ஹிந்து தேசியவாதத்தின் பாசிசம் மீதான ஏக்கம் – அன்வேஷ் சத்பதி | தமிழில்: தா.சந்திரகுரு
அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருந்த நிகழ்விற்கு எதிராக சுரண்யா அய்யர் உண்ணாவிரதம்
ஆர்எஸ்எஸ்-இன் இலட்சியம்: இந்து ராஷ்ட்ரம் கட்டுரை- சவெரா (தமிழில்: ச.வீரமணி)
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மோடிக்கு வாக்களித்த இந்தியர்களில் அநேகமாக எவருக்குமே தாங்கள் ஆர்எஸ்எஸ் என்னும் ‘ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்’ இயக்கத்திற்குத்தான் உண்மையில் வாக்களித்திருக்கிறோம் என்று தெரியாது. மோடி அந்த இயக்கத்தின் பிரச்சாரகர் என்னும் முழு நேர ஊழியராக கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும், மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களில் பெரும்பாலானவர்களும் நீண்டகாலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இருந்துவருபவர்களேயாவர். பிரதமர் மோடியிலிருந்து அவரின்கீழ் பணிபுரியும் அத்தனை பேர்களுமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தத்தாலும், சிந்தனைகளாலும் பயிற்றுவிக்கப் பட்டவர்களாவார்கள். ஆர்எஸ்எஸ் கடந்த 90 ஆண்டு காலமாக எதனைப் பிரச்சாரம் செய்து வந்ததோ, அதனை நாடு முழுதும் தங்களின் வன்முறை நடவடிக்கைகளின் மூலமாக எடுத்துச் செல்லும் வேலைகளையே இதன்கீழ் இயங்கிடும் டஜன் கணக்கான அமைப்புகள் துணிச்சலுடன் செய்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய இவர்களின் பிரச்சாரம் இந்திய சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே சண்டை மற்றும் அவநம்பிக்கையை உருவாக்கிடும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் ஒற்றுமையைக் கிழித்தெறிந்து, நாட்டை மத்தியகால இருள்சூழ்ந்த காலத்திற்கு இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.
ஆனாலும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கூட்டாளிகளும் விரும்புவது என்ன? எந்தவிதமான இந்தியாவை அவர்கள் கட்டி எழுப்பு விரும்புகிறார்கள்? எந்தவிதமான சமூகத்தை அவர்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கும் சமூகம் ஆபத்தானது என்றும் நாட்டையே எரித்துச் சாம்பலாக்கிடும் என்றும் ஏன் கூறுகிறோம்? இதனைப் புரிந்துகொள்ளச் சற்றே முயல்வோம்.
இவர்கள் கூறும் ‘இந்து’ தேசம்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இறுதி இலட்சியம் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் ‘இந்து தேசத்தை’ அமைத்திட வேண்டும் என்பதேயாகும். ‘இந்து ராஷ்ட்ரம்’ என்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ்-இன் தொலைநோக்குப் பார்வை என்ன என்பது குறித்து இவ்வியக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவரும் இவ்வியக்கத்தின் சித்தாந்தத்திற்கு மிகவும் முக்கியமாக விளங்குபவருமான எம்.எஸ். கோல்வால்கர், இது தொடர்பாக ஏராளமான விவரங்களைத் தன்னுடைய “நாம் – அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம்” (“We-or Our Nationhoold Defined”) என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். மோடி, இவரை ஓர் ஆன்மீக ஜாம்பவான் என்றும் தொலைநோக்குப் பார்வையுள்ளவர் என்றும் சித்தரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கோல்வால்கர், அனைவரும் அறிந்துள்ள அறிவியல் சாட்சியங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, இந்த பூமியில் உள்ள இந்த ‘தேசத்தில்’ நாம் பல லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம் என்கிறார். இந்த பூமி, பன்முகத்தன்மை கொண்டவர்கள், ஆன்மீக மேதைகள் மற்றும் தெய்வீகத்தன்மை படைத்தவர்கள் வாழ்ந்த பூமி. பின்னர் இந்துக்கள் திருப்தி மனப்பான்மையுள்ளவர்களாகவும், உணர்வு மங்கியவர்களாகவும் மாறிப்போனார்கள். இம்மாபெரும் பூமி, “கடந்த ஆயிரம் ஆண்டுகளில்” “கொலைபாதகக் கொள்ளையர்களின் கூடாரமாக” மாறிப்போனது. இது, இந்துக்களின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றது. இவ்வாறு கூறுவதன்மூலம் கோல்வால்கர், முஸ்லீம்களைத்தான் இவ்வாறு இந்துக்கள் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் என்று குறைகூறுவது தெளிவாகவே தெரிகிறது. இப்போது நம்முன் உள்ள கடமை மீளவும் இந்து தேசத்தைக் கட்டி எழுப்புவதும், மீளவும் நிறுவுவதுமேயாகும் என்று கோல்வால்கர் கூறுகிறார்.
இந்து ராஷ்ட்ரத்தில் வரையறுக்கப்பட்டுள்ள முதல் குணாம்சம் என்பது, இந்துக்கள் மட்டுமே அதன் அங்கமாக இருக்க முடியும் என்பதாகும்.
“இந்த நாட்டில், இந்துஸ்தான், அதன் இந்து மதம், இந்து கலாச்சாரம் மற்றும் (சமஸ்கிருதம் மற்றும் அதன் தொடர்புனுள்ள இயற்கையான குடும்பத்தைச்சேர்ந்த) இந்து மொழி ஆகியவற்றுடனான இந்து இனம் தேசம் என்பதன் கருத்தியலை முழுமையாக்குகிறது. அதாவது, இந்துஸ்தான் புராதன இந்து தேசமாக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது மற்றும் தொடர்ந்து இருந்து வரவேண்டியதுமாயிருக்கிறது. இதனுடன் சேர்ந்திராத எவராக இருந்தாலும், அதாவது இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழியுடன் சேர்ந்திராத எவராக இருந்தாலும், ‘இயற்கையாகவே’ அவர்கள் உண்மையான தேசிய வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக வீழ்ந்துவிடுவார்கள்.”(ப.99)
இவ்வாறு தாங்கள்தான் மற்ற இனத்தைவிட மேலாதிக்கவாதிகள் என்று பொருள்படக்கூடிய கோல்வால்கரின் இந்தக் கூற்றானது, மற்ற மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதை மறைக்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்களுடைய சமஸ்கிருத பிராமணியக் கண்ணோட்டத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது. இவர்களின் கூற்றுப்படி, இந்து ராஷ்ட்ரம் என்பது சமஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுபவர்கள் மட்டுமே. இவ்வாறு இவர்களின் இந்து ராஷ்ட்ரம் திராவிட மொழிக் குடும்பத்தை ஒதுக்கிவிடுகிறது மற்றும் பழங்குடியினர் மொழிகள் பலவற்றையும் ஒதுக்கிவிடுகிறது.
இதன் காரணமாகத்தான் பாஜக மற்றும் அதன் முந்தைய பெயரில் அமைந்திருந்த ஜன சங்கம் உட்பட சங் பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் இந்தியைத் திணிப்பதற்குத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில் இவர்களின் பார்வையில் இந்து அல்லாத அனைவரும் தேச வாழ்க்கைக்கு வெளியே நிறுத்தப்படுவதாகும். இதனைப் பின்வரும் பத்திகளில் கோல்வால்கர் நேரடியாகவே முன்வைக்கிறார்:
“ஆரம்பத்திலேயே ஒன்றை நாம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, ‘தேசம்’ என்கிற வரையறை குறித்து நாம் குறிப்பிட்டுள்ள ஐந்து நிபந்தனைகளுக்குள், வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து, நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டு, இந்த தேசத்தின் இனத்துடன் முழுமையாக இணையாதவரை, அவர்கள் தேசிய வாழ்வில் இடம்பெற முடியாது. ஆயினும், அவர்கள் தங்களுடைய இன, மத மற்றும் கலாச்சார வேற்றுமைகளையே பின்பற்றுவார்களெனில், அவர்கள் அந்நியர்களாக (foreigners)க் கருதப்படுவதைத்தவிர, வேறெப்படியும் இருக்க முடியாது. (ப.101)
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் – முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்திஸ்டுகள் மற்றும் பல பழங்குடியினத்தவர்களாகவுள்ள – இந்துக்கள் அல்லாதவர்கள் இந்துயிசத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல், இரண்டாம்தர பிரஜையாக அல்லது அதைவிட மோசமாக வாழ்வதற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கோல்வால்கர் மிகவும் தெளிவாகவே அவர்களை ‘அந்நிய இனத்தினர்’ (‘foreign races’) என்று அழைப்பதன் மூலம், இதில் எவ்விதமான குழப்பத்திற்கும் இடமில்லை.
“…இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் ஒன்று, இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதத்தை மதித்திடவும், பயபக்தியுடன் போற்றித் துதித்திடவும் வேண்டும், இந்து இனத்தையும், கலாச்சாரத்தையும், அதாவது இந்து தேசத்தை வானளாவப் புகழ்வதைத் தவிர வேறெந்த சிந்தனையையும் ஏற்காதிருக்க வேண்டும், தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களை யெல்லாம் துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும், அல்லது எதையும் கோராமல், எவ்விதமான சிறப்புரிமைகளையும் உரிமைபாராட்டாமல், முன்னுரிமை சலுகைகள் எதனையும் கோராமல், ஒரு பிரஜைக்குரிய உரிமைகளைக்கூடக் கோராமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்து கொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் அவர்கள் வேறெந்த விதத்திலும் இருந்துவிடக்கூடாது.” (பக்.104-5)
கோல்வால்கர் 1930களின் பிற்பகுதியில், அடால்ப் ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி ஜெர்மனியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தார்.
நாஜிக்கள் யூதர்கள் நடத்திய விதத்தால் இயற்கையாகவே மிகவும் ஈர்க்கப்பட்டிருந்த கோல்வால்கர், அவர்கள் யூதர்களை நடத்திய விதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு எழுதியதாவது:
“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்றுபோலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.’’(ப.88)
முஸ்லீம்கள் குறித்து ஆர்எஸ்எஸ்-இன் கருத்து என்ன என்பதை இப்போது நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, ஒன்று அவர்கள் இந்துயிசத்தைத் தழுவிட வேண்டும் (“தாய்மதத்திற்குத் திரும்பிட வேண்டும்”) அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதை எதிர்கொள்ள வேண்டும். அதனால்தான் பாஜக தலைவர்கள், தங்கள் மதவெறிக் கருத்துக்களை விமர்சிப்பவர்களை, ‘இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்றும் ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்றும் திரும்பத்திரும்பக் கூறுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மோடி முதலமைச்சராக இருந்தபோது 2002இல் குஜராத்தில் நடைபெற்ற கொலைகளைப் போன்று இந்தியாவின் இதர பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும்போது அவற்றைக் கண்டித்து வாயே திறப்பதில்லை.
ஆர்எஸ்எஸ்-இன் வரையறையின்படி, ‘தேசியவாதம்’ (‘nationalism’) என்பதும், ‘தேசபக்தி’ (‘patriotism’) என்பதும் இந்துயிசத்தைப் புகழ்வது என்பது மட்டுமேயாகும். வேறெந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது தேச விரோதச் செயலே. அவற்றைச் செய்வோர் தேசத்துரோகிகளே (traitors)யாவார்கள்.
இவ்வாறுதான் கோல்வால்கர் கூறுகிறார்:
“தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் `தேசிய’ இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனத்தைப் பெருமைப்படுத்தக்கூடிய விதத்தில், லட்சியத்தை எய்திட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்கள் மட்டுமே செயல் படுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தேசத்தின் லட்சியத்தைக் காட்டிக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும், அல்லது, கருணையான பார்வையுடன் கூறவேண்டுமானால், இடியட்டுகளாக இருக்க வேண்டும்.’’(ப.99-100)
மதத்தின் அடிப்படையிலான அரசு
கோல்வால்கர் சிந்தனைகள் வெளிப்படுத்துவது என்ன? அவை மதத்தின் அடிப்படையில் ஓர் அரசு அமைய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டவைகளேயாகும். அதன் வழிகாட்டும் கொள்கை என்பது சனாதன தர்மமேயாகும். (அதாவது இந்து புராணங்களில் காணப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களேயாகும்.) இவர்கள் அமைக்கவிரும்பும் மத அடிப்படையிலான அரசு எதுபோன்று இருக்கும்? இப்போது சில நாடுகளில் மத வெறியர்களின் தலைமையின்கீழ் நடைபெற்றுவரும் ஆட்சிகளை இதற்கு உதாரணங்களாகக் கூற முடியும். தலிபான் இயக்கத்தினர் நடத்தி வரும் ஆப்கன் நாட்டை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். இதே போன்றே சிரியாவில் சில பகுதிகளில் நடைபெறும் ஐஎஸ்ஐஎஸ் மதவெறியர்களின் ஆட்சியையும், மற்றும் ஈராக்கில் நடைபெறும் ஆட்சியையும் கூற முடியும். இவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்துகிறார்கள். சவுதி அரேபியாவில் நடைபெறும் ஆட்சியும் இதே போன்றதுதான். (இங்கே பெண்கள் தனியாக எங்கும் செல்ல முடியாது. சமீபத்தில்தான் அவர்களுக்கு வாக்குரிமையே அளிக்கப்பட்டது.) ஈரானில் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். பாஸ்தானில் 1978-88க்குப் பின்னர் ஜெனரல் ஜியாவுல்ஹக் ஆட்சிப் பொறுப்பேற்றபின்பு, இஸ்லாம் மதம்தான் வழிகாட்டும் கொள்கையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று மற்றுமொரு மதத்தின் அடிப்படையிலான அரசு என்பது இஸ்ரேல். அங்கேயுள்ள மக்களை விரட்டியடித்துவிட்டு வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் ஹீப்ரு கொள்கைகளின் அடிப்படையிலேயே ஆட்சிபுரிவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவை அனைத்தும் வன்முறை வடிவங்களில் மிகவும் அதிதீவிரமான வடிவங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு இவை தங்கள் மதத்தினருக்கு எதிரானவர்கள் மீது மட்டுமல்ல, தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களையும்கூட வன்முறைரீதியாக நசுக்கிடும் விதத்திலும் ஆட்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளின் அனுபவங்கள் காட்டுவது என்னவென்றால், இவற்றால் தங்கள் சொந்த மதத்தைச் சேர்ந்த மக்களையே தங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமைகள் உள்ளன என்பதேயாகும்.
உதாரணமாக, கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள்தான் இருந்தார்கள். எனினும் அவர்களால் மேற்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, 1971இல் சுதந்திர வங்க தேசத்தை அமைத்தார்கள். உலகில் இந்து நாடு என்று பிரகடனம் செய்யப்பட்ட நேபாளம், அங்கே ஆட்சிசெய்த கொடுங்கோலனுக்கு எதிராக, சுமார் பத்தாண்டு காலம் ஆயுதமேந்தி வீரச் சமர் புரிந்து, அரசாட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, தற்போத ஒரு குடியரசை நிறுவியிருக்கிறார்கள்.
இவ்வாறு உலக அளவிலான அனுபவம் காட்டுவது என்னவென்றால் பன்முகத் தன்மையுள்ள மக்கள் வாழ்கின்ற ஒரு நவீன மயமான நாட்டில் ஆட்சி செய்வதற்கு அடிப்படையாக எந்தவொரு மதமும் இருக்க முடியாது என்பதேயாகும். இந்தியாவில் இந்து அரசு ஒன்றை ஆர்எஸ்எஸ் விரும்புவதாக மிகைப்படுத்திக் கூறுவதாக சிலர் கூறலாம். ஆனால் இதில் எவ்விதப் பிழையும் கிடையாத. இதுபோன்ற ஓர் அரசைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். கோல்வால்கரின் சிந்தனைகள் இதைத்தான் கூறுகின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் வழிகாட்டும் கொள்கைகளாக விளங்குவது கோல்வால்கரின் சிந்தனைகளேயாகும். அதனால்தான், சுதந்திரத்திற்குப்பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசர், நாட்டை இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஆட்சி புரிவதற்குப் பதிலாக, இந்தப் பூமியின் சட்டமாக விளங்கும் மனுஸ்மிருதியையே நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று, கோரியது. (அதன் 1949 நவம்பர் 30 மற்றும் 1950 ஜனவரி 25 இதழ்களைக் காண்க).
மனுஸ்மிருதி என்பது மனு என்னும் முனிவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஓர் இந்து தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற வரையறைகளை வகுத்துத்தந்திருக்கிறது. இதில் பெண்களுக்கு எதிராகவும் தலித்துகளுக்கு எதிராகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஏராளமான விவரங்கள் இருப்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இதன் நகலை எரித்திட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
கோல்வால்கர், ஜனநாயகம் என்பது மேற்கத்தியக் கட்டமைப்பு என்றும், அது இந்தியாவுக்குப் பொருந்தக்கூடியது அல்ல என்றும் கூறுகிறார். இந்து ராஷ்ட்ரம் சுயநலமற்ற மற்றும் சுய அர்ப்பணிப்பு கொண்டோரால் நேர்மையான முறையில் ஆட்சிபுரியப்பட வேண்டும் என்று கோல்வால்கர் எழுதுகிறார். (ஸ்ரீ குருஜி சமாக்ரா, தொகுப்பு 5, பக்.89-90). இந்து ராஷ்ட்ரம் என்பதில் பாசிஸ்ட் சித்தாந்தம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை இவர் மூடிமறைப்பதோடு, பிராமணர்களை உயர்த்திப்பிடிக்கும் வர்ணாச்ரம (அ)தர்மத்தைக் கடைப்பிடித்திட வேண்டும் என்பதையும் மூடி மறைத்துள்ளார். ஆர்எஸ்எஸ் என்னும் பாசிஸ்ட் அமைப்பு இத்தகைய வர்ணாச்ரம முறையில் கட்டுப்பட்டுள்ளதுதான் என்பதை இன்றைக்கும் பலர் அறியாதிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-இல் தேர்தல்கள் கிடையாது. இதன் தலைவர், சர்சங்சலக் (sarsanghchalak) என்பவர், இதிலிருந்து ஓய்வுபெறுபவரால் நியமனம் செய்யப்படுபவரே யாவார். இதுநாள்வரையிலும் இவ்வாறு இதன் தலைவராக இருந்த அனைவருமே பிராமணர்கள்தான். அவரின்கீழ் மாநில மற்றும் பிராந்த மட்டத்திலான தலைவர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பின்கீழ் ராணுவ அணிவகுப்புப் பயிற்சிகள் உண்டு, சிறப்பு வணக்கம் அளிக்கும் நடைமுறை உண்டு, சீருடை உண்டு, ‘தேசப்பற்று’ பாடல்கள் உண்டு. இவை அனைத்துமே நாஜிக்கள் பின்பற்றிய நடைமுறைகளையொட்டியே இருப்பதைக் காண முடியும். இவர்கள் அணியும் காக்கி கால் சட்டைகள் மற்றும் கறுப்பு குல்லாய் உட்பட நாஜிக்கள் பாணியிலேயே அமைந்திருக்கின்றன.
மக்கள் குறித்த கண்ணோட்டம் என்ன?
இந்து ராஷ்ட்ரத்தின் பார்வையில், அவர்கள் மக்களை எப்படிப் பொருத்துகிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? கோல்வால்கர் கூறியிருப்பதுபோல், ஆர்எஸ்எஸ்-இன் கூற்றுப்படி, வாழ்க்கையின் குறிக்கோள் என்பது தங்கள் மதத்தில் தனக்கு இடப்பட்டுள்ள கட்டளைப்படி வாழ்ந்து, பல்வேறு பிறவிகள் எடுத்து, பின்னர் இறுதியாக பிறவியே இல்லாத நிலையை எட்டியபின் மோட்சத்திற்குச் செல்வதாகும். இப்பூலகில் சுகபோகங்களில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மிகவும் விரிவான அளவில் கண்டிக்கிறார்கள். அவற்றை அவர் அவசியமான பாவங்கள் (necessary evils) எனவும் அவற்றை ஒருவர் பொருட்படுத்தக்கூடாது என்றும் கூறுகிறார். மக்களின் கடும் வறுமை, வேலையின்மை, பிணி, அறியாமை மற்றும் ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்கள் குறித்தும் தனிநபர் எவரும் கவலைப்பட வேண்டாம், அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்பதே கோல்வால்கரின் கூற்றாகும். இந்து ராஷ்ட்ரம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையின் விவரங்கள் குறித்து இவர்கள் கூறுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதாகும்.
கோல்வால்கர் கனரகத் தொழில்மயத்திற்கு எதிரானவர் (தொகுதி 9, ப.59). கிராமங்கள் சுயசார்புடையவைகளாக மாற வேண்டும் என்றே விரும்புகிறார் (தொகுதி 5, பக்.13-14). உற்பத்தியைப் பெருக்குவதற்கு மாட்டு சாணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் (தொகுதி 5, பக்.65-68). வறுமை குறித்தும் வழக்கம்போல் கண்ணீர் விடுகிறார். அத்துடன் அதனை ஒழித்தக்கட்டுவதற்காக முழக்கம் எழுப்புகிறவர்களையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார். பின்னர் அவர் வறுமையை ஒழிப்பதற்காக முன்வைக்கும் தீர்வு என்னவென்றால், ஒவ்வொரு இந்துவும் கொஞ்சம் கையளவு தானியம் எடுத்து ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கும், பசியால் வாடுகிறவர்களுக்கும் அளித்திட வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்(தொகுதி 5, ப.92)! ஆனால் தீர்வு என்ன?
வறுமையை ஒழிக்க ஒரே வழி மக்கள் சுயநலத்துடன் வாழ்வதை கைவிட்டு, மிகவும் நேர்மையுடன் கடினமாக உழைத்து தேசிய வளங்களை அதிகரித்திட வேண்டும் என்று எழுதுகிறார். (தொகுதி 5, பக்.263-265). இதுதான் மாபெரும் இந்து ராஷ்ட்ரம் இவ்வாறான அடித்தளத்தின்மீதுதான் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் அதன்மூலம் ஒட்டுமொத்த உலகத்திற்கும் நம்பிக்கை அளித்திடும் கலங்கரை விளக்கமாக மாற வேண்டும் என்றும் கூறுகிறார்!
இதன் பொருள் என்ன? இதன் பொருள் என்னவென்றால் உழைக்கும் மக்கள் அதிக ஊதியமோ அல்லது வசதிகளோ எதுவும் கோராது, தேசத்திற்காக உழைத்திட வேண்டும் என்பதும், அவர்களின் உடனடித் தேவைகளுக்கு குறைந்தபட்சம் எந்த அளவுக்குத் தேவையோ அதை மட்டுமே அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுமேயாகும். அவர்களின் உழைப்பால் உருவாகும் செல்வம் அவர்களைச் சுற்றி பரந்து பரவிடும். ஆனால் அவர்கள் அதனைத் துய்த்திட முடியாது.
நிலம், எந்திரங்கள் மற்றும் மூலதனம் போன்ற உற்பத்திச் சாதனங்களை ஏகபோகமாகப் பெற்றிருக்கக்கூடிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் குறித்து கோல்வால்கர் கூறுவது என்ன? இவர்களிடம் ‘மன மாறுதலை’ (‘change of heart’) எதிர்பார்த்திட வேண்டும் என்று கோல்வால்கர் பரிந்துரைக்கிறார். அப்போதுதான் அவர்கள் செல்வத்தை சேகரிப்பதை நிறுத்திக்கொண்டு, அதனைப் பகிரத் தொடங்குவார்களாம் (தொகுதி 2, பக்.100-101)! இது முதலாளித்துவம் மற்றும் சுரண்டலுக்கு ஆதரவான ஒரு காந்தியபாணி தீர்வாகும். கோல்வால்கர் இதனை ஓர் ‘இந்தியனின்’ தீர்வு என்கிறார். உண்மையில் இது ஓர் இந்தியனின் தீர்வும் கிடையாது, இரக்கமற்ற முறையில் இடைவிடாது நடந்துகொண்டிருக்கும் வர்க்கச் சுரண்டலுக்குத் தீர்வும் ஆகாது. அனைத்து மனித சமூகங்களிலுமே வர்க்கச் சுரண்டலின் சுபாவம் இப்படித்தான் இருக்கும்.
ஆர்எஸ்எஸ் இயக்கம், மாபெரும் இந்துயிசத்தின் அடிப்படையில் அமைக்கவிரும்பும் இந்து ராஷ்ட்ரத்தில் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கஜானாக்களை நிரப்பிட, கோடானுகோடி இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஒட்டச் சுரண்டப்படும் என்பதே பொருளாதாரரீதியாக இவர்களின் எதார்த்த நடவடிக்கைகளாகும்.
இவர்கள், மக்களைக் குருட்டுத்தனமான முறையில் மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பது, அவர்களை முட்டாளாக்கும் ஒரு கருவியேயாகும். இவ்வாறு மதவெறி நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்திடும் அதே சமயத்தில் அவர்கள், பொருளாதார மற்றும் சமூகத்தில் மேட்டுக்குடியினராக இருப்பவர்களை, நிலவுடைமையாளர்களையும் தொழில் உடைமையாளர்களையும், உயர் சாதியினரையும், தங்களைப் பின்பற்றுபவர்களையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருப்பதற்காகவும், இவர்களின் லாபங்களை அறுவடை செய்வதற்காகவும் எப்போதும் தங்கள் பாசிஸ்ட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
ஆர்எஸ்எஸ் வெற்றி பெற முடியுமா?
இத்தகைய மதத்தின் அடிப்படையிலான பயங்கரமான பார்வை இவர்களுடைய அறிவியலற்ற, பண்டைக்கால பத்தாம்பசலித்தனமான சிந்தனைகளிலிருந்து உதித்தவைகளாகும். இதனை அப்படியே இந்திய மக்கள் மத்தியில் எடுத்துச்சென்றால் அவர்கள் அதனை முற்றிலுமாக நிராகரித்திடுவார்கள் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். பல பத்தாண்டுகளுக்கு முன் உயர்சாதியினர் நாக்பூரில் அமர்ந்து பல பத்தாண்டுகளுக்கு முன் சிந்தித்திட்ட உயர்சாதியினரின் சிந்தனைகளையெல்லாம் தாண்டி இந்திய சமூகமும், உலக சமூகமும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டது. இந்திய மக்கள் மிகவும் வலுவாக ஆட்சி புரிந்துவந்த காலனியாதிக்க வெள்ளையர்களையே எதிர்த்துப் போராடி வெற்றிகரமாகத் தூக்கி எறிந்தவர்களாவார்கள். இதில் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டு, சாதிகளுக்கு அப்பாற்பட்டு, இன மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று போராடியிருக்கிறார்கள். பகுத்தறிவின் அடிப்படையில் அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு நின்றுதான் ஒரு சமத்துவ சமுதாயத்தை அமைத்திட முடியும் என்பது உண்மை என்ற போதிலும், அதனை இன்னமும் இந்தியாவில் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் சுதந்திர இந்தியாவில் உள்ள ஆளும் வர்க்கங்கள் மக்கள் மத்தியில் பிளவு விஷத்தைத் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனைவரின் விடுதலைக்குமான பாதை என்பது மதத்தின் அடிப்படையில் இருக்க முடியாது என்பதை மக்கள் தங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தெரிந்துகொண்டு வருகிறார்கள். எனவேதான், ஓர் இந்து முதலாளி தன்னைக் கொடூரமான முறையில் சுரண்டினாலும், தன்னை அவமானப்படுத்தினாலும் அதனை எந்தவொரு இந்து தொழிலாளியும் பொறுத்துக்கொள்ள மாட்டான். இந்து நிலப்பிரபுக்களால் பாலியன் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுவதையோ அல்லது கொல்லப்படுவதையோ எந்தவொரு தலித் பெண்மணியும் பொறுத்துக்கொள்ள மாட்டாள்.
எனவேதான் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகள் அவிழ்த்துவிடும் சரடுகளையெல்லாம் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, முறியடித்திட வேண்டும். ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங்கும் இயக்கங்களும் இந்து ராஷ்ட்ரம் என்னும் தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக, மக்களைக் கூறுபடுத்திடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்திடும். மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் மதவெறி விஷத்தை விதைத்துக்கொண்டே இருந்திடும், இவற்றின் மூலம் மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்திட முயற்சித்துக்கொண்டே இருக்கும். இத்தகைய இவர்களின் இழிநடவடிக்கைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று போராடி, முறியடித்திட வேண்டும். இதில் ஏராளமானவர்கள் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்.
இப்போது ஒன்றியத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவதையொட்டி இவர்களின் இத்தகைய இழிநடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, சமூகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் முடமாக்கி, தங்களுக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையை உருவாக்கி, எப்படியாவது ஆழமாக தங்கள் விஷ விதைகளை வேரூன்ற வைத்திட முயற்சிகளை மேற்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதனை வெற்றி பெறச் செய்திடக் கூடாது.
– சவெரா
(தமிழில்: ச.வீரமணி)