ஜிஎஸ்டி வரி உயர்வுகளும் விலைவாசி உயர்வும்  ஏழைகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் – தமிழில்: ச.வீரமணி

ஜிஎஸ்டி வரி உயர்வுகளும் விலைவாசி உயர்வும் ஏழைகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் – தமிழில்: ச.வீரமணி




டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு முதன்முறையாக 80 அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தொடர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது பணவீக்கத்தின் நிர்ப்பந்தங்களை அதிகரித்திட இட்டுச் செல்லும். இது, ஏற்கனவே இருந்துவரும் பணவீக்கம் மற்றும் அதிக அளவிலான வேலையின்மை ஆகியவற்றுடன் சேர்ந்து, நாட்டின் பொருளாதாரம் மோடி அரசாங்கத்தின் பெரும் வர்த்தகர்கள் ஆதரவுக் கொள்கைகளால், எப்படி மோசமான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுகிறது. மொத்த பணவீக்கமும், சில்லரை பணவீக்கமும் முறையே தொடர்ந்து 15 விழுக்காடு மற்றும் 7 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருப்பது அதே நிலையில் தொடர்ந்து இருந்துவருகிறது. இது, அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளையும், குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகளை, தொடர்ந்து உயர்வதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இத்துடன் மக்கள் நாளும் உயரும் எரிபொருள்களின் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் அதீத விலை உயர்வு ஆகிய கூடுதல் சுமைகளைச் சுமப்பதற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ரூபாய் மதிப்பு கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு காரணிகளால் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. அவற்றில் மிகவும் முக்கியமானது வர்த்தகம் மற்றும் நாடுகளுக்கிடையேயான கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டுள்ள நடப்புக்கணக்குப் பற்றாக்குறையாகும். (Important among them are the increases in the trade and current accounts deficits of the balance of payments.) இதில் மிகவும் முக்கியமான காரணி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் தன்னுடைய வட்டி விகிதங்களை உயர்த்தியதால், அந்நிய முதலீட்டாளர்கள் (foreign portfolio investment) வெளியேறியதேயாகும். உதாரணமாக, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (foreign institutional investors) தங்கள் பங்குகளை (equities) விற்றதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 30 பில்லியன் டாலர்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியானது தன்னிடம் உள்ள அந்நிய பரிவர்த்தனை ரிசர்வுகளைப் பெரிய அளவில் கொடுத்து திறந்தவெளிச் சந்தையில் தலையிட்டு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதிலிருந்து சரி செய்திருக்க முடியும். ஆனால், ஒரு சில சமயங்கள் தவிர மற்ற சமயங்களில் அது அவ்வாறு செய்யாததால், இந்திய ஏற்றுமதிகளில் போட்டியை அதிகரித்திடவும், இந்திய இறக்குமதியை விலை உயர்ந்ததாக மாற்றக் கூடிய விதத்திலும், இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இவ்வாறு செய்தால் வர்த்தகப் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கருதியது. ஆயினும் அது நடைபெறவில்லை. ஏனெனில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் நாட்டிலுள்ள மூலதனங்கள் அதாவது, அந்நிய முதலீடுகள் (foreign portfolio investments) வெளியேறியதேயாகும். எனவேதான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையைச் சரிசெய்திட இட்டுச்செல்லவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதிக்கான கட்டணங்களை அதிகரித்திடும். இதனால் இறக்குமதி செய்யப்படும் செயற்கை உரங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு அளித்துவரும் மானியங்களையும் வெட்ட வேண்டும் என்று அரசாங்கம் கோரும். மானியங்கள் வெட்டப்படும். இதனாலும் மொத்த பணவீக்கமும் விலைவாசிகளும் மேலும் உயரும்.

இவ்வாறாகப் பாய்ச்சல் வேகத்தில் உயரும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய இந்த சமயத்தில்தான் ஒன்றிய அரசாங்கம் பல்வேறு உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களை உயர்த்தி இருக்கிறது. நாட்டில் முதன்முதலாக பேக்கேஸ் செய்யப்பட்ட தானியங்கள், பருப்பு வகைகள், தயிர், பாலாடைக் கட்டி, இறைச்சி, மீன் முதலான உணவுப் பொருள்களுக்கு 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. சுடுகாட்டுச் செலவுகள், மருத்துவமனைகளுக்கான அறைகள், காசோலைகள் மூலம் பணம் பெறுதல் போன்ற இதர சேவை இனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

மக்களின் நலன்களைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத தடித்தனமான ஓர் அரசாங்கத்தால் மட்டுமே இவ்வாறு மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருள்களுக்கும் வரிகள் மூலமாக இத்தகைய சுமைகளை ஏற்றச் சிந்திக்க முடியும். நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஜிஎஸ்டி கவுன்சிலில், புதிய ஜிஎஸ்டி முன்மொழிவுகளுக்கு மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள் எவரும் எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காததால், அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மையல்ல.

கேரள மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், ஜிஎஸ்டி விகிதத்தைத் திருத்தி அமைத்திடும் அமைச்சர்கள் குழுவில் (member of the group of ministers (GoM) on implementing GST rate revision) ஓர் உறுப்பினர். 2021 நவம்பர் 29 தேதியிட்ட ஒரு கடிதத்தில் கே.என்.பாலகோபால், சாமானிய மக்கள்மீது சுமைகளை ஏற்றாமல் ஜிஎஸ்டி அமைப்புமுறை மூலமாக வருவாயைப் பெருக்க வழிவகைகளைக் காண ஆழமான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். கேரள அரசாங்கத்தின் நிலைபாட்டை மீளவும் வலியுறுத்தி, இந்தக் கடிதம் மீண்டும் ஜூன் 17 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி விகிதத்தைத் திருத்தி அமைத்திடும் அமைச்சர்கள் குழுக்கூட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

பல்வகையான உணவுப் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி விகிதங்கள் விதிக்கப்படுவதற்கான முடிவு சண்டிகாரில் நடைபெற்ற ஜிஎஸ்டி விகிதத்தைத் திருத்தி அமைத்திடும் கவுன்சிலின் கூட்டத்தில் மிகவும் தந்திரமான முறையில் மேற்கொள்ளப்பட்டது. கேரள அரசாங்கம் குடும்பஸ்ரீ (Kudumbashree) என்னும் சிறிய கடைகள் மூலம் ஒன்று அல்லது இரண்டு கிலோ பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு வரி விதிப்பதில்லை எனத் தீர்மானித்திருக்கிறது.

உணவுப் பொருள்களுக்கும் வீடுகளில் பயன்படுத்தப்படும் நுகர்வுப் பொருள்களுக்கும் வரி ஜிஎஸ்டி வரி விதிப்பதற்குப் பதிலாக ஆடம்பரப் பொருள்களுக்கு (luxury goods) ஏற்கனவே விதிக்கப்பட்டுவந்ததுபோல் 28 விழுக்காடு வரி விதித்திட வேண்டும் என்றும் முந்தைய கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், தாமஸ் ஐசக், நிதி அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே வலியுறுத்திக்கொண்டு வருகிறது.

எனினும், மோடி அரசாங்கம் பணக்காரர்கள் வாங்கும் ஆடம்பரப் பொருள்களுக்கு வரி விதித்திட விரும்பவில்லை. இந்த அரசாங்கமானது கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவே அட்சி செய்துகொண்டிருக்கிறது. 2019இல் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்ததன் மூலம் அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழந்தது. தொடர்ந்து ஏராளமான வரிச்சலுகைகள் மூலம் கார்ப்பரேட்டுகள் வங்கிகளில் வாங்கியிருந்த 2.4 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறு அரசின் வருவாயில் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட, சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மீதும் நுகர்வுப்பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் உயர்த்தப்படுகின்றன, பெட்ரோலியப் பொருட்கள் மீதும் வரிகள் உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இத்தகைய படுபிற்போக்குத்தனமான அணுகுமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்கள் திரும்பப்பெறப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் போன்றவற்றின் மீதான சர்சார்ஜ் மற்றும் செஸ் வரிகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். மாறாக, மகா கோடீஸ்வரர்கள் மீதும், கார்ப்பரேட்டுகள் மீதும் அதிக அளவில் வரிகள் விதித்திட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

(ஜூலை 20, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்