ஸ்ரீ அரவிந்தரின் பன்முகம் – கட்டுரை
அரவிந்தரின் இளமைப் பருவம்:
1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மேற்கு வங்கத்தின் ரங்க்பூரில் துணை சர்ஜனாக பணிபுரிந்து வந்த கிருஷ்ணாதன் கோஷுக்கும் ஸ்வர்ணலதா தேவிக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் அரபிந்தோ அக்ராய்ட் கோஷ் என அழைக்கப்பட்ட அரவிந்தர்.
இவரை இவரது பெற்றோர்கள் ஐரோப்பிய பாணியில் வளர்க்க ஆசைப்பட்டதால் அவரை டார்ஜிலிங்கில் இருந்த லொரேட்டோ கான்வெண்ட் பள்ளியில் சேர்த்தனர். இவருடைய தந்தை இவர் இந்தியன் சிவில் சர்வீஸில் சேர்ந்து பணிபுரிய வேண்டுமென நினைத்தார். அதற்கு நல்ல கல்வி தேவை என்பதற்காக 1879 ஆம் ஆண்டு, அரவிந்தரின் ஏழாவது வயதில், அவரும், இரு சகோதரர்கள் உள்பட மொத்தக் குடும்பமும் இங்கிலாந்துக்குச் சென்றது. அங்கு தனக்குத் தெரிந்த நண்பரான ரெவரண்ட் ட்ரூட் (Drewett) பாதுகாப்பில் தன்னுடைய மூன்று மகன்களையும் இருக்கச் செய்தார். அங்கிருந்த காலகட்டத்தில் அரவிந்தர் லத்தீன், கிரேக்கம், இத்தாலியன், ஃபிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார். அதன்பின் கேம்பிரிட்ஜில் இருக்கும் செயிண்ட் கிங்க்’ஸ் கல்லூரியில் சேர்ந்து மற்ற பாடங்களுடன் ஐசிஎஸ் தேர்வுக்கானப் பயிற்சியும் பெற்று அத்தேர்வில் பங்குபெற்ற 250 பேரில் 11 ஆவது ரேங்க் பெற்று தேறினார். இவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கப்பல் விபத்துக்குள்ளாகிவிட்டது என்கிற தவறான செய்தியைக் கேட்ட இவரது தந்தை மரணமடைந்தார்.
பரோடாவில் அரவிந்தர்:
1893 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்து பரோடாவில் மாநில சேவையில் சேர்ந்தார். அங்கு பல துறைகளில் வேலை பார்த்து வந்ததோடு பரோடா மஹாராஜாவுக்கான பேச்சுக்களை எழுதித் தருபவராகவும் பணியாற்றினார். 1897 ஆம் ஆண்டு பரோடாவில் இருந்த பரோடா கல்லூரியில் (இப்போது எம்எஸ் பல்கலைக்கழகம்) ஃபிரெஞ்சு ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்தபோது அவர் தானாகவே சமஸ்கிருதமும், பெங்காலியும் கற்றுக் கொண்டு பன்மொழி வித்தகராகத் திகழ்ந்தார்.
பரோடாவில் வாழ்ந்து வந்தபோது `இந்து பிரகாஷ்’ என்கிற பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தார். ஐரோப்பிய பாணியில் வளர்க்கப்பட்டாலும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் பரோடா மாநில நிர்வாகத்தில் வேலை பார்த்து வந்த காரணத்தால் இவரால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியவில்லை.
பரோடாவில் இருந்து கொல்கத்தா செல்வதற்கு முன்பாக இவர் புரட்சி நடவடிக்கைகளில் பட்டும் படாமல் ஈடுபட ஆரம்பித்தார். 1899 ஆம் ஆண்டு மிகவும் துடிப்பான இளைஞரான யத்தின் பானர்ஜிக்கு பரோடா ராணுவத்தின் உதவியோடு ராணுவப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார். இரண்டு வருடப் பயிற்சிக்குப் பின் யத்தின் கொல்கத்தாவுக்குச் சென்றார்.
அரவிந்தரின் திருமண வாழ்க்கை:
அரவிந்தரின் வாழ்க்கைத் துணையான மிர்ணாளினி தேவி குறித்து அதிகச் செய்திகள் இல்லை. இவருக்கு 14 வயதாகும் போது 29 வயதான அரவிந்தரை மணந்து கொண்டார். இந்துப் பெண்ணை, இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பிய அரவிந்தர் அப்போதே பத்திரிகையில் விளம்பரம் செய்திருக்கிறார். அதன்பின், மிருணாளியின் அப்பாவான கிரிஷ் சந்திரபோஸ் இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அரவிந்தரும் மிருணாளியும் பரிமாறிக் கொண்ட சில கடிதங்கள் சிறு நூலாக வெளிவந்திருக்கிறது. இவர் தனது 32 ஆம் வயதில் இன்ஃப்ளூன்சா நோயால் இறந்து போகிறார்.
`இந்து மனைவி’யாக வாழ அரவிந்தர் இவரை வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் எவ்வளவு முயன்றாலும் மிருணாளினியால் அது முடியவில்லை. இதோடு இருவருக்குமான `தலைமுறை இடைவெளி’யால் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகிறது, அரவிந்தர் அந்த நேரத்தில் தன்னை அரசியலில் தீவிர இணைத்துக் கொண்டதால் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. 1905 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறார். இவரது பதினெட்டு ஆண்டு கால திருமண வாழ்க்கை பெரும்பாலும் தனிமையிலேதான் கழிந்திருக்கிறது. இவர் தனது நகைகளில் பலவற்றை விற்று தர்ம காரியங்கள் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.
அரவிந்தரின் அரசியல் நுழைவு:
1902 ஆம் ஆண்டு அரவிந்தர் மேற்கிந்தியாவில் ராஜ்புதானத்தைச் சேர்ந்த தாக்கூர் சாஹேப்பால் இயங்கி வந்த ரகசிய அமைப்பில் சேர்ந்தார். அதன் பின் கொல்கத்தாவில் பி. மிட்டர் தலைமையில் இயங்கி வந்த புரட்சிகர அமைப்புக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் இவரிடமிருந்த ஒருங்கிணைப்புக்குத் தேவையான ஆற்றல் வெளிப்பட்டது. இவர் தீவிரமாக அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பாகவே வங்காளத்தில் இயங்கிவரும் புரட்சிகர அமைப்புகளிடையே அறிவுஜீவியாக அறியப்பட்டார். இவருடைய நோக்கம் என்னவெனில், வலுவான புரட்சிகர அமைப்புகளையெல்லாம் ஒன்றிணைக்கும் நெட்வொர்க் ஒன்றை ஆரம்பித்து அதிலிருக்கும் துடிப்புள்ள இளைஞர்கள் அனைவருக்கும் ராணுவப் பயிற்சி அளிப்பதும் அப்படி ராணுவப் பயிற்சி பெற்ற இளைஞர்களைப் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்ய வேண்டுமென்பதாகும்.
இப்படிப் பார்க்கும்போது இவர் காந்திக்கும், எம்.என். ராய்க்கும் முன்பாகவே இந்திய அரசியல் களத்தில் நுழைந்தவராவார். அந்நியரிடமிருந்து இந்தியா எந்தவிதத்திலாவது சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார். 1905 ஆம் ஆண்டுக்குப் பிறகே இவர் தீவிரமான அரசியலில் நேரடியாக இறங்க ஆரம்பித்தார்.
அந்த நேரத்தில் தான் வங்கத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டுமென பிரிட்டிஷார் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட வங்காள மாநில மக்கள் கொதித்தெழுந்தனர். இதுவே அரவிந்தர் அரசியலில் தீவிரமாக நுழைவதற்கு ஒருவகையில் காரணமாக இருந்தது எனச் சொல்லலாம். இதனால் வருடத்துக்கு 500 பவுண்ட் வருமானம் கொண்ட வேலையை உதறித் தள்ளிவிட்டு மாதம் 10 பவுண்ட் வருமானம் கொண்ட கொல்கத்தா நேஷனல் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கொல்கத்தாவுக்கு வந்தார்.
அப்போது இந்திய அரசியலில் மிதவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களைப் பார்த்து அரவிந்தர் கேலி செய்த்தோடு Lal, Pal, Bal என அறியப்பட்ட லாலா லஜ்பத் ராய், பிபின் சந்திர பால், பால் கங்காதர் திலக் ஆகியோரின் தீவிரவாதத்தை ஆதரித்து பிபின் ஆரம்பித்த `பந்தே மாதரம்’ என்கிற ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ந்து தலையங்கம் எழுதி வர ஆரம்பித்தார். இப்பத்திரிகையில் எழுதி வந்ததோடு `ஜகன் தாரா’, `இந்து பிரகாஷ்’, `கர்ம யோஹின்’ போன்ற பத்திரிகைகளும் எழுதி தன்னை ஒரு பத்திரிகையாளராகவும் வெளிப்படுத்திக் கொண்டார்.
`ஸ்வராஜ்’ என்கிற சொல்லுக்குப் பதிலாக `சுதந்திரம் (Independence)’ என்கிற சொல்லை முதன் முதலில் உபயோகிக்க ஆரம்பித்தார். மிகவும் தைரியமாக இந்தியாவுக்கு `முழுமையான பூரணத்துவ (complete, absolute)’ சுதந்திரம் வேண்டுமென பிரகடணம் செய்தார். `சுதந்திரம்’ என்கிற சொல்லை உபயோகிப்பதற்குக் கூட சிலர் பயப்படுகிறார்கள் ஆனால் என் வாழ்க்கையின் `மந்திரச் சொல்லே’ இதுதான் என வெளிப்படையாகவும் தைரியத்துடனும் தனது பேராவலை பொதுவெளியில் பேசியும், எழுதியும் வந்தார். இதற்காகவே இவரை அப்போது வைஸ்ராயாக இருந்த லார்ட் மிண்டோ, `இந்தியாவின் மிகவும் அபாயகரமான மனிதர்’ என அழைத்தார்.
வங்காளத்தில் தேசியவாத இயக்கம் வெகு வேகமாக தீவிரவாதக் கருத்துகளுடன் வளர்ந்து வந்த சமயத்தில் தேசதுரோக சட்டத்தின் கீழ் இரண்டு முறை இவர் கைது செய்யப்பட்டு அதன்பின் விடுவிக்கப்பட்டார். 1908 ஆம் ஆண்டு அலிப்பூர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஒரு வருடத்திலேயே இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
1910 ஆம் ஆண்டில் இவர் தீவிர அரசியலிலிருந்து விலகி பாண்டிச்சேரி சென்று 1950 ஆம் ஆண்டு வரை அதாவது மரணிக்கும் வரை அங்கேயே வாழ்ந்து வந்தார்.
அரவிந்தரும் ஆரோவில் ஆசிரமும்;
1910 ஆம் ஆண்டு விசாரணை அதிகாரி ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர், அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஒரு பகுதியான சந்தாநகருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம் பாண்டிச்சேரிக்கு மாறுவேடத்தில் வந்து சேர்ந்தார்.
ஆங்கிலேய அரசுக்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பாக இதை நினைத்துக் கொண்டு யோக நெறியில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அரசியல்வாதியாக இருந்தவர் ஆன்மிகவாதியாக மாறத் தொடங்கினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். பாரதியாரோடு நட்பு கொண்டார்.
1910 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரிக்கு வந்த அரவிந்தருடன் மூன்று அல்லது நான்கு பேர் வசித்து வந்தனர். மிரா அல்ஃபாஸா என்கிற பெயரைக் கொண்டவரும் பின்னாளில் `அன்னை’ என அழைக்கப்பட்டவரும், பிரெஞ்சு எழுத்தாளர் பால் ரிச்சர்டும் 1914 ஆம் ஆண்டு அரவிந்தரைச் சந்தித்து `Monthly Review’ வெளியிடுவது பற்றிய யோசனையைச் சொன்னார்கள். ஆனால் முதலாம் உலகப் போர் ஆரம்பமானதால் இவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அரவிந்தரே ஒரு சிலரின் உதவியுடன் இந்த வேலையைப் பார்த்து வந்தார்.
1904 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்தபோதே அரவிந்தர் பிரணாயமம் பயிலத் தொடங்கியபோது சிறை வாழ்க்கை இவரை யோக நெறியில் அதிக அக்கறை கொள்ள வைத்தது. விடுதலைப் போராட்டம் என்பதை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமின்றி ஆன்மிகக் கண்ணோட்டத்திலும் அரவிந்தர் பார்க்கத் தொடங்கினார்.
அரவிந்தர் தனது சிந்தனைகளை `ஆர்யா’ என்கிற ஆன்மிக இதழில் 1914 முதல் 1921 வரை எழுதி வந்தார்.
முதலாம் உலகப் போருக்குப் பின் 1920 ஆம் ஆண்டு அன்னை மீண்டும் இந்தியா திரும்பியவுடன் பலரின் ஒத்துழைப்புடன் ஆசிரமம் ஒரு வடிவம் பெற ஆரம்பித்தது. `அன்னை தன் வாழ்நாள் முழுவதையும் ஆசிரமத்திற்காகவும், ஸ்ரீ அரவிந்தருக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டார்’ என்றால் அது மிகையில்லை.
அரவிந்தர் பல நூல்களை எழுதியிருந்தாலும் அவரது `சாவித்திரி’ என்கிற நெடுங்காவியம் 24,000 அடிகளை உடையது. மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூலான இது முதன் முதலாக 1940 ஆம் ஆண்டு வெளியானது. 1972 ஆம் ஆண்டு இவருடைய எழுத்துகள் எல்லாம் தொகுக்கப்பட்டு 30 தொகுதிகளாக Sri Aurobindo Birth Centenary Library யால் வெளியிடப்பட்டது.
அரவிந்தர் ஒரு தத்துவஞானி, யோகி, எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், தேசியவாதியாக இருந்து ஆன்மிகவாதியாக மாறியவர். இவரை கெளரவிக்கும்பொருட்டு இந்திய அரசு 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தபால்தலை வெளியிட்டது. 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் 150 வயதான ஸ்ரீஅரவிந்தரை நினைவு கொள்வது அவசியமாகும்.
– சித்தார்த்தன் சுந்தரம்