ச.சக்தியின் கவிதைகள்

ச.சக்தியின் கவிதைகள்




உணவுக் கடவுள்…..!!!!
அந்தக்
கடவுளைக்
காலையில் தான்
கண்ணாரக் கண்டேன்
கரடு முரடாகிப்போன
அரைகாணிநிலத்தை
உழுது கொண்டிருந்தான்
அரைஞாண்
கயிற்றுக் கோவணத்தோடு ,

கடவுளின்
கோவணம்
காற்றில்
பறந்து கொண்டிருந்தது
குருவிகளை
விரட்டும்
பச்சை வண்ணக்கொடி
அன்னக்கொடியாக ………!!!!!!!

மழை……!!!!
நீ
புள்ளி வைத்து
கோளம்
இடாத பொழுதெல்லாம்
வானம் தன்
கண்ணீரால்
புள்ளி வைத்து
கோளமிட்டு
கொண்டிருக்கிறது
அதிகாலை வேளையில் … ”

சிவப்பு இரத்தம்….!!!!
நீங்கள்
ரோஜாவை
வரையும் பொழுது
முட்கள் உங்கள் கைகளை
கிழிக்கவில்லையாயென்று கேட்கிறீர்கள்
முட்கள் கைகளை
கிழித்தனால் தான்
அவை
சிவப்பு சாயங்களை பூசிக்கொண்டிருக்கிறதென்று பதில் அளித்தவாறு
அங்கிருந்துநகருகிறேன்
சிவந்த முகத்தோடு….!!!!

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி, 

கடவுள் மருத்துவர் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

கடவுள் மருத்துவர் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்




ஆலமரத்து அடியில் விநாயகர்
ஆயிரம் பேர் வந்து போகின்றனர்
ஆரும் வணங்கவில்லை அவரை
ஆம் அது
அரசு மருத்துவமனை வளாகம்.

– சிரஞ்சீவி இராஜமோகன் 
கும்பகோணம் 
எங்களுக்கும் காலம் வரும் கவிதை – வெ.நரேஷ்

எங்களுக்கும் காலம் வரும் கவிதை – வெ.நரேஷ்




எங்களுக்கும் காலம் வரும்
******************************
ஊரோரம் ஒதுக்குகையில
உஞ்சோறு வேவுதடா
ஒவ்வொரு ராத்திரியும்
எம்புள்ள வாடுதடா

எத்தன நாட்களுக்கு
ராப்பகலா முழிச்சிருக்க
எங்கெங்கே அலையுரேனே
எங்குடும்பம் விழுச்சிருக்க

ஊர் வெளியே காவகாக்கும் கருப்பசாமி கேக்கலையே
ஊர் நாடி வந்தோம் எங்கள வீட்டுக்குள்ள சேக்கலையே

சாலையோரம் போகும் போது
சாதி சாயம் பூசுறியே
சாமிகிட்ட போயிச்சொன்னா  

சாமிகூட  கேக்கலையே

பூர்வ குடி மக்க நாங்க
புறந்தள்ளிப்  போறோமையா
பூவுலகில் வாழ்வதற்கு
போறாத காலமையா

எங்களுக்கும் காலம் வரும்
காத்திருந்து பாருமையா

காலம் மாறும்போது

கவலையெல்லாம் தீருமையா

– வெ.நரேஷ்

புனிதனின் – கவிதைகள்

புனிதனின் – கவிதைகள்




இரண்டாம் ஆட்டம்
***********************
இரண்டாம் ஆட்டம் சினிமா
பார்க்கப் போயிருக்கலாம்

தூக்கம் வராததற்கு
மனைவியோடு
காலார நடந்திருக்கலாம்

எழுதிய கவிதையை அவளிடம்
வாசித்துக் காட்டி இருக்கலாம்

பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கேட்காமல்
இருவரும் சேர்ந்து
பாட்டு கேட்டு இருக்கலாம்

இரண்டொரு
முத்தத்தோடு முடித்து இருக்கலாம்

தேநீர் உவர் சுவையோடு
இரவு கழிந்திருக்கலாம்

ஐந்து நிமிடம் தள்ளிப் போயிருந்தால்
இப் பிறவி நிகழாது போயிருக்கும்

கடவுளை மற
******************
தேர் போல் நகரும்
காகிதப் பூக்கள் கொடியை
ரசிப்பது

கொஞ்சம் கொஞ்சமாய்த்
தேநீர் பருகுவது

இளையராஜா பாடல் கேட்பது

உறங்கும் போதும்
கீழ்ப்படிந்த மாணவனாக இருப்பது

ஒரே நீர் நிலையில்
நீர் பருகினாலும்
கூழாங்கற்களுக்கும்
தனக்கும் சம்பந்தம் இல்லை
என பறந்து போகும்
கொக்கை தினமும் காண்பது

தேநீர் நன்றாக இருக்கிறது
நன்றி என மனித மொழி
பேசுவது

ஜென்னை போல
கடவுளை மறப்பதற்கும்
பல தடைகளை
கடந்து வரவேண்டி இருக்கிறது

கூழாங்கல் பெண்
***********************
அம்மாவின் விதான மூளையில் இருக்கும்
கற்பனைவாத கரும்புள்ளியில்
முல்லை ஆதிரை பசுக்களும்
அவை நீர் பருகும்
தாழி அடியில் தவளைகளும்
ஒற்றுமையாய் வாழ்கின்றன
தென்னை தென்றல் வீசும்
மன்றத்தில் ஓய்வெடுக்கிறது
ஏஞ்சல் நாய்க்குட்டி
கானகத்தில் இருந்து
அழைத்து வந்த
கனகாம்பர கோழிகள்
பேன் சீப்பை ஒளித்து வைத்து
கட்டிதறி எறிந்த
கொத்து போல்
இளையராஜா பாடல்கள்
உப்பு உறைத்த
நீச தண்ணி போல்
அம்மா நீக்கமற நிறைந்து இருக்கிறாள்
நினைவில்

ஜென்னின் வயது
**********************
தென்னை மரத்தடி
வெயிலுக்கு தாழி பருகிய
எருமை கன்றுக் குட்டி
அப்பாடா என படுத்துக் கிடக்கிறது

எதிரில் ஒரு மலைக் குன்றும்
அப்பாடா என
படுத்து கிடக்கிறது

98 வயதிலும் கண்ணாடி போடாமல்
புத்தகம் வாசிக்கும்
நண்பனின் தாத்தாவை பார்த்து
நானும் பணக்காரன் ஆவேன்
என நண்பனிடம் சொல்லி வந்தேன்

கிணற்றில் ஒரு முறை அவர்
தவறி விழுந்து விட்டதாய்
நண்பன் சொன்னான்

கிணற்றை எட்டி பார்த்தேன்
அவரின் பால்ய காலம்
தெரிந்தது

ஓடையோரம்
நாணல் புற்களின் ராகம்
அம் மலையின் வயதை
இசைக்கிறது

கற்றலின் இனிமை
ஊறிக் கொண்டிருக்கிறது
அந்த ஓடையில்

நினைவில் இன்னும்
வாசித்துக் கொண்டிருக்கிறார்
நண்பனின் தாத்தா
கருப்புச் சட்டை அணிந்த
கிழவரின் புத்தகத்தை

அருகில் இசைக்கும்
ஆல மரக் காற்று
தன் வயதையே
நண்பனின் தாத்தா ஞானம்
அடைந்த வயதாய்
அறிவிக்கிறது

ஆற்றைக் கடப்பது
***********************
சீடன் குரு வீட்டிற்குப்
போயிருந்தான்
வீடு குடில் போலிருந்தது

தன் எழிலான மனைவியிடம்
தேநீர் வைக்கும்படி
சொல்லி விட்டு
ஐந்து நிமிடத்தில் வருவதாய்
அவனிடம் சொல்லி விட்டுப் போனார்

அவர் அழகான மனைவி
தேநீர் தந்தார்கள்

தேநீர் பருகத் தொடங்கிய
மூன்று நிமிடத்தில் திரும்பி
வந்தார்

அவன் முகத்தையும் மனைவி
முகத்தையும் அர்த்தமாய்ப் பார்த்தார்
சீடன் மௌனமாய் அமர்ந்திருந்தான்

சீடன் முகத்தில் கள்ளத்திற்குப் பதிலாய்
குருவின் ஞானம் தெரிந்தது

கோப்பையில் தேநீர்ப் பூக்கள்
பூத்திருந்தன.

கருப்பு சினிமா
*******************
கருப்பு மாட்டைக் கண்டால்
விடுதலை உணர்ச்சி பிறக்கும்

பறவைக் கூட்டிற்கு
புல் கொண்டு வருவது போல்
வெயிலில் அலைந்து
அம்மா புல் சுமை
கொண்டு வருவாள் மாட்டிற்கு

ஒட்டகத்தில் பாதி இருக்கும்
மிருகம் என்ற சொல்லுக்கு
பொருத்தமா இருக்கும்
சின்ன புள்ளைகள் கயிறு பிடித்து
வர கட்டுப்படும்

-க. புனிதன்

பழங்குடியினப் பாடல்களைப் படித்துப் பாருங்கள் பாடல் – இந்திரன்

பழங்குடியினப் பாடல்களைப் படித்துப் பாருங்கள் பாடல் – இந்திரன்




பழங்குடியின மக்கள் கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளும் தைரியசாலிகளாக இருக்கிறார்கள். கீழே பதிவாகியுள்ள கவிதைகளில் பெரும்பாலும் ஊடுருவி நிற்பது அவர்களின் முன்னோர்கள் பற்றிய நினைவுகளும் அதற்கான படையல் முயற்சிகளும்…. அவர்களுடையது எதார்த்தமான இலக்கியம். அவர்கள் தான் உண்மையில் மண்ணின் மைந்தர்கள் என்று தங்கள் வாய் மொழி இலக்கியம் மூலம் நிரூபணம் செய்கிறார்கள். கலை விமர்சகர் இந்திரன் அவர்களின் பதிவுக்கு நன்றி.
-நா.வே.அருள்
கவிதை ஆசிரியர்
புக்டே இணையஇதழ்

சிங்கப்பூர்
Kavignar nepolean பதிவு28. வாசிப்பில் ஈர்த்த வரிகள்…
( சிங்கப்பூர் தமிழ் மொழி விழா 2016ற்காக )
——————————————-
கடவுள்
முதலில் வானத்தையும் பூமியையும் படைத்தார்
பிறகு பெண் மயிலைப் படைத்தார்
அது ஒரு முட்டை இட்டது
அந்த முட்டை உடைந்தது
முட்டை ஓட்டிலிருந்து
கெரியா மலைவாழ் ஆதிகெரியாக்கள்
தோன்றினார்கள்
முட்டையின் வெள்ளைக் கருவிலிருந்து
மயூர்பஞ்சின் புராண மலையினமும்
மஞ்சள் கருவிலிருந்து
மயூர்பஞ்ச ஆளும் பஞ்சாகுடும்பமும்
தோன்றின
முட்டைத் தோலிலிருந்து
ஓரெயன் மலையின
முன்னோர்கள் தோன்றினர்
மயூர்பஞ்ச் பிரதேசத்தின்
பஞ்சயூர் பகுதியில்
இது நிகழ்ந்தது
– ஒரிசாவின் கெரியா மலைப்பகுதியின் பாடல்
***************

கட்டளை
பழங்காலத்தில்
பாறைகள் நகர்ந்துகொண்டிருந்தன
அனைத்தும் உயிரோடு இருந்தன
சூரியதேவன் அவற்றிடம்
சொன்னான்
நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்
நான் இப்போது
மனிதர்களை உலகத்துக்கு அனுப்புகிறேன்
அவர்கள் வாழிடங்களை அமைப்பார்கள்
நீங்கள் அவர்களுக்கு நிழல் தருவீர்கள்
இப்போது நிலையாக நின்று விடுங்கள்
நீங்கள் நிலைத்து நிற்காவிடில்
நதி எப்படி கீழே உருண்டு வரும்?
உங்கள் பிளவுகளில்
புற்களும் புதர்களும்
எப்படி வளரமுடியும்
உங்கள் சரிவுகளிலும்
பாதங்களிலும்
காடுகள்
எப்படி செழித்து வளரமுடியும்?
– பீகாரின் ஜார்க்கண்ட் பகுதியின் ஆதிவாசிப் பாடல்
***************

பிறப்பு
சிவன் பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா
நீங்கள்
இயேசு பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா?
நீங்கள்
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்
மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்
நாங்கள்
கடவுள்களுக்கு
முன் பிறந்தவர்கள்
– தெற்கு பீகார் பகுதியின் கோயல் கேரோ அணைக்கட்டுத் திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் பாடப்பட்ட ஒரு ஆதிவாசி பாடல்
***************

நிலம்
நமது நிலம்
நமது ஆசிரியர்
நமது ஆசிரியர் நமக்குச் சொல்கிறார்
நிலத்தை உழுவது எப்படி என்றும்
விதைப்பு செய்யும் முறை என்னவென்றும்
பிரார்த்தனை மூலம் மழையை வரவழைப்பது பற்றியும்
பயிர்களை கவனிக்கும் முறைகளையும்
கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றுவது பற்றியும்
எப்போ எப்படி அறுவடை செய்வது என்பபது பற்றியும்
நமது அரசு அதிகாரிகளுக்குத் தெரியும்
நமது நிலத்தோடு நமக்குள்ள உறவு
ஆனாலும்
அவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை
– சலோமி எக்கா, 46 வயது பெண், பட்குச்சுனு, ஒரிசா
**************

பூக்களின் திருவிழா
ஓ வீட்டின் வாசற்படியே
உனக்குப் பூக்களைப் படையல் போடுகிறோம்
எங்கள்மீது கருணையோடிரு
எங்களின் தானியக் குதிர்களை
தானியங்களால் நிரப்பு
இது பூக்களின் திருவிழா
நாங்கள் பூக்களைப் படையல் போடுகிறோம்
எங்களின் வீட்டு வாசலுக்கு
புதிதாய் பிறக்கப்போகும் வருடத்தில்
கடவுள்கள் வாழ்த்தட்டும்
உங்களது தானியக் குதிர்கள்
நிரம்பி வழிகிற வரை அவை நிரம்பட்டும்
உங்கள் பயிர்கள் வளர்ந்து செழிக்கட்டும்
பருவ காலங்களும் மாதங்களும்
திரும்பி வரட்டும்
பூக்கள் மீண்டும் மீண்டும் மலரட்டும்
நாம் இங்கேயே தொடர்ந்து வாழ்வோமென்றால்
பூக்களின் திருவிழா
மறுபடி வரட்டும்
– கார்வாலி மலையினப் பாடல், ஒரிசா
***************

படையல்
அன்பான முன்னோர்களே
நீங்கள் எங்கே உலவுகிறீர்கள்?
நீண்ட பகலிலா, முடிவற்ற இரவிலா,
பாறையின் மீதான உச்சி வெயிலிலா
காட்டின் மழைக்கால மாதங்களிலா
நீங்கள் எங்கே உலவுகிறீர்கள்
இன்று திரும்பி வந்து
எங்களது குறைவான
படயலை ஏற்றுக்கொள்ளுங்கள்
எங்கள் மகிழ்ச்சியைக் காணுங்கள்
பழமையான நிகழ்வை
மகிழ்ச்சியின் கொண்ட்டாட்டத்தை
தயவு செய்து காணுங்கள்
– ஹேமா மலையினப் பாடல்
***************

கனவுகள்
நாங்கள் கனவு காண்கிறோம்
எங்களின் மூதாதையர்கள் பற்றியும்
ஆவிகள் பற்றியும்
வாழும் முறை பற்றியும்
எதிர்காலம் பற்றியும்
இறந்தகாலம் பற்றியும்
கனவுகள் காண்கிறோம்
எங்களின் ஒவ்வொரு கனவிலும்
எங்கள் நிலத்தைக் கனவு காண்கிறோம்
எங்கள் நிலத்தில் வாழவில்லையெனில்
நாங்கள் மரணத்தைத் தழுவுகிறோம்
எங்கள் நிலத்திலிருந்து கிடைக்காத
ஆரோக்கியம் என்ற ஒன்று
எங்களிடம் இல்லை
எங்களின் மரணத்திற்குப் பிறகு
மூதாதையர்களாக நாங்கள் வாழமாட்டோம்
எங்கள் குழந்தைகள்
எப்படி ஒன்றுகூடி வாழ இயலும்
பயிர் செய்பவன் அழிந்துவிடுவான்
நாங்கள் முடிந்போவதை
அவர்கள்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
அவர்கள் அதற்காக
காத்திருக்கிறார்கள்
– தர்கேரா ஆதிவாசிப் பாடல்
***************

கருப்பு இயேசுநாதர் / லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்

இயேசுவானவர்ஒரு கருப்பனாக திரும்பி வருவாரானால்
அது நல்லதல்ல.
அவர் சென்று பிரார்த்தனை செய்ய முடியாத
தேவாலயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
எவ்வளவு புனிதப் படுத்தப்பட்டாலும்
நீக்ரோக்களுக்கு
அங்கு வாயில்கள்’ மறுக்கப்படும்.
அங்கே இனம்தான் பெரியதே தவிர
சமயம் அல்ல.
ஆனால்
இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவே!
நீர்
நிச்சயமாக
மீண்டும்
சிலுவையில் அறையப்படுவீர்கள்.
***************

சிரிக்கக் கற்றுக் கொடு மகனே / கேபிரியல் ஒகாரா / நைஜீரியா
முன்னொரு காலத்தில்
மகனே
அவர்கள் இதயத்தோடு சிரிப்பார்கள்.
கண்களால் சிரிப்பார்கள்.
ஆனால் இப்போது பற்களால் மட்டுமே சிரிக்கிறார்கள்.
அவர்களது பனிக்கட்டி மூடிய சில்லிட்ட கண்கள்
என் நிழல்களுக்கு பின்னாலும் துழாவுகின்றன.
அவர்கள் தங்கள் இதயங்களோடு
கை குலுக்கிய காலங்கள் இருக்கத்தான் செய்தன.
என் மகனே குழந்தாய்
இப்போது அவர்களின் வலது கை
இதயமில்லாமல் குலுக்குகிறபோது
இடது கை
எனது காலி சட்டைப் பாக்கெட்டுகளைத் துழாவுகின்றன.
“உங்கள் வீடாக நினைத்துக் கொள்ளுங்கள்”
“மீண்டும் வருக” என்று சொல்கிறார்கள்.
ஆனால் நான் மீண்டும் வந்து
தன் வீடாக நினைக்கிறபோது
ஒரு முறை இரு முறை
மூன்றாவது முறை இருக்கப் போவது இல்லை.
ஏனெனில் கதவுகள் எனக்காக மூடிக் கொள்கின்றன.
நான் பலவற்றை கற்றுக் கொண்டேன்
மகனே நான் முகங்களை
அணியக் கற்றுக் கொண்டேன்.
அடிக்கடி மாற்றும் உடைகளைப் போல
வீட்டு முகம், அலுவலக முகம்
நடுத்தெரு முகம், விருந்து முகம்
மது அருந்தும் முகம் என்று
படங்களில் நிலையாக இருக்கும் சிரிப்புகளைப் போல
உறுதி அளிக்கும் சிரிப்புகள்.
என்னை நம்பு மகனே
நான் உன்னைப் போல இருந்த போது
எப்படி இருந்தேனோ
அப்படியே இருக்க விரும்புகிறேன்.
இந்த ஊமைச் செய்திகள் அனைத்தையும்
மறக்க விரும்புகிறேன்.
சிரிப்பது எப்படி என்று
மீண்டும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
– அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்- 1982
***************

காற்றில் ஒரு முத்தம் / கிரிஸ்டோபர் ஒகிக்போ

நம் இருவருக்கிடையில் நிலா எழுந்தது.
ஒன்றை ஒன்று வணங்கிக் கொள்ளும்
இரண்டு பைன் மரங்களுக்கிடையில்
நிலாவுடன் சேர்ந்து காதலும் மேலெழுந்தது.
நமது தனிமையின் அடித்தண்டை
மேயத் தொடங்கி விட்டது.
நாம் இப்போது
ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ளும் இரண்டு
நிழல்கள்.
ஆனால்
காற்றை மட்டுமே
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
– அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் 1982

– கவிஞர் இந்திரன் ✍ எழுத்தாளர், கலை இலக்கியப் பண்பாட்டுத் திறனாய்வாளர் & மொழிபெயர்ப்பாளர். ஆதிவாசி கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘ ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ என்று முதன்முதலில் நூலாகக் கொண்டுவந்தவர் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன். நன்றி : ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’, ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூல்கள், அந்திமழை இணையத்தளம் & இந்திரனின் முகநூல் பக்கம்.

சக்தி ராணியின் கவிதைகள்

சக்தி ராணியின் கவிதைகள்




என்னென்ன நினைச்சிருந்தோம்…
ஏழ்மை விரட்ட…
வரம் வேண்டி காத்திருந்தோம்…

ஊர் காக்கும்…தெய்வத்தை…
ஊரைச் சுத்திக்காட்ட…
தேர் ஏற்றி வலம் வந்தோம்…

நொடிப்பொழுதில்…
என்ன நடந்ததென…தெரியலையே…
ஏதும் விளக்கம் கூற…மொழியில்லையே…

காலாற…நடந்தவக எல்லாம்…
கட்டையா…ஆனக…கைப்பிடிச்சு
நடந்த வடத்தாலே…

ஒய்யாரமா ஏறி‌ வந்த…
சாமிக்கும் புரியலையோ…
இந்த ஊர்வலம் இறுதி ஊர்வலமா
அமையுமோ என…

என்ன சொல்லி தேத்த…
உறவை இழந்து தவிப்பவருக்கு…
சாமி தூக்க வந்தவங்க…

சாமியா…போனாங்கனு…

இன்னும் மாறவில்லை
****************************
கைப்பிடித்து நடந்த
குழந்தை…கை விட்டே…
பள்ளி செல்லும் போது
அழுகையைத் தன் துணைக்கு
அழைக்கிறது…இன்னும்
இதெல்லாம்…
மாறவில்லை…

மாலை அழைக்கும்…பெற்றோரின்
கரம் புகவே ஓடிச்சென்று…
உள்ளங்கையில்…தம்…அன்பை
புகுத்தும்…நிலை இன்னும் மாறவில்லை…

நடந்த கதையும்…
நடக்க இருக்கும் கதையும்…
மூச்சு விடாமல் சொல்லி முடித்தே…
பொழுதை நகர்த்தும்…குழந்தைகளின் மனம்
இன்னும் மாறவில்லை…

வீடு நிறைய தின்பண்டங்கள்
இடம் பிடித்திருந்தாலும்…
பாதையோரக் கடைகளில்…
தனக்குப் பிடித்த உணவைக்கேட்டு…
வாங்கி உண்ணும் குழந்தைகளின்
ருசி…இன்னும் மாறவில்லை…

வீட்டுப்பாடம் என்றதும்…
இல்லாத பசியும்…வராத தூக்கமும்…
தவறாமல் இடம் பிடித்தே…
காலம் நகர்த்த முயற்சிக்கும் பண்பும்…
இன்னும் மாறவில்லை…

குழந்தைகள்…குழந்தைகளாகத் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
மாறாமல்…

நாம் தான்…நம் எண்ணங்களை
குழந்தைக்கு ஊட்டி…மாறாமல்…
இருக்கின்றோம்… குழந்தைகள்
மாறவில்லையே…என்ற ஏக்கத்தில்…

– சக்தி

Pangai Thamizhan Kavithaigal பாங்கைத்தமிழன் கவிதைகள்

பாங்கைத்தமிழன் கவிதைகள்




‘நோய்களுக்கு மருந்து நீ’
******************************
உலகின் ஒப்பற்ற தேசம்!
அகிலத்தின் அழகு தேசம்
மூத்த இனமும் மொழியும்
தோன்றிய முதன்மை தேசம்!

வற்றா நதிகளும்
வளமார் மண்ணும்
குன்றா வளமும்
குறைவிலா செல்வமும்
மாண்பமை மக்களும்
இயற்கையின் செல்ல தேசம்!
இந்திய தேசம்!

வார்த்தை ஜாலத்திற்காக
வர்ணனை செய்யவில்லை!
இந்த தேசத்தின்
பூர்வக் குடியின்…
இந்த தேசத்தை
சுவாசிக்கும் வார்த்தை
வடிவங்கள்!

இன்று….
முடங்கிக் கிடக்கும் தேசமாக
முட்டுக்கட்டை களைப்
போட்டது யார்?

சுய நலத்திற்காக
உழைக்கும் மக்களை
உடைத்தது யார்?

ஒன்றாகப் பிறந்து
ஒன்றாக உழைத்து
ஒன்றாக உண்டு
ஓர் உணவை உண்டு
ஓரிடத்தில் உறங்கி
ஒரே உறவுகளாய் வாழ்ந்தோமே…. !

இது பொய்யென்றால்
நீ சொன்னாலும்
நான் சொன்னாலும்
இந்த மண்ணின்
பூர்வக்குடிகள் இல்லை நாம்!

மதங்கள் நம்மை அண்டின
சாதிகள் நம்மை தொற்றின
நோய்கள்… நோய்கள்…!

நோய்களை விரட்டுவோம்
‘நோயற்ற வாழ்வுதானே
குறைவற்ற செல்வம்’
இந்த தேசத்திற்கு!

சொர்க்கத்தில்
இருக்கும்
என் பெற்றோர்
என்னிடம் பேசினர்!
கனவின் வழி!!

மீண்டும்
மண்ணுலகில் பிறப்பு
வேண்டுமெனில்
அருளுகின்றேனென
ஆண்டவன்
அனுமதித்துள்ளார் !

மகனே…..
பிறவியெடுத்து
வருவதற்கு…
பேராசைதான்!

இந்தியாவில்
சாதிகளின் பேயாட்டம்
மதம்பிடித்தோர் வெறியாட்டம்
ஏய்ப்போரின் வெறியாட்டம்
அரசியல் வாதிகளின்
கொள்ளைக்கூட்டம்
அழிந்திருந்தால்
சொல் மகனே….

உனக்கே
பிள்ளைகளாகப்
பிறக்கிறோமென்றனர்
என்னத்தச்சொல்ல?

*********************************
ஏமாற்றும்
வித்தைகள்
பல விதம்!

வீதி ஓரங்களில்
வித்தைக் காட்டுபவனின்
வித்தை
வயிற்றுப் பாட்டுக்கானது!

திரைக்காக…
நடிகர் மட்டுமல்ல
திரைப்படம் உருவாக
உழைக்கிறோம் என்போர்
அனைவரின் வித்தை
ஆசைக்கானது!

அலப்பறை செய்து
கொள்ளையே கொள்கை
என்னும்..
அரசியல் பேய்களின்
வித்தை….
அநாகரிகமானது!

மயிர் வளர்ப்பு
அம்மணத் திறப்பு
அங்க வஸ்திர அணிவிப்பு
அருவருப்பான
வேஷ கோஷம்
கூச்சல்… குடைச்சல்
எல்லாமும்
மனநோயின் வித்தை;
மக்களை மயக்கும்
மதிகெட்ட வித்தை!

வித்தைக் காட்டுபவரே
வித்தகனானான்!

விதை போட்டு
வியர்வைசிந்துவோன்
வேடிக்கைப் பொருளானான்!

விந்தை உலகமடா….
இல்லை… இல்லை….
வித்தை உலகமடா!

**************************************
மனிதன்
என்னென்னவோ வேடமிட்டு
பிழைப்பை நடத்திக்
கொண்டிருக்கிறான்!

உலகம் ஒரு நாடகமேடை
நாமெல்லாம் நடிகர்
என்ற
அறிஞனின்
ஆழமான சிந்தனை
எவ்வளவு நிதர்சனம்!

வயிற்றுப் பிழைப்பிற்காக
கடவுள் போன்று
வேடமிட்டு….
பிச்சையெடுக்கின்றார் சிலர்;
ஓ…..
கடவுள் இப்படித்தான் இருப்பாரோ?
வேடமிட்டவனுக்கு எப்படித் தெரியும்?

இந்த
உருவத்தை உருவாக்கியவனுக்குத்தான் தெரியும்!
கடவுளின் உருவம்.

கடவுள் உருவத்தில்
கையேந்தி வருபவருக்கு
ஏன் கற்பூரம் ஏற்றவில்லை?
கடவுள் உருவத்தை
கற்பனையில் உண்டாக்கியவர்!

அவர்களுக்கு
நன்றாகத் தெரியும்
கடவுளுக்கு உருவமில்லை என்பது!

வயிற்றுப் பசிக்காக
கடவுள் வேடமிட்டு
கையேந்தி வந்தாலும்
பிச்சைப் பாத்திரம்
நிரம்புவதில்லை….

பிச்சைப் போடுபவனுக்கும் தெரியும்!
பிச்சையெடுப்பவன்
கடவுள் இல்லையென்பது!

பிச்சையெடுப்பவன்தான்
நம்புகின்றான்…..
பாவம்;கடவுளை!

தொட்டில் சீலை சிறுகதை – தெ.சக்தி ராணி

தொட்டில் சீலை சிறுகதை – தெ.சக்தி ராணி




நல்வரவு கோலம் நல்லா பெருசா போடுங்க… வரவேற்பு கற்கண்டு …சந்தனம்…குங்குமம் எடுத்து வச்சாச்சா…என்ற பரபரப்பில் அனைவரையும் வரவேற்க தயாரானாள் அகல்யா…

என்ன அகல்யா…எல்லாம் சரியா பண்ணியாச்சா என்று கேட்டுக்கொண்டே உள் வந்தான் குமார்…

எல்லாம் டபுள் ஓகே குமார்…உள்ள வந்து பாரு டெக்கரேசன் எப்படி இருக்குனு…

சூப்பர் எல்லாம் அசத்தல் தான் என்றான் குமார்…

என்னோட ஐடியா எல்லாம்…சும்மாவா…பல வருடக்கனவு இது…

இதெல்லாம் சரி உன் பையன் எங்கே…
இதோ…அம்மாகிட்ட இருக்கான்.வா பார்க்கலாம்….

அடேய்…ராம்…தம்பியை தொட்டில்ல போடனும்.தொட்டில் அலங்கரிச்சாச்சா பாரு…. என சொல்லிக்கொண்டே குழந்தை அருகே சென்றாள்.

செல்லக்குட்டி…உன்னை பார்க்க யாரு வந்துருக்கா பாரு… ஓய்…வா வா மாமா கிட்ட…உனக்கு என்னலாம் வாங்கி வந்துருக்கேன் பாரு

ஆமா…அகல்யா என்ன பெயர் வைக்க முடிவு பண்ணிருக்க…

அதா…அந்தோ திருச்சீலை அழகா வடிவமைச்சிருக்குல…அதுக்குள்ள தான் என் பையன் பேரு இருக்கு… பொறுமையா இரு…நல்ல நேரம் வந்ததும் நானே சொல்றேன்.

என்ன குமார் எப்போ வந்த” என பின் முதுகில் தட்டி அழைத்தான் வினித்.

இப்போ தான் வந்தேன் டா…உன் மனைவி பரபரப்பு பார்த்தா விழா செம்ம கலை கட்டும் போல…
ஆமாடா..எல்லாம் அவ விருப்பம் தான்…

நல்ல நேரம் வந்துருச்சு…வாங்க பையன் பெயரை எல்லாருக்கும் அறிமுகப்படுத்துவோம் என்றே திரைச்சீலை விலக்க… குழந்தை பெயர் அனைவரும் முணுமுணுக்க கலர் கலரா வெடி வெடிச்சு பிரமாண்டமானது பெயர் சூட்டு விழா…

தம்பியை தொட்டில்ல போட்டு மூன்று முறை காதில் பெயர் சொல்லுங்க என்றாள் பாட்டி லட்சுமி. ம்ம்…என்றே குழந்தையை ரசித்தவாறு பெயர் சொல்ல காதருகே சென்ற போதே..

அகல்யா…அகல்யா…மணி ஆறாச்சு.இன்னுமா எழுந்திருக்கல…என்று அத்தை குரல் காதைப்பிளக்க ஐய்யோ இதெல்லாம் கனவா…போச்சு…இன்னிக்கு காலையிலேயே ஆரம்பிச்சிடுவாங்களே… இம்சை…என நினைத்துக்கொண்டே அறையிலிருந்து வெளி வந்தாள்.

குடும்பப்பொண்ணு சூரியன் வரதுக்கு முன்னாடி எழுந்திருக்க வேண்டாமா…இப்படி லேட்டா எழுந்திரிக்குற… சரி..சரி…சமையலறையில வேலையைப் பாரு. முதல்ல டீ போடு…

ம்ம்…சரி அத்தை போடுறேன் என்றே உள்ளே சென்றாள்… டீ போட்டு கொடுத்து விட்டு..
குளித்து முடித்து…காலையில் டிபன் எல்லாம் தயார் செய்து புதுச்சேலை கட்டிக்கொண்டு அத்தையிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றாள்…
என்னம்மா…என்ன விஷேசம்.

இன்னிக்கு எங்க கல்யாண நாள் அத்தை.உங்க புள்ளைட்ட சொன்னா வேண்டா…வெறுப்பா பண்ணுவார்.அதாம் எதும் கட்டாயப்படுத்தல… வருஷம் மாறிக்கிட்டே இருக்கு…ஆனா வாழ்க்கையில எந்த மாற்றமும் இல்லை..

ஒரு புள்ளி உன் வயித்துல தங்கிட்டா அதுவே எனக்கு போதும் தான்… ஆனா நம்ம குலசாமி என்ன நினைச்சிருக்கோ…நம்ம குடும்பத்தை இப்படி கஷ்டபடுத்துது…
சரி போயி சாப்பிடு.அப்புறம் ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வாங்க…

சரி அத்தை..போகணும்.

சீனித்தாயி…சீனித்தாயி…என்ன விஷேசம் காலையிலே…பலகாரம் பலமா இருக்கு போல…
மொப்பம் பிடிச்சு வந்துட்டியா…அது ஒன்னுமில்ல என் மகனுக்கும்…மருமகளுக்கும் கல்யாணநாளாம்.அதான் …

அப்படியா சேதி…கல்யாணம் முடிஞ்ச தேதிக்கு இப்போ ரெண்டு புள்ளையோட இருந்திருக்கனும்…
இவுக என்னனா இன்னும் புதுத் தம்பதியா கொண்டாடுறாக…

சும்மா இருக்க மாட்டியா நீ…அவ காதுல கேட்கப்போகுது…

நீ நல்லா உன் மருமகளுக்கு ஏத்த மாதிரிதான் பேசுற… சரி நான்…வாரேன்…

இந்தா வந்ததுக்கு…ரெண்டு பனியாரம் எடுத்துட்டு போ…

எல்லாம் கேட்டும்…கேட்காதது போல் அத்தை நாங்க கோவிலுக்கு போயிட்டு வாறோம் என்றே கிளம்பினாள்.

சரிமா பார்த்து போயிட்டு வாங்க…

கடவுளின் தரிசனமாய் உள்ளம் உருக வேண்டுகிறாள்…என் கனவு நிறைவேறும் வரம் கொடு என்றே… ஆலமும்…வேம்பும் உள்ள மரத்தில் தான் கட்டியிருந்த புதுச்சேலையைக்கிழித்து தொட்டில் கட்ட செல்லும் போது அவளது கணவனும்…என் எல்லாமும் நீ தான் என்றே அவளை அன்பால் அணைத்து இருவரும் சேர்ந்தே தொட்டில் கட்டி..இறைவனை வழிபட்டே வீடு திரும்பினர்…

Pangai Thamizhanin Kavithaigal 7 பாங்கைத் தமிழனின் கவிதைகள் 7

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

‘மாடுகளுக்குப் புல்லே போதும்’
*************************************
இந்த தேசந்தானே வேண்டும்?
எடுத்துக்கொள் தெய்வமே!
இந்த நாட்டின்
ஆட்சிதானே வேண்டும்?
நடத்திக்கொள் சாமி!

என்ன நினைக்கின்றீரோ
அந்த
வண்ணம் பூசிக்கொள்ளும் சாமி !

அடியேனின்
சிறிய விண்ணப்பம்
சாமி…..

ஏர் ஓட்ட மாட்டேன்
மூட்டை சுமக்க மாட்டேன்
சேற்றில் இறங்க மாட்டேன்
லாரி ஓட்ட மாட்டேன்
ஆடு மாடு வளர்க்க மாட்டேன்
மண் சுமக்க மாட்டேன்
குப்பைகள் அகற்ற மாட்டேன்
மொத்தத்தில்
ரத்தமோ வியர்வையோ
சிந்த மாட்டேன்….

நெய் மணக்க
சோறு போடு சாமி….
போதும்!

அதை
மந்திரத்தால்
கொடுப்பாயோ;
தந்திரத்தால்
கொடுப்பாயோ;

வாயால்
வடைசுட்டு விற்பாயோ;
மகா சக்தி கொண்ட
மயிர் வளர்த்துத் திரியும்
மகான்கள் மூலம்
வரவழைப்பாயோ….

அந்தக் கதை
எனக்கு ஏன் சாமி!
ஆண்டிக்கு
அம்பாரக் கணக்கு!

மாடுகளுக்குப்
புல் போதும் சாமி!
போதும்!

நீயே… (க)விதை!
*********************
கவிதையே…
உனக்கான நாளாம் இது!
எழுந்திரு;
போ…
ஓடு…
கவிஞர் உள்ளமெல்லாம்
ஊற்றுப் பெருக்கெடு!

கயமைகளை
கண்டிக்கச்சொல்;
கனவுகளை
காணச்சொல்;

கண்ணீரைத்
துடைக்கச்சொல்;
நம்பிக்கை ஆயுதத்தை
கொடுக்கச்சொல்;

பெண்மையை
போற்றச்சொல்;
வாய்மையை
வளர்க்கச்சொல்;

வறுமைக்கு
காரணம் தேடச்சொல்;
சமய வெறியைச்
சாடச்சொல்;

சாதியை
ஓடச்சொல்;
கல்வியை
கற்கச்சொல்;

கறைகளை
அகற்றச்சொல்;
கர்விகளை
அடக்கச்சொல்;

காதலை
வளர்க்கச் சொல்;
உன்னை
எழுதி…

ஓங்கு புகழ்
அடையச்சொல்;
கவிஞனக்கு
நீ அடையாளம்;
உனக்கு
கவிஞன் அடையாளம்!

காலத்தை மீறிக் கனவு காணும்
கவிஞர்களை ஈன்றெடுக்க
புதிய கருப்பையைப்
பொருத்திக் கொள்.

**************
மந்திரத்தால்
மாங்காயை
விழவைப்பதற்காகவே
ஒரு தேசம் வேண்டுமாம்!

அடேய்….
மாங்காய்
வேண்டுமென்றால்
மரத்தை நட வேண்டும்!

மரம் நடுவதற்கு
மனிதன் வேண்டும்!
மந்திரம் சொல்வதற்கு
மாயாவி போதும்!

இப்போது சொல்;
இந்த தேசத்திற்கு
மரத்திலிருந்து
மாங்காய் வேண்டுமா?

மந்திரத்தால்
மாங்காய் வேண்டுமா?
மாயாவி வேண்டுமா?
மனிதன் வேண்டுமா?