ஜேசு ஞானராஜின் கவிதைகள்

ஜேசு ஞானராஜின் கவிதைகள்




1
உணவு!
அந்தி மயங்கியது!
மேற்குத் தொடர்ச்சி மலை
மஞ்சளும் சிவப்புமாய் ஒளிரத் தொடங்கியது!
கழுத்தில் கட்டிய மணிகள் ஒலிக்க
மாடுகள் வீடு நோக்கி நடைபயின்றன!
ஆட்டுப் பட்டிக்குள்
ஏழு சுரங்களும்
ஏப்ரலின் அடுத்த மாதத்தைப்
பாடத் தொடங்கின!
ஓடையிலிருந்து வெளிவந்த
வாத்துக்கூட்டம்
வீட்டைப் பார்த்து விரைந்தன!
அம்பு வடிவில் பறக்கும் கொக்குகள்
கூடுநோக்கி போய்க்கொண்டிருந்தன!
வேப்பமர உச்சி
காக்கைக் கூட்டில் குஞ்சுகள்
கீச் கீச் சென
தாயைத் தேடிக் கொண்டிருந்தன!
வேகமாய் வீடு நோக்கி நடக்கும்
வேடனின் முகத்தில்
கொள்ளை சந்தோஷம்!

2
சுழற்சி!
சூரியனின் காந்தப் பார்வையில்
மோகம் கொண்டு மயங்கிய கடல்
கருமேகக் குழந்தை உருவாகிறது!
கடல் பால் கொண்ட
காதல் தோல்வியால்
கோபமான பெருங்காற்று
மழை மேகத்தை அலைக்கழிக்கிறது!
மிரண்டு போன கார்மேகம்
அழுது தீர்க்க நதி உருவாகிறது!
தன் குழந்தையை
உடனே கூப்பிட்டு
அடைக்கலம் கொடுக்கிறது கடல்!

3
கடன் கொடுத்த பணம்!
இரவு சாப்பாடு முடிந்து
முற்றத்திலிருந்த நார்க்கட்டிலில்
அமர்ந்திருந்தார் அப்பா!
வாசல் படியில் உட்கார்ந்து
வாகாக கால் நீட்டினாள் அம்மா!
வெற்றிலைப் பெட்டியைத் திறந்து
தோதான கொட்டைப்பாக்கை
அப்பாவுக்குத் தந்தாள்!
சுண்ணாம்பு பாக்கெட்டை
மெதுவாகப் பிதுக்கி
நுனி கிள்ளிய வெற்றிலையில்
வைத்து நீட்டினாள்!
பாக்கை கடித்துக் கொண்டே
விரித்த வெற்றிலையில்
சுண்ணாம்பைத் தடவி
வாயில் குதப்பினார் அப்பா!
திருவிழாவுக்கு வாங்கிய
தேன் குழல் மிட்டாய்
ஓலைப் பெட்டியில்
பாதி நிரப்பிய அடுப்பு குப்பை
துப்பட்டியாக மாறி இருந்தது!
கடைத்தெரு குப்புசாமி என்று
ஆரம்பித்தாள் அம்மா!
‘ம்’ கொட்ட ஆரம்பித்தார் அப்பா!
மேகத்துள் மறைந்திருந்த முழு நிலவு
அம்மாவின் கதையைக் கேட்க
மெதுவாக எட்டிப் பார்த்தது!
வானத்து நட்சத்திரத்தில் ஒன்று
கீழ்த்திசையில் ‘சர்ர்ர்’ரென்று இறங்கி மறைந்து போனது!
பக்கத்து கோவிலில்
மணி ஒன்பது அடித்தது!
இலங்கை வானொலியில்
ராக தீபம் முடிந்து
செய்தி பேசிக்கொண்டிருந்தது!
எதிர்வீட்டு ஆள் உயர மண் சுவரில்
வெள்ளை நிறப் பூனை யொன்று
பதுங்கிப் பாயத் தயாராகிக் கொண்டிருந்தது!
ஓட்டுக் கூரைக்குள்
ஒளிந்திருக்கும் சுண்டெலிக்கு
அதிர்ஷ்டம் இருந்தால்
பூனையின் பசியைத் தின்று
உடனடியாக கடவுளிடம்
பேச வாய்ப்பிருக்கிறது!
தெருவில் பால்காரரின் சத்தம்
தேய்ந்து மறைந்து போனது!
அம்மாவின் பேச்சில்
குப்புசாமி இறந்து போயிருந்தார்!
அப்பாவின் நாளைய சட்டையில்
ஆயிரம் ரூபாய்
காணாமல் போயிருந்தது!

4
இரவும் பகலும்!
இரவைத் தின்று கொண்டிருந்த
காலத்துக்கு அகோர பசி!
கதவைத் திறந்து
எட்டிப் பார்த்த சுக்கிரன்
பட்டென்று சாத்திக் கொண்டான்!
மீந்து போன இரவுகளை
கையில் எடுத்த நிலவன்
செய்வதறியாது திகைத்தான்!
நட்சத்திரங்களை ஊசியாக்கி
இரவைத் தைத்துக் கொடுத்தேன்!
என் கடவுள் நீதான்
என்ற சந்திரனை
மெதுவாகத் தின்று கொண்டிருந்தான் சூரியன்!
செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறேன் நான்!

5
கடவுளைக் காணும் ஆவலில் கடவுள்!
உலகம் முடியப் போகிறது!
கடவுள் வருகிறார்!
அந்த நபரின் குரல்
ஆகாயம் வரை கேட்டது!
உண்டியல்கள் வேகமாய் நிறைந்தன!
பண நோட்டுகளில்
காணிக்கைப் பெட்டிகள்
மூழ்கிக் கொண்டிருந்தன!
இதோ வந்து கொண்டிருக்கிறார்!
வந்தே விட்டார்!
குரலின் டெசிபல் கூடியது!
அனைவரும் வாசலைப் பார்த்தனர்!
கடவுளும் தான்!

6
தோட்டா சொன்ன ரகசியம்!
பட்ட்ட்ட்…………..
காது வரை வந்த ரகசியம்
அதோடு நின்று விட்டது!
எதுவும் புரியாது குழம்பிய மனம்
கண்களைப் படம் வரையச் சொன்னது!
கண்களின் கேள்விகளுக்கு
காது மௌனம் சாதித்தது!
நிலை அறியா மூளையோ
மதுவில் ஊறிய ஆப்பிள் காயாய்
கனத்துக் கிடந்தது!
சரக்…..சரக்…..சரக்!
வேகமாக நடக்கும் வேடுவனின்
தோள் பையில்
முயலின் சூடான ரத்தம்
இப்போது படம் வரைய ஆரம்பித்தது!

7
பால்!
நாற்காலியில் அமர்ந்து
பாட்டிலில் பால் குடித்தான் பேரன்!
பாட்டி படுக்கையில்
மேசைக்கரண்டியில் பால் குடித்தாள்!
முன்னது உள்ளே இறங்கியது!

8
தாரமும் தாசியும்!
தரையை மேயும் நிழலுக்கு
சூரியனும் விளக்கொளியும் ஒன்றுதான்
இருளைத் தொடும் வரை!

9
புதுக் கல்வி ஆண்டு!
எல்லா குழந்தைகளும்
தேர்ச்சி பெற்றனர்
கற்றுத் தந்த ஆசிரியரைத் தவிர!

10
நல்லாட்சி!
ஆணவப் படுகொலையை
ஆவணப் படுத்திய கடைசி தேதி
யாருக்கும் ஞாபகம் இல்லை!

11
மதம்!
அசோகரின் வாளால்
வெட்டுண்ட கிளியோபாட்ராவின் வீட்டில்
பௌத்தம் தூக்கிலிட்டுக் கொண்டது!

12
வாசலில் வாழைமரம் கட்டி
பந்தல் போட்டு மின்விளக்கு அலங்காரங்கள் செய்து
காய்கறிகள் வெட்டி
பதினாறு வகை
கூட்டுப் பொரியலுடன்
கறிசோறும் சாம்பார் ரசமும்
ரெடி பண்ணி
மாப்பிள்ளை பொண்ணுக்கான
மேடை அலங்காரமும் முடிச்சு
அரிசி பெட்டியுடன்
வாழைக்குலையும் ஏந்தி
மாமா மாமி சித்தப்பா சித்தி
பெரியம்மா பெரியப்பா
எல்லோரும் வந்திருக்க
செல்லக் குழந்தைகளின் உற்சாகத்துள்ளல்களில்
புத்தாடைகள் சரசரக்க
பாட்டியின் கைத்தடி மட்டும்
மூலையில் தனியாகக் கிடக்கிறது!

13
நிசப்தமான அந்த முன்னிரவில்
கொலுசு கட்டிய நீரோடை
சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது!
போட்டிக்கு மெட்டு கட்டிக்கொண்டிருந்தது
மாக்கிரி தவளை!
ஆயுள் முடியப் போகும்
தெருவோர ட்யூப் லைட் போல
விட்டு விட்டு
சத்தமிட்டுக் கொண்டிருந்தது
துள்ளிக் குதிக்கும்
கருப்பு நிற பாச்சான்!
விடாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது
சீமை உடையில் குடியிருக்கும்
மிரியான் வண்டு!
இந்நிலையில்-
அமைதியான சத்தத்துடன்
ஓடைக் கரையில் அமர்ந்து
தண்ணீரில் நனைந்து விளையாடும்
நான்கு கால்களில்
இரண்டு மட்டும் என்னுடையது!

14
இரவைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்து
நடந்து கொண்டிருந்தேன்!
கோட்டானும் அரவமும்
உணவு தேட தோதான நேரமான
இரவைத் திரும்பத் தர சொன்னது!
கல்லறைக்குள்ளிருந்து
வெளிவந்த ரத்த காட்டாரி
மக்களை பயமுறுத்த
இரவு தான் சரியென கேட்டது!
எரிந்து கொண்டிருந்த பிணம்
எழும்பி வந்து
இரவில் தான் சரியாக எரிய
முடியுமென யாசித்தது!
தர முடியாதென வேகமாக நடந்தேன்!
இரவு இல்லையேல்
என் வருமானம் கிடையாதென
ஏக்கமாய் வந்து நின்றான்
இரவுக் காவலாளி!
கக்கத்தில் இருந்த இரவை எடுத்து
சந்தோஷமாய் அவனிடம் தந்தேன்!

15
எல்லோரையும் காப்பாற்ற
வேண்டுபவனின் கையில்
குளித்து மாலை சூடிய பெரிய ஆடு!
அரிவாளுடன் வந்து கொண்டிருக்கிறார் கடவுள்!

16
ஜாஸ் இசையில் மிதந்த வெள்ளைக்காரனை
தமிழ்ப் பாவால்
மிரட்டி வெளுத்த
கருப்பு மீசைக்காரன்!

17
கை நிறைய பணம் இருந்தும்
செலவழிக்க முடியவில்லை
வங்கியில் பணம்
பட்டுவாடா செய்பவர்!

18
விதை நெல்லை மட்டும்
விட்டு சென்ற அப்பாவுக்கு
வாய்க்கரிசி போடக் கூட வழி இல்லை!
– இப்படிக்கு
வங்கியால் வீடு பூட்டி
சீல் வைக்கப்பட்டு
நடுத்தெருவில் நிற்கும்
விவசாயி குடும்பம்!

29
பீடை யென
ஒதுக்கப்பட்டவளுக்கு
நடு வீட்டில்
தடபுடல் விருந்து!
அன்று பாட்டியின் நினைவு நாள்!

20
பத்தி புகையும்
அப்பாவின் புகைப்படத்தின் முன்
உணவு படைக்கப்பட்டது!
தினமும் விரட்டப்படும்
பிச்சைக்காரனுக்கு
இன்று சிவப்புக் கம்பள வரவேற்பு!

-ஜேசு ஞானராஜ்,
ஜெர்மனி

நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது’ –  பிரவீன் ராஜா

நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது’ – பிரவீன் ராஜா




மொத்தம் 18 கட்டுரைகள்.

சாதியை பற்றிய புரிதல் கம்யூனிஸ்ட்களுக்கு அவ்வளவாக இல்லை என்ற புரிதலை மாற்றும் கட்டுரைகள் என நான் நினைக்கிறேன்.

தோழரி‌ன் பேச்சுகளை பெரும்பாலும் கேட்டதன் காரணமாக, புத்தகத்தை படிக்கும் போது, அவரின் குரல் வழியே படிப்பது போன்ற ஒரு உணர்வு.

100 பெரியார்கள் வேண்டும் என்றால் நமக்கு என்ன அதைவிட பெரிய புல் புடுங்குர வேளை இருக்க போகிறது என்ற வெளிப்படையான கேள்வி நடுநிலை என்னும் போர்வையில் வாழும் எலைட்கள் கன்னத்தில் பளீர் என்று அறைந்த வலியை கொடுக்கும்.

கல்வி என்பது அறிவின் வளர்ச்சியையும், சமூகத்துடன் சமமாக பழகும் குணத்தையும், பகுத்தறிவை வளர்க்கும் இடமாக இல்லாமல் போனதுக்கு தனியார் கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களின் வெட்டி தற்பெருமையுமே காரணம் என்பதை அரசு பள்ளி மாணவர்களின் பக்கம் நின்று பேசி இருக்கிறார்.

இறைவனின் படைப்பில் மனிதனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என தொடங்கிய வரிகள் போதும், கொள்கை புரிதலுடன் எவ்வளவு பேர் பயணிக்கிறார்கள் எ‌ன்று.

சாதி ஒழிப்பில் தலித் மக்களை அரசியல்படுத்துவதில் உள்ள சிக்கலையும், தலித் அல்லாதார் செய்யவேண்டிய சுய சாதி எதிர்ப்பு, சாதி மறுப்பு திருமணம் போன்ற முன்னெடுப்புகள் பற்றியும் அழகாக பேசி இருக்கிறார்.

தோழர் திருமாவின் இயக்க அரசியல் முதல் ஓட்டு அரசியல் பயணம் வரை இருந்த ஈர்த்த மற்றும் முரண்பட்ட விஷயங்கள் குறித்து பேசியது எல்லாம் அருமை.

இருக்கையில் உட்காரும் போது குத்தும் சின்னஞ்சிறு ஊசி உண்டாக்கும் வலியை அனைத்து கட்டுரையிலும் உணர்த்தி இருக்கிறார்…

அந்த வலி சாதியும் மதமும் முக்கியமாக கருதும் கூட்டத்திற்கு எதிராக மனித மாண்பினை மீட்கும் உண்மையான மனிதர்களை ஒன்றிணைக்கும் என்று நானும் அவரை போலவே நம்புகிறேன்.

– பிரவீன் ராஜா

நூல் : கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
விலை : ரூ.₹80
வெளியீடு : நூல்வனம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

தீண்டும் தீட்டு! கவிதை – பாங்கைத் தமிழன்

தீண்டும் தீட்டு! கவிதை – பாங்கைத் தமிழன்




எங்கள்
கண்கள் கூடத் தொட்டதில்லை;
கற்பகிரகத்தின் கதவுகளை!

நாங்கள்
எல்லாமும் சிந்திய
உழைப்பால் உருவான
கற்பக்கிரகத்தில்……
கடவுள்!

அபிஷேகங்களாலும்
அர்ச்சனைப் பூக்களாலும்
ஆனந்தப் படுகிறார்
ஆண்டவர்!

அபிஷேகப் பொருளும்
அர்ச்சனைப் பூக்களும்
நாங்கள் சிந்திய
வியர்வையிலும்
குருதியிலும் வந்தவை!

கற்பக்கிரகமும்
அய்யர் வீடும்
மணக்கிறது நாளும்
தீண்டும் தீட்டு….
கண்களுக்குத் தெரியாமல்!

– பாங்கைத் தமிழன்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்




“கடவுளின் விசித்திரம்”
***************************
பேராசை நிறைவேற பிரார்த்தனை,
நன்றாக வாழ்ந்திட நேர்த்திக்கடன்!
ஆனந்தமாய் வாழ அர்ச்சனை,
வேண்டியத அடைய வேண்டுதல்கள்!

கேட்டது கிடைத்தால் காணிக்கை,
ஆவல் கைகூடின் அபிஷேகம்!
தேவைகள் கிட்டின் தீமிதி,
ஆசைகள் நிறைவேற அலகு குத்தல்!

தோற்றால் தூற்றுவோம்
இழந்தால் இகழ்வோம்
அழிந்தால் அழுவோம்
நலிந்தால் நிந்திப்போம்!

ஆனால் ஆண்டவனோ?
எதை கொடுக்க வேண்டும்
எதை தடுக்க வேண்டும்
என்று என்றோ எழுதிவிட்டான்!

ஈதறியா பாழும் மனிதமனம்!
ஏனோ நொந்து நூடூல்சாகி
செத்து சுண்ணாம்பாகி
பட்டு கெட்டு பாழாகுதே!

இத்துன்பம் நீங்கிடவே
இறைவா நீ எனக்கு
மறுபிறவி என்றில்லா
மகத்தான வரம் தருக!

மனமுருகும் மார்கழி!
**************************
மறைந்தது மழை
நிறைந்தது பனி
உறைந்தது கரம்
விரைந்தது காலை!

மார்கழி கன்னியவள்
மாதம் முழுவதும்
மாந்தர்க்கு மனமுவந்து
மகிழ்ச்சி பலதந்தாள்!

பொங்கல் தந்தாள்
பொலிவு தந்தாள்
சுண்டல் தந்தாள்
சுரங்கள் தந்தாள்!

பக்தி தந்தாய்
பஜனை தந்தாய்
இசை தந்தாய்
இனிமை தந்தாய்!

ஒரு “பாவை” அருளிய
திருப்பாவை தந்தாள்!
திருவாசகன் அருளிய
திருவெம்பாவை தந்தாள்!

கோலங்கள் தந்திட்ட,
கோலவிழி மார்கழியே!
நின் குளிர் முயங்கினேன்!
என் மனம் மயங்கினேன்!

சுதந்திர சிறகுகள்.
***********************
கூடு பறவையும்,
கூண்டு பறவையும்!
கூடி பேசினால்
என்ன பேசும்??

கூடு பறவை கூறியது,
“நீ அடிமை! நான் ஆண்டான்!
நீ நாடி புசிப்பாய்,
நான் தேடி புசிப்பேன்!

நான் சிறகை விரிப்பேன்,
நீ சிறகை சுருக்குவாய்!
என் துணை என் விருப்பம்,
உன் துணை எவன் விருப்பம்?

எனக்கு எல்லையே இல்லை
உனக்கு எதுவுமே இல்லை!
என் வாழ்வு சுதந்திரம்,
உன் வாழ்வு இயந்திரம்!”
என கேலிபேசி சிரிக்க!

இரைக்கு ஆசைப்பட்டு
சிறைக்குள் ஏகினேன்!
சின்ன புத்தி மனிதன்
பசியை பயன்படுத்தி
பாழாக்கினான் என்னை!
சிறகிருந்தும் பறக்கவியலாது
குறைபட்டது என் உயிர்!”
என ஏக்கத்துடன் வருந்தியது
ஏமாந்த பறவை!

மரு உடலியங்கியல் பாலா.

நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன்

நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன்




தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஒரு நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில் பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன் தொடங்கி நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். இத்தகு படைப்பு கண்ணிகளில் எழுத்தாளர் மீனா சுந்தரும் சேருகிறார்.

பழநியில் உள்ள கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் மீனா சுந்தரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு “புலன் கடவுள் “ . கீழத்தஞ்சையில் பிறந்த கதாசிரியர் ,பழநியில் பேராசிரியராக இருக்கிறார் . புலம்பெயர்வு இவரது கதைகளிலும் எதிரொலிக்கிறது .பேராசிரியராக இருப்பினும் இத்தொகுப்பிலுள்ள இவரது படைப்புகள் பெரும்பாலானவை தமிழகத்துக்குள்ளே பிழைப்புக்காக புலம்பெயர்ந்த அடித்தட்டு மக்களைச் சுற்றியே அமைந்துள்ளதை உணரமுடிகிறது..

‘செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை ‘ எனும் கதை , அலுவலகத்தில் நிலவும் , லஞ்ச ஊழல் சூழலின் முடைநாற்றத்தை எடுத்துரைத்து காறி உமிழச் செய்கிறார். இக்கதையை வாசிப்பவர் எவரும் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுவாராயின் அவரது மூக்கிலும் மலம் நாற்றத்தை உணர்ந்து ஒதுங்குவார். அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் கதை. ஆனால் மஞ்சள்கொன்றைப் பூவைப் பார்க்கும்போதும் இந்தக் கதையை நினைவுக்கு வரும் ஆபத்துமுண்டு.

‘ பெருகும் வாதையின் துயரநிழல் ‘எனும் இரண்டாவது கதை தாயையும், தங்கையையும் ஸ்கூட்டர் விபத்தில் இழந்த சிறுவனின் எதிர்வினையும், அதன் விளைவாய் தந்தை படும் வாதையையும் , வாசக நெஞ்சுருக எடுத்துரைக்கிறார்.. அடுத்துவரும் , ‘மிதவை’ கிராமத்துப் பண்ணையார், கிராமத்து பொதுக்குளத்தை ஆக்கிரமித்து செய்யும் அக்கிரமத்திற்கு எதிராகப் போராடும் முதிய விவசாயியின் கதை.கீழத் தஞ்சையின் ஈரம் மணக்கிறது. ‘நியதி ‘ கதை, கொய்யாப்பழம் விற்கும் முதிய தம்பதி, அனாதைக் குழந்தைகளைத் வளர்த்து படிக்க வைத்து மேம்படுத்தும் சீலத்தையும் , அவர்கள் இருவரும் கொய்யாபழம் விற்கும் நியதியையும் சொல்கிறது. வாசக மனம் ஆயக்குடி கொய்யப்பழத்தைப் போல இனித்து மணக்கிறது.

இக்கதையைப் போலவே பழநி நகரப்பேருந்து நிலையத்தைக் களமாக வைத்து இயங்கும் இன்னொருகதை ‘ சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று…’ செருப்புத் தைக்கும் தொழிலாளி, தனது மகனைப் படிக்க வைத்து தனது பால்ய நண்பனைப் போல பெரிய அதிகாரியாக உயர்த்தவேண்டும் என்ற லட்சிய ஆவேசத்தில் தனது நண்பனின் நினைவாக இருக்கிறார். ஆனால் சென்னையிலிருந்து வரும் உயரதிகாரியான நண்பன் .பால்யத்தில் உதவிய தன்னையே மதிக்காமல் உதாசினப்படுத்துவதும் அல்லாமல் குடியும் கூத்துமாய் இருக்கிறார். தடமாறிய நண்பனைக் கண்டு சினந்தெழும் வீராவேசம் தான் கதை. ஒடுக்கப்பட்டவரெல்லாம் மனத்தால் ஒடுங்கியவரல்ல என்று சுருக்கென்று சொல்லும் கதை.

‘ உயிர்வேலி’, ‘ நெகிழ் நிலச்சுனை ‘ போன்ற கதைகள் கிராமாந்திர தாய்மார்களின் தாய்மையை இருவேறு கோணங்களில் உருக்கமாகச் சொல்லும் கதைகள். இதேபோல, ‘தீய்மெய் ‘, ‘பாத்தியம் ‘ என்ற இருகதைகளும் தந்தை பாசத்தையும், அர்ப்பணிப்பையும் இரு மாறுபட்ட கோணங்களில் வாசகமனம் நெகிழ எடுத்துரைப்பன . ‘தவிப்பின் மலர்கள் ‘ கதையும் தந்தை மகனுக்கிடையே நிகழும் பாசப்போராட்டத்தை நாகசுரக் கலைஞர் குடும்பத்தைக் களமாகக் கொண்டு சொல்வது. நாகசுரக் கலைஞர் , நாகசுரம் வாசிக்கும்போது அவரது மெய்ப்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார் மீனாசுந்தர்.

‘புலன் கடவுள் ‘கதை, தேநீரை ரசனையோடு அருந்தும் இளைஞனின் அனுபவத்தை அவனுக்கு அமையும் முரண்பட்ட குடும்பச் சூழலை மெல்லிய நகைச்சுவை மிளிர சுவையாக ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ’தருணம்’ கதை ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவனது பெற்றோரின் துயரங்களை நெகிழ்வாய் வாசகமனதுக்கு இடம்பெயர்க்கும் கதை.

கதாசிரியர் தமிழ்ப் பேராசிரியர் , செய்யுள் வழக்கு, நாடகவழக்கு, உலக வழக்கு என்று சொல்லும்முறை அறிந்தவர் . அவற்றை கதைச்சொல்லும் நடையில் அங்கிங்கெனாதபடி கலந்திருக்கிறார் . காவியத் தன்மையான வர்ணிப்புகளோடு கதைகளைத் தொடங்கினாலும், வாசிப்பை இடறாமல் கதைநிகழ்வுகளை அடுக்கி வாசிப்பை இயல்பாக நகரச் செய்கிறார். கவித்துவமான கதைத் தலைப்புகள் கதையின் உயிர்ப்பான முதன்மை பாத்திரங்களுக்கு முரண் நிலையிலிருந்து அணுகச் செய்கின்றன.இதற்கு ‘மாமிச வெப்பம் ‘ போன்ற கதைகளைச் சுட்டலாம்.

கதையில் சொல்லப்படும் உவமைகளும் ,படிமங்களும் கூட முரண் அழகோடு மிளிர்கிறது. திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் , ‘வராக பேரரசன் படைசூழ ஆட்சி செய்வதாகச் சொல்கிறார்.’ கண்ணகி அவிழ்த்த கூந்தலாக விரிந்து நீண்டு செல்கிறது முத்துப்பேட்டை சாலை,’என்கிறார் . ‘கிராமத்து தெருக்கள் மண்புழுக்களாக உழண்டு கிடக்கின்றன ’ ; ‘அதிர்ச்சியின் சவ்வூடுபரவல் ‘ இப்படி நீண்ட பட்டியலிடலாம். எனினும் கதையின் உணர்ச்சிவேகம் குறையாமல் நகர்த்துகிறார் கதைசொல்லி.

மீனாசுந்தர் கல்லூரி பேராசிரியர் என்பதால் , இவர் இன்னும் சிறப்பான கதைகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு தர வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை இக்கதைத் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது.

– ஜனநேசன்

நூல் : புலன் கடவுள் “ – சிறுகதை
ஆசிரியர் : மீனா சுந்தர்
விலை : ரூ.₹190/-
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

இருபத்திநாலு மணிநேர பகல் கவிதை – ஜேசு ஞானராஜ்

இருபத்திநாலு மணிநேர பகல் கவிதை – ஜேசு ஞானராஜ்




வாகை மரத்தடியில் தூக்கம்
சோகமாய் அமர்ந்திருந்தது!

தூரத்தில் இரவு
செத்துக் கிடந்தது!

தாகம் தேடிய தண்ணீர்
அழுது சோர்ந்த நிலவுக்கு
ஆதரவுக் கரம் நீட்டியது!

மல்லிகை மணமும்
ஜல் ஜல் ஒலியும்
சுதந்திரம் போனதாய் அரற்றின!

அரவான்களும் கோட்டான்களும்
பசியைத் தின்று கொண்டிருந்தன!

சோகம் நிரந்தரமாய்
இரவு காவலாளியிடம்
ஒட்டிக்கொண்டது!

மோகமும் விரக தாபமும்
இச்சையிடம்
கால நீட்டிப்புக் கேட்டன!

இருபத்திநாலு மணிநேரமும்
வேலைசெய்ய மறுத்து
கடவுளிடம் முறையிட்டது பகல்!

கடவுள் என்னைப் பார்த்தார்!
கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறேன் நான்!

– ஜேசு ஞானராஜ், ஜெர்மனி

உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி

உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி




“உழவுமாடுகளோடு
உதவாமலே
போன நிலங்களை
விளைநிலங்களாக
சமநிலைப் படுத்திக்கொண்டிருக்கிறார்
உணவுக் கடவுள் ”

“மாடுகள்
முன்னோக்கி
இழுத்துக்கொண்டு போக
பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்
பக்தன்
கைகளில்
கடவுளுக்கே
வழிகாட்டும்
மூக்கனாங்கயிற்றைப் பிடித்தவாறே ”

“பசியோடு
உலகத்தின்
உணவுகளையே
இழுத்துப் போகும்
மாடுகளின்
உணர்வுகளுக்காக
தானும்
பசியோடு நடக்கிறான்
பாய்மரப்
படகுகளைப்போல ”

“கொழ கொழச் சேற்றையெல்லாம்
புரதச் சத்து
உணவுகளாக
மாற்றிக்கொண்டிருக்கும்

உழுது வாழும்
மாடுகளும் உழவனும் ”

கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா அவர்களின் கவிதை – தமிழில்: ரமணன்

கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா அவர்களின் கவிதை – தமிழில்: ரமணன்




முகநூலில் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் ஜார்கண்ட் மாநில கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா அவர்களின் கவிதை வரிகளை பகிர்ந்திருந்தார். அவற்றை தமிழாக்கம் செய்திருக்கிறேன். இவர் ஓரோன் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர். இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். ‘anger’ மற்றும் ஜடோன் கி ஜமீன் என்கிற இரு மொழி கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் ஆதிவாசிகளை இழைக்கப்படும் அநீதிகளையம் அவர்களது போராட்டங்களையும் சித்தரிக்கின்றன.
*****************
நாங்கள் நாகரீகத்திற்கு மாற
அவர்கள் காத்திருந்தார்கள்.
நாங்களோ
அவர்கள் மனிதர்களாக காத்திருந்தோம்.

[They are waiting for us to become civilised,
and we, for them to become human.]
——————————
ஆதிவாசி கிராமத்தின்
ஊடாக செல்லும் கவிதையில்
ஆற்றில் குளிக்கும் ஆதிவாசிப் பெண்ணின்
வெற்றுடம்பையோ
அல்லது
ஒற்றை ஆடையில் உடல் மறைத்து
ஈரம் உலராமல் வீடு திரும்பும்
இளம்பெண்ணையோ
சிலர் தேடினர்.
கவிதையில் ஆதிவாசிப் பெண்களை
தேடுவதை நிறுத்துங்கள்.

[In poetry that passes through an Adivasi village,
some people search
for the bare back of an Adivasi woman bathing in a river.
Having draped her body in a single piece of cloth
a still-damp young girl returning home.

Stop searching for Adivasi girls in poetry. ]
——————————
ஒரு கோயிலோ மசூதியோ அல்லது தேவாலயமோ
இடிக்கப்படும்போது
ஆழப்பதிந்த உங்கள் வேதனையில்
காலம் காலமாக பழிவாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால்
காடுகளே புனிதமாய் கொண்ட அவர்களுக்கு
அதன் அழிவிற்கு யார் பதில் சொல்வார்கள் ஐயா?

[When a temple, mosque or church is broken
your pain is so deep
that you keep avenging it for centuries.
But they for whom the forest is sacred
who will pay them back for the destruction, sir? ]
—————————
ஒரு நாள் கடவுள்
எனக்கு பழக்கமானார்.
இப்போது
புகையிலை சுவை போல
அவர் வழக்கமான பழக்கமானார்.

[One day, God
became a habit for me.
Now God was a matter of habit
Like tobacco was a matter of habit.]
—————————
எங்களுக்கு
அவர்களின் கடவுளை அளித்தனர்.
‘உங்கள் பாவங்களிலிருந்து
அவர் விடுவிப்பார்’ என்றனர்.
‘நாங்கள் என்ன பாவம் செய்தொம்?’
என்று திருப்பிக் கேட்டோம்.

[They offered us their god
said he will free you of sins,
we asked
what sins have we committed?]

– ரமணன்

சாந்தி சரவணனின் கவிதைகள்

சாந்தி சரவணனின் கவிதைகள்




பேசி என்ன பயன்?

என் மௌனம்
உனக்கு புரிந்து இருந்தால்
நான் உச்சரிக்கும் வரிகளில்
வலம் வரும்
வார்த்தைகளின் வலிகள்
உனக்கு புரிந்திருக்கும்!

வார்த்தைகளை
கோர்த்திருக்கும்
எழுத்துகளின்
ஏக்கம் புரிந்திருக்கும்!

ஆனால்
உனக்கு தான் என்
மௌன மொழியே
புரியாதே!

பின் உன்னிடம்
பேசி எனன பயன்?

கடவுள் இருக்கானா?

தொட்டிலில்
சிசுவும்

கட்டிலில்
முதுமையும்

பார்வையில்
பேசிக் கொண்டன…

கடவுள் இருக்கிறானா என?

அனாதை இல்லத்தில்.

– திருமதி. சாந்தி சரவணன்