இந்தியாவில் வெறுப்பை பரப்பி வன்முறையைத் தூண்டுவது இனிமேல் குற்றமாக இருக்கப் போவதில்லை! – ராம் புனியானி | தமிழில்: தா.சந்திரகுரு
மிகவும் மோசமான, வெறுப்புப் பேச்சைப் பேசிய பிறகு பாஜக மாநிலப் பிரிவின் செய்தித் தொடர்பாளராக சூரஜ் பால் அமு நியமிக்கப்பட்டார். மாட்டிறைச்சி-மாடு பிரச்சனையில் அக்லக் கொல்லப்பட்ட பிறகு கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் இறந்த ஒருவரின் உடலுக்கு மூவர்ணக் கொடியைப் போர்த்த மத்திய அமைச்சர் (மகேஷ் சர்மா) வந்து சேர்ந்தார். கொலைக் குற்றவாளிகள் எட்டு பேருக்கு பிணை கிடைத்த பிறகு மற்றுமொரு அமைச்சரான ஜெயந்த் சின்ஹா அவர்களுக்கு மாலை அணிவித்துக் கௌரவித்தார். சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூட்டத்திலிருந்த பார்வையாளர்களை நோக்கி ‘சுட்டுக் கொல்லுங்கள்’ (கோலி மாரோ) என்ற முழக்கைத்தை எழுப்பிய பிறகு கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். இந்தப் பின்னணியில் வெறுப்பைப் பரப்புவது, வன்முறையைத் தூண்டுவது என்று தற்சமயம் நடந்து வருகின்ற கவலையளிக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, அதிகாரிகளின் நடவடிக்கைகளில் உள்ள குறைபாட்டை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக தேவையில்லாத போது பேசுகின்ற நமது பிரதமர் அமைதியாக இருந்து விடுவது அல்லது ஜுனைத்தின் கொலை, ரோஹித் வெமுலாவின் மரணத்திற்குப் பிறகு வலிமிகுந்த நீண்ட தாமதத்திற்குப் பிறகு பேசினார் என்பதையும் இங்கே நினைவுகூரலாம்.
இன்று (2021 டிசம்பர் 24) இரண்டு குழப்பமான நிகழ்வுகள் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகும் அந்த விவகாரங்களில் நமது பிரதமரின் உரத்த மௌனம் மிகத் தெளிவாக இருந்தது. டிசம்பர் 19 அன்று நடந்த முதல் சம்பவத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு சுதர்சன் டிவியின் தலைமை ஆசிரியரான சுரேஷ் சாவாங்கே சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதல்வரும், கோரக்நாத் பீடத்தின் குருவான ஆதித்யநாத் யோகியா நிறுவப்பட்ட ஹிந்து யுவ வாஹினி என்ற அமைப்பு செய்து கொடுத்திருந்தது. அந்தப் பிரமாணம் ‘இந்த நாட்டை ஹிந்து ராஷ்டிரம் ஆக்குவதற்காக இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவோம், மரணமடைவோம் – தேவைப்பட்டால் கொல்வோம் என்ற உறுதிமொழியை எடுத்து அதற்கான தீர்மானத்தை மேற்கொள்கிறோம்’ என்றிருந்தது.
ஹரித்துவாரில் ‘இஸ்லாமிய பயங்கரவாதமும், நமது பொறுப்புகளும்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு கூட்டத்தில் காவி உடை அணிந்த நூற்றுக்கணக்கான சாதுக்களும், சாத்விகளும் குழுமியிருந்தனர். அது காசியாபாத் கோவிலின் தலைமைப் பூசாரியான யதி நரசிங்கானந்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தர்ம சன்சத் என்ற நிகழ்வாகும். ‘(முஸ்லீம்களுக்கு எதிரான) பொருளாதாரப் புறக்கணிப்பு வேலை செய்யாது… ஆயுதங்களை எடுக்காமல் எந்தவொரு சமூகமும் உயிர் வாழ முடியாது… வாள்கள் வேலை செய்யாது, அவை மேடைகளில் அழகாக மட்டுமே இருக்கும். உங்கள் ஆயுதங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்… அதிக எண்ணிக்கையில் சந்ததியினரை உருவாக்குவது மற்றும் சிறந்த ஆயுதங்களே உங்களைப் பாதுகாக்கும்’ என்று கூறி அந்தக் கூட்டத்திற்கான தொனியை அவரே அமைத்துக் கொடுத்தார். முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதமேந்திய வன்முறையைத் தூண்டும் வகையில் ‘ஆயுதமே வெல்லும்’ (சாஸ்த்ர மேவ ஜெயதே) என்று தெளிவான அழைப்பையும் அவர் விடுத்தார்.
மற்றொரு வீடியோவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைப் போல ஆவதற்காக ஹிந்து இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக நரசிங்கானந்த் கூறியதைக் காண முடிகிறது. பிரபாகரன். பிந்தரன்வாலே போல ஆக வேண்டுமென்று அவர் ஹிந்து இளைஞர்களுக்கு அழைப்பையும் விடுத்திருந்தார்.
ஹிந்து மகாசபையின் பொதுச் செயலாளரான ‘அவர்களில் (முஸ்லீம்களில்) இருபது லட்சம் பேரைக் கொல்லக்கூடிய நூறு வீரர்கள் நமக்குத் தேவை’ என்று கூறிய அன்னபூர்ணா மாதா (முன்னர் பூனம் ஷாகுன் பாண்டே என்றறியப்பட்டவர்) ‘அன்னை சக்திக்கு சிங்கம் போன்ற நகங்கள் உண்டு, அது கிழித்தெறிந்து விடும்’ என்றார். அவர்தான் மீரட்டில் இரண்டாண்டுகளுக்கு முன்பு காந்தி கொலையை மீண்டும் நிகழ்த்தி, அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடியவர்.
பிரதமர் மன்மோகன் சிங் ‘தேசிய வளங்களில் சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு’ என்று கூறிய போது நான் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் நாதுராம் கோட்சேவைப் பின்பற்றி அவரை துப்பாக்கியால் ஆறு முறை சுட்டுக் கொன்றிருப்பேன் என்று பீகாரைச் சேர்ந்த தரம் தாஸ் மகராஜ் அங்கே பேசியிருந்தார்.
இவை அந்த தர்ம சன்சத்தில் பேசப்படவற்றில் சில மாதிரிகளே. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு இத்தகைய கூட்டங்கள் விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பாலேயே நடைபெறத் தொடங்கியுள்ளன. ஆச்சரியம் என்னவென்றால் இந்தச் சம்பவம் குறித்த வீடியோக்கள் பரவி அவை காவல்துறைக்குக் கிடைத்துள்ள போதிலும் இதுவரையிலும் (டிசம்பர் 25 வரை) யாரும் கைது செய்யப்படவில்லை.
நமது சட்டம் குற்றம் என்று கருதுகின்ற இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுபவர்கள், தங்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தங்கள் பேச்சுகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் அமைதியாக இருந்து பாராட்டுவார்கள் அல்லது இதுபோன்ற பேச்சுக்கள் அல்லது தூண்டுதல்கள் தேர்தலையொட்டிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள். தான் சொல்லியிராத நகைச்சுவைக்காக முனாவர் ஃபாரூக்கி கைது செய்யப்பட்டிருக்கும் நேரத்தில்தான் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பது நம்மை ஆச்சரியப்படுத்துவதாகவே இருக்கிறது. ஃபாருக்கியின் நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப ரத்து செய்யப்பட்டிருந்தன.
நாட்டின் சமவாய்ப்பு கொண்ட குடிமக்களான சிறுபான்மையினர் குறித்து பேசப்படுகின்ற இதுபோன்ற வார்த்தைகள் அவர்கள் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் எவ்வாறாக இருக்கும்? பயமும், மிரட்டலும் நிச்சயம் உச்சத்தை எட்டும். ஏற்கனவே தீவிரப் பிரச்சனையாக இருந்து வருகின்ற குறிப்பிட்ட பகுதிக்குள் அவர்களை ஒதுக்கி வைத்தலை பொருளாதாரப் புறக்கணிப்பு, உயிருக்கு அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் போன்றவை மேலும் தீவிரப்படுத்தும். இவையனைத்தும் குறித்து கலக்கமடைந்த ஜமியத்-இ-உலமா ஹிந்த் அமைப்பைச் சார்ந்த மஹ்மூத் மதானி உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். சிறுபான்மையினர் ஆணையம் இதை அறிந்து நடவடிக்கை எடுக்குமா? சமீபத்தில் ஹிந்து மதத்திற்கு மாறிய ஜிதேந்திர தியாகி (முன்னர் வாசிம் ரிஸ்வி என்றறியப்பட்டவர்) மீது முதல் தகவல் அறிக்கையை மட்டுமே பதிவு செய்வதை விடுத்து காவல்துறை அவர் மீது சரியான நடவடிக்கையை எடுக்குமா? உச்சநீதிமன்றம் ஏன் தானாக முன்வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்த அளவிற்கான வெறுப்பு பேச்சுகள், வெளிப்படையான வன்முறை தூண்டுதல்களால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து மார்டினா நவரதிலோவா ட்வீட் செய்திருக்கிறார். தி டெய்லி கார்டியன் பத்திரிகையில் 2020ஆம் ஆண்டு வெளியான கட்டுரையில் ‘பொதுநலன்களை அனைவரும் அடைவது சிக்கலானதாகி, மதம் சார்ந்ததாக அல்லது அவ்வாறில்லாததாக உள்ள ஆளும்கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது, வெறுப்பு பேச்சுகள் மூலம் பொதுமக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து தூண்டிவிடுவது என்பது தொன்னூறுகளின் முற்பகுதியிலும், அடுத்து வந்த இரண்டாம் புத்தாயிரத்தின் ஆண்டுகளிலும் பொதுவான போக்காகக் காணப்பட்டது. இந்திய ஜனநாயகத்தைப் பொறுத்தவரை வெறுப்புப் பேச்சு என்பது பரந்த நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இதுபோன்று இந்தியாவில் நடந்திருக்கும் சம்பவங்களால் உலகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு ஆபத்தான அளவை எட்டியிருக்கிறது. பிரிவினைக்குள்ளாகாத இந்தியாவில் ஹிந்து, முஸ்லீம் என்று ஆரம்பித்த வகுப்புவாத அரசியல் திட்டம் இப்போது முஸ்லீம் சிறுபான்மையினர் மீது தன்னுடைய கவனத்தைச் செலுத்தி வருகிறது. முஸ்லீம்களை மிகவும் பயங்கரமானவர்கள் என்று சித்தரிக்க ஒவ்வொரு சந்தர்ப்பமும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அமெரிக்க ஊடகங்கள் உருவாக்கிய ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற சொற்றொடர் குறித்த உலகளாவிய போக்குகள் இலக்கு வைத்து தாக்கப்படுகின்ற சமூகத்தை மேலும் மோசமாகப் பாதித்தன. கடந்த ஏழு ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசின் ஆதரவுடன் நடைபெற்றிருக்கும் தாக்குதல்கள் மிக மோசமான அளவிற்கு அதிகரித்துள்ளன.
குடிமை சமூகத்திடம் இந்த கொடூரமான நிகழ்வுகள் குறித்து விழித்தெழ வேண்டிய தேவை எழுந்துள்ளது. வகுப்புவாத நீரோட்டத்தால் திட்டமிடப்பட்டு ‘மற்றவர்களுக்கு’ எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வெறுப்பு பேச்சுகளும், வன்முறையும் – யாருடைய பெயரால் அவையனைத்தும் நடக்கின்றனவோ – அதே சமூகத்தை உட்கொள்வதற்கான மாற்றத்தை எடுக்கும். வெறுப்புணர்வை பரப்புபவர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். அத்தகைய பேச்சுகளுக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் பல தலைவர்களும் ட்வீட் செய்து கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
வெறுப்பு பேச்சுக்கு எதிராக அன்பை ஊக்குவிக்கின்ற வகையிலான சமூக இயக்கம் தவிர வேறெதுவும் இப்போது உதவப் போவதில்லை. பக்தி-சூஃபி மரபுகளின் அடிப்படையில் நாம் செயலாற்ற வேண்டிய நேரம் இது; சமூகத்தையும் நாட்டையும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வைத்திருக்க மகாத்மா காந்தி-மௌலானா ஆசாத்தின் பாதையே நமக்குத் தேவைப்படுவதாக இருக்கிறது.
http://www.sacw.net/article14798.html
நன்றி: சௌத் ஆசியா சிட்டிசன்ஸ் வெப்
தமிழில்: தா.சந்திரகுரு