ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பாசிக் குளத்தைத் துயிலெழுப்பும் தவளை” (ஹைக்கூ தொகுப்பு நூல்)- ஹேமமாலினி சுந்தரம்
ஹைக்கூ – ஜனநேசன்
ந க துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தியான நிலையில் மலை
அலைகின்றன மேகங்கள்
அமைதி தேடும் மனம்.
கற்பூர நெடி தாங்காமல்
படத்தின் பின்பறம் இருந்து
வெளியே வந்தது பல்லி.
பூரணமாய் நிறைந்திருக்கிறேன்
பௌர்ணமி நிலவொளியில்
புத்தனுடன் நான்.
கிளை கீழே விழாமல்
பாதுகாத்தது தாங்கி
மற்றொரு கிளை.
குயிலின் குரல் ஒலி கேட்டு
அதே குரலில் குரல் கொடுக்க
கற்றான் ஆதிமனிதன்.
கோயில் மணியோசை
என்னைச் சுற்றி ஒலி அதிர்வு
பூவிலிருந்து வெளியேறுகிறது வண்டு.
காலி டீ கோப்பை
சுற்றி சுற்றி வருகிறது
தாகத்தில் ஈ
கோடை வெப்பம்
மின்தடை புழுக்கம்
படுக்கையறை இருட்டில் பூனை.
பிரபஞ்ச சக்தியை
காதில் வைத்து கேட்டேன்
வலம்புரி சங்கின் ஒலி.
நிழல் கொடுக்கிறது
மரணக்குழி மேல்
வளரும் தும்பைச் செடி.
நூல் அறிமுகம்: பு.தனிசஷா பாரதியின் புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் – மு.ஆனந்தன்
பொள்ளாச்சி இலக்கிய வட்டச் செயலாளர் கவிஞர் பூபாலன் அவர்களின் புதல்வி வளரிளம் பெண் கவிஞர் பூ.தனிக் ஷா பாரதி அவர்களின் புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் என்ற ஹைக்கூ தொகுப்பை வாசித்தேன். முதல் படைப்பு என்பதற்கான எந்த தடுமாற்றமோ தயக்கமோ இல்லாமல் வந்திருக்கும் தரமான படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
முற்றும் துறந்த முனிவரின்
கமண்டல நீரில்
மீன்களின் நதி…
ஒரு முனிவர் அதுவும் முற்றிலும் துறந்த முனிவர். அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரிடம் அந்த கமண்டலத்தைத் தவிர வேறெதுமில்லை. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த கமண்டலத்திலும் சிறிதளவு நீரைத் தவிர வேறெதுவும் இல்லை. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த கமண்டலத்தில் ஒரு நதியை அதுவும் மீன்களின் நதியை அந்த முனிவர் அடைத்து வைத்திருப்பதை தன் கவிக் கண்களால் கண்டடைகிறார் இந்தக் குட்டிக் கவிஞர். எவ்வளவு பெரிய விசயத்தை ஒரு சின்ன ஹைக்கூவில் அடக்கிவிட்டார். அந்த முனிவரைப் போல்.
தொட்டி மீன்கள்
என்றென்றும் நீந்துகின்றன
கடலைச் சேர…
தொட்டி மீன்கள் அடைபட்டிருப்பதாக எதிர்மறையாகப் பார்க்காமல் கடலைச் சென்றடைவதற்காக நீந்துகின்றன என நேர்மறையாகப் பார்க்கிறார். அல்லது அந்தத் தொட்டி மீன்கள் கடலைச் சென்றடைய வேண்டுமென்ற தன் ஆழ்மன ஆசையை வெளிப்படுத்துகிறார். இப்படியான ஆழ்மன ஆசை ஒரு கவிஞனுக்கு மட்டுமே வாய்க்கும். அதுவும் பெண் கவிஞருக்கு. அதுவும் வளரிளம் பெண் கவிஞருக்கு மட்டுமே வாய்க்கும்.
வெண்ணிற மலருக்கு
சாயம் பூசிப் போகும்
பட்டாம்பூச்சி…
வெள்ளைப் பூக்களுக்கு வர்ணம் பூச பட்டாம்பூச்சிகளை அழைத்து வந்த கவிஞரின் பேனா முனையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்.
கசக்கி வீசிய கதை
விரித்து ரசிக்கிறது
காற்று …
கசங்கிக் கிடக்கும் தாள்களை நாம் வெறுமனே கடந்துதான் செல்கிறோம். அதில் என்னுடைய, உங்களுடைய கவிதைகளோ, கதைகளோ இருக்கலாம்.
ஆனால் நாம் என்றுமே அதை விரித்து வாசிக்க நினைத்ததில்லை. இருக்கட்டும். காற்று அப்படி இருக்காதே. காற்றை வாசிக்க வைத்த கவிஞரின் கற்பனைக்கு தென்றலின் மென்மையை பரிசளிக்கிறேன். இதேபோல் மற்றொரு ஹைக்கூ. இதில் இலைகளின் கதைகளை மழை படிக்கிறது.
மழை தினந்தினம் படிக்கிறது
பழுப்பு இலைகளின்
பசுமைக் கதைகளை…
வாசிப்பு ஆர்வம் குறைந்து வரும் மனிதர்கள் மத்தியில் மழையாவது வாசிக்கட்டுமே.
கனவுகளைத் தாங்கி
பகலெல்லாம் காத்திருக்கிறது
படுக்கை…
என்ற ஹைக்கூ உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. கருப்பொருளிலும் கவியாடலிலும் என்ன ஒரு முதிர்ச்சி.
வீட்டுக் கதவைத் திறந்ததும்
கையை விரித்தபடி
காத்திருக்கும் டெடி பியர்கள்…
இப்படியாகக் கவிஞரின் இளகிய குழந்தை மனது கனமான பெரிய பெரிய சொற்களால் அனைத்துக் கவிதைகளிலும் வெளிப்படுகிறது.
சிரித்த புத்தரின்
மூட்டை நிறைய
சுருண்ட செய்தித் தாள்கள்…
இந்த ஹைக்கு மீண்டும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஒன்பதாவது பயிலும் 14 வயதான ஒரு வளரிளம் பருவ வயதுக் கவிஞர் தன் முதல் படைப்பிலேயே இத்துனை தத்துவ வெளிச்சத்துடனும் அழகியலுடனும் கவித்துவத்துடனும் எழுத முடியுமா?. அந்த அரிய பெருமையை அடைந்திருக்கிறார் கவிஞர் தனிக்க்ஷா பாரதி.
நூல் முழுவதும் மனிதத்தின் மீதும், சமூகத்தின் மீதும், இயற்கையின் மீதும், உயிரினங்கள் மீதுமான அக்கறையை தன் நுண்மைகளுடனும் முரண்களுடனும் படிமங்களுடனும் இயல்பாகக் காட்சிப்படுத்திச் செல்கிறார் கவிஞர். கவிஞருக்கு ஒரு கூட்டம் குளிர் மேகப் பொதிகளை வாழ்த்தின் அடையாளமாக பகிர்ந்தளிக்கிறேன்.
வாழ்த்துகளுடன்
மு.ஆனந்தன்.
நூல் : புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் – ஹைக்கூ தொகுப்பு
ஆசிரியர் : பூ.தனிக்க்ஷா பாரதி
விலை : ரூ.70/-
பக்கங்கள் : 88
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
நூல் அறிமுகம்: மு.தனஞ்செழியனின் ”ஹைக்கூ என்றும் சொல்லலாம்” – ஜெயஸ்ரீ
வணக்கம்,
“ஹைக்கூ என்றும் சொல்லலாம்” பேராசிரியர் கவிஞர் மு. தனஞ்செழியன் அவர்களின் முதல் ஹைக்கூ நூல்.
ஆங்கில பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் என்ற பன்முகத் தன்மை கொண்ட நபராக நண்பராக அறிமுகமான தனஞ்செழியன் தன்னுடைய முதல் நூலினை வெளியீட்டதில் மகிழ்ச்சி.
இதோ புத்தகத்தின் சில கவிதைகளை பகிர்கிறேன். மீதியை நீங்கள் வாசிக்க விட்டு விடுகிறேன்.
முதல் கவிதையே ஒரு மெல்லிய அதிர்ச்சியோடு
“சுலபமாக இறந்துவிட்டான்
சுடுகாட்டிற்குத்தான்
வழி கிடைக்கவில்லை”
இறப்பதில் இருக்கும் சுலபம் இறந்த பிறகும் போராட்டம் தொடரும் போல பேசாமல் வாழ்ந்தே விடுவோம் என்ற மெல்லிய புன்னகையுடன் அடுத்த கவிதையை வாசிக்க, அதே புன்னகையை தக்க வைத்த அடுத்த கவிதை.
“பிரசுரமாகாத
கவிதைத் தொகுப்பு
ரப் நோட்”
பள்ளிப்படிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இந்த வரிகளை படிக்கையில் மீண்டும் ரப் நோட்டை ஒரு முறை பார்ப்போமா என்றே தோன்றியது. பழைய இனிமையான நினைவுகளுடன் அடுத்த கவிதை தொடர்கிறது.
“தூக்கம் தொலையச்
சாய்ந்து நிமிர்கிறது
காவலாளியிடம் பிளாஸ்க்”
வழக்கமாக காவலாளிகள் நமக்காக தலை சாய்ந்து நிமிர்வார்கள் இங்கே ஒரு பிளாஸ்க் காவலாளியிடம் சாய்ந்து நிமிர்கிறது. நல்ல கற்பனை கவிஞருக்கு.
“பந்தியில் பேரலையாகக்
கவிழும் இலைகள்
நீந்தத் திணறும் பலகாரங்கள்”
அருமை! உணவுகள் வீணாவதை பொறுக்க முடியாத ஒரு மனம் அதை இவ்வளவு மென்மையாகவும் கவித்துவத்துடனும் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.
“கண்ணாடி சிறையில்
வாழ்வதெல்லாம்
மீன்களுக்குத் தண்டனை”
சுதந்திரமாக பறக்க வேண்டிய பறவைகளை கூண்டில் அடைப்பதும் விரிந்து பரந்த நீர்ப்பரப்பில் நீந்த வேண்டிய மீனை தொட்டியில் அடைத்து வீட்டிற்குள் வைப்பதும் தற்கால மனிதர்களுக்கு ஒரு பெருமிதம். ஆனால் அவைகளுக்கு தண்டனை என்பது உணர்த்தும் வரிகள்.
அதிக ஆழமில்லாத எளிமையான புரிதலையும் இன்பமாக வாசிப்பு அனுபவத்தையும் ஒரு மணி நேரத்தில் தந்துவிடுகிறது நூல். அறிமுக எழுத்தாளர் என்ற அடையாளத்தை சற்றும் காட்டிக் கொள்ளாத 100 ஹைக்கூ தொகுப்பு. மேன்மேலும் எழுத வாழ்த்துகள்.
நூல் : ஹைக்கூ என்றும் சொல்லலாம்
ஆசிரியர் : மு. தனஞ்செழியன்
வெளியீடு : நோஷன் பிரசுரம்
பக்கங்கள் : 36
விலை : ரூ.100
நூல் வாங்க விரும்புவோர்:
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
நன்றி.
ஜெயஸ்ரீ
நூல் அறிமுகம்: ராஜிலா ரிஜ்வான் “நானும் புத்தன் தான்..” – தேனி சுந்தர்
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹைக்கூ நூலை வாசித்தேன்.. அப்போ அதுக்கு முன்னாடி நிறைய ஹைக்கூ நூல்களை வாசித்துக் கொண்டிருந்தீர்களா என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள்..
தமிழகத்தில் ஹைக்கூ இலக்கியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்கக் கவிஞர்கள் எல்லாம் பெரும்பாலும் நம்மூர்ல தான் இருந்தார்கள்.. நம்மூர்க்காரர்களாக இருக்கிறார்கள்..!
ஹைக்கூ சிகரத்தில் எப்போதும் இருக்கும் கம்பம் மாயவன், தோழர்கள் உமர் பாரூக், Tamizhmani Ay மற்றும் Cumbum Puthiyavan ஆகியோரது ஹைக்கூ நூல்கள் எப்படியும் கைக்கு வந்து விடும்… இப்போது அவர்களும் ஹைக்கூ எழுதுவது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். ஆகவே என்னுடைய ஹைக்கூ வாசிப்பு குறைந்ததற்கு அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்..
கம்பம் பகுதியில் அந்த ஏக்கத்தை, தாகத்தை போக்கும் விதமாக, குறைக்கும் விதமாக இப்போது கவிஞர் ராஜிலா ரிஜ்வான் ஹைக்கூ சாரல் பொழிந்து வருகிறார்.. அவருடைய இரண்டாவது நூல் “நானும் புத்தன் தான்..” அகநி வெளியீடாக வந்திருக்கிறது..
அடிப்படையில் அவர் ஒரு ஆசிரியர். இஸ்லாமியப் பெண். ஹைக்கூ கவிஞர்.. எல்லாமே கொஞ்சம் தனித்துவமான தன்மைகள் தான்.. தனது அணிந்துரையில் தோழர் அ.உமர் பாரூக் அவர்கள் கூறுவது போல, தேனி மாவட்டத்தில் ஹைக்கூ நூல் வெளியிட்ட முதல் இஸ்லாமியப் பெண் கவிஞர் ஆகிறார்.. அதுவும் அடுத்தடுத்து இரண்டு நூல்கள்..!
அவருடைய நூலும் கவிதைகளும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளதும் கூட நமக்கும் பெருமை அளிப்பதாக இருக்கிறது.. வாழ்த்துகள் தோழர்.. தொடர்ந்து எழுதுங்கள்..!
ரசனை, கோபம், விமர்சனம், அனுபவம் என்று அவரது கவிதைகளைச் சீர்தூக்கிப் பார்க்கையில் ரசனை சார்ந்தவை மிகுதியாக உள்ளது..
அனுபவம் அங்கங்கே எட்டிப் பார்க்கின்றன. கோபம் சில இடங்களில்.. விமர்சனங்கள் மிகக் குறைந்த அளவே வெளிப்பட்டுள்ளதாக என் பார்வைக்குப் படுகிறது. எனது பார்வை தவறாகக் கூட இருக்கலாம். அந்த அளவிற்குத் துல்லியமாக மதிப்பிடும் இலக்கியவாதியும் நான் அல்ல..!
குழந்தைகள் குறித்த கவிதைகள் ஒப்பீட்டளவில் முதலிடத்தைப் பிடிக்கின்றன. ஆசிரியர் என்கிற அனுபவமும் தனக்கான இடத்தை அங்கங்கே கோரிப் பெற்றுள்ளது.
நமது பேரம் பேசும் திறமையைக் காய்கறி விற்பவர், செருப்புத் தைப்பவர்களிடம் மட்டுமே காட்டுகின்ற வீராப்பை கிண்டலடிக்கும் கவிதைகள் சிறப்பு..!
முதிர்கன்னி, பொது முடக்கம், பசி, பட்டினி, ஏழையின் வீடுகளில் மழை நாட்களில் ஏற்படும் துன்பம், துயரம், இணைய வழி கல்வி என இயல்பான வாழ்வில் அவர் கண்ட, கேட்ட, உணர்ந்த அனைத்தையும் அழகிய கவிதைகளாக நமக்கு பகிர்ந்திருக்கிறார்..
அவருக்கு ஹைக்கூ எங்கிருந்து கிடைக்கிறது என்கிற ரகசியத்தையும் நமக்குச் சில கவிதைகளில் சொல்லி இருக்கிறார்..
எழுதியவை நிறைய என்றாலும் எழுத வேண்டிய இடங்களும் இன்னும் நிறைய இருப்பதை உணர முடிகிறது.. அவர் ஹைக்கூ பயணத்தின் தொடக்கத்தில் தான் இருக்கிறார் எனும் போது இன்னும் நிறைய எழுதுவார். விமர்சனப் பூர்வமாக இன்னும் நிறைய எழுதுவார். தேனி மாவட்டம் மட்டுமின்றி பரந்த அளவில் கவனம் பெற்று ஒளிர இருக்கும் கம்பம் பள்ளத்தாக்கின் நம்பிக்கைத் தாரகை என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
புதிதாக எழுத வரும் பலருக்கும் பல தேவைகள் இருக்கின்றன. அவற்றில் முதல் தேவை.. முக்கியத் தேவை மு.மு. போன்ற ஒரு நம்பிக்கை ஒளி..! ஒரு ஏணி.. தூக்கி விடும் கரம்..!!
ஆம், வளரும் படைப்பாளிகளை அடையாளம் காணுதல், அங்கீகரித்தல், அகநி மூலமே நூல் வெளியிட்டு அவர்களை உலகறியச் செய்தல் என்பதையும் தன் இலக்கியப் பயணத்தின் இன்னொரு பகுதியாகவே தொடர்ந்து செய்து வருகிற ஹைக்கூ இலக்கிய முன்னோடி தோழர் முருகேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. வாழ்த்துகள்.. பாராட்டுகள்..
நூலில் இருந்து எந்த ஒரு ஹைக்கூவையும் நான் எடுத்துச் சொல்லவில்லை. வேண்டுமென்றே தான் நான் தவிர்த்து இருக்கிறேன்..
நீங்களும் ஹைக்கூ சாரலில் கொஞ்சம் நனைந்து தான் பாருங்களேன்..!
– தேனி சுந்தர்
நூல் : நானும் புத்தன் தான்
ஆசிரியர் : ரஜிலா ரிஜ்வான்
விலை : ரூ: ₹
வெளியீடு : அகநி வெளியீடு
ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி
1)
ஒடித்த பறவை இறகு
இதமாய் இறங்குகிறது
காதுகளில்
2)
இரட்டை விரல்களின் நடுவே
சிம்மாசனம் போட்டது
சிகரெட்
3)
உலுக்கிய கைகளில்
முத்தமிட்டு அமர்ந்தன
சரக்கொன்றை மலர்கள்
4)
அழுத்தியதும் வெடித்தது
ஏழைகளின் பட்டாசு
எருக்கம்மொட்டு
5)
வரிகள் இருந்தும்
கவிதை இல்லை
உதடுகள்.
ஹைக்கூ கவிதைகள் – ஹ்ரிஷிகேஷ்
தடித்த ஹெட்போன்களை
தாங்கும் செவிகளுக்கு
இசையும் பாரமாகுமோ?
தன்னையே சுற்றிக்கொண்டும்
துளியும் காற்றின்றி
தவித்தது மின் விசிறி!
கால்கள் இருந்தும்
கடக்காது இருக்கிறது
ஆற்றின் பாலம்!
நித்தம் கிழிக்கப்பட்டும்
நிரந்தர புன்னகையில்
நிலையாய் நாட்காட்டி!
ஊரே உறங்கும் நேரத்திலும்
ஓயாது உழைக்கின்றன
கடிகார முட்கள்!