“உங்கள் முகத்தை மறைத்திருக்கும் இந்த முக்காடு அழகாக இருக்கிறது , அதைக் கொண்டு தேசிய கொடியை உருவாக்கி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்”
என்று இசுலாமிய சமுகத்தை சேர்ந்த கவிஞர். மாஜாஸ் லக்னாவியின் சுதந்திர போராட்ட அறைகூவல் மிகவும் பிரபலமானது.
சுதந்திர போராட்டத்தில் இசுலாமியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது, பாகிஸ்தான் என்ற நாடு மத அடிப்படைவாத அடிப்படையில் பிளவுபட்ட பிறகும், மதச்சார்பற்ற இந்தியாவுடன் தங்களை பிணைத்துக்கொண்ட இசுலாமியர்கள் ஜனநாயகத்துடன் நடத்தப்படுகிறார்களா என்பதை முன்வைக்கும் மிகவும் முக்கியமான நூல் “The Hijab – Islam, Women and the Politics of Clothing”.
அனைத்து மதங்களும் பெண்களை கீழ்மைப்படுத்தும் நடவடிக்கைகளையே வரலாறு நெடுகிலும் பின்பற்றி வருகிறது. இதில் எந்த மதத்திற்கும் விதிவிலக்கு கிடையாது இந்தியாவில் பெரும்பான்மை மதம் என்ற அடாவடித்தனத்துடன் சிறுபான்மையின மதங்களை நசுக்கும் வலதுசாரிகளின் ஒரு நடவடிக்கையாகவே கடந்த ஆண்டு கர்நாடகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்ற பிரச்சனை உருவாக்கப்பட்டு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அது கண்டனத்திற்குரிய பேசு பொருளாக மாறியது. இந்திய உச்ச நீதிமன்றமும் தடை செல்லும் என்று அறிவித்துள்ளது. ஹிஜாப்பை பெண்களின் உரிமை, மதத்தின் அடையாளம் என்பதை தாண்டி உலக அரசியல், இனவரைவியல், வலதுசாரி மேலாதிக்கம், ஆணாதிக்கம், கலாச்சாரம், பண்பாடு என்று வெவ்வேறு ஆய்வு தளங்களில் பல்வேறு நபர்களால் செறிவு மிக்க விவாதங்கள் இந்நூலில் முன்வைக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு எந்த ஒரு தனிநபரும், எந்த மதத்தையும், கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கத்தை, மொழியை பின்பற்ற உரிமை உள்ளவர்கள் என்கின்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கொரோனாவிற்குப் பிறகு ” New Normal ” என்று அதிகம் பேசப்படுகிறது. தற்போதைய இந்திய ஆட்சி பாசிச கொள்கைகளுக்கு ஆதரவாக இந்திய மக்களை ஜனநாயக வெளியிலிருந்து, மதச்சார்பற்ற மனங்களை தாண்டி வலதுசாரி திருப்பத்திற்கு நியூ நார்மலாக மாற்ற பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது, அது CAA, காஷ்மீர் 370 நீக்கம், அயோத்தி தீர்ப்பு, சபரிமலை பெண்கள் அனுமதி, Triple Talaq, என மிகப் பெரிய அளவிலும், சின்னஞ்சிறு அளவிலும் மிகத் தீவரமாக அரசு துணையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலில் தற்போதைய அம்மாநில முதல்வர் முன்வைத்த 80% Vs 20% என்ற கோஷம் சாதாரணமாக கடந்து போகக்கூடியதா?
ஹிஜாப்பின் அரசியல் என்று ஹிலால் அகமதுவும்,ஹிஜாப், மாட்டிறைச்சி தடை மற்றும் சகிப்புத்தன்மையை மையமாக வைத்து தன்வீர் ஃபாசிலும், கள அனுபவத்துடன் சிரின் செய்த்தி எழுதிய இறையாண்மையுள்ள உடல் கட்கரை, மண்டல் கமிஷன் அறிக்கைக்கு பிறகான இந்திய அரசியல் வெளி எவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிரானதாக மாற்றப்பட்டுள்ளது என்று அலசும் யாசர் அராபத்தின் முன்வைப்புகள், இந்திய உடைகள் மற்றும் ஹிஜாப் தடை குறித்த அருணிமாவின் கட்டுரை, வேற்றுமைகளை அங்கீகரித்து ஒற்றுமையை கற்றுக் கொள்வது எவ்வாறு என கர்நாடக ஹிஜாப் தடை அரசியலை முன்வைத்து நவநீத ஷர்மா மற்றும் ஹரிகிருஷ்ண பாஸ்கரன் முன்வைக்கும் உண்மைகள், சமூகப் பங்கேற்பு மற்றும் பொதுவெளிக்கு பெண்களை அழைத்து வருவதில் ஹிஜாபின் பங்கு எவ்வாறு உள்ளது என்று சிஜிலாசின் ஆய்வு, பெண்களுக்கு ஹிஜாப் அவசியமா? இல்லையா? என்று நூர் சாகிர் முன் வைக்கும் உரையாடல், கதர் ஆடை அணிவது இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு முக்கிய நடவடிக்கை, ஆனால் இந்தியாவில் பெண்களின் உடைகளை தேர்வு செய்வதற்கு கலாச்சார காவலர்களுக்கு என்ன அவசியம் என்று பேசும் ஜமீலின் கேள்விகள் என ஹிஜாப் பற்றிய அறிமுகம் அது குறித்த அரசியல் பிரதிணை ஏற்படுத்தும் கட்டுரைகள் மூன்றாவதாக வரலாறு தனிமனித அனுபவம் ஆய்வுகள் நான்காவதாக பெண்களின் உரிமைகள் குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் இறுதியாக ஒரு சிறுகதை என்று மொத்தம் ஐந்து பகுதிகளாக வரலாற்று ஆய்வாளர் யாசர் அராபத் மற்றும் டெல்லி JNU பேராசிரியர் அருணிமா ஆகியோரால் இணைந்து தொகுக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் சிறுபான்மையின இசுலாமியர்களின் பங்கு எவ்வளவு முக்கியமான ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக முதல் விடுதலை போர் என்று சொல்லக்கூடிய 1857 புரட்சியில் மட்டும் 225 இசுலாமிய பெண்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் ஆவணங்கள் கூறுகிறது. மேலும் பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்திய இசுலாமிய வீராங்கனைகளான அபாதி பானோ பேகம், பீபி அம்துஸ் சலாம், பேகம் அனிஸ் கித்வாய், பேகம் நிஷாதுன்னிசா மோஹானி பாஜி ஜமாலுன்னிசா, ஹஜாரா பீபி இஸ்மாயில், குல்சும் சயானி, சையத் ஃபக்ருல் ஹாஜியா ஹாசன்……. என்று பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும். சுந்திர இந்தியாவை உருவாக்குவதற்கு பாடுபட்ட ஒரு சமூக மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் “New Normal” இந்தியாவை இன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கி வருகிறார்கள். சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொருவரது மனசாட்சியையும் இந்நூல் வாசித்தப்பின் உலுக்கும்.
நூல் : The Hijab ஆசிரியர் : P.K.Yasser Arafath, G.Arunima விலை : ரூ.₹599
பக்கம் – 240, வெளியீடு : Simon & Schuster பதிப்பகம் தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/ விற்பனை : 24332924 [email protected]
ஸ்ரீராம் பஞ்சு
———————————————————–
கட்டுரையாளர் ஸ்ரீராம் பஞ்சு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்.
சாமுவேல் பட்லர் என்பவர்19 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து இலக்கிய ஆளுமையாவார். எரவான் (EREWHON) என்பது அவரது புதுமையான நாவல். எரவான் என்பது உண்மையில் இல்லாத ஒரு கற்பனை தேசம். அந்த நாவலில் அவரது காலமான விக்டோரியா காலச் சமூகத்தை சாமுவேல் பட்லர் எள்ளி நகையாடி இருப்பார். எரவான் ஒரு பகடி இலக்கியம்.
இந்த இலக்கிய முறையை பின்பற்றி கட்டுரையாளர் ஸ்ரீ ராம் பஞ்சு ஒரு கற்பனையான நீதிமன்றத்தில், கற்பனையான நீதிபதிகளால், ஒரு உண்மையான பிரச்சனையின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பைக் கூறுகிறார். அதுவே சமூகத்தின் மனசாட்சியாக இருப்பதை காண்கிறோம்.
நீதிமன்றங்களின் சமூகப் பொறுப்பின்மையை சாடுகிறார்.
———————————————————-
ஹிஜாப் மனுதாரர்களின் வாதம்
———————————————————–
கர்நாடக மாநிலப் பள்ளி வாரியத்தின் பள்ளிகளுக்கான சீருடை விதிகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த சீருடைநெறிமுறைகளை அமல்படுத்துவதால் முஸ்லிம் மாணவிகள் தலையை துணியால் மறைக்கும் ஹிஜாப் அணிய முடியவில்லை; ஹிஜாப் அணிவது தடுக்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் ஹிஜாப் அணிய விரும்பினால் பள்ளிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் மூலமாக அவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது என்பது மனுதாரர்களின் வாதமாகும்.
இந்த மனு மீது பத்து நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டுமென்று பள்ளி நிர்வாகத்திற்கு குறுகிய கால அவகாச நோட்டீஸ் நீதிபதிகளாகிய நாங்கள் பிறப்பித்தோம்..
சீருடை குறித்த அடிப்படை ஒழுங்கு நெறிமுறைகள் பற்றி ஆய்வு செய்தோம். அது மாணவர்கள் கட்டாயம் அணிந்து வர வேண்டிய உடைகளை பற்றிக் கூறுகிறது. அதில் தலையில் அணியும் துணி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
ஹிஜாப் என்பது தலையின் பின் பகுதியையும், கழுத்தையும் மறைக்கும் ஒரு சிறிய துணி. அது முஸ்லிம் பெண்கள் அனைவரும் அறிந்த உடை; அணியும் உடை. அது மத நடைமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.
ஹிஜாப்பிற்கு தடை விதிக்க கல்வி நிறுவனத்திற்கு உரிமை உள்ளதா?
———————————————————–
கல்வி நிறுவனங்கள் ஹிஜாப் அணிய விரும்பும் பெண்களை அதை அணிவதில் இருந்து தடுப்பதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதே எங்கள் அன்பு எழும் முக்கிய கேள்வியாகும்.
சீருடை
—————-
சீருடை என்பது சமச்சீரான தன்மையைக் குறிக்கிறது என்பவர்களின் கருத்தை நாங்களும் ஏற்கிறோம். சீருடை என்பது அனைத்து மாணவ மாணவியரும் அணியும் உடை என்றே பொருள்படும்.
இதன் மூலம் பல்வேறு சமூக அடுக்கைச் சேர்ந்தவர்களின் வித்தியாசங்கள் சரிப்படுத்தப்படும் என்பது இதில் உள்ள சாதக அம்சம். அனைத்து மாணவர்களுக்குமான ஒற்றுமையான சூழலை சீருடை வழங்குகிறது. இதன் மூலம் அனைவரும் சமம் என்று உணர வைக்க முடியும். இவை யாவும் குழந்தைகள் கல்வி கற்க உதவுகிறது.
நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும்
முக்கிய அம்சம்
———————————————————–
இவையெல்லாம் இருப்பினும் கூட,
சும்மா ஒரு வகுப்பறையும், எளிய சீருடை செட்டும் மட்டுமல்ல எங்கள் முன்புள்ள பிரச்சனை.
இந்துக்கள்,முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் பல்வேறு மதங்களை உள்ளடக்கியது தான் எனது நாடு என்பது பற்றி தான் எங்களது அக்கறை மிகுந்துள்ளது. இதுதான் முக்கியமான பிரச்சினை. இந்திய அரசியல் சட்டத்தால் நாம் அனைவரும் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளோம். அது சமத்துவம் ,சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை நமக்கு வழங்கியுள்ளது. அது சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் உள்ளடக்கியுள்ளது.மதச்சார்பற்ற பார்வை மற்றும் நடைமுறைகளை கட்டாயமாக்குகிறது. நமது சமூகக் கட்டமைப்பில் சகிப்புத் தன்மையை வலியுறுத்துகிறது. சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையிலிருந்து வரும் சகிப்புத்தன்மை பற்றியே பேசுகிறேன். இவ்வாறு தான், நமது அரசியல்சட்ட அமைப்பு விழுமியங்களை நாங்கள் விளக்குகிறோம்.
கர்நாடக அரசு வழக்கறிஞரிடம் முன்வைத்த கேள்விகள்
—————————————————
ஒரு பிரச்சினையில் உண்மையை கண்டறிவதற்கான கேள்விகளை முன் வைப்பது நீதிபதியின் சிறப்புரிமையாகும். அதன்படி, கர்நாடக மாநில அரசு வழக்கறிஞரிடம் எங்களின் சில வாதங்களை முன் வைத்தோம்.
(1) பல வருடங்களாக குழந்தைகள் பள்ளிகளுக்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். சீருடை அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஹிஜாபை திடீரென தடை செய்வதற்கான அவசியம் என்ன வந்தது?
(2)நீங்கள் பரிந்துரைத்த சீருடையில் தலையில் அணியும் முக்காடு ஒன்றுதான் பிரச்சனையா? அது எந்த வகையில் குழந்தைகளின் கல்வியில் குறுக்கிடும்?
அது கற்றலின் போது, மாணவிகள் கேட்பதையோ, பார்ப்பதையோ அல்லது கவனிப்பதையோ தடுக்குமா?
(3) உடல் சுமக்கும் அனைத்து வகையான மத அடையாளங்களையும் பட்டியலெடுத்து விட்டீர்களா? மார்பில் அணியும் பூணூல், கையில் கட்டும் கயிறுகள், நெற்றியிலிடும் திலகம், நெற்றியில் பூசும் திருநீறு, மணிக்கட்டில் அணியும் உலோக வளையங்கள், தலையில் அணியும் டர்பன் இவைகள் யாவும் உடலில் தரிக்கப்படும் மத அடையாளங்கள் தானே! இதுபோன்று விரிவான பட்டியல் எடுக்கப்பட்டிருந்தால் அதை எங்களிடம் காட்டுங்களேன் பார்ப்போம்!
பதில் அளிக்காத கர்நாடக
அரசு வழக்கறிஞர்
————————————————————
ஒரு வழக்கு இவ்வளவு மோசமாக தகர்ந்து போவதை நாங்கள் இதுவரையில் பார்த்தது கிடையாது. நாங்கள் கேட்ட முதல் இரண்டாம் கேள்விகளுக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞரிடம் இருந்து பதில் இல்லை. அரசு வழக்கறிஞர் ஓடி ஒளிந்து கொண்டார். தான் பள்ளி வாரியத்தில் இருந்து சீருடைக்கான இது போன்ற அறிவுறுத்தல்கள், நெறிமுறைகளை பெற முடியவில்லை. பள்ளி வாரியத்திற்கு இதற்கான பதில்களை வழங்க விருப்பமும் இல்லை என்பதே அரசு வழக்கறிஞரின் பதிலாக இருந்தது.
இரண்டு எளிய சோதனைகள்
————————————————————
இரண்டே இரண்டு விசயங்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று பாகுபாடு. ஒரே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே குறி வைப்பதில் இருந்தே மாநில அரசின் பாகுபாடு அப்பட்டமாக தெரிகிறது. அன்வர் அலி சர்க்கார் தொடர்ந்த வழக்கில் நீதிபதி விவியன் போஸ் (1950 களில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய புகழ்பெற்ற நீதிபதி) வழங்கிய புனிதமான தீர்ப்பைத்தான் அடிக்கடி மேற்கோளாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அரசின் பொது நிர்வாகம் கெட்ட நோக்கத்துடனும் , சமத்துவமற்ற கைகளுடனும் நிர்வாகம் செய்யக்கூடாது என்ற அவரின் சொல்லாடல் தான் நினைவுக்கு வருகிறது.
இரண்டாவது விசயம் நியாயத்தன்மை மற்றும் பகுத்தறிவான செயல்பாடு.
ஏன் எடுத்த எடுப்பிலேயே கல்வி வாரியம் ஹிஜாபை தடை செய்ய வேண்டி வந்தது? கல்வி வாரியத்தின் நெறிமுறைகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டுள்ளதா?
எங்களைப் பொறுத்தவரையில் வரையில் ஹிஜாப் முஸ்லிம் மத நம்பிக்கைகளில் அடிப்படையானதா என்பதெல்லாம் பொருத்தமற்ற கேள்விகள். அது முஸ்லிம் மத நம்பிக்கையில் ஒரு பகுதி என்பதே எங்களுக்கு போதுமானது.
நீதிமன்றச் சுவர்களில் மத அடையாளங்களுடன் நீதித்துறை ஆளுமைகளின் படங்கள்
————————————————————–
மரியாதைக்குரிய நீதிமன்ற அறைகளை சுற்றி எங்களின் கண்கள் வட்டமிட்டன. புகழ் பெற்ற நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள் அவரவர் மதங்களுக்குரிய
மத அடையாளங்கள் ஆன தலையில் அணியும் உடைகளை அணிந்திருக்கும் படங்கள் நீதிமன்றச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர்களும் தங்களின் தொழிலுக்குரிய சட்டங்களால் ஆளப்படுகிறவர்கள்தானே!
ஆனாலும் நீதிமன்ற வாசலில் நுழையும் முன்பு தலைகளில் அணியப்படும் மத அடையாளங்களை களைந்து விட்டு வாருங்கள் என்று கேட்பதற்கு ஒருவருக்கும் தோன்றவில்லையே!
ஏன்? அப்படி கேட்பது அவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகிவிடும் அல்லவா!
பரந்த பார்வை
—————————-
ஹிஜாப் போன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்கும் போது-நாம் எவ்வாறு அரசியல் சட்டத்தை புரிந்து கொள்கிறோம்; எவ்வாறு அதை அமல் படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும். நீதிபதிகளாக நாங்களெல்லாம் எங்கள் முன்பு குவிக்கப்பட்டுள்ள வழக்குக் கட்டுகளில் எங்களது குறுகிய பார்வை குறுக்கிட்டு விடக்கூடாது.
விரிந்து பரந்த பார்வையை
கிட்டப்பார்வை தடுப்பதற்கு அனுமதித்து விடக்கூடாது.
நீதிபதிகளின் வார்த்தைகள் ஆண்கள், பெண்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துகிறது. நீதிபதிகளின் வார்த்தைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் வலிமையை கொண்டுள்ளது.
சிறுபான்மையினர் மீதான அடக்கு முறையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
—————————————————————–
சமீப காலங்களில் சிறுபான்மையினர்,அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் தங்களின் மதத்திற்காகவே
சமூகவிலக்கம், வன்முறை போன்றவற்றை எதிர்கொண்டுள்ளன. இந்த குற்றங்களை செய்யும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சி நிர்வாகம் குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பதில்லை என்பது யாரும் அறியாத ரகசியம் ஒன்றும் அல்ல.
ஒரு சமூகம் பாதுகாப்பின்மையை உணர்ந்தால் அது எதிர்வினையாற்றும். அந்த எதிர்வினையானது எளிதில் புலப்படும் ஒரு வடிவத்தின் வழியாக வெளிப்படும். அதை ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பு இயக்கத்தின் வழியாக வெளிப்படும். ஹிஜாப் போன்ற எளியில் புலப்படும் ஒரு வடிவத்தின் வழியாகவும் வெளிப்படும்.
கல்வி நிர்வாகம் ஹிஜாப் போன்ற மத அடையாளங்கள் மீது கவனம் செலுத்தக் கூடாது. முஸ்லிம் சமூகத்தினருக்கு பாதுகாப்புணர்வை வழங்க வேண்டியது முக்கியமாகும். அது அனைவரின் பிறப்புரிமையாகும்.
கர்நாடகம் தமிழகத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்
———————————————–
கர்நாடகம் தனது பக்கத்து மாநிலமான தமிழகத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான எந்த விதமான வன்முறைகளும் இன்றி இயங்க அந்த மாநிலம் போராடுகிறது. அங்கே சில இடங்களில் கல்வி நிர்வாகம் ஹிஜாபை தடை செய்வதாக அறிந்தவுடன், அரசின் கரங்கள் விரைவாக செயல்பட்டு கல்வி நிர்வாக முயற்சிகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தன. அங்கு ஹிஜாப் என்பது ஒரு பிரச்சனையே அல்ல. ஹிஜாப் அணிவதும் அணியாததும் அவரவர் தேர்வு. ஹிஜாப் பிரச்சனைக்கு பின்னர் தமிழ்நாட்டில் ஹிஜாப் அணியும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இல்லை.ஒரு விசயத்தில் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தி பிரச்சினையாக்க கூடாது என்பதே தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
கவனம் செலுத்த வேண்டியது தலைக்குள் தான்- தலைக்கு வெளியில் அல்ல
—————————————————–
ஒரு தேசத்தில் ஒரு சிறிய துண்டு துக்காணி துணிதான் முக்கியமான பிரச்சனையா? அதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்குமா?
நமது சுதந்திரமும் ,வாழ்க்கையும் ஒரு துண்டு துக்காணி துணி தீர்மானித்து விடுவதை நிச்சயமாக நமது தலைவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
எங்கள் நம்பிக்கைக்கு எதிராக மெல்லிய எதிர்ப்புக்குரல் எழுவதை நாஙங மறுக்கவில்லை
. அந்த எதிர்ப்புக் குரலும் மட்டுப்படுத்தப்படும் என்றும் நம்புகிறோம்.
கல்வி வாரியம் மாணவர்களின் தலையின் மீது என்ன அணியப்பட்டிருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாணவர்களின் தலைக்குள் என்ன செல்கிறது என்பதன்மீது தான் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அவர்களின் வேலை.
வரலாற்றை திருத்தி எழுதுதல், மதிப்புக்குரிய தேசத் தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் போன்ற செயல்பாடுகளில் கல்வி வாரியம் ஆர்வம் காட்டக்கூடாது. அரசியல் சட்டப்படி ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலாச்சாரம், வரலாற்றை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு திருத்தி எழுதுவதில் ஆர்வம் காட்டக்கூடாது.
பாதுகாப்பற்ற உலகத்தில் கூடுதல் பாதுகாப்பின்மையை உருவாக்கக் கூடாது
———————————————————–
மாணவர்களுக்கு நல்ல கல்வி அளிப்பதும், தங்களின் வாழ்க்கைப் பாதையை அவர்களே அமைத்துக் கொள்ளும் வண்ணம் அவர்களை தயார் செய்வதும் தான் கல்வி நிர்வாகங்களுக்குரிய கட்டாய கடமையாகும்.
நாம் உருவாக்கிய இன்றைய உலகமானது இளைஞர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளது. கல்வி கற்பிப்பவர்கள் மாணவர்களுக்கு மேலும் கூடுதல் பாதுகாப்பின்மையை உருவாக்கி விடக்கூடாது.
மதப் பிரச்சனையை கொதி நிலைக்கு கொண்டுவர உதவக்கூடாது நீதிமன்றம்
————————————————————-
ஏன் இந்த வழக்கை சில வாரங்களுக்குள்ளாகவே விரைவாக முடித்துவிட்டோம் தெரியுமா? அதற்கான
காரணங்களை விளக்குகிறோம்.
மதங்களுக்கு இடையில் சர்ச்சைகளை உருவாக்க வேண்டும் என்று எண்ணும் ஒரு சிலரின் ரகசிய விருப்பத்தை மோப்பம் பிடித்து விட்டோம். நீதிமன்றமானது இந்த வழக்கை கொதிநிலையிலேயே நீண்ட காலம் வைத்திருந்தால் சமூகத்தை பிளக்கும் தினசரி தலைப்புச் செய்திகள், பொறுப்பற்ற வாக்குமூலங்கள் குவிந்துவிடும்.
அது நமது சமூகக் கட்டமைப்பைத் தாக்கி சுக்குநூறாக்கிவிடும். அது தொலைக்காட்சிகளுக்கு பெருந்தீனியாகிவிடும். தொலைக்காட்சி தொகுப்பாளர்களின், செய்தியாளர்களின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும். அதை நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம். அதற்கு நாங்கள் பங்குதாரராக இருக்க மாட்டோம்.
நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள்
———————————————————
இது போன்ற பிரச்சனைகள் எந்த அளவுக்கு கடுமையாக கையாளப்படுகிறதோ அந்த அளவுக்கு நாட்டுக்கு நல்லது.
எங்கள் கருத்துக்களை சுருக்கி இறுதியாகச் சொல்வதென்றால்-
அரசியலமைப்புச் சட்டமும் சட்டங்களும் மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்காகத்தான் இருக்கின்றன. அதை உறுதிப்படுத்துவதே எங்களின் பணி. ஆடை அணிதல் போன்ற பிரச்சனைகளில் திசை திருப்பப்படுவதை விட நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பணிகள் ஏராளம் உள்ளன.
தண்டனை சட்டத்தின் படி, விசாரணை இல்லாமலேயே ஏராளமானோர் கைதாகி தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பிரச்சனை பற்றி கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
—————————————————————– நன்றி- பிரண்ட் லைன் நவம்பர்,18,2022
—————————————————————– தமிழில் ம.கதிரேசன்
உத்திர பிரதேசத்தின்’ பிரயாக்ராஜ்’ நகரம்தான் சமீபத்த்கிய தலைப்புச் செய்தி. அங்கே ஜாவேத் முகமது என்ற இஸ்லாமியரின் வீடு புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதே செய்தி.
’பிரயாக்ராஜ்’ நகரமா? இதுவரை நாம் கேள்விப்படாத ஊராக இருக்கிறதே?!’ என உங்களுக்குத் தோன்றும். ’அலகாபாத்’ என்ற அந்த நகரின் ’பழைய’ பெயரை, பாஜக யோகி அரசாங்கம் ’பிரயாக்ராஜ்’ எனப் பெயர் மாற்றம் செய்ததால், இனி நாமும் அந்த நகரத்தை பிரயாக்ராஜ் என்றே அழைக்க வேண்டும். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஜாவேத் முகமதின் வீடு ஏன் இடிக்கப்பட்டது என்று.
இஸ்லாமியத் தர்காக்களை இடித்து இந்து கோவில்களைக் கட்டுகிறோம் என்று கிளம்பிய பாஜகவிற்கு இப்போதெல்லாம் இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்குவது சர்வசாதாரணமாகிவிட்டது. பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டி முடித்தாகிவிட்டது, ’அடுத்து பாக்கி இருப்பது காசி, மதுரா’ எனக் கிளம்பி, காசியின் கியான் வாபி மசூதியை பாஜகவும் சங்பரிவாரங்களும் குறிவைத்துள்ளன.
ஏப்ரல் மாதத்தில் ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி பண்டிகைகள் வந்தன. சங்பரிவாரங்கள் பல மாநிலங்களில் வாள், கத்தி ஆயுதங்களை ஏந்திக்கொண்டு இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தி முடித்தன. இப்போதெல்லாம் வன்முறைக் கும்பல்களைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களின் சொத்துகளை நாசப்படுத்துவது பாஜகவிற்குப் பழைய ஃபேஷன் ஆகிவிட்டது. அரசு இயந்திரத்தையே பயன்படுத்தி புல்டோசர்களைக் கொண்டு இஸ்லாமியர்களின் சொத்துகளைப் பகிரங்கமாகவே பாஜக அரசாங்கங்கள் அழிக்கத் தொடங்கிவிட்டன.
மத்தியப் பிரதேசம் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்லவத்தில் கல்லெறிந்து கலவரம் செய்தார்கள் எனச் சொல்லி, பாஜக மாநில அரசாங்கம், புல்டோசர்களைக் கொண்டு இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான 16 வீடுகளையும், 29 கடைகளையும் இடித்துத் தள்ளியது. ஆக்கிரமிப்பு என்று ’காரணம்’ சொன்னது.
மத்தியப் பிரதேசத்தின் உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, ’கல்லெறிந்தவர்களின் வீடுகள் எல்லாம் கற்குவியலாக்கப்படும்!’ என பகிரங்கமாகவே மிரட்டினார்.
கார்கோனில் வாசிம் ஷேக் என்பவரின் கடையும் இடிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தவர் ஷேக். ’இரண்டு கைகளும் இல்லாத இந்த வாசிம் ஷேக் மதக்கலவரத்தில் கற்களை வீசினார்’ என்று குற்றம்சாட்டி, அவரது கடையை பாஜக அரசாங்கம் இடித்துத் தரைமட்டமாக்கியது. ’எனது வயதான தாயையும், எனது இரண்டு குழந்தைகளையும் இனி என்னால் எப்படிக் காப்பாற்ற முடியும்?’ என இந்தியச் சமூகத்தின் மனசாட்சியை உளுக்கும் கேள்வியைக் கேட்டு கண்ணீர் சிந்தினார் வாசிம் ஷேக்.
ராமநவமிக்கு முன்பாக என்ன நடந்தது? ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் முழுக்க கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனையை பாஜகவும் சங்பரிவாரங்களும் கிளப்பின. ‘ஹிஜாப் அணிந்தால் கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க முடியாது’ என்ற நிலையை அந்த மாநிலத்தின் பாஜக அரசாங்கம் ஏற்படுத்தியது. விளைவாக இன்றைக்கு ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்வி உரிமை பறிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கு நீதிமன்றங்களும் பயன்படுத்தப்பட்டுவருவதை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்தப் பின்னணியில்தான் பாஜகவின் (முன்னாள்) செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்களின் கடவுளான முகமது நபி குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து, டில்லி பாஜக தலைவர் நவீன் ஜிண்டாலும் மிக மோசமான வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பிய பிறகு, இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள்.
யோகி ஆதித்யநாத் பதவியில் இருக்கும் உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஜூன் 10 வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்தபிறகு, நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டு இஸ்லாமியர்கள் ஊர்வலமாகச் சென்ற போது நடந்த வன்முறைக்குத் தூண்டுதலாக இருந்தார் என ஜாவேத் முகமது மீது உ.பி அரசாங்கம் குற்றஞ்சுமத்தியது. வெல்ஃபேர் கட்சித் தலைவரான ஜாவேத், குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்துப் போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அவரது மகள் அஃப்ரீன் ஃபாத்திமா டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி. அலிகர் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது மாணவர் தலைவராகக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்.
ஜூன் 10 அன்றே ஜாவேத் வீட்டில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ”அனுமதி பெறாமல் கட்டப்பட்ட குடியிருப்பை இடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதால்,
மே 24க்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்ற பிரயாக்ராஜ் நகர நிர்வாகத்தின் மே 10 அறிவிக்கைக்கு, ஜாவேத் முகமது பதில் அளிக்காததால், மே 25 அன்று கட்டடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டது- இப்படி ஜூன் 10 தேதியிட்ட அறிவிக்கையை ஜூன் 11 இரவு 11 மணிக்கு உ.பி காவல்துறை ஜாவேத் வீட்டில் ஒட்டினார்கள். ஜூன் 12 அன்று அவருடைய வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. வீட்டை இடித்தபோது செய்த சோதனையில் சட்டவிரோத ஆயுதங்களும், பிரசுரங்களும் கண்டெடுத்தோம் என காவல்துறை குற்றஞ்சுமத்தியுள்ளது.
சொத்து ஜாவேத்தின் மனைவியும், அஃப்ரீன் ஃபாத்திமாவின் அம்மாவுமான பர்வீன் ஃபாத்திமாவின் பெயரில் உள்ளது. ஆனால் அறிக்கை வழங்கப்பட்டதோ கலவரத்தைத் தூண்டியவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் முகமது மீது.
’மேலும் மே 10 தேதியிட்ட அறிக்கை எங்களுக்கு வழங்கப்படவே இல்லை. வீட்டை இடிக்க முடிவு செய்துவிட்டு அவசர கதியில் முன் தேதியிட்டு ஒரு அறிக்கை அனுப்பியதாக உ.பி அரசாங்கம் பொய் சொல்கிறது. ஜூன் 11 சனிக்கிழமை இரவு மறுநாள் வீட்டை இடிக்கிறோம் என அறிவிக்கை கொடுத்தால், வார இறுதியில் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறும் வாய்ப்பு கூட எங்களுக்கு இருக்காது எனத் திட்டமிட்டு இந்தக் காரியத்தை உ.பி. அரசாங்கம் செய்தது’ என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள் ஜாவேத் முகமதின் குடும்பத்தினர்.
மத்தியில் பாஜக ஆட்சி செய்த இந்த 8 ஆண்டுக் காலத்தில் சிலிண்டர் விலை 418 ரூபாயிலிருந்து 1062 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆறே மாதத்தில் 140 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு என வாழ்வாதாரப் பிரச்சனைகள் மூச்சை நிறுத்தும் அளவுக்கு நெருக்குகின்றன. மாதம் பத்தாயிரம் கூட சம்பாதிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் தான் முக்கால்வாசிக் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
விவசாயிகளின் விளைபொருளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையில் முறையான கொள்முதல் இல்லை; விவசாயச் சந்தையை கார்ப்பரேட்கள் லாபம் பார்ப்பதற்கு ஏதுவாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளின் மாபெரும் ஓராண்டு காலப் போராட்டத்திற்குப் பின்பு பாஜக ஒன்றிய அரசாங்கம் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றாலும், அவற்றை மீண்டும் கொண்டு வரும் அபாயம் இருக்கவே செய்கிறது.
எல்.ஐ.சி, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் கார்ப்பரேட்கள் லாபம் பார்ப்பதற்கு ஏதுவாக திறந்துவிடுகிறது பாஜக. தனியார்மயம், தாராளமயத்தைச் செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசாங்கம் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 64 அடி பாய்வோம் என்ற வேகத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்மயமாக்கி மக்களின் பொதுச்சொத்துகளை எல்லாம் காப்பரேட்களின் உடைமையாக்கிக் கொடுக்கிறது மோடி அரசாங்கம்.
நூற்றாண்டு காலப் போராட்டங்களால் விளைந்த 8 மணி நேர வேலைச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டு நான்கே சட்டத் தொகுப்புகளாக்கப்பட்டுள்ளன. முதலாளிகள் லாபம் பார்ப்பதற்காகத் தொழிலாளிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டப்படலாம் என்ற பழைய நிலைக்குத் தொழிலாளர் வர்க்கத்தை இந்தப் பாஜக அரசுகள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து விடக்கூடாது; அதற்கு மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி வைத்திருக்கும் பாஜக கட்சியின் ஆட்சியே சிறந்தது என ஆளும் வர்க்கங்கள் கணக்கிடுகின்றன. அதனால்தான் கார்ப்ப்ரேட்களின் உடைமைகளான பெரும்பாலான ஊடகங்கள் நாட்டில் எவ்வளவு அநியாயங்கள் நடந்தாலும் தட்டிக் கேட்காமல் மோடி புராணம் பாடுகின்றன. இச்சூழலில் காப்ரேட்-காவி கூட்டணியை அனைத்து மதங்களிலும் உள்ள உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி, நாட்டை பாஜக இந்துத்துவ கும்பலிடம் இருந்தும், நவதாராளமயக் கொள்கைகளின் தாக்கத்திலிருந்தும் காப்பாற்றிட நாம் தீவிரமாக உழைத்திட வேண்டும்.
வரும் 2022-23 கல்வியாண்டு முதல் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதை கற்பிக்கப்படும் என்று குஜராத் மாநில அரசின் கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது, அரசு மதச்சார்பின்மைக் கொள்கையை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகள் எதுவும் எவ்விதமான மத போதனைகளையும் அளிக்கக்கூடாது என்பது அனைத்து மதச்சார்பற்ற அரசுகளின் அடிப்படைக் கொள்கையாகும்.
இந்தக் கொள்கையை அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் முதலான பல நாடுகள் பின்பற்றுகின்றன. தனியார் பள்ளிகள் எவ்விதமான மத போதனைகளையும் அளித்திட சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசுப் பள்ளிகளுக்குக் கிடையாது. பகவத் கீதை என்பது ஒரு மதஞ்சார்ந்த நூலாகும். இது, இந்து மதத்தின் பாரம்பர்யங்கள் மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் வாழ்க்கை முறை மற்றும் நடத்தையை மேற்கொள்ளவேண்டும் என்று கோருகிறது. அதன் மதப் பின்னணியை ஓரங்கட்டிவிட்டு, மாணவர்களுக்கு அறநெறி மற்றும் நெறிமுறைகளைக் கூறும் ஒரு நூலாக அதனைச் சித்தரித்திட முடியாது. கடவுளால் உண்டாக்கப்பட்ட இந்துக்களில் நால் வர்ணப் பிரிவை எவராலும் மாற்ற முடியாது என்கிற கீதையின் சில அம்சங்கள் குறித்து இந்துக்களிலேயே விமர்சிப்பவர்கள் உண்டு. கீதை படுபிற்போக்குத்தனமான ஒன்று என்பது குறித்தோ அல்லது அது சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறது என்பது குறித்தோ உண்மையில் பிரச்சனை கிடையாது. அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த அறிவுரைகளை எப்படி அளித்திட முடியும் என்பதே முன்னுக்கு வந்திருக்கும் பிரச்சனையாகும்.
அரசமைப்புச்சட்டத்தின் கீழ், அடிப்படை உரிமைகள் குறித்து விவரித்திடும் 28(1)ஆவது அத்தியாயம் கூறுவதாவது: “அரசின் நிதி உதவியின்கீழ் இயங்கிடும் எந்தவொரு கல்வி நிறுவனமும் மதஞ்சார்ந்த எந்தவிதமான அறிவுரையையும் அளித்திடாது.” அரசாங்கத்தால் நடத்தப்படாத கல்வி நிலையங்களில் அல்லது அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனங்களில், ஏதேனும் மதஞ்சார்ந்த அறிவுரைகள் அளிக்கப்படுமானால், அதனைச் செவிமடுக்கும் மாணவர் வயதுக்கு வராதவராக (மைனராக) இருந்தால், அவருடைய பாதுகாவலரின் அனுமதியைப் பெறாமல், அத்தகைய அறிவுரைகளைச் செவிமடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அது மேலும் கூறுகிறது. எனவேதான், பகவத் கீதை தொடர்பான குஜராத் அரசு மேற்கொண்டுள்ள முடிவு, அரசின் நிதியின்கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் எவ்விதமான மதஞ்சார்ந்த அறிவுரைகளும் அளிக்கப்படக்கூடாது என்கிற நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரான ஒன்றாக மாறுகிறது.
குஜராத் பாணியை இப்போது இதர பாஜக ஆளும் மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. கர்நாடகப் பள்ளிக் கல்விக்கான அமைச்சர், கல்வியாளர்களுடன் கலந்தாலோசனை செய்து, பள்ளிகளில் பகவத்கீதை அறிமுகப்படுத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். “பகவத் கீதை, இந்துக்களுக்கானது மட்டுமல்ல, அது எல்லோருக்குமானது” என்றும் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். இதே கர்நாடக அரசாங்கம்தான் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதைச் சட்டவிரோதமாக்கி இருக்கிறது. ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், “பகவத் கீதை நமக்கு அறநெறிகளையும், நெறிமுறைகளையும் போதிக்கிறது. ஒவ்வொரு மாநில அரசாங்கமும் இதுபற்றிச் சிந்தித்திட வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.
இந்திய அரசமைப்பின் ஆணிவேராக விளங்கும் மதச்சார்பின்மையை வேரறுத்திட வேண்டும் என்பதற்கான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியே இவ்வாறு அரசுப்பள்ளிகளில் இந்து மதம் சம்பந்தமான புத்தகங்களையும், புராணங்களையும் புகுத்துவதற்கான முயற்சிகளாகும். பள்ளிப் பாடப்புத்தகங்களில் கீதையைப் புகுத்துவதனை நியாயப்படுத்திட “இந்தியக் கலாச்சாரம் மற்றும் அறிவு முறைகள்” பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை குஜராத் கல்வி அமைச்சர் மேற்கோள் காட்டியிருக்கிறார். இதேபோன்றே அரசின் பல துறைகளிலும் அரசின் நிதி உதவியுடன் இந்து மத அடையாளங்களைப் புகுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதும், இந்து மதக் கோவில்களைப் புதுப்பித்திட நடவடிக்கைகள் மேற்கொள்வதும் வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு பிரதமர் காசி விஸ்வநாத் கோவிலுக்கான பாதையைத் துவக்கி வைத்திருப்பது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அரசு, நாட்டு மக்களில் பெரும்பான்மையாகவுள்ளவர்களின் மதத்திற்கு ஆதரவும் அரவணைப்பும் அளிப்பதும், அதற்கு அரசின் நிறுவனங்களிலும் அமைப்புமுறைகளிலும் சலுகைகள் அளிப்பதும் நாட்டில் ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மை தொடர்பாக பெயரளவில் செயல்படுவதென்பதற்கும் முடிவுகட்டிவிட்டது. ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’), மதமாற்றம் மற்றும் கால்நடைகள் வெட்டப்படுவதற்குத் தடை முதலானவற்றிற்கு எதிரான சட்டங்கள் சிறுபான்மை மக்களைக் குறிவைத்தே பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்றே ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள, குடியுரிமைத் திருத்தச் சட்டமானது ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு அவருடைய மதத்தையும் பரிசீலித்திட வேண்டும் என்று விதி ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்தில், பகவத் கீதையைப் பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் சேர்த்திருப்பதை, அங்கே பிரதான எதிர்க்கட்சியாக இருந்துவரும் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், “பள்ளிப் பாடப் புத்தகங்களில் பகவத்கீதையை அறிமுகப்படுத்தியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால், அரசாங்கம்தான் கீதையிலிருந்து முதலில் பாடம் படிக்க வேண்டியது அவசியமாகும்,” என்று கூறியிருக்கிறார். இதேபோன்றே ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளரும், “நாங்கள் குஜராத் அரசின் முடிவை வரவேற்கிறோம். இது மாணவர்களுக்குப் பயனளிக்கும்” என்று கூறியிருக்கிறார்.
குஜராத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு அளித்திருக்கும் பிரதிபலிப்பு ஒரு புதிய எதார்த்த நிலையைக் காட்டுகிறது. அதாவது, அங்கே இந்துத்துவா மிகவும் உறுதியாக ஒரு மேலாதிக்க நிலைக்கு உயர்ந்திருப்பதை இது காட்டுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டும் என்று விரும்புகிற இடது மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும், இந்த எதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் தங்கள் போராட்ட உத்திகளை வகுத்திட வேண்டும்.
இஸ்லாமியப் பெண்கள் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் அல்லது கழற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும் போதெல்லாம் ஹிஜாபிற்கான அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன
மாசசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜில் ஹிஜாப் (தலையில் முக்காடு) அணிந்த பெண்கள் குழு ஒன்றை 1990களின் பிற்பகுதியில் ஒருநாள் மாலை நேரத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் லீலா அகமதுவும், அவரது தோழியும் கண்டனர். கேம்பிரிட்ஜில் முக்காடு அணிந்திருந்த அந்தப் பெண்கள் ‘அமெரிக்காவில் அடிப்படைவாதம் வேரூன்றுகிறதோ!’ என்ற ஆச்சரியத்தையே கெய்ரோவில் 1940களில் பிறந்து, முக்காடு எதுவும் அணிந்து தன்னை மறைத்துக் கொள்ளாமலேயே பள்ளிப்படிப்பை முடித்திருந்த அகமதுவிடம் ஏற்படுத்தியிருந்தனர்.
அகமதுவிடம் எழுந்த அந்தக் கேள்வியே முக்காடைக் கழற்றுதல், மீண்டும் போட்டுக் கொள்ளுதல் என்று முஸ்லீம்கள் உலகில் கடந்த காலங்களில் எழுந்த மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கான ஆவலைத் தூண்டியது. அதற்குப் பின்னர் ‘ஓர் அமைதிப் புரட்சி: முக்காடின் மறுமலர்ச்சி – மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வரை’ என்ற புத்தகத்தை அவர் எழுதுவதற்கான காரணமாகவும் அது அமைந்தது.
அகமது எழுதியுள்ள அந்தப் புத்தகம் ஹிஜாப் மறுப்பு மற்றும் எதிர்ப்பிற்கான அடையாளம், இணக்கம் மற்றும் ஒப்புதலுக்கான அடையாளம் என்று பல அர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்று குறிப்பிடுகிறது. ஹிஜாப் அணிய வேண்டுமென்று பெண்களை வற்புறுத்துவது அல்லது அதனைக் கழற்றி வீசச் சொல்வது வெறுப்பையே தூண்டும் என்பதை ஹிஜாபிற்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்கின்ற ஹிந்துத்துவ அடிவருடிகள் புரிந்து கொள்ள வேண்டும். நீதித்துறைக்கும் ஓரளவு பொருந்திப் போகின்ற உண்மையாகவே அது இருக்கின்றது.
அரபு உலகின் அறிவுசார் தலைநகரான கெய்ரோவில் முக்காடைக் கழற்றிய நிகழ்வு உச்சத்தை எட்டியது குறித்து முதலில் காணலாம்.
அகற்றப்பட்ட முக்காடு ‘மறையும் முக்காடு – பழைய ஒழுங்கிற்கு விடப்பட்டிருக்கும் சவால்’ என்ற தலைப்பில் 1956ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் மத்திய கிழக்கிலிருந்து முக்காடு வெளியேறி விடும் என்று வரலாற்றாசிரியர் ஆல்பர்ட் ஹூரானி கணித்திருந்தார். காசிம் அமின் எழுதி 1899ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ‘பெண் விடுதலை’ என்ற புத்தகமே முக்காடை அகற்றும் போக்குகளுக்கான காரணமாக அமைந்தது என்று அந்தக் கட்டுரையில் ஆல்பர்ட் ஹூரானி குறிப்பிட்டிருந்தார்.
முக்காடு போடப்பட்டு வீட்டிற்குள்ளேயே பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாலேயே எகிப்து பின்தங்கியுள்ளது என்ற வாதத்தை முன்வைத்த அமின் எகிப்து ஐரோப்பாவைப் போல ஆக வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அமின் ‘எகிப்தில் இருக்கின்ற நிலைமையே மாறி வருகின்ற உலகில் குழந்தைகள் சமூகமயமாகிட முடியாதவாறு வைத்திருக்கிறது’ என்று கூறினார். ஐரோப்பாவுடனான தொடர்பு அதிகரித்தது, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் வெற்றிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்களால் ஏற்கனவே எகிப்தில் நிலவி வந்த கருத்துக்களையே அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
ஐரோப்பாவுடன் ஏற்பட்டிருந்த தொடர்பு தொழில்நுட்ப அற்புதங்களை – எடுத்துக்காட்டாக ரயில்கள், டிராம்களை – மட்டுமல்லாது எகிப்தியர்களிடம் சமத்துவம், ஜனநாயகம், தகுதியின் அடிப்படையிலான அதிகாரம் போன்ற கருத்துகளையும் அறிமுகப்படுத்தியிருந்தது. எகிப்தில் முக்காடு அணியாத ஐரோப்பிய பெண்கள் மிகவும் சாதாரணமாகக் காணப்பட்டார்கள். ஐரோப்பியத் தாக்கம் எகிப்தியப் பெண்களை – ஆரம்பத்தில் உயர் வகுப்பினரையும், பின்னர் நடுத்தர வர்க்கத்தினரையும் – வெளியில் வரத் தூண்டியது. சமகாலத்தில் நடந்துள்ளவற்றை மேற்கோள் காட்டுவதன் மூலம் முக்காடை அகற்றிக் கொள்வது எந்த அளவிற்கு விரைவாகப் பரவியது என்பதை தனது புத்தகத்தில் அகமது சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகமுக்கியமான பெண் உரிமை ஆர்வலராக பின்னர் மாறிய பாலஸ்தீனியரான அன்பரா காலிடி எகிப்தியப் பெண்கள் ‘அகற்றப்பட்ட திரை’ மூலம் இந்த உலகைப் பார்க்கின்றனர் என்று 1910ஆம் ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் குறிப்பிட்டிருந்தார். அதே ஆண்டில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் முக்காடிட்டுக் கொள்ளாத பெண்கள் என்ன ‘வானத்திலிருந்து’ விழுந்தவர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அல்-சுஃபுர் அல்லது முக்காடை அகற்றுதல் என்ற பெயரில் 1914ஆம் ஆண்டில் தேசிய செய்தித்தாள் ஒன்று தொடங்கப்பட்டது. அந்த செய்தித்தாளின் ஆசிரியர் ‘எகிப்தில் முக்காடு போட்டுக் கொண்டிருப்பது பெண்கள் மட்டுமல்ல… நமது தேசமே முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் தேசமாத்தான் இருக்கிறது’ என்று எழுதியிருந்தார்.
பெண்கள் முக்காடை அகற்றிக் கொண்ட வேகம் உண்மையில் ஆச்சரியப்படும் வகையிலே இருந்தது அகமதுவின் சுயசரிதையில் இருந்து தெளிவாகத் தெரிய வருகிறது: ‘அந்தக் காலகட்டத்தில் வயதான பெண்களில் பெரும்பாலானோர் (1908ஆம் ஆண்டு பிறந்த எனது தாயின் தலைமுறையைச் சார்ந்த பெண்கள், அதே போல எனது தலைமுறையைச் சார்ந்த பெண்கள்) தங்கள் முக்காடை அகற்றிக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் யாரும் ஒருபோதும் முக்காடு போட்டுக் கொண்டதே இல்லை’ என்று அகமது எழுதியுள்ளார்.
ஜனநாயகம், சமத்துவம், தகுதியின் அடிப்படையிலான அதிகாரம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக மாறுவதற்காக எகிப்திடமிருந்த தேடலி உருவகமாகவே முக்காடை அகற்றுவது இருந்தது. பெண்களைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும் விதத்தில் வாழ்வதற்கு, ஆடையணிந்து கொள்வதற்கு அவர்களிடம் இருந்த விருப்பத்தின் வெளிப்பாடாகவும் அது அமைந்தது என்று அகமது குறிப்பிடுகிறார்.
முக்காடு அகற்றப்படுவதை எதிர்த்தவர்கள் முக்காடு அகற்றப்படுவதை எதிர்த்தவர்களும் அப்போது இருந்தனர். தேசியவாத பத்திரிகை ஒன்றின் உரிமையாளரின் மனைவியான பாத்திமா ரஷீத் ‘முக்காடு என்பது நம்மைத் தடுத்து நிறுத்துகின்ற நோயில்லை. மாறாக அதுவே நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணமாக இருந்து வருகிறது…’ என்று 1908ஆம் ஆண்டு எழுதியிருந்தார். முக்காடு போடாத பெண்களுக்குச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்குமாறு மத அறிஞர்கள் 1914ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
‘எகிப்து முன்னேற்றத்தைக் காண்பது இஸ்லாத்திற்கு மாறுவதன் மூலமாக நடக்குமே தவிர ஐரோப்பாவைப் பின்பற்றுவதால் அல்ல’ என்ற சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்தனர். எகிப்தை இஸ்லாமியமயமாக்குவதன் மூலம் எகிப்திய மனங்களில் உள்ள காலனித்துவம் அகற்றப்பட வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர். ஹசன் அல்-பன்னா அவர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்தார். முஸ்லீம் சகோதரத்துவம் என்ற அமைப்பை 1928ஆம் ஆண்டு ஹசன் அல்-பன்னா நிறுவினார். அந்த அமைப்பு எகிப்தை இஸ்லாமியமயமாக்கும் திட்டத்திற்காக எகிப்தியர்களை அணிதிரட்டக் கூடிய வகையில் பள்ளிகள், மருத்துவ வசதிகள், தொழிற்சாலைகள் கொண்ட வலையமைப்பை நிறுவியது.
ஆனால் மன்னர் ஃபாரூக்கின் ஆட்சி முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பை 1948ஆம் ஆண்டு கலைத்து படுகொலைகளைச் செய்யுமாறு தன்னுடைய ஆயுதப் பிரிவை தூண்டியது. ஃபாரூக் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு 1954ஆம் ஆண்டு அதிபர் கமல் அப்துல் நாசரைக் கொலை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியது. சோசலிசக் கொள்கைகள், அனைத்து அரபு தேசியவாதம், எகிப்தை இஸ்லாமிய நாடாக மாற்ற மறுத்தது போன்ற நாசரின் செயல்பாடுகளுக்கு எதிராக முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு அவரிடம் பகைமை பாராட்டி வந்தது.
சகோதரத்துவ அமைப்பை ஒடுக்குமாறு நாசர் உத்தரவிட்டார். அதற்குப் பின்னர் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ‘அனைத்து முஸ்லீம்களும் தங்கள் அடையாளத்தை இஸ்லாத்துடன் பிணைத்துக் கொள்ள வேண்டுமே தவிர தேசியம் அல்லது இனத்துடன் அல்ல’ என்று சகோதரத்துவ அமைப்பிடம் இருந்த நம்பிக்கையுடன் இருந்த சவூதி அரேபியாவிற்குப் பலரும் தப்பிச் சென்றனர். உள்ளூர் அணிதிரட்டல்கள், ‘வெளிநாட்டு’ தாக்கங்களை வேரறுப்பதன் மூலம் ‘தூய இஸ்லாத்தை’ மீட்டெடுக்க முயன்ற வஹாபிசத்தை ஏற்றுமதி செய்வதற்காக சகோதரத்துவ அமைப்டைச் சார்ந்த அறிவுஜீவிகளை சவூதி அரேபியா தன்னுடன் வைத்துக் கொண்டது. அமெரிக்காவின் ஆதரவை அவர்களும், சோவியத் யூனியனின் ஆதரவை நாசரும் பெற்றனர்.
முக்காடை அகற்றுவது என்று பெரும்பாலாக இருந்து வந்த போக்குக்கு எதிரான சவால் தவிர்க்க முடியாத வகையிலேயே இருந்தது. உண்மையில் முக்காடு எகிப்திலிருந்து முற்றிலுமாக மறைந்து போய் விடவில்லை. கெய்ரோவை ஒட்டிய வறுமை நிறைந்த மாவட்டங்களில் இருந்த பெண்கள் ‘மிலாயா லாஃப்’ எனப்படும் தலை மற்றும் உடலை மறைக்கும் வகையில் ஆடைகளின் மேல் அணிந்து கொள்ளும் கருப்பு உறையால் தங்களை மறைத்துக் கொண்டிருந்தனர். நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பழமைவாதிகள் பெரும்பாலும் தலையை மறைக்கும் அளவுக்கு நீளமாக, நாடியில் கட்டப்படும் வகையில் இருந்த வண்ணமயமான ஐரோப்பிய பாணி முக்காடை அணிந்தனர்.
மீண்டும் திரும்பி வந்த முக்காடு இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு நடந்த போரில் எகிப்தைத் தோற்கடித்த போது, மறைந்து போயிருந்த முக்காடு விவகாரத்தில் குறிப்பிடத்தக்கதொரு திருப்பம் ஏற்பட்டது. தோல்விக்குப் பிறகு எகிப்து முழுவதும் பரவியிருந்த விரக்தி அலை நாசர் இஸ்லாத்தை விட்டு விலகியதாலேயே எகிப்து தோல்வியடைந்தது என்று எண்ணத்தை எகிப்து மக்களிடம் தூண்டி விட்டிருந்தது. மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக ‘புதியதொரு சமுதாயத்தை உருவாக்க முயன்ற எகிப்துக்கு பாடம் கற்பிக்க அல்லா முயன்றிருக்கிறார்’ என்று மத நம்பிக்கையை பகிரங்கமாக உறுதிப்படுத்தும் வகையிலே நாசர் பேசிய பேச்சும் அதுபோன்றதொரு பார்வை மக்களிடையே உருவாகக் காரணமானது. அதற்குப் பிறகு முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் செயற்பாட்டாளர்களை நாசர் சிறையிலிருந்து விடுவித்தார்.
அமெரிக்காவைக் கவர்வதற்காக நாசரின் வாரிசான அன்வர் சதாத், அரசியலில் இருந்து விலகி இருக்கும் வரையில் சகோதரத்துவ அமைப்பு தங்களுடைய இஸ்லாமியப் பரப்பலை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதித்தார். பல்கலைக்கழக வளாகங்களில் இடதுசாரிகளை ஒடுக்குவதற்காக அந்த அமைப்பினருக்கு அவர் ஆயுதங்களையும் வழங்கினார். இடதுசாரிகள் அப்போது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக சதாத் திரும்பியிருந்ததைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
முதன்முதலாக 1970களின் முற்பகுதியில் பல்கலைக்கழக வளாகங்களில் ஹிஜாப் மீண்டும் தோன்றியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. பழமைவாதப் பிரிவினர் முன்னர் விரும்பிய வகையிலே தலை, கழுத்தை மூடி, நாடியுடன் கட்டப்பட்டிருக்கும் வகையில் அணிந்து கொள்வது என்று ஹிஜாப் அணியும் வழக்கம் மறுசீரமைக்கப்பட்டது. ஆனால் அது முன்பு போல வண்ணமயமாக இல்லாமல், ‘கில்பாப்’ என்ற நீண்ட, தளர்வான அங்கி, பரந்த நீண்ட கைகளை உடைய சட்டைகளுடன் இருந்தது. அது ‘சகோதரத்துவ அமைப்பின் அதிகாரப்பூர்வமான ‘ஜியா இஸ்லாமி’ என்ற உடை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
எகிப்திய மாணவிகளில் ஒரு சிறிய பகுதியினரே தங்களுடைய ஆடையை மாற்றிக் கொண்டிருந்தனர் என்றாலும், ஃபத்வா எல் கிண்டி, ஜான் ஆல்டன் வில்லியம்ஸ் போன்ற அறிஞர்கள் புதிய ஹிஜாப்பை அணிந்தவர்களை நேர்காணல் செய்திருந்தது கவனிக்கத்தக்கது. மேற்குலகைப் பின்பற்றுவது பயனற்றது என்ற உணர்வுகளை 1967ஆம் ஆண்டு போர் அவர்களிடம் தூண்டியது என்பதைக் குறிப்பிடும் வகையிலேயே அவர்களுடைய நேர்காணல்கள் இருந்தன என்று அகமது தெரிவிக்கிறார். இஸ்ரேலுடன் 1973ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் எகிப்திற்கு கிடைத்த ஆதாயங்கள் மிகவும் குறைவாக இருந்த போதிலும், நாடு இஸ்லாத்தின் பக்கம் திரும்பியதற்கான ஆதாரமாக அவை மேற்கோள் காட்டப்படுகின்றன.
முக்காடை அகற்றுவது நம்பிக்கையின் அடையாளம் என்று இருந்ததற்கு மாறாக ஹிஜாப் அணிந்து கொள்வது நம்பிக்கையின் அடையாளமானது.
ஹிஜாப் பரவியதால் ஏற்பட்ட அதிர்ச்சி மீண்டும் ஹிஜாப் திரும்பி வந்தது குறித்து எழுதிய பத்திரிகையாளர் அமினா அல்-சைத் அதை ‘இறந்து போனவர்களின் கவசம்’ என்று குறிப்பிட்டார். ஹிஜாப்பின் மறுபிரவேசம் குறித்து திகைப்படைந்த பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் சில சமயங்களில் எல் கிண்டி, வில்லியம்ஸ் குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்தினர்.
1971ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவராக இருந்த எக்ரம் பெஷீர் குறித்து அகமது வெளிக்கொணர்ந்த தகவல்களிலிருந்து ஹிஜாப் அணிந்த பெண்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே நடந்த விவாதம் தெளிவாகத் தெரிய வருகிறது. பெரும்பாலும் குட்டைப் பாவாடை உடை அணிந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெஷீர் மட்டும் ஹிஜாப் அணிந்து தனித்து நின்றார். பெஷீரின் அத்தை ‘விளையாட்டுத்தனமாக இருக்காதே’ என்று அவரிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார்; அவருடைய மாமா ‘இதுபோன்று உடையணிந்த’ அவர் கணவனை எப்படி கண்டுபிடிக்கப் போகிறார் என்று கவலைப்படுவதுண்டு; பேராசிரியர் ஒருவரும் அடிக்கடி அவரது ஆடை குறித்து கருத்து தெரிவித்து வந்திருக்கிறார். அதிக வெப்பமாக இருந்த ஒரு நாளில் அதை ஏன் ஆடையின் மீது பெஷீர் அணிந்திருக்கிறாய் என்று கேள்வியெழுப்பிய அந்தப் பேராசிரியருக்கு ‘ஏனென்றால் நான் ஒரு முஸ்லீம்’ என்று பெஷீர் உடனடியாகப் பதிலளித்தார். மிகுந்த சீற்றத்துடன் அந்தப் பேராசிரியர் ‘நான் முஸ்லீம், என் மனைவி முஸ்லீம், இவர்கள் [மாணவர்கள்] முஸ்லீம்கள்’ என்று எதிர்வினையாற்றினார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இல்லாமால் – குறிப்பாக சரியான உடை அல்லது இஸ்லாமிய ஆடை என்று அதனை முன்னிறுத்தி சமூகத்தை இஸ்லாமியமயமாக்கிய சகோதரத்துவ அமைப்பு இல்லாமல் – ஹிஜாப் மீண்டும் திரும்பி வந்திருக்க முடியாது. கீழ்தட்டு வகுப்பினர் செல்ல முடிந்த அந்த அமைப்பினரிடமிருந்த பள்ளிகள், மருத்துவமனைகளின் வலையமைப்பின் மூலமாகவே அவர்களுக்கான செல்வாக்கு பெறப்பட்டது. நாட்டை இஸ்லாமியமயமாக்குகின்ற வகையில் அந்த மக்களை மூளைச்சலவைக்கு ஆட்படுத்த அந்த வலையமைப்பே உதவியது.
1990களில் மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற ஆடை அணியும் முறையாக ஹிஜாப் மாறியிருந்தது. அந்தக் காலகட்டமே தன்னுடைய கல்வி முறையை இஸ்லாமிய-நீக்கம் செய்வதற்கு அரசாங்கத்தைத் தூண்டிய வகையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையில் ஈடுபட்ட காலமாகவும் இருந்தது. அப்போது முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறுமிகள் ஹிஜாப் அணிந்து வருவது தடை செய்யப்பட்டது. மூத்த மாணவிகளைப் பொறுத்தவரை பாதுகாவலர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு வருபவர்கள் மட்டுமே ஹிஜாப் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
தங்களுடைய சக மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படாததைக் கண்டு பள்ளி மாணவிகள் பீதியடைந்தனர். அதுவரையிலும் ஹிஜாப் அணிந்திராத பெண்களும்கூட தங்கள் ஒற்றுமையைக் காட்டுகின்ற விதத்திலே அதை அணிந்து கொள்ளத் துவங்கினர். போராட்டங்கள் வெடித்தன. ஊடகங்கள் விமர்சனம் செய்தன. பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்தனர். அது தொடர்பாக தொடரப்பட்ட பல வழக்குகளில் அரசு தோல்வியடைந்தது. இன்றும்கூட உயர்தர உணவகங்களும், ஓய்வு விடுதிகளும் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினராகக் கருதி உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. அதுபோன்ற நடைமுறைக்கு எதிராக சமூக ஊடகப் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் வர்க்கப் பரிமாணம் மட்டுமல்லாது அடையாளக் குறியீட்டையும் கொண்டுள்ளது.
வெவ்வேறு நிலைகளில் ஈரான், பிரான்ஸ் ஈரானிய ஆட்சியாளர் ரேசா ஷா பஹ்லவி 1936ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று பொது இடங்களில் முக்காடு, சாதர் போன்ற ஆடைகளைத் தடைசெய்கின்ற காஷ்-இ-ஹிஜாப் ஆணையை வெளியிட்டார். அதுபோன்ற ஆடைகளை அணிந்துள்ள பெண்களிடமிருந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவற்றை அகற்ற வேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்கள் பலரும் வெளியில் செல்வதையே நிறுத்திக் கொண்டனர். வீட்டிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க பழமையான குடும்பங்கள் முன்வந்தனர். அப்போது ஈரான் அரசியலின் ஒருங்கிணைந்த அங்கமாக முக்காடு மாறியிருந்தது.
முக்காடு போடலாமா, வேண்டாமா என்பதை பெண்களே தீர்மானித்துக் கொள்ள அனுமதித்த மகன் முகமது ரேசா ஷாவிற்கு ஆதரவாகப் பதவி விலகுமாறு ரேசா ஷா பஹ்லவியை ஆங்கிலேயர்கள் 1941ஆம் ஆண்டு கட்டாயப்படுத்தினர். பின்வந்த காலங்களில் புதியதொரு பொதுக் கலாச்சாரம் உருவானது. சமூகக் கூட்டங்களில் காலத்துக்கேற்ற உடையணிந்து, தலையில் எதுவும் அணியாதிருந்த பெண்கள் சாதர் அணிந்திருந்த பெண்களுடன் கலந்தே காணப்பட்டனர். ஆயினும் ஷாவின் எதேச்சதிகார ஆட்சி ஈரானியர்களை தெருக்களுக்கு அழைத்து வந்தது. மதம் சார்ந்தவர்களாக இல்லையென்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுடன் சேருவதற்காக பெண்கள் அப்போது சாதர் அணிந்து கொண்டனர். ஷாவின் மேற்குலக ஆதரவிற்கு எதிராக இருந்த ஈரானின் வெறுப்பை அடையாளப்படுத்தும் வகையிலேயே அவர்கள் அணிந்த அந்த சாதர் இருந்தது.
அதிகாரத்திலிருந்து ஷாவை வெளியேற்றிய 1979ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டார். அதற்குப் பின்னர் பெரும் தலைவரான ஆயதுல்லா ருஹோல்லா கொமேனி பெண்கள் கட்டாயம் முக்காடு அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். ஆயிரக்கணக்கான பெண்கள் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று அதற்கு எதிராகத் திரண்டு போராட்டம் நடத்தினர். ஹிஜாப் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக காஷ்ட்-இ-எர்ஷாத் எனப்படும் ஆயிரக்கணக்கான ரகசிய முகவர்களை ஈரானிய ஆட்சி நியமித்தது. 1993 மற்றும் 2003க்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் முப்பதாயிரம் பெண்கள் முறையாக ஹிஜாப் அணியாததற்காகக் கைது செய்யப்பட்டனர் என்று ‘ஈரானுக்கான நியாயம்’ (ஜஸ்டிஸ் ஃபார் ஈரான்) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிஜாபிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பெறுவதற்கான ‘பாரபட்சமான சட்டங்களை நீக்குவது’ எனும் சமத்துவத்திற்கான மாற்றம் என்ற இயக்கம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய அமைப்பாளர்களை அரசாங்கம் கைது செய்தது. ஆனாலும் அவர்கள் அதற்கு முன்பாகவே தங்கள் இயக்கத்தின் இலக்குகளை விளக்குவதற்கான கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். ஓராண்டு கழித்து அதிபர் அலுவலகத்தின் ஒரு பிரிவான ‘செயல்நெறிசார் ஆய்வுகளுக்கான ஈரானிய மையம்’ சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஹிஜாப் அணிவதைக் கட்டாயப்படுத்துவதை நாற்பத்தியொன்பது சதவிகித ஈரானியப் பெண்கள் எதிர்க்கின்றனர் என்று கண்டறியப்பட்டிருந்தது.
ஒவ்வொரு புதன்கிழமையும் ஆண்களும் பெண்களும் வெள்ளை ஆடைகள், வெள்ளை முக்காடு அணிந்து கொள்ளும் ‘வெள்ளைப் புதன்’ பிரச்சாரம் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் தங்களுடைய முக்காடுகளைக் கழற்றி, குச்சிகளில் பொருத்தி மேலுயர்த்திப் பிடித்து அசைக்கவோ அல்லது அமைதியாக நின்று கொண்டிருக்கவோ செய்வார்கள். விடா மோவாஹெட் என்ற முப்பத்தியொரு வயதுப் பெண் டிசம்பர் 27 அன்று ஒரு பெட்டியின் மேல் ஏறி நின்று, தனது ஹிஜாபைக் கழற்றி குச்சியில் மாட்டி அசைத்தார். சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்ட அவரது போராட்டம் குறித்த புகைப்படம் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
‘பெண்களின் அதிகாரம், தாங்கள் அணிய விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை சட்டத்திற்கு கீழ்ப்படியாமையைப் பயன்படுத்திப் பெறுவது’ ஆகியவற்றையே இத்தகைய எதிர்ப்புகள் குறித்தன என்று கல்வியாளர் பாஹே சிராஜி கருத்து தெரிவித்தார்.
உடை அணிவதற்கான தேர்வை அதற்கு முற்றிலும் மாறான வழியில் பிரான்ஸ் கட்டுப்படுத்தியது. பொதுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் மதச் சின்னங்களை அணிந்து வருவதை பிரான்ஸ் 2004ஆம் ஆண்டு தடை செய்தது. அந்த நடவடிக்கை முஸ்லீம் மாணவிகள் தலையில் முக்காடு அணிந்து வருவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டது என்றே கருதப்பட்டது. பொது இடங்களில் புர்கா அணிவதை பிரான்ஸ் 2010ஆம் ஆண்டு தடை செய்தது. பிரெஞ்சு அரசாங்கம் வெளியிட்ட ஒரு பிரச்சாரத்தில் ‘குடியரசு மறைக்கப்படாத முகத்துடன் வாழ்கின்றது’ என்று அறிவிக்கப்பட்டது.
பிரெஞ்சு அரசாங்கம் மற்றுமொரு சட்டத்தையும் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மதச் சின்னங்களை அணிவதைத் தடைசெய்கின்ற சட்டம் தனியார் பொதுச்சேவை ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டது. மதச்சார்பின்மையைக் காரணம் காட்டி முஸ்லீம்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறது என்று அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு எதிராக இடதுசாரிகள் தாக்குதலை மேற்கொண்டனர். அது மட்டுமல்லாமல், #HandsOffMyHijab என்ற ஹேஷ்டேக்குடன் தீவிரமான சமூக ஊடகப் பிரச்சாரமும் அப்போது முளைத்தெழுந்தது.
நாவலாசிரியரான மர்ஜானே சத்ராபி ஈரானில் பிறந்து அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தவர். இன்று அவர் பாரிஸில் வசித்து வருகிறார். ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடந்தபோது சத்ராபிக்கு பத்து வயது. தி கார்டியனில் வெளியான கட்டுரையில் ஹிஜாப் அணிய வற்புறுத்தப்பட்டதால் தான் வெறுப்படைந்ததாக சத்ராபி கூறியுள்ளார். ‘மதத்தை வெளிப்படுத்திக் கொள்வதை நோக்கித் தள்ளப்படுவது எவ்வாறு இருக்கும் என்பதை நான் அறிவேன். அதனால் மதச்சார்பற்ற நிலைக்குத் தள்ளப்படுவதும் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஈரானியப் பெண்களிடம் வெறியர்கள் செய்த தவறை நாம் செய்ய வேண்டாம். மதச்சார்பின்மை என்ற பெயரில் நடத்தப்படும் இதுவும் அதேபோன்ற வன்முறைதான்’ என்றும் சத்ராபி கூறியிருந்தார்.
அல்ஜியர்ஸ் போர்
ஹிஜாப் மீது பிரான்ஸ் கொண்டிருந்த அணுகுமுறை அதன் காலனித்துவ வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகும். 1958ஆம் ஆண்டு அல்ஜீரிய சுதந்திரப் போரின் போது, பெண்களின் முக்காடை அகற்றுவதற்காக பெருந்திரளான பொது விழாக்களை பிரெஞ்சு காலனித்துவ ஆட்சி நடத்தியது. தங்களை விடுவிப்பது என்ற கொளகிஅயுடன் இருந்த பிரெஞ்சுக்காரர்களை அல்ஜீரியப் பெண்கள் ஆதரித்ததை உணர்த்துவதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது. பிந்தைய ஆண்டுகளில் பெரும்பாலான பெண்கள் ஏழைகளாக இருந்ததுவும், முக்காடை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதுவும் கண்டறியப்பட்டது.
புகழ்பெற்ற காலனித்துவ எதிர்ப்பு அறிவுஜீவியான ஃபிரான்ட்ஸ் ஃபானன் அந்த பிரெஞ்சுக் கோட்பாடு பற்றி ‘அல்ஜீரிய சமுதாயத்தின் கட்டமைப்பை, அதன் எதிர்ப்பாற்றலை அழிக்க விரும்பினால், முதலில் நாம் பெண்களை வென்றெடுக்க வேண்டும்; தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் திரைக்குப் பின்னால் உள்ள அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்…’ என்று கூறினார்.
முக்காடை அகற்றிய நிகழ்விற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற வகையிலே அல்ஜீரியப் பெண்கள் பலரும் முக்காடு அணிந்து கொள்ளத் தூண்டப்பட்டனர். ஆனால் முக்காடு அணியாத மேற்கத்திய பெண்களைப் போன்று இருக்குமாறு அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவி செய்தது. மேற்கத்திய உடையணிந்திருந்த பெண்களை சோதனைகள் எதையும் மேற்கொள்ளாமலேயே உடனடியாகச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல பிரெஞ்சு காவலர்கள் அனுமதித்தனர். அவ்வாறு சோதனைகளின்றி சோதனைச் சாவடிகளை விட்டு வெற்றிகரமாக வெளியேறிய பெண்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பிரெஞ்சு துருப்புக்கள் மீது சில சமயங்களில் தாக்குதல்களை நடத்தி வந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தி வந்தவர்களுக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.
அல்ஜீரியாவில் 1962ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி வீழ்ந்த பிறகு, நகர்ப்புறங்களில் இருந்த அல்ஜீரியப் பெண்கள் பலரும் முக்காடு அணிவதை நிறுத்திக் கொண்டனர். இருந்தாலும் 2019ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாகத் தேர்தலில் போட்டியிடுவது என்று அதிபர் அப்தெலாசிஸ் பௌட்ஃபிலிகா எடுத்த முடிவிற்கு எதிராக வீதிகளில் இறங்கிய பெண்கள் எதிர்ப்புச் சின்னமாக ஹிஜாப் குறித்த தங்களுடைய நினைவுகளை வலியுறுத்தியே போராடினர். போராடிய அந்தப் பெண்கள் அல்ஜீரிய முக்காடை அணிந்திருந்தனர். போராடிய அந்தப் பெண்களிடம் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஹோட்டல் ஒன்றின் மீது குண்டுவீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை (பின்னர் சிறைவாசமாக மாற்றப்பட்டது) விதிக்கப்பட்ட டிஜமிலா பௌஹிரெட் உரையாற்றினார்.
இந்தியாவிற்கான படிப்பினைகள் உலக வர்த்தக மையத்தின் மீதான 9/11 தாக்குதலுக்குப் பிறகு தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அவமானங்கள், வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக முஸ்லீம் பெண்களில் சிலர் ஹிஜாப் அணிவதை நிறுத்திக் கொண்டனர். 9/11க்குப் பிறகு அந்த பிரச்சனைக்குரிய மாதங்களில் முஸ்லீம்கள் அல்லாத பெண்கள் தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை முஸ்லீம் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது மிகவும் குறிப்பிடத்தக்க செயலாக இருந்தது என்று தனது புத்தகத்தில் லீலா அகமது குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் 2002ஆம் ஆண்டு வெளியான எமிலி வாக்ஸின் அறிக்கையில், பல்கலைக்கழக வளாகங்களில் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் மாணவிகளின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க அளவிலே இருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஹிஜாப் அணிந்து கொள்வதன் மூலம் தங்களுடைய பெருமிதத்தை – முஸ்லீம்கள் என்பதாக உணர்வதில் தங்களுக்குள்ள பெருமிதத்தை தாங்கள் வெளிப்படுத்திக் கொள்கிறோம் என்று அந்த மாணவிகள் வாக்ஸிடம் கூறினார்கள்.
வாக்ஸ் போன்றவர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி அகமது ‘வெவ்வேறு சமூகங்களில் [ஹிஜாப்] அணிந்து கொள்பவர்கள் அதுகுறித்து வெவ்வேறு பொருளில் வெளிப்படுத்துகின்ற கருத்துகளில் தெளிவான தொடர்ச்சி உள்ளது’ என்று எழுதியுள்ளார். ‘பெரும்பான்மை சமூகத்தின் கருத்துக்களுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற திறனை ஹிஜாப் கொண்டிருக்கின்றது; வெளிப்படையாக எதிர்ப்பைப் பதிவு செய்கின்ற சிறுபான்மையினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் காட்டிக் கொள்வதன் மூலம் பிரதான சமூகத்திடமிருந்து வருகின்ற சமத்துவமின்மை, அநீதிகளுக்கு எதிராகச் சவால் விடும் வகையிலே தங்களுடைய பாரம்பரியம், விழுமியங்களை உறுதிப்படுத்திக் கொள்வதாக ஹிஜாபை அணிவது இருக்கிறது என்பதே அனைத்து சமூகங்களிலும் ஹிஜாப் அணிவது குறித்து இருந்து வருகின்ற பொதுவான கருத்தாகும்’ என்று அகமது முடிக்கிறார்.
அகமதுவின் அந்த முடிவு இன்று கர்நாடகாவில் நடக்கின்ற ஹிஜாப் சர்ச்சையின் மையப்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. வகுப்புகளுக்கு பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவது சமத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என்று சொன்னால், பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்றம், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை என்று பங்கேற்பதும் அவ்வாறாகவே இருக்கும். ஒவ்வொரு மாதமும் பொது இடங்கள் ஹிந்துமயமாக்கப்படுவது ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.
ஹிஜாப் அணிந்து போராடுகின்ற பெண்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவு அளிக்கிறதா என்பது இங்கே முக்கியமல்ல. ஹிஜாப் அணிவதன் மூலம் அதனை அணிந்து கொள்பவர்கள் தங்களை கருத்து மாறுபாடுள்ள சிறுபான்மையினர் என்று பார்த்துக் கொள்கின்றனர் என்ற அகமதுவின் முடிவில்தான் ஹிஜாப் அணிவதன் முக்கியத்துவம் இருக்கின்றது. நாவலாசிரியர் சத்ராபி கூறியதைப் போல – பெண்களைக் கட்டாயப்படுத்தி ஹிஜாபை கழற்றச் சொல்வது அல்லது அணிந்து கொள்ளச் சொல்வது என்று இரண்டுமே பெண்கள் மீது ஏவப்படுகின்ற வன்முறையாகவே இருக்கும்.
இன்று பள்ளி மாணவி ஒருவர் அனுப்பி வைத்திருந்த செய்தி என்னை மிகவும் குற்ற உணர்வுக்குள்ளாக்கியது. வேறொருவரின் செயல்களுக்காக நான் ஒருபோதும் இதுபோன்று குற்ற உணர்வுக்கு உள்ளானதாக என்னுடைய நினைவில் எதுவுமில்லை. நம்மிடையே இருக்கின்ற வெறுப்புணர்வை விதைக்கின்ற வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மூலமாகப் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், நம்முடைய குழந்தைகளை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடியாது போய் விடும். அந்த மாணவி எனக்கு அனுப்பி வைத்திருந்த செய்தியில் பாதிப்பேர் ஹிந்துக்கள், பாதிப்பேர் முஸ்லீம்களாக இருக்கின்ற தங்கள் வகுப்புக்கென்று இருக்கும் குழுவிடம் வகுப்புவாதம் கொண்ட செய்தியொன்றை ஆசிரியர் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஹிந்தி ஆசிரியர் மனதைப் பாதிக்கின்ற வீடியோ ஒன்றை மக்களைப் பிளவுபடுத்துகின்ற செய்தியுடன் இணைத்து தங்களுடைய குழுவில் பகிர்ந்து கொண்டிருந்தார் என்றும் அந்தச் சிறுமி குறிப்பிட்டிருந்தார்.
‘ஆசிரியரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் சிறுமி ஒருவளின் தொண்டை மீது கத்தியை வைத்திருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவை நன்கு கவனித்த என்னால் முஸ்லீம் பையன் ஒருவன் மீது தவறுதலாகக் குற்றம் சாட்டும் வகையில் அது இருப்பதைக் காண முடிந்தது. உண்மையில் போலிச் செய்தியொன்றைப் பரப்பி மாணவர்களுக்கிடையே வகுப்புவாத மோதலை உருவாக்க அந்த ஆசிரியர் முயன்றுள்ளார். இதில் நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அந்தச் செய்தி வேண்டுகோளுடன் இருந்தது. ஆசிரியர்களை வணங்கி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி வருகின்ற நாட்டில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களிடம் ஹிந்து-முஸ்லீம் என்ற விவாதத்தைப் பரப்புவதைப் பற்றி என்ன சொல்ல?
வீடியோவில் உள்ள சிறுவன் முஸ்லீம் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அந்தச் சிறுமியை அவன் கொல்ல முயற்சி மேற்கொள்வதாகவும் வீடியோவைப் பகிர்ந்திருந்த அந்த ஹிந்தி ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். பகிரப்பட்ட அந்த வீடியோவுடன் ‘ஜாகோ (எழுந்திரு) ஹிந்து, இது நாம் ஒன்றுபட வேண்டிய நேரம். நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும்’ என்ற வேண்டுகோளும் இணைந்திருந்தது.
ஆசிரியர் அனுப்பி வைத்த வாட்ஸ்ஆப் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை நான் பார்த்தேன். குஜராத்திலிருந்து வெளியான அந்த வீடியோ வகுப்புவாத தொனியுடன் தில்லி பள்ளிகளில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவானது உண்மையா அல்லது போலியா என்று ஆய்வு செய்ய முனைந்துள்ள அந்தச் சிறுமியின் மனதில் அந்த வீடியோ ஏற்படுத்தியிருக்கின்ற விளைவை சற்றே கற்பனை செய்து பாருங்கள். வீடியோவைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியரால் அந்த வீடியோ குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்க முடியாதா? எந்தவொரு கொடூரமான செயலும் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாகவே இருக்கும் என்பதை குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இப்படித்தான் பயன்படுத்திக் கொள்வதா?
சிறிது நேரம் கழித்து அந்த ஆசிரியர் பகிர்ந்து கொண்ட வீடியோ குறித்து பள்ளி முதல்வர் ‘ஒரு தவறு நடந்து விட்டது, இனிமேல் மீண்டும் அதுபோன்று நடக்காது’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அந்த ஆசிரியரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றே நினைக்கிறேன். குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியரை நம்பவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். நாம் அனைவருமே தற்செயலாக தவறான குழுக்களுக்கு செய்திகளை அனுப்பி வைத்திருக்கின்றோம் என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதே நமக்குப் போதுமானதாகும்.
ஆனாலும் இதுபோன்று பகிரப்படுகின்ற செய்திகள் நன்கு சரிபார்க்கப்பட வேண்டும். அந்த ஆசிரியர் கடந்த காலங்களில் இதுபோன்ற வகுப்புவாதக் கருத்துகள் அல்லது பரிந்துரைகள் ஏதேனும் செய்திருக்கிறாரா என்பதை மாணவர்களுடன் கலந்து பேசி பள்ளி முதல்வர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற ஆசிரியர்கள் யாராவது இதுபோன்ற செய்திகளை தங்கள் பள்ளிக் குழுக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதையும் அவர் கண்டறிய வேண்டும். ஆசிரியர்களின் மனநிலை குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
இங்கே அந்த ஆசிரியர், மாணவி, அவரது தந்தை அல்லது தில்லியில் உள்ள அந்தப் பள்ளியின் பெயர்களை தவிர்த்திருக்கிறேன் என்றாலும் அந்த மாணவி அனுப்பி வைத்த செய்தியில் இருந்த ‘நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்ற கடைசி வரியைத் தவிர்ப்பது உண்மையில் மிகவும் கடினமான காரியமாகவே உள்ளது.
அன்புள்ள ஆசிரியரே, தயவுசெய்து உங்களுக்கு இது போன்ற வெறுப்பு நிறைந்த செய்திகளை அனுப்பி வைப்பவர்களிடமிருந்து – அது உங்களுடைய கணவராக இருந்தாலும்கூட – நீங்கள் விலகியே இருங்கள். மற்றவர்களை மிகவும் மோசமாக வெறுக்கின்ற ஒருவரால் நிச்சயம் உங்களையும் நேசிக்க முடியாது. இந்த மாணவர்கள் – அவர்கள் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது வேறு எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – உங்களுடைய குழந்தைகள். அவர்களை உங்கள் இதயத்திற்கு நெருக்கமாக இறுகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எட்டு அல்லது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களின் வயது என்னவாக இருக்கும்? உங்களிடம் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனம் இருக்க வேண்டாமா?
ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைத்திருக்கும் அன்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்து நீடித்திருக்கும். பாட்னாவில் உள்ள எனது பள்ளியில் முன்னர் கற்பித்து வந்த உதய்ப்பூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என்னுடைய ஆசிரியர்கள் இருக்கின்ற பழைய புகைப்படம் ஒன்றை இன்று எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான கிரேசி மைக்கேலும் இருந்தார். அவரைப் பார்த்த ஒரேயொரு பார்வையே என்னிடம் புன்னகையை வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. அதுதான் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு. அந்தப் புகைப்படத்தில் இருந்த ஆசிரியர்கள் – அப்போது என்னிடம் கடுமையாக நடந்து கொண்டவர்களும்கூட – என்னை உணர்ச்சிவசப்பட வைத்தனர். அதனால்தான் இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லீம் பெண்கள் தங்களுடைய தலையில் ஹிஜாப் என்று குறிப்பிடப்படுகின்ற முக்காடு அணிந்து கொள்ள விரும்புவதில் சர்ச்சைக்குரியதாக எதுவொன்றும் இருக்கவில்லை. பாஜக ஆளுகின்ற கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை ‘ஹிஜாப் சர்ச்சை’ என்று விவரிப்பது தவறாகும். அதுவொன்றும் அதுபோன்ற சர்ச்சையாக இருக்கவில்லை. உண்மையில் இளம் முஸ்லீம் பெண்களின் கல்வி உரிமையின் மீது நேரடியாக நடத்தப்படுகின்ற தாக்குதலாகவே இந்த சர்ச்சை இருக்கின்றது. அந்தப் பெண்களுக்கான கல்வி உத்தரவாதம் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்படுகின்ற புதிய தலைமையின் கீழ் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூட இது குறித்த புகார் பெற்றவுடனே ஜனவரி 27 அன்று ‘இந்த விவகாரத்தின் உண்மைகள் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றன. ‘கல்வி உரிமை’ தொடர்பாக இந்தப் புகார் மிகவும் தீவிரமானதாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனித உரிமைகளைக் கடுமையாக மீறுவதாகவே இந்த விவகாரம் உள்ளது’ என்று உடுப்பியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது.
இறுதியாண்டில் படிக்கின்ற, இன்னும் இரண்டு மாதங்களில் தங்களுடைய பன்னிரண்டாவது வகுப்புத் தேர்வுகளை எழுதப் போகின்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளம் பெண்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்ற கர்நாடக அரசின் முற்றிலும் தேவையற்ற, தவறான எண்ணத்துடன் கூடிய பிப்ரவரி 5ஆம் நாளிட்ட உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதிக்காதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.
கர்நாடக அரசின் அந்த உத்தரவு கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது புகுமுகக் கல்வித் துறையின் கீழ் வருகின்ற புகுமுகக் கல்லூரிகளின் நிர்வாக வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உடையையே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிடுகின்ற கர்நாடகா கல்விச் சட்டம் – 1983இன் பிரிவு 133(2)ஐத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரிவு நிர்வாகக்குழு சீருடையைத் தேர்ந்தெடுக்காத பட்சத்தில் ‘சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளை மாணவர்கள் அணியக் கூடாது என்று குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட அந்தப் பிரிவு 133(2) கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களில் மாநில அரசு நேரடியாகத் தலையிட அனுமதிப்பதாகவே இருக்கிறது. சீருடைகள் அந்த வகைக்குள் நிச்சயமாகப் பொருந்தாது என்பதால் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கேள்விக்குரிய செயலாகவே உள்ளது.
சந்தேகத்திற்குரிய அந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதன் நோக்கம் மிகவும் தெளிவாகவே உள்ளது. கர்நாடகாவில் கல்லூரி மேம்பாட்டுக் குழுக்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் தலைமையிலேயே செயல்பட்டு வருகின்றன. தலையில் முக்காடு அணிவதற்கு எதிரான விதிகள் எதுவும் கல்லூரிகளில் இல்லை. ஆயினும் இந்தப் பிரச்சனை முதலில் தொடங்கிய உடுப்பி மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் உள்ள புகுமுகக் கல்லூரியில் முஸ்லீம் பெண்கள் முக்காடு அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பஜ்ரங் தள் அமைப்பின் உடுப்பி மாவட்டச் செயலாளரான சுரேந்தர் கோட்டேஷ்வர் ‘கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய அனுமதித்தால், வளாகத்திற்குள் உள்ள ஹிந்து மாணவர்கள் அனைவரையும் நாங்கள் காவித் துண்டு அணியச் செய்வோம்’ என்று எச்சரித்தார்.
அவர் இந்தத் திட்டத்தை அரசாங்கத்தின் அனுசரணையுடனே செயல்படுத்தினார். அவர் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அரசு சாரா அமைப்புகள் என்று தங்களுக்குள்ள வலைப்பின்னல் மூலம் அரசாங்கம் காவித் துண்டு அணிந்த ஆக்ரோஷமான இளைஞர்களை முஸ்லீம் பெண்களுக்கு எதிராக முதலில் அணிதிரட்டியது. அவர்கள் அனைவரையும் முஸ்லீம் மாணவிகளை உள்ளே விடாமல் வாசலில் தடுத்து நிறுத்தி வைத்திருந்த கல்லூரிகளுக்குப் பேரணியாகச் செல்வதற்குப் பின்னர் அனுமதித்தது. பெண்களை நோக்கி கூச்சலிட்டு அவர்களைக் கேலி செய்தவர்களை காவல் துறையினர் வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பின்னர் ‘சமமான நடவடிக்கை’ என்ற பெயரில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உண்டாக்கும் என்பதால், கல்லூரியில் அப்படி ஒரு விதி இருக்கிறது அல்லது இல்லையென்றாலும் முஸ்லீம் மானவிகள் முக்காடு அணிந்து கொண்டு வருவதைத் தடைசெய்வது என்ற உத்தரவை வெளியிட்டது.
உண்மையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மற்றொரு கல்லூரியான பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முஸ்லீம் பெண்கள் தலையில் முக்காடு அணிய அனுமதித்துள்ளதுடன், அது துப்பட்டாவின் வண்ணமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு அந்தக் கல்லூரி தன்னுடைய விதியையே மீறி முஸ்லீம் மாணவிகளை கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளது. இது அப்பட்டமான அநியாயம் இல்லையா?
முஸ்லீம் பெண்களை இவ்வாறு குறிவைப்பது சமூகத்தின் மத்தியில் எதிர்வினைக்கே இட்டுச் செல்கிறது. இதுவரையிலும் முக்காடு அணியாதவர்களும் கூட இப்போது அதை அணிந்து கொள்வதை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகின்றனர். கர்நாடகாவில் அதுபோன்ற நிலைமை உருவாவதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற நிலைமை பெண் சுதந்திரத்திற்கு ஆதரவாக இல்லாத தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் தங்களுடைய அடிப்படைவாத சித்தாந்தத்தை முன்னெடுப்பதற்கு அடித்தளமிட்டுத் தருவதாகவும் இருக்கிறது.
கல்வி நிறுவனங்களில் சீருடை என்ற கருத்தையே இந்தப் பெண்கள் அடியோடு எதிர்த்து வருவது போன்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில் ‘மாணவர்கள் அனைவரிடமும் அரசு நிர்ணயித்துள்ள சீருடையை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அரசாங்கம் விதித்துள்ள பள்ளிச் சீருடை விதிமுறைகளை மீறுபவர்கள் பள்ளிகளுக்குள் நுழைந்து தங்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்பதையும் நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்’ என்றார். முஸ்லீம் பெண்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட சீருடையையே அணிந்துள்ளனர். கூடுதலாக அவர்கள் தங்கள் தலையை ஒரு முக்காடு கொண்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீருடைக்குப் பதிலாக புர்காவுடன் அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ள முக்காடைப் பயன்படுத்துவதில்லை. தலைப்பாகை அணிந்து கொள்ளும் சீக்கிய மதம் சார்ந்த மாணவர்கள் சீருடை குறித்த அரசின் உத்தரவை மீறுவதில்லை. சீக்கிய மாணவன் அல்லது மாணவி தன்னுடைய தலையை மூடிக் கொண்டு வரக் கூடாது என்று இந்தியாவில் எங்காவது விதிகள் இருக்கின்றனவா? இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் இருக்க வேண்டும்? கல்வி நிறுவனங்களில் சீருடைகளை யாரும் எதிர்க்கவில்லை. முக்காடு அணிவதில் முஸ்லீம் பெண்கள் அனைவருக்குமான விதிமுறைகளை மீறுவதும் இல்லை.
இதனை சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்று முன்வைக்கின்ற வாதம் மிகவும் அபத்தமானது. இத்தனை ஆண்டுகளாக கர்நாடகாவிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்குமோ இது சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக இருந்ததே இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் முஸ்லீம் மாணவர்கள் தாங்கள் விரும்பினால், முக்காடு அணிந்து கொள்ளலாம் என்றாலும் அதனை வேண்டாம் என்றே பலரும் தேர்வு செய்து கொள்கிறார்கள். எந்த வகையிலும் அது கட்டாயம் என்று அங்கே இருக்கவில்லை. பெண்கள் முக்காடு அணிவதால் கேரளாவில் சட்ட ஒழுங்குப் பிரச்னை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. முஸ்லீம் பெண்களிடையே அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட மாநிலமாக கேரளா இருக்கிறது. அங்கே உயர்நிலைப் பள்ளிகளில் முஸ்லீம் பெண்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது.
கர்நாடக அரசின் உத்தரவில் பொது ஒழுங்கு பற்றிய குறிப்பு வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் இருபத்தைந்தாவது பிரிவு ‘(1) பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு ஆகியவற்றிற்கும் இந்தப் பகுதியின் பிற வகையங்களுக்கும் உட்பட்டு, மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாக மதநெறி ஓம்புதல், ஒழுகுதல், ஓதிப் பரப்புதலுக்கும் அனைவரும் சரிசமமாக உரிமை கொண்டவர் ஆவார்’ என்று கூறுகிறது. இப்போது ‘மதநெறியை ஓம்புவது, ஒழுகுவது, ஓதிப் பரப்புவதற்கான உரிமை’ பொது ஒழுங்குப் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது என்று கூறி இந்த விவகாரத்தில் பொது ஒழுங்குப் பிரச்சினையைக் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் தனது நிலைப்பாடு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதான தொனியைக் கட்டமைத்துக் கொள்ளப் பார்க்கிறது.
கேரள உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வழக்கு (2016ஆம் ஆண்டு அம்னா பின்ட் பஷீர் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) உள்ளது. முஸ்லீம் பெண்கள் முக்காடு, நீண்ட கை உள்ள சட்டை போன்றவற்றை அணிவது ‘அத்தியாவசியமான மதப் பழக்கம்’ என்று குறிப்பிட்டு, அந்த வழக்கம் அரசியலமைப்பின் பிரிவு 25இன் பாதுகாப்புடன் இருப்பதாக அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண் தேர்வர் ஒருவர் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். பெண் தேர்வர்கள் குட்டை கை சட்டை அணிய வேண்டும், தலையை மூடக் கூடாது என்றிருந்த அந்த ஆடைக் கட்டுப்பாடு விதி அரசியலமைப்பு பிரிவு 25-ன் கீழ் தனக்குள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கிறது என்று அந்தப் பெண் கூறியிருந்தார்.
தேர்வு அறைக்குள் ஏமாற்றி தேர்வு எழுத உதவும் பொருட்களைத் தேர்வர்கள் கொண்டு சென்று விடுவார்கள் என்பதற்காகவே அந்த விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அவை பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்துடன் இணைக்கப்படவில்லை என்றும் கூறி நீதிமன்றம் அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. மேலும் தனது தீர்ப்பில் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் அந்த தேர்வர் தன்னை உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தேர்வருக்கு அறிவுறுத்தலையும் வழங்கியிருந்தது. இவ்வாறாக அந்த தீர்ப்பின் மூலம் தேர்வு முறையின் நியாயமும், பெண் தேர்வரின் அடிப்படை உரிமையும் பாதுகாக்கப்பட்டது.
முன்னதாக 2015ஆம் ஆண்டு இதேபோன்ற மற்றொரு வழக்கில் (நாடியா ரஹீம் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), மத நம்பிக்கையின் அடிப்படையில் தலையில் முக்காடு மற்றும் நீண்ட கையுடனான சட்டை அணிய அனுமதியளிக்க வேண்டும் என்று இரண்டு முஸ்லீம் பெண் தேர்வர்கள் சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் உறுதி செய்து தந்தது. பல மதங்கள், பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்டதொரு நாட்டில், குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று கூறி அந்த ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் வலியுறுத்த முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கிலும் வாரியத்தின் கவலைகளைப் போக்குகின்ற வகையில் உடல் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்ற தீர்ப்புகளின் தாக்கங்களைத் தவிர்ப்பதற்காகவே நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே கர்நாடக அரசு வேண்டுமென்றே சட்ட ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
கல்வி உரிமையை அதிக அளவிலான குழந்தைகளுக்கு விரிவுபடுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்திட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளாக இணையவழி வகுப்புகளின் போது மாணவிகள் அளவுக்கதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோயால் இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் மேனிலைப் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறக் கூடும் என்று கல்வி உரிமை மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 2021 ஜூலை மாதம் மாநில உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கர்நாடகா கிராமப்புறங்களில் 1.59 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறிவித்துள்ளன.
ஆனாலும் இந்த அரசாங்கம் மிகக் குறுகிய கண்ணோட்டத்துடனான தன்னுடைய திட்டத்தை முன்னிறுத்தி, பள்ளிக்குச் செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துகிறது. அரசாங்கம் முன்வைக்கின்ற ‘மகள்களைக் காப்பற்றுங்கள், மகள்களுக்குக் கற்றுக் கொடுங்கள்’ (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்ற முழக்கத்தில் இருந்து பேட்டிகளாக – மகள்களாக – இல்லாமல் இந்த முஸ்லீம் சிறுமிகள் ஒதுக்கி வைக்கப்படப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது.
இந்தச் சக்திகளால் இளைஞர்களின் உணர்வுகள் இழிவான முறையில் கையாளப்படுவதைப் பார்க்கும் போது சோகமே ஏற்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இணையவழிக் கல்வியை அணுக முடியாமல் கல்வியை இழந்து தவித்து வருகின்ற இந்த நேரத்தில் இதுபோன்று இளைஞர்களிடையே மோதல்களும், பிளவுகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய குற்றச்செயல் என்பதைத் தவிர வேறாக இருக்கவில்லை. இப்போது நடந்திருப்பது ஹிந்துத்துவாவை வெளிப்படையாக, அப்பட்டமாக கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்துகின்ற திட்டமே ஆகும். கொரோனா தொற்றுநோயை ஹிந்துத்துவா சக்திகளின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸைக் கொண்டு பரப்பப்படுகின்ற இந்த வகுப்புவாத தொற்றுநோய் மாற்றீடு செய்து கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்களை மூடுவதற்கே வழிவகுக்கும் இந்தச் செயல் இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதாகவும் இருக்கிறது.
கர்நாடகாவில் பாஜக-வினரும் இந்துத்துவாவாதிகளும் முஸ்லீம் எதிர்ப்பு, பிளவுவாத நடவடிக்கைகளில் இறங்கி, முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணியும் பழக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.
உடுப்பியில் உள்ள அரசு புதுமுக வகுப்பு கல்லூரி (government pre-university college) ஒன்று தங்கள் கல்லூரி மாணவிகளில் ஆறு பேரை ஹிஜாப் அணிந்துவர வலியுறுத்தியதை, பாஜக-வின் ஏ.பி.வி.பி. என்னும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் மாணவர் அமைப்பும், இந்து ஜகரன் வேதிகா என்னும் அமைப்பும் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் மாணவர்களும் காவி நிற ஹிஜாப் அணிந்து வருவார்கள் என்று கூறி கல்லூரியின் வாயிலில் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். இது சென்ற ஆண்டு டிசம்பர் 29 நடந்த சம்பவமாகும். அதன் பின்னர் இதே மாவட்டத்தில் குண்டாபூரில் மேலும் இரு கல்லூரிகளில், சில இந்து மாணவர்கள் காவி வண்ணத்தில் ஹிஜாப் அணிந்துவர அனுமதியளிக்க வேண்டும் எனக் கோருவதாகவும், எனவே முஸ்லீம் மாணவிகளும் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது எனக்கூறித் தடை விதித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ஏபிவிபி மற்றும் இதர இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டுகளை அணிந்துகொண்டு, “ஜெய் ஸ்ரீராம்” எனக் கோஷமிட்டுக்கொண்டு, கல்லூரிக்குள் நுழைய முயன்ற முஸ்லீம் மாணவிகளிடம் மோதுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் அம்மாணவிகள் முன்னதாக ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள்தான். அரசாங்க புதுமுக வகுப்புக் கல்லூரிகளில், எங்கெல்லாம் சீருடைகள் அணிய வேண்டும் என்று விதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் முஸ்லீம் மாணவிகள் அணியும் ஹிஜாப் துணிக்கும் வண்ணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காவிக் கும்பல் ரகளையில் ஈடுபட்டபின்னர் இவை அனைத்தும் மாறிவிட்டது.
ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லீம் மாணவிகள் கல்லூரி வளாகங்களுக்குள் நுழையும்போது அவர்களைத் தடுத்து நிறுத்திடும் காட்சிகள் கல்வி கற்க விரும்பும் முஸ்லீம் பெண்களைக் கற்க விடாமல் தடுத்திடும் அப்பட்டமான அநீதியாகும். இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள், காவித் துண்டுகளை அணிந்துகொண்டு, கல்லூரிகளுக்குள் நுழையும் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண்களிடம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தது, பல இடங்களில் மோதல்களாக வெடித்துள்ளன. இதன் விளைவாக கர்நாடக அரசாங்கம் மூன்று நாட்களுக்கு பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடிவிட உத்தரவிட்டிருக்கிறது.
பிப்ரவரி 5 அன்று, அரசுக் கல்வித் துறையானது அரசு நடத்திடும் அனைத்துக் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் சீருடைகளை நிர்ணயித்து ஓர் ஆணையை அனுப்பியிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் சொந்த சீருடைகளைப் பின்பற்றிட வேண்டும். அரசாணையில் “சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கைப்” (“equality, integrity and public order) பாதித்திடாத விதத்தில் சீருடைகள் அணிந்துவரப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இவ்வாறு, பாஜக அரசாங்கம் ஹிஜாப் அணிந்துவரும் பெண்களை அரசாங்கத்தின் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அனுமதித்திடக்கூடாது என்கிற இந்துத்துவா அமைப்புகளின் கோரிக்கைக்கு, இணங்கியிருக்கிறது.
இது, பாஜக மாநில அரசாங்கத்தின் சிறுபான்மையினருக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கை யாகும். மாணவர்களின் உடையில் மத அடையாளங்கள் எதையும் அனுமதிக்க மாட்டோம் என்ற பெயரில், முஸ்லீம் பெண்களின் கல்வி கற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கும் அறிக்கைகளிலிருந்து, முஸ்லீம்கள் அவர்களின் மதஞ்சார்ந்த அடையாளங்களுக்காகக் குறிவைத்துத் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், இரண்டாம்தர பிரஜைகளாகக் கருதப்படுவதும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள சம உரிமைகள் மறுக்கப்படுவதும் தெளிவாகத் தெரிகிறது. மைசூர்-குடகு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரதாப் சிம்கா என்பவர் வெட்கமேதுமின்றி, “நீங்கள் ஹிஜாப், பர்தா அணியமுடியும் என்றால், மதராசாக்களுக்குப் படிக்கச் செல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்தமாகப் பார்க்காமல், ஹிஜாப் பிரச்சனையை மட்டும் தனித்துப் பார்த்திடக்கூடாது. 2019இல் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியைக் கவிழ்த்துவிட்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, மாநிலத்தில் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைத் திணித்திட விடாது முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. 2020இல் அனைத்து வகையான கால்நடைகளையும் வெட்டுவதற்கு எதிராகக் கடுமையான சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தச்சட்டம் அடிப்படையில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்று. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறவர்கள்.
இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு மதச் சுதந்திரத்திற்கான உரிமைப் பாதுகாப்பு (Protection of Right to Freedom of Religion Bill 2021) என்னும் ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. இது, கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான ஒன்று என்ற பெயரில், கிறித்தவ சமூகத்தினரையும், மதக் கலப்புத் திருமணங்களையும் குறிவைத்துத் தாக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்டதாகும். பல இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு அமைப்புகள் உருவாக்கியுள்ள கண்காணிப்புக்குழுக்கள் பல்வேறு மதங்களைச் சார்ந்த இளைஞர்களும், இளைஞிகளும் கலந்து நட்புறவுடன் பழகுவதைத் தாக்குவது என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் இது வெட்கக்கேடான முறையில் அதிகரித்திருக்கிறது.
இதில் வேடிக்கை விநோதம் என்னவென்றால், இவ்வாறு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ள இதே கல்வித் துறைதான், மாநிலம் முழுதும் அனைத்துக் கல்லூரிகளிலும் சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் சூர்ய நமஸ்காரம் நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது.
கர்நாடக அரசாங்கம், முஸ்லீம் பெண்கள் கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமைக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கல்வி நிறுவனத்தில் ஒருவர் தன் மதஞ்சார்ந்த அடையாளத்தை உடையின்மூலம் காட்டக்கூடாது என்றால், பின் சீக்கிய மாணவர்கள் பள்ளிகளில் தலையில் தலைப்பாகை (turbans) அணிவதை அனுமதிக்க முடியாது அல்லவா? முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதும், சீக்கிய மாணவன் தலைப்பாகை அணிவதும் அவரவர் மத நடவடிக்கைகளின் முக்கியமான அம்சமாகும்.
கல்வி கற்கவரும் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்னும் நடவடிக்கைக்குப் பின்னால், முஸ்லீம்களை இரண்டாம் தர பிரஜைகளாக்குவதற்கான முயற்சி ஒளிந்திருக்கிறது. இது குடிமக்களில் ஒரு பிரிவினரின் அரசமைப்புச்சட்ட உரிமைகள் சம்பந்தப்பட்ட அடிப்படை அம்சமாகும். பாதிப்புக்கு உள்ளான மாணவிகளில் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு, விசாரணையில் இருந்து வருகிறது. இதன்மீது உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு தீர்மானித்திட இருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின்கீழ் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களின்படி, கர்நாடக அரசாங்கத்தின் பாகுபாடான ஆணை ரத்து செய்யப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பர்தா அணிந்து
பைக்கில் அவள் பறந்தது கண்டு,
காவித் துண்டுகளும் ஆரஞ்சுத் தொப்பிகளும்
எல்லோருக்கும் வழங்கப்பட்டன…
தனியாய் மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியைக்
குதறக் காத்திருந்த
வெறிநாய் கூட்டத்தில்
நானும் ஒருவனானேன்…
ஆடல்ல, நான் சிங்கமென
காட்டி விட்டாள்;
பாடம் புகட்டி விட்டாள்..
என் மதப் பண்டிகை மட்டும்
பள்ளியில் கொண்டாடப் பட்டபோது,
தபால் ஆபீஸ் பிள்ளையார் வங்கிப் பிள்ளையார் முளைத்த போது,
புதிய திட்டங்களை வேத பூஜையுடன் தொடங்கியபோது,
அமைதிகாத்தானே என் சகோதரன்!
அவள் உடை; அவள் உரிமை
போராடட்டும் என விட்டிருக்க வேண்டும்…
இல்லையெனில்
கல்விக் கட்டண உயர்வு,
நுழைவுத் தேர்வு,
உதவித்தொகை நிறுத்தி வைப்பு என
இன்னும் இணைத்திருக்க வேண்டும்.
நான் அறியேன்…
பின்னொரு நாள் நிகழ்த்த இருக்கும்
வன்முறை ஆட்டத்திற்கான
ஒத்திகை தான் இது என்று…
நான் அறியேன்…
எனக்கு வழங்கப்பட்ட
காவித் துண்டுகளும் ஆரஞ்சு தொப்பிகளும்
ஹரித்துவார் மாநாட்டில்
‘ஆர்டர்’ செய்யப்பட்டவை என்று…
நான் அறியேன்…
என் சொந்த சகோதரர்களை வெறுப்பதற்கான நியாயங்கள் தான்
மதப்பற்று என்பதை…
எனக்கின்று எப்படி உறக்கம் வரும்?