Haiku therippukal poem by Jananesan ஜனநேசனின் ஹைக்கூ தெறிப்புகள் கவிதை

ஹைக்கூ தெறிப்புகள் கவிதை – ஜனநேசன்



குளமும் இல்லை
தவளையும் இல்லை
தாவி அலைவுறும் மனது.
நீ வந்ததும் எழுச்சி
மறைவதும் நெகிழ்ச்சி
சூரியனே …
மொட்டைமாடியில் பறக்கும் கொடிகள்
சுரையும், பூசணியுமாக
குடிசையைக் காத்த நன்றி…!
பூத்தது அழகு
உதிர்ந்து கிடப்பதும் அழகு !
மஞ்சள் கொன்றையே …!
மாறின இறக்கைகள்
இரு கைகளாக ….
மாறவில்லை பறக்கும் மனம் !
வளைந்து நெளிந்து நின்று
உயிர் வாழும் …..
மரமும் ….!
தாயிழந்தவருக்கு தாய் !
காலமறிந்து ஊட்டும்
கனிமரங்கள் !
புழுங்கும் மீன்களுக்கு
விசிறிடும்…..
பனையோலை நிழல் !
வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும்
ஓவியங்களாக ….
காங்கிரீட் பூங்கா !
கலைத்திடாதே காலைக்காற்றே …
இலைகளில் ,பூக்களில்
விளைந்த முத்துக்களை ….!