வெப்பத்தால் தகிக்கும் சென்னை
கோப்பைத் தேநீர் கவிதை – சக்தி
தித்திக்கும்…சுவையில்
திடமான புத்துணர்ச்சிக்கோர்…
புது வரவாய்…கையில்
சுமக்கும்…ஒரு கோப்பைத் தேநீரில்…
ஆவி பறக்க…
ஆவியின் சூட்டைக் குறைக்க இதழ்குவித்து…
ஊதிய போது…
கோப்பைத் தேநீரில் சில துளிகள்…
சிதறிப் பறக்க…
பறந்த…துளிகள் நீர்த்திவளை போல்
மேசையை அலங்கரிக்க…
தேநீரில் சுவையை நானறியும்
முன்னே…எங்கோ இருந்து பறந்து
வந்த ஈக்களின் கூட்டம் தேநீரின்
சுவையை ருசிபார்த்து…
என் முகம் பார்க்க…
இன்னொரு முறை ஊதி…
அதற்கோர்…பங்கினை மீண்டும் வழங்க… தித்திக்கும் தேநீரில்…
நன்றி சொல்லி பறந்ததே…
தேநீரைப்பருகும் முன்னே…
புத்துணர்வும்… புதுபந்தமும்…
ஒரு கோப்பைத் தேநீரால்…
கண்ட பின்னும்…
ஒவ்வொரு முறையும் ஈக்களின் கூட்டம் எதிர்பார்த்தே…மீண்டும்
ஒரு கோப்பைத் தேநீரை
சுமக்கின்றேன்…
கோப்பைத்தேநீரால் உருவான
புதுவரவைத்தேடியே…
ஆறாத ஆறு குழந்தைகள் கதை – இரா. கலையரசி
“கசகச னு ஒரே வியர்வையாக இருக்கு. வெயில்காலம் ஆரம்பிச்சிருச்சுல அதான்”.பேசியபடி தண்ணீரில் மூக்கை அலசிப் பார்த்தது மித்து.
நெடி தாங்க. முடியாமல் அப்படியே பின்னுக்கு ஓடியது.’இது என்ன?இப்டி ஒரு வாடை,.ஆத்து தண்ணீர் கெட்டு போயிருச்சோ?’
“படிச்ச மனுசன் பாடு தான் பாட்டா பாடுது ஊருதான்”.
தத்துவ தாத்தா ஆந்தை பாடியவாறே அங்க வந்தார். “என்ன எல்லாரும் ஆத்தோரமா நின்னுட்டீங்க?”னு கேட்க “வாங்க வாங்க, தண்ணீர் குடிக்க அலக விட்டேன்.உயிரே போயிருச்சு” என்று மித்து அழுகாத குறையா பேசுச்சு.
“எல்லாம் கழிவுதான்..அங்க இருக்கிற சாயப்பட்டறையில இருந்து வருது…ஆறே செத்த மாதிரி ஆகிருச்சு”.
“வட்ட வட்டமா நுரை நுரையா வருதே? நம்ம இப்டி தான் சாவோம் போல” சொல்லிட்டுப் பறந்தது மித்தி.
“ஓடுற தண்ணியில ஒரு குடம் விசம் குடிக்க நெனச்சா ஆகிடும் நாசம்”.
பஞ்ச் பேசிப் பறந்துட்டாரு ஆந்தையாரு.
என்ன குழந்தைகளா? ஆறு குளங்கள் மாசடையறத பத்தி என்ன நினைக்கறீங்க?
அனல் தழுவிய காலம் கவிதை – சந்துரு.ஆர். சி
எங்கள் சிறகுகளின் மேல் வலுவேற்றுவதாய்ச் சொல்லி
நுகர்ந்தறியா
சில திரவியங்களை
வலிந்து பூசினார்கள்.
சந்தேகத்தின் கண்கொண்டு
நாங்களதை மறுதலித்தபோது
பசித்திருந்த எங்களின்
இரைப்பைகள்
அறுசுவை கனவுகளால் பூட்டபட்டன.
சொப்பனங்கள் மெல்ல இளைத்து
நாங்கள்
அலைகழிக்கப்பட்டபோது
வேர்கள் அழுகிய புற்களின் வனாந்திரத்தில்
எங்கள் நம்பிக்கைகள்
குடியேற்றப்பட்டன.
இருண்ட Cகளில்
கார்மேகச் சித்திரங்களை
எழுதி தினமும் ரசிக்கச்சொல்கிறார்கள்.
ஏமாற்றங்களால்
எங்கள் கனவின் நிறங்கள்
ஒவ்வொன்றாய் உதிர்வதை தினமும் காண்கிறோம்.
முந்தைய நாட்களில் நறுமணங்களுடன்
கை வீசிச்சென்ற இவ்வழியில்
தீய்ந்த வாசமொன்று
எங்களை விடாமல்
துரத்திக்கொண்டே வருகிறது.
திணறடிக்கும் அவ்வாடை
வருகின்ற திசையை
கண்ணுக்கெட்டியவரை
பார்வைகளால் அகழ்ந்து
யூகிக்க முடியாமல் திகைக்கிறோம்.
தீய்ந்த வாடை மேலும் எங்களை சமீபிக்கிறது.
அனல் காற்றின் பெருஞ்சூடு
அடி வயிற்றில்
சுள்ளென உரைக்கும் போதுதான்
அறிந்துகொண்டோம்
திரவியம் பூசப்பட்ட
எங்கள் சிறகுகள்
பொசுங்கும் வாடையை…




