அவர் சிறுகதை – பூ. கீதா சுந்தர்
டீக்கடையில் மூன்று டீ சொல்லி விட்டு வந்தான் சங்கர். அவன் முகம் சற்று குழப்பத்தில் இருந்தது.
” அண்ணே, நான் எப்டி அவர கூட்டிட்டு போறது ? எனக்கு அவர யாருன்னே தெரியாது. கொஞ்சமும் பழக்கம் இல்லை… அது கூட பரவாயில்ல, எங்க வீட்டுல ஒரு வாரம் தங்க வைக்கிறது கொஞ்சம் சிரமம் தாண்ணே… வீட்ல அம்மா ஏதாவது சொல்லுவாங்களோன்னு தோனுதுண்ணே… ”
” சங்கரு, நீ குழம்பற அளவுக்கு ஒன்னுமே இல்லப்பா .. சும்மா ஃபிரியா வுடுப்பா .. ” டீ யை சுவைத்தபடி சாவகாசமாக சொன்னார் ராமு.
‘ என்னங்கண்ணே இவரு இப்டி சொல்றாரு ? நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்.. ‘ என்பது போல குமாரைப் பார்த்தான் சங்கர்.
‘ இரு, இரு பேசறேன் ‘ என்று ஜாடை காட்டினார் குமார்.
ஒரு வாரத்திற்கு முன்பு,
” அண்ணே.. வாங்க, வாங்கண்ணே.. உள்ள வாங்க… எப்படி இருக்கீங்க, பார்த்து ரெண்டு வருஷம் இருக்கும் இல்லண்ணே… வீட்டுல எல்லாரும் செளகரியமாண்ணே… ” ராமுவின் ஊருக்காரர் வந்து இருந்தார்.
” பத்மா.. இங்க வா. யார் வந்திருக்காங்கன்னு பாரு..” உள்ளே இருந்து தன் மனைவியை அழைத்தார்.
” வாங்க அண்ணே, நல்லா இருக்கீங்களா… ” நலம் விசாரித்து விட்டு உள்ளே சென்று ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
” ராமு.. ஊர்ல வீடு கட்டி இருக்கேன் பா, நீ குடும்பத்தோட புதுமனை புகுவிழாவுக்கு வந்துடணும் பா.. ” என்று பத்திரிக்கையை கொடுத்தார்.
” கண்டிப்பா வந்துடுறோம்ணே.. ”
” நம்ம சங்கருக்கும் பத்திரிக்கை வச்சி இருக்கேன் பா… சேர்ந்தே வந்துடுங்க.. ” என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
அந்த புதுமணை புகுவிழா நடைபெற இருக்கும் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சங்கர் ஊருக்கு போவதாக ராமுவிடம் கூறினான். அப்போது ராமு,
” சங்கரு.. அன்னிக்கி தேதிக்கு என்னால வர முடியுமான்னு தெரியல.. இத சொன்னா அண்ணன் ரொம்ப கோச்சிக்குவாரு.. நீ போகும் போது உங்கூட ஒருத்தர அனுப்பறேன்.. அவரு ரொம்ப முக்கியமானவரு பா… அவரை அண்ணனுக்கு நல்லாத் தெரியும்.. நீ ஒரு வாரத்துக்கு அவரை உங்க வீட்டுல வச்சி பாத்துக்கோ பா.. அப்புறம் விசேசத்துக்கு கூட்டின்னு போப்பா ” என்றார்.
அதைத் தான் இப்போது குமாரிடம் சொல்லி புலம்பினான் சங்கர்.
” ஏண்ணே… அவனுக்கு யானுன்னே தெரியாத ஆள எப்டிண்ணே கூட்டிட்டு போக முடியும்..? அது கூட பரவாயில்ல வீட்டுல எப்டி தங்க வைக்க முடியும் ? ”
” ஏம்பா அதெல்லாம் நான் யோசிக்க மாட்டனா.. அவரால ஒரு தொந்தரவும் வராது பா… அவரு வீட்டுக்கு போனா அவங்க அம்மாவே சந்தோசப்படுவாங்க பா.. நீ வேணா பாறேன்.. ”
” சரிண்ணே… நீங்க இவ்ளோ தூரம் சொல்றீங்க.. நீங்க சொல்றத பாத்தா அவரு ரொம்ப மரியாதையான ஆள் மாதிரி தான் தெரியுது.. சரி, அவரு சைவமா..? அசைவமா. ? ன்னு சொல்லுங்க . அதுக்கேத்த மாதிரி எங்க அம்மாகிட்ட சொல்லி சமைக்க சொல்றேன்… ”
” எப்பா… அவரு சைவம் தான்… ஆனா சாப்பாட்டு விஷயத்துல அவரு உங்களுக்கு எந்த சிரமமும் தர மாட்டாரு பா … ”
” சரிங்கண்ணே… நான் போய் ஊருக்கு போறதுக்கு ரெண்டு டிக்கெட் போடறேன்… ” என்றான் சங்கர்.
” அட ஏம்பா ரெண்டு டிக்கெட் ? . உனக்கு மட்டும் டிக்கெட் போடுப்பா.. ” குழப்பமாக பார்த்தான் சங்கர்.
” ஏண்ணே… அவருக்கு டிக்கெட் போடனும்ல.. ” இப்போது குமாரும் குழப்பாகி போனார்.
” வேணாம்பா… ”
” ஏண்ணே… ? ”
” அவரு எல்லா எடத்துக்கும், டிக்கெட் எடுக்காம போக கூடிய அளவுக்கு பெரிய ஆளுப்பா… அவரு அவ்ளோ ஃபேமஸ் பா.. அவருக்கு டிரெய்ன்ல டிக்கெட் எல்லாம் கேக்க மாட்டாங்க பா… ”
” ஓ.. அவரு அவ்ளோ பெரிய ஆளாண்ணே… ” என்று வியப்பாக கேட்டான் சங்கர். ” எங்க வீட்டுக்கு வேற கூட்டிட்டு போறேன் … எனக்கு பயமா இருக்குண்ணே.. எதுக்காகவும் கோச்சிக்க மாட்டாரு இல்லண்ணே… ” என்று கலக்கத்துடன் கேட்டான் சங்கர்.
” அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. அவரு ரொம்ப சாந்தமானவரு .. ”
” அண்ணே.. நீங்க சொல்றத பார்த்தா அவரு நம்மள மாதிரி சாதாரண ஆளா தெரியலையே .. அவரு சாமியாரா… ? ”
” கரெக்டா சொல்லிட்டப்பா.. சாமியார் தான்… நம்ம பெரிய குருசாமிப்பா அவரு… ஆனா அவரு உனக்கு எந்த தொந்தரவும் பண்ண மாட்டாரு.. நீ ஒன்னும் பயப்படாத… ”
சங்கர் மனம் ஓரளவுக்கு சரியாகி விட்டது.. அவன் அவரை தன்னுடன் அழைத்து போக தன்னை தயார்படுத்திக் கொண்டான்.
” சரிங்கண்ணே… நான் நாளைக்கு காலையில நேரா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடறேன்.. நீங்க அவரை அங்க கூட்டிட்டு வந்துடுங்க.. நான் அவரை பத்திரமா கூட்டின்னு போறேன்.. ஒரு வாரம் எங்க வீட்டுலயே இருக்கட்டும்… அப்புறமா கிரகபிரவேசத்துக்கு கூட்டுன்னு போறேன்.. அண்ணே முடிஞ்சா விழாவுக்கு நீங்களும் வந்துடுங்கண்ணே… ” மீண்டும்,
” அண்ணே எதுக்கும் டிக்கெட் ஒன்னு போட்டுடறேண்ணே… ஒரு வேளை டிடிஆர் வந்து பிரச்சனை பண்ணா என்னாண்ணே பணறது..? ”
” ப்பா… அதெல்லாம் வேணாம்பா… அவர பாத்தா டிடிஆர் கூட டிக்கெட் கேக்க மாட்டாரு பா… அவரு அவர பாத்துக்குவாரு .. நீ வுடு பா… ”
” ஓகேண்ணே… ”
” சரிப்பா பாக்கலாம்… நீ கிளம்பு.. ”
மூவரும் கிளம்பி விட்டார்கள்.
காலை மணி பத்து இருக்கும். குமாருக்கு சங்கர் ஞாபகம் வந்தது.
‘ இந்நேரம் டிரெயின்ல போயிகிட்டு இருப்பான் இல்ல.. அவன் நேத்து எல்லாம் புலம்பிக்கிட்டே வேற இருந்தான்.. சரி, போன் பண்ணி பாக்கலாம் ‘ என்று சங்கருக்கு போன் செய்தார்.
” இன்னாப்பா.. சங்கரு, கிளம்பிட்டியா… அவரு கூட வராரா.. ? உனக்கு ஓ. கே தான ஒன்னும் பிரச்சனை இல்லையே..? ”
” அண்ணே… ” அவன் குரல் கம்மியது.
” இன்னாப்பா… இன்னாச்சி.. உன் குரலு ஏன் ஒரு மாதிரி இருக்குது … சொல்லுப்பா.. ” குமாரை சிறு பதற்றம் தொற்றியது..
” அட, அதை ஏண்ணே கேக்கறீங்க.. ராமு அண்ணன், அவர என் கையில குடுத்து வச்சிக்க சொன்னப்ப தான் நானே ஷாக்காயிட்டேன் ..”
” இன்னாது .. கையில குடுத்தாரா..? ” இப்போது குமாருக்கு குழப்பமாக இருந்தது.
” ஆமாண்ணே..ராமு அண்ணன், அவரு, அவருன்னு சொன்னது அதை தாண்ணே.. ”
” எதப்பா.. ”
” அது மூணடி விநாயகர் சிலைண்ணே .. வெள்ளி மூலாம் பூசினது… அதை தான் விசேஷ வீட்டுக்கு கிப்ட்டு குடுக்க சொல்லி, எங்கிட்ட குடுத்து விட்டு இருக்காரு… பாருண்ணே, ராமு அண்ணனுக்கு லொள்ள … ” என்றவன், ” அண்ணே… அண்ணே..” என்று அழைத்துக் கொண்டிருக்க.
குமார் கையில் ஃபோனோடு அப்படியே சேரில் அமர்ந்துக் கொண்டார். அவர் எதுவும் பேசவில்லை.