சிறுகதைச் சுருக்கம் 81: ஏக்நாத்தின் ஆட்டம் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
கதையை ஆரம்பித்தது போல முடித்தும் காட்டிவிடவேண்டும் என்று யார் சொன்னார்கள், கதைக்கு உள்ளே வருகிறவருக்கு வெளியே போகவும் தானே தெரியும். அப்படியே வெளியே போகாவிட்டால்தான் என்ன?
ஆட்டம்
ஏக்நாத்
கையிலிருந்த ஒரு கூழாங்கல்லை மேலே தூக்கிப் போட்டு அது கீழே விழுவதற்குள் தரையிலிருந்து ஆறு கற்களையும் வலக்கையால் அள்ளி மேலிருந்து வந்தக் கல்லையும் லாவகமாய் பிடித்தாள் ஆவுடை. எதிரில் மேலே சென்று வரும் கல்லையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் உடையம்மை. பொதுவாக இதுபோன்ற கழச்சிக்கல் விளையாட்டுகளில் ஐந்து அல்லது ஆறு பேர் ஆடுவதுதான் வழக்கம். ஆனால் இன்று வெறிச்சோடிக் கிடக்கிற தெருவில் வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்து இவர்கள் இருவர் மட்டுமே ஆடிக்கொண்டிருந்ததற்கு காரணமிருக்கிறது. ஏனென்றால் உடையம்மை சிறிது காலமாக தெருக் குமரிகளிடமிருந்து தனிமைப்பட்டிருந்தாள். அவளுடன் பேசக்கூடாதென அவள் வயசையொத்த குமரிகளின் அம்மாக்கள் ஒட்டுமொத்தமாய் தீர்மானித்திருந்தனர். இந்த முடிவையும் மீறி வாய்க்காலுக்குத் தண்ணிக்குப் போகும்போது சிலர் அவளிடம் பேசுவதுண்டு. ஆவுடை, உடையம்மைக்குச் சித்தி மகள் என்பதால் இப்போது அவள் மட்டுமே அவளுக்குத் தோழி.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்தான் அந்தச் சம்பவம் நடந்து முடிந்திருந்தது. மாத்ராங்குளத்துப் பொத்தைக்கருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான் மணி. பத்து செம்மறியும் ஏழு வெள்ளாடும் அவனுடையது. அவனுடையது என்றால் அவன் அப்பா இதவச்சுதான் நீ பொழச்சிக்கிடணும் என்று உறுதியளித்துவிட்டு அவற்றைத் தானம் செய்திருந்தார். பதினோறு மணி வாக்கில் சாப்பிட்ட சோறு போக மூன்று மணியவில் சாப்பிட தண்ணியும் கஞ்சியும் தூக்குச் சட்டியில் இருந்தன. அவற்றைச் சுற்றி எறும்புகள் ஆய்ந்துக் கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை.
பாவாடை சட்டைத் தாவணியில் ஓர் இளம் பெண் தூக்குச் சட்டியோடு வந்து கொண்டிருந்தாள். வெயில் பட்டு அவள் மூக்குத்தியிலிருந்து வந்த ஒளி மின்னிச் சென்றது. அவள் அருகில் வரவர அவனுக்குள் இனம்புரியாத மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான். அக்கம் பக்கம் யாருமில்லை. மிக அருகில் வந்ததும்தான் அவள் மேட்டுத்தெரு பொன்னுசாமி மகள் என்பது தெரிந்தது. மரத்தின் அடியிலிருந்து எழுந்த அவன் ஒருவித கிரக்கத்துடன் டக்கென்று அவளின் கையைப்பிடித்து இழுத்தான், இதை அவள் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டுப் போனாள்,
“ச்சீ, கைய எடு.”
“ஏட்டி, சத்தம் போட்ட கழுத்த நெறிச்சி போடுவேன் பேசாம வா இங்ஙன.”
“என்னது வரணுமா?” என்றவள் “ஏ அப்பா, ஏப்பா” என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்.
கம்யூனிஸ்ட் சங்கத்தில் ஊரே கூடி நின்றது. உடையம்மையின் அப்பா கம்யூனிஸ்ட் என்பதால் பிரச்னையை இங்கு கொண்டு வந்திருந்தார்.
தூணில் சாய்ந்திருந்த தலைவர் கேட்டார் “எங்க கல்றகுறிச்சா மவன?” தலைவர் அவனுக்குச் சொந்தம் என்றாலும் விவகாரம் என்று வந்துவிட்டால் அவர் நியாயத்தின் பக்கம். ஒரு வயக்காட்டுப் பிரச்னையில் தன் சொந்தத் தம்பிக்கே தண்டனை தந்து நியாயஸ்தன் என்பதை நிரூபித்தவர் அவர்.
“ஏல, அந்தப் புள்ள சொல்லுதெல்லாம் நெசமாவா?”
அவன் பேசவில்லை. தரையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
“ஏல கேக்கம்லா, வாயில் ஈரமண்ணயா வச்சிருக்க.”
“நா ஒண்ணுஞ் செய்யல, அப்பனுக்குச் சோறா கொண்டு போறேன்னுதான் கேட்டேன். அதுக்குள்ள..” என்றான் குனிந்த தலை நிமிராமல்.
“த்து நாயே, யாருமத்த எடத்துல நீ என்னத்தக் கேட்டுருப்பன்னு தெரியும். முன்னால ஒரு தடவ எலஞ்சியா வீட்டுச் சொவர ஏறிக் குதிச்ச பயதான நீ? பொய்யா பேசுத, சாத்துனம்னா கடுவாப் பல்லு ஒடஞ்சிடும் படுவா பேசுதாம் பாரு.”
பிறகு அந்தப் பெண் ஏதோ சொல்ல, அவளின் தந்தை ஆரம்பித்தார்.
“சரி அதுதான் ஒம் மவா வெவரமா சொல்லிட்டாள. நீயும் என்னத்த சொல்லுத” என்றார் துணைத்தலைவர்.
“அவன்தான் ஒண்ணுமே பண்ணலையே, ஆள் வந்ததும்தான் வுட்டுட்டுப் போயிட்டான” என்றார் ஒருவர்.
வார்த்தைகள் தடித்தன.
“இனிமே இந்த மாதிரி பொண்ணு புள்ளய கைய புடிச்சு இழுக்க நெலமய மாத்தணும்னா கடுமையான தண்டனைதான் வழி. அப்பதான் சரிபட்டு வருவானுவோ, கொழுப்பெடுத்துதவனுவோ”.
வந்திருந்தவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்து கைகலப்புக்குப் போய் சப்பென்று ஓய்ந்தது.
அம்மனுக்கு இரண்டு லிட்டர் எண்ணெயும் உடையம்மையின் காலில் எல்லோர் முன்பும் விழுந்த அவன் மன்னிப்புக் கேட்டதையும் ஊரில் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். உடையம்மையைப் பொறுத்தவரை விஷயம் வேறாகியிருந்தது. அவள் ஏதோ தப்பு செய்துவிட்டாள் என்பது போலவும், அவள் உறவினர்களே அவளை வித்தியாசமாகப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். அந்தச் சம்பவத்துக்குக் கண் காது மூக்கு வைத்து அதை ஒரு பெரிய பிரச்னையாக்கி இருந்தார்கள் தெருக்காரிகள். இதனால் உடையம்மை வயசையொத்த குமரிகளை அவளிடம் பேசக்கூடாதன தெரு பெண்கள் ஒரு மனதாக முடிவெடுத்திருந்தார்கள்.
உடையம்மையின் மாமன் மகன் பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தான். அவளைத்தான் கல்யாணம் முடிப்பேன் என்று காத்திருப்பவன். தெருவில் யாரோ நடந்த விஷயத்தைக் கிசுகிசுவாக்கி அவனுக்கு எழுதிப் போட்டிருந்தார்கள். இதனால்தான் அவசரமாக ஓடி வந்தான். எல்லோருமே ஒரு விதமாகச் சொல்வதைக் கேட்டு மனதுக்குள் கிரீடம் சூட்டி மகிழ்கின்ற தனது காதலி வருங்கால மனைவி மீது வெறுப்படைந்தான், இது நெசமாக இருக்குமா? அவள் எப்படி என்னை ஏமாற்றுவாள். மனம் இரட்டை வேடம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறது.
வாசலில் காத்திருந்தாள் உடையம்மை அவன் வருவானென்று. இதற்காக பீடி சுற்ற சித்தி வீட்டுக்குச் செல்வதைக்கூடி நிறுத்தியிருந்தாள். இரட்டைச் சடைப்பின்னி பவுடர் பூசி புதுசு மாதிரியான பாவாடை சட்டையை அணிந்து கொண்டு எதிர்பார்த்திருந்தாள். அவன் வரவில்லை. யாரை மலைபோல் நம்பியிருந்தானோ அவனே இவளிடம் கேட்காமல் ஊர்ப்பேச்சைக் கேட்டுச் செல்கிறானே என்று மனதுள் புழுக்கம்.
சின்ன வாய்க்கால் கல்பாலத்தில் ஒரு காலை மேலும் ஒரு காலைத் தரையிலுமாக வைத்துக் கொண்ட அமர்ந்திருந்தான் மணி. சின்னதாய் சலசலத்து ஓடும் தண்ணீரையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் எதோ ஓர் உருவம் நிற்பதுபோல் உணர நிமிர்ந்து பார்த்தான். ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
தான் உடையம்மையின் மாமன் மகன் என்றும் அவளைத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகச் சொன்னான்.
“இல்ல ஊருல ஒரு மாதிரியா பேசுதாவோ அதான் என்னன்னு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றான்.
இப்படி நேரிடையாகவே குற்றவாளியிடம் வந்து என்ன பண்ணுன என்று கேட்பது அவனைப் பொறுத்தவரை வேடிக்கையாகவே இருந்தது. ஏதோ தெரியாத்தனமாக நிமிட நேர தடுமாற்றத்தில் செய்த பிழை இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தியிருப்பது குறித்து வருந்தினான்.
தனத வலக்கையைத் தூக்கி அவன் தலையில் வைத்து “என் அம்மா மேல ஆணையா சொல்லுதேன் எந்தத் தப்பும் நடக்ககல. நாந்தான் அவசரப்பட்டு … “என்று ஆரம்பித்து விளக்கினான்.
இருவரும் அங்கிருந்து பீடி குடித்தனர். “நான் ஒங்களப் பார்தது யார்ட்டயும் சொல்லாண்டாம்” என்ற வேண்டுகோளோடு விடை பெற்றான் மாமன் மகன்.
திடீரென்று அவள் முன் வந்து நின்றான் மாமன் மகன். உடையம்மை அவனை எதிர்பார்க்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே வந்த அவன் தன் வீட்டுக்கு வராததால் அடைந்திருந்த கோபமும் எரிச்சலும் மாறியிருந்தது.
“உள்ளே வாங்க.”
வீட்டுக் கதவுக்கு அடைப்பாள் இருந்த ஸ்டூலை எடுத்து கொடியில் கிடந்த தாவணியால் துடைத்து உட்காரச் சொன்னாள். அவனின் வருகையை முன்னிட்டு காபி போடும் ஆயத்தத்தில் இறங்கினாள்.
காப்பிச் சட்டியில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும் தீ அணைந்தது. இரண்டு எருக்களை அடுப்புக்குள் திணித்து குழலை எடுத்து ஊதினாள். புகை வீடு முழுவதும் நிறைந்தது.
இருமிக் கொண்டே “ஒங்கப்பாவ எங்க?” என்றான்.
“பொட்டலுபுதூருக்க வேல. போயிருக்காவோ” என்றவள் மீண்டும் ஊதத் தொடங்கினாள்.
“ரெண்டு நாளக்கி முன்னாலயே வந்திருந்தீங்க..”
“ஆமா உடையம்ம, சும்மா ஒரு வெஷயமாக வர வேண்டியிருந்துச்சு”விஷயத்துக்கு வந்தான்.
“ஏம் உடையம்ம, ஊருக்குள்ள ஏதோ வெவகாரம்னு பேசிக்கிட்டாவுள” ஒன்றுமே தெரியாதது போல கேட்டான்.
“ஆமா..”
“தெருவுல ஒன்னய எல்லோரும் ஒரு மாதிரியா பேசுதாவோ, ஆனா நான் நம்புவனா?”
அவள் மௌனமாகவே நின்றாள். காப்பி கொதித்து மூடியிருந்த தட்டை நிமிர்த்தி நுரைகளாய் வெளியே சிந்திய ஸ்ஸ் சத்தம் கேட்டு அடுப்பு பக்கம் ஓடினாள். அதை இறக்கி டம்ளரில் ஊற்றி ஆற்றினாள்.
“என்ன வெவகாரம் உடையம்ம?”
“இப்ப எதுக்கு திரும்பவும் அது..”
“ஒனக்கு விருப்பமில்லனா வேண்டாம் உடையம்ம, ஓம் மனச வாடினா என்னால தாங்க முடியாது. தெருக்கார பயலுவோ ஆயிரஞ் சொல்லட்டும் நான் ஒன்ன உயிருக்குயிராக நெனக்கேன். நீ எனக்குனேப் பெறந்தவ” என்றவன் ஸ்டூலிலிருந்து எழுந்து அவளின் கைகளைப் பிடித்தான்.
டக்கென்று கையை உதறிவிட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள் உடையம்மை
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.