆளுமை நரகக் காட்சிகள் யாவும் மற்ற இயக்குனர்கள் அதுவரை துணிந்து அணுகியிருக்காத, முயற்சி செய்திருக்காத வடிவில் பஸோலினி செய்திருக்கிறார். இவரது மற்றொரு முக்கிய- அதிமுக்கிய திரைப்படப் படைப்பு, சாலோ, அல்லது சோடோமின் 120 நாட்கள்  SALO OR THE 120 DAYS OF SODOM எனும் படம். 1975ல் தயாரிக்கப்பட்டது.

பஸோலினியின் சாலோ, வை எவ்வளவுதான் நாகரிக உணர்வோடு பார்த்தோமானாலும், ஓர் அநாகரீக கசப்புச் சுவை நாக்கில் நிற்கும். அல்லது, எவ்வளவு அநாகரிக ரசனையோடு பார்த்தாலும், நாகரிக உணர்வு முன்னதை ஒதுக்கித் தள்ளிவிட்டு தலையெடுக்கும், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிடோ முஸோலினி, மிகச் சொற்ப காலமே ஒரு குடியரசு அந்தஸ்தோடிருந்த ஸாலோ நகரில் கடைசியாகத் தோன்றி உரையாற்றினார்.

மார்க்விஸ் டிசேட்  THE MARQUIS DE SADE என்ற வக்கரித்த பிரபு, வக்கரிப்பான பாலுறவு வகைக்கு தம் பெயரையே சூட்டி, சாலோ அல்லது சோடோமின் 120 நாட்கள், என்ற நூலை எழுதினார்.  பஸோலினி அந்நூலின் விஷயத்தை தம் திரைப்படம் ஊடாக கண்டறிய வைக்கிறார். சேட்-ன் மூல நூலிலிருந்து வெகுவாக படம் வேறுபாட்டாலும், ்அதன் முக்கிய சாரத்தைக் கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் நடந்த ஃபாசிஸ கொடுமைமிக்க நிகழ்வுகளின்போது சாலோ நகரில் பஸோலினி சிக்கியிருந்தவர். அவரது சகோதரர் சாலோவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிகாரத்தை உச்சத்திலேற்றி, அதிகாரத்தை கடவுளாகக் கொள்ளும் ஃபாசிச தத்துவத்தை சிதைக்கும் முடிவோடு பாலுணர்வு வக்கரத்தை பாசிஸ குறியீடாக்கி காட்டுகிறார் பஸோலினி.

நான்கு பாசிஸ அதிகாரிகள், இளம் வாலிபர்களும் இளம் பெண்களும் கைதிகளாகப் பிடிக்கப் பட்ட நிலையில் அவர்கள் மீது தங்கள் முழு அதிகாரத்தையும் பிரயோகித்து அவர்களை வெவ்வேறுவிதமான இயற்கைக்கு மாறான பாலுறவு நடவடிக்கைகளில் உட்படுத்தி சித்திரவதை செய்து மகிழ்கிறார்கள். திரும்பவும் சொன்னார் பஸோலினி,  சாலோ- படம், 1944-ன் முஸோலினியின் பாசிஸ குடியரசை கண்டித்து எதிர்க்கும் விதமாய் செய்யப்பட்ட ஒன்று என்று அந்த நான்கு பாசிஸ பணக்கார உயர்குடியைச் சேர்ந்த கனவான்கள் பிரம்மாண்டமான மாளிகையில் வைத்து இந்த அநியாய அக்கிரம கூத்தை நடந்தேறுகிறார்கள். ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த நிர்வாண கோல திருமணத்தை அந்த நால்வரில் ஒருவரான பாதிரியார் அதை நடத்தி வைக்கிறார். ஒரு நிர்வாணமான பெண்ணை மலம் உண்ண வைக்கிறார்கள். இக்காட்சி பார்க்கக் கூச வைக்கும் ஒன்று. அதே சமயம் பசோலினி அதற்கு கூறும் விளக்கம், நுகர்வோர் முதலாளித்துவத்துக்கு எதிரான எதிர்வினை நுகர்வோர் முதலாளித்துவத்தின் பல உணவுப் பொருள் தயாரிப்புகள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் அதே சமயம் அப்பாவி மக்களை ஈர்க்கவல்ல JUNK FOOD கலாச்சாரத்துக்கு எதிர்வினையான காட்சி சித்தரிப்பு என்று கூறுகிறார்.

இறுதியில் படத்தில் ஆண், பெண்கள் கழுத்து நெரிக்கப்பட்டு, நாக்குகள் துண்டிக்கப்பட்டு, தலைமுடி நீக்கப்பட்டு அவர்களின் முலைக் காம்புகள் தீயில் எரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் ஒன்று சேர்ந்ததொரு இசை நாடக ரீதியிலிருக்குமாறு செய்திருக்கும் பஸோலினி, அதற்கென உயர்ந்த ஒரு விதத்தில் வக்கரிப்பான இசை மேதை. காரல் ஆர்ஃப்ஸ் CARL ORFF சின் இசைக் கோர்வையான கார்மினா புரானா) CARMINA BURANA என்பதை பின்னணி இசையாக உபயோகித்திருக்கிறார். இவ்விசையை பஸோலினி அப்பட்டமான பாசிஸ இசையென்றே உறுதியோடு தீர்மானித்தவர். மற்றொரு விசயம், அமெரிக்க கவிஞரான எஸ்ரா பெளண்ட் முஸ்ஸோலினியை ஆதரித்தவர் என்பதால், இன்றைய அரசியலுக்கும் அதன் ஃபாசிஸ வாத கொள்கைகளுக்கும் பின்னணியிலும் முன்னணியிலுமாய் உலகப் பெரும்பணக்காரர்களும் கலைஞர்களுமிருப்பதை கொள்ளலாம். உடலையும், அது சார்ந்த பாலுணர்வையும் வெறுக்குமளவுக்கு பஸோலினியின் சாலோ சித்தரிப்புகளைக் கொண்டது. பாலுணர்வை ஈர்ப்பதற்கு பதிலாக வெறுத்தொதுக்கும் விதமாயுள்ளது.

மிகவும் சக்திவாய்ந்ததும், மனதைப் போட்டு வதைக்கும்படியுமான இத்திரைப்படம் சாலோ முடிக்கப்பட்டு திரையிடலுக்கு வெளிவரும் முன் பொதுவிடம் ஒன்றில் பஸோலினி பரிதாபமாக கொலை செய்யப்பட்டார். 1975ல் நடந்தேறிய இக் கொலை இன்றளவும் அதற்கான முக்கிய காரணத்தை அவரவர் தீர்மானத்துக்கே விட்டுவிட்டது. இவரது கடைசி படமான சாலோ பல நாடுகளில் திரையிட தடை செய்யப்பட்டது. சமீபகாலமாய்த்தான் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இப்படம் பல்வேறு வழிகளில் பார்க்க கிடைக்கிறது.