தாத்தாவின் தட்டுக்கூடை குறுங்கதை – மீராபாண்டி
எண்பது வயது நிறையப் போகும் எங்கள் தாத்தாவிற்கு விடுமுறை அளித்ததேயில்லை அவர் வாழ்வை சுமந்து திரியும் அலுமினிய பாத்திரங்கள் நிறைந்த தட்டுக்கூடை…
வித விதமாய் சோற்றுப் பானையும் குழம்பு சட்டியும்… வறுவல் கடாயும், இட்லி பானையும், பசி தீர்க்கும் தட்டுகளும், ஆப்பைக் கரண்டிகளும் அண்டாவும் குண்டாவும் அந்தக் கூடையில் வசித்திருக்கும்…
பொங்கல் தீபாவளி கோவில் திருவிழாக்களுக்கும் பண்டிகைகளுக்குப் பஞ்சமே இல்லை…
எத்தனை பலத்த காற்று வீசி நெற்கதிர்கள் சாய்ந்தாலும் தாத்தா விற்கும் சோற்றுப் பானைகளில் கு(கொ)தித்து விளையாடி பசி தீர்க்க எப்படியேனும் தப்பிப் பிழைத்திடும் சில நெல் மணிகள்…
எத்தனை தடைகாலம் வந்தாலும் எப்படியேனும் துள்ளி வந்து குழம்பு சட்டியில் நீந்தும் மீனினங்கள்…
எத்தனை விலைவாசி ஏற்றத்திலும் எப்படியேனும் சில காயும் கறியும் கொதித்தே தீரும் வறுவல் கடாயும் எப்படிப்பட்ட தண்ணீர் பஞ்சம் வந்தாலும் துளித் துளியாய்க் கசிந்து நிறையும் அண்டாவும் குத்தண்டாக்களும்…
எங்களுக்கு எப்போதும் பசி தெரியாமல் பார்த்துக் கொண்டது…
வியாபாரம் முடிந்து வீடு திரும்பு தாத்தா கூடை குறைந்திருந்தால் எங்களுக்கான தின்பண்டங்களும் அவரது டவுசர் பையும் நிறைந்திருக்கும்…
பழையன கழித்துப் புதிய பாத்திரங்களைப் புகுத்தும் தாத்தாவின் தட்டு கூடைக்கு நித்தமும் போகிதான்…
அவரோடு வாழும் எங்களுக்கு எப்போதும் பண்டிகை தான்…
காலத்தைத் தன் கால்களால் மிதித்து உருட்டிக் கொண்டிருக்கும் தாத்தாவும் புன்னைகைத்து பளபளத்திருக்கும் தாத்தாவின் தட்டுக்கூடையும் எப்போதும் எங்களுக்கு வாழ்வு கொடுத்து வழிநடத்தும் சூரிய வெப்ப விளக்குகள்…