jayasree balajee kavithaikal ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்

ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்

புலம் பெயர் தேசம் ஐம்புலன்களும் ஒடுக்கி வைத்து தான் பயணம் வந்தோம்.. குளிரோ வெயிலோ பிழைப்பு இது தான் என்றே அறிந்தோம்.. நாடு விட்டு நாடு வந்தோம் உயிரும் கூடு விட்டு கூடு பாய்வது உணர்ந்தோம்.. இட்லி கறிக்குழம்பு ஞாயிறு மீன்குழம்பு…
நூல் அறிமுகம்: தொ.பரமசிவனின் சாதிகள் உண்மையுமல்ல… பொய்மையுமல்ல… (நேர்காணல்கள்) – சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: தொ.பரமசிவனின் சாதிகள் உண்மையுமல்ல… பொய்மையுமல்ல… (நேர்காணல்கள்) – சு.பொ.அகத்தியலிங்கம்
தொ.ப வை வாசிக்க ஓர் திறவுகோல்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் எழுபதாவது அகவையில் நம்மை விட்டுப் பிரிந்தார் பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் . அவரின் சிந்தனைப் போக்கையும் எழுத்துகளையும் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் எளிய நூல் “சாதிகள் : உண்மையுமல்ல …பொய்மையுமல்ல…,” [ நேர்காணல்கள் ].

13 நேர்காணல்களின் தொகுப்பு . தொ. பரமசிவன் என்கிற பேராளுமையை நேர்காணல் செய்த ஒவ்வொருவருமே முத்திரை பதித்த ஆளுமைகளே . ஆகவே இந்நூல் பல கோணங்களில் தொ. பரமசிவத்தின் பண்பாட்டு நோக்கு , திராவிட இயக்கம் , தமிழ் தேசியம் ,
பெரியார் , கோவில் , சாதி , தமிழ் பண்பாட்டு வரலாறு இவற்றை மக்கள் வாய்மொழித் தரவுகளோடு ஆழமாகவும் அகலமாகவும் விவாதிக்கும் நூலாகிவிட்டது .

இந்நூலை திறக்கும் போது சிந்தனைக்கான பல புதிய வாசல்கள் திறக்கும் ; நூலாசிரியரோடு உடன்பட்டும் முரண்பட்டும் நிறைய கேள்விகள் எழும் . அதுவே இந்நூலின் வெற்றி .

தொ. பரமசிவன் வழக்காமான எழுத்துமொழி சார்ந்த ஆய்வினின்று விலகி வாய்மொழி வழக்காறுகள் என மக்கள் வாழ்வோடு ஊடாடி புதுதடத்தில் பயணித்தவர் . ”எழுத்து என்பதே அதிகாரத்தின் பிறப்பிடமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.” என திரும்பத் திரும்பச் சொன்னவர். அழகர்கோயில் சார்ந்து இவர் செய்த முனைவர் பட்ட ஆய்வு பெரிதும் பேசப்பட்டது .

இவர் பெரியாரை பெரிதும் முன்னிறுத்துகிறார் . அதே சமயம் கோயில் சமயம் நாட்டார் வழிபாடு குறித்து பெரிதும் ஆர்வம் காட்டுகிறார் . அதேபோல் , “ நான் தமிழ் தேசியர்தான்” என்று சொல்லும் போதே, “ நான் இந்து அல்ல” என பகீரங்கமாக அறிவிக்கிறார் . திராவிட சித்தாந்தம் குறித்து ஓர் வித்தியாசமான பார்வையை முன் வைக்கிறார் . அதே நேரம் கம்யூனிஸ்டுகளின் மீது சில நியாயமான விமர்சனங்களையும் சில மேலோட்டமான நியாயமற்ற விமர்சனங்களையும் வைக்கிறார் . அவை பெரும்பாலும் பேட்டி கண்டவர்கள் இவர் வாயிலிருந்து பிடுங்கியதாகவும் உள்ளன.

பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட நேர்காணல்களாக இருப்பதால் பலவற்றில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கேள்விகளும் பதிலும் இடம் பெறுவதால் ஆரம்பத்தில் இந்நூல் சிறிது சோர்வு தட்டுகிறது . ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கேள்விகளும் இருப்பது புரிதலை மேம்படுத்துகிறது . “ மொழிக்கல்வியும் மதிப்பீடுகளும்” என வ. கீதா , கோ. பழநி செய்த நேர்காணலும் , “ கோட்பாட்டுரீதியான பிரச்சனைகள்” எனும் தலைப்பில் சுந்தர் காளி மேற்கொண்ட நேர்காணலும் புதிய கோணத்தில் பார்வையை ஆழமாக விரிக்கிறது . கால்டுவெல் குறித்த நேர்காணலும் ,
ச. தமிழ்ச்ச்செல்வன், அ. முத்துலிங்கம் ஆகியோரின் நேர்காணல்களும் இன்னொரு கோணத்தை வெளிக்கொணர்கிறது . விரிவஞ்சி ஒவ்வொரு நேர்காணலையும் இங்கு நான் சுட்டவில்லை.

பெரியாரைப் பற்றி பல மதிப்பீடுகளைச் சொல்லிச் செல்கிறார் ,” பார்பனியம் கோலோச்சி நின்றபோது , ‘பார்ப்பான்’ என்ற சொல்லையே இழிசொல்லாக மாற்றிக் காட்டியதுதான் பெரியாரின் சாதனை . அவருடைய வெற்றி, அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கொண்டிருந்தது.” என்பது அதில் ஒன்று .

நீங்கள் பெரியாரை போற்றுகிறீர்கள் ஆனால் கோயில்களை ஆராய்ச்சி செய்கிறீர்கள் ஏன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் போது ,” எனக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவற்றை வணங்குகிற மக்கள் மீது கவர்ச்சி இருக்கிறது ; நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் அழகை நான் ரசிக்கிறேன். கோவிலுக்கு போகும் அனைவரும் தினசரி சிவபூஜையோ விஷ்னுபூஜையோ செய்கிற மக்கள் அல்ல. கோவில் என்பதும் திருவிழா என்பதும் நிறுவனங்கள். திருவிழாக்களின்றி ஓர் சமூகம் இயங்க முடியாது .” என்கிறார்.

நாட்டார் சடங்குகள் விழாக்களில் காணப்படும் ஒரு வித ஜனநாயத்தன்மை ; நிறுவன மதங்களில் விழாக்களில் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார் . பல்வேறு அவைதீக மதங்களின் செல்வாக்கு ஓங்கியதையும் தேய்ந்ததையும் வெறுமே மூடநம்பிக்கை , ஆதிக்கம் என கடந்து போகாமல் , மக்களின் வாழ்வியல் தேவையோடு இணைந்து பார்த்துள்ளார் .

மதம் , கோவில் , சடங்கு , நாட்டார் வழிபாடு என பலவற்றை பண்பாட்டு அசைவாகக் காணும் இவரின் பார்வையில் உடன்படவும் முரண்படவும் இடம் உண்டு .

திராவிடப் பண்பாடென்பதை , நான்கு மாநில பொது பண்பாடென சொல்லிச் செல்லும் போது ; 1] தாய் மாமனின் முக்கியத்துவம் ,
2] இறந்தவரை தொட்டு சடங்கு செய்தல் 3] பெண்களை பொதுவெளியில் அடிப்பதை சகிக்காமை என சுருக்கிவிடுகிறாரோ ? சில இடங்களில் தாய் தெய்வ வழிப்பாட்டை இம்முன்றில் ஒன்றாக வைக்கிறார் .

சாதியை பொதுவாக எதிர்த்த போதிலும் அகமண முறையே சாதி நீடிப்பின் மையம் என்பதை போகிற போக்கில் ஒப்புக் கொண்டாலும் தாய்மாமன் உறவு சார்ந்த பெருமிதம் சாதிக்கூட்டுக்குள் திருமண பந்தத்தை திணிப்பதல்லவா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது .

சாதியைப் பற்றி நிறைய பேசுகிறார் . உண்மையுமில்லை… பொய்மையும் இல்லை என ஒரு நிலை எடுக்கிறார் .” சாதி ஒழிப்புப் பற்றிய நம் பார்வை எல்லாம் அடிப்படையில்லாத ஆர்வக்கோளாறுகளே” என்கிறார். மேலும்,” சாதி ஒழிப்பு என்பதை , ஏதோ கொசு ஒழிப்பு போல சுலபமாகப் பேசமுடியாது . சாதி என்கிற அமைப்பு அவ்வளவு எளிமையானது கிடையாது . சாதியை ஒழிக்க முடியாது ஆனால் சாதியைக் கரைக்க முடியும்.” என்கிறார் . கொசுவையும் ஒழிக்க முடியவில்லையே , எல்லாவிதமான கொசு அழிப்பு மருந்துக்கும் தன்னை தகவமைத்து மீண்டும் மீண்டும் புதிதுபுதிதாக உற்பத்தியாகிறதே. கிட்டத்தட்ட சாதியும் அப்படித்தானோ ? இவை ஆழமான விவாதத்துக்கு உரியவையே !

“ஒன்றே குலம், ஒருவனே தேவன் “ என்பதும் பன்மைக்கு எதிரான பாசிசக் குரலே என போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் தொ.ப . “ ஒரு நாடு , ஒரு மொழி , ஒரு கலாச்சாரம்” என்கிற குரல் பலமொழி பல பண்பாட்டை எதிர்ப்பதால் அதை பாசிச முழக்கம் என்பது மிகச்சரி ; ஆயின் சாதி வேற்றுமை , மத மோதல் இவற்றைத் தவிர்க்க “ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்பது எப்படி பாசிசமாகும் என்கிற கேள்வி என்னுள் எழுகிறது .

“மொழித் தூய்மைவாதம் ஓர் எல்லைக்கு மேல் பாசிசமாகத்தான் போய்முடியும்,”எனவும் , “ மொழி மாறும் தன்மையுடையது; மாறுவதனால்தான் அது உயிரோடு இருக்கிறது,”எனவும் சரியாகவே மதிப்பிடுகிறார் . திராவிட இயக்கம் தமிழுக்கு கொடுத்த சொற்கொடை குறித்து பெருமிதம் கொள்ளும் தொ.ப, பொதுவுடைமை இயக்கம் தமிழுக்கு அளித்த சொற்கொடை குறித்து பேசவில்லை . தமிழில் அறிவியல் நூல்களை கொண்டுவந்து தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய என்சிபிஹெச் பற்றி தொ.ப நன்கு அறிவாரே ! ஏனோ தெரியவில்லை அது குறித்தெல்லாம் பேசவில்லை. “ பொதுவுடைமை வளர்த்த தமிழ்” எனும் என் [சு.பொ.அ] நூல் இது பற்றி நிறைய பேசுகிறது . தோழர்கள் தேடி வாசிக்கவும்.

பெரியாரை “எதிர் பண்பாட்டாளராக” தொ.ப காண்கிறார் . ”எதிர் பண்பாட்டின்” தேவையை வற்புறுத்துகிறார் . அனைத்து விதமான ”ஆதிக்க பண்பாடுகளுக்கும்” எதிராக ஓர் ”மாற்றுப் பண்பாட்டை” கட்டி எழுப்ப வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது . அதற்கான சிந்தனை வாசலை அகலத்திறக்கவும் ; எதிரும் புதிருமான கேள்விகளை எழுப்பி விடைதேடவுமான காலகட்டத்தில் இந்நூல் வந்திருப்பது பாராட்டுக்குரியது .

இன்னும் பேசப் பேச நீளும் . இந்த நேர்காணல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொ.ப குறித்து எந்த இறுதி முடிவுக்கும் வந்துவிட முடியாது . வந்துவிடக்கூடாது . நேர்காணல் என்பதால் கேள்வி கேட்பவரின் பார்வைக் கோணம் ; கேள்விகளிலும் பதில்களிலும் நிச்சயம் இருக்கும் . எனவே தொ.ப வின் எழுத்துகளையும் ஆக்கங்களையும் தேடிப் படிப்பதே சரியான விவாத களம் அமைக்க உந்தும். இந்நூல் அவற்றை தேடி வாசிக்க ஓர் திறவுகோல் .

நூல் : சாதிகள் : உண்மையுமல்ல… பொய்மையுமல்ல…, [ நேர்காணல்கள் ]
ஆசிரியர் : தொ.பரமசிவன் 
விலை : ரூ. 270 /-
பக்கங்கள் : 232 

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி]லிட்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934

[email protected]

சு.பொ.அகத்தியலிங்கம்.
4/9/2022.
முகநூல் பதிவிலிருந்து

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்
புன்மையின் நாவுகள்
************************
மனித அரவம் தென்படாத
இந்தத் தெருவில்
தன்னந்தனியே
ஒருவண்ணத்துப்பூச்சி
பறந்து செல்வது
தனிமையின் துயரை
கூட்டவோ?

மனிதம் பட்டுப்போன நாட்களில்
துளிசிச் செடிகள் முற்றத்தில் தழைப்பதில்லை
வாயிற்கதவு திறந்து கிடக்கும் கோவில்களிலும்
மூலவர்கள் பிரார்த்தனைகளுக்கு
செவிமடுப்பதில்லை

இரத்த வெறி கொண்ட
புன்மையின் நாவுகள்
தெய்வங்கள் மதங்கள்
சாதிகள் கட்சிகள் என
வாழ்க்கையை
அழகாக சந்தைப்படுத்தும்போது
கடவுள்கள் கண்ணாடிப் பெட்டிக்குள்
விற்பனைக்கு காத்திருக்கும்
கொலுப்பொம்மைகளாகிறார்கள்

நீங்களும் நானும் ராட்சத காலடிகளின்
அழுக்குகளைத் தின்று கொண்டிருக்கும்
மீன்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்

கருணை சிறிதுமற்ற மனசாட்சி
முற்றிலும் பித்தேறி
பைத்திய தாண்டவம்
ஆடிக் கொண்டிருக்கிறது

தேடல
********
வேதனை பீறிடும் ஒரு முகத்தை கடந்திடும் போது
உங்களுக்கு என்னதோன்றும்?

துயரச் சாயல் படிந்த
உறவினரின் முகம்
உடைந்த நாற்காலியைப் போர்த்தி வைத்திருக்கும்

ஒரு பழந்துணி
ம் ஹூம் எதுவுமில்லை

கையறு நிலையில் யாசித்துக்கொண்டிருக்கும்
ஒரு முது கடவுள்
அவ்வளவு தான்

தங்கேஸ்
தமுஎகச
தேனி

ஒரு பூ எதையெல்லாம் செய்துவிடமுடிகிறது கவிதை – விக்னேஷ்குமார்

ஒரு பூ எதையெல்லாம் செய்துவிடமுடிகிறது கவிதை – விக்னேஷ்குமார்
ஒரு பூ
ஓர் ஆணிற்குப் பெண்ணின் நினைவாய்
ஒரு பெண்ணிற்கு ஆணின் நினைவில்

தெய்வங்கள் சூடிக்கொள்ளும்
மறதியின் ஒரு பூ
யாருக்குமே கிடைக்காது
மண்ணோடு மண்ணாகி
மறைகிறது ஒரு பூ

இங்கு எனக்குக் கிடைத்திருக்கும்
ஒரு பூ
ஒரேயொரு ஒற்றை இலவம் பூ
சிவந்தவிழ்ந்த இதழ்களும்
நடுவே காத்து நிற்கும் மகரந்தக் கூட்டமும்


எனக்கெனவும் ஒரு பூ இங்கு மலரத்தான் செய்கிறது

*************************************************************

ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு பெயர் உண்டு நம்மிடம்
மரங்களுக்கோ அவை ஏற்றுள்ள பெயர்கள்
நிச்சயம் வேறொன்றாகத்தான் இருக்கும்

அவை நமக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கும்
அந்த பெயரில் நம்மை நினைவு கூறும்
ஒவ்வொரு கனியிலும் பூவிலும் இலையிலுமென
அவற்றின் நினைவுகள் படர்ந்து நிற்பதாய் தோன்றுகிறது

நம் பெயரின் நினைவிலும் ஒரு பூ மலர்ந்திருக்கும்
ஒரு கனி காய்த்திருக்கும்
ஓர் இலை துளிர்த்திருக்கும்
உதிர்வதற்கு

விக்னேஷ்குமார்,
காஞ்சிபுரம்.

Dheivame satchi Book By Sa Thamizhselvan Bookreview By Thamizhmani. நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் தெய்வமே சாட்சி - அய். தமிழ்மணி

நூல் மதிப்புரை: ச. தமிழ்ச்செல்வனின் தெய்வமே சாட்சி – அய். தமிழ்மணி

பெண் மையமும்., ஆண் மயமும்.
                                   – அய்.தமிழ்மணி

நூல்: தெய்வமே சாட்சி
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 160 பக்கங்கள்
விலை: 150/-ரூபாய்
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யும்: thamizhbooks.com
“ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்பார்கள். நாட்டார் தெய்வங்களுக்குப் பின்னால் சந்தேகத்திற்கு இடமின்றி உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் ஒளிந்திருக்கிறது. இதை ’அவர்கள்’ புரிந்து கொண்டுள்ளதால் தான் இவ்வளவு வேகவேகமாகத் தலையிடுகிறார்கள். நாம் எப்படி சும்மா இருக்கமுடியும்.?” என்று முடிகிற இந்நூலின் கடைசிப் பத்தியின் வார்த்தைகளே இந்நூலுக்கான சாட்சியாக மேலெலும்பி நிற்கிறது.

ஆடி மாத வாக்கில் எங்கள் ஊரில் மழைக்கு கஞ்சி காய்ச்சி வணங்கி ஊரெல்லாம் ஊற்றுவார்கள். இன்னமும் கூட நடைமுறையில் தான் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபொழுது எங்கள் தெருவில் குடியிருந்த அணைப்பட்டிக் கிழவியிடம் இதைப்பற்றிக் கேட்டிருக்கிறேன். 

அவர் கதை சொல்லுவதில் வல்லவர். ஒரு கணத்தில் அனைவரையும் ஈர்த்துவிடுவார். சீலக்காரியம்மன் முத்தாலம்மன் கச்சையம்மன் என அம்மன் கதைகளோடு மாயாஜால தந்திரக் கதைகளும் அவர் சொல்லுவார். அவரிடம் விதவிதமான கதைகள் அடங்கிக் கிடந்தன. நாங்களும் பொழுது கிடைக்கும் பொழுதெல்லாம் அவர் வீட்டில் தான் அடங்கிக் கிடப்போம் அவரது கதைகளுக்காக., கதைப் பொக்கிஷம் அவர். இப்போது எங்கள் நெனப்புகளில் மட்டுமே இருக்கிறார். மழைக் கஞ்சி காய்ச்சுவது குறித்து அவர் சொன்ன கதை.,

“ஒரு காலத்துல மழ மும்மாரி பொழிஞ்சு மக்க எல்லாரும் செழிப்பாச் சந்தோசமா இருந்தாகலாம். எல்லாங் கெடைக்குதேங்கிற மெதப்புல., மண்ணும் பயிரும் கொழிக்கக் காரணமாயிருந்த மழைய மறந்துட்டாகலாம்., அதனால அந்த மழ மேகமெல்லாஞ் சேந்து ஒன்னாக் கூடிப் பேசுனாகலாம்..” நாங்களும் ஆவலோடு கண்கள் விரிய ம் எனக் கொட்டுவோம். 

“அதுல ஒரு மேகஞ் சொல்லுச்சாம்., இந்த மனுசப் பயலுகப் பாத்தியா., இன்னக்கி நம்மனாலதேன் நல்லாருக்காங்க., ஆனாத் துளிகூட நம்ம நெனப்பு இல்லையே., நன்றி இல்லாத இவெய்ங்கள என்னான்னு பாக்கணும்., ன்னுச்சாம்”

“இன்னோரு மேகஞ் சொல்லுச்சாம்., அவெக எப்படி இருந்தா நமக்கென்ன., நம்ம வேல விழுகுறது., அதச் செய்வோம்., இதப் போயிப் பேசிக்கிட்டு., ன்னுச்சாம்”

“அதுக்கு எல்லா மேகங்களும் ஒன்னாச் சேந்துக்கிட்டு., அந்த மேகத்தத் தள்ளி வச்சுருச்சாம்., அது மட்டுமில்லாம இனி இந்த ஒலகத்துல இந்த மனுசனுகளுக்கா நாம யாரும் பேயக்கூடாதுன்னு முடிவு செஞ்சாங்களாம்.”

“பாட்டி அப்ப மிருகங்கல்லாம் என்னா பண்ணும்..” என்ற என் கேள்விக்கு.,

“அதுகளுக்கென்னா அதுக் பொழப்ப அதுக பாத்துக்கிருங்க., நீ கதைக் கேளுடா..” எனத் தொடர்ந்தார்.

“அந்த முடிவுக்குப் பெறகு பல வருசமா ஒத்தத்துளி மழ இல்லியாம்., கொளம் குட்ட எல்லாம் வத்திருச்சாம்., ஆடு மாடு கன்டுக., கோழி குஞ்சுகன்னு எல்லாம் செத்து விழுந்துச்சாம்., தர பூராங் கட்டாந்தரயாகி புல்லு பூண்டு கூட மொழக்கிலயாம். மக்க பட்டினியால துடிச்சாகலாம்.. ஆரம்பத்துல மழயத் திட்டித் தீத்தவக., ஒரு நேரத்துல., அய்யா மழச்சாமி எங்களக் காப்பாத்துங்கன்னு மனசெறங்கி வேண்டுனாகலாம்.,” விரிந்து கிடந்த எங்கள் விழிகளுக்குள் அப்படி அப்படியே ஊடுருவி விட்டுத் தொடர்ந்தார்.

“நம்ம வேலைய நாம செய்வோம்ன்னு ஒரு மேகஞ் சொல்லுச்சுல நெனவு இருக்கா., ம்., அந்த மேகம் மட்டும்., மக்களோட இரஞ்சலுக்கு எரக்கப்பட்டு., பொழி பொழின்னு பொழிஞ்சுச்சாம்.,” எங்களுக்குள்ளும் சந்தோசம் பொழிய ஆவலாய்க் கேட்டோம். அவரும் பேரார்வத்துடன்.,

”தள்ளிவச்ச மேகம் இப்படிப் பொழிஞ்சா., மத்த மேகமெல்லாம் சும்மா இருக்குமா., அந்த மேகமெல்லாஞ் சேந்து., ஒனக்குப் பொழியிற பாக்கியம் இனி இல்லன்னு சொல்லி சாபம் விட்டாகலாம்., சொந்தக் கூட்டமே இப்படிச் செஞ்சதால., தூரமா எங்கேயோ போயிருச்சாம் அந்த நல்ல மேகம்.,”

“திடீர்ன்னு விழுந்த மழைய நம்பி இருந்தத வெதச்ச சனங்க திரும்ப மழையக் காணோமேன்னு., மழ வந்த தெச நோக்கிக் கும்பிட்டாகலாம். அந்தக்கூட்டத்துல ஒரு மனுசனுக்குள்ள அந்த நல்ல மேகம் எறங்கி., ஒங்க பவுசுல எங்கள மறந்துட்டீங்க., அதுனாலதே நாங்க ஒதுங்கிட்டோம்., இனி வருசா வருசம் ஆடில எங்கள நெனச்சு நீங்க ஊரே சேந்து வேப்பங்கொல கட்டி கஞ்சி காய்ச்சி ஊருக்கே ஊத்துங்க., எங்க மனங்குளுந்து உங்க மனசு நெறைய வெப்போம்ன்னு., அப்ப இருந்துதேன் இப்படிக் கஞ்சி காய்ச்சி ஊத்துறாக.,” ன்னு சொல்லி முடித்தார்.

“பாட்டி இதெப்ப நடந்துச்சு..”

“அதெனக்குத் தெரியாது., இது எம்பாட்டி சொல்லித்தேன் எனக்குத் தெரியும்., எம்பாட்டிக்கு அதோட பாட்டி சொல்லிருக்காலாம்., இல்லைன்னா என்னயப் போல ஒரு பாட்டி சொல்லிருக்கலாம் என்றார்.

சரி இந்தப் பாட்டிகதை என்ன சொல்ல வருகிறது. தோழர் தமிழ்ச்செல்வன் சொன்ன “அவர்கள்” என்கிற அவர்களின் மழைக்கடவுளை மறுத்து இயற்கையை முன்னிறுத்துகிறது. இதில் மதச் சார்போ சாதிச் சார்போ இல்லை. இயற்கையை வழங்கிய கொடையை மதிக்க வேண்டும் என்கிறது. ஆனால் இன்று சில குழு மனிதர்கள் இதற்குள்ளும் புகுந்து வருணபகவானே என குலவையிடுவதைப் பார்க்க முடிகிறது. அவ்வரு(ர்)ண குலவை எனபது இந்நூலில் கூறியது போல..

” கிபி 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பெருவீச்சுடன் புறப்பட்ட பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாகத் இத்தெய்வங்களைப் பெருமதக் கடவுள்களின் அம்சங்களாகவும் அவதாரங்களாகவும் திரித்து உள்வாங்கிக் கொண்டது பிற்கால வரலாறு. சுடலைமாடன் யாரு..? சிவபெருமான் அம்சமடா..” என்பதைப் போல மழைன்னா வருணபகவான் என  அன்றாடம் உழைக்கும் விவசாயக்குடும்பங்களின் இயற்கை மீதான கைகூப்பலை திரித்து வைத்திருக்கிறார்கள்.

நான் இந்த மழைக்கதையைக் கூறியதற்கு காரணம் இந்நூலில் எழுதப்பட்டுள்ள பெரும்பாலான அம்மன்களின் வாக்குகள் வறட்சியைப் போக்கி செழிப்பைத் தருவேன் என்கிற கனவின் வாக்குகளாகவோ மற்றும் சாமியாடிகளின் வாக்குகளாகவோ இருக்கிறது.

இதன் வாயிலாக ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும்., குற்றம் செய்தால் மண்ணும் மனசும் பாழ்பட்டுவிடும் என்பதும். அது வாழ்வியலைப் பாதிக்கும் என்பதுமாகும்.

இதன் போக்கில் இன்னும் சற்று உள்ளே போனோமானால் பெண்ணைத் தெய்வமாக வணங்க வேண்டும் என்கிற சமூகக் கருத்துக்கு எதிரான ஆணின் குற்ற அல்லது ஆதிக்கச்  செயல்களின் பரிகாரமாகவும் பார்க்கலாம்.

ஆணுக்குக் கீழாக பெண்ணை வைத்தல் என்பது மனித குல வளர்ச்சியில் சொத்துடமை வாரிசுரிமை என்ற இடத்தில் வந்து நிற்கிறது. எனக்கான வாரிசு என்ற ஆண் மனோபாவத்திலிருந்து பெண்ணே இங்கே சொத்தாக மாற்றப்படுகிறாள். இன்னும் ஆணின் பேராசை என்கிற வல்லாதிக்கமானது சொத்தை அபகரிப்பது வீரம் என்ற இடத்திலிருந்து பெண்களின் மீது பாய்கிறது. இது இன்று தனிமனிதனில் ஆரம்பித்து பெண்ணை குடும்ப கவுரவமாகச் சித்தரிப்பு செய்து வைத்திருக்கிறது.

பெரும்பாலும் இந்நூலில் சொல்லப்பட்ட கதைகள் எல்லாமே கடந்த சில நூற்றாண்டுகளுக்கு உள்ளானதாகவே இருக்கிறது. ”அவர்கள்” என்கிற அவர்களின் சமூக மற்றும் கருத்தியல் ஊடுருவலுக்குப் பின்னால் இக்கதைகள் நிகழந்தவையாக இருக்க முடியும் என்ற சிந்தனகளை ஏற்படுத்துகிறது.  

அவர்களின் வர்ணாசிரம அதர்மத்தின் பாடாக ஆண்மனம் சிதைக்கப்பட்டிருப்பதையும் பெண்களின் அத்தனை உரிமைகளும் காவு வாங்கப்படுவதும் என அதற்கான வழிநிலைகள் இன்னும் தொடரவே செய்கின்றன. கூடவே சாதி இதற்கு முதல் பெருப் பங்குதாரராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த ஆணவப்படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ( பொள்ளாச்சி மட்டுமல்ல இன்னும் பல ஊர்களைச் சொல்லலாம் ), சேலம் ஆத்தூர் இராஜலட்சுமி படுகொலை ( ராஜலட்சுமி மட்டுமா..? ) என அப்படியே இந்திய எல்லைக்குள் விரிந்தால் காஷ்மீர் மாநிலத்தில் கோயிலுக்குள் சிறுமி கற்பழிப்பென்று தேசம் முழுக்க எத்தனை எத்தனை அத்துமீறல்கள். அப்படியே உலக எல்லை என விரிந்தால் சொல்லவே வெட்கமும் வேதனையும் கொந்தளிப்பும் வந்து சேர்ந்துவிடுகிறது என்ன பொழப்புடா என மனதிற்குள்.

ஆனால் தோழர் ச.தமிழ்ச்செல்வனின் நாம் எப்படி சும்மா இருக்க முடியும் என்கிற வார்த்தைகள் நாம் எதையாவது இவைகளுக்கு எதிராகச் செய்துவிட வேண்டும் எனத் தெம்பூட்டுகிறது.

குறிப்பாக இந்நூலின் ஒவ்வொரு  கதைகளுக்குப் பின்னாலும் தோழர் தமிழ்ச்செல்வனின் பார்வை.,

“ஜென்னியும் ஒரு துர்க்கையம்மன் தான்.” என்ற இடத்திலிருந்து துவங்கி..”

“வாழ்க்கையை மேலும் அழகாக மாற்றுவதற்குத் தானே காதலே., வாழ்வையே பலி கொடுப்பதற்கா காதல்.?”

“பெண்ணை வைத்து வாழத் தெரியாத ஆண் முண்டமே உனக்கெல்லாம் எதற்கடா பெண் வாரிசு..”

“முத்தாலம்மனின் தொடர்ச்சி தானே கண்ணகி – முருகேசனின் கொலை”

“உண்மையில் ஒரு பாவமும் அறியாத அப்பெண்களின் கதறல் தான் கால வெளியெங்கும் காற்று வெளியெங்கும் நிரம்பித் ததும்பி நம்மை மூச்சு முட்ட வைக்கிறது..” என இதைப் போல எவ்வளவோ சொல்லிச் செல்கிறது.

ஆனாலும் இந்நூலின் கூறாக இந்நூலில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு பத்திகளை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

ஒன்று..

“இப்படியெல்லாம் நுட்பமாக யோசிப்பவர்களாகவும் கற்பனை வளம் மிக்கவர்களாகவும் தான் மக்கள் இருக்கிறார்கள். நம்பிக்கை சார்ந்த விசயங்களில் இப்படி இருக்கும் மக்கள் தங்கள் ஏழ்மைக்கு காரணம் என்ன .? யார்.? என்று யோசிப்பதில்லை.”

இரண்டு..

“நாம் வாழும் காலத்தின் ஆதிக்கச் சிந்தனைகளே நம் காலத்தின் சிந்தனையாக எல்லாவற்றின் மீதும் ஏறி நிற்கும் என்கிறது மார்க்சியம்”

இந்த இரண்டு பத்திகளுக்குமான தொடர்பினை ஏற்படுத்திவிட்டால் நாம் எதை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான கட்டியம் என்ன என்பது தெளிவாகிவிடும்.

இந்நூலில் உள்ள கதைகளும் அவைகளுக்குச் சாட்சியாகிவிடும்.

இந்நூலின் வாயிலாகச் சமூகத்தின் சாட்சியாக முக்கியமான பணி செய்திருக்கிறார் தோழர் ச.தமிழ்ச்செல்வன்.

Dheivame satchi Book By Sa Thamizhselvan Bookreview By Theni Sundar. நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் தெய்வமே சாட்சி - தேனி சுந்தர்

நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் தெய்வமே சாட்சி – தேனி சுந்தர்
நூல்: தெய்வமே சாட்சி
ஆசிரியர்: ச. தமிழ்ச்செல்வன்
விலை: 150
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

சாமி கதைகளும் சவுக்கடிகளும்..!

தெய்வமே சாட்சி என்கிற தலைப்புதான் சாந்தமானதாக தெரிகிறது. உள்ளே நுழைந்ததும் சவுக்கடி காத்திருக்கிறது..

கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பது போல பெண்களை கொன்றால் பாவம் கும்பிட்டால் போச்சு என்று காலங்காலமாக கொன்றும் கும்பிட்டும் நல்லவய்ங்க மாதிரியே திரியுற ஆணாதிக்க சமூகத்திற்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு சவுக்கடி கொடுத்துக் கொடுத்து தான் நம்மை அடுத்தடுத்து கடத்தி விடுகிறார் தோழர் தமிழ்ச் செல்வன்..

நிலவறையில் அடைத்துக் கொலை, கழுத்தை வெட்டிக் கொலை, உடன்கட்டை ஏற்றிக் கொலை, எரித்துக் கொலை, வார்த்தைகளால் கொலை, தீயிட்டு தற்கொலை, கிணற்றில் விழுந்து தற்கொலை இப்படி தாய், தகப்பன், அரசன், உள்ளூர் செல்வந்தன், கணவன், கொழுந்தன், வழிப் போக்கன், ஊரார், சொந்த சாதியார் என பலராலும் கொல்லப்பட்ட, தற்கொலைக்கு தூண்டப்பட்ட பெண்கள் தான் சாமிகளாக கும்பிடப் படுகின்றனர்.

வயசான கிழவனுக்கு கட்டிக் கொடுத்து அதனால செத்து உருவான சாமி, அம்மை வந்து செத்து உருவான சாமி, சந்தேகப்பட்டு புருசன், அண்ணன், தம்பிகளால கொலை செய்யப்பட்டு உருவான சாமிகள், பஞ்சம், பசி காரணமாக செத்து உருவான சாமிகள், சாதி மாறி காதலிச்சு அதனால கொலை செய்யப்பட்டு உருவான சாமிகள் இப்படி அதற்கான காரணங்கள் ஏராளம் இருக்கின்றன.

தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, மதுரை மாவட்ட சாமிகள் தான் நிறைய இருக்கின்றன. அதில் தேனி கொஞ்சம் அதிகமா தான் இருக்கு. தோழர் சத்யமாணிக்கம் நிறைய கதைகளை தொகுத்துக் கொடுத்திருக்கிறார்..

அதில் எங்க ஊர் கூத்தனாட்சி அம்மன் கதையும் உண்டு. அதில் சில திருத்தங்களும் இருக்கு. கூத்தனாட்சியை குதுரையில உக்காந்து விரட்டி போனவன் பேரு பட்டாணி. தப்பி ஓடும் போது கூத்தனாட்சி வச்சிருந்த மோர் பூராவும் கொட்டிப் போச்சு. அந்தப் பக்கத்துல இருக்க மண்ணு கூட இன்னும் வெள்ளையா இருக்கும். கேட்டா கூத்தனாட்சி கொட்டுன மோர் தான் என்று மக்கள் சொல்வாங்க. உள்ளூர் சிறுவர்களுக்கு கூத்தனாட்சி கோயில் தான் விடுமுறை நாள் சுற்றுலா தளம். கிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் இருந்து ரொம்ப தூரத்தில் கரட்டு அடிவாரத்தில் அமைந்துள்ளது கூத்தனாட்சி கோயில்.! அந்தக் காலத்துல மக்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்.

நாங்கள் சிறு வயதில், போகும் வழியில் இருபுறமும் பெரிய பெரிய மண்பானைகள் எல்லாம் மண்ணில் புதைந்த படி தெரிவதை பார்த்து இருக்கிறோம். தொல்லியல் ஆய்வுகள் பரவலாக கவனம் பெற்றுள்ள இன்றைய சூழலில் அதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எழுகிறது. முந்தி காலத்துல காட்டு வழி போக்குவரத்து இருந்திருக்கு. இந்தப் பக்கம் கூடி ஏறி மலையைக் கடந்து அந்தப் பக்கம் ராசபாளையம் போவாங்களாம் சனங்க. போற வழியெல்லாம் அங்கங்க அந்த கருப்பு, இந்த கருப்புன்னு நிறைய சிலைகள் இருக்கும். காட்டு வழிப் பயணமில்லையா, வழித் துணைக்கு வச்சிருக்கான் மனுசன்!

குழந்தையின்மையால் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, பிள்ளை வரம் கேட்டு இராமேஸ்வரம் போகையில் இடையில் சாக நேர்ந்த பெண் தான் மலட்டம்மா சாமி ஆகிறாள்…!

கணவன் இல்லை. பஞ்சம்.. கஞ்சிக்கு வழி இல்லை. பசியால் அழுகும் தன் குழந்தைகளுக்கு ரெண்டு வாழைப்பழம் புடுங்கிக்கொடுத்த ஒரு பெண், திருடன் என்று நினைத்து தோட்டத்துக் காவலாளியால் வெட்டிக் கொல்லப் படுகிறாள். துர்க்கையம்மன்.!

மாத விடாய் காரணமாக வீட்டை விட்டு தனியே வைக்கப் பட்ட ஒரு பெண், ஊரே தீப்பிடித்து எரியும் போதும், வெளியே வந்தா கெட்டது என்று உக்காந்த படியே எரிந்து சாம்பலாகிறாள். ஒரு துண்டுச் சீலை மட்டும் மிச்சம் கிடக்கிறது. சீலைக்காரி அம்மன் கதை..!

காலில் ஒட்டியதை உதறியதால் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட மணி முத்தம்மன்..!

வீட்டு முன்பு யாரோ சில ஆண்கள் உக்காந்து பேசியதால் அண்ணன் சந்தேகத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சீனியம்மன்..!

காதலுக்காக தான் விரும்பியவனை கவர்ந்து வரச் செய்து, அவன் ஈகோவால் தற்கொலை செய்து கொண்ட பிறகு தன்னையும் மாய்த்துக் கொள்ளும் சீனி முத்து அம்மன் கொஞ்சம் வித்தியாசம் தான்..!

அறியாமையாலும் ஆத்திரத்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி பெண்கள் கொல்லப்படுவதும் கொல்லப்பட்ட பெண்கள் சம்பந்தப் பட்ட குடும்ப உறுப்பினர்களின் நினைவிலும் கனவிலும் வந்து அவர்களை அலைக்களிப்பதும் அவர்களை ஆற்றுப்படுத்த, அந்த குற்ற உணர்வில் இருந்த விடுபட ஒரு பீடம் அமைத்து, கோயில் கட்டி, அல்லது குடம், செம்புகளில் நீரை நிரப்பி வழிபடுவதும் என காலங்காலமாக தொடர்கிறது. இன்ன காலம் என்று வரையறுக்க முடியாத காலந்தொட்டு கடந்த 20,30 ஆண்டுகளுக்குள் உருவான சாமிகளும் இதில் அடக்கம்.!

“மனிதன் ஒரே ஒரு முறை தான் கடவுளைப் படைத்தான். அன்று முதல் கடவுள் மனிதர்களைப் படைக்கத் தொடங்கினார்.. ” “மனிதன் மிகப் பெரியவன். ஏனெனில் அவன் கடவுளையே படைத்தவன்..” போன்ற வரிகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை.. சாமியைப் படைத்தவன் கூடவே சில நம்பிக்கைகளையும் படைக்கிறான்…

“”அதனால தான் அந்த ஊர்ல ஆலமரம், அரச மரம், பப்பாளி மரம்னு பால் வர்ற மரமே இல்லையாம்..!

அதனால தான் அந்தக் குடும்பத்துல ஆண் வாரிசே இல்லையாம்…!

அதனால தான் அந்த ஊரு மரம் பூ பூத்தாலும் காய் காய்க்கவே செய்யாதாம்…!

அதனால தான் அந்தக் குடும்பத்துல பெண் குழந்தைகள் நிலைக்குறதில்ல..!””

என்ன காரணத்தினால் இறந்தார்களோ அது தொடர்பான சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் மனிதன் உருவாக்கிக் கொள்கிறான் என்று உள்ளூர் உதாரணங்களை சொல்லும் தோழர் ச.தமிழ்ச்செல்வன் கடுமையான வறுமையால், தன் குழந்தைகளுக்கு பாலூட்ட கூட முடியாமல் துன்புற்ற ஜென்னி மார்க்ஸ் வரலாற்றை நினைவூட்டி மார்க்ஸ் கல்லறைக்கு செல்லும் போது ரொட்டித் துண்டு வாங்கிச் செல்வதையும் பொருத்திக் காட்டியுள்ளார். பிடிமண் எடுத்து கோயில் கட்டுவதை சொல்லும் போதே ஜாலியன் வாலாபாக் பிடி மண் எடுத்து வந்து தன் கொள்கையை, அநீதிக்கு எதிரான கோபத்தை தணியாமல் பார்த்துக் கொண்ட பகத்சிங்கை சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர்..

இந்த சாமி உருவாக்கக்கங்களிலும் வழிபாட்டு, நம்பிக்கை, கருத்து உருவாக்கங்களில் அவ்வப்போதைய ஆளும் வர்க்க சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தும் என்பதை எடுத்துச் சொல்லும் தோழர் தமிழ்ச்செல்வன் ஒரு வகையில் இத்தகைய படைப்பு மனம் கொண்ட மக்களை முற்போக்கு தோசை வழியில் கொண்டு செல்லும் தந்திரங்கள் நமக்குத் தெரியவில்லையே என்று ஆதங்கப் படுகிறார்..!

உடன்கட்டை ஏறுதல் என்று காலங்காலமாக சொல்லி வருகிறோம். உண்மையில் அது உடன்கட்டை ஏற்றுதல். எங்கோ வங்கத்தில், வடக்கில் நடந்தது அல்ல.. நம்மூரிலும் காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் ஒன்றும் நியாயவான்கள் அல்ல என்பதை உரத்துச் சொல்கிறார். அதே போல ஆணவக் கொலைகளுக்கு இன்று நேற்றல்ல.. ஆயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு என்கிறார். ஆக, பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்திய சமூகம் இன்று திடீரென்று மாறி விடவில்லை. ஆண்டாண்டு காலமாக தனது சாதிய கட்டுமானத்தாலும் ஆணாதிக்க சிந்தனையாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளால், வார்த்தைகளால், சமூக உளவியலால் கேவலமான இந்த சாதனைக்கு தொடர்ந்து போராடி வந்திருக்கிறது என்பதை அறிய செய்கிறார்.

உன் நாட்டு குடிமகள் என்பதால், உன் மகள் என்பதால், உன் மனைவி என்பதால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?!

பெண் உடல் தான் குடும்ப மானம், குல மானம், சாதி மானம், மத மானம், ஊர் மானம், தேச மானம் எல்லாத்துக்கும் பொறுப்பு.. இது எப்படி சரியாக இருக்கும்..?!

ஏன் எதற்கு என்ற அறிவியல் பார்வை இல்லை. சட்டம், உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.. பிரிக்கவில்லையா பிரிந்து போகலாம்.. பிரச்சினையா நீதி கோரலாம்.. சாவு எப்படி தீர்வாக இருக்க முடியும்..?

தன்னை நிரூபிக்க பெண் தான் வழுக்குப் பாறை ஏற வேண்டுமா? தீக்குளிக்க வேண்டுமா? என்னங்கடா உங்க சட்டம் என்று எகிறி அடிக்கிறார் நூலாசிரியர்..!

ஆணானப்பட்ட அமெரிக்காவிலேயே 45% பேர் இன்னும் பேய்களை நம்புகிறார்கள்..! நாட்டுப்புற தெய்வங்களில் கிட்டத்தட்ட 80% சதவீதமானோர் அகால மரணமடைந்தவர்கள்.. கால் மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள் என ஆங்காங்கே சொல்லப்படும் புள்ளிவிபரங்கள் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைவதாய் உள்ளது.

இன்னமட்டு, பிடிசாதகமா என்பன போன்ற வார்த்தைகளை அப்படியே மக்கள் மொழியில் பயன்படுத்தி இருப்பது ரசிக்கும் படியாக இருக்கிறது..

ஒரே.. ஒரே.. என கூப்பாடு போட்டு எளிய, சிறிய, பன்முகப் பண்பாட்டு கூறுகளை அழித்தொழிக்க பார்க்கிற இந்துத்வ அரசியல் முன்னெடுப்புகளை உள்வாங்கி,
கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் பொருத்தி எதிர்காலத்திற்கு நாம் செய்ய வேண்டியவை குறித்தும் சிந்திக்க வைத்திருக்கிறார்..

ஒரு ஆணாக வெட்கப்படவும் ஒரு ஆணாதிக்க சமூகமாக குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவும் வேண்டும் நாம்..

சவுக்கடி நிச்சயம்..! அவசியம் படிங்க..!