இரா. மதிராஜ் கவிதை

இரா. மதிராஜ் கவிதை




உன்னுடன் பேசிய
ஒரு சில நிமிடங்களே
இன்னும் உயிருடன்
இருக்கின்றன

கண்கள் எழுதிய
கவிதைக் கண்ணீரை
வாசிப்போர் யாரோ ?

வினையே ஆடவர்க்குயிர்
அது காதலாய்
இருந்தாலும்.

தனக்கு எவ்வளவு
வேலையிருத்தாலும்
மற்றவர்களுக்கு
உதவி செய்யும்
உள்ளங்களால்
மட்டுமே
பூமி சுழலுகிறது.

பாக்கு மட்டைகளுக்கான
விளம்பரம் இப்போது
பாலித்தீன் பைகளில்.

நான் எங்கே இருந்தாலும்
இதயம் எப்போதும்
உன்னிடம் மட்டுமே.

விலையுர்ந்த மகிழுந்தில்
சோகப் பாடல்களே
கேட்கின்றன

பரபரப்பான சாலை
ஓரங்களில்
முட்செடி
வேடமிட்டு
ஒளிந்திருக்கும்
இலந்தை.

– இரா. மதிராஜ்

காங்கேயம்
திருப்பூர் மாவட்டம்
அலைப்பேசி
9788475722.

சுதாவின் கவிதைகள்

சுதாவின் கவிதைகள்




உதவி செய்யாமலும்
கடந்து சென்று பழகுங்கள்…

பேசுவதற்கு வார்த்தைகள்
நிரம்பிய போதும் கொஞ்சமேனும்
மிச்சம் வையுங்கள்…

அடுத்தடுத்த குறுஞ்செய்திகள்
அவசியம் இல்லையெனில்
தவிர்த்து நகருங்கள்…

உங்கள் நட்பாயினும்
ரகசியங்களை பத்திரப்படுத்துங்கள்….

உங்கள் குழந்தையேயாயினும்
உங்களுக்கு பிறகு தான்
என்பதை உறுதி செய்யுங்கள்…

எத்தனை வேலைகள் இருந்தாலும்
வெட்டவெளியில் வெறுமனே
அமர்ந்திடப் பழகுங்கள்…
கைபேசி இன்றி…

எல்லா வேலைகளையும்
இன்றே முடித்துவிடாதீர்கள்…
நாளைக்குக் கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்…

ஏனெனில் இங்கே தீர்ந்து போதல்
என்பது முடிந்து போதலுக்குச் சமம்…
அன்பே ஆயினும் கொஞ்சமேனும்
மிச்சம் வையுங்கள்…

வெறுப்பையும் கூட கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்…. பிறிதொரு

சந்திப்பில் அறிமுகம் தேவையிருக்காது…

******************

நான் விலகி நிற்கிறேன்
பஞ்சுமிட்டாய் வாங்கிய கைகள்
இன்று என் நிழல் விட்டு
விலகி நிற்கையில் நான்
கொஞ்சம் விலகி நிற்கிறேன்…

ஊர் சுற்றித் துள்ளிக்குதித்த
கால்களில் காரணம் தேடி
கடக்க நினைக்கையில் நான்
கொஞ்சம் விலகி நிற்கிறேன்…

பேசிப்பேசி ஓயாத வார்த்தைகள்
சுற்றிச் சுற்றி நோகாத கால்கள்…
இன்று வலியில் உதிர்த்த
வார்த்தைகளை இலையை அசையாது
உந்திச் செல்லும் பறவையாய்
கடந்து செல்கயில் நான்
சற்று விலகி நிற்கிறேன்…

அன்பின் பரிமாணம்
வார்த்தைகளில் முற்றுப்பெறும்
பொழுதுகளில் நான் விலகி
நெடுந்தூரம் செல்கிறேன்…

வேறு வேறு நட்புகளையும்,
அன்பையும் கொண்டவர்களே
அனைவரும் என உணர்கையில்
நான் மெல்ல விலகிச் செல்கிறேன்…

சாக்குப்போக்கு சொல்லி
என்னோடு நீ நிற்கமறுக்கும்
வேளையில் இதய ஓரத்தில்
ஒரு நரம்பு மட்டும் ஊமைக்
கண்ணீரில் ஓலமிடுகிறது…
அந்த இதயத்தைத் தேற்றுவதற்கேனும்
நான் விலகி நிற்கிறேன்…

மௌனத்தின் துர் நிமிடங்களை
மீண்டும் ஸ்பரிசிக்க விருப்பமற்று
நான் மெல்ல மெல்ல விலகுகிறேன்…

என் தலை முடியில் நரை முடி
மிகுந்த வேளையில்
சிந்தனைகளும் வெளிறிப் போனதோ
எனச் சற்றே விலகுகிறேன்…

உனக்கென நான்
பத்திரப் படுத்த நினைக்கும்
கைக்குட்டையும்
நீ விரும்பாத ஒன்றாகிவிடுமென
சற்றே விலகி நிற்கிறேன்…

மனதால் தொலைவில் வாழ
முயற்சிக்கையில் நான்
மெல்லமெல்ல விலகி நிற்கிறேன்…

– சுதா

மனிதம் த(பி)ழைக்குமா? கவிதை – மரு உடலியங்கியல் பாலா

மனிதம் த(பி)ழைக்குமா? கவிதை – மரு உடலியங்கியல் பாலா




சாலையில் விழுந்தோரை
சட்டென தூக்கும் கரங்கள்!

கைவிடப்பட்ட முதியோருக்குக்
கைகொடுக்கும் இளைஞர்கள்!

வாலைக் குழைத்துவரும் நாய்க்கு
வாங்கிக்கொடுக்கும் டீ பன்!

சில்லரைக்காக இறக்கபடுவோர்க்கு
சில்லரைகொடுத்து இரக்கபடுவோர்!

கர்ப்பிணியின் கடுஞ்சுமைதூக்கும்
கண்ணியமாய் உடுத்தும் யுவதிகள்!

மனநலம் குன்றிய “பைத்தியம்”மீது
குணநலம் கொண்டு உதவுமீகை !

அனாதை குழந்தை தத்தெடுத்து
ஆதரவுக்கரம் நீட்டும் அறவோர் !

மானுடம் தழைக்க,
தன்னுயிர் போன்று
மன்னுயிர் காக்கிற
படமாடும் கோவில் நிகர்த்த..
நடமாடும் கோவிலாம்
மானுடர் போற்றி போற்றி!

– மரு உடலியங்கியல் பாலா

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




விழுதலும் எழுதலும்
***********************
இடத்தைப் பொறுத்தது
எழுதல் என்பது!
விழுந்து விட்ட
எல்லா இடங்களிலும்
எழுந்துவிட இயலாது!
மண்ணின் தன்மையைப்
பொறுத்துதான்
எழுந்திருப்பதும்
இயலாததும்!

மண் மட்டுமே
ஒட்டி… தட்டினால்
போகுமளவிற்கு
சில இடங்களில்
எழுந்து விடலாம்!

சில சிறு சிராய்ப்புகளுடன்
சில இடங்களில்
எழுந்து விடலாம்!

சில இடங்களோ
மூக்கும், மூட்டும்
முறிந்தேதான்
எழுந்திருக்க முடியும்!

சில இடங்கள்
சிலர் உதவியிருந்தால்
மட்டுமே
எழுந்திருக்க இயலும்!

சில இடங்களில்
விழுந்தால்…..
அம்புட்டே!
அதையெப்படி
நான் காதல் என்று
சொல்ல முடியும்?

இல்லந்தோறும் புனித நூல்
********************************
வள்ளுவனை திருவள்ளுவனை படிப்போர் நாளும்
தீங்கற்ற வாழ்வுதனை வாழ்வார் நாளும்
தெள்ளுதமிழ் அள்ளித்தரும்
செல்வம் எல்லாம்
திருக்குறளில் கிடைத்திடுமே பருகிப் பாரீர்!

உண்மையுடன் வாழ்க்கைதன்னை வாழ்வோர் யாரும்
ஒப்பற்றத் திருக்குறளை ஓதி வாழ்வார்!
ஆயிரத்து முந்நூற்றுமுப்பது குறளால் அய்யன்
அகிலத்தை ஆண்டகதை
படித்துப் பாரீர்!

அறந்தானே மானுடத்தின் நாதம்  என்றே
அதை வைத்தான்  அய்யனவன் முதலில்பாலாய்!
பொருளென்னும் செல்வந்தனை இரண்டாம் பாலாய்
பொய்யில்லா புலவனவன் போற்றிச் சொன்னான்!

இன்பமது என்னவென்றே விளக்கிச் சொல்லி
இறுதியிலே மூன்றாம் பால் ஊட்டினானே!
உலகோரின் வாழ்க்கையது சிறக்க வேண்டி
உத்தமனோ உண்மைகளை விளக்கி வைத்தான்!

அறியாமல் அகிலத்தில் வாழ்வோ ரெல்லாம்
அய்யனவன் திருக்குறளை
கற்று வாழ்ந்தால்
அகிலத்தில் மேன்மையுற வாழ்க்கை தன்னை
அற்புதமாய் வாழ்ந்திடவே வழியைச் சொல்லும்!

ஞானிகளின் குருவாக வந்துத் தோன்றி
ஞாலமது சிறந்திடவே வழியைச் சொன்ன
மேன்மைமிகுத் திருக்குறளை இல்லந் தோறும்
புனிதமிகு நூலாகப் போற்றி வாழ்வோம்!

– பாங்கைத் தமிழன்

Sathanin Korikkai Poem By R. Sivakumar சாத்தானின் கோரிக்கை கவிதை - ரா.சிவக்குமார்

சாத்தானின் கோரிக்கை கவிதை – ரா.சிவக்குமார்




அவன் ஒரு சர்வாதிகாரி பேராசைக்காரன்.
அவன் கபளீகரம் செய்யாத இடங்களே இல்லை.
எல்லா நல்ல செயலுக்கும்
அவனே காரணகர்த்தாவாகத்
தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றான்.

கருமையை
எனக்கு அடையாளமாய்க் கொடுத்துவிட்டு
வெண்மையைத்
தனது அடையாளமாய்ப் பிரகடனப்படுத்திக் கொண்டான்.

எனக்கென்று
எந்த ஒரு நல்லதையும்
மிச்சம் வைக்கவில்லை
எல்லாம் அவனுக்கே சொந்தமாம்.
தூசியாய், துகளாய், அணுவாய்,
அண்டமாய், அனைத்துமாய்த்

தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றான்.
அன்பு, அனுபவம், நன்மை,
உதவி, கருணை, அமைதி என
அனைத்திற்கும் அவனே காரணம் என கோலாச்சுகின்றான்.

சர்வமும் அவன் என்றால்
எனது இருப்பு பற்றி
எனக்கே சந்தேகம் எழுகின்றது
என்னால் தான் அவன் முழு சுதந்திரமாக
மனங்களில் ஆளுமை நடத்துகின்றான்.

எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தவன் அவன் என்றால்
அவனுக்கே உயிர் கொடுத்தவன் நான்.
என்னில் இருந்தே அவனும் அவதரித்தான்
அவனின் மறுபாதியும் நான் தான்.

நான் இல்லை என்றால்
அவனும் ஒருபோதும் இருக்கப்போவதில்லை..
நான் உண்மையல்ல என்பதை உணரும் பொழுது
அவனும் முற்றிலும் மறைந்தும் கரைந்தும் போய் விடுகின்றான்.

ஆதலால் மனங்களே
அவனின் இருப்பிற்கு காரணமான என்னையும்
புனிதனாக்கி விடுங்கள்.
சாத்தான் என்று மட்டும் தூற்றாதீர்கள்.