புத்தக தூதுவர்களை உருவாக்குவது அவசியம் கட்டுரை – விழியன்
நிறைய பதிப்பகங்கள் தற்சமயம் அரசுப்பள்ளிகளுக்குப் பள்ளிகளுக்கும் நூல்களைக் கொடையாக கொடுக்கும் பட்சத்தில் நிறையத் தள்ளுபடி கொடுத்து வாசிப்பினை ஊக்குவிக்கின்றனர். நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகளுக்குக் கொடையாக புத்தகங்களைக் கொடுக்க முன்வருகின்றனர். மிகவும் வரவேற்கத்தக்க முன்னெடுப்பு. ஆனால் அதே சமயம் புத்தகத் தூதுவர்களை எல்லா இடங்களிலும் உருவாக்க வேண்டியுள்ளது. புத்தகம் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்குத் தூதுவர்களை உருவாக்குவதும் அவசியமாக உள்ளது.
யாரிந்த புத்தக தூதுவர்கள்?
புத்தகங்கள் இருக்கின்றன, குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இடையே ஓர் இணைப்புப்பாலம் தேவைப்படுகின்றது. எல்லா குழந்தைகளும் உடனடியாக வாசிக்க துவங்குவதில்லை. புத்தகத்தைப் பிடித்தவுடன் (வாசிக்க தெரிந்தும்) படிப்பதில்லை. அவர்களை எவ்வளவு நெருக்கத்திற்கு அழைத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு நெருக்கத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு ஏற்பாடு தேவையாக உள்ளது. குழந்தைகள் எல்லோரும் ஒன்றுபோல இல்லை அல்லவா. இந்த இணைப்புத்தான் புத்தகத் தூதுவர்கள். இவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம், பெற்றோர்களாக இருக்கலாம், தன்னார்வலர்களாக இருக்கலாம். ஒரு வரியின் புத்தகத்துடன் இணைப்பினை ஏற்படுத்துபவர்கள்.
என்ன செய்யலாம் புத்தகத் தூதுவர்கள்?
புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளின் வயது, வாசிப்புத்திறன், சுவைக்கு ஏற்ப புத்தகங்களை கொடுத்துப் பரிசோதிக்கலாம். சில குழந்தைகளுக்குத் தனியாக வாசிக்க வராது, அப்போது கூட்டு வாசிப்பில் ஈடுபடுத்தலாம். ஒரு குழந்தை ஒரு பக்கமே ஒரு சில வரிகளோ படிக்க வைத்து அடுத்த குழந்தையை அடுத்த சில வரிகள் என தொடரலாம். தானும் வாசித்துக்காட்டலாம். பின்னர், வாசித்த புத்தகம்/கதையைப் பற்றி தங்கள் அனுபவங்களைக் கூறலாம். கட்டாயம் இல்லை. அதில் வரும் முக்கிய பாத்திரங்கள், வேறு எப்படிக் கதையைச் சொல்லி இருக்கலாம், பிடித்த அம்சம் என்ன எனப் பேச வைக்கலாம். தனியாகச் சென்று வாசித்தவர்களையும் அவர்களின் அனுபவத்தைச் கூற சொல்லலாம். அங்கிருந்து அவர்களே கதைகளை உருவாக்க ஊக்குவிக்கலாம்.
கதைகள் மட்டுமில்லாமல், கூட்டாக பாடல்களைப் பாடலாம். பாட்டிற்கேற்ற மெட்டினை குழந்தைகளை உருவாக்கச்சொல்லலாம். பயிற்சி பெற்ற பாடல்களைப் பள்ளி/உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் அரங்கேற்றலாம். கதைகளைச் சொல்லவும் உருவாக்கவும் செய்யலாம். புத்தகங்களோடு நிற்காமல் தினசரிகளை வாசித்தல், அறிவியல் குழந்தைகள் இதழ்களை வாசித்தல் போன்ற செயல்பாடுகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்த வைக்கலாம்.
புத்தகத்தூதுவரிடம் என்ன தேவை?
புத்தகங்களை கொண்டு செல்பவர்கள் நல்ல வாசகர்களாக இருப்பது முக்கியம். அப்படி வாசகர்களாக இருக்கும்பட்சத்தில் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் அவர்களால் செயலாற்ற முடியும். குழந்தைகள் மீது ஏராளமான ப்ரியம் இருந்தால் எதையும் செய்திடலாம். மிக முக்கியமாக இது ஒரு தொடர் செயல்பாடு. இன்று ஆரம்பித்து நாளையோ நாளை மறுநாளைப் பலன் கிடைத்துவிடாது. அது சில மாதங்கள் எடுக்கலாம், வருடங்கள் கழித்தும் பலன் தரலாம். பலன் என்பது குழந்தைகளுக்குள் நடக்கும் ஆரோக்யமான மாற்றங்கள். ஆக முயற்சிகளை எடுக்க தயங்கவே கூடாது, அதே சமயம் தோல்வியைக் கண்டு துவண்டும்விடக்கூடாது.
புத்தக்தூதுவர் தயார் புத்தகங்கள் எங்கே?
தூதுவர் தயார் என்றால் பாதிக் கிணறு தாண்டியாச்சு. கைவசம் இருக்கும் புத்தகங்கள்கொண்டு ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கான புத்தகம் தேவை என்றால் உள்ளூரிலேயே நிறைய உதவும் கரங்கள் கிடைக்கும். புத்தகங்களை தேர்வு செய்யும்போது அவை அறிவியர்பூர்வமான சிந்தனையை, நவீனச் சிந்தனைகளை, சமத்துவ எண்ணங்களை விதைக்குமா என்று மட்டும் ஒருமுறை பார்க்கவும்.
பாடம்தாண்டி வாசிப்பு குழந்தைகளின் பல திறன்களை வளர்த்தெடுக்கும். அது ஒரு இமாலயப் பணி, ஒவ்வொரு புத்தகத்தூதுவரும் மிக மிக முக்கியமானவர். நாமே தூதுவராக மாறுவோம் வாருங்கள்.
– விழியன்
நன்றி:
வெற்றிக்கொடி – 25 நவம்பர்