தோழர் கருணாவின் நினைவு நாள் – ஜெயசந்திரன்
தோழர் கருணா மறைந்து ஓராண்டாகிறது. இப்போது போலிருந்த அக்கொடும் நிகழ்வு நடந்து உண்மையிலேயே ஓராண்டாகி விட்டது. சென்னை, சைதாப்பேட்டையில் டிசம்பர் 31 ல் மீண்டும் கலை இரவு நடத்தத் திட்டமிட்டு செயலில் இறங்கி இருக்கிறோம். அச் செயல்பாட்டினூடே கருணாவின் நினைவுகள் தனிமையை இடைமறித்துக் கொண்டே இருக்கிறது.
கலை இலக்கிய இரவு என்ற மகத்தான கலாச்சார நிகழ்வை த. மு. எ. ச. வின் மூலம் தமிழ்நாட்டிற்கு கொடையளித்த திருவண்ணாமலை த. மு. எ. ச. சிற்பிகளில் அவனும் ஒருவன். கலை இலக்கிய இரவு சென்னை சைதாப்பேட்டையில் கலை இரவாக மாற்றமடைந்து தமிழ்நாடு முழுவதும் கலை இரவாகவும் கலை இலக்கிய இரவாகவும் பயணித்தது. திருவண்ணாமலை மலை அடிவாரத்திலிருந்துப் புறப்பட்டு தமிழ்நாட்டின் எட்டுத் திக்கும் எதிரொலிக்கும் பாப்பம்பாடி ஜமாவின் அதிர்வு, அதன் ஊடறுத்துப் பயணிக்கும் ‘ஓ… ஹோய்’ எனும் கருணாவின் கரகரத்த முழக்கம்…. அதை வடிவமைத்தவர்களில் அவன் முக்கியமானவன்.
எழுதுவதற்கும் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்ட அவசரநிலை காலத்தில் எழுதுவதற்காகவும் பேசுவதற்காகவும் தொடங்கப்பட்ட அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். தடைகளை உடைப்பதும் புதியனவற்றைப் படைப்பதும் உள்ளார்ந்த இயல்பாய்க் கொண்டது எமது அமைப்பு. இந்திய விடுதலைப் போராட்டத் தியாகத்தளபதிகள் கே. முத்தையா, என். சங்கரையா போன்ற தோழர்களின் வழித்தடத்தில் பயணித்து ஆற்றல் பெற்று வளர்ந்து வரும் அமைப்பு. அதன் மூன்றாம் தலைமுறை ஊழியர்களில் ஒருவன் கருணா. திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி வாழ்க்கைத் துவங்கி இறுதி மூச்சு வரை அநீதிகளுக்கு எதிரான போர்ப் படையில் முன் வரிசையில் இயங்கி வந்தவன். ஸ்டென்சில் தாளில் படி எடுப்பது முதல் கணினித் திரையில் வடிவமைப்பது வரை கற்றுத் தேர்ந்தவன். இருபது மற்றும் இருபத்தி ஒன்று ஆகிய இரு நூற்றாண்டுகளிலும் இளைஞனாகவே வாழ்ந்து முடித்தவன்.
அமைப்பின் ஒழுங்கு முறைக்குள் கூட்டம் நடந்து முடிந்த பிறகு அரங்கிற்கு வெளியே மறு கூட்டம் ஒன்று நடக்கும். ஒழுங்கற்ற மறு கூட்டத்தின் மொழியாக எக்காளச் சிரிப்பும் எகத்தாளப் பேச்சும் இருக்கும். அதன் நடுவில் நாயகனாகக் கருணா அமர்ந்திருப்பான். விரலிடுக்கில் சிகரெட் புகைந்திருக்கும். தலைவர்கள் வந்து செல்வார்கள். அல்லது அவன் தலைமைக்குக் கட்டுண்டு அமர்ந்திருப்பார்கள். மறு கூட்டத்தில் மிகப் பெரிய இயக்கமொன்றின் விதையைக் கண்டெடுப்பான்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சென்னையில் நடைபெற்ற பதினொன்றாவது மாநில மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமாக பரிணாமம் பெற்றது. எழுத்திலக்கியங்களும் கலை நிகழ்வுகளும் இணைந்து த. மு. எ. க. ச வின் முகமாக வடிவெடுத்தது. அதன் பன்முகத் தன்மை கொண்ட ஊழியன் அவன்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நிரம்பி வழிகிறது அமைப்பு என்கிற விமர்சனம் மேலெழும் காலத்தில் – நிகழ்ச்சி ஏற்பாட்டாளனாக, குறும்பட இயக்குனராக, உலகத் திரைப்பட அறிமுகக் கட்டுரையாளனாக, திரை இயக்க – நாடக இயக்க செயற்பாட்டாளனாக, மிகச் சிறந்த வடிவமைப்பாளனாக சீரிய வாசிப்பாளனாக பன்முகத் தளத்தில் செயல்பட முயற்சித்தவன். இணையத்தில் அவனதுப் பதிவுகள் கூர்தீட்டிய ஆயுதமாய் பயணித்தது. அவன் சொற்களில் பொதிந்திருந்த வெக்கையும் விசையும் காந்தப்புலமாய் பலரையும் ஈர்த்தது.
வலதுசாரி தத்துவமும் இயக்கங்களும் தங்களைப் புனரமைத்துக் கொண்டு – வைதீகத்தின் இன்றைய வடிவமாய் உருப்பெற்று – அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள் தொட்டு இந்துத்துவத்திற்கு எதிராக ஆயுதபாணியாய் களத்தில் நின்றான்.
புதிய அறிவியல்த் தரவுகளுடன் உலகளாவிய அனுபவச் செறிவுடன் இளமைத் துடிப்போடு இந்துத்துவ எதிர்ப்பில் முன்னணியில் நிற்பது மார்க்சியம். அரசியல், சமூகம், பொருளாதாரம் எனும் முத்தளத்தில் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கதான தத்துவச் செறிவும் நடைமுறைத் திட்டமும் கொண்டது மார்க்சியம்.
தோழர் கருணா வைதீக எதிர்ப்பு மரபின் கண்ணியில் தன்னைப் பொருத்திக் கொண்டவன். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டான். தனது மரணத்தின் போது ‘நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்’ என்று அறிவித்துக் கொண்டான். கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் முழு நேர ஊழியராகத் தன்னை ஒப்புக் கொடுத்தான்.
நவீன இந்துத்துவத்தின் வளர்ச்சி சமூகத்தின் அறச் சிந்தனையைக் காவு வாங்கிவிட்டது. அதிகாரத் திமிரோடுதான் எப்போதும் மக்களை அணுகுகிறது. தாங்களே எப்போதும் வெற்றியாளர்கள் என்று அறிவித்துக் கொள்கிறது. எனவேதான் கருணா அதிகாரத்திற்கு எதிராகவும் அற உணர்வோடும் தோல்வியால் அணுக முடியாத கொண்டாட்ட மன நிலையோடும் மக்களோடு இணைந்து நிற்கிறான்.
இந்துத்துவத்திற்கு எதிரான அரசியல் வண்ணங்களைச் சேர்த்து குழைத்துக் குழைத்து ஆனந்தம் அடைகிறான். மிகுந்த அழகியலோடும் எக்காளச் சீற்றத்தோடும் இணையத்தில் எதிர் வினை ஆற்றுகிறான். மார்க்சியக் கருத்தியலோடு தன் நாடி நரம்பெங்கும் இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராகச் சுருதி கூட்டுகிறான். இந்தியாவில் ஓர் அறிவுப் புரட்சிக்காக ஆள் திரட்டுகிறான்.
கருணாவின் தனிமனித ஆளுமையையும் தனித்திறமையையும் உருவாக்கியது அவன் ஏற்றுக் கொண்டத் தத்துவமும் அவன் ஒப்புக் கொடுத்த இயக்கமும். கூடுதல் கவனம் செலுத்தி அதை வளர்த்தெடுத்து வளப்படுத்திக் கொண்டவன் அவன். ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைக் குரல்களின் உந்து விசையாக வரலாறு நெடுகிலும் கருணா புதைந்து கிடக்கிறான். விதைகளாக……… வேர்களாக…. விழுதுகளாக.! கருணாவின் நினைவுகளுக்குச் செவ்வணக்கம்!