கலாச்சார தொழிற்சாலை (Culture Factory) தொடர் – 5 - ஆர்.பத்ரி | R.Badri | கேள்விக்குள்ளாக்குதலும் மாற்றுச் சிந்தனையும் - https://bookday.in/

கலாச்சார தொழிற்சாலை தொடர் – 5

கேள்விக்குள்ளாக்குதலும் மாற்றுச் சிந்தனையும் கலாச்சார தொழிற்சாலை தொடர் – 5 மக்கள் கலைஞன் சார்லி சாப்ளின் நடிப்பில் 1921 இல் வெளியான ’தி கிட்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கண்ணாடி ரிப்பேர் செய்யும் வயதான ஒருவரின் பராமரிப்பில் ஒரு அனாதைச் சிறுவன்…
நூல் அறிமுகம்: விடுதலை இராசேந்திரனின் ’ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ – பொ. நாகராஜன்

நூல் அறிமுகம்: விடுதலை இராசேந்திரனின் ’ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ – பொ. நாகராஜன்




● பெரியாரிய சிந்தனையாளர், தோழர். விடுதலை இராசேந்திரன் ‘ அறிந்திடுவீர் ஆர்எஸ்எஸ்ஸின் கதையை ‘ என்ற தலைப்பில் ‘ கங்கை கொண்டான் ‘ என்ற புனைப்பெயரில், விடுதலை நாளேட்டில், 1980ல் தொடராக எழுதி வந்தார். தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், 1982ல் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளியானது தான் இந்த படைப்பு !

● அன்றும் இன்றும் இந்தியாவை உள்ளிருந்தே அழிக்கும் நச்சுக் கிருமியாகவும், மதத்தின் அடிப்படையில் நாட்டை துண்டாட துடிக்கும் பாசிச அமைப்பாகவும், இந்துத்துவா என்ற பிரிவினை வாதத்தை விதைத்து வரும் அரசியல் கருத்தாகவும் விளங்குகின்ற ஒரே அமைப்பு – ஆர்எஸ்எஸ் ! அதைப் பற்றிய விரிவாக எழுதப்பட்டதே இந்த நூல் !

● விடுதலை இராசேந்திரனின் அயராத உழைப்பில் ஆர்எஸ்எஸ் பற்றிய எல்லா விவரங்களையும் உள்ளடக்கியதாக நூல் அமைந்துள்ளது. மக்களுக்கு கெடுதல் தரும் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கம் பற்றி, ஒரு சிலரே இந்த அளவு மெனக் கெடலுடன் தரவுகளை சேகரித்திருப்பார்கள் !

● நூலில் காணக் கிடைக்கும் தகவல்கள் :
ஆர்எஸ்எஸ் தோற்றம் | ஹெட்கேவர் தலைமை | கோல்வால்கர் பங்களிப்பு | கோல்வால்கரின் ஞான கங்கை நூல் | காந்தி கொலையின் பின்னணி | சாவர்க்கர், கோட்சே பற்றிய திடுக்கிடும் தகவல்கள் | ஆர்எஸ்எஸ் அரங்கேற்றிய கலவரங்கள் |

● முக்கிய தலைவர்களை கொலை செய்ய நடந்த முயற்சிகள் | மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களின் சித்து விளையாட்டுகள் – இவ்வாறு ஒரு துப்பறியும் நாவலைப் படிக்கும் போது ஏற்படும் அதிர்வையும் மர்மத்தையும் மாறி மாறி நம்மால் இந்த நூலில் உணர முடிகின்றது !

● ஆர்எஸ்எஸ் – ராஷ்டிரிய சுயம்சேவக் சங் என்ற அமைப்பு 1925ம் ஆண்டு, விஜயதசமி அன்று (25.09.1925) துவக்கப்பட்டது . அதை தோற்றுவித்த ஐந்து பேரும் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள் !

● அவர்களில் முன்னோடி – கேசவ் பலிராம் ஹெட்கேவர் (1889 – 1940). அவரே சங்கின் முதல் தலைவர். தனது தலைமையின் போது, யாரையும் கேள்வி கேட்க விடாமல், ‘ தலைவர் சொல்லே மந்திரம் ‘ என்ற கட்டுப்பாட்டோடு இயக்கத்தை வளர்த்தார் !

● ஹெட்கேவருக்கு அடுத்து தலைவர் ஆனவரும் சித்பவன் பார்ப்பனர் தான் ! மாதவராவ் கோல்வால்கர் (1906 – 1973)
ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை உருவாக்கியவர். இவர் எழுதிய நூலான ஞான கங்கை ( Bunch of thoughts ) சங்கிகளுக்கான வேதப் புத்தகம் ! ‘ அரசியலை இந்துமயமாக்கு ! இந்துக்களை ராணுவ மயமாக்கு ! என்ற கொள்கையைப் பரப்பியவர் !

● ஆர்எஸ்எஸ்ஸின் மூன்றாவது தலைவராக ஆனவரும் அதே சித்பவன் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர். பாலாசாகேப் தேவ்ரஸ் ( 1915 – 1996 ) தீவிர இந்துத்துவா வெறியர். இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு யாரும் மாறிவிடக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார் . இந்தியாவில் வேறு மதத்தினருக்கு இடமில்லை என்பதை வெளிப்படையாக பேசியவர் !

● இவ்வாறு முதலாவதாக ஹெட்கேவர், இரண்டாவதாக கோல்வால்கர், மூன்றாவதாக தேவரஸ் போன்ற மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களால் வழி நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் – இந்தியாவில் இந்து ராஷ்ட்ரா நிர்மாணம் என்ற பெயரில், மனு சாஸ்திர, வேத சாஸ்திர அடிப்படையில், பார்ப்பனர்களின் ஆட்சியை நிறுவுவதற்கே இன்று வரை தொடர்ந்து செயல் பட்டு வருகின்றது !

● தங்களது கொள்கையை ‘ இந்துத்துவா ‘ என அழைக்கின்றார்கள். அதை அடைவதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் மதக் கலவரங்களை ஈவிரக்கமின்றி நடத்தியுள்ளார்கள் .நூலில் பட்டியலிடப்பட்ட கலவரங்கள் :

● 1927ல் நாக்பூர் | 1970ல் ராஞ்சி | 1971ல் தெள்ளிச்சேரி – கேரளா | 1971ல் ஜாம்ஷெட்பூர் | 1973ல் அகமதாபாத் | 1975ல் அலிகார் | 1980ல் மொராதாபாத் | 1981ல் பீகார் ஷெரிப் |
( இந்த நூலில் பட்டியலிடப் பட்டவைகள் 1982ம் ஆண்டு வரைக்கும் மட்டுமே )

● ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம் என இந்திய மக்கள் அனைவரும் உணர்ந்த நாள் – காந்தி கொலை செய்யப்பட்ட நாள் ! 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று மகாத்மா காந்தியை, ஆர்எஸ்எஸ் சீடன், இந்து மகாசபையைச் சேர்ந்த, மராட்டிய சித்பவன் பார்ப்பனன் நாதுராம் கோட்சே, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் !

● இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் 04.02.1948 முதல் 12.07.1949 வரை தடை செய்யப்பட்டது ! சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் அரசியல் கொலையை கோட்சே செய்தான் !

● காந்தியின் கொலை வழக்கை விசாரிக்க நீதிபதி ஆத்மாசரண் நியமிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரணை 22.06.1948 முதல் 21.06.1949 வரை நடைபெற்று தீர்ப்பும் வழங்கப்பட்டது. நாதுராம் கோட்சே 15.11.1949 அன்று தூக்கிலிடப்பட்டான் !

● காந்தியின் கொலையில் அரை டஜன் சித்பவன் பார்ப்பனர்கள் சம்பந்தப் பட்டிருந்தார்கள். அதன் காரணமாக மராட்டியத்தில் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறை நடந்தது! ஆர்எஸ்எஸ்ஸின் கோல்வால்கரை தூக்கில் போடு என முழக்கமும் கேட்டதாம் !

● அதே காலகட்டத்தில், தமிழகத்தில் தந்தை பெரியார், இங்கிருந்த பார்ப்பனர்களுக்கு எதிராக எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக் கொண்டார். காந்தியின் கொலையை கண்டனம் செய்தவர் பார்ப்பனர்களுக்கு எதிராக எதுவும் கருத்துக் கூறவில்லை !

● ” நாதுராம் கோட்சே பார்ப்பனராக இருப்பதற்காக அவனையோ அவனது சமூகத்தையோ தாக்குவதை விட , காந்தியின் கொலைக்கான உண்மையான காரணங்களை அறிந்து அதை எவ்வாறு சரி செய்வது என சிந்திக்க வேண்டும் ! ” …என்று தந்தை பெரியார் அகில இந்திய வானொலியில் பேசும் போது கருத்து தெரிவித்தார் !

● ஆர்எஸ்எஸ் காந்தியை கொன்றது மட்டுமல்ல பல்வேறு தலைவர்களை தீர்த்து கட்ட தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது ! மாற்று கருத்துக்களை எதிர் கொள்ள திராணியற்ற இயக்கம் என்பதற்கு அவர்கள் நடத்திய சில தாக்குதல் பட்டியல் :

● டெல்லியில் காமராசரை 07.11.1976 அன்று அவரது வீட்டில் தீவைத்து கொல்ல முயற்சி | அம்பேத்கரை விஷம் வைத்துக் கொல்ல சாவர்க்கரின் தம்பி பாபா சாவர்க்கர் முயற்சி | பீகார் முதல்வர் கர்பூரி தாக்கூரை 22.10.1979 அன்று கொலை வெறித் தாக்குதல் |

● உ.பி. முதல்வர் ராம் நரேஷ் யாதவை வீடு புகுந்து கத்தியால் குத்தியது | ஜனதா தள் தலைவர் ராஜ்நாராயணின் மண்டையை ராஜஸ்தான் கோட்டாவில் உடைத்தது | மைசூரில் ஜார்ஜ் பெர்னான்டசை குண்டர்கள் தாக்கியது |

● இவ்வாறு இந்திய மக்களை மதத்தால் பிரித்து, வன்முறையால் பயமுறுத்தி, அதிகாரத்தால் அடக்கி ஆள தொடர்ந்து முயற்சி செய்யும் பாசிச இயக்கமே – ஆர்எஸ்எஸ் !

● நூலைப் படிக்கும் முன்பு – ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம் என அறிந்தவன் !
நூலைப் படித்த பின்னர் –
ஆர்எஸ்எஸ் ஒரு பேரபாயம் என
உணர்ந்து கொண்டேன் !

பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,
சென்னை – 09.03.2023.

நூல் : ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்
ஆசிரியர் : விடுதலை இராசேந்திரன்
விலை : ரூ.₹300/-
பக்கங்கள்: 301
முதல் பதிப்பு 1982
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

மீள்சரித்திரம்…. கவிதை – து.பா.பரமேஸ்வரி

மீள்சரித்திரம்…. கவிதை – து.பா.பரமேஸ்வரி




கோட்சேவைக் கூட திருத்திட லாம்…

காந்தி மறுமுறை பிறப்பாரா…

சாணிப்பால்  மொத்தை சௌக்கடி  நூறு புசித்திடலாம்..
அம்பேத்கர் இங்கு  உதிப்பாரா…

அடுக்களைக்கு விறகாகி  ஆதிக்க இரையாகலாம்
பாரதி எழுந்து வருவானா..

நூறு ஆண்டு கூடுதலாய்..
பரங்கியர்  பல்லக்குச் சுமக்கலாம்.
நேதாஜி மீண்டும் கிடைப்பாரா..

பட்டினி உண்டு ஆண்டானுக்கு  பழுதாகலாம்
மார்க்ஸ் புரட்சி வெடிக்குமா..

சிறுத்தும் கருத்தும் வாழ்கிறோம்..
புலங்கள் பலதும் பெயர்கிறோம்..
மீண்டும் புலருமா ஆகஸ்டு பதினைந்து …

து.பா.பரமேஸ்வரி
சென்னை

நூல் அறிமுகம்: ஆ.கோபண்ணாவின் ‘மாமனிதர் நேரு’ – பாவண்ணன்

நூல் அறிமுகம்: ஆ.கோபண்ணாவின் ‘மாமனிதர் நேரு’ – பாவண்ணன்



ஆவணப்பெட்டகம்
பாவண்ணன்

 மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தொழிற்சங்கத் தோழரான ஆர். பட்டபிராமன் தமிழில் எழுதி வெளிவந்த ’நேருவின் மரபு’ என்னும் புத்தகம் ஒரு போராளியாக சுதந்திரப்போராட்டத்தில் நேரு ஆற்றிய  பங்களிப்பையும் ஒரு பிரதமராக சுதந்திரமடைந்த தாய்நாட்டை உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உயர்த்துவதற்காக ஆற்றிய பங்களிப்பையும் பற்றிய தெளிவை அளித்தது. நேருவின் சாதனைகளை இளையோர் அறிந்துகொள்ள அன்று அது ஒரு கைவிளக்காக இருந்தது. அதையடுத்து 1940-1964 கால இடைவெளியில் நேருவும் இந்திராகாந்தியும் எழுதிப் பகிர்ந்துகொண்ட கடிதங்களின் தொகைநூலாக ஆங்கிலத்தில் வெளிவந்த TWO ALONE TWO TOGETHER  என்னும் நூல் நேருவுக்கு இருந்த பற்பல துறைகள் சார்ந்த அக்கறைகளையும் ஈடுபாடுகளையும்  கனவுகளையும் வெளிப்படுத்தியது. கசப்பும் வெறுப்பும் மண்டிய இன்றைய சூழலில் கசப்புகளுக்கு அப்பால் கடந்து சென்று மானுடத்தை உயர்த்திப் பிடித்து, அதற்காகவே வாழ்க்கை முவழுதும் உழைத்து மறைந்த அன்றைய மகத்தான ஆளுமைகளை நினைத்துக்கொள்வதும் அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதும் படிப்பதும் மிகவும் அவசியமாகின்றன.

மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பைக் கொண்டவர் காந்தியடிகள். அதை ஒருபோதும் அவர் மறைத்துக்கொண்டதில்லை. அவர் தன் ஆர்வங்களை வெளிப்படையாகவே வைத்துக்கொண்டார். ஆனால் பொதுவாழ்வில் மதச்சார்பின்மையே இந்தியா நடக்கவேண்டிய வழி என்று தெரிவித்தார். மதத்தின் மீது எள்ளளவும் ஈடுபாடோ ஆர்வமோ இல்லாதவராகவே வாழ்ந்தவர் நேரு. அவரும் பொதுவாழ்வில் மதச்சார்பின்மையே இந்தியாவின் வழி என்பதில் உறுதியாக இருந்தார். எத்தனையோ அழுத்தங்களுக்கு அவர் இலக்கானபோதும், அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். நடுங்கியிருந்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி அனைவரையும் சமமென உணரவைத்தார். மதச்சார்பின்மை என்னும் பாதையின் மதிப்பை இருவருமே உணர்ந்திருந்தனர்.

இன்று சூழல் பெரிதும் மாறிவருகிறது. மதம் சார்ந்த விவாதம் மீண்டும் மேலெழுந்து வருகிறது. ஒரு சமூகத்தில் மதத்தின் இடம் என்ன, மதச்சார்பின்மையின் இடம் என்ன என்று இன்றைய தலைமுறையிடம் உரையாடி வழிநடத்திச் செல்ல தகுதியான ஆளுமைகள் இல்லை. குழப்பம் மட்டுமே எஞ்சியிருக்கும் இன்றைய சூழலில் நேரு போன்ற மகத்தான மனிதர்களின் பங்களிப்பைப்பற்றிய அறிதல் முக்கியமானதொரு சமூகத்தேவையாக இருக்கிறது. ஆ.கோபண்ணா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த நூலின் தமிழ் வடிவமான மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு என்னும் புத்தகத்தை காலம் வழங்கியிருக்கிற கையேடு என்றே சொல்லவேண்டும். ஏற்கனவே காமராஜர் பற்றி விரிவான நூலை எழுதி அறிமுகப்படுத்தியிருக்கும் கோபண்ணா, அதற்கு இணையான விரிவோடும் ஆழத்தோடும் தகவல் செறிவோடும் நேரு பற்றிய நூலை எழுதியிருக்கிறார்.

செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் நேரு. பிரம்மஞான சபையைச் சேர்ந்த ப்ரூக்ஸ் என்பவர் அவருடைய வீட்டுக்கே வந்து கல்வியைக் கற்பித்தார். பதினாறு வயது வரை அவருடைய கல்வி வீட்டிலேயே தொடர்ந்தது. பிறகு முறையான கல்வியைப் பெறும்பொருட்டு இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பள்ளிக்கல்வியையும் கல்லூரிக்கல்வியையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலேயே அவர் கற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து 1912இல் இந்தியாவுக்குத் திரும்பிய நேரு தன் தந்தையின் வழியில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். ஆனால் காலமோ தேசசேவை  என்னும் திசையில் அவரைச் செலுத்தியது.

ஆயுதமேந்தி எதிர்ப்பதைவிட புறக்கணிக்கும் எதிர்ப்புக்கு வலிமை அதிகம் என்பதை அக்காலத்தில் அயர்லாந்தில் செயல்பட்ட சின்ஃபெயின் இயக்கம் வழியாக தெரிந்துவைத்திருந்த நேருவுக்கு இளம்பருவத்திலேயே சமூகப்போராட்டத்தின் வடிவத்தைப்பற்றிய ஒரு தெளிவு இருந்தது. 1916இல் லக்னோ மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த காந்தியடிகளை நேரில் சந்தித்து உரையாடினார். 1917இல் சம்ப்ராணில் அவுரி விவசாயிகளுக்காக காந்தியடிகள் மேற்கொண்ட போராட்ட வழிமுறையும் அதில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியும் நேருவை ஈர்த்தன. 1919இல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் சத்தியாகிரகத்தை அறிவித்ததும் நேரு அதற்கு உடனடியாக ஆதரவைத் தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு நேருவுக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை கிடைத்தது. அதே சமயத்தில் அவருடைய தந்தையாருக்கும் சிறைத்தண்டனை கிடைத்தது. தந்தையும் மகனும் ஒரே சமயத்தில் சிறையில் தண்டனைக்காலத்தைக் கழித்தனர்.

பகத்சிங் பற்றி கோபண்ணா எழுதியிருக்கும் குறிப்புகள் பலரும் அறியாத சில உண்மைகளை முன்வைத்துள்ளன. சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தை நடத்திய லாலா லஜபதிராய் என்னும் மூத்த தலைவரை 30.08.1928 அன்று ஜே.ஏ.ஸ்காட் என்பவர் தலைமையிலான போலீஸ் படை கடுமையாகத் தாக்கியது. இத்தாக்குதலுக்கு இலக்கான லஜபதிராய் 17.11.1928 அன்று மறைந்தார். அவருடைய மரணத்துக்குப் பழிவாங்குவதற்காக, அப்போது இளைஞர்களாக இருந்த பகத்சிங்கும் அவருடைய நண்பர் இராஜகுருவும் திட்டமிட்டனர். துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த நாளும் குறித்துவிட்டனர். ஆனால் ஸ்காட் என நினைத்து தவறுதலாக சான்டர்ஸ் என்பவரைச் சுட்டு விட்டனர். தம் தவறு உறைத்ததுமே அந்த இடத்திலிருந்து தலைமறைவாகிவிட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு, 08.04.1929 அன்று எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்து மைய சட்ட மேலரங்கில் குண்டுவீசினர். யாரையும் கொலை செய்வது அவர்களுடைய நோக்கமாக இருக்கவில்லை. மாறாக பொதுமக்களுக்கு எதிராக, அவசரமாக பாதுகாப்பு மசோதாவையும் வர்த்தகத்தகராறுகள் மசோதாவையும் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான் அந்தத் தாக்குதலின் நோக்கமாக இருந்தது. காவல்துறையினர் அவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மூவரையும் சிறைக்குச் சென்று சந்தித்தார் நேரு. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இர்வினைச் சந்தித்து முறையீடு செய்தார் காந்தியடிகள்.  அதேபோன்ற கோரிக்கைகள் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் இர்வினை வந்தடைந்தன. இர்வினால் தனிப்பட்ட விதத்தில் எந்த முடிவையும் எடுக்கமுடியவில்லை. இன்னொரு பக்கத்தில் அரசு அதிகாரிகளின் அழுத்தமும் அவருக்கு இருந்தது. குறிப்பிட்ட தேதிக்கு ஆறு நாட்கள் முன்பாகவே மூவரும் தூக்கிலிடப்பட்டுவிட்டனர். அவர்கள் மறைவுக்குப் பின்னர் 29.08.1931 அன்று நடைபெற்ற மாநாட்டில் பகத்சிங்கின் தந்தை கிஷன்சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். ”கவலைப்படவேண்டாம் என்று பக்த்சிங் என்னிடம் கூறியிருக்கிறான். என்னைத் தூக்கிலிடட்டும். நீங்கள் உங்கள் படைத்தலைவரை நிச்சயம் ஆதரித்தாக வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் ஆதரித்தாக வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார். ”நான் தீவிரவாதியல்ல. நீண்டகால திட்டங்களுக்கு உறுதியான கோட்பாடுகளை வைத்திருக்கும் நான் ஒரு புரட்சியாளன்” என்று பகத்சிங் எழுதிய கடைசிக்கடிதத்தில் காணும் குறிப்பு மிகமுக்கியமானது. பக்த்சிங் தொடர்பாக பலருடைய மனத்தில் தெளிவில்லாத வகையில் நிறைந்திருக்கும் குழப்பங்கள் தீரும் வகையில் கோபண்ணாவின் குறிப்புகள் தெளிவைக் கொடுக்கின்றன.

29.12.1929 அன்று லாகூர் நகரில் ரவி நதிக்கரையில் காங்கிரஸ் மாநாடு கூடியது. சைமன் கமிஷன் எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது காவலர்களின் தடியடிக்கு இலக்காகி மறைந்த தலைவர் லாலா லஜபதி ராய் அவர்களின் நினைவைப்போற்றும் விதமாக அத்திடலுக்கு லாலா லஜபதிராய் நகர் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நேரு 01.01.1930 அன்று ரவி நதிக்கரையில் இந்தியாவின் தேசியக்கொடியை முதன்முதலாக ஏற்றினார். வந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்களுக்கு நடுவில் கொடி பறந்தது. கொடியை ஏற்றிவைத்த நேரு உணர்ச்சிவசப்பட்ட குரலில் “இந்தக் கொடி இந்திய சுதந்திரத்தின் அடையாளம், இந்தக் கொடி நம் ஒற்றுமையின் அடையாளம். ஒரே ஒரு இந்தியன் உயிரோடு இருக்கும் வரை, இந்தக் கொடியை ஒருவராலும் இறக்கமுடியாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். கொடியைக் காக்கும் போராட்டத்தில் என் உயிரையும் கொடுத்து சுதந்திரத்தைக் காப்பேன். நீங்கள் அணிவகுத்து நின்று மரியாதை செய்யும் இந்தக் . கொடி எந்த இனத்தவருக்கும் சொந்தமானதல்ல. இந்தக் கொடியின் கீழ் நிற்பவர்கள் அனைவரும் இந்தியர்கள். இந்துக்கள் அல்ல, முஸ்லிம்கள் அல்ல, சீக்கியர்கள் அல்ல, இந்தியர்கள் மட்டுமே. திரும்பவும் நினைவில் நிறுத்துங்கள். இப்போது ஏற்றிய இந்தக் கொடியை கடைசி இந்தியன் இருக்கும் வரைக்கும் கீழே இறக்கமுடியாது” என்று உரையாற்றினார். அடுத்த நாள் கூடிய செயற்குழு ஜனவரி 26 ஆம் தேதியை நாடெங்கும் பூரண சுதந்திர நாளாக கொண்டாடப்படும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நேரு கைது செய்யப்பட்டார். அவருக்கு மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனை கிடைத்தது.

1916 முதல் 1946 வரையிலான முப்பதாண்டு காலத்தில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக நேரு பலமுறை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏறத்தாழ பத்தாண்டு காலம் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். தன் மகள் இந்திராவுக்குப் பிறந்த முதல் குழந்தையை நேரு பார்த்த தருணத்தை கோபண்ணா சித்தரித்திருக்கும் விதம் மனத்தைத் தொடுகிறது. 20.08.1944 அன்று இந்திராவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அப்போது நேரு அகமது நகர் கோட்டை சிறையில் இருந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குழந்தை பிறந்த செய்தி கடிதம் வழியாக அவரை வந்தடைந்தது. மகளையும் குழந்தையையும் பார்க்கும் ஆவல் நெஞ்சில் நிறைந்திருந்தாலும் பாசத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சிறையில் இருந்தார் அவர். ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஏதோ ஒரு காரணத்தால் ஒரு குறிப்பிட்ட நாளில் அகமது நகர் கோட்டை சிறையிலிருந்து அவர் பரேலி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்தச் செய்தி மட்டுமே இந்திராவுக்குக் கிடைத்தது. நீண்ட பயணம் என்பதால் வழியில் நைனி சிறையில் இரவுப்பொழுதைக் கழிக்க தங்கிச் செல்லக்கூடும் என்று ஊகித்தார். ஒருவேளை ரயில்மாறி அப்படியே சென்றாலும் வியப்படைவதற்கில்லை என்றும் அவருக்குத் தோன்றியது. ஒருவேளை நைனி சிறைக்கு வந்தால் தந்தையைப் பார்க்கமுடியும் என மகள் நினைத்தாள். பொழுது சாய்ந்ததும் கணவரோடும் குழந்தையோடும் புறப்பட்டுச் சென்று காவலர்கள் பார்வையில் பட்டுவிடாமல் சிறைச்சாலைக்குச் செல்லும் சாலையில் தெருவிளக்குக் கம்பத்தின் கீழே மங்கிய வெளிச்சத்தில் நின்றிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே போலீஸ் வாகனத்தில் நேரு அச்சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டார். அவர்களைக் கண்டதும் வாகனம் ஒரு கணம் தயங்கி நின்றது. கையிலிருந்த குழந்தை மீது வெளிச்சம் படும் வகையில் உயர்த்திக் காட்டினார் இந்திரா. முதலில் குழம்பினாலும் மறுகணமே அவர்களை அடையாளம் கண்டுகொண்ட நேரு அக்குழந்தையை வாகனத்திலிருந்தபடியே ஆவலுடன் உற்றுப் பார்த்து புன்னகைத்தார். அடுத்த கணமே அவ்வாகனம் சிறைச்சாலைக்குள் சென்றுவிட்டது. ஒரு குடும்பத்தில் சாதாரணமாக அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியான தருணங்கள்கூட தேச விடுதலைக்காகப் போராடிய ஆளுமைகளின் வாழ்வில் அமையவில்லை என்பதைப் படிக்கும்போது, அவர்களுடைய தியாக உள்ளத்தை வணங்கத் தோன்றுகிறது.

தேசப்பிரிவினையின்போது உடைமைகளை இழந்து அடைக்கலம் தேடி வந்த மக்களைக் கண்டு ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினார் நேரு. தனக்குச் சொந்தமான அலகாபாத் இல்லமான ஆனந்த பவனத்தை ஆதரவற்றோர்களுக்கான இல்லமாக மாற்றினார். அனைவருக்கும் உறுதியான இருப்பிடமும் வருமானமீட்டும் தொழிலும் கிட்டும் வரை அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கியிருந்தனர். பிறகு, அது ஆதரவற்ற சிறுவர், சிறுமியருக்கான இல்லமாக தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து அது ஜவஹர் பாலபவனாக மாறியது.

மதச்சார்பின்மை பற்றி இந்திய மக்களுக்கு நேரு மீண்டும் மீண்டும் நினைவூட்டியபடியே இருந்ததை அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து அறியலாம். மதச்சார்பின்மை ஓர் உயர்ந்த நோக்காகும். அதில் சமரசம் என்னும் பேச்சுக்கே இடமில்லை. இதில் செய்துகொள்ளும் சமரசம் நம் கொள்கைகளிலிருந்து நம்மை பின்வாங்கவைத்துவிடும் என்று எல்லா மேடைகளிலும் முழங்கினார் நேரு. தன் வாழ்நாள் முழுதும் நாட்டுமக்களின் சிந்தனைகளை மதவன்முறைக்கு அப்பாற்பட்டதாகவே நேரு வைத்திருந்தார். மதப்பிரச்சினை தோன்றிய இடங்களிலெல்லாம் அதிலிருந்து மக்களை மீட்க அவர் சென்று நின்றார். அவர் எங்கு சென்றாலும் வகுப்புவாதத்துக்கு எதிராகவே பேசினார்.

நேரு நூற்றாண்டு விழா மலரில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்ருதீன் தயாப்ஜி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை கோபண்ணா அளித்திருக்கிறார். முஸ்லிம்களால் துன்புறுத்தபட்டு பஞ்சாபிலிருந்து கூட்டமாக வந்த அகதிகள் தில்லி நகரில் தங்கியிருந்த நேரம். அவர்களுக்கு தில்லியில் வசிக்கும் முஸ்லிம்களை அழித்து வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு வேகம் எழுந்தது. உளவுத்துறை வழியாக அச்செய்தி காதில் விழுந்ததும் தயாப்ஜியை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு விரைந்து சென்றார். பழிவாங்கும் எண்ணத்தோடு ஆயுதங்களுடன் அகதிகளில் ஒரு பிரிவினர் அங்கே இருந்தனர். உடனே அவர்களுக்கு அருகே நின்ற வாகனத்தின் மீது ஏறி நின்று அவர்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். முதலில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்த துன்பங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் உடமையிழப்புகளுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்தார். பிறகு, பழிவாங்க நினைக்கும் எண்ணத்தை கடுமையாகக் கண்டித்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என வாக்குறுதி அளித்த பிறகே நேரு அங்கிருந்து புறப்பட்டார். நிகழவிருந்த ஒரு பேரழிவை அன்று இரவு நிகழாமல் தடுத்ததை நடுக்கமும் பெருமிதமும் மண்டிய நெஞ்சுடன் பார்த்துக்கொண்டிருந்ததாக அக்கட்டுரையில் தயாப்ஜி எழுதியிருக்கிறார்.

நேருவுடன் உரையாடல் என்னும் புத்தகத்தின் ஆசிரியரான நார்மன் கசின்ஸ் என்பவர் தன் நினைவிலிருந்து விவரித்த மற்றொரு நிகழ்ச்சியையும் கோபண்ணா இணைத்துக்கொண்டிருக்கிறார். ஆயுதமேந்திய கூட்டத்தின் முன் நேரு ஆற்றிய உரையின் காரணமாக உருவான மனமாற்றத்தைக் கண்கூடாகக் கண்ட அவருடைய அனுபவம் அந்நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மதம் மிக முக்கியமான இடத்தைவகிக்கும் இந்தியாவில் மதச்சார்பின்மையை ஒரு கொள்கையாகக் கொண்டு செயல்படுவதற்கு நேரு செய்த முயற்சிகள் மிகமுக்கியமானவை. பசுவதையை சட்டத்தின் மூலம் தடுப்பது பற்றி ஒரு பேச்சு தொடங்கியதுமே, அதைக் கடுமையாக எதிர்த்தார் நேரு. அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவது என்பது ஒரு மதம் சார்ந்த சர்வாதிகார நாடாக இந்தியாவை மெல்ல மெல்ல மாற்றிவிடும் என்பது அவர் அச்சமாக இருந்தது. ஐம்பதுகளின் நடுப்பகுதியில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முக்கியத்துவம் உருவானது. பசுவதைத்தடைச் சட்டத்தை உருவாக்குவது பற்றி பல மாநிலங்கள் பரிசீலித்தபோது, அதற்கு கடுமையான முறையில் எதிர்வினை புரிந்தார் நேரு. அப்படி ஒரு சட்டத்தை உருவாக்க நினைப்பதை விவேகமும் அனும்பவமும் அற்ற செயலாக தான் கருதுவதாக ஒரு கடிதமெழுதி 13.02.1955 அன்று எல்லா மாநில முதல்வர்களுக்கும் அனுப்பிவைத்தார். ஒரு கட்டத்தில் கோவிந்த் தாஸ் என்பவர் அப்படி ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முயற்சி செய்தபோது, அதற்கு கடுமையான வகையில் எதிர்வினையாற்றினார். தேச ஒற்றுமை என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதே தவிர, ஒரே கலாச்சாரத்தின் மூலம் ஒற்றுமை என்பதை அடிப்படையாகக் கொள்ளவில்ல என அழுத்தம் திருத்தமாகக் கூறினார் நேரு.

ஐம்பதுகளின் தொடக்கத்தில் நாட்டில் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் நலனுக்காக முன்னெடுத்த சில போராட்டங்களால் வன்முறை வெடித்தது. உயிரிழப்பும் பொருட்சேதமும் நேர்ந்தன. அப்போது ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் “எது மிகப்பெரிய ஆபத்து? கம்யூனிசமா, வகுப்புவாதமா?” என்று ஒருவர் கேட்டார். மறுகணமே அவரிடம் நேரு “இது முட்டாள்தனமான கேள்வி. ஒரு மனிதனை நீரில் மூழ்கி சாகிறாயா, அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து சாகிறாயா என்று கேட்பதுபோல இருக்கிறது” என்று பதிலளித்தார். ஆனால் வேறுவேறு சொற்கள் வழியாக மீண்டும் மீண்டும் இதே கேள்வி கேட்கப்பட்டபோது “வகுப்புவாதம்தான் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து. கம்யூனிஸ்டுகள் வன்முறையைக் கொள்கையாகக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில பொருளாதாரக் கொள்கைகளை வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய வழிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லையே தவிர, அத்தகைய கொள்கைகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் வகுப்புவாதத்துக்கு அப்படிப்பட்ட எந்த அடிப்படையும் இல்ல்லை. அது அழிவைமட்டுமே கொண்டுவரும்” என்று தெளிவாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஜனநாயகம் என்பதை தேர்தல் காலத்தில் வாக்களிக்கிற ஒரு சடங்காக மட்டும் நேரு பார்க்கவில்லை. அவர் அதை ஒரு சிந்தனைமுறையாகவும் நடத்தை முறையாகவும் பார்த்தார். ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை. நம் கருத்தை ஏற்றுக்கொள்பவர்களிடம் மட்டுமல்ல. ஏற்க மறுப்பவர்களிடமும் சகிப்புத்தன்மையைக் காட்டவேண்டும். ஜனநாயகத்துக்கு பாராட்டும் பற்றும் தெரிவிக்கும் அதே வேளையில் பெரும்பாலான மக்களின் கருத்துகள் எப்போதுமே சரியாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை என்னும் நேருவின் சொற்கள் கூர்மையானவை.

அரசியல் நிர்ணய சபையில் வாக்காளர்கள் யார் என்பதை வரையறுக்கும் ஒரு விவாதத்தில் ஒவ்வொருவரும் ஒரு வரையறையை முன்வைத்து உரையாற்றினர். சிலர் குறைந்தபட்ச கல்வித்தகுதியை முன்வைத்தனர். சிலர் குறைந்தபட்ச செல்வவசதியை முன்வைத்தனர். ஆனால் நேரு அந்த வரையறைகளை கடுமையாக எதிர்த்தார். வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கவேண்டும் என்று வாதாடினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், நிலமற்றோர், சிறு குறு விவசாயிகள், பண்ணைத்தொழிலாளர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், பெண்கள் என பல பிரிவினரும் ஒரே சமயத்தில் தம் வாக்குகள் மூலம் அதிகாரத்தில் பங்கெடுக்கமுடியும் என்று எடுத்துரைத்தார். கடுமையான வாதவிவாதங்களுக்குப் பிறகே நேருவின் கருத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது.

தேசப்பிரிவினையைத் தொடர்ந்து உருவான பாகிஸ்தான் நாட்டில் பெரும்பான்மையினரின் மொழியான உருதுமொழியை உடனடியாக அலுவலக மொழியாக அறிவித்துவிட்டார்கள். அதேபோல இந்தியாவிலும் பெரும்பான்மையினரின் மொழியான இந்தி மொழியை அலுவல்மொழியாக அறிவிக்கவேண்டும் என வடமாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தத் தொடங்கினர். ஆனால் இந்தியை அறியாத தென்மாநில உறுப்பினர்கள் ஆங்கிலமே அலுவல்மொழியாக தொடரவேண்டும் என்று வலியுறுத்தினர். மொழி தொடர்பான பிரச்சினையில் நெகிழ்வும் இணக்கமும் கூடிய ஒரு முடிவையே நாம் எடுக்கவேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருந்தார். இது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் பல மணி நேரங்கள் நடைபெற்றன. இறுதியில் இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை அலுவல் இணைமொழியாக ஆங்கிலமே தொடரும் என்று தெரிவித்தார் நேரு. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மொழி என்பது இயற்கையாக வளரும் மென்மையான மலரைப்போன்றது. ஒரு மலரை இழுத்தோ, திருப்பிபோ, அசைத்தோ உங்களால் வளர்க்கமுடியாது என்று உறுதியான குரலில் பதில் சொன்னார் நேரு. ஐநூறு உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து பேசிய ஈ.வெ.கி.சம்பத் குரலை மதித்து, அவரை அமைதிப்படுத்தும் விதமாக கடிதமெழுதி, தமிழகத்தில் நடக்கவிருந்த கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தைத் தவிர்த்தார்.

இந்து ஆண்களுக்கு ஒருதாரத் திருமணத்தை வலியுறுத்தி, விவாகரத்து உரிமையும் மூதாதையர் சொத்தை மரபுரிமையாகப் பெறும் உரிமையும் பெண்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அம்பேத்கர் இந்து சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். நேருவுக்கும் அச்சட்டத்தில் உடன்பாடு இருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் கடுமையான வகையில் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் அந்தத் தருணத்தில் அந்த மசோதா கைவிடப்பட்டது. அதனால் மனவருத்தம் கொண்ட அம்பேத்கர் 1951இல் அவசரமாக தன் பதவியிலிருந்து விலகினார். எனினும் அச்சட்டத்தின் முக்கியத்துவம் கருதி அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்த நேரு, ஒரே தொகுதியாக இருந்த அச்சட்டக் கூறுகளை ஐந்து தனித்தனி பிரிவுகளாக பிரித்து வெவ்வேறு சட்டங்களாக நிறைவேற்றினார். 1954இல் உருவான சிறப்புத்திருமணச்சட்டமும் 1955இல் உருவான இந்து திருமணச்சட்டமும் இந்து வாரிசுரிமைச்சட்டமும் 1956இல் உருவான இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டமும் இந்து தத்தெடுப்பு பராமரிப்புச் சட்டமும் அப்படி உருவானவையே. 1961இல் உருவான வரதட்சிணைத் தடுப்புச் சட்டம் பெண்களின் திருமணத்துக்கு தடையாக இருந்த ஒரு பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நேருவின் சொற்கள் அவருடைய நெஞ்சின் ஆழத்திலிருந்து தன்னிச்சையாக பிறந்து வருவதை அவருடைய பல்வேறு உரைகள் வழியாக உணர்ந்துகொள்ள முடியும். சுதந்திரத்திருநாள் அன்று வானொலியில் மக்களுக்காக அவர் ஆற்றிய உரை, காந்தியடிகளின் மறைவையொட்டி அவர் ஆற்றிய உரை, நங்கல் கால்வாயைத் திறந்து வைத்து ஆற்றிய உரை என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த உரைகளின் சாரமான பகுதிகளை கோபண்ணா பொருத்தமான இடங்களில் எடுத்தாண்டிருக்கிறார். 23.05.196 அன்று மக்களவையில் நேரு ஆற்றிய உரையில் பொதுத்துறைகள், தனியார் துறைகள் பற்றி தன் கருத்துகளைத் எடுத்துரைத்திருக்கும் பகுதி மிகமுக்கியமானது. “பொதுத்துறை வெளிப்படையாக வளரவேண்டும். நம் பொருளாதாரத்தில் பொதுத்துறை முக்கியமான பங்காற்றவேண்டும். தொழிற்துறைக் கொள்கைப்புரட்சியில் தனியார் துறைக்கும் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு களம் அமைத்துத் தரப்படும். தனியார் துறையைக் கையாளும் விதங்களைப் பற்றி அந்தந்த தருணங்களுக்கேற்ப முடிவு செய்யவேண்டும்” என்னும் சொற்கள் அவருடைய உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. கலப்புப்பொருளாதாரமே நேருவின் நோக்கமாக இருந்தது. சிற்சில பகுதிகளில் தனியார் துறையினர் செயல்பட அனுமதிக்கலாம். ஆனால் அரசின் வழிகழிகாட்டு நெறிகளுக்கு உட்பட்டு அது செயல்படவேண்டும். முடிவில் பொதுத்துறையே சந்தையில் ஆதிக்கம் செலுத்தவேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது நேருவின் பார்வையாக இருந்தது.

நேருவின் மற்றொரு முக்கியமான சாதனை அவருடைய ஐந்தாண்டுத்திட்டங்கள். முதலில் விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள். நாட்டின் முக்கியமான ஆறுகளின் குறுக்கே அணைகள் எழுப்பப்படுகின்றன. நீர்த்தேவையையும் மின்சாரத்தேவையையும் இந்த அணைகள் தீர்த்துவைக்கின்றன. மின்சாரம் நீர்ப்பாசனத்துக்குரிய நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க உதவுகிறது. அதனால் விளைச்சல் பெருகுகிறது. கட்டுமான வேலைகள் பெருகப்பெருக இரும்பின் தேவை அதிகரிக்கிறது. அதனால் முக்கியமான பகுதிகளில் இரும்பாலைகள் உருவாக்கப்படுகின்றன. விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பை அதிகரிப்பதோடு, நிலத்தை வளமுடன் வைத்திருக்கத் தேவையான உரங்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகள் உருவாகின்றன. பெட்ரோல் கிணறுகள் தோண்டப்படுகின்றன. முதல் கிணற்றிலிருந்து பெட்ரோல் பீறிட்டெழும் காட்சியைக் கண்டு அகமகிழ்கின்றார் நேரு. அவர் அணிந்திருந்த ஆடையில் கன்னங்கரிய பெட்ரோல் துளிகள் தெறித்து கறை படிகிறது. அந்தக் கறையை சந்தோஷமாக தொட்டுப் பார்க்கிறார் நேரு. மக்களவையில் அந்த உடையுடன் பேசப்போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். இந்திய எண்ணெய் எரிவாயுக்கழகம் உருவாகி மெல்ல மெல்ல விரிவடைகிறது. ஒவ்வொன்றும் அவருடைய கனவு. தேசத்தை தலைநிமிர்ந்து நிற்கவைக்கும் கனவு.

இந்தியாவை ஒரு தனித்துவம் மிக்க நாடாக உலக அரங்கில் வளர்த்தெடுத்து நிற்கவைப்பது அவருடைய மாபெரும் கனவாக இருந்தது. அவருடைய வாழ்க்கை வரலாறும் இந்தியாவின் வளர்ச்சி வரலாறும் வேறுவேறல்ல. ஒன்றே. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததாகும். பிரிக்க முடியாத அந்தக் காட்சிகளை வரலாற்றுச் சாட்சிகளாக நிற்கும் நிகழ்ச்சிகளோடும் பல்வேறு ஆளுமைகள் எழுதிய நூல் குறிப்புகளோடும் இணைத்து கோபண்ணா உருவாக்கியிருக்கும் இந்த நூலை காலத்தின் தேவை கருதி உருவான முக்கியமானதொரு ஆவணப்பெட்டகம் என்று சொல்லலாம்.

(மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு. ஆ.கோபண்ணா. நவ இந்தியா பதிப்பகம். காமராஜ் பவன், 573, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600006. விலை. ரூ.2500)

நூல் அறிமுகம்: உஷா தக்கரின் “காங்கிரஸ் வானொலி” – அருண்குமார் நரசிம்மன்

நூல் அறிமுகம்: உஷா தக்கரின் “காங்கிரஸ் வானொலி” – அருண்குமார் நரசிம்மன்



இந்திய விடுதலைப்போராட்டமும் காங்கிரஸ் வானொலியும்

இந்தியா கிழக்கிந்திய கம்பெனியிடமும் பிறகு பிரித்தானியா ஆங்கிலேய அரசிடமும் 200 ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த 200 ஆண்டுகளில் நம் இந்தியர்களை ஆங்கிலேய பிரித்தானிய அரசும் அதன் அதிகாரிகளும் எவ்வாரெல்லாம் கொடுமை செய்து துன்புறுத்தினார்கள் என்பது உலக சரித்திரத்தில் இந்தியர்களின் குருதியால் அழிக்க முடியாவண்ணம் எழுதப்பட்டுள்ளது.
நம்முடைய விடுதலை போராட்டதை பற்றியும் ஆங்கிலேயர்களின் கோரத்தாண்டவத்தையும் இந்தியாவின்
பாமர மக்களுக்கும் நமது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வதில் ஊடகங்களின் (அச்சு மற்றும் வானொலி) பங்கு மிகப்பெரியதாகும்.

இந்தியாவின் சாமானிய மக்களுக்கு அச்சு ஊடகத்தின் மூலம் அவர்களின் சுதந்திரப் போராட்ட தாகத்தினை அச்சுஊடகத்தார் தணித்தனர். அதேவேளையில் வானொலி தொழில்நுட்பம் தெரிந்த சிலர் வானொலி மூலம் அந்த தாகத்தினை போக்க முயற்சி செய்தனர்.

அதன் ஒரு முயற்சி தான் அன்றைய பம்பாய் நகரில் தலைமறைவாக நடத்தப்பட்ட “காங்கிரஸ் ரேடியோ.” 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை துவங்கினார். அப்போது 22 வயதேயான உஷா மேத்தாவும் அவரின் நண்பர்களும் காங்கிரஸ் வானொலியை உஷா மேத்தாவும் அவரின் சகாக்களும் மூன்று மாதங்கள் பம்பாயில் பல்வேறு இடங்களில் ஒலிபரப்பிகளை இயக்கி ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களில் மண் தூவி ரகசியமாக வைத்து ஒலிபரப்பு செய்து வந்தனர்.

Congress Radio - Penguin Random House India

உஷா மேத்தாவின் இந்த சாகசத்தை பற்றி அவரால் ஈர்க்கப்பட்ட உஷா தாக்கர் காங்கிரஸ் ரேடியோ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பென்குவின் பதிப்பகத்தாரால் இந்த புத்தகம் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்தில் வானொலியின் பங்கை பற்றி தெரிந்து கொள்ள 288 பக்கங்களை கொண்ட இந்த காங்கிரஸ் ரேடியோ புத்தகம் உதவும்.

இந்தியாவில் எங்கிருந்தோ 42.34 மீட்டர் அலைவரிசையில் இது உங்கள் காங்கிரஸ் வானொலி என்று உஷா மேத்தாவின் குரல் தேசம் முழுவதும் ஒலித்ததாக நூலாசிரியர் உஷா தாக்கர் இந்த புத்தகத்தை துவங்குகிறார். இந்த வானொலி மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸின் மிக முக்கியமான தலைவர்களின் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் மக்களுக்கு தேசபற்றுஊட்டும் விடயங்களையும் ஒலிபரப்பி வந்தது.

இந்த வானொலியானது சிட்ட காங்கிலிருந்து ஜாம்ஷெட்பூர் வரை அன்றாடம் நிகழும் விடுதலை போராட்ட நிகழ்வுகளை பற்றிய செய்திகளை மூன்று மாதங்கள் தொடர்ந்து வழங்கியது. காங்கிரஸ் வானொலியை உஷா மேத்தாவும் அவரின் சகாக்களும் மூன்று மாதங்கள் பம்பாயில் பல்வேறு இடங்களில் ஒலிபரப்பிகளை ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களில் மன் தூவி ரகசியமாக வைத்து ஒலிபரப்பு செய்து வந்தனர்.

இதற்குண்டான கருவிகளை கமுக்கமாக பல்வேறு நிறுவனங்களிருந்தும் நபர்களிடமிருந்தும் பெற்று நடத்தி வந்தனர். மூன்று மாதத்திற்கு பிறகு ஒரு நாள் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது உஷா மேத்தாவும் இந்த வானொலியை நடத்தி வந்தவர்களும் அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பாபுபாய் காக்கர் இந்த வானொலி நடத்த நிதியை திரட்டினார், முக்கிய சோசியலிஸ்ட் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோஹியா, சந்திரகாந்த் ஜாவேரி மற்றும் விட்டல்தாஸ் கே. ஜாவேரி ஆகியோர் இந்த வானொலி இயங்க பெரிதும் உதவினர்.

இந்த நிறுவனத்தின் தலைமை அமைப்பாளராக, விட்டல்தாஸ் ஜாவேரி, ரேடியோ பொறியியலில் நன்கு பயிற்சி பெற்ற நரிமன் அபர்பாத் பிரிண்டரை அணுகி, காங்கிரஸ் வானொலிக்கு ஒலிபரப்பிற்கான கருவிகளை தயாரிக்க கேட்டுக்கொண்டார். பம்பாயின் சிகாகோ வானொலி நிறுவனத்தின் உரிமையாளரான நானிக் மோத்வானி இந்த வானொலிக்கான உபகரணங்களை வழங்கி உதவி செய்தார்.

இந்த புத்தகம் படித்து முடித்தபின் எனக்கு ஒரு திரில்லர் கதை படித்த உணர்வு வந்தது அதேபோன்று இந்த வானொலி புத்தகத்தை படிக்கும் உங்களுக்கும் வரும் என்று நான் நம்புகிறேன்.

– அருண்குமார் நரசிம்மன்

பகத்சிங் குறித்து தந்தை பெரியார் கட்டுரை – ச. வீரமணி

பகத்சிங் குறித்து தந்தை பெரியார் கட்டுரை – ச. வீரமணி



(பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், தந்தை பெரியார் அவர்கள் ‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்)


தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே ! | வினவு

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி அனுதாபங்காட்டாதவர்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம். இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப் பிரதிநிதி திரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கை தூக்கிலிடக்கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படி தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவது, திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்களும் நடைபெற்றன. ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்கின்ற கூச்சல்களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக்கொடிகளும் அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. இவைகளை யெல்லாம் பார்க்கும்போது, அரசியல் விஷயமாய்ப் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவுமிருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும், திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே, இக்கிளர்ச்சி மக்களுக்கோ, தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே, பகத்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியுமிருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார்களும் ‘‘திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்து விட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே தன்காரியங்களைச் செய்கின்றார், திரு. காந்தி ஒழியவேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்’’ என்று ஆகாயமுட்டக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசிய வீரர்கள், தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோலவும், பந்தயங் கூறிக்கொண்டு பாறையில் முட்டிக்கொள்வது போலவும் தலை கிறுகிறுத்துக் கண் தெரியாமல் கூத்தாடினார்கள், அதன் பயனாய் சிறை சென்று வீரர்களை ‘‘வாகை மாலை சூடி’’ திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்துவிட்டு, ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, நம்மைப் பொறுத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொறுப்பும் கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடைத்தால் போதுமென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வினாடிதோரும் வேதனைப் பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரை விட்டு மறைய நேர்ந்தது, பகத்சிங்கிற்கு மெத்த ‘‘சாந்தி’’ என்றும், நன்மை யென்றுமே கருதுதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சிங் கொள்கைக்கு காலமும் இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம், அதுவேதான் உலகத்தின் சாந்தநிலைக் கொள்கையாகும். நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து கொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம்.

இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு பகத்சிங்கிற்கு பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது:-‘‘பொதுஉடைமைக் கட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துகொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத்திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றோம்.

 ஆகவே இந்தக்கொள்கையானது எந்த சட்டத்தின்படியும் குற்றமாக்கக்கூடியது அல்லவென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கின்றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது, தனி வகுப்புகளிடமாவது, தனி தேசத்தார்களிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத்தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது. தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டும், அதுபோலவேதான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத்தன்மை பொதுஉடமைத் தன்மை என்பவைகளை ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கைகள்தான் திரு பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாயமானவை யென்றும், அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே, காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும். திரு பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம். சுலபமாக, தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப் பட்டு செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயாரா, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம் !! பாராட்டுகின்றோம் !!!

இதே சமயத்தில் ந்மது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.

(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள குறுந்தகட்டிலிருந்து, வெளிக்கொணர்ந்திருப்பவர்: ச. வீரமணி)

நூல் அறிமுகம்: சம்சுல் இஸ்லாமின் ’முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்’ தமிழில்: ச.வீரமணி, தஞ்சை ரமேஷ் – ச.வீரமணி

நூல் அறிமுகம்: சம்சுல் இஸ்லாமின் ’முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்’ தமிழில்: ச.வீரமணி, தஞ்சை ரமேஷ் – ச.வீரமணி




நூல்: முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்
ஆசிரியர்: சம்சுல் இஸ்லாம்
தமிழில்: ச.வீரமணி, தஞ்சை ரமேஷ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 200
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின் சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே இவ்வாறு சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாகக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை. வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், 1990வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார். 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம் (‘Rehabilitate Savarkar’ movement), பாரதீய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டபின்புதான், இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட, “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிர1 கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.”

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும் இணைந்தகொண்டிருப்பத துரதிர்ஷ்டவசமாகும். இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்எஸ்எஸ்-உடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக்கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதீய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும் உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர் இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்” என்று வீர சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் உறுப்பினன் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார்.1 மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.2 இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார். விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு தேசியவாதி என நம்புகிறேன், மகாத்மா காந்தியும் நாட்டிற்காக ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்,” என்று கூறியிருக்கிறார்.

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள் வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர் என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள், அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட எழுதிய எழுத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாலே, அவர் குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர், இந்து மகா சபா, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாக சார்ந்திருக்கிறார்.

சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை மக்கள் எதிர்கொண்டிருந்த சமயத்தில், சாவர்க்கர் பிரிட்டிஷாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவினை அளித்தார்.

இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார். சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு அறியலாம்.

“இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட, இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும், அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும், கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி மற்றும் போர்த்தந்திர கருவிகள் உற்பத்தி என அனைத்திலும் பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். .. ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும். இதன் விளைவாக, நாம் விரும்பினாலும் சரி, அல்லது விரும்பாவிட்டாலும் சரி, யுத்தத்தின் அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே, இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது, தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு கூறியதுடன் மட்டும் நில்லாது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ப்பதற்கும், அதன்மூலம் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கும் துணை போனார்.

சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார். அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம் காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும், ஏன், காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள் இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை பெற்று சுமார் நூறாண்டுகளானபின்னரும், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும் சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடும் என்று நம்புகிறோம். இந்தப் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின் 1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவற்றின் ஆபத்துக்களையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

சாவர்க்கர் குறித்து கூறப்படும் ஏழு சரடுகளைக் கூறி அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் தக்க ஆவணச்சான்றுகளுடன் இந்தப் புத்தகத்தில் கட்டுரையாளர் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.

சாவர்க்கரை வீரரா அல்லது ஐந்து கருணை மனுக்கள் எழுதிக்கொடுத்து பிரிட்டிஷாரின் அடிமையாகச் சேவகம் செய்தவரா என்பதையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரா என்பதையும் இந்தப்புத்தகத்தைப் படித்திடும் ஒருவர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும்.

பாரதி புத்தகலாயத்தின் சார்பில் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் (Savarkar Unmasked) என்னும் இந்நூல் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது.
இந்துத்துவாவை உருவாக்கிய சாவர்க்கரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டும்…

மதவெறியின் மாறுவேடம் கவிதை – பிச்சுமணி

மதவெறியின் மாறுவேடம் கவிதை – பிச்சுமணி




கைத்தட்டி
விளக்கணைத்து
கொரானாவுக்கு
வைத்தியம் பார்த்த
குஜராத் கோமான்

கொடிய வரிகளால்
குடிமக்களின்
கோவணத்தையும் உருவிவிட்டு
வீட்டுக்கு வீடு
தேசியக் கொடியை
ஏற்றச் சொல்கிறார்கள்..

கோட்சேக்களுக்கு
குரு வணக்கம் செலுத்திவிட்டு
காந்தியர்களின்
தேகத்தைக் கீறி
தேசப்பற்றைச் சோதிக்கிறார்.

நூற்றிநாற்பது
கோடி பேரின் உடைமையை
நாலு பேருக்கு உரிமையாகிவிட
நாடுசுற்றும் தரகரவர்

அவருக்கு
முன்னோடிகள் அவருக்கு
சொன்னதெல்லாம்
நாக்பூர் தத்துவங்கள்

நம் முன்னோர்கள்
நமக்கு சொன்னதெல்லாம்
நாடுகாக்கும் மனித சமத்துவங்கள்

முன்னூறு ஆண்டு விடுதலைப் போரில்
அவர்களின்
முன்னோடி முகங்கள் எதுவுமில்லை.

எழுபது ஆண்டுகளில்
அவர்கள் கூடாரங்களில்
தாயின் மணிக்கொடி ஏற்றியது மில்லை

தினம் தினம் நம்மை வதைத்து
சுதந்திர தினத்தில்
தந்திரமாய்த் தேசக் கொடியை ஏற்றச்சொல்கிறார்கள்

தேசத்தை விற்றதை மறக்க
தேசியக் கொடியை விற்கிறார்கள்

விலைவாசியை ஏற்றத்தை மறைக்க
வீட்டு வாசலில் கொடியேற்றச் சொல்கிறார்கள்.

முக மூடி தரிப்பது
அவர்களுக்குப் புதிதில்லை
இப்போது
சுதந்திர தின
தேசிய கொடி முகமூடி அணிந்திருக்கிறார்கள்

மதவெறிக்கு மாறுவேடமிட்டு
மனித வேட்டையாடத் துடிக்கிறார்கள்.

– பிச்சுமணி