கணித சாம்ராச்சியத்தினை கலக்கிய காய் – பேசும் பிரபாகரன்
கணிதத்தில் தேற்றம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பித்தகோரஸ் தேற்றம் .
இதனை வெளிக்கொண்டுவந்தர் வடிவியலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி கொண்ட கணித மேதை பித்தகோரஸ்.
தனக்கொரு பள்ளி , தனிக்கொரு பாடம் ,தனக்கென மாணவர்கள் என ஒரு கணித சாம்ராச்சியத்தினை நடத்திய கணித சக்ரவர்த்தி பித்தகோரஸ் ஆவார் .
பித்தகோரஸினை பின்பற்றிய அவருடைய மாணவர்களுக்கு பித்தகோரியன்கள் என்று பெயர் .
பித்தகோரியன்களுக்கு பித்தகோரஸ் ஒரு வித்தியாசமான நிபந்தனை விதித்திருந்தார். அது என்ன வென்றால் பித்தகோரியன்கள் யாரும் ஃபாவா பீன்ஸ் சாப்பிடக்கூடாது என்பதாகும். ஃபாவா பீன்ஸ் சாப்பிடுவதினை கடுமையான குற்றமாக கருதினார் பித்தகோரஸ். பண்டைய காலத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதங்கள் அதிகமாக இருந்தது .
நோய்களை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தாமல் நோய்களை தடுக்க ,நோய் உண்டாக்கும் காரணிகளை அழிப்பதற்கு முன்னோர்கள் எடுத்த ஆயுதமே சமயமும் அதனை ஒட்டிய பழக்க வழக்கங்களும் ஆகும். அதனை சிலர் மூட பழக்க வழக்கங்கள் சொல்லுவார்கள் . ஆனால் அவை மூட பழக்க வழக்கங்கள் அல்ல நோய்களை மூடும் பழக்க வழக்கங்கள். ஃபாவா பீன்ஸ் என்ற ஒருவகையான பீன்ஸ் சாப்பிடுவதினால் சிலர் இரத்தசோகை என்ற நோயால் பாதிக்கப்படுவதை பித்தகோரஸ் கவனித்தார்.
அதுவும் பத்தாயிரம் நபர்கள் சாப்பிடுகிறார்கள் என்றால் இரண்டுபேருக்கு தான் நோய்த்தாக்குதல் அப்போது ஏற்பட்டது.
அதற்கும் எந்த தெளிவான சான்றுகளும் கிடையாது. ஃபாவா பீன்ஸினை மக்கள் பயன்பாட்டிலிருந்தும் ,தன்னுடைய பயன்பாட்டிலிருந்து விலக்க வேண்டும் என்று முடிவுசெய்தார் பித்தகோரஸ். வரலாற்றில் முதன்முதலில் பயிரிடப்பட்ட பயிர்களில் ஒன்றாக ஃபாவா பீன்ஸ் இருந்தாலும், பல கலாச்சாரங்கள் ஃபவாஸைப் பற்றி கலவையான உணர்வுகளைக் கொண்டிருந்தன.
வரலாற்று தத்துவ மேதை பிளினியின் கூற்றுப்படி,
பித்தகோரியன்கள் ஃபாவா பீன்ஸினை இறந்தவர்களின் ஆன்மா உறையும் இடம் என்று நம்பினர்கள் என்று தன்னுடைய கட்டுரைகளில் கூறியுள்ளார்.
ஏனெனில் ஃபாவா பீன்ஸின் சதை பகுதி, அவற்றின் கறுப்பு நிற பூக்கள் மற்றும் வெற்று தண்டுகள் வானத்தினையும் பூமியையும் இணைத்து இறந்தவர்களின் ஆன்மா வந்து செல்வதற்கு ஒரு ஏணியாக இருப்பதாக நினைத்தனர்.
ஃபாவா பீன்ஸ் சாப்பிடுவதை நரமாமிசம் சாப்பிடுவதற்கு இணையாக கருதினர் .
உடலையும் ஆன்மாவையும் சுத்திகரிப்பதன் மூலம் ஒருவர் சூரியனுக்குத் திரும்பி, சூரியனைத் தாண்டி நட்சத்திரங்களுக்கும் பால்வீதிக்கும் செல்ல முடியும் என்று நம்பினார்.
இதற்கான சுத்திகரிப்புக்கு ஃபாவா பீன்ஸ் ஊறு விளைவிக்கும் என்று பித்தகோரஸ் கருதினார் . கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ் எகிப்தியர்கள் ஃபாவா பீன்ஸ் பயிரிட மறுத்துவிட்டதாக எழுதினார்.
இது பொய்யானது என்றாலும், ஃபாவா பீன்ஸ் பெரும்பாலும் ரோமில் ஒருவரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் வீட்டில் பரிமாறும் உணவுவகைகளில் ஒன்றாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டது. அதிகமான ஃபாவா பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகப்படியான உணாச்சி தூண்டுதல், வெளிப்படையான தொந்தரவுக்கு வழிவகுக்கும் என்று பித்தகோரஸ் நினைத்தார்.
பித்தகோரஸ் தனக்கென ஒரு கொள்கை , தனக்கென ஒரு மக்கள் கூட்டம் என வைத்திருப்பவர் . கிரேக்கத்தில் ஜனநாயக தேர்தல்களில் வாக்களிக்க வண்ண பீன்ஸ் பயன்படுத்தப்பட்டதால் ஃபாவா பீன்ஸ் தன்னுடைய வாழ்நாளில் பித்தகோரஸ் மறுத்ததாக தத்துவமேதை அரிஸ்டாட்டில் தன்னுடைய கட்டுரையில் கூறியுள்ளார் .
அப்போது காணப்பட்ட ஃபாவா பீன்ஸ் இனம் முற்றிலும் மரபணு மாற்றம் ஏற்பட்டு அழிந்து விட்டது . எஞ்சியவைகள் பதினான்காம் நூற்றாண்டுக்கு பிறகு இந்த ஃபாவா பீன்ஸ் மரபணு மாற்றம் செய்யப்பட்டு உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவாக ஐரோப்பிய நாடுகளில் பயிரிடப்பட்டு இன்று உலகம் முழுவதும் பயணித்த சுவைமிகுந்த உணவாக இருக்கிறது. கிமு 495 இல் பித்தகோரஸ் எதிரிகளிடமிருந்து தப்பிக்க ஒருகுகையில் மறைந்திருந்தார். எதிரிகள் அவரை துரத்திக் கொண்டு வரும்போது ,அவர் ஃபாவா பீன்ஸ் வயல் வழியாக செல்ல வேண்டியிருந்தது .ஆனால் அதன் வழியாக செல்லமறுத்த பித்தகோரஸ் ,ஃபாவா பீன்ஸ் வயல் வாசலிலேயே கொலை செய்யப்பட்டார் என்ற செவிவழி செய்தி துரதிஷ்டகரமானது .
மூட பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் நோய்களை மூடும் பழக்க வழக்கங்களாக அவர் அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.எது எப்படியோ கணித மேதை பித்தகோரஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தினை பிடித்தது இந்த ஃபாவா பீன்ஸ் என்பதினை நாம் அறியமுடிகிறது. .
துணை நூல்கள்
The Mystery Bean By RUSS PARSONS –latimes on April 18, 1996
Fava-the Magic Bean By Layla Eplett- Scientific American Blog Network on August 8, 2012
Pythagoras: The fava of pharmacogenomics by Gene Dosage-lateralmag on August 3, 2015
Why Beans Were an Ancient Emblem of Death by Anne Ewbank- Atlas Obscura on May 25, 2018
தொடர்புக்கு [email protected]