Kannan's Poems. கண்ணனின் கவிதைகள்

கண்ணனின் கவிதைகள்




தியாகி தோட்டம்
***********************
எழுபத்தி நான்கு ஏறி
செல்லியம்மன் நகரில்
இறங்குங்கள்
தியாகி தோட்டம் என்றால்
எவரும் வழிகாட்டுவர்
எட்டி மரம் தாண்டி
வந்தீர்கள் என்றால்
மலை அடிவாரத்தில்
இருந்தது தோட்டம்
தாகத்திற்கு எளனி
பசியுடன் வந்தால்
சாப்பாடு
வந்தவருக்கு எப்போதும் உண்டு
பத்தில் பாதி மேட்டுக்காடு
குண்டன் ஒன்று
ஊசிக்கொம்பன் ஒன்று
ஏர்ஓட்ட
மாடு மேய்த்தது
தண்ணி பாய்ச்சியது
தொட்டியில் குளித்தது
கிணறு வெட்டுகையில்
தரை தொட்டுப் பார்த்தது
எல்லாம் கனவுபோல
தாத்தாவும் அப்பாவும்
ஓய்வூதிய பணத்தையெல்லாம்
காடு திருத்தப் போட்டதும்
அங்கு தான்
பத்தாம் வகுப்பில்
பிடித்த தென்னையடியில்
படித்ததும் அங்கு தான்
பிடித்தநாய் மணிக்கு
கோவில் கட்டிக்
கும்பிட்டதும்
அங்கு தான்
தாத்தாவும் பாட்டியும்
அப்பாவும்
மண்குழிக்குள் போனதும்
அங்கு தான்
துள்ளத் துடிக்க
கையெழுத்திட்டுக்
கைமாறியபின்
சென்று பார்க்க
இன்று வரை ஒப்பவில்லை
மனசுக்கு

கோதமலைக் குறிப்புகள்-நான்கு
பொன்னம்மா பாட்டி
************************************
ஆறில் மிஞ்சியது
நான்கு
தாத்தா பிரசங்கத்திற்கு
ஊர் சுற்றி வர
பணியாரம் சுட்டு
பிள்ளைகள் வளர்த்திருக்கிறாள்
சற்றே அதிகமான மீசை
குள்ள உருவம்
வட்டப் பொட்டு
அவள் சுடும்
ஆப்பம் அவ்வளவு ருசி
மூன்று பேரன்களில்
அண்ணனிடம் மட்டும்
அவ்வளவு பாசம்
கீற்றுக் கொட்டகையில்
மணலில் அமர்ந்து
மம்பட்டியான் பார்த்தது
நேற்று போல நிழலாடுகிறது
அம்மாவுக்கும் அவளுக்கும்
எப்போதும் ஆகாது
பையனுக்கே பால் விற்றவள்
நீர் கலக்க வலுத்தது சண்டை
கோபம் வந்தால்
வாயில் வசவும்
புடவையும் சற்றே
மேலேறும்
விஷப்பூச்சிக் கடித்திட
மகமாயி புள்ளய காப்பாத்து
எனைத்தூக்கி ஓடிப்போய்
மருத்துவமனை சேர்த்தவள்
கனகாம்பரம் விற்றுக்
காசு சேர்த்தவள்
பசப்பு வார்த்தை கேட்டு
சொந்தத்திடம் இழந்து விட்டு
நெஞ்சைப் பிடித்தபடி
தோட்டத்துக்கே கூட்டிக்கிட்டுப்
போய்டுங்க
கேட்டுக் கொண்டே
யார் முகமும் பார்க்காமல்
போய்ச் சேர்ந்தாள்
மகராசி

Appatha Short Story By Era Kalaiyarasi அப்பத்தா சிறுகதை - இரா.கலையரசி

அப்பத்தா சிறுகதை – இரா.கலையரசி




விடியலுக்கு விளக்கம் கேட்டபடி, இரவை விலக்கி காலையை புலர செய்து இருந்தது பூமி.

வாசலில் கிடந்த செத்தைகளை பொத்துனாப்புல கூட்டி பெருக்கிகிட்டு இருக்கிறாள் “அப்பத்தா”

ஏலேய்! மாடசாமியால வண்டியில போறது? அங்கன மாசாணன் கடையில வெத்தல பாக்கு வாங்கியாந்துருடானு சொல்லிகிட்டே சில்லரை காச எடுத்து குடுத்தா.

என்னா! அப்பத்தா எனக்கு சோளி இருக்குனு சொன்னவன், பிறகு காசை வாங்கிகிட்டான். பின்கொசவத்த இறுக்கிகிட்டு, வாசலை தூத்தினா அப்பத்தா.!

யாத்தே! கொஞ்சம் உறைமோரு இருந்தால் தாயேன்னு வந்து நின்னா ஈஸ்வரி. வாங்கிக்கடினு உள்ள போயி கெட்டி தயிர ஊத்தி எடுத்தாந்தா அப்பத்தா. எப்புடியும், நல்ல தயிரு வரும்னு ஈஸ்வரிக்கு தெரியும். மெச்சு போயி வாங்கிகிட்டு போனா.

அப்பத்தா வச்சு இருக்கிற ரெண்டு பால்மாட்ட பால் பீச்ச வந்துட்டான் பலராமன்.”கிணிங் கிணிங்” சத்தம் உள்ளே இருந்தத அப்பத்தாவ அழைக்க பூனைங்க எல்லாம் அவள் கால சுத்தி விளையாடுச்சுங்க.

என்னா! அப்பத்தா உங்கள் வீட்டு ஆளுங்க உன்னையவே சுத்திகிட்டு இருக்காங்க போல! மியாவ் என்று சீறியது ஒரு கருப்பு பூனை.

மா! மா! என மாடுகளும் அப்பத்தாவை கூப்புட்டாங்க. அப்பத்தா, நீ வந்து அங்கன நில்லு அப்பதான் பால் பீச்ச விடுங்க உன் புள்ளைங்க என்றான் பலராமன். சொன்னது சரிங்கறது போல தலையை ஆட்டின பால்மாடுகள்.

செவத்திக்கு கொஞ்சம், புல்ல போட்டு மெல்ல தடவிக் கொடுத்தாள். வாஞ்சையுடன் அப்பத்தா கைகளை நக்கி அன்பை வெளிபடுத்தினாள் செவத்தி. கருப்பிக்கு கோபம் வந்து தலையை ஆட்ட, அவளையும் தட்டிக் கொடுத்தாள் அப்பத்தா.

மடி இறங்கி பால் பீச்ச தயாரானான் பலராமன். அப்பத்தாவை பார்த்துக் கொண்டே மடியை இறக்கின செவத்தியும் கருப்பியும். சூடு குறையாத பாலை வாங்கிகிட்டாள். இப்ப பொழுது நல்லா விடிஞ்சிருச்சு.

கைகுழந்தைகள தூக்கிகிட்டு அஞ்சாறு பொம்பளைங்க அப்பத்தா வீட்டுக்கு வந்துட்டாங்க. அப்பத்தா! அப்பத்தா! என்று சத்தம் போட, கையில பால் எடுத்துகிட்டு
வந்துட்டாள் அப்பத்தா.

வீட்டுக்கு கொஞ்ச பாலை எடுத்துகிட்டு மிச்சத்த, பால் பத்தாத புள்ளைங்களுக்கு குடுத்திருவாள். இந்தா வாரேன்டினு வெளியே வந்தவள், டேய்! படப்பு னு தலையில நிறைய முடி இருக்கற புள்ளைய கொஞ்சுனா. அவனும், அப்பத்தாவை பார்த்து ஆசையா சிரிக்கிறான்.

வந்த பொம்பளைங்க எல்லாம், தண்ணீர் கலக்காத சூடு குறையாத பாலை வாங்கிகிட்டு போனாங்க. அவங்கள பார்த்து செவத்தியும், கருப்பியும், தலைய ஆட்டி ஏதோ? சொல்லி அனுப்பறாங்க.

அடுக்களைக்குள்ள போனவள் பழைய சோத்துல ஊத்தி வச்ச நீச தண்ணிய எடுத்து குடிச்சா. வகுத்துக்குள்ள ஆத்து தண்ணிய இறக்குன மாதிரி குளுகுளுனு இருந்துச்சு. அடிச்சு வச்ச கம்ப நல்லா பொடச்சு வச்சிருந்தாள். கம்பங்களில கெட்டி தயிர ஊத்தி காலை சாப்பாட முடிச்சுகிட்டா அப்பத்தா.

அப்பத்தா! அப்பத்தா! என்றபடி உள்ளே வந்தார் ராசு. இந்த வருசம் நல்ல விளைச்சல். நம்ம வயலில் விளைஞ்ச நெல்லுமணிகள் முத்து கெனக்கா இருக்கு. எல்லாம் அப்பத்தா ராசினு வாயெல்லாம் பல் கொல்லாமல் சிரித்தார்.

அம்பது மூடை நெல்ல இறக்கிடுறேன். வந்த விளைச்சலில் அப்பத்தா எனக்கு கொஞ்சம் கவனிக்கனும் என்றார். அப்பு! உன் மகளுக்கு கல்யாணம் வச்சு இருக்க, தெரியும். எனக்காக இத்தனை வருசம் பாடுபட்டு இருக்க, பொறு வாரேனு உள்ளே போனாள் அப்பத்தா.

அலமாரிய திறந்து, அவள் கல்யாணத்துக்கு போட்ட ரெட்டைவட சங்கிலியை எடுத்தாந்தா. இந்தாய்யா ராசு, இத உன் மகள் கல்யாணத்துக்கு வச்சுக்க என்று கொடுத்தாள். வேணாம் அப்பத்தா! ஏதோ! சின்னதா உதவி செஞ்சா போதும்! னு மறுத்த ராசு கையில திணிச்சா அப்பத்தா.

கண்கள் கண்ணீரை தெளித்து விட காத்து இருந்தது. அழுத ராசுவை, அட! என்னாப்பா இப்பிடி அழுகறவன். இத உன் மகளுக்கு தான் கொடுக்கனும்னு என்னைக்கோ முடிவு செஞ்சது தான். வச்சுக்க என்றாள்.

மதியானம் போல மாசாணம் வந்தாள். என்ன அப்பத்தா? என்னா செய்யிற என்றாள். என்னாடி! காரியம் இல்லாமல் வர மாட்டியே என்றாள் அப்பத்தா! ஆமாம் உன் காரியமா தான் வந்து இருக்கேன்.

ஊருக்கு மேற்க இருக்கற இடத்தை எனக்கு கை மாத்தி விடுறது? நல்லா கவனிக்கறேன் என்றாள். இங்கேருடி நீயும் நிறைய தடவை கேட்டு வந்துட்ட. நானும் மாட்டேன்னு சொல்லிட்டேன் விடாமல் விரட்டுனா எப்புடி என்றதும் வீட்டு வாசலில் வந்து நின்றார் பேரரசு ஐயா!

அப்பத்தா! என்றபடி வந்தார். அப்பத்தாவின் கைகளை பிடித்தபடி இந்த ஊரு புள்ளைங்களுக்கு நீங்கள் செஞ்ச உதவி ரொம்ப பெருசு என்று நா தழுதழுத்தார். மேற்க இருந்த இடத்த பள்ளிக்கூடம் கட்டுறதுக்கு குடுத்த உங்கள புள்ளைங்க மறக்க மாட்டாங்கனு சொல்லி கை கூப்பினார்.

புள்ளைங்க படிப்பு முக்கியமே! காலத்துக்கும் பயன்படும்லனு சொவ்லி உதட்டை சிரிப்புக்கு குடுத்தா அப்பத்தா. மாசாணம் ஒண்ணும் சொல்லாமல் அங்க இருந்து கிளம்பிட்டாள்.

“கீச் கீச்” னு குருவிங்க அப்பத்தாவ கூப்டுச்சுங்க. அப்ப தான் அதுக கூடு கட்டி இருந்துச்சு. கொஞ்சம் கம்பு எடுத்து போட்டாள் அப்பத்தா.

பொட்டுகடலை விக்கிற பொன்னுசாமி அந்தப் பக்கமா வந்தார். தவுச்சு போயி அப்பத்தா திண்ணையில உக்காந்தார். ஆரு! நான் தான் பொன்னுசாமி அப்பத்தா என்ற குரல் கேட்டதும், கையில் சொம்பு மோருடன் வந்தாள் அப்பத்தா. குடியா பொன்னு என்றார். மறுக்காமல் வாங்கி குடித்து தாகம் தீர்த்துக் கொண்டார்.

அப்புறம் வியாபாரம் எப்புடி போகுது? என்றவளிடம், வருசகெனக்கா இந்த பொட்டுகடலை வியாபாரந்தான். பெருசா படிப்பு இல்ல. புள்ள குட்டிய காப்பாத்த எதையாவது செய்யனும்ல அப்பத்தா என்றபடி வாரேன்னு சொல்லி மிதிவண்டியை மிதித்தார்.

அன்றைய நாள் மெதுவாக நகர, ட்ரங்குப் பெட்டியை திறந்தாள் அப்பத்தா. அவளுடன் ஒரு மாதமே வாழ்ந்த கணவனின் ஆசை முகத்தை பார்த்துக் கொண்டாள். கூடை நாற்காலியில் அமர்ந்து இருந்த தன் ஒரு வயது மகனையும் பார்த்தாள். ஏனோ? அழுகையே வரவில்லை அவளுக்கு.

திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் கணவன் காலராவில் போய் சேர, அவன் வாரிசை சுமந்தவள் ஆண் மகவை பெற, அதுவும் ஒரு வருடத்தில் இறக்க,வாழ்வின் இரக்கமற்ற போரில் அவளின் மொத்தமும் போனது.

தனக்கான ஒரு வாழ்வை அவள் கோரவில்லை. மற்றவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத நபராக தன்னை மாற்றி தகவமைத்து கொண்டாள். சின்ன புள்ளைங்களுக்கு பால் தர ஆரம்பிச்சவள ஆசையா புள்ளைங்க அப்பத்தானு கூப்புட அந்த பேரையே எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

“அழகம்மாள்”ங்கற அவளோட பேர விட அப்பத்தாங்கற பேரு நல்லா தான் இருக்கு. இரவின் மடியில் உறக்கத்திற்கு வழி விட்டு ஊர் உறங்க, பழைய நினைவுகளில் உறக்கத்தை தேடுகிறாள் அப்பத்தா.!