இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 3 நேருவும் வேளாண் உள்கட்டமைப்பும் (1951-1964) – பேரா.பு.அன்பழகன்
இந்தியா சுமார் 200ஆண்டுகள் காலனி ஆதிக்கத்திலிருந்த காலத்தில் தன்சொந்த அடையாளங்களை இழந்திருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நவீன தொழில்நுட்பம் உலக அளவில் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தது எனவே இந்தியா உலக நாடுகளுடன் போட்டியிட்டு வளரவேண்டிய நிலைக்கு வந்தது. அதிக அளவிலான வறுமை, கல்வியறிவின்மை, வேளாண்மையில் பாரம்பரிய பின்பற்றல், பாரம்பரிய கிராமப்புறத்து தொழில்களை அழித்தொழித்தது, குறைவான உற்பத்தித் திறன், நிலப்பிரபுத்துவம், இடைத்தரகர்களின் கொடுமைகள், அளவிற்கு அதிகமான வேளாண்மையின் மீதான வரி, வங்காளப் பஞ்சம், பாக்கிஸ்தானிலிருந்து அகதிகள் வருகை, உணவுப் பற்றாக்குறை, பணவீக்கம், அதிக அளவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நிலமற்ற வேளாண்மை கூலிகளாக இருந்தது போன்றவற்றைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. குறிப்பாக வேளாண் துறையில் உடனடி நடவடிக்கையாக ஜமீன்தாரி ஒழிப்பு, குத்தகைச் சீர்திருத்தம், கூட்டுறவு வேளாண்மை, சந்தைப்படுத்துதல், கடன் வசதி, போன்றவை இருந்தது (Sharma 2020). பல்வேறு துறைகளை வளர்ச்சியடையச் செய்யவும் பொருளாதார மேம்பாட்டை அடையவும் நேரு தலைமையிலான அரசுத் திட்டங்களை வகுத்தது. நேரு கலப்பு பொருளாதார முறையினை பின்பற்றினார். 15 மார்ச் 1950ல் நேருவைத் தலைவராகவும் பலதுறைகளின் அறிஞர்களை உறுப்பினராக கொண்டு திட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது (Bipan Chandra et al 2000). மாநில அரசுகள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் உயர் அதிகார பீடமாகத் திட்டக்குழு செயல்பட்டது. நாட்டின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில் எவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதை வடிவமைத்துக் கொடுத்தது திட்டக் குழு (ஹரீஷ்கரே 2022). வேளாண்மை, இந்திய அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையில் பட்டியல் பிரிவு இரண்டில் 14ன் படி மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். ஆனால் சில அம்சங்கள் கூட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
வேளாண்மையும், தொழில் துறையும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. தொழிற் புரட்சியின் விளைவால் இயந்திரக் கருவிகள், வேளாண் சாதனங்கள், ரசாயன உரம், மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு பல நாடுகள் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்தது. இதுபோல் தொழில் துறைக்குத் தேவையானதைக் காப்பி, ரப்பர், சணல், பருத்தி, தேயிலை, கரும்பு போன்றவற்றை அளிக்கிறது. இரும்பு எஃகு, ரசாயனப் பொருட்கள், இயந்திரச் சாதனங்கள் போன்றவை நேரடியாகவே வேளாண்மைக்கான இடுபொருட்களை அளிக்கிறது. இதுபோல் பணித்துறை குறிப்பாக வர்த்தகம், நிதி நிறுவனங்கள், போக்குவரத்து வேளாண்மைத் துறையுடன் நெருங்கியத் தொடர்புடையது. எனவேதான் வேளாண்மைத் துறையினை இந்தியாவின் இதயம், முதுகெலும்பு என்று அடையாள படுத்தப்படுகிறது.
நேரு, தொழில் மற்றும் வேளாண்மை இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்தார். நவம்பர் 1952ல் நேரு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது “நாங்கள் நிச்சயமாகத் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஆனால் தற்போதைய சூழலில் விவசாயம், உணவு மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நமது அடித்தளமான விவசாயம் வலுவாக இல்லாவிட்டால் நாம் உருவாக்க விரும்பும் தொழிலுக்கு வலுவான அடித்தளம் இருக்காது” என்றார். எனவே விவசாய வளர்ச்சியானது தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையானது என்று குறிப்பிட்டார். வேளாண்மையில் சீர்திருத்தம், பெரிய நீர்ப்பாசன கட்டமைப்பு திட்டங்கள், கூட்டுறவுக் கடன் நிறுவனங்களை வலுப்படுத்துவது, இடைத்தரகர்களை ஒழிப்பது, உழுபவர்களுக்கு நில உரிமை, சமுதாய மேம்பாட்டுத் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட திட்டங்கள், தீவிர பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தில் இரண்டு முக்கிய நோக்கங்கள் இடைத்தரகர்களை ஒழிப்பது, நில உச்சவரம்பு ஆகியனவாம். இச்சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் உபரியான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் இவ்விவசாயிகள் கடினமான உழைத்து வேளாண் விளைச்சலைப் பெருக்கும் நோக்கில் ஈடுபட்டனர். அதேசமயம் பகிர்ந்தளிக்கப்பட்ட உபரி நிலங்களைவிட உபரியாக கண்டறியப்பட்ட நிலங்கள் பல்வேறு காரணங்களினால் (அரசியல் மற்றும் சட்டச் சிக்கல்கள்) கையகப்படுத்த இயலாமல் இருந்தது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வெகுசில மாநிலங்கள் மட்டுமே நிலச் சீர்திருத்தங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தியிருந்தது. எனவே நிலச்சீர்திருத்தம் நேருவின் ஆட்சிக் காலத்தில் முழுமையாக வெற்றிபெறவில்லை என்றே குறிப்பிட வேண்டும் (Tirthankar Roy 2020).
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் முதனம்மையான பிரச்சனையாக உணவு பற்றாக்குறை இருந்தது. இதனை போக்க நீண்ட கால மற்றும் குறுகிய காலத் தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறுகிய காலத் தீர்வாக இந்திய அரசு அமெரிக்காவுடன் பி.எல் 480 என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அமெரிக்காவின் உபரி உணவுப் பொருட்களை 1956 முதல் 1966 வரை இறக்குமதி செய்து உணவு பற்றாக்குறையினைப் போக்கியது. 1956ல் 3 மில்லியன் டன் உணவு தானியம் இறக்குமதி செய்யப்பட்டது இது 1963ல் 4.5 மில்லியன் டன்னாகவும், 1966ல் 10 மில்லின் டன்னாகவும் அதிகரித்தது (Manas Kumar Das, Contemporary History of India from 1947-2010) நீண்டகால நோக்கில் நேருவின் வேளாண்மை வளர்ச்சி கொள்கையினை நான்கு முக்கியக் குழுக்களாகப் பிரிக்கலாம் 1) உழவர் மேம்பாட்டிற்கானது, 2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 3) கிராமப்புற கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் இடுபொருட்களின் தேவைகளுக்கான உற்பத்திப் பகிர்வு, 4) வேளாண்மை மேம்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை துரிதப்படுத்துதல் ஆகும் (Swaminathan 1990). வேளாண்மைக்கான அடிப்படை கட்டமைப்பான நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண் ஆராய்ச்சி, கடன் வசதி, சந்தைப் படுத்துதல், குத்தகை சீர்திருத்தம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. உழவர்கள் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு 1964ல் வேளாண் விளைபொருட்களுக்கான ஊக்க விலைக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண் விளைபொருட்களுக்கு ஆதரவு விலையினை நிருணயம் செய்ய வேளாண் விலைக் குழு அமைக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 கொண்டுவரப்பட்டு உற்பத்தி, பகிர்வு பொருட்களின் விலை சரிசெய்யப்பட்டன.
ஜே.சி.குமரப்பா குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்திய வேளாண்மைக்கான முன்னெடுப்பினை 1951ல் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் மொத்த செலவு ரூ.1960 கோடியாகும் இதில் வேளாண்மைக்கு ரூ.601 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது அதாவது மொத்தத்தில் 31 விழுக்காடு பங்காகும். இதன் ஒருபகுதியாக நீர்ப்பாசன வசதியினை உருவாக்கப் பெரிய அணைகளான ஹிராகுட், பக்ரா நங்கல், சட்லெட்ஜ், நாகார்ஜூன சாகர், பவானி சாகர் கட்டப்பட்டது, இவற்றை நேரு இந்தியாவின் ‘நவீனக் கோவில்கள் என அழைத்தார். இந்தியப் பிரிவினையின்போது அதிகமான அகதிகள் பஞ்சாப் பகுதியில் வந்தடைந்தனர் இவர்களில் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்தனர். எனவே அரசியல் அழுத்தம் மற்றும் அகதிகளாக வந்த மக்களின் வாழ்நிலையினை கருத்தில் கொண்டு நீர்ப்பாசன திட்டத்தைப் பஞ்சாப் மாநிலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் கிராமப்புற மேம்பாட்டிற்கும் நிலச் சீர்திருத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது (Tirthankar Roy 2020). வேளாண்மை துறைக்கு முன்னுரை அளித்திருந்தாலும் தொழில் துறையின் வளர்ச்சியினை விரைவுபடுத்த வேண்டியிருந்தது. இதற்கு அடிப்படைத் தேவை ‘மின்சாரம்’ எனவே வேளாண்மை-தொழில் வளர்ச்சிக்கும் சேர்த்து மிகப்பெரிய நீர்த் தேக்கங்களைக் கட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டது (கே.என்.ராஜ் 2022). உரத்தொழிற்சாலை, எஃகு ஆலைகள் போன்றவை வேளாண் மேம்பாட்டிற்கு அடிப்படையானது எனவே இவற்றைத் துவக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 1950ல் ஜவுளி கொள்கை மாற்றியமைக்கப்பட்டது. இதனால் ஜவுளி தொழில் மற்றும் தோட்டப் பயிர்கள் மீது தனியார் முதலீடுகள் அதிகரித்தது. கைத்தறித் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தியாவில் சிறு நிலவுடையாளர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் அறிவியல் பூர்வமான வேளாண்மையினை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது எனவே கூட்டுறவு பயிர்செய்யும் முறையினைக் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் அதிக அளவிற்கான நிலங்கள் இம்முறையின் கீழ் வந்துவிடும் என்றார். ஆனால் நடப்பில் இது வெற்றிபெறவில்லை. அறிவியல் பூர்வமான நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு மற்றும் உயிர் ஊட்டச்சத்து, நிலம் சரியாகப் பயன்படுத்துதல், உணவு தானிய சேமிப்பு போன்றவை சுற்றுப்புறச் சூழலியல் வழியாகச் சாத்தியமாகும் என்ற அடிப்படையில் இதற்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேளாண்மை வளர்ச்சியினை அடையக் கிராமப்புறச் சாலை, மின்சாரம், வேளாண் சந்தை போன்ற கட்டமைப்புகள் இன்றி முடியாது என்று கருதினார் (Swaminathan 1990).
கிராமப்புற மக்களின் வாழ்நிலையினை மேம்படுத்தத் தகவல்தொடர்பு, சுகாதாரம், கல்வி ஆகிய நிலைகளை உயர்த்தி வேளாண்மையில் மேம்பட்ட விதைகள், ரசாயன உரங்கள் பயன்படுத்தி உணவு தானிய உற்பத்தியினை அதிகரிக்க இரண்டு திட்டங்களான 1) 1952ல் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் (Community Development Project) என்ற வேளாண்மை விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. 2) பஞ்சாயத்து ராஜ் குறித்து ஆய்விட 1957ல் பல்வந்ராய் மேத்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டது அரசின் அதிகார வர்க்கமானது இதில் போதுமான ஈடுபாட்டினை காட்டவில்லை என்று குற்றம் சாட்டி பல்வேறு பரிந்துரைகளை இக்குழு அரசுக்கு வழங்கியது (அன்சர் அலி 1972). இதன் அடிப்படையில் பஞ்சாயத்து ராஜ் 1959ல் கொண்டுவரப்பட்டது.
கரும்பு, கோதுமை, சணல் போன்றவற்றில் புதிய வகை விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1954ல் தேசிய அளவில் மாடுகளின் கொள்ளைநோய் ஒழிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1958ல் தேசிய வேளாண்மை கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. கட்டாக்கில், மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் தொழில் துறைக்கு (ரூ.1080 கோடி, அதாவது மொத்தத்தில் 24 விழுக்காடு ஒதுக்கீடு) முன்னுரிமை அளித்தாலும் வேளாண் துறைக்கான (ரூ.950 கோடி, அதாவது மொத்தத்தில் 20 விழுக்காடு பங்கு) முன்னுரிமையும் தொடர்ந்தது. தொழில் துறை வளர்ச்சி ஆண்டுக்கு 7 விழுக்காடு என்ற அளவினை அடைய வேளாண் துறையின் உயர் வளர்ச்சியின்றி அடைய முடியாது என்று கருதப்பட்டது. உண்மையில் பாதிக்கு மேற்பட்ட தொழில்கள் வேளாண் தொழிலினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மேலும் தொழில் துறையினைவிட வேளாண் துறை வலுவான அடிப்படையினைக் கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் மொத்த ஒதுக்கீடான ரூ.8580 கோடியில் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது மொத்த தொகையில் 21 விழுக்காடு ஆகும். இந்த திட்ட காலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட வேளாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டது. வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்ட காலத்தில் உணவு தானிய உற்பத்தி, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, சணல் போன்றவை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் வேளாண்மையில் அடைந்த முன்னேற்றம் இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் அடையவில்லை (முதல் ஐந்தாண்டு திட்டத்தில் உணவு தானிய உற்பத்தியின் இலக்கு 61.6 மில்லியன் டன் ஆனால் உண்மையில் 65.8 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது திட்டக் காலத்தில் இதன் இலக்கு 80.5 மில்லின் டன் ஆகும் ஆனால் 79.7 மில்லியன் டன் உற்பத்தியை அடைந்திருந்தது). உணவு தானிய உற்பத்தி மற்றும் அளிப்பு குறைவான அளவிற்கு வளர்ச்சியினை அடைந்திருந்தது ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பின் விளைவால் உணவுத் தேவை அதிகமாக இருந்தது (அன்சர் அலி 1972). இதனால் பணவீக்கம் அதிகரித்தது. உணவு தானிய தேவையினை இரண்டாம் திட்டக் காலத்தில் சரியாகக் கணிக்கத் தவறியிருந்தது. இந்தியப் பொருளியல் அறிஞரான கே.என்.ராஜ் அவர்களின் கருத்துப்படி “1950களின் தொடக்கத்தில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை உயர்வு மிகப் பெரிய நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியது. அத்தியாவசிய உணவு தானியங்களின் விலை உயரும்போது, குறைந்த வருவாய்ப் பிரிவினரை அது வெகுவாகப் பாதிக்கிறது. அதனால் திட்டமிட்டபடி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தடைகள் ஏற்பட்டுவிடுகின்றன” என்றார் (இந்து தமிழ் திசை, 31.08.2022, பக்கம் 9).
அட்டவணை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி (விழுக்காட்டில்)
விவரங்கள் | 1900-01முதல் 1946-47 வரை | 1950-51 முதல் 1964-65 வரை |
---|---|---|
முதன்மைத் துறை | 0.4 | 2.6 |
தொழில் துறை | 1.5 | 6.8 |
பணித் துறை | 1.7 | 4.5 |
ஓட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP | 0.9 | 4.0 |
தலா வருமானம் (GDP யில்) | 0.1 | 1.9 |
மக்கள் தொகை | 0.8 | 2.0 |
குறிப்பு: 1947க்கு முந்தைய புள்ளிவிவரம் பிரிக்கப்படாத இந்தியாவைப் பற்றியது.
ஆதாரம்: Pulapre Balakrishnan (2007): “Visible Hand: Public Policy and Economic Growth in the Nehru Era,” CDS, WP:391 (www.cds.edu).
1951-1956ஆண்டுகளுக்கிடையே வேளாண் உற்பத்தியானது 17 விழுக்காடு அதிகரித்தது ஆனால் தொடர்ந்து பருவ மழை பொய்த்ததினால் 1956-1961 ஆண்டுகளில் இது 16 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது. ஒட்டு மொத்தத்தில் உணவு உற்பத்தியானது 108 மில்லியன் டன்னாக (1951ல் 55 மில்லின் டன்னாக இருந்தது) நேருவின் காலகட்டத்தில் அதிகரித்தது. ஆனால் இது உணவுத் தேவையினை நிறைவுசெய்யவில்லை எனவே 4 மில்லின் டன் உணவு தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. வேளாண் உற்பத்தித் திறன் சிறிய அளவிலே அதிகரித்தது. நிலச்சுவாந்தாரர்களின் கடுமையான எதிர்ப்பினால் நிலச் சீர்திருத்தம் பெரிய அளவிற்கு வெற்றியடையவில்லை. நேரு பொதுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்ததால் வேளாண்மையில் தனியார்த் துறை கால்பதிக்காமல் போனது. விவசாயிகளின் தலைவராக அறியப்பட்ட சௌத்ரி சரண் சிங் நேருவின் விவசாயக் கொள்கையினைக் கடுமையாக எதிர்த்தார். 1951 முதல் 1964-65 முடிய உள்ள காலகட்டங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4 விழுக்காட்டினை எட்டியது. 1949-50 மற்றும் 1967-98ஆம் ஆண்டுகளுக்கிடையே உணவு உற்பத்தியில் 30 விழுக்காடு அதிகரித்தது ஆனால் உணவல்லாத உற்பத்தியில் 8 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது (அன்சர் அலி 1972). இது காலனி ஆதிக்க ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியைவிட அதிக அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொழில் துறையின் வளர்ச்சியானது ஆண்டுக்கு 7 விழுக்காடும், வேளாண் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 3 விழுக்காடும் இருந்தது. இது ஒப்பீட்டு அளவில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளைவிட அப்போது அதிக அளவிலே இருந்தது. அதேசமயம் அதிகரித்த மக்கள் தொகைக்குத் தேவையான அளவிற்கு உணவு உற்பத்தி நடைபெறாததால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருந்தது. வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டதால் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. 1965-66 மற்றும் 1967-68ல் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக வேளாண்மை உற்பத்தி அதிகமாகப் பாதிக்கப்பட்டது. 1962ல் நிகழ்ந்த சீன படையெடுப்பு இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்தது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டது. வேளாண்மையின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தினாலும், நேருவின் ஆட்சிக்காலத்தில் இடைத்தரகர்கள் ஒழிப்பில் முழு அளவிற்கு வெற்றிபெறவில்லை, புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளால் உடனடியாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் நிலவியது போன்றவை வேளாண் வளர்ச்சியின் தடைக்கற்களாக அறியப்படுகிறது.
நேருவின் காலகட்டத்தில் பொதுத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அரசின் முதலீடானது 1950-1964ஆண்டுகளுக்கிடையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.9 விழுக்காடாக இருந்தது (Tirthankar Roy 2020) இதனால் மின்சார உற்பத்தி, நீர்ப்பாசனம், ரசாயன உர உற்பத்தி போன்றவை தொடங்கப்பட்டு வேளாண்மை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இதுபோல் தொழில் துறையின் மீதான முதலீடானது வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலிருந்தது. டிராக்டர் உற்பத்தி தொழிற்சாலை, நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு தேவையான சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலை, ரசாயன உரம் தயாரிக்கும் தொழிற்சாலை போற்றவை நேரடியாகவே வேளாண்மையினை தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அழைத்துச் சென்றது. தரமான விதைகள், வேளாண் ஆய்வகங்கள் போன்றவையும் வேளாண்மை வளர்ச்சியினை மேம்பாடு அடையச் செய்வதற்கு உதவியது. தொழில் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பான சாலை, பாலங்கள் போன்றவை வேளாண்மை மேம்பட வழிவகுத்தது. இந்தியாவின் நிலவிவந்த வறுமையினை ஒழிக்க உணவு உற்பத்தியில் சுயச்சார்பினை அடையவும், வேலைவாய்ப்பினை அதிகரிப்பதையும் முதன்மையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. நேருவின் அயல் நாட்டுப் பொருளாதாரக் கொள்கை அயல் நாட்டுப் போட்டியினைத் தவிர்க கட்டுப்பாடான (மூடிய) பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்பட்டது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க பொது-தனியார்த் துறைகள் ஊக்குவிக்கப்பட்டது. இதற்காக இறக்குமதி சார்புநிலை பின்பற்றப்பட்டது. தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால் அளவிற்கு அதிகமான மனித ஆற்றல் வேளாண்மையிலிருந்தது தொழில் துறைக்கு மடைமாற்ற வழிவகை செய்தது. நேரு ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியைவிட வேளாண்மை வளர்ச்சி அடைந்ததால் கிராமப்புற வறுமை குறைந்ததாக மான்டெக் சிங் அலுவாலியா குறிப்பிடுகிறார். இதுபோல் தல வருமானம் காலனி ஆதிக்கத்திலிருந்ததைவிட 50 விழுக்காடு நேரு காலத்தில் அதிகரித்திருந்தது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தது.
நேருவின் ஆட்சிக்காலம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து அவர் மறைந்த 1964ஆம் ஆண்டுவரை உள்ளடக்கியதாகும். இக்காலகட்டங்களில் பொதுவாக நோக்கும்போது இந்திய வேளாண்மை புறக்கணிக்கப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது. வேளாண்மையில் நிறுவன மாற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது ஆனால் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் மட்டுமே வேளாண்மைக்கு மொத்த திட்டச் செலவில் அதிக அளவாக ஒதுக்கீடு (வேளாண்மை மற்றும் நீர்ப் பாசனத்திற்கு 31 விழுக்காடு) செய்யப்பட்டிருந்தது அதற்கு அடுத்துவந்த ஐந்தாண்டு திட்டங்களில் ஒதுக்கீடு (விழுக்காட்டு நிலையில்) குறைக்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் திட்ட காலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்ததற்கு முக்கிய காரணம் கூட்டுறவு வேளாண்மை, உள்கட்டமைப்பு, வேளாண் ஆராய்ச்சி, நிலச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது, சாகுபடி பரப்பு அதிகரித்ததும் ஆகும். புதிய வேளாண்மை கொள்கை நடைமுறைகள் இயற்கையாகவே வேளாண்மை சிறப்பாகப் பயிரிடும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இம்முறைகளினால், இந்தியா எதிர்கொண்ட உணவு பஞ்சங்களை எளிதாகக் கடந்துவர முடிந்தது (Bipan Cheandra et al 2008). ஆனால் 1960களின் பிற்பகுதியில் வேளாண்மையில் தேக்கநிலை உண்டானது. இதற்கு முக்கியக் காரணம் மக்கள் தொகை அதிகரிப்பாகும். அதிகரித்த மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய முடியாமல் போனது எனவே 1960களில் பிற்பகுதியில் உணவு தட்டுப்பாடு நிலவியது.
– பேரா.பு.அன்பழகன்