அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் (RSS) குறி வைப்பது ஏன்?
ஹிந்து தேசியவாதத்தின் பாசிசம் மீதான ஏக்கம் – அன்வேஷ் சத்பதி | தமிழில்: தா.சந்திரகுரு
மோடி இந்தியாவில் தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் : நேர்காணல்
அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருந்த நிகழ்விற்கு எதிராக சுரண்யா அய்யர் உண்ணாவிரதம்
உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு
‘ஒரு முஸ்லீம் என்று அன்று உணர வைக்கப்பட்டேன்’ : உடுப்பி கல்லூரி ஹிஜாப் தடை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட மாணவி – தமிழில்: தா. சந்திரகுரு
அல்-ரிஃபா
கர்நாடகாவில் உள்ள பண்டார்கர் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து கொண்டு நுழைய முடியாது என்று கூறப்பட்ட போது தான் உணர்ந்ததை பத்தொன்பது வயது மாணவி அல்-ரிஃபா விவரித்திருக்கிறார்.
கர்நாடகா குண்டபுராவில் உள்ள பண்டார்கர்ஸ் கல்லூரி மாணவிகள்
கடந்த வியாழன் அன்று (2022 பிப்ரவரி 03) குண்டபுராவில் உள்ள எங்களுடைய பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நானும் எனது நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டோம். கல்லூரிப் பணியாளர் ஒருவர் நாங்கள் அணிந்துள்ள ஹிஜாப்களை கழற்ற வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் கல்லூரிக்குள் நாங்கள் அனுமதிக்கப்படுவோம் என்று அவர் எங்களிடம் கூறினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்காமல் நாங்கள் கல்லூரிக்குள்ளே நுழைந்தோம்.
அதையடுத்து எங்கள் கல்லூரி கண்காணிப்பாளர் எங்களைத் தடுத்து நிறுத்தினார். அவரும் எங்களுடைய ஹிஜாபைக் கழற்றுமாறு உத்தரவிட்டார். ஆனாலும் எங்கள் வகுப்பறை நோக்கி நாங்கள் நடந்தோம். வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே நாங்கள் விரும்பியது. துப்பட்டாவிற்குப் பொருத்தமான ஸ்கார்ஃப் தலையில் அணிந்து வரலாம் என்று எங்களுடைய கல்லூரி நாட்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், நாங்கள் வகுப்பிற்கு வந்த போது எங்களில் ஒரு சிலரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சில மாணவர்களுக்கு முந்தைய நாள் இரவிலேயே ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்த தகவல் எங்களுக்குத் தெரிவிக்கப்படாததால், வகுப்பிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்கப்பட்டோம்.
போடப்பட்ட தடை
ஒரு மணி நேரம் கடந்தது. கல்லூரிக்குள் இப்போது மதம் சார்ந்த எந்த வகை ஆடைகளும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கல்லூரி முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்குப் பிறகு, ஹிஜாப் அணிந்திருந்த எனது தோழியும், நானும் துறைத் தலைவரைச் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். எங்கள் ஹிஜாப்களைக் கழற்றுமாறு துறைத்தலைவர் சொன்னார். அந்தச் சூழ்நிலையில் தானும் ஆதரவற்ற நிலையிலேயே இருப்பதாகவும், இந்தப் பிரச்சனையில் தங்கள் தரப்பிலிருந்து எதுவும் செய்ய முடியாது என்றும் துறைத் தலைவர் எங்களிடம் கூறினார். நாங்கள் விரும்பினால் இது குறித்து முதல்வரிடம் நாங்கள் பேசலாம் என்றார்.
அதனால் நாங்கள் கல்லூரி முதல்வரிடம் சென்றோம். கல்லூரிக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தனக்கு கடிதம் வந்துள்ளதாக கூறிய கல்லூரி முதல்வர் கல்லூரி வளாகத்திற்குள் அனைத்து மத ஆடைகளையும் தடை செய்ய தாங்கள் விரும்புவதாக எங்களிடம் கூறினார். அந்தக் கடிதத்தை எங்களிடம் காட்டுங்கள் என்று கேட்டபோது, அவர் அது அரசு உத்தரவு என்று கூறினார். ஆனாலும் அவர் அந்த உத்தரவை எங்களிடம் காட்டவே இல்லை.
அது அரசு உத்தரவு என்றால், மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளின் நிலை என்ன? ஒருசில கல்லூரிகளில் மட்டுமே மதம் சார்ந்த ஆடைகளுக்கு இதுபோன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் அவரிடம் இதைப் பற்றி வெளிப்படையாகவே கேட்டேன். பதிலுக்குத் திரும்பப் பேசுகின்ற பழக்கம் எங்களிடம் இருக்கிறது என்று கூறிய அவர் எங்களை அங்கிருந்து தொலைந்து போகுமாறு சொன்னார். அதற்குப் பின்னர் நாங்கள் அவரது அலுவலகத்திலிருந்து வெளியேறினோம்.
அதைத் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தொடர்பாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. உடனே காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய விரும்புகின்ற மாணவிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார். மீண்டும் அப்போதும் முதல்வர் தான் உயர் அதிகாரிகளின் அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் எங்களிடம் கூறினார். வீட்டிற்குச் சென்று, என்ன செய்வது என்பதைப் பற்றி பெற்றோர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள பெரியவர்களிடம் பேசுமாறு எங்களுக்குப் பரிந்துரைத்த அவர் வளாகத்தில் போராட்டம் எதையும் நாங்கள் நடத்தக் கூடாது என்றார். காவல்துறையின் பாதுகாப்புடன் பஸ் நிறுத்தத்திற்கு எங்களை அனுப்பி வைத்தனர். அங்கிருந்து நாங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம்.
மறுநாள் கல்லூரிக்கு வந்த போது கல்லூரி வாசல் மூடி வைக்கப்பட்டிருந்தது. வெளியிலிருந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனாலும் எங்களை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. மாணவர்கள் சிலரும் எங்களுடன் சேர்ந்து எங்களுக்கு ஆதரவாக நின்றனர். அரை மணி நேரம் கழித்து, இரண்டு மாணவிகள், நான்கு மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி முதல்வரிடம் பேசுவதற்காக உள்ளே சென்றனர். அந்த மாணவர்களிடம் பேசிய முதல்வர் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்த பிறகும் அந்தப் பெற்றோர்களைச் சந்திக்கவே இல்லை.
அவ்வளவு நேரமும் நாங்கள் வெளியே கல்லூரி வாசலிலேயே காத்திருந்தோம். முதல்வர் வெளியே வந்து மீண்டும் ‘தான் உதவியற்றவர், அதிகாரிகளிடம் நீங்கள் செல்லலாம்’ என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் வியாழக்கிழமையிலிருந்து ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சில மாணவர்களும் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வரத் தொடங்கியிருந்தனர். காவித்துண்டுடன் வந்த அவர்களும் கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் ஹிஜாப் அணிவதைத் தடுப்பதற்கு அவர்களிடமிருந்த தீர்வு அதுதான். ஆனால் அது சரியல்ல. பல ஆண்டுகளாக ஹிஜாப் நாங்கள் அணிந்து கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஹிஜாப் அணிந்த எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் திடீரென கல்லூரி வளாகத்திற்கு இப்போது காவித்துண்டை அணிந்து வந்திருந்தனர்.
வியாழனன்று காவல்துறையினர் வந்து, கல்லூரிக்குள் நுழைய வேண்டுமானால், காவித்துண்டுகளைக் கழற்ற வேண்டுமென்று சொன்ன போது அவர்கள் அதை உடனடியாகச் செய்தார்கள். ஆனால் ஹிஜாபைக் கழற்றுவது எங்களைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதானது அல்ல. தாங்கள் விரும்புவதை அந்த மாணவர்கள் அணிந்து கொள்வதில் எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களுடைய ஹிஜாபைக் கழற்றச் சொல்லாதீர்கள். அது இல்லாமல் எங்களை நாங்கள் முழுமையாக உணர்வதில்லை.
எனக்கு பத்தொன்பது வயது ஆகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் இதை அணிந்து வருபவளாகவே இருந்திருக்கிறேன். நான் இந்தக் கல்லூரியில் ஆறு மாதங்களாகப் படித்து வருகிறேன். ஹிஜாப் அணிவது இதுவரையிலும் இங்கே ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. நாட்டில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைப் பற்றி நான் சமூக ஊடகங்களில் வாசித்திருக்கிறேன் என்றாலும் இப்போதுதான் என் வாழ்நாளில் அதை முதன்முறையாக நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு முஸ்லீம் என்று, வித்தியாசமான உடை அணிபவள் என்று அன்று உணர வைக்கப்பட்டேன். இதற்கு முன்பாக நான் இதுபோன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்த்ததே இல்லை.
வீட்டில் இருந்து எனக்கு கிடைத்த ஆதரவு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு மத்தியிலும் அவர்கள் என்னைத் தொடர்ந்து கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் என்பதே அவர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவாகும். வெள்ளிக்கிழமையன்று எனது தந்தை என்னுடன் கல்லூரிக்கு வந்திருந்தார்.
கல்லூரிப் படிப்பு, ஹிஜாப் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கல்லூரி எங்களைக் கட்டாயப்படுத்துகிறது. சமீபத்தில் இதேபோன்ற சம்பவம் உடுப்பி புகுமுக கல்லூரியில் நடந்திருந்தாலும், அதுபோன்று எங்கள் கல்லூரியில் நடக்கும் என்பதை நான் உண்மையில் எதிர்பார்த்திருக்கவே இல்லை.
காவல்துறையுடன் மாணவர்கள் காவித்துண்டு அணிந்திருப்பது மிகவும் பயங்கரமாக இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் இஸ்லாமியப் பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றார்கள். அவர்களால் கல்லூரிக்குத் தனியாகச் செல்ல முடியாது. பாதுகாப்பிற்கு ஒருவர் இருக்க வேண்டும். ஆசிரியர்களோ கல்லூரி நிர்வாகமோ எங்களுக்கு ஆதரவாக இல்லை. அவர்கள் எங்களுடன் நின்றால், நாங்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருப்போம். ஆனால் இந்தப் பிரச்சனையில் தாங்களும் ஆதரவற்றவர்களாக இருப்பதாகவே அவர்களும் நினைக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனையால் எங்கள் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களால் சரியாகச் சாப்பிட முடிவதில்லை. நான் மிகவும் மோசமாய் உணர்கிறேன். என்னுடைய உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியாது. இந்தச் சிறுவயதிலேயே இதுபோன்ற கேவலமான சூழ்நிலையை நான் எதிர்கொள்ள வேண்டியதாகி இருக்கிறது.
இருப்பினும், இவையனைத்தும் எனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தவே செய்திருக்கிறது. நிச்சயம் நான் ஹிஜாபைக் கழற்ற மாட்டேன். ஒன்றும் ஆகவில்லை என்றால் இங்கே படிப்பதை நிறுத்தக்கூட நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் நான் இங்கிருந்து அப்படியே விட்டு விட்டுச் செல்ல மாட்டேன். நிச்சயம் நான் மல்லாடுவேன், போராடுவேன்.
உமங் போதரிடம் கர்நாடகா குண்டபுராவில் உள்ள பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டுத் துறை மாணவி அல்-ரிஃபா கூறியது.
https://scroll.in/article/1016683/i-was-made-to-realise-i-am-a-muslim-a-student-shares-her-account-of-the-udupi-college-hijab-ban
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? – நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுரு
புத்தக விமர்சனம்
மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதமும், இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சியும்
கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் எழுதியுள்ள இந்தப் ‘பெரிய புத்தகம்’ மின்பதிப்பில் மொத்தம் 639 பக்கங்களைக் கொண்டுள்ளது. மிகக் கடினமான ஆய்வு, நுணுக்கமான ஆவணங்களுக்கு சாட்சிகளாக புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் இருக்கின்றன. இந்தப் புத்தகம் பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற காலத்திலிருந்து இந்திய அரசியல் நடைமுறையில் இருந்து வந்திருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளடக்கி இருக்கிறது. மாநிலத்தில் கடைப்பிடித்த அரசியல் மற்றும் தேர்தல் உத்திகளைத் தேசிய அளவில் முயன்று பார்க்கவும், சர்ச்சைக்குரிய ‘குஜராத் மாடல் வளர்ச்சியை’ தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்குமான தளத்தை உருவாக்கவும் 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் மோடிக்கு வழியேற்படுத்திக் கொடுத்தன.
மூன்று பாகங்களாக உள்ள இந்தப் புத்தகத்தின் முதலாம் பாகத்தில் ஆட்சியை வென்றெடுக்க மோடி கையாண்ட உத்திகளை ஜாஃப்ரெலோட் அலசியிருக்கிறார். மோடியின் ஆவேசமான சொல்லாட்சி, ஆத்திரமூட்டும் சொற்களஞ்சியம், தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தகவல்தொடர்பு பாணி, எவ்வித தடையுமின்றி போட்டியாளர்களை – குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை – பரம்பரை, மேல்தட்டினர், ஊழல் நிறைந்தவர்கள், செயல்திறனற்றவர்கள் என்று விமர்சித்தது போன்றவை 2014, 2019 பொதுத்தேர்தல்களில் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தன. அரசியல் விளையாட்டின் புதிய ஜனரஞ்சகவாதி என்று கருத்துரையாளர்கள் அவரைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினர்.
இந்திராகாந்தி மட்டுமே ஜனரஞ்சகவாதி என்று அழைக்கப்படக்கூடிய ஒரே இந்தியப் பிரதமராக இருந்தார். காங்கிரஸ் கட்சியிடம் இருந்த புகழ்பெற்ற கூட்டணி அமைப்பைத் தகர்த்து, அவர் ஒரு தேசியத் தொகுதியை 1971ஆம் ஆண்டில் உருவாக்கினார். எதிர்ப்பாளர்கள் அவரைப் பாராட்ட, ஆதரவாளர்கள் அவரது கால்களில் விழுந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அமைப்பின் பலத்த ஆதாரமாக இருந்து வந்த பிராந்திய அளவிலான மேல்தட்டினர் அதற்குப் பிறகு பொருத்தமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பலதரப்பட்ட நலன்களுக்கான கூட்டணி என்பதிலிருந்து, தர்பார் என்று சொல்லும் அளவிற்கு கட்சி மாற்றப்பட்டது.
இதேபோன்ற ஒன்றே மோடி குஜராத்தில் முக்கியத்துவம் பெற்ற போதும் நடந்தது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டர்களைக் கொண்ட ஹிந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ், தலைவர் என்பவர் கூட்டத்திற்கு அடிபணிந்தவராக இருக்க வேண்டும் என்றே நம்பி வந்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே மோடியிடமிருந்த தலைவர் சார்ந்த அரசியலை அந்த அமைப்பு ஏற்றுக் கொண்டது. ஜீன்ஸ் அணிந்த நவீன இளம் பெண்கள், ஆண்களைக் கொண்ட இணை ஆதரவு அமைப்பை மோடி உருவாக்கினார். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த பிறகு இந்தியாவிற்குத் திரும்பி வந்தவர்கள். கட்சியின் வல்லமைமிக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவை நிர்வகித்த அவர்கள் பொதுக்கருத்தில் ஏற்படும் ஊசலாட்டங்களுடன் தொடர்பில் இருந்து வந்தனர். மோடி, அவரது அரசியலின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் அவர்கள் தடை செய்தனர்.பாரம்பரியம் மட்டுமல்லாது நவீனத்துவ உலகையும் சுற்றி வருபவராக இருப்பதால் பிரதமர் வாக்காளர்களைக் கவர்கிறார் என்று ஜாஃப்ரெலோட் கருதுகிறார். உண்மையில் இந்த விவரம் கவனிக்கத்தக்கது. அயோத்தி கோவிலின் துவக்க விழா, லுடியன்ஸ் தில்லியை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற விழாக்களில் மோடி எவ்வளவு எளிதாக விரிவான மதச் சடங்குகளுக்குத் தலைமை தாங்கினார் என்பதை நினைவு கூர்ந்து பாருங்கள். அவர் அதே அளவிற்கு ஸ்மார்ட் போன் துவங்கி சமூக ஊடகங்கள், விண்வெளி, சந்திரன் வரையிலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். சமூக ஊடகங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட முதல் அரசியல்வாதியாக அவரே இருக்கிறார். ஆர்வமுள்ள, ஆனால் அதிருப்தியுடனிருந்த கோபமான இளைஞர்கள், யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று இருபிரிவினரை அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குழுக்களாக அடையாளம் கண்டு அணுகிய முதல் அரசியல்வாதியாகவும் அவரே இருந்தார். தாராளமயமாக்கப்பட்ட இந்தியா வழங்கியிருந்த பலன்கள் தங்களுக்குத் தொடர்ந்து கிடைக்காமல் போனதால் கண்டு கொள்ளப்படாதவர்களாக தங்களை உணர்ந்தவர்களாக அந்த இரு பிரிவினரும் இருந்தனர்.
மோடியின் திட்டம் மிகுந்த பேராசை கொண்டது. ஒன்றுபட்ட ஹிந்து தேசம் என்ற அவரது கனவுத் திட்டத்திற்கு சாதிப் பிளவுகள் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றை நடுநிலையாக்க முயன்றார். அவரது அரசியலின் இந்தப் பரிமாணமே ஜனரஞ்சகம் என்ற வில்லில் ‘தேசியவாத ஜனரஞ்சகம்’ என்ற புதியதொரு நாணை ஏற்றியது என்று ஜாஃப்ரெலோட் கூறுகிறார். பெரும்பாலும் ஜனரஞ்சகவாதிகள் நிறுவனங்களை ஊழல் நிறைந்தவை, செயல்படாதவை என்று தாக்கி, ஊடகங்கள், குடிமை சமூக அமைப்புகள் போன்ற இடைநிலை நிறுவனங்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டு, நேரடியாக மக்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே அதிகாரத்திற்கு வந்திருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோர், தங்களுக்குச் ‘சொந்தமில்லை’ என்று கருதப்படுகிற சமூகப் பிரிவினருக்கு எதிராக பெரும்பான்மையினரின் கருத்தை அவர்கள் ஒன்று திரட்டுகிறார்கள். மோடி இத்துடன் ஹிந்து தேசத்தை உருவாக்குவது என்ற ஜனரஞ்சகத்திற்கான நான்காவது பரிமாணத்தையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் என்ற கருத்தை ஜாஃப்ரெலோட் முன்வைக்கிறார். அதன் விளைவாக சிறுபான்மையினர் அவர்களுக்கான இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், இனரீதியான ஜனநாயகம் நாட்டில் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, மக்கள்நலன் அரசு என்பதையும் மோடி அரசு கைவிட்டிருக்கிறது. ஆய்வறிஞர்கள் அந்த மாற்றை ‘தொழில்முனைவு அரசு’ என்பதாகக் குறிப்பிடுகின்றனர். வேலைக்காக மக்கள் அரசை எதிர்பார்க்கக் கூடாது; பக்கோடா விற்க வேண்டி வந்தாலும், தங்களைத் தாங்களே அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே அதன் சாராம்சம். முதலாவது ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் சமூக உரிமைகளை மக்களுக்கு வழங்குகின்ற பல கொள்கைகளை இயற்றித் தந்தது. தற்போதைய ஆட்சியிலோ கட்டுப்படியாகாத விலையில் இருக்கின்ற எரிவாயு சிலிண்டர்கள் இல்லாமல் எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்குதல், தண்ணீர் பற்றாக்குறையால் பயன்பாட்டில் இல்லாத பொதுக்கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்தல், சில வீடுகளை வழங்குதல் என்று சில சலுகைகள் மட்டுமே ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவையனைத்தும் குடிமக்களுக்கு அவர்களுடைய சமூக உரிமைகளாக வழங்கப்படவில்லை. மாறாக அவை சமூகக் கொள்கையாக அல்லது பிரதமரின் பரிசாக மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏழைகளின் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்ற பெயரிலேயே அவையனைத்தும் நடந்து வருகின்றன.
மொத்தத்தில் அரசியல் விளையாட்டின் விதிகள் அனைத்தையும் மோடி மாற்றி எழுதியிருப்பதாக ஜாஃப்ரெலோட் கூறுகிறார். இந்திய அரசியல் எப்போதுமே தேர்தல் போட்டிகள் மற்றும் நிறுவனங்களால் மையவாத நிலைக்கே தள்ளப்படும் என்றிருந்த நம்பிக்கைக்கு மோடி சவால் விடுத்தார். இந்தியாவின் எதிர்காலம் இனிமேல் கூட்டணி அரசியல் சார்ந்தே உள்ளது என்ற கருதுகோளை மக்களவையில் தனிப்பெரும்பான்மையைப் பெற்ற பாஜகவின் திறன் நிராகரித்தது.
மோடி ஆட்சியைக் கைப்பற்றியது பாஜகவிற்குப் பலன் அளித்ததா என்பது இன்னும் விடை காணப்படாத கேள்வியாகவே உள்ளது; அது குறித்த தெளிவு இன்னும் கிடைக்கவில்லை. 2020ஆம் ஆண்டில் பொதுமுடக்கத்தை அறிவித்த பிறகு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து தங்கள் கிராமங்களை நோக்கி நடக்கத் தொடங்கினர். சுமைகளைத் தலையில் சுமந்து கொண்டு, ரத்தம் வடியும் கால்கள், தண்ணீரின்றி வறண்டு போன தொண்டைகளோடு இருந்ததைத் தவிர ‘ஆத்மநிர்பார் பாரத்’ சேவைக்கான இடைவிடாத உழைப்பில் வேறு எதையும் அவர்களால் காட்ட முடியவில்லை.2021ஆம் ஆண்டின் கோடைக்காலம் மேலும் பல சோகங்களைத் தந்தது ஆக்சிஜன் பற்றாக்குறையால் வாடிய தலைநகரின் தெருக்களில் மக்கள் ஆக்சிஜனுக்காக மூச்சுத் திணறி இறந்தனர்; தகன அறைகளும், புதைப்பதற்கான குழிகளும் பல நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், பல குடும்பங்களால் தங்கள் அன்புக்குரியவருக்கு கண்ணியமான இறுதிச் சடங்கைக்கூட நடத்த முடியவில்லை; சிறு குழந்தைகள் அனாதைகளாகினர். ஒட்டுமொத்த குடும்பங்களும் சீரழிக்கப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு தெருவையும் துயரம் சூழ்ந்து கொண்டிருந்தது. சம்பவ இடத்தில் அரசாங்கத்திற்கான சிறுதடயமும் காணப்படவில்லை. தன்னைக் குறித்த சுய-பிரதிநிதித்துவம் அரசாங்கத்திடம் இருந்த போதிலும், வறுமை, சமத்துவமின்மை, பற்றாக்குறை போன்றவற்றால் லட்சக்கணக்கான இந்தியர்கள் தவிக்க நேர்ந்தது என்று ஜாஃப்ரெலோட் சுட்டிக் காட்டுகிறார். தற்போதைய அரசாங்கத்தால் புலம்பெயர்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பெருத்த ஆரவாரத்துடன் துவக்கி வைக்கப்பட்ட போதிலும், உண்மையில் அந்த தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்றித் தரப்படவில்லை.
அதிகாரத்தின் உச்சமட்டத்தைக் கைப்பற்றி, அதை தனக்கென்று ஏகபோகமாக ஆக்கிக் கொண்டு, புதிய லுடியன்ஸ் தில்லி மேல்தட்டினரின் ஆட்சியைத் துவக்கி வைத்திருக்கும் அரசியல்வாதி ஒருவரின் கதையை ஜாஃப்ரெலோட் நமக்கு இந்தப் புத்தகத்தின் வழியாக கூறுகிறார். அவர் அதை மிகவும் அருமையாகச் செய்திருக்கிறார். சில சமயங்களில் வாசகர் முக்கியமானவற்றைத் தவற விடாத அளவுக்கு அவருடைய ஆய்வு முழுமையானதாக இருக்கிறது. காரணிகள் x, y அல்லது z ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து நம்மால் அடிக்கடி ஆச்சரியப்பட முடிகிறது என்றாலும் இந்த புத்தகம் நல்ல வாசிப்பிற்கானதாக இருக்கிறது. அந்த காரணிகளுக்கு இடையேயான தொடர்பை நாமே எப்போதும் உருவாக்கிக் கொள்ள முடியும்.
இந்த மதிப்பாய்வை முடிப்பதற்கு முன்பாக இரண்டு சிறிய விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ஹிந்தி சொற்களை மொழிபெயர்ப்பதற்கு முன்பாக ஆசிரியர் யாரிடமாவது ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நாற்பத்தி மூன்றாம் பக்கத்தில் முஸ்லீம்களை வேறுமாதிரி காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற முழக்கம் ‘ஹம் பாஞ்ச் ஹமாரே பச்சீஸ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அந்த பச்சீஸ் என்பது ஐம்பது அல்ல, அது இருபத்தைந்து. அறுபதாம் பக்கத்தில் இந்தியர்கள் காலா நாயக் அல்லது கருப்பு ஹீரோவின் பாலிவுட் படத்தை விரும்புகிறார்கள் என்று ஜாஃப்ரெலோட் எழுதுகிறார். சரியான சொல் கல்நாயக். 1993ஆம் ஆண்டு அதே பெயரில் சஞ்சய்தத் வில்லத்தனம் கொண்ட ஹீரோவாக நடித்த திரைப்படம். மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் கரண் தாப்பர் புத்தகத்தின் நூற்றியேழாவது பக்கத்தில் கிரண் தாப்பர் என்று இடம் பெற்றிருக்கிறார்.
இரண்டாவதாக குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான இயக்கம் பற்றி ஜாஃப்ரெலோட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவர் அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை. குடிமை சமூக அமைப்புகள் மீதான அடக்குமுறைகள் இருந்த போதிலும், 2019 டிசம்பர் மத்தியிலிருந்து 2020 பிப்ரவரி தொடக்கம் வரையிலும் யாரும் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வை நாம் கண்டோம். பாரபட்சமான அந்தச் சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரிலும் ஒன்றுகூடி நாடு முழுவதும் ஊர்வலங்களை நடத்தினர். அவர்களிடமிருந்த ஒரே ஆயுதமாக அரசியலமைப்புச் சட்டம் இருந்தது. அரசியலமைப்புச் சட்டமும் அதன் முகப்புரையும் சட்ட ஆவணம் என்பதிலிருந்து அரசியல் ஆவணமாக அப்போது மாறியிருந்தது.2020ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஓராண்டிற்கும் மேலாக நாடு முழுவதிலிருந்து திரண்டு வந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டனர். அவசர அவசரமாக விவசாயத்தை பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக அவர்கள் போராடினர். இவை மோடி இந்தியா குறித்த அதிருப்தியால் தூண்டப்பட்ட இரண்டு நிகழ்வுகள் மட்டுமாகவே இருக்கின்றன.
எந்த அளவிற்கு ஒரு தலைவர் வசீகரமானவராக இருந்தாலும், அதனால் எந்தவொரு ஆட்சியும் கேள்விக்குள்ளாகாமல் இருக்கப் போவதில்லை. ஜாஃப்ரெலோட் சுட்டிக்காட்டுவதைப் போல் வசீகரம் என்பது தார்மீகரீதியாக நடுநிலையானது. ஹிந்து தேசியவாதத்தின் ஒருங்கிணைப்பு குறித்த பாடத்தை சமகால இந்தியா நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ‘மதத்தை நம்பிக்கை’யாக அல்லது ‘மதத்தை அரசியலாக’ என்று எத்தனை குடிமக்கள் வேறுபடுத்திப் பார்த்திருக்கிறார்கள் என்பதையும் அது நமக்குச் சொல்லியிருக்கிறது. அதனால்தான் 2019ஆம் ஆண்டில் அறுபத்தியிரண்டு சதவிகித குடிமக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
அரசியல் வரலாறு என்பது அதிகாரத்தின் கதையாக மட்டுமே இருப்பதில்லை. அது அதிகாரத்திற்கு எதிரானதொரு கதையாகவும், மேலாதிக்க அமைப்புகளுக்கிடையிலான போட்டியாகவும் இருக்கிறது. ஒருவேளை கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்டின் மற்றொரு புத்தகத்திற்கான மற்றுமொரு கதையாக அது இருக்கக்கூடும்.
https://thewire.in/books/christophe-jaffrelot-modis-india-review
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு