Sembaruthi Poovum Sevvana Kathalum Poem By S. Sakthi செம்பருத்திப் பூவும் செவ்வான காதலும் ! கவிதை - ச. சக்தி

செம்பருத்திப் பூவும் செவ்வான காதலும் ! கவிதை – ச. சக்தி




வீட்டின் ஜன்னல்
வழியாக எட்டிப் பார்க்கின்றன செவ்விதழ்களை
விரிக்கும் செம்பருத்திப் பூக்கள்,

செம்பருத்திப் பூவுக்காக
பூக்களைச் சூடாமலே
சுற்றித் திரிகிறது
தலைவியின் அழகான கூந்தல்,

அழுக்கடைந்த
தலைவியின்
கூந்தலை அழகாகக்
காட்சிப் படுத்துகிறது
செம்பருத்திப் பூக்கள்,

ஒற்றைச் செம்பருத்திப் பூவை
தலையில் சூடி
தலைவனுக்குத் தன் காதலை
வெளிப்படுத்துகிறாள் தலைவி
மைக் செட் புனலாக,

செம்பருத்திப் பூக்களின்
தேனைத் தீண்டுவதற்காக
வண்டுகள் வட்டமடிக்கின்றன
தலைவியின் கூந்தலைச் சுற்றி,

வண்டுகளைப் போல
தலைவனும் வட்டமடிக்கிறான்
தலைவியின் கரம் பிடிப்பதற்காக,

தலைக்கனம் கொண்ட
செம்பருத்திப் பூக்களைத்
தாங்கி நிற்கிறாள்
மெல்லிய இடை கொண்ட
தலைவி,

பணியில் நனையும்
வெயிலில் காயும்
மழையில் கரையும்
செம்பருத்திப் பூக்களைக்
கூவி கூவி விற்கிறேன்,

அம்மாவுக்காக
அப்பாவுக்காக
மனைவிக்காக
மகனுக்காக
மகளுக்காக
எழுதுகிற எனக்காக
வாசிக்கிற உங்களுக்காக……!!!