ஆடுகளை அமைதி படுத்துதல்: பிரச்சாரம் எப்படி செயல்படுகிறது – தமிழில் க.ஆனந்தன்
1970களில், நான் ஹிட்லருக்கு முன்னணி பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவரான ரேனி ரீபென்ஸ்தால் அவர்களை சந்தித்தேன், அவரின் காவியமான படங்கள் நாஜிக்களை மகோன்னதமானவர்களாக சித்தரித்திருக்கும். நாங்கள் இருவரும் கீன்யாவில் ஒரே தங்கும் விடுதியில் தங்கியிருக்க வேண்டியிருந்தது, அங்கு அந்த பெண்மணி ஒரு புகைப்படம் எடுக்கும் பணிக்காக வந்திருந்தார், அவர் ஹிட்லரின் இதர நண்பர்களுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து தப்பி வந்திருந்தார். அந்தப் பெண்மணி என்னிடம் தெரிவித்தது, அவருடைய படங்களில் ‘நாட்டுபற்று செய்திகள்’ இடம்பெற்றதிற்கு ‘மேலிடத்திலிருந்து வந்த ஆணைகள்’ காரணம் அல்ல, மாறாக, அவை ஜெர்மன் பொதுஜனத்தின் “அடிபணியும் வெற்றிடம்” (ஆட்டுமந்தை போல் என்கிறார்மொர்) பொறுத்தே இருந்தது என்றார்.
“அவர்களில், தாராளவாதிகளும், படித்த பூர்ஷுவாக்களும் இருந்தார்களா” என நான் வினவியதற்கு, “ஆம், குறிப்பாக அவர்கள்” என்றார் அவர்.
நான் சுற்றி பார்க்கும் போது தற்போது மேற்கத்திய சமூகங்களை பிரச்சாரங்கள் விழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நான் இதைப் பற்றி நினைக்கிறேன்.
நிச்சயமாக நாம் 1930 களின் ஜெர்மனியிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறோம். நாம் வாழ்வது தகவல்களின் சமூகங்களில், நாம் சர்வதேசிய வாதிகள். நாம் எந்த காலத்திலும் இவ்வுளவு அறிந்திருக்கவில்லை, இவ்வுளவு அதிகமாக தொடர்பு இருந்ததில்லை, இதைவிட சிறந்த வகையில் தொடர்பில் இருந்ததில்லை.
நாம் அப்படித்தானா? அல்லது நாம் ஊடக சமூகத்தில் வாழ்கிறோமா, அங்கு மூளை சலவை நயவஞ்சகமாகவும், இடைவிடாமலும், நடைபெறுகிறதா? உணர்வுகள் நாட்டின் தேவை களுக்கும் பொய்களுக்கும் அல்லது கார்ப்பரேட் சக்திகளுக்கு ஏற்ப வடிகட்டப்படுகிறதா?
ஐக்கிய அமெரிக்கா மேற்கத்திய ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேற்குலகின் 10 முதன்மையான ஊடகங்களில் 9 நிறுவனங்கள் வட அமெரிக்க கண்டத்தில் உள்ளன. இண்டர்நெட் மற்றும் சமூக ஊடகங்கள் -கூகுள், முகநூல், டுவிட்டர்-ஆகியவை பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கு சொந்தமானவை, அமெரிக்கர்களால் கட்டுபடுத்தப்படுபவை.
என்னுடைய வாழ்நாளில், அமெரிக்கா தூக்கி எறிந்தது அல்லது தூக்கி எறிய முயன்றது 50க்கு மேற்பட்ட அரசுகளை, அவைகள் பெரும்பாலும் ஜனநாயக பூர்வமாக தேர்தெடுக்கப்பட்டவை. அது 30க்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்களில் தலையிட்டுள்ளது. அது 30 நாடுகளின் மக்கள் மீது குண்டுகளை வீசியுள்ளது, அந்த நாடுகள் பெரும்பாலும் ஏழை நாடுகள், இதற்கெதிரான பாதுகாப்பு இல்லாதவர்கள், 50 நாடுகளின் தலைவர்களை கொலை செய்ய முயன்றுள்ளது. 20 நாடுகளில் அது விடுதலை இயக்கங்களை அடக்க போர் நடத்தியுள்ளது.
இத்தகைய படுகொலைகளின் அளவும், அவற்றின் பரந்துபட்ட தன்மையும் பெரும்பாலும் சொல்லப்படவில்லை, கவனத்தில் கொள்ளவில்லை மேலும் அதற்கு காரணமானவர்கள் இன்னமும் ஆங்கில-அமெரிக்க அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
காதாசிரியர் ஹரால்டு பிண்டர் இறப்பதற்கு முன் ஆண்டுகளுக்கு முன் 2008ல் இரண்டு அசாதாரணமான உரைகளை நிகழ்த்தினார், அது அமைதியை உடைத்தது :
“யு. எஸ். வெளியுறவுக் கொள்கையை சிறப்பாக கீழ்கண்டவாறு விளக்கலாம் . நீ எனது கு.யை முத்தமிடு அல்லது நான் உனது தலையில் காலால் உதைப்பேன். அது அந்தளவுக்கு எளிமையானது அந்தளவுக்கு முரட்டுதனமானது. அதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அது நம்பமுடியாத அளவிற்கு வெற்றிகரமாக இருந்தது. அது தவறான தகவல்களை அளிக்க அமைப்புகளை கொண்டிருந்தது, அது வெறிக்கூச்சலை பயன்படுத்தும், மொழியை திரிக்கும், அது ஏற்றுக் கொள்ள வைக்க முயல்வது போல் காட்டும், ஆனால் அவையனைத்தும் உண்மையில் பொய்மூட்டைகள். அது ஒரு வெற்றிகரமான பிரச்சாரம். அவர்களிடம் பணம் உள்ளது, அவர்களிடம் தொழிற்நுட்பம் உள்ளது, அவர்களிடம் அவர்கள் செய்த செயல்களிலிருந்து தப்பிவிட சகல வழிகளும் உள்ளது, ஆகவே அதை அவர்கள் செய்கிறார்கள்.
பிண்டர் நோபல் பரிசை ஏற்றுக் கொண்டு பேசிய போது இதைத் தெரிவித்தார் : அமெரிக்காவின் குற்றங்கள் அமைப்புரீதியிலானவை, மாறாதவை, கொடூரமானவை, வருத்தப்படாதவை, ஆனால் உண்மையில் மிகச் சில மக்கள் மட்டுமே அதைப் பற்றி பேசியுள்ளனர். நீங்கள் இதனை அமெரிக்காவிடம் கொடுத்திருக்க வேண்டும். அது உலகம் முழுவதும் துல்லியமாக அதிகாரத்தை பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறது, ஆகவே அது உலகம் முழுவதற்குமான நன்மை செய்பவர்கள் போல முகமூடி அணிந்து சுற்றிவருகிறது. அது மிகவும் புத்திசாலித்தனமான, சிலசமயம் நகைப்பாகவும், மிகவும் வெற்றிகரமாக ஹிப்னாசிஸ் செய்கிறது.
பிண்டர் எனது நண்பர் மற்றும் கடைசியான சிறந்த அரசியல் துறவி-அதாவது மறுதலிக்கும் அரசியல் பண்படுத்துவதற்கு முன், நான் அவரிடம் “ஹிப்னாசிஸ்” என்பது ரேனி ரீபென்ஸ்தால் சொல்லும் “அடிபணியும் வெற்றிடமா” என்று வினவினேன். அதற்கு அவர் “ஆம் ” என்றார்.
நமது அமைப்புகளான கார்ப்பரேட் ஜனநாயகத்தில், போர் என்பது பொருளாதார அவசியம், அது, பொதுத்துறை மான்யத்திற்கும் தனியார் துறை லாபத்திற்குமான பொருத்தமான திருமண பந்தம், முதலாளிகளுக்கு சோசலிசம், ஏழைகளுக்கு முதலாளித்துவம், 9/11க்குப் பிறகு யுத்த தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் விண்ணில் பறந்தன. மேலும் இரத்தம் சிந்தப்பட இருக்கிறது, அது தொழிலுக்கு மிகவும் உகந்தது.
இன்று மிகவும் லாபகரமான போர்களில் ஒவ்வொன்றுக்கும் அவைக்கென பிரத்யோக பிராண்ட் உள்ளது. அந்த யுத்தங்கள் “என்றென்றைக்குமான யுத்தங்கள்” என்றழைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், ஈராக், ஏமன், தற்போது உக்ரைன். இவையனைத்துமே பொய் மூட்டைகளை அடிப்படையாகக் கொண்டவை.
ஈராக் மிகவும் இழிவான உதாரணம், அதனுடைய பேரழிவு ஆயுதங்களுக்காக யுத்தம், அது கடைசிவரை இல்லவே இல்லை. நேட்டோ 2011ல் லிபியாவை அழித்ததிற்கு பெங்காசியில் நடைபெற்ற கொன்றுகுவிப்பு காரணம் என நியாயப்படுத்தப்பட்டது, ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை , ஆப்கனிஸ்தான் 9/11க்கு வசதியான பழிவாங்கல் நடவடிக்கை எனப்பட்டது, ஆப்கான் மக்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இன்று, ஆப்கானிஸ்தான் பற்றிய செய்திகளென்றால் -தாலிபான்கள் எந்தளவுக்கு கொடூரனமானவர்கள் என்பதே-ஜோ பைடன் ஆப்கான் வங்கிகளின் ரிசர்வ் நிதியான 7 பில்லியன் டாலர்களை திருடிக் கொண்டதும், அதனால் ஆப்கான் மக்கள் பரந்து பட்ட அளவில் துயரங்கள் சந்திப்பதும் செய்திகள் கிடையாது. சமீபத்தில் வாஷிங்டனிலிருந்து செயல்படும் தேசிய பொது வானொலி இரண்டு மணி நேரம் ஆப்கனிஸ்தான் பற்றிய நிகழ்ச்சியை ஒலிபரப்பியது, அதில் அங்கு பட்டினியால் வாடும் மக்களைப் பற்றி 30 விநாடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஜூன்மாதம் நடைபெற்ற நேட்டோ வின் உச்சிமாநாட்டில், இந்த அமைப்பு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது, ஒரு யுத்த உத்தி ஆவணத்தை நிறைவேற்றியுள்ளது, அந்த ஆவணத்தின்படி ஐரோப்பாவை மேலும் இராணுவ மயமாக்கி, இரஷ்யா மற்றும் சீனாவுடனான போர்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்கிறது. அது தனது சக அணு ஆயுத போட்டியாளர்களுடன் பலதளங்களில் போர் புரிதல் பற்றி பரிந்துரைக்கிறது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது அணு ஆயுத யுத்தம் பற்றி பேசுகிறது.
“நேட்டோவின் விரிவாக்கம் வரலாற்று வெற்றியாக உள்ளது” என அந்த ஆவணம் தெரிவிக்கிறது.
நான் அவற்றை நம்பமுடியாமல் படித்தேன்.
“அந்த வரலாற்று வெற்றியின்” அளவுகோல்தான் உக்ரைனில் நடைபெறும் போர், அது பெரும்பாலும் செய்தியல்ல, ஆனால், ஒருதலை பட்சமான, துதிபாடும் தேசிய வெறிக்கூச்சல், திரித்து கூறுதல், சில தகவல்களை வேண்டுமென்றே விட்டுவிடுவது ஆகியனவே.
கடந்த எட்டு வருடங்களாக உக்ரைனில், இரஷ்யாவின் எல்லைக்கு அருகில் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டதிற்கும், அவர்களின் இருப்பிடங்கள் கிரிமினல்தனமாக அழிக்கப்பட்டதிற்கும் எதிர்வினையாக பிப்ரவரியில் இரஷ்யா உக்ரைன் உள்ளே நுழைந்தது.
2014ஆம் ஆண்டில் அமெரிக்கா, உக்ரைனில் ஒரு ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜனநாயக ரீதியில் தேர்தெடுக்கப்பட்ட, ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுபவரை வெளியேற்றிவிட்டு, அவருக்கு பதிலாக தங்கள் நபர் ஒருவரை அதிகாரத்தில் நிருத்தி வைத்தனர்.
சமீப காலத்தில் அமெரிக்காவின் “டிபன்டர் ஏவுகனைகளை” கிழக்கு ஐரோப்பாவில், போலந்து ஸ்லோவேனியா, செக் குடியரசு, நிச்சமயாக ரஷ்யாவை குறிவைத்தே நிறுத்தப்பட்டு, அதே சமயம் அதற்கு இணையாக, பொய்யான வாக்குறுதிகளை பல காலமாக, 1990ல் ஜேம்ஸ் பேக்கர் கர்ப்பசேவ் விடம் நேட்டோவை ஜெர்மனிக்கு அப்பால் விரிவு படுத்த மாட்டோம் என்பது தொடங்கி வழங்கி வருகிறது.
உக்ரைன் போரின் முகப்பு களம். நேட்டோ திறமையாக அந்த எல்லை நாட்டை வந்தடைந்துவிட்டது, அந்த நாட்டின் வழியே ஹிட்லிரின் படைகள் சூறாவளித் தாக்குதலை 1941ல் மேற்கொண்டன, அந்த போரில் சோவியத் யூனியனில் 23 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர்,
கடந்த டிசம்பரில் இரஷ்யா தொலைநோக்க பார்வையுடன் ஐரோப்பாவின் பாதுகாப்பு திட்டம் ஒன்றை முன்மொழிந்தது, மேற்கத்திய ஊடகங்களில் இது நிராகரிக்கப்பட்டது, கேலி செய்யப்பட்டது, மூடிமறைக்கப்பட்டது. அந்த ஆலோசனையை வரிக்கு வரி படித்தது யார்? பிப்ரவரி 24 தேதியன்று உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் ஜெலின்ஸ்க்கி அமெரிக்கா உக்ரைனுக்க ஆயுதங்களை வழங்கி பாதுகாப்பு வழங்காவிடில் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதாக, மிரட்டல் விடுத்தார். இதுவே அமைதி குலைவதற்கு முன் கடைசி ஆத்திரமூட்டல்.
அதே நாளில் இரஷ்யா படைகள் உக்ரைனுக்குள் சென்றது- மேற்கத்திய ஊடகங்கள் இதனை ஆத்திரமூட்டலற்ற பிறவிக்குணத்தால் அவப்பெயர் என்று வர்ணித்தன, வரலாறு, பொய்கள், அமைதி ஆலோசனைகள், மின்ஸ்க் நகரில் டான்பாஸ் பகுதிக்காக ஏற்படுத்தப்பட்ட புனிதமான ஒப்பந்தகள் இவையனைத்தும் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.
ஏப்ரல் 25ஆம் தேதி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லாயிட் ஆஸ்டின்,” கியவ்” (உக்ரைன் தலைநகர்- மொர்) நகருக்கு பறந்து சென்றார், அங்கு அவர் அமெரிக்காவின் நோக்கம் இரஷ்ய பெடரேஷனை அழிப்பது என்றார், அதற்கு அவர் பயன்படுத்தி வார்த்தை ‘பலவீனப்படுத்துவது’. அமெரிக்கா விரும்பிய போர் அதற்கு கிடைத்துவிட்டது, அந்த யுத்தத்தை நடத்துபவர், அமெரிக்காவால் நிதி அளிக்கப்பட்டவர், ஆயுதந்தரித்த போலி மற்றும் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளும் சிப்பாய்.
இவை எதுவுமே மேற்கத்திய வாசகர்களுக்கு விளக்கப்படவில்லை.
இரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது வேண்டுமென்றே மேற்கொண்டது, மன்னிக்க முடியாதது, ஒரு சுயாதிபத்திய நாட்டின் மீது படையெடுப்பது குற்ற செயலாகும். இதற்கு எந்த “ஆனாலும்” கிடையாது- ஒன்றே ஒன்றைத் தவிர,
உக்ரைன் யுத்தம் எப்போது ஆரம்பித்தது அதனை ஆரம்பித்தது யார்? ஐக்கிய நாடுகள் சபையின்படி, 2014 முதல் இந்த ஆண்டு வரை 14,000 மக்கள் கியவ் அரசு நடத்திய சிவில் யுத்தத்தில் டான்பாஸ் பகுதியில் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலான தாக்குதல்கள் நவீன நாஜிகளால் மேற்கொள்ளப்பட்டது.
2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐடிவி தொலைகாட்சியின் ஒரு செய்தி தொகுப்பை, ஜேம்ஸ் மாட்டீஸ் என்ற புகழ்பெற்ற நிருபர் வழங்கியதை பாருங்கள், மரியபோல் நகரின் சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரும் காயமடைந்தார், அந்த தாக்குதலை நடத்தியது உக்ரைனின் அசவ் பட்டாலியன் (நவீன நாஜிக்கள்).
அதே மாதத்தில் டஜன் கணக்கான இரஷ்ய மொழி பேசுபவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர் அல்லது எரியூட்டப்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தனர், ஒடீசா நகரில், அவர்கள் இருந்த தொழிற்சங்க கட்டிடத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது, பாசிச அடியாட்கள், நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டவரும், பண்டைய மொழி பேசுபவர்களின் எதிரியான வெறிபிடித்த ஸ்டீபன் பண்டேராவின் அடியாட்கள் அவர்கள். நியூயார்க் டைம்ஸ் பண்டாராவின் இந்த அடியாட்களை தேசியவாதிகள்’ என்றழைத்தது.
“இந்த நெருக்கடிக்கு கால கட்டத்தில் நமது நாட்டின் வரலாற்றுப் பணி ” என்ற அந்திரேய் பைல்ட்ஸ்கி இவர் அசவ் பட்டாலியன் நிறுவனர், “உலகத்தின் வெள்ளை இனங்கள் அவர்களின் இருத்தலுக்கான கடைசி சிலுவைப் போரில் தலைமை ஏற்று செமிடிக் இனங்களால் தலைமை தாங்கப்படும் மனிதர்களை விட கீழான பிறவிகளை எதிர்க்க வேண்டும்”.
பிப்ரவரி மாதத்திலிருந்து தங்களை தாங்களே ‘செய்தி கண்காணிப்பாளர்கள்’ என நியமித்துக் கொண்டவர்கள் தூக்கி நிறுத்த முயலுவது, (இவர்கள் பெரும்பாலும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகளிடம் நிதியுதவி பெறுபவர்கள்) உக்ரைனில் நவீன நாஜிக்கள் இல்லை என்ற அபத்தத்தை.
“ஏர் பிரஷிங்” என்ற பதம் ஒரு காலத்தில் ஸ்டாலின் தனக்கு வேண்டாதவர்களை வெளியேற்றும் போது பயன்படுத்தப்பட்டது, தற்போது அதுவே முக்கிய செய்தி நிறுவனங்களின் கருவியாகிவிட்டது.
ஒரு பத்தாண்டிற்குள் ‘நல்ல சீனா’ “ஏர் பிரஷ்” செய்யப்பட்டு ‘மோசமான சீனா’ அதற்கு பதிலாக வந்துவிட்டது. அது உலகத்தின் தொழிற்கூடம் என்பதிலிருந்து புதிதாக மொட்டவிழும் சாத்தான் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இதற்கு எதிரான ஏராளமான பிரச்சாரங்கள் அமெரிக்காவிலிருந்துதான் தொடங்குகிறது, அது அதன் பிறகு அமெரிக்காவின் போலிகளாலும், “சிந்தனை குளங்கள்” மூலமாகவும் பரப்பப்படுகிறதுஇழிவான ஆஸ்திரேலியாவின் “ஸ்டேரேடஜிக் பாலிசி இன்ஸ்டிடியுட்” போன்றவைகள், இவை யுத்த தளவாட உற்பத்தி நிறுவனங்களின் குரலாக ஒலிப்பவை, மேலும் பேராசை பிடித்த பத்திரிக்கையாளர் பீட்டர் ஹார்ட்சர், இவர் சண்டெ மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையின் நிருபர் சீனாவிற்கு ஆதரவாக பேசுபவர்களை, எலிகள், ஈக்கள், கொசு மற்றும் குருவி என்றழைப்பார், இந்த “பூச்சிகள்” அழிக்கப்பட வேண்டும் என கூறுவார்.
மேற்கு உலகில் சீனாவைப் பற்றிய செய்திகள் அனைத்துமே பீஜிங் அச்சுறுத்தல் பற்றி மட்டும்தான். “ஏர் பிரஷ்” செய்யப்பட்டிருப்பது சீனாவைச் சுற்றிலும் 400 அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளன என்பதை, அது ஆயுதங்களால் ஆன நெக்லஸ் போன்று ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்கி பசுபிக், தென்கிழக்கு ஆசியா, கொரியா, ஜப்பான் வரை நீள்கிறது, ஜப்பானியத் தீவான ஒகினவானா மற்றும் கொரிய தீவான ஜெஜூ ஆகியன மருந்து கெட்டிக்கப்பட்ட பீரங்கி போல சீனாவின் முக்கிய தொழிற்நகரத்தை மிக மிக அருகிலிருந்து குறிவைத்துள்ளன. பெண்டகான் அதிகாரி ஒருவர் இதைப் பற்றி குறிப்பிடும் போது சீனாவிற்கான தூக்கு கயிறு என்று வர்ணித்தார்,
பாலஸ்தீனம் எனக்கு நினைவுக்கு தெரிந்த நாள் முதலாய் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது. பிபிசி யைப் பொறுத்தவரை அது இரண்டு முரண்பட்ட கருத்துகளால் ஏற்பட்ட மோதல் அவ்வுளவே. நவீன காலத்தில் மிக நீண்ட காலத்திற்கு, மிகவும் மிருகத்தனமான, சட்டவிரோதமான இராணுவ ஆக்கிரமிப்பு பற்றி தனது செய்திகளில் குறிப்பிடுவதே இல்லை.
தாக்கப்படும் ஏமன் மக்கள் செய்திகளில் இடம் பிடிப்பதே இயலாத காரியம். அவர்கள் ஊடகத்திற்கு மக்களல்ல, சவுதி அமெரிக்காவின் கொத்து குண்டுகள் மூலம் குண்டு மழை பொழிய வைக்கும் போது, குறி வைக்கும் சவுதி இராணுவ அதிகாரிகளின் அருகில் பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் இருந்து குறிவைப்பது குறித்து யோசனைகளை பகிர்ந்து கொள்ளும்போது, ஏமனில் 5 லட்சம் குழந்தைகள் உணவின்றி வாடுகின்றன.
இவ்வாறு சில செய்திகளை தவிர்ப்பது மூலம் மூளைச் சலவை செய்வது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் உலகப் போரில் மனிதர்களை(பிரிட்டன்) கசாப்பு செய்த செய்திகளை அமுக்கிய நிருபர்களுக்கு ”சர்” பட்டம் வழங்கப்பட்டது, அதன் பிறகு அவர்கள் அதனை தங்களது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்தனர். 1917ஆம் ஆண்டு மான்செஸ்டர் கார்டியன் பத்திரிக்கையின் ஆசிரியர் சி. பி. ஸ்காட் அன்றைய பிரிட்டன் பிரதமர் லாயிட் ஜார்ஜ் அவர்களிடம் “மக்கள் (உண்மையை) தெரிந்து கொண்டால், நாளையே போரை நிறுத்திவிடுவார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாது, அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை” என்றார்.
மக்களையும் நிகழ்வுகளையும் இதர நாடுகளிலுள்ளவர்கள் இவர்களைப் பார்ப்பது போல் இவர்கள் அவர்களைப் பார்க்க மறுப்பது மேற்குலகின் ஊடக வைரஸ், இது கோவிட் போலவே அவ்வுளவு அழிவு சக்தி கொண்டது. இது உலகை நாம் ஒரு வழியாகக் காட்டும் ஆடி வழியே பார்ப்பது போன்றது, அந்த ஆடியில் “நாம்” என்றால் “ஒழுக்கம், தீமையற்றவர்கள்” அதே சமயம் “அவர்கள் அவ்வாறில்லை “. இது ஆழமாக ஏகாதிபத்திய பார்வை.
சீனாவிலும் இரஷ்யாவிலும் ஒரு வாழும் வரலாறு உண்டு என்பது அரிதாகக்கூட சொல்வதில்லை, அரிதாகக்கூட புரிந்து கொள்ளவும் முயல்வதில்லை. விளாதிமீர் புடின் என்றால் அடல்ப் இட்லர்,
ஜீ ஜிங் என்றால் பின்பு மான் சூ. காலத்தால் அழிக்க முடியாத சாதனைகளான, அருவருக்கத்தக்க ஏழ்மையை ஒழித்த சாதனையை யாருக்கும் தெரியாது. இது விபரீதமானது இழிநிலையானது.
நாம் எப்போது புரிந்து கொள்ள நம்மை அனுமதிக்கப் போகிறோம்? பத்திரிக்கையாளர்களை தொழிற்சாலை போன்று பயிற்றுவிப்பது இதற்கு தீர்வல்ல. டிஜிட்டல் கருவிகள் இதற்கான மந்திரக் கோலும் அல்ல. அது ஒரு வழிதானேத் தவிர அதுவே முடிவல்ல, அது டைப்ரைட்டரில் ஒரு விரலால் அடிப்பது போன்றது,
சமீப காலங்களில் சில மிகச் சிறந்த பத்திரிக்கையாளர்கள் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அதற்கு “டிபன்ஸ்டேரேட்டட்” (Defenstated) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் சில ‘கிறுக்கு பிடித்த’ பத்திரிக்கையாளர், அரசுக்கு எதிரான பத்திரிக்கையாளர், உண்மை விளம்பிகள் என இவர்களுக்குகூட இடமிருந்தது இன்று இடமில்லை.
ஜூலியன் அசாஞ் வழக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. ஜூலியனும் விக்கிலீக்ஸ்ம் கார்டியன் பத்திரிக்கைக்கு பரிசுகளையும் வாசகர்களையும் அளித்த போது “நியூயார்க் டைம்ஸ்” மற்றும் இதர சுயமுக்கிய ஆவண நாளிதழ்களில் அவர் கொண்டாடப்பட்டார்.
நிழல் அரசு(சிஐஏ போன்ற அமைப்புகள்- மொர்) இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அவருடைய கனிணி ஹார்டு டிஸ்க் அழிக்கப்பட வேண்டும் என்று மிரட்டிய போது, அவரது பெயருக்கு களங்கம் விளைவித்த போது, ஜூலியன் மக்களின் எதிரியாக்கப்பட்டார். (அன்றைய) உதவி ஜனாதிபதி பைடன் அவரை “அதிநவீன தொழிற்நுட்ப பயங்கரவாதி” என்றழைத்தார். ஹில்லாரி கிளிண்டன், “நாம் இந்த மனிதரை டிரோன்கள் மூலம் அழிக்க முடியாதா?” என்று கேட்டார்.
தொடர்ந்து கொண்டிருக்கும் ஜூலியன் அசான்ஜ்க்கு எதிரான துஷ்ப்பிரயோகம் மற்றும் அவதூறுகள் -ஐ. நா. வின் சித்திரவதைக்கு எதிரான சிறப்பு தூதர் இதனை “மாப்பிங்” என்றழைக்கிறார்- இது சுதந்திரமான பத்திரிக்கைகள் தரந்தாழ்ந்து இருப்பதை காட்டுகிறது. நமக்கு அவர்கள் யார் என தெரியும். நான் அவர்களை இவர்களோடு கூட்டணியில் இருப்பவர்கள் என்பேன்.
பத்திரிக்கையாளர்கள் இதற்கு எதிராக எப்போது நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள்? இதற்கெதிரான உண்மையை உரத்து பேசும் பல பத்திரிக்கைகள் தற்போதே வலைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சிறந்த பத்திரிக்கையாளர் ராபர்ட் பேரியால் நிறுவப்பட்ட கன்சார்சியம் நியூஸ், மாக்ஸ் ப்ளுமென்தால் நடத்தும் கிரேசோன், மிண்ட் பிரஸ் நியூஸ், மீடியா லென்ஸ், டிகிளாசிபைடு யூகே, அலபோராடா, எலக்ட்ரானிக் இன்டிபிடா இன்னும் பலர் உள்ளனர் விடுபட்ட பெயருக்குரியவர்கள் என்னை மன்னித்துவிடட்டும்.
என்று எழுத்தாளர்கள் எழுந்து நிற்பார்கள், அவர்கள் 1930 களில் பாசிசம் தலைதூக்கிய போது அதற்கு எதிராக நின்றதைப் போல்? என்று சினிமா எடுப்பவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள், அவர்கள் 1940 களில் பனிப்போருக்கு எதிராக நின்றதைப் போல்? என்று நையாண்டி செய்பவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள் அவர்கள் சென்ற தலைமுறையில் நின்றதைப் போல்?
கடந்த 82 வருடங்களாக சரியானது என்ற நினைப்பில் ஊறிப் போனவர்களுக்கு, அதாவது கடைசி உலகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ பதிப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, ரெக்கார்டுகளை நேர்படுத்திட இது சரியான தருணமில்லையா, அவர்கள் தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தி, பிரச்சாரத்தை கட்டுடைக்க வேண்டாமா? அதற்கான அவசரம் முன்னெப்போதையும்விட இப்போது அதிகம்.
தமிழாக்கம் க, ஆனந்தன். Translation of article from Counter Punch September 8, 2022.