Avanuku Oru Alaippithal (invitation) Short Story By Gowtham K. *அவனுக்கு ஒரு அழைப்பிதழ்* சிறுகதை - கெளதம் .K

*அவனுக்கு ஒரு அழைப்பிதழ்* சிறுகதை – கெளதம் .K



எல்லோருடைய கடிகாரத்திலும் மணி மதியம் 2:15 என்று ஒரே மாதிரியாக இருக்கையில் ஜூபேரின் கடிகாரம் மட்டும் இன்னமும் முள் நகராமல் நிற்கிறதோ! என அன்பு திரையரங்கின் வாயிலில் நின்றபடி ஜூபேரின் நண்பர்கள் அவனை திட்டிக் கொண்டிருந்தனர்.

ஏண்டா, இவன் என்னைக்கு தான் டா திருந்துவான்; ஒரு நாளாவது சொன்ன நேரத்துக்கு வரானா“, முதல் போனியை துவங்கி வைத்தான் கார்த்தி. பின் ஒவ்வொருவராய் ஜுபேரை கிழித்து தொங்க விட்டனர். ஆனால் சிவா மட்டும் அமைதி காத்திருந்தான். இங்கிருக்கும் எல்லோருமே பள்ளிக் காலத்திலிருந்து உற்ற நண்பர்கள் தான் என்றாலும் சிவாவுக்கும் ஜூபேருக்கும் இணக்கம் கொஞ்சம் அதிகம்.

மதிய காட்சிக்கு செல்வதற்காக 1:30க்கு எல்லோரும் ஆஜராக வேண்டும் என்று முந்தைய நாள் இரவு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் சிவாவைத் தவிர ஒருவரும் சொன்ன நேரத்திற்கு வர வில்லை. 1:45, 1:50 என எல்லோருமே தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர். இதில் இறுதியாக  2:10க்கு வந்த கார்த்தி தான்  ஜுபேரை முதலில் திட்டினான்  என்பதை பார்த்தபடி உள்ளூர சிரித்து கொண்டே சிவா நின்றிருந்தான்.

சரிடா இதுக்கு மேலயும் வரமாட்டான் வாங்க நாமலாவது போலாம்என்று மகேஷ் சொன்னதும் எல்லோரும் ஆமோதித்தனர். சிவா வரவில்லை என மறுத்ததும் அவனையும் தவிர்த்து விட்டு மற்றவர்கள் திரையரங்கினுள் சென்றனர்.

ஜூபேர் வரும் வரை திரையரங்கின் எதிரில் உள்ள டீக்கடையில் காத்திருந்தான் சிவா. இடைவேளை முடிந்து 10 நிமிடத்திற்கு பின் அங்கு வந்த  ஜூபேர் சிவா டீக்கடையில் இருப்பதைப் பார்த்தவுடன் செய்வதறியாது  நின்றான்.

சற்றும் தாமதிக்காமல் சிரித்த முகத்தோடு சிவாவை நோக்கி வந்தவன் “என்ன மச்சி நீயும் படத்துக்கு போகலையாஎன்றதும் சிவாவின் கோபம் அதிகமானது. ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் “ஏன்டா ஜூபேரு, உனக்கெல்லாம் எதுக்கு இந்த வாட்ச்; பேசாம குப்பையில போட வேண்டியதுதானேநிதானமாய் கேட்டான்.

அடுத்த வினாடியேஇல்ல மச்சி இது எங்க அத்தாவோடது, பழைய வாச்சா இருந்தாலும் நல்லா தான்டா ஓடுது. இல்லேனா நானே தூக்கி போட்டு இருப்பேன் டாஎன்று அப்பாவி போல் முகபாவனையுடன் நக்கலாய் சொன்னதும் டீக்கடைக்காரரும் சிவாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்

வேகமாய் கையை ஓங்கியவன் ஜூபேரின் முதுகில் ஒரு அடி வைத்தான் செல்லமாய். ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான உடல் தோற்றமும் கொண்ட ஜூபேருக்கு அந்த அடி எல்லாம் எந்த மூலைக்கு.

இது ஜூபேரின் இயல்பு. எப்படிப்பட்ட சூழலையும் எளிதில் எதிர்கொண்டு கூடுமானவரை நகைச்சுவையோடு நகர்த்தும் வித்தைக்காரன். அப்படி இருப்பதால்தான் ஒவ்வொரு முறையும் இவன் தாமதமாக வந்தும் நண்பர்கள் இவனை பெரிதாய் எதுவும் கேட்க முடிவதில்லை. இதில் சிவா கொஞ்சம் கூடுதல் அன்பு கொண்டவன்.

பள்ளிக்காலம் முதல், மாலை நேரங்களில் தன் தந்தையின் தொழிலை கற்றுக் கொள்வது, அவருக்கு உதவியாய் இருப்பது என தனது இளமைக் காலத்தில் உன்னத பொழுதுகளை எல்லாம் கழித்து வந்தவன். வீட்டு வாசலை விட்டால் பள்ளியின் வாசல் இல்லையெனில் பள்ளிவாசல்இவற்றைத் தவிர வேறு எங்கும் செல்ல முடியாத கட்டுப்பாட்டுக்குள் வளர்க்கப்பட்டவன்.

கண்டித்து வளர்ப்பதே அன்பென்று என்னும் உழைப்பாளித் தந்தை, விசுவாசத்தின் அடையாளம். அவருக்கு விசுவாசமாய் இருப்பதே பிறவிப் பலனெனக் கருதும் தாய், தந்தையை விடவும் கூடுதல் கண்டிப்பான அண்ணன் அதுவும் தன்னை விட பத்து வயது மூத்தவர் என சக வயது மனிதர்கள் யாரும் இல்லாத சூழலில் வளர்ந்தவன்.

ஆனால் ஜனரஞ்சகமானவன். எவரிடத்திலும் எளிதில் பழகக்கூடியவன். கல்லூரியில் சேர்ந்த பிறகு மாலை நேரங்களில் டீக்கடைக்கு  வர்க்கி வினியோகம் செய்வதை பகுதி நேரமாக செய்து வந்தான். நகருக்குள் இருக்கும் அனேகமாக எல்லா டீக்கடைகளிலும் ஜூபேரின் பெயர் பிரபலம்.

இப்படி ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான மனிதர்களோடு பேசிப் பழகுவதால் எவரிடத்திலும் அன்பு செலுத்தும் இவன் இயல்பு இன்னமும் அதிகமானது. தான் சந்தித்த சுவாரசியமான மனிதர்களைப் பற்றிய அனுபவங்களை எப்போதும் சிவாவிடம் பகிர்ந்து கொள்வான்.

ஏண்டா வரலைன்னா சொல்ல வேண்டியதுதானே, எதுக்குடா எல்லாரையும் காக்க வைக்கிற என்று சிரித்துக்கொண்டே நண்பனின் நேரமேலாண்மை மீது நேரடித் தாக்குதல் தொடுத்தான் சிவா.

இல்லடா, எங்க தெருவுல ஒரு பாட்டி முதியோர் உதவித்தொகைக்கு ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டு இருக்கு, ஒன்னும் வேலையாவுல. இன்னைக்கு கலெக்டர் ஆபீஸ்ல சிறப்பு முகாமுன்னு டீக்கடையில பேசிக்கிட்டாங்க.  அதான் அவங்கள கூட்டிப்போயி கலெக்டர நேர்ல பாத்து மனு கொடுத்தோம். அடுத்த மாசத்துல இருந்து பணம் வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணி உடனே கையெழுத்து போட்டாரு“.

Avanuku Oru Alaippithal (invitation) Short Story By Gowtham K. *அவனுக்கு ஒரு அழைப்பிதழ்* சிறுகதை - கெளதம் .K

சொல்லி முடித்ததும் நண்பனின் மீதிருந்த மொத்தகோபமும் பஞ்சாய்ப் பறந்தது. எப்போதும் பழைய படங்களே ஓடும் மாருதி திரையரங்கில் எம்ஜிஆர் நடித்தபெற்றால்தான் பிள்ளையாபடத்தின் இடைவேளை மணி  ஒலித்தது.

சரி, புதுசா ஒரு நல்ல டீக்கடை பார்த்து வச்சிருக்கேன்; வா போலாம் காதோரமாய் சொன்னதும் சிவா சட்டென எழுந்து நடக்கத் தொடங்கினான்.

சிவா, ஜூபேரின் இணக்கத்திற்கு இன்னொரு முக்கிய காரணம்  ‘டீ‘. எல்லாத் தருணங்களையும் டீயோடு பகிர்ந்து கொள்வதே இவர்களின் வாடிக்கை. நகரின் எல்லா டீக்கடைகளிலும் சோதனை நடத்தி நல்ல கடைகளை நண்பர்களிடம் அடையாளம் காட்டுவதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம்.

பெரியார் சிலைக்கு எதிரே உள்ள சின்ன சந்தினுள் நுழைந்ததும் இருந்தது அந்த தங்கவேல் டீக்கடை. கடையின் பெயர்ப் பலகையில்கல்யாணப்பரிசுஎன்று சிறிய எழுத்திலும்,தங்கவேல்என்று பெரிய எழுத்திலும் எழுதியிருப்பதை கவனித்த சிவாவிற்கு சற்றே வித்தியாசமான அதே சமயம் நகைச்சுவையான உணர்வு ஏற்பட்டது.

 “இங்க பீடி சிகரெட் எல்லாம் இல்ல டா அதான் கூட்டம் கம்மி“. 

கரி அடுப்பின் அனலில் வெளிர் மஞ்சள் நிறத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் டிகாஷனை கலந்து கோடு போட்ட கண்ணாடி கிளாஸில் அதனை ஆத்தி மேசையின் மேல் சுழல விட்டார் அந்த டீ மாஸ்டர்.

உண்மையிலேயே இது நல்ல டீக்கடை தான் என்று சாட்சியம் சொன்னது அந்த டீ. படபடவென கடைக்குள்ளே வந்த மத்திய வயதுடைய நபர் ஒருவர்மாஸ்டர் ஒரு நிர்வாண டீ என்றபடி பெஞ்சில் அமர்ந்தார். இருவரின் கண்களிலும் மாற்றத்தைக் கண்ட மாஸ்டர்ஆடையில்லாமல்அப்படின்னு அன்பா சொல்றாரு என அவர்களின் வியப்பை நீக்கினார்.

திடீரென வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான் ஜூபேர், ஏன்டா சிரிக்கிற?

இல்லடா நேத்து நகீம் பாய பார்த்தேன் சிவாவும் சிரிக்க தொடங்கினான்.

நகீம் பாய் ஒரு உன்னத மனிதர். நிறைய புத்தகங்கள் வாசிக்க கூடியவர். புத்தகங்கள் பற்றியும் மார்க்கம் பற்றியும் ஜூபேரோடு அதிகம் கலந்துரையாடுபவர். சமயத்தில் சிவாவோடும் பேச வாய்ப்பு கிட்டும். ஆனால் அவரின் வெகுளித்தனமான செயல்கள் நம்மை நிலைகுலையச் செய்யும்.

சரி, சொல்லிட்டு சரிடா

இல்லடா நகீம் பாய் எப்பவும் நுகர்வை குறைக்கணும், தேவைய சுருக்கணும்னு சொல்லுவாருல்ல, அவரு கடைக்கு முட்டை வாங்க போயிருக்காரு.  பைய மறந்துட்டாரு. முட்டய பாலிதீன் கவர்ல கட்டுணத்துக்கு வேண்டாங்ணா, லுங்கியில போட்டுக்குறேன்னு  

போட்டுருக்காரு”. 

சொல்ல முடியாமல் சிரித்தான் ஜூபேர். அவரு நடக்க நடக்க முட்ட ஒன்னோடு ஒன்னு பட்டு உடைஞ்சிடுச்சு, அதுவுமில்லாம இடது வலது என இரண்டு பக்கமும் உருண்டு வந்து முட்டை லுங்கிக்கு பின்னாடி வந்து உடைஞ்சிருக்கு.

வீட்டுக்கு போற வரைக்கும் தெருவெல்லாம் இவரு லுங்கிய கையில புடிசிகிட்டே போயிருக்காரு பின்னாடி முட்டை ஒழுகிட்டே வந்து இருக்கு.

இருவரும் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு சிரிக்க முடியாமல் திணறினர்.

 அப்புறம்’,

அப்புறம் என்ன அப்படியே வீடு முழுக்க ஒழுக விட்டு சமயலறைக்கு போயி மீதி உடையாமல் இருந்த ஒரே ஒரு முட்டையை எடுத்து சமையல் திட்டு மேல வச்சிருக்காரு, அதுவும் உருண்டு கீழே வந்து உடைஞ்சிடுச்சு.

ஐயோ அம்மா……………முடியலைடா டேய்…….

சற்று ஆசுவாசமான பிறகு,

அவங்க அம்மா பார்த்துட்டு யா அல்லாஹ் இப்படி ஒரு புள்ளைய படைச்சிருக்கியேன்னு திட்டி தீர்த்துட்டு வீட்டை சுத்தமாக கழுகிட்டு இருந்திருக்காங்க

இவரு அம்மாவுக்கு உதவி செய்கிறேன்னு லுங்கிய ஊறவைக்க போயிருக்காரு. சோப்புத்தூள் டப்பா ரொம்ப இருக்கமா மூடி இருக்கு. வலு கொடுத்து தெறந்து  சோப்புத்தூள் மொத்தத்தையும் கீழே கொட்டிட்டாரு. சத்தம் கேட்டு அவங்க அம்மா வந்து பார்த்துட்டு இன்னமும் கோபமாய் திட்டிட்டாங்க“.

கொள்கை கோட்பாடு எல்லாம் சரி தான். ஆனால் அதற்கான மாற்று என்னனு கண்டுபுடுச்சி சரியான முன்னேர்ப்பாடோடு பயணிக்கணும்.

பேச முடியாமல் சிரித்துக்கொண்டே ஏண்டா ஒருத்தர் அவரோட சோகத்தை சொன்னா நீ என்னடா இப்படி சிரிக்கிறஎன்றான் சிவா.

அதுக்கு சிரிக்கலடா இதை எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டு கடைசியா ஒரு நிஜாம் பாக்கு வாங்கித் தான்னு கேட்டாரு டா.

இருவரும் கையை தட்டி சப்தமாக சிரித்தனர். நகீம் பாயின் அடையாளமாய் மாறிவிட்டது  நிஜாம் பாக்கு

பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலைநேர தொழுகைக்கான பாங்கு ஓசை கேட்டதும் அவர்கள் வீடு நோக்கி கிளம்பினர்.

வரும் வழியில் டேய் நாளைக்கு ஆயிஷா கல்யாணத்துக்குப் போகணும், எப்பயும் போல உன்னோட நேரத்துக்கு வராத எல்லாருக்குமான நேரத்துக்கு வா என்று வாழ்த்திவிட்டு விடைபெற்றான் சிவா.

ஆனால் எப்பொழுதும் போலவே ஆனது. நிக்கா முடிந்து ஆயிஷா வீட்டிற்கு செல்ல தயாரானபோது தான் ஜூபேர் மண்டபத்திற்கு வந்தான்.

இதனைக் கண்ட சிவாவிற்கு மிகுந்த மனவருத்தம். தன் நண்பனின் கால தாமதப் போக்கை எப்படியேனும் மாற்றிவிட ஏதாவது செய்ய வேண்டுமென  எண்ணினான்.

அத்தோடு அடுத்த மாதம் பாண்டிச்சேரியில் நடக்கும் தனது அக்காவின் திருமணத்திற்கு நண்பனின் இருப்பை உரிய நேரத்தில் உறுதி செய்திட உள்ளூர யோசிக்க ஆரம்பித்தான் சிவா.

அக்காவின் திருமண வேலைகளை கவனித்துக் கொண்டு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கையில் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து இறுதியில் ஜூபேரை சந்திக்க ஒரே ஒரு அழைப்பிதழுடன் சென்றான் சிவா.

அவர்கள் அதிகம் சந்தித்துக்கொள்ளும் தலைவர் டீக்கடையில் அழைப்பிதழை அவனிடம் கொடுத்துவிட்டு அமைதியாய்ப் பார்த்தான் சிவா.

டேய் கண்டிப்பா நிகழ்ச்சி நேரத்துக்கு முன்னாடியே வந்துடுவேன்டா

நீ முன்னாடியெல்லாம் வர வேண்டாம், சரியான நேரத்துக்கு வா போதும், ஜூபேர் அசடு வழிய சிரித்தான். அதுசரி, என்னடா இது வரவேற்பு அழைப்பிதழ்னு போட்டுருக்கு. ஆமாண்டா கல்யாணம் எளிமையா கோயில்ல வச்சாச்சு

சரிடா, பார்ப்போம் என்று இருவரும் விடைபெற்றனர்.

எவ்வளவோ எச்சரிக்கையாக சீக்கிரமாய் கிளம்பியும் ஜூபேர் சென்ற பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றது. நீண்ட நேரம் கழித்து அதே வழியில் வந்த வேறொரு பேருந்தில் பயணப் படுகையில், நடந்ததை சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு தன்னுடைய இறந்தகால செயல்கள் இருப்பதை எண்ணி வேதனை அடைந்ததை விட தன் நண்பனின் இல்ல நிகழ்வில் பங்கு பெற இயலாத சூழலில் இருப்பதை எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானான்.

பேருந்து நிலையத்திலிருந்து மண்டபத்திற்கு செல்லும் வழியெல்லாம், இந்நேரம் நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் புறப்படத் தயாராக இருப்பார்கள், என்ன செய்வதென சிந்தித்தவாறே வேகமாய் நடந்தான்.

மண்டபத்தை நெருங்குகையில் இதயத்துடிப்பு இரட்டிப்பானது.

 உள்ளே நுழைந்ததும் துடிப்பு நின்றேபோனது; மணமக்கள் அப்போதுதான் மேடையேற ஆயத்தமானார்கள்.

நண்பர்கள் அனைவரும் ஜூபேரைக் கண்டதும் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்

அமர்ந்திருந்த மகேஷ் எழுந்து ஜூபேரின் அருகில் வந்து என்னடா ஜூபேர் ஏழு மணி வரவேற்புக்கு ஆறு மணிக்கே வந்துட்ட என்றதும் ஜூபேர் மேலும் அதிர்ச்சி அடைந்தான் .

அவன் கையிலிருக்கும் அழைப்பிதழை பிரித்துப் பார்த்தபோது அதில் நிகழ்ச்சி நிரல் மதியம் 12 – 3 என அச்சிடப்பட்டிருந்தது.

மணமகள் அறையில் இருந்து வெளியே வந்த சிவா சிரித்துக் கொண்டே வந்து நண்பன் ஜூபேரை ஆரத்தழுவிக் கொண்டான்.