ஆர்எஸ்எஸ்-இன் இலட்சியம்: இந்து ராஷ்ட்ரம் கட்டுரை- சவெரா (தமிழில்: ச.வீரமணி)
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மோடிக்கு வாக்களித்த இந்தியர்களில் அநேகமாக எவருக்குமே தாங்கள் ஆர்எஸ்எஸ் என்னும் ‘ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்’ இயக்கத்திற்குத்தான் உண்மையில் வாக்களித்திருக்கிறோம் என்று தெரியாது. மோடி அந்த இயக்கத்தின் பிரச்சாரகர் என்னும் முழு நேர ஊழியராக கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும், மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களில் பெரும்பாலானவர்களும் நீண்டகாலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இருந்துவருபவர்களேயாவர். பிரதமர் மோடியிலிருந்து அவரின்கீழ் பணிபுரியும் அத்தனை பேர்களுமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தத்தாலும், சிந்தனைகளாலும் பயிற்றுவிக்கப் பட்டவர்களாவார்கள். ஆர்எஸ்எஸ் கடந்த 90 ஆண்டு காலமாக எதனைப் பிரச்சாரம் செய்து வந்ததோ, அதனை நாடு முழுதும் தங்களின் வன்முறை நடவடிக்கைகளின் மூலமாக எடுத்துச் செல்லும் வேலைகளையே இதன்கீழ் இயங்கிடும் டஜன் கணக்கான அமைப்புகள் துணிச்சலுடன் செய்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய இவர்களின் பிரச்சாரம் இந்திய சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே சண்டை மற்றும் அவநம்பிக்கையை உருவாக்கிடும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் ஒற்றுமையைக் கிழித்தெறிந்து, நாட்டை மத்தியகால இருள்சூழ்ந்த காலத்திற்கு இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.
ஆனாலும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கூட்டாளிகளும் விரும்புவது என்ன? எந்தவிதமான இந்தியாவை அவர்கள் கட்டி எழுப்பு விரும்புகிறார்கள்? எந்தவிதமான சமூகத்தை அவர்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் மனதில் கொண்டிருக்கும் சமூகம் ஆபத்தானது என்றும் நாட்டையே எரித்துச் சாம்பலாக்கிடும் என்றும் ஏன் கூறுகிறோம்? இதனைப் புரிந்துகொள்ளச் சற்றே முயல்வோம்.
இவர்கள் கூறும் ‘இந்து’ தேசம்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இறுதி இலட்சியம் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் ‘இந்து தேசத்தை’ அமைத்திட வேண்டும் என்பதேயாகும். ‘இந்து ராஷ்ட்ரம்’ என்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ்-இன் தொலைநோக்குப் பார்வை என்ன என்பது குறித்து இவ்வியக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவரும் இவ்வியக்கத்தின் சித்தாந்தத்திற்கு மிகவும் முக்கியமாக விளங்குபவருமான எம்.எஸ். கோல்வால்கர், இது தொடர்பாக ஏராளமான விவரங்களைத் தன்னுடைய “நாம் – அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம்” (“We-or Our Nationhoold Defined”) என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். மோடி, இவரை ஓர் ஆன்மீக ஜாம்பவான் என்றும் தொலைநோக்குப் பார்வையுள்ளவர் என்றும் சித்தரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கோல்வால்கர், அனைவரும் அறிந்துள்ள அறிவியல் சாட்சியங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, இந்த பூமியில் உள்ள இந்த ‘தேசத்தில்’ நாம் பல லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம் என்கிறார். இந்த பூமி, பன்முகத்தன்மை கொண்டவர்கள், ஆன்மீக மேதைகள் மற்றும் தெய்வீகத்தன்மை படைத்தவர்கள் வாழ்ந்த பூமி. பின்னர் இந்துக்கள் திருப்தி மனப்பான்மையுள்ளவர்களாகவும், உணர்வு மங்கியவர்களாகவும் மாறிப்போனார்கள். இம்மாபெரும் பூமி, “கடந்த ஆயிரம் ஆண்டுகளில்” “கொலைபாதகக் கொள்ளையர்களின் கூடாரமாக” மாறிப்போனது. இது, இந்துக்களின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றது. இவ்வாறு கூறுவதன்மூலம் கோல்வால்கர், முஸ்லீம்களைத்தான் இவ்வாறு இந்துக்கள் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் என்று குறைகூறுவது தெளிவாகவே தெரிகிறது. இப்போது நம்முன் உள்ள கடமை மீளவும் இந்து தேசத்தைக் கட்டி எழுப்புவதும், மீளவும் நிறுவுவதுமேயாகும் என்று கோல்வால்கர் கூறுகிறார்.
இந்து ராஷ்ட்ரத்தில் வரையறுக்கப்பட்டுள்ள முதல் குணாம்சம் என்பது, இந்துக்கள் மட்டுமே அதன் அங்கமாக இருக்க முடியும் என்பதாகும்.
“இந்த நாட்டில், இந்துஸ்தான், அதன் இந்து மதம், இந்து கலாச்சாரம் மற்றும் (சமஸ்கிருதம் மற்றும் அதன் தொடர்புனுள்ள இயற்கையான குடும்பத்தைச்சேர்ந்த) இந்து மொழி ஆகியவற்றுடனான இந்து இனம் தேசம் என்பதன் கருத்தியலை முழுமையாக்குகிறது. அதாவது, இந்துஸ்தான் புராதன இந்து தேசமாக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது மற்றும் தொடர்ந்து இருந்து வரவேண்டியதுமாயிருக்கிறது. இதனுடன் சேர்ந்திராத எவராக இருந்தாலும், அதாவது இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழியுடன் சேர்ந்திராத எவராக இருந்தாலும், ‘இயற்கையாகவே’ அவர்கள் உண்மையான தேசிய வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக வீழ்ந்துவிடுவார்கள்.”(ப.99)
இவ்வாறு தாங்கள்தான் மற்ற இனத்தைவிட மேலாதிக்கவாதிகள் என்று பொருள்படக்கூடிய கோல்வால்கரின் இந்தக் கூற்றானது, மற்ற மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதை மறைக்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்களுடைய சமஸ்கிருத பிராமணியக் கண்ணோட்டத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது. இவர்களின் கூற்றுப்படி, இந்து ராஷ்ட்ரம் என்பது சமஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுபவர்கள் மட்டுமே. இவ்வாறு இவர்களின் இந்து ராஷ்ட்ரம் திராவிட மொழிக் குடும்பத்தை ஒதுக்கிவிடுகிறது மற்றும் பழங்குடியினர் மொழிகள் பலவற்றையும் ஒதுக்கிவிடுகிறது.
இதன் காரணமாகத்தான் பாஜக மற்றும் அதன் முந்தைய பெயரில் அமைந்திருந்த ஜன சங்கம் உட்பட சங் பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் இந்தியைத் திணிப்பதற்குத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில் இவர்களின் பார்வையில் இந்து அல்லாத அனைவரும் தேச வாழ்க்கைக்கு வெளியே நிறுத்தப்படுவதாகும். இதனைப் பின்வரும் பத்திகளில் கோல்வால்கர் நேரடியாகவே முன்வைக்கிறார்:
“ஆரம்பத்திலேயே ஒன்றை நாம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, ‘தேசம்’ என்கிற வரையறை குறித்து நாம் குறிப்பிட்டுள்ள ஐந்து நிபந்தனைகளுக்குள், வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து, நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டு, இந்த தேசத்தின் இனத்துடன் முழுமையாக இணையாதவரை, அவர்கள் தேசிய வாழ்வில் இடம்பெற முடியாது. ஆயினும், அவர்கள் தங்களுடைய இன, மத மற்றும் கலாச்சார வேற்றுமைகளையே பின்பற்றுவார்களெனில், அவர்கள் அந்நியர்களாக (foreigners)க் கருதப்படுவதைத்தவிர, வேறெப்படியும் இருக்க முடியாது. (ப.101)
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் – முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்திஸ்டுகள் மற்றும் பல பழங்குடியினத்தவர்களாகவுள்ள – இந்துக்கள் அல்லாதவர்கள் இந்துயிசத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல், இரண்டாம்தர பிரஜையாக அல்லது அதைவிட மோசமாக வாழ்வதற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கோல்வால்கர் மிகவும் தெளிவாகவே அவர்களை ‘அந்நிய இனத்தினர்’ (‘foreign races’) என்று அழைப்பதன் மூலம், இதில் எவ்விதமான குழப்பத்திற்கும் இடமில்லை.
“…இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் ஒன்று, இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதத்தை மதித்திடவும், பயபக்தியுடன் போற்றித் துதித்திடவும் வேண்டும், இந்து இனத்தையும், கலாச்சாரத்தையும், அதாவது இந்து தேசத்தை வானளாவப் புகழ்வதைத் தவிர வேறெந்த சிந்தனையையும் ஏற்காதிருக்க வேண்டும், தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களை யெல்லாம் துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும், அல்லது எதையும் கோராமல், எவ்விதமான சிறப்புரிமைகளையும் உரிமைபாராட்டாமல், முன்னுரிமை சலுகைகள் எதனையும் கோராமல், ஒரு பிரஜைக்குரிய உரிமைகளைக்கூடக் கோராமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்து கொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் அவர்கள் வேறெந்த விதத்திலும் இருந்துவிடக்கூடாது.” (பக்.104-5)
கோல்வால்கர் 1930களின் பிற்பகுதியில், அடால்ப் ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி ஜெர்மனியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தார்.
நாஜிக்கள் யூதர்கள் நடத்திய விதத்தால் இயற்கையாகவே மிகவும் ஈர்க்கப்பட்டிருந்த கோல்வால்கர், அவர்கள் யூதர்களை நடத்திய விதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு எழுதியதாவது:
“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்றுபோலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.’’(ப.88)
முஸ்லீம்கள் குறித்து ஆர்எஸ்எஸ்-இன் கருத்து என்ன என்பதை இப்போது நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, ஒன்று அவர்கள் இந்துயிசத்தைத் தழுவிட வேண்டும் (“தாய்மதத்திற்குத் திரும்பிட வேண்டும்”) அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதை எதிர்கொள்ள வேண்டும். அதனால்தான் பாஜக தலைவர்கள், தங்கள் மதவெறிக் கருத்துக்களை விமர்சிப்பவர்களை, ‘இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்றும் ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்றும் திரும்பத்திரும்பக் கூறுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மோடி முதலமைச்சராக இருந்தபோது 2002இல் குஜராத்தில் நடைபெற்ற கொலைகளைப் போன்று இந்தியாவின் இதர பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும்போது அவற்றைக் கண்டித்து வாயே திறப்பதில்லை.
ஆர்எஸ்எஸ்-இன் வரையறையின்படி, ‘தேசியவாதம்’ (‘nationalism’) என்பதும், ‘தேசபக்தி’ (‘patriotism’) என்பதும் இந்துயிசத்தைப் புகழ்வது என்பது மட்டுமேயாகும். வேறெந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது தேச விரோதச் செயலே. அவற்றைச் செய்வோர் தேசத்துரோகிகளே (traitors)யாவார்கள்.
இவ்வாறுதான் கோல்வால்கர் கூறுகிறார்:
“தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் `தேசிய’ இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனத்தைப் பெருமைப்படுத்தக்கூடிய விதத்தில், லட்சியத்தை எய்திட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்கள் மட்டுமே செயல் படுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தேசத்தின் லட்சியத்தைக் காட்டிக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும், அல்லது, கருணையான பார்வையுடன் கூறவேண்டுமானால், இடியட்டுகளாக இருக்க வேண்டும்.’’(ப.99-100)
மதத்தின் அடிப்படையிலான அரசு
கோல்வால்கர் சிந்தனைகள் வெளிப்படுத்துவது என்ன? அவை மதத்தின் அடிப்படையில் ஓர் அரசு அமைய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டவைகளேயாகும். அதன் வழிகாட்டும் கொள்கை என்பது சனாதன தர்மமேயாகும். (அதாவது இந்து புராணங்களில் காணப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களேயாகும்.) இவர்கள் அமைக்கவிரும்பும் மத அடிப்படையிலான அரசு எதுபோன்று இருக்கும்? இப்போது சில நாடுகளில் மத வெறியர்களின் தலைமையின்கீழ் நடைபெற்றுவரும் ஆட்சிகளை இதற்கு உதாரணங்களாகக் கூற முடியும். தலிபான் இயக்கத்தினர் நடத்தி வரும் ஆப்கன் நாட்டை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். இதே போன்றே சிரியாவில் சில பகுதிகளில் நடைபெறும் ஐஎஸ்ஐஎஸ் மதவெறியர்களின் ஆட்சியையும், மற்றும் ஈராக்கில் நடைபெறும் ஆட்சியையும் கூற முடியும். இவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்துகிறார்கள். சவுதி அரேபியாவில் நடைபெறும் ஆட்சியும் இதே போன்றதுதான். (இங்கே பெண்கள் தனியாக எங்கும் செல்ல முடியாது. சமீபத்தில்தான் அவர்களுக்கு வாக்குரிமையே அளிக்கப்பட்டது.) ஈரானில் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். பாஸ்தானில் 1978-88க்குப் பின்னர் ஜெனரல் ஜியாவுல்ஹக் ஆட்சிப் பொறுப்பேற்றபின்பு, இஸ்லாம் மதம்தான் வழிகாட்டும் கொள்கையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று மற்றுமொரு மதத்தின் அடிப்படையிலான அரசு என்பது இஸ்ரேல். அங்கேயுள்ள மக்களை விரட்டியடித்துவிட்டு வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் ஹீப்ரு கொள்கைகளின் அடிப்படையிலேயே ஆட்சிபுரிவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவை அனைத்தும் வன்முறை வடிவங்களில் மிகவும் அதிதீவிரமான வடிவங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு இவை தங்கள் மதத்தினருக்கு எதிரானவர்கள் மீது மட்டுமல்ல, தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களையும்கூட வன்முறைரீதியாக நசுக்கிடும் விதத்திலும் ஆட்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளின் அனுபவங்கள் காட்டுவது என்னவென்றால், இவற்றால் தங்கள் சொந்த மதத்தைச் சேர்ந்த மக்களையே தங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமைகள் உள்ளன என்பதேயாகும்.
உதாரணமாக, கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள்தான் இருந்தார்கள். எனினும் அவர்களால் மேற்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, 1971இல் சுதந்திர வங்க தேசத்தை அமைத்தார்கள். உலகில் இந்து நாடு என்று பிரகடனம் செய்யப்பட்ட நேபாளம், அங்கே ஆட்சிசெய்த கொடுங்கோலனுக்கு எதிராக, சுமார் பத்தாண்டு காலம் ஆயுதமேந்தி வீரச் சமர் புரிந்து, அரசாட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, தற்போத ஒரு குடியரசை நிறுவியிருக்கிறார்கள்.
இவ்வாறு உலக அளவிலான அனுபவம் காட்டுவது என்னவென்றால் பன்முகத் தன்மையுள்ள மக்கள் வாழ்கின்ற ஒரு நவீன மயமான நாட்டில் ஆட்சி செய்வதற்கு அடிப்படையாக எந்தவொரு மதமும் இருக்க முடியாது என்பதேயாகும். இந்தியாவில் இந்து அரசு ஒன்றை ஆர்எஸ்எஸ் விரும்புவதாக மிகைப்படுத்திக் கூறுவதாக சிலர் கூறலாம். ஆனால் இதில் எவ்விதப் பிழையும் கிடையாத. இதுபோன்ற ஓர் அரசைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். கோல்வால்கரின் சிந்தனைகள் இதைத்தான் கூறுகின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் வழிகாட்டும் கொள்கைகளாக விளங்குவது கோல்வால்கரின் சிந்தனைகளேயாகும். அதனால்தான், சுதந்திரத்திற்குப்பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசர், நாட்டை இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஆட்சி புரிவதற்குப் பதிலாக, இந்தப் பூமியின் சட்டமாக விளங்கும் மனுஸ்மிருதியையே நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று, கோரியது. (அதன் 1949 நவம்பர் 30 மற்றும் 1950 ஜனவரி 25 இதழ்களைக் காண்க).
மனுஸ்மிருதி என்பது மனு என்னும் முனிவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஓர் இந்து தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற வரையறைகளை வகுத்துத்தந்திருக்கிறது. இதில் பெண்களுக்கு எதிராகவும் தலித்துகளுக்கு எதிராகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஏராளமான விவரங்கள் இருப்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இதன் நகலை எரித்திட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
கோல்வால்கர், ஜனநாயகம் என்பது மேற்கத்தியக் கட்டமைப்பு என்றும், அது இந்தியாவுக்குப் பொருந்தக்கூடியது அல்ல என்றும் கூறுகிறார். இந்து ராஷ்ட்ரம் சுயநலமற்ற மற்றும் சுய அர்ப்பணிப்பு கொண்டோரால் நேர்மையான முறையில் ஆட்சிபுரியப்பட வேண்டும் என்று கோல்வால்கர் எழுதுகிறார். (ஸ்ரீ குருஜி சமாக்ரா, தொகுப்பு 5, பக்.89-90). இந்து ராஷ்ட்ரம் என்பதில் பாசிஸ்ட் சித்தாந்தம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை இவர் மூடிமறைப்பதோடு, பிராமணர்களை உயர்த்திப்பிடிக்கும் வர்ணாச்ரம (அ)தர்மத்தைக் கடைப்பிடித்திட வேண்டும் என்பதையும் மூடி மறைத்துள்ளார். ஆர்எஸ்எஸ் என்னும் பாசிஸ்ட் அமைப்பு இத்தகைய வர்ணாச்ரம முறையில் கட்டுப்பட்டுள்ளதுதான் என்பதை இன்றைக்கும் பலர் அறியாதிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-இல் தேர்தல்கள் கிடையாது. இதன் தலைவர், சர்சங்சலக் (sarsanghchalak) என்பவர், இதிலிருந்து ஓய்வுபெறுபவரால் நியமனம் செய்யப்படுபவரே யாவார். இதுநாள்வரையிலும் இவ்வாறு இதன் தலைவராக இருந்த அனைவருமே பிராமணர்கள்தான். அவரின்கீழ் மாநில மற்றும் பிராந்த மட்டத்திலான தலைவர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பின்கீழ் ராணுவ அணிவகுப்புப் பயிற்சிகள் உண்டு, சிறப்பு வணக்கம் அளிக்கும் நடைமுறை உண்டு, சீருடை உண்டு, ‘தேசப்பற்று’ பாடல்கள் உண்டு. இவை அனைத்துமே நாஜிக்கள் பின்பற்றிய நடைமுறைகளையொட்டியே இருப்பதைக் காண முடியும். இவர்கள் அணியும் காக்கி கால் சட்டைகள் மற்றும் கறுப்பு குல்லாய் உட்பட நாஜிக்கள் பாணியிலேயே அமைந்திருக்கின்றன.
மக்கள் குறித்த கண்ணோட்டம் என்ன?
இந்து ராஷ்ட்ரத்தின் பார்வையில், அவர்கள் மக்களை எப்படிப் பொருத்துகிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? கோல்வால்கர் கூறியிருப்பதுபோல், ஆர்எஸ்எஸ்-இன் கூற்றுப்படி, வாழ்க்கையின் குறிக்கோள் என்பது தங்கள் மதத்தில் தனக்கு இடப்பட்டுள்ள கட்டளைப்படி வாழ்ந்து, பல்வேறு பிறவிகள் எடுத்து, பின்னர் இறுதியாக பிறவியே இல்லாத நிலையை எட்டியபின் மோட்சத்திற்குச் செல்வதாகும். இப்பூலகில் சுகபோகங்களில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மிகவும் விரிவான அளவில் கண்டிக்கிறார்கள். அவற்றை அவர் அவசியமான பாவங்கள் (necessary evils) எனவும் அவற்றை ஒருவர் பொருட்படுத்தக்கூடாது என்றும் கூறுகிறார். மக்களின் கடும் வறுமை, வேலையின்மை, பிணி, அறியாமை மற்றும் ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்கள் குறித்தும் தனிநபர் எவரும் கவலைப்பட வேண்டாம், அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்பதே கோல்வால்கரின் கூற்றாகும். இந்து ராஷ்ட்ரம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையின் விவரங்கள் குறித்து இவர்கள் கூறுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதாகும்.
கோல்வால்கர் கனரகத் தொழில்மயத்திற்கு எதிரானவர் (தொகுதி 9, ப.59). கிராமங்கள் சுயசார்புடையவைகளாக மாற வேண்டும் என்றே விரும்புகிறார் (தொகுதி 5, பக்.13-14). உற்பத்தியைப் பெருக்குவதற்கு மாட்டு சாணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் (தொகுதி 5, பக்.65-68). வறுமை குறித்தும் வழக்கம்போல் கண்ணீர் விடுகிறார். அத்துடன் அதனை ஒழித்தக்கட்டுவதற்காக முழக்கம் எழுப்புகிறவர்களையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார். பின்னர் அவர் வறுமையை ஒழிப்பதற்காக முன்வைக்கும் தீர்வு என்னவென்றால், ஒவ்வொரு இந்துவும் கொஞ்சம் கையளவு தானியம் எடுத்து ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கும், பசியால் வாடுகிறவர்களுக்கும் அளித்திட வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்(தொகுதி 5, ப.92)! ஆனால் தீர்வு என்ன?
வறுமையை ஒழிக்க ஒரே வழி மக்கள் சுயநலத்துடன் வாழ்வதை கைவிட்டு, மிகவும் நேர்மையுடன் கடினமாக உழைத்து தேசிய வளங்களை அதிகரித்திட வேண்டும் என்று எழுதுகிறார். (தொகுதி 5, பக்.263-265). இதுதான் மாபெரும் இந்து ராஷ்ட்ரம் இவ்வாறான அடித்தளத்தின்மீதுதான் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் அதன்மூலம் ஒட்டுமொத்த உலகத்திற்கும் நம்பிக்கை அளித்திடும் கலங்கரை விளக்கமாக மாற வேண்டும் என்றும் கூறுகிறார்!
இதன் பொருள் என்ன? இதன் பொருள் என்னவென்றால் உழைக்கும் மக்கள் அதிக ஊதியமோ அல்லது வசதிகளோ எதுவும் கோராது, தேசத்திற்காக உழைத்திட வேண்டும் என்பதும், அவர்களின் உடனடித் தேவைகளுக்கு குறைந்தபட்சம் எந்த அளவுக்குத் தேவையோ அதை மட்டுமே அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுமேயாகும். அவர்களின் உழைப்பால் உருவாகும் செல்வம் அவர்களைச் சுற்றி பரந்து பரவிடும். ஆனால் அவர்கள் அதனைத் துய்த்திட முடியாது.
நிலம், எந்திரங்கள் மற்றும் மூலதனம் போன்ற உற்பத்திச் சாதனங்களை ஏகபோகமாகப் பெற்றிருக்கக்கூடிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் குறித்து கோல்வால்கர் கூறுவது என்ன? இவர்களிடம் ‘மன மாறுதலை’ (‘change of heart’) எதிர்பார்த்திட வேண்டும் என்று கோல்வால்கர் பரிந்துரைக்கிறார். அப்போதுதான் அவர்கள் செல்வத்தை சேகரிப்பதை நிறுத்திக்கொண்டு, அதனைப் பகிரத் தொடங்குவார்களாம் (தொகுதி 2, பக்.100-101)! இது முதலாளித்துவம் மற்றும் சுரண்டலுக்கு ஆதரவான ஒரு காந்தியபாணி தீர்வாகும். கோல்வால்கர் இதனை ஓர் ‘இந்தியனின்’ தீர்வு என்கிறார். உண்மையில் இது ஓர் இந்தியனின் தீர்வும் கிடையாது, இரக்கமற்ற முறையில் இடைவிடாது நடந்துகொண்டிருக்கும் வர்க்கச் சுரண்டலுக்குத் தீர்வும் ஆகாது. அனைத்து மனித சமூகங்களிலுமே வர்க்கச் சுரண்டலின் சுபாவம் இப்படித்தான் இருக்கும்.
ஆர்எஸ்எஸ் இயக்கம், மாபெரும் இந்துயிசத்தின் அடிப்படையில் அமைக்கவிரும்பும் இந்து ராஷ்ட்ரத்தில் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கஜானாக்களை நிரப்பிட, கோடானுகோடி இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஒட்டச் சுரண்டப்படும் என்பதே பொருளாதாரரீதியாக இவர்களின் எதார்த்த நடவடிக்கைகளாகும்.
இவர்கள், மக்களைக் குருட்டுத்தனமான முறையில் மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பது, அவர்களை முட்டாளாக்கும் ஒரு கருவியேயாகும். இவ்வாறு மதவெறி நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்திடும் அதே சமயத்தில் அவர்கள், பொருளாதார மற்றும் சமூகத்தில் மேட்டுக்குடியினராக இருப்பவர்களை, நிலவுடைமையாளர்களையும் தொழில் உடைமையாளர்களையும், உயர் சாதியினரையும், தங்களைப் பின்பற்றுபவர்களையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருப்பதற்காகவும், இவர்களின் லாபங்களை அறுவடை செய்வதற்காகவும் எப்போதும் தங்கள் பாசிஸ்ட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
ஆர்எஸ்எஸ் வெற்றி பெற முடியுமா?
இத்தகைய மதத்தின் அடிப்படையிலான பயங்கரமான பார்வை இவர்களுடைய அறிவியலற்ற, பண்டைக்கால பத்தாம்பசலித்தனமான சிந்தனைகளிலிருந்து உதித்தவைகளாகும். இதனை அப்படியே இந்திய மக்கள் மத்தியில் எடுத்துச்சென்றால் அவர்கள் அதனை முற்றிலுமாக நிராகரித்திடுவார்கள் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். பல பத்தாண்டுகளுக்கு முன் உயர்சாதியினர் நாக்பூரில் அமர்ந்து பல பத்தாண்டுகளுக்கு முன் சிந்தித்திட்ட உயர்சாதியினரின் சிந்தனைகளையெல்லாம் தாண்டி இந்திய சமூகமும், உலக சமூகமும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டது. இந்திய மக்கள் மிகவும் வலுவாக ஆட்சி புரிந்துவந்த காலனியாதிக்க வெள்ளையர்களையே எதிர்த்துப் போராடி வெற்றிகரமாகத் தூக்கி எறிந்தவர்களாவார்கள். இதில் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டு, சாதிகளுக்கு அப்பாற்பட்டு, இன மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று போராடியிருக்கிறார்கள். பகுத்தறிவின் அடிப்படையில் அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு நின்றுதான் ஒரு சமத்துவ சமுதாயத்தை அமைத்திட முடியும் என்பது உண்மை என்ற போதிலும், அதனை இன்னமும் இந்தியாவில் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் சுதந்திர இந்தியாவில் உள்ள ஆளும் வர்க்கங்கள் மக்கள் மத்தியில் பிளவு விஷத்தைத் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனைவரின் விடுதலைக்குமான பாதை என்பது மதத்தின் அடிப்படையில் இருக்க முடியாது என்பதை மக்கள் தங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தெரிந்துகொண்டு வருகிறார்கள். எனவேதான், ஓர் இந்து முதலாளி தன்னைக் கொடூரமான முறையில் சுரண்டினாலும், தன்னை அவமானப்படுத்தினாலும் அதனை எந்தவொரு இந்து தொழிலாளியும் பொறுத்துக்கொள்ள மாட்டான். இந்து நிலப்பிரபுக்களால் பாலியன் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுவதையோ அல்லது கொல்லப்படுவதையோ எந்தவொரு தலித் பெண்மணியும் பொறுத்துக்கொள்ள மாட்டாள்.
எனவேதான் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகள் அவிழ்த்துவிடும் சரடுகளையெல்லாம் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, முறியடித்திட வேண்டும். ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங்கும் இயக்கங்களும் இந்து ராஷ்ட்ரம் என்னும் தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக, மக்களைக் கூறுபடுத்திடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்திடும். மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் மதவெறி விஷத்தை விதைத்துக்கொண்டே இருந்திடும், இவற்றின் மூலம் மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்திட முயற்சித்துக்கொண்டே இருக்கும். இத்தகைய இவர்களின் இழிநடவடிக்கைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று போராடி, முறியடித்திட வேண்டும். இதில் ஏராளமானவர்கள் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்.
இப்போது ஒன்றியத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவதையொட்டி இவர்களின் இத்தகைய இழிநடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, சமூகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் முடமாக்கி, தங்களுக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையை உருவாக்கி, எப்படியாவது ஆழமாக தங்கள் விஷ விதைகளை வேரூன்ற வைத்திட முயற்சிகளை மேற்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதனை வெற்றி பெறச் செய்திடக் கூடாது.
– சவெரா
(தமிழில்: ச.வீரமணி)
நூல் அறிமுகம்: தேவனூர மகாதேவாவின் ஆர் எஸ் எஸ் ஸின் ஆழமும் அகலமும் தமிழில் : கனகராஜ் பாலசுப்பிரமணியம் – இரா.சண்முகசாமி
நூல் : ஆர் எஸ் எஸ் ஸின் ஆழமும் அகலமும்
ஆசிரியர் : தேவனூர மகாதேவா
தமிழில் : கனகராஜ் பாலசுப்பிரமணியம்
விலை : ரூ.25
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : செப்டம்பர்-2022
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
நாற்பது பக்கம் கொண்ட சிறிய நூல். கன்னடத்தில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான நூல்.
1.ஆர் எஸ் எஸ் ஸின் உயிர் எங்குள்ளது?
2.இவ்வாறெல்லாம் ஏடுகள் பேசுகின்றன!
3.இன்று நிகழ்காலத்தில்
4.இந்தப் பின்னணியில் மதமாற்றத் தடை சட்டத்தின் மர்மம்
5.தற்போது…
என ஐந்து கட்டுரைகளும் ஆர் எஸ் எஸ் ஸின் உண்மையான தோற்றத்தையும் அதன் இலக்கையும் மிக நுட்பமாக கவனித்து அவற்றை மக்களிடையே அம்பலப்படுத்தும் முயற்சி தான் இந்நூல்.
ஹெட்கேவர், கோல்வால்கர், சாவர்க்கர் இவர்களின் நயவஞ்சக காட்சிகள் பதியப்பட்டுள்ளது.
ஆர் எஸ் எஸ் ஸின் நோக்கம் ஆன்மீகம் அல்ல பொய்யே அவர்களின் மூலதனம். அந்தப் பொய்யை எப்படியெல்லாம் சமூகத்தில் திட்டமிட்டு பரப்பி, இஸ்லாமியர்கள் போன்று வேடமிட்டு வன்முறையைத் தூண்டி தங்களுக்கான அறுவடையை செய்துகொள்கிறார்கள் என்றும், அதற்காக சமூகத்தில் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வேலைவாய்ப்பு எதுவும் வழங்கப்படாத மக்களைக் கவர்ந்து அவர்கள் மூலம் கலவரத்தைத் தூண்டி தனக்கான தேவைகளை பூர்த்திசெய்து கொள்கிறார்கள். அதற்காக அவர்களை எப்போதும் எதிர்த்து கேள்வி கேட்காத ஆர் எஸ் எஸ் பயிற்சி கொடுத்து அடிமையாகவே வைத்து இந்தப் பிற்போக்கை செய்து வயிறு வளர்க்கின்றனர். மேலும் சமஸ்கிருதமே அவர்களுக்கு முக்கியமான மொழியாகவும், அது மேலேறி வரும்வரை உப்புக்கு சப்பானியாக அவர்கள் ஹிந்தியை தூக்கிப்பிடிக்கிறார்கள் என்றும் மிகவும் தெளிவான பதிவினை வழங்கியுள்ளார்கள்.
இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் அனைவரும் இங்கிருந்த இந்து மதத்தின் கோரவடிவம் தாங்காமல் மதம் மாறியவர்களே. ஆனால் அவர்களை வெளியே போ என்று சொல்லும் ஆர் எஸ் எஸ் ஆட்கள், ‘முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் வடக்கிலிருந்து வந்து அதிகாரத்தின், ராணுவத்தில் கிடைக்கும் பொறுப்புகளின் ஆசை காட்டுதலுக்கு உள்ளாகி முதலில் மதம் மாறியவர்களில் பெரும்பாலானோர் வடக்கின் ஆரிய பிராமணர்கள் தானே?’ என்று நீதியரசர் எச்.என்.மோகனதாஸ் அவருடைய புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.
இப்படி நிறைய ஆர்எஸ்எஸ் குறித்த செய்திகள் நூலில் உள்ளன. மொழிப்பெயர்ப்பு மிகவும் சிறப்பு. ஆசிரியருக்கும், மொழிப்பெயர்ப்பாளருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
பாங்கைத் தமிழனின் கவிதைகள்
அட்சய திருதியை
**********************
அள்ள அள்ளக் குறையாதது
அட்சயம்!
இந்து சமண சமய
விரும்பிகளின் புனித நாள்!
இந்த நாளில்
எதனை ஒன்றை செய்கின்றோமோ
அது…
அப்படியே தொடரும்;
குறையில்லாமல்!
பிரம்மா…
இந்த பூமியை
சிருஷ்டித்தப் புனித நாளாம்!
எப்படி
நம்பாமல் போவது?
நாம்
குறையின்றி வளர வேண்டுமே!
பத்தாண்டுகளுக்கு முன்
அட்சய திருதியைக்கு
அட்டிகை வேண்டுமென
அடம்பிடித்தாளாம்
நண்பரின் துணைவி!
தெரிந்த… அறிந்த…
நண்பரின்
நகைக்கடையில்
கொஞ்சம் முன்பணமும்
அட்டிகைக்கான
பெரும் பணம் கடனாகவும்
வாங்கிக் கொடுத்தாராம்!
வளர்கிறதாம்….
அன்று
அவர் செய்த செயல்;
இன்றும்
கடனாக….
‘ஒரே நாடு’
*************
இரண்டு இடம் வேண்டாம்;
இந்த ஒரே இடம் போதும்!
ஏமாற்றுவதற்கும்
ஏமாறுவதற்கும்!
எங்கேனாச்சும்
கேள்விப்பட்டிருப்பீரா
இந்த
அநியாயத்தை!
முதல்
மனித இனமாகத் தோன்றி
வழி வழியாய்
வாழ்ந்து வந்தோரை….
வழி மறித்து,
அந்நியப் படுத்திய
அநியாயத்தை
வேறெங்கேனும்
கேள்விப்பட்டதுண்டா?
கறையான் புற்றுக்குள்
கருநாகம் புகுந்துக்கொண்ட
கதையதனை
வேறெங்கேனும்
கண்ட துண்டா…. கேட்டதுண்டா?
இந்த நாடுதான்
ஏமாற்றுவதற்கும்
ஏமாறுவதற்கும்
உகந்த நாடு!
ஒற்றுமையாகத்தான்
வாழ்கிறோம்
என்பதெல்லாம்…..
நரியின் ஊளை!
ஒரே தன்மையுள்ள
மண்ணில்
வெவ்வேறு தன்மையுள்ள
மனிதர்!
வேறு எங்கேனும்
நடப்பதுண்டா?
ஒரு பாம்புக்கு
படையே நடுங்கியக் கதை
இந்த
மண்ணிலிருந்துதானே?
விஷம் கொண்ட பாம்பை
அடித்து விரட்டுதற்கும்
அய்யோ பாவமென்ற
அடி மனதை தொட்ட
தந்திரவாதிகளை
வேறெங்கும் கண்டதுண்டா?
கண்ணுக்குக்
கசப்பானவனை
கறைப்படுத்தி…..
கண்ணுக்குத் தெரியாத
கரை கட்டி….
கரை உடையாமல்
காப்பதற்குக்,கையில் தடிகொடுத்து,
காவலரை நியமித்து
கர்வம் ஏற்றி…..
அடடா….
இதனை புத்திசாலித்தனமென்று
போற்றி மகிழும்
ஒரு தேசத்தை
வேறெங்கும் தேட வேண்டாம்;
அந்த
விடியாத தேசம்….
இதுதான்…. இதுதான்!
சொல்லுங்கள் சாமீ
**********************
தாலி அறுப்பதற்கு
நீங்கள்தான்
காரண மென்றால்
வலிப்பதாகவும்
நடிக்கத் தெரியும்
உங்களுக்கு!
புலிப் பற்களில்
தாலி கட்டிய
பூர்வீகக் காரனுக்கு
அறிவில்லை!
நீர் சொன்னதெல்லாம்
நம்பி… நம்பி….
தாலியை
தாரைவார்க்கிறோம்…
தங்கத்தில் கட்டி….
உடன்
உயிரையும்!
தாலி கட்டி
அதனை
சாதுர்யமாக
காக்கும்
வித்தகிகளை
வீட்டுக்காரிகளாக்கியவர்
நீங்கள்!
இப்போதும்
நம்புகிறோம்;
எங்கள் தாலிகளை
காப்பாற்றுங்கள்!
தங்கத்தில்
தாலி செய்தால்
விமோசனமில்லையென
ஒரு
வித்தையை வீசுங்கள்;
நம்புவதற்கு
நாங்கள்
காத்துக் கிடக்கிறோம்!
உடன்
ஒரு ஆலோசனை சாமி;
கொஞ்சம்
படிக்க விட்டுட்டீங்கல்ல
அதனால்தான்!
தாலியை
விலைமதிப்பற்றதாகவும்,
தாலி செய்யும்
தங்கத்தை மாற்றி
விற்பனைக்கு உதவாத
ஓர் உலோகத்தைக்
கூறுங்கள்….
ஏற்றுக் கொள்வோம் சாமி!
கூறுவது
நீங்களாயிற்றே!
– பாங்கைத் தமிழன்
UP-ஜாவேத்தின் வீடு ஏன் இடிக்கப்பட்டது? கட்டுரை : நர்மதா தேவி
உத்திர பிரதேசத்தின்’ பிரயாக்ராஜ்’ நகரம்தான் சமீபத்த்கிய தலைப்புச் செய்தி. அங்கே ஜாவேத் முகமது என்ற இஸ்லாமியரின் வீடு புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதே செய்தி.
’பிரயாக்ராஜ்’ நகரமா? இதுவரை நாம் கேள்விப்படாத ஊராக இருக்கிறதே?!’ என உங்களுக்குத் தோன்றும். ’அலகாபாத்’ என்ற அந்த நகரின் ’பழைய’ பெயரை, பாஜக யோகி அரசாங்கம் ’பிரயாக்ராஜ்’ எனப் பெயர் மாற்றம் செய்ததால், இனி நாமும் அந்த நகரத்தை பிரயாக்ராஜ் என்றே அழைக்க வேண்டும். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஜாவேத் முகமதின் வீடு ஏன் இடிக்கப்பட்டது என்று.
இஸ்லாமியத் தர்காக்களை இடித்து இந்து கோவில்களைக் கட்டுகிறோம் என்று கிளம்பிய பாஜகவிற்கு இப்போதெல்லாம் இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்குவது சர்வசாதாரணமாகிவிட்டது. பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டி முடித்தாகிவிட்டது, ’அடுத்து பாக்கி இருப்பது காசி, மதுரா’ எனக் கிளம்பி, காசியின் கியான் வாபி மசூதியை பாஜகவும் சங்பரிவாரங்களும் குறிவைத்துள்ளன.
ஏப்ரல் மாதத்தில் ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி பண்டிகைகள் வந்தன. சங்பரிவாரங்கள் பல மாநிலங்களில் வாள், கத்தி ஆயுதங்களை ஏந்திக்கொண்டு இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தி முடித்தன. இப்போதெல்லாம் வன்முறைக் கும்பல்களைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களின் சொத்துகளை நாசப்படுத்துவது பாஜகவிற்குப் பழைய ஃபேஷன் ஆகிவிட்டது. அரசு இயந்திரத்தையே பயன்படுத்தி புல்டோசர்களைக் கொண்டு இஸ்லாமியர்களின் சொத்துகளைப் பகிரங்கமாகவே பாஜக அரசாங்கங்கள் அழிக்கத் தொடங்கிவிட்டன.
மத்தியப் பிரதேசம் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்லவத்தில் கல்லெறிந்து கலவரம் செய்தார்கள் எனச் சொல்லி, பாஜக மாநில அரசாங்கம், புல்டோசர்களைக் கொண்டு இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான 16 வீடுகளையும், 29 கடைகளையும் இடித்துத் தள்ளியது. ஆக்கிரமிப்பு என்று ’காரணம்’ சொன்னது.
மத்தியப் பிரதேசத்தின் உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, ’கல்லெறிந்தவர்களின் வீடுகள் எல்லாம் கற்குவியலாக்கப்படும்!’ என பகிரங்கமாகவே மிரட்டினார்.
கார்கோனில் வாசிம் ஷேக் என்பவரின் கடையும் இடிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தவர் ஷேக். ’இரண்டு கைகளும் இல்லாத இந்த வாசிம் ஷேக் மதக்கலவரத்தில் கற்களை வீசினார்’ என்று குற்றம்சாட்டி, அவரது கடையை பாஜக அரசாங்கம் இடித்துத் தரைமட்டமாக்கியது. ’எனது வயதான தாயையும், எனது இரண்டு குழந்தைகளையும் இனி என்னால் எப்படிக் காப்பாற்ற முடியும்?’ என இந்தியச் சமூகத்தின் மனசாட்சியை உளுக்கும் கேள்வியைக் கேட்டு கண்ணீர் சிந்தினார் வாசிம் ஷேக்.
ராமநவமிக்கு முன்பாக என்ன நடந்தது? ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் முழுக்க கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனையை பாஜகவும் சங்பரிவாரங்களும் கிளப்பின. ‘ஹிஜாப் அணிந்தால் கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க முடியாது’ என்ற நிலையை அந்த மாநிலத்தின் பாஜக அரசாங்கம் ஏற்படுத்தியது. விளைவாக இன்றைக்கு ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்வி உரிமை பறிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கு நீதிமன்றங்களும் பயன்படுத்தப்பட்டுவருவதை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்தப் பின்னணியில்தான் பாஜகவின் (முன்னாள்) செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்களின் கடவுளான முகமது நபி குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து, டில்லி பாஜக தலைவர் நவீன் ஜிண்டாலும் மிக மோசமான வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பிய பிறகு, இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள்.
யோகி ஆதித்யநாத் பதவியில் இருக்கும் உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஜூன் 10 வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்தபிறகு, நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டு இஸ்லாமியர்கள் ஊர்வலமாகச் சென்ற போது நடந்த வன்முறைக்குத் தூண்டுதலாக இருந்தார் என ஜாவேத் முகமது மீது உ.பி அரசாங்கம் குற்றஞ்சுமத்தியது. வெல்ஃபேர் கட்சித் தலைவரான ஜாவேத், குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்துப் போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அவரது மகள் அஃப்ரீன் ஃபாத்திமா டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி. அலிகர் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது மாணவர் தலைவராகக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்.
ஜூன் 10 அன்றே ஜாவேத் வீட்டில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ”அனுமதி பெறாமல் கட்டப்பட்ட குடியிருப்பை இடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதால்,
மே 24க்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்ற பிரயாக்ராஜ் நகர நிர்வாகத்தின் மே 10 அறிவிக்கைக்கு, ஜாவேத் முகமது பதில் அளிக்காததால், மே 25 அன்று கட்டடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டது- இப்படி ஜூன் 10 தேதியிட்ட அறிவிக்கையை ஜூன் 11 இரவு 11 மணிக்கு உ.பி காவல்துறை ஜாவேத் வீட்டில் ஒட்டினார்கள். ஜூன் 12 அன்று அவருடைய வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. வீட்டை இடித்தபோது செய்த சோதனையில் சட்டவிரோத ஆயுதங்களும், பிரசுரங்களும் கண்டெடுத்தோம் என காவல்துறை குற்றஞ்சுமத்தியுள்ளது.
சொத்து ஜாவேத்தின் மனைவியும், அஃப்ரீன் ஃபாத்திமாவின் அம்மாவுமான பர்வீன் ஃபாத்திமாவின் பெயரில் உள்ளது. ஆனால் அறிக்கை வழங்கப்பட்டதோ கலவரத்தைத் தூண்டியவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் முகமது மீது.
’மேலும் மே 10 தேதியிட்ட அறிக்கை எங்களுக்கு வழங்கப்படவே இல்லை. வீட்டை இடிக்க முடிவு செய்துவிட்டு அவசர கதியில் முன் தேதியிட்டு ஒரு அறிக்கை அனுப்பியதாக உ.பி அரசாங்கம் பொய் சொல்கிறது. ஜூன் 11 சனிக்கிழமை இரவு மறுநாள் வீட்டை இடிக்கிறோம் என அறிவிக்கை கொடுத்தால், வார இறுதியில் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறும் வாய்ப்பு கூட எங்களுக்கு இருக்காது எனத் திட்டமிட்டு இந்தக் காரியத்தை உ.பி. அரசாங்கம் செய்தது’ என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள் ஜாவேத் முகமதின் குடும்பத்தினர்.
மத்தியில் பாஜக ஆட்சி செய்த இந்த 8 ஆண்டுக் காலத்தில் சிலிண்டர் விலை 418 ரூபாயிலிருந்து 1062 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆறே மாதத்தில் 140 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு என வாழ்வாதாரப் பிரச்சனைகள் மூச்சை நிறுத்தும் அளவுக்கு நெருக்குகின்றன. மாதம் பத்தாயிரம் கூட சம்பாதிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் தான் முக்கால்வாசிக் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
விவசாயிகளின் விளைபொருளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையில் முறையான கொள்முதல் இல்லை; விவசாயச் சந்தையை கார்ப்பரேட்கள் லாபம் பார்ப்பதற்கு ஏதுவாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளின் மாபெரும் ஓராண்டு காலப் போராட்டத்திற்குப் பின்பு பாஜக ஒன்றிய அரசாங்கம் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றாலும், அவற்றை மீண்டும் கொண்டு வரும் அபாயம் இருக்கவே செய்கிறது.
எல்.ஐ.சி, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் கார்ப்பரேட்கள் லாபம் பார்ப்பதற்கு ஏதுவாக திறந்துவிடுகிறது பாஜக. தனியார்மயம், தாராளமயத்தைச் செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசாங்கம் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 64 அடி பாய்வோம் என்ற வேகத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்மயமாக்கி மக்களின் பொதுச்சொத்துகளை எல்லாம் காப்பரேட்களின் உடைமையாக்கிக் கொடுக்கிறது மோடி அரசாங்கம்.
நூற்றாண்டு காலப் போராட்டங்களால் விளைந்த 8 மணி நேர வேலைச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டு நான்கே சட்டத் தொகுப்புகளாக்கப்பட்டுள்ளன. முதலாளிகள் லாபம் பார்ப்பதற்காகத் தொழிலாளிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டப்படலாம் என்ற பழைய நிலைக்குத் தொழிலாளர் வர்க்கத்தை இந்தப் பாஜக அரசுகள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து விடக்கூடாது; அதற்கு மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி வைத்திருக்கும் பாஜக கட்சியின் ஆட்சியே சிறந்தது என ஆளும் வர்க்கங்கள் கணக்கிடுகின்றன. அதனால்தான் கார்ப்ப்ரேட்களின் உடைமைகளான பெரும்பாலான ஊடகங்கள் நாட்டில் எவ்வளவு அநியாயங்கள் நடந்தாலும் தட்டிக் கேட்காமல் மோடி புராணம் பாடுகின்றன. இச்சூழலில் காப்ரேட்-காவி கூட்டணியை அனைத்து மதங்களிலும் உள்ள உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி, நாட்டை பாஜக இந்துத்துவ கும்பலிடம் இருந்தும், நவதாராளமயக் கொள்கைகளின் தாக்கத்திலிருந்தும் காப்பாற்றிட நாம் தீவிரமாக உழைத்திட வேண்டும்.
– நர்மதா தேவி
மறைந்து போகும் ஹிஜாப் எவ்வாறு கருத்து வேறுபாட்டை அறிவிக்கும் அடையாளமாக மீண்டும் தோன்றுகிறது என்பது குறித்த வரலாறு – அஜாஸ் அஷ்ரப் | தமிழில்: தா.சந்திரகுரு
இஸ்லாமியப் பெண்கள் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் அல்லது கழற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும் போதெல்லாம் ஹிஜாபிற்கான அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன
மாசசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜில் ஹிஜாப் (தலையில் முக்காடு) அணிந்த பெண்கள் குழு ஒன்றை 1990களின் பிற்பகுதியில் ஒருநாள் மாலை நேரத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் லீலா அகமதுவும், அவரது தோழியும் கண்டனர். கேம்பிரிட்ஜில் முக்காடு அணிந்திருந்த அந்தப் பெண்கள் ‘அமெரிக்காவில் அடிப்படைவாதம் வேரூன்றுகிறதோ!’ என்ற ஆச்சரியத்தையே கெய்ரோவில் 1940களில் பிறந்து, முக்காடு எதுவும் அணிந்து தன்னை மறைத்துக் கொள்ளாமலேயே பள்ளிப்படிப்பை முடித்திருந்த அகமதுவிடம் ஏற்படுத்தியிருந்தனர்.
அகமதுவிடம் எழுந்த அந்தக் கேள்வியே முக்காடைக் கழற்றுதல், மீண்டும் போட்டுக் கொள்ளுதல் என்று முஸ்லீம்கள் உலகில் கடந்த காலங்களில் எழுந்த மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கான ஆவலைத் தூண்டியது. அதற்குப் பின்னர் ‘ஓர் அமைதிப் புரட்சி: முக்காடின் மறுமலர்ச்சி – மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வரை’ என்ற புத்தகத்தை அவர் எழுதுவதற்கான காரணமாகவும் அது அமைந்தது.
அகமது எழுதியுள்ள அந்தப் புத்தகம் ஹிஜாப் மறுப்பு மற்றும் எதிர்ப்பிற்கான அடையாளம், இணக்கம் மற்றும் ஒப்புதலுக்கான அடையாளம் என்று பல அர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்று குறிப்பிடுகிறது. ஹிஜாப் அணிய வேண்டுமென்று பெண்களை வற்புறுத்துவது அல்லது அதனைக் கழற்றி வீசச் சொல்வது வெறுப்பையே தூண்டும் என்பதை ஹிஜாபிற்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்கின்ற ஹிந்துத்துவ அடிவருடிகள் புரிந்து கொள்ள வேண்டும். நீதித்துறைக்கும் ஓரளவு பொருந்திப் போகின்ற உண்மையாகவே அது இருக்கின்றது.
அரபு உலகின் அறிவுசார் தலைநகரான கெய்ரோவில் முக்காடைக் கழற்றிய நிகழ்வு உச்சத்தை எட்டியது குறித்து முதலில் காணலாம்.
அகற்றப்பட்ட முக்காடு
‘மறையும் முக்காடு – பழைய ஒழுங்கிற்கு விடப்பட்டிருக்கும் சவால்’ என்ற தலைப்பில் 1956ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் மத்திய கிழக்கிலிருந்து முக்காடு வெளியேறி விடும் என்று வரலாற்றாசிரியர் ஆல்பர்ட் ஹூரானி கணித்திருந்தார். காசிம் அமின் எழுதி 1899ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ‘பெண் விடுதலை’ என்ற புத்தகமே முக்காடை அகற்றும் போக்குகளுக்கான காரணமாக அமைந்தது என்று அந்தக் கட்டுரையில் ஆல்பர்ட் ஹூரானி குறிப்பிட்டிருந்தார்.
முக்காடு போடப்பட்டு வீட்டிற்குள்ளேயே பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாலேயே எகிப்து பின்தங்கியுள்ளது என்ற வாதத்தை முன்வைத்த அமின் எகிப்து ஐரோப்பாவைப் போல ஆக வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அமின் ‘எகிப்தில் இருக்கின்ற நிலைமையே மாறி வருகின்ற உலகில் குழந்தைகள் சமூகமயமாகிட முடியாதவாறு வைத்திருக்கிறது’ என்று கூறினார். ஐரோப்பாவுடனான தொடர்பு அதிகரித்தது, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் வெற்றிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்களால் ஏற்கனவே எகிப்தில் நிலவி வந்த கருத்துக்களையே அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
ஐரோப்பாவுடன் ஏற்பட்டிருந்த தொடர்பு தொழில்நுட்ப அற்புதங்களை – எடுத்துக்காட்டாக ரயில்கள், டிராம்களை – மட்டுமல்லாது எகிப்தியர்களிடம் சமத்துவம், ஜனநாயகம், தகுதியின் அடிப்படையிலான அதிகாரம் போன்ற கருத்துகளையும் அறிமுகப்படுத்தியிருந்தது. எகிப்தில் முக்காடு அணியாத ஐரோப்பிய பெண்கள் மிகவும் சாதாரணமாகக் காணப்பட்டார்கள். ஐரோப்பியத் தாக்கம் எகிப்தியப் பெண்களை – ஆரம்பத்தில் உயர் வகுப்பினரையும், பின்னர் நடுத்தர வர்க்கத்தினரையும் – வெளியில் வரத் தூண்டியது. சமகாலத்தில் நடந்துள்ளவற்றை மேற்கோள் காட்டுவதன் மூலம் முக்காடை அகற்றிக் கொள்வது எந்த அளவிற்கு விரைவாகப் பரவியது என்பதை தனது புத்தகத்தில் அகமது சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகமுக்கியமான பெண் உரிமை ஆர்வலராக பின்னர் மாறிய பாலஸ்தீனியரான அன்பரா காலிடி எகிப்தியப் பெண்கள் ‘அகற்றப்பட்ட திரை’ மூலம் இந்த உலகைப் பார்க்கின்றனர் என்று 1910ஆம் ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் குறிப்பிட்டிருந்தார். அதே ஆண்டில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் முக்காடிட்டுக் கொள்ளாத பெண்கள் என்ன ‘வானத்திலிருந்து’ விழுந்தவர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அல்-சுஃபுர் அல்லது முக்காடை அகற்றுதல் என்ற பெயரில் 1914ஆம் ஆண்டில் தேசிய செய்தித்தாள் ஒன்று தொடங்கப்பட்டது. அந்த செய்தித்தாளின் ஆசிரியர் ‘எகிப்தில் முக்காடு போட்டுக் கொண்டிருப்பது பெண்கள் மட்டுமல்ல… நமது தேசமே முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் தேசமாத்தான் இருக்கிறது’ என்று எழுதியிருந்தார்.
பெண்கள் முக்காடை அகற்றிக் கொண்ட வேகம் உண்மையில் ஆச்சரியப்படும் வகையிலே இருந்தது அகமதுவின் சுயசரிதையில் இருந்து தெளிவாகத் தெரிய வருகிறது: ‘அந்தக் காலகட்டத்தில் வயதான பெண்களில் பெரும்பாலானோர் (1908ஆம் ஆண்டு பிறந்த எனது தாயின் தலைமுறையைச் சார்ந்த பெண்கள், அதே போல எனது தலைமுறையைச் சார்ந்த பெண்கள்) தங்கள் முக்காடை அகற்றிக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் யாரும் ஒருபோதும் முக்காடு போட்டுக் கொண்டதே இல்லை’ என்று அகமது எழுதியுள்ளார்.
ஜனநாயகம், சமத்துவம், தகுதியின் அடிப்படையிலான அதிகாரம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக மாறுவதற்காக எகிப்திடமிருந்த தேடலி உருவகமாகவே முக்காடை அகற்றுவது இருந்தது. பெண்களைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும் விதத்தில் வாழ்வதற்கு, ஆடையணிந்து கொள்வதற்கு அவர்களிடம் இருந்த விருப்பத்தின் வெளிப்பாடாகவும் அது அமைந்தது என்று அகமது குறிப்பிடுகிறார்.
முக்காடு அகற்றப்படுவதை எதிர்த்தவர்கள்
முக்காடு அகற்றப்படுவதை எதிர்த்தவர்களும் அப்போது இருந்தனர். தேசியவாத பத்திரிகை ஒன்றின் உரிமையாளரின் மனைவியான பாத்திமா ரஷீத் ‘முக்காடு என்பது நம்மைத் தடுத்து நிறுத்துகின்ற நோயில்லை. மாறாக அதுவே நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணமாக இருந்து வருகிறது…’ என்று 1908ஆம் ஆண்டு எழுதியிருந்தார். முக்காடு போடாத பெண்களுக்குச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்குமாறு மத அறிஞர்கள் 1914ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
‘எகிப்து முன்னேற்றத்தைக் காண்பது இஸ்லாத்திற்கு மாறுவதன் மூலமாக நடக்குமே தவிர ஐரோப்பாவைப் பின்பற்றுவதால் அல்ல’ என்ற சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்தனர். எகிப்தை இஸ்லாமியமயமாக்குவதன் மூலம் எகிப்திய மனங்களில் உள்ள காலனித்துவம் அகற்றப்பட வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர். ஹசன் அல்-பன்னா அவர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்தார். முஸ்லீம் சகோதரத்துவம் என்ற அமைப்பை 1928ஆம் ஆண்டு ஹசன் அல்-பன்னா நிறுவினார். அந்த அமைப்பு எகிப்தை இஸ்லாமியமயமாக்கும் திட்டத்திற்காக எகிப்தியர்களை அணிதிரட்டக் கூடிய வகையில் பள்ளிகள், மருத்துவ வசதிகள், தொழிற்சாலைகள் கொண்ட வலையமைப்பை நிறுவியது.
ஆனால் மன்னர் ஃபாரூக்கின் ஆட்சி முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பை 1948ஆம் ஆண்டு கலைத்து படுகொலைகளைச் செய்யுமாறு தன்னுடைய ஆயுதப் பிரிவை தூண்டியது. ஃபாரூக் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு 1954ஆம் ஆண்டு அதிபர் கமல் அப்துல் நாசரைக் கொலை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியது. சோசலிசக் கொள்கைகள், அனைத்து அரபு தேசியவாதம், எகிப்தை இஸ்லாமிய நாடாக மாற்ற மறுத்தது போன்ற நாசரின் செயல்பாடுகளுக்கு எதிராக முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு அவரிடம் பகைமை பாராட்டி வந்தது.
சகோதரத்துவ அமைப்பை ஒடுக்குமாறு நாசர் உத்தரவிட்டார். அதற்குப் பின்னர் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ‘அனைத்து முஸ்லீம்களும் தங்கள் அடையாளத்தை இஸ்லாத்துடன் பிணைத்துக் கொள்ள வேண்டுமே தவிர தேசியம் அல்லது இனத்துடன் அல்ல’ என்று சகோதரத்துவ அமைப்பிடம் இருந்த நம்பிக்கையுடன் இருந்த சவூதி அரேபியாவிற்குப் பலரும் தப்பிச் சென்றனர். உள்ளூர் அணிதிரட்டல்கள், ‘வெளிநாட்டு’ தாக்கங்களை வேரறுப்பதன் மூலம் ‘தூய இஸ்லாத்தை’ மீட்டெடுக்க முயன்ற வஹாபிசத்தை ஏற்றுமதி செய்வதற்காக சகோதரத்துவ அமைப்டைச் சார்ந்த அறிவுஜீவிகளை சவூதி அரேபியா தன்னுடன் வைத்துக் கொண்டது. அமெரிக்காவின் ஆதரவை அவர்களும், சோவியத் யூனியனின் ஆதரவை நாசரும் பெற்றனர்.
முக்காடை அகற்றுவது என்று பெரும்பாலாக இருந்து வந்த போக்குக்கு எதிரான சவால் தவிர்க்க முடியாத வகையிலேயே இருந்தது. உண்மையில் முக்காடு எகிப்திலிருந்து முற்றிலுமாக மறைந்து போய் விடவில்லை. கெய்ரோவை ஒட்டிய வறுமை நிறைந்த மாவட்டங்களில் இருந்த பெண்கள் ‘மிலாயா லாஃப்’ எனப்படும் தலை மற்றும் உடலை மறைக்கும் வகையில் ஆடைகளின் மேல் அணிந்து கொள்ளும் கருப்பு உறையால் தங்களை மறைத்துக் கொண்டிருந்தனர். நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பழமைவாதிகள் பெரும்பாலும் தலையை மறைக்கும் அளவுக்கு நீளமாக, நாடியில் கட்டப்படும் வகையில் இருந்த வண்ணமயமான ஐரோப்பிய பாணி முக்காடை அணிந்தனர்.
மீண்டும் திரும்பி வந்த முக்காடு
இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு நடந்த போரில் எகிப்தைத் தோற்கடித்த போது, மறைந்து போயிருந்த முக்காடு விவகாரத்தில் குறிப்பிடத்தக்கதொரு திருப்பம் ஏற்பட்டது. தோல்விக்குப் பிறகு எகிப்து முழுவதும் பரவியிருந்த விரக்தி அலை நாசர் இஸ்லாத்தை விட்டு விலகியதாலேயே எகிப்து தோல்வியடைந்தது என்று எண்ணத்தை எகிப்து மக்களிடம் தூண்டி விட்டிருந்தது. மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக ‘புதியதொரு சமுதாயத்தை உருவாக்க முயன்ற எகிப்துக்கு பாடம் கற்பிக்க அல்லா முயன்றிருக்கிறார்’ என்று மத நம்பிக்கையை பகிரங்கமாக உறுதிப்படுத்தும் வகையிலே நாசர் பேசிய பேச்சும் அதுபோன்றதொரு பார்வை மக்களிடையே உருவாகக் காரணமானது. அதற்குப் பிறகு முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் செயற்பாட்டாளர்களை நாசர் சிறையிலிருந்து விடுவித்தார்.
அமெரிக்காவைக் கவர்வதற்காக நாசரின் வாரிசான அன்வர் சதாத், அரசியலில் இருந்து விலகி இருக்கும் வரையில் சகோதரத்துவ அமைப்பு தங்களுடைய இஸ்லாமியப் பரப்பலை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதித்தார். பல்கலைக்கழக வளாகங்களில் இடதுசாரிகளை ஒடுக்குவதற்காக அந்த அமைப்பினருக்கு அவர் ஆயுதங்களையும் வழங்கினார். இடதுசாரிகள் அப்போது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக சதாத் திரும்பியிருந்ததைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
முதன்முதலாக 1970களின் முற்பகுதியில் பல்கலைக்கழக வளாகங்களில் ஹிஜாப் மீண்டும் தோன்றியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. பழமைவாதப் பிரிவினர் முன்னர் விரும்பிய வகையிலே தலை, கழுத்தை மூடி, நாடியுடன் கட்டப்பட்டிருக்கும் வகையில் அணிந்து கொள்வது என்று ஹிஜாப் அணியும் வழக்கம் மறுசீரமைக்கப்பட்டது. ஆனால் அது முன்பு போல வண்ணமயமாக இல்லாமல், ‘கில்பாப்’ என்ற நீண்ட, தளர்வான அங்கி, பரந்த நீண்ட கைகளை உடைய சட்டைகளுடன் இருந்தது. அது ‘சகோதரத்துவ அமைப்பின் அதிகாரப்பூர்வமான ‘ஜியா இஸ்லாமி’ என்ற உடை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
எகிப்திய மாணவிகளில் ஒரு சிறிய பகுதியினரே தங்களுடைய ஆடையை மாற்றிக் கொண்டிருந்தனர் என்றாலும், ஃபத்வா எல் கிண்டி, ஜான் ஆல்டன் வில்லியம்ஸ் போன்ற அறிஞர்கள் புதிய ஹிஜாப்பை அணிந்தவர்களை நேர்காணல் செய்திருந்தது கவனிக்கத்தக்கது. மேற்குலகைப் பின்பற்றுவது பயனற்றது என்ற உணர்வுகளை 1967ஆம் ஆண்டு போர் அவர்களிடம் தூண்டியது என்பதைக் குறிப்பிடும் வகையிலேயே அவர்களுடைய நேர்காணல்கள் இருந்தன என்று அகமது தெரிவிக்கிறார். இஸ்ரேலுடன் 1973ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் எகிப்திற்கு கிடைத்த ஆதாயங்கள் மிகவும் குறைவாக இருந்த போதிலும், நாடு இஸ்லாத்தின் பக்கம் திரும்பியதற்கான ஆதாரமாக அவை மேற்கோள் காட்டப்படுகின்றன.
முக்காடை அகற்றுவது நம்பிக்கையின் அடையாளம் என்று இருந்ததற்கு மாறாக ஹிஜாப் அணிந்து கொள்வது நம்பிக்கையின் அடையாளமானது.
ஹிஜாப் பரவியதால் ஏற்பட்ட அதிர்ச்சி
மீண்டும் ஹிஜாப் திரும்பி வந்தது குறித்து எழுதிய பத்திரிகையாளர் அமினா அல்-சைத் அதை ‘இறந்து போனவர்களின் கவசம்’ என்று குறிப்பிட்டார். ஹிஜாப்பின் மறுபிரவேசம் குறித்து திகைப்படைந்த பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் சில சமயங்களில் எல் கிண்டி, வில்லியம்ஸ் குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்தினர்.
1971ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவராக இருந்த எக்ரம் பெஷீர் குறித்து அகமது வெளிக்கொணர்ந்த தகவல்களிலிருந்து ஹிஜாப் அணிந்த பெண்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே நடந்த விவாதம் தெளிவாகத் தெரிய வருகிறது. பெரும்பாலும் குட்டைப் பாவாடை உடை அணிந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெஷீர் மட்டும் ஹிஜாப் அணிந்து தனித்து நின்றார். பெஷீரின் அத்தை ‘விளையாட்டுத்தனமாக இருக்காதே’ என்று அவரிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார்; அவருடைய மாமா ‘இதுபோன்று உடையணிந்த’ அவர் கணவனை எப்படி கண்டுபிடிக்கப் போகிறார் என்று கவலைப்படுவதுண்டு; பேராசிரியர் ஒருவரும் அடிக்கடி அவரது ஆடை குறித்து கருத்து தெரிவித்து வந்திருக்கிறார். அதிக வெப்பமாக இருந்த ஒரு நாளில் அதை ஏன் ஆடையின் மீது பெஷீர் அணிந்திருக்கிறாய் என்று கேள்வியெழுப்பிய அந்தப் பேராசிரியருக்கு ‘ஏனென்றால் நான் ஒரு முஸ்லீம்’ என்று பெஷீர் உடனடியாகப் பதிலளித்தார். மிகுந்த சீற்றத்துடன் அந்தப் பேராசிரியர் ‘நான் முஸ்லீம், என் மனைவி முஸ்லீம், இவர்கள் [மாணவர்கள்] முஸ்லீம்கள்’ என்று எதிர்வினையாற்றினார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இல்லாமால் – குறிப்பாக சரியான உடை அல்லது இஸ்லாமிய ஆடை என்று அதனை முன்னிறுத்தி சமூகத்தை இஸ்லாமியமயமாக்கிய சகோதரத்துவ அமைப்பு இல்லாமல் – ஹிஜாப் மீண்டும் திரும்பி வந்திருக்க முடியாது. கீழ்தட்டு வகுப்பினர் செல்ல முடிந்த அந்த அமைப்பினரிடமிருந்த பள்ளிகள், மருத்துவமனைகளின் வலையமைப்பின் மூலமாகவே அவர்களுக்கான செல்வாக்கு பெறப்பட்டது. நாட்டை இஸ்லாமியமயமாக்குகின்ற வகையில் அந்த மக்களை மூளைச்சலவைக்கு ஆட்படுத்த அந்த வலையமைப்பே உதவியது.
1990களில் மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற ஆடை அணியும் முறையாக ஹிஜாப் மாறியிருந்தது. அந்தக் காலகட்டமே தன்னுடைய கல்வி முறையை இஸ்லாமிய-நீக்கம் செய்வதற்கு அரசாங்கத்தைத் தூண்டிய வகையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையில் ஈடுபட்ட காலமாகவும் இருந்தது. அப்போது முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறுமிகள் ஹிஜாப் அணிந்து வருவது தடை செய்யப்பட்டது. மூத்த மாணவிகளைப் பொறுத்தவரை பாதுகாவலர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு வருபவர்கள் மட்டுமே ஹிஜாப் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
தங்களுடைய சக மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படாததைக் கண்டு பள்ளி மாணவிகள் பீதியடைந்தனர். அதுவரையிலும் ஹிஜாப் அணிந்திராத பெண்களும்கூட தங்கள் ஒற்றுமையைக் காட்டுகின்ற விதத்திலே அதை அணிந்து கொள்ளத் துவங்கினர். போராட்டங்கள் வெடித்தன. ஊடகங்கள் விமர்சனம் செய்தன. பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்தனர். அது தொடர்பாக தொடரப்பட்ட பல வழக்குகளில் அரசு தோல்வியடைந்தது. இன்றும்கூட உயர்தர உணவகங்களும், ஓய்வு விடுதிகளும் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினராகக் கருதி உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. அதுபோன்ற நடைமுறைக்கு எதிராக சமூக ஊடகப் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் வர்க்கப் பரிமாணம் மட்டுமல்லாது அடையாளக் குறியீட்டையும் கொண்டுள்ளது.
வெவ்வேறு நிலைகளில் ஈரான், பிரான்ஸ்
ஈரானிய ஆட்சியாளர் ரேசா ஷா பஹ்லவி 1936ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று பொது இடங்களில் முக்காடு, சாதர் போன்ற ஆடைகளைத் தடைசெய்கின்ற காஷ்-இ-ஹிஜாப் ஆணையை வெளியிட்டார். அதுபோன்ற ஆடைகளை அணிந்துள்ள பெண்களிடமிருந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவற்றை அகற்ற வேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்கள் பலரும் வெளியில் செல்வதையே நிறுத்திக் கொண்டனர். வீட்டிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க பழமையான குடும்பங்கள் முன்வந்தனர். அப்போது ஈரான் அரசியலின் ஒருங்கிணைந்த அங்கமாக முக்காடு மாறியிருந்தது.
முக்காடு போடலாமா, வேண்டாமா என்பதை பெண்களே தீர்மானித்துக் கொள்ள அனுமதித்த மகன் முகமது ரேசா ஷாவிற்கு ஆதரவாகப் பதவி விலகுமாறு ரேசா ஷா பஹ்லவியை ஆங்கிலேயர்கள் 1941ஆம் ஆண்டு கட்டாயப்படுத்தினர். பின்வந்த காலங்களில் புதியதொரு பொதுக் கலாச்சாரம் உருவானது. சமூகக் கூட்டங்களில் காலத்துக்கேற்ற உடையணிந்து, தலையில் எதுவும் அணியாதிருந்த பெண்கள் சாதர் அணிந்திருந்த பெண்களுடன் கலந்தே காணப்பட்டனர். ஆயினும் ஷாவின் எதேச்சதிகார ஆட்சி ஈரானியர்களை தெருக்களுக்கு அழைத்து வந்தது. மதம் சார்ந்தவர்களாக இல்லையென்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுடன் சேருவதற்காக பெண்கள் அப்போது சாதர் அணிந்து கொண்டனர். ஷாவின் மேற்குலக ஆதரவிற்கு எதிராக இருந்த ஈரானின் வெறுப்பை அடையாளப்படுத்தும் வகையிலேயே அவர்கள் அணிந்த அந்த சாதர் இருந்தது.
அதிகாரத்திலிருந்து ஷாவை வெளியேற்றிய 1979ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டார். அதற்குப் பின்னர் பெரும் தலைவரான ஆயதுல்லா ருஹோல்லா கொமேனி பெண்கள் கட்டாயம் முக்காடு அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். ஆயிரக்கணக்கான பெண்கள் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று அதற்கு எதிராகத் திரண்டு போராட்டம் நடத்தினர். ஹிஜாப் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக காஷ்ட்-இ-எர்ஷாத் எனப்படும் ஆயிரக்கணக்கான ரகசிய முகவர்களை ஈரானிய ஆட்சி நியமித்தது. 1993 மற்றும் 2003க்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் முப்பதாயிரம் பெண்கள் முறையாக ஹிஜாப் அணியாததற்காகக் கைது செய்யப்பட்டனர் என்று ‘ஈரானுக்கான நியாயம்’ (ஜஸ்டிஸ் ஃபார் ஈரான்) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிஜாபிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பெறுவதற்கான ‘பாரபட்சமான சட்டங்களை நீக்குவது’ எனும் சமத்துவத்திற்கான மாற்றம் என்ற இயக்கம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய அமைப்பாளர்களை அரசாங்கம் கைது செய்தது. ஆனாலும் அவர்கள் அதற்கு முன்பாகவே தங்கள் இயக்கத்தின் இலக்குகளை விளக்குவதற்கான கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். ஓராண்டு கழித்து அதிபர் அலுவலகத்தின் ஒரு பிரிவான ‘செயல்நெறிசார் ஆய்வுகளுக்கான ஈரானிய மையம்’ சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஹிஜாப் அணிவதைக் கட்டாயப்படுத்துவதை நாற்பத்தியொன்பது சதவிகித ஈரானியப் பெண்கள் எதிர்க்கின்றனர் என்று கண்டறியப்பட்டிருந்தது.
ஒவ்வொரு புதன்கிழமையும் ஆண்களும் பெண்களும் வெள்ளை ஆடைகள், வெள்ளை முக்காடு அணிந்து கொள்ளும் ‘வெள்ளைப் புதன்’ பிரச்சாரம் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் தங்களுடைய முக்காடுகளைக் கழற்றி, குச்சிகளில் பொருத்தி மேலுயர்த்திப் பிடித்து அசைக்கவோ அல்லது அமைதியாக நின்று கொண்டிருக்கவோ செய்வார்கள். விடா மோவாஹெட் என்ற முப்பத்தியொரு வயதுப் பெண் டிசம்பர் 27 அன்று ஒரு பெட்டியின் மேல் ஏறி நின்று, தனது ஹிஜாபைக் கழற்றி குச்சியில் மாட்டி அசைத்தார். சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்ட அவரது போராட்டம் குறித்த புகைப்படம் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
‘பெண்களின் அதிகாரம், தாங்கள் அணிய விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை சட்டத்திற்கு கீழ்ப்படியாமையைப் பயன்படுத்திப் பெறுவது’ ஆகியவற்றையே இத்தகைய எதிர்ப்புகள் குறித்தன என்று கல்வியாளர் பாஹே சிராஜி கருத்து தெரிவித்தார்.
உடை அணிவதற்கான தேர்வை அதற்கு முற்றிலும் மாறான வழியில் பிரான்ஸ் கட்டுப்படுத்தியது. பொதுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் மதச் சின்னங்களை அணிந்து வருவதை பிரான்ஸ் 2004ஆம் ஆண்டு தடை செய்தது. அந்த நடவடிக்கை முஸ்லீம் மாணவிகள் தலையில் முக்காடு அணிந்து வருவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டது என்றே கருதப்பட்டது. பொது இடங்களில் புர்கா அணிவதை பிரான்ஸ் 2010ஆம் ஆண்டு தடை செய்தது. பிரெஞ்சு அரசாங்கம் வெளியிட்ட ஒரு பிரச்சாரத்தில் ‘குடியரசு மறைக்கப்படாத முகத்துடன் வாழ்கின்றது’ என்று அறிவிக்கப்பட்டது.
பிரெஞ்சு அரசாங்கம் மற்றுமொரு சட்டத்தையும் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மதச் சின்னங்களை அணிவதைத் தடைசெய்கின்ற சட்டம் தனியார் பொதுச்சேவை ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டது. மதச்சார்பின்மையைக் காரணம் காட்டி முஸ்லீம்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறது என்று அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு எதிராக இடதுசாரிகள் தாக்குதலை மேற்கொண்டனர். அது மட்டுமல்லாமல், #HandsOffMyHijab என்ற ஹேஷ்டேக்குடன் தீவிரமான சமூக ஊடகப் பிரச்சாரமும் அப்போது முளைத்தெழுந்தது.
நாவலாசிரியரான மர்ஜானே சத்ராபி ஈரானில் பிறந்து அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தவர். இன்று அவர் பாரிஸில் வசித்து வருகிறார். ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடந்தபோது சத்ராபிக்கு பத்து வயது. தி கார்டியனில் வெளியான கட்டுரையில் ஹிஜாப் அணிய வற்புறுத்தப்பட்டதால் தான் வெறுப்படைந்ததாக சத்ராபி கூறியுள்ளார். ‘மதத்தை வெளிப்படுத்திக் கொள்வதை நோக்கித் தள்ளப்படுவது எவ்வாறு இருக்கும் என்பதை நான் அறிவேன். அதனால் மதச்சார்பற்ற நிலைக்குத் தள்ளப்படுவதும் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஈரானியப் பெண்களிடம் வெறியர்கள் செய்த தவறை நாம் செய்ய வேண்டாம். மதச்சார்பின்மை என்ற பெயரில் நடத்தப்படும் இதுவும் அதேபோன்ற வன்முறைதான்’ என்றும் சத்ராபி கூறியிருந்தார்.
அல்ஜியர்ஸ் போர்
ஹிஜாப் மீது பிரான்ஸ் கொண்டிருந்த அணுகுமுறை அதன் காலனித்துவ வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகும். 1958ஆம் ஆண்டு அல்ஜீரிய சுதந்திரப் போரின் போது, பெண்களின் முக்காடை அகற்றுவதற்காக பெருந்திரளான பொது விழாக்களை பிரெஞ்சு காலனித்துவ ஆட்சி நடத்தியது. தங்களை விடுவிப்பது என்ற கொளகிஅயுடன் இருந்த பிரெஞ்சுக்காரர்களை அல்ஜீரியப் பெண்கள் ஆதரித்ததை உணர்த்துவதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது. பிந்தைய ஆண்டுகளில் பெரும்பாலான பெண்கள் ஏழைகளாக இருந்ததுவும், முக்காடை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதுவும் கண்டறியப்பட்டது.
புகழ்பெற்ற காலனித்துவ எதிர்ப்பு அறிவுஜீவியான ஃபிரான்ட்ஸ் ஃபானன் அந்த பிரெஞ்சுக் கோட்பாடு பற்றி ‘அல்ஜீரிய சமுதாயத்தின் கட்டமைப்பை, அதன் எதிர்ப்பாற்றலை அழிக்க விரும்பினால், முதலில் நாம் பெண்களை வென்றெடுக்க வேண்டும்; தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் திரைக்குப் பின்னால் உள்ள அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்…’ என்று கூறினார்.
முக்காடை அகற்றிய நிகழ்விற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற வகையிலே அல்ஜீரியப் பெண்கள் பலரும் முக்காடு அணிந்து கொள்ளத் தூண்டப்பட்டனர். ஆனால் முக்காடு அணியாத மேற்கத்திய பெண்களைப் போன்று இருக்குமாறு அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவி செய்தது. மேற்கத்திய உடையணிந்திருந்த பெண்களை சோதனைகள் எதையும் மேற்கொள்ளாமலேயே உடனடியாகச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல பிரெஞ்சு காவலர்கள் அனுமதித்தனர். அவ்வாறு சோதனைகளின்றி சோதனைச் சாவடிகளை விட்டு வெற்றிகரமாக வெளியேறிய பெண்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பிரெஞ்சு துருப்புக்கள் மீது சில சமயங்களில் தாக்குதல்களை நடத்தி வந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தி வந்தவர்களுக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.
அல்ஜீரியாவில் 1962ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி வீழ்ந்த பிறகு, நகர்ப்புறங்களில் இருந்த அல்ஜீரியப் பெண்கள் பலரும் முக்காடு அணிவதை நிறுத்திக் கொண்டனர். இருந்தாலும் 2019ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாகத் தேர்தலில் போட்டியிடுவது என்று அதிபர் அப்தெலாசிஸ் பௌட்ஃபிலிகா எடுத்த முடிவிற்கு எதிராக வீதிகளில் இறங்கிய பெண்கள் எதிர்ப்புச் சின்னமாக ஹிஜாப் குறித்த தங்களுடைய நினைவுகளை வலியுறுத்தியே போராடினர். போராடிய அந்தப் பெண்கள் அல்ஜீரிய முக்காடை அணிந்திருந்தனர். போராடிய அந்தப் பெண்களிடம் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஹோட்டல் ஒன்றின் மீது குண்டுவீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை (பின்னர் சிறைவாசமாக மாற்றப்பட்டது) விதிக்கப்பட்ட டிஜமிலா பௌஹிரெட் உரையாற்றினார்.
இந்தியாவிற்கான படிப்பினைகள்
உலக வர்த்தக மையத்தின் மீதான 9/11 தாக்குதலுக்குப் பிறகு தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அவமானங்கள், வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக முஸ்லீம் பெண்களில் சிலர் ஹிஜாப் அணிவதை நிறுத்திக் கொண்டனர். 9/11க்குப் பிறகு அந்த பிரச்சனைக்குரிய மாதங்களில் முஸ்லீம்கள் அல்லாத பெண்கள் தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை முஸ்லீம் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது மிகவும் குறிப்பிடத்தக்க செயலாக இருந்தது என்று தனது புத்தகத்தில் லீலா அகமது குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் 2002ஆம் ஆண்டு வெளியான எமிலி வாக்ஸின் அறிக்கையில், பல்கலைக்கழக வளாகங்களில் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் மாணவிகளின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க அளவிலே இருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஹிஜாப் அணிந்து கொள்வதன் மூலம் தங்களுடைய பெருமிதத்தை – முஸ்லீம்கள் என்பதாக உணர்வதில் தங்களுக்குள்ள பெருமிதத்தை தாங்கள் வெளிப்படுத்திக் கொள்கிறோம் என்று அந்த மாணவிகள் வாக்ஸிடம் கூறினார்கள்.
வாக்ஸ் போன்றவர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி அகமது ‘வெவ்வேறு சமூகங்களில் [ஹிஜாப்] அணிந்து கொள்பவர்கள் அதுகுறித்து வெவ்வேறு பொருளில் வெளிப்படுத்துகின்ற கருத்துகளில் தெளிவான தொடர்ச்சி உள்ளது’ என்று எழுதியுள்ளார். ‘பெரும்பான்மை சமூகத்தின் கருத்துக்களுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற திறனை ஹிஜாப் கொண்டிருக்கின்றது; வெளிப்படையாக எதிர்ப்பைப் பதிவு செய்கின்ற சிறுபான்மையினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் காட்டிக் கொள்வதன் மூலம் பிரதான சமூகத்திடமிருந்து வருகின்ற சமத்துவமின்மை, அநீதிகளுக்கு எதிராகச் சவால் விடும் வகையிலே தங்களுடைய பாரம்பரியம், விழுமியங்களை உறுதிப்படுத்திக் கொள்வதாக ஹிஜாபை அணிவது இருக்கிறது என்பதே அனைத்து சமூகங்களிலும் ஹிஜாப் அணிவது குறித்து இருந்து வருகின்ற பொதுவான கருத்தாகும்’ என்று அகமது முடிக்கிறார்.
அகமதுவின் அந்த முடிவு இன்று கர்நாடகாவில் நடக்கின்ற ஹிஜாப் சர்ச்சையின் மையப்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. வகுப்புகளுக்கு பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவது சமத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என்று சொன்னால், பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்றம், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை என்று பங்கேற்பதும் அவ்வாறாகவே இருக்கும். ஒவ்வொரு மாதமும் பொது இடங்கள் ஹிந்துமயமாக்கப்படுவது ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.
ஹிஜாப் அணிந்து போராடுகின்ற பெண்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவு அளிக்கிறதா என்பது இங்கே முக்கியமல்ல. ஹிஜாப் அணிவதன் மூலம் அதனை அணிந்து கொள்பவர்கள் தங்களை கருத்து மாறுபாடுள்ள சிறுபான்மையினர் என்று பார்த்துக் கொள்கின்றனர் என்ற அகமதுவின் முடிவில்தான் ஹிஜாப் அணிவதன் முக்கியத்துவம் இருக்கின்றது. நாவலாசிரியர் சத்ராபி கூறியதைப் போல – பெண்களைக் கட்டாயப்படுத்தி ஹிஜாபை கழற்றச் சொல்வது அல்லது அணிந்து கொள்ளச் சொல்வது என்று இரண்டுமே பெண்கள் மீது ஏவப்படுகின்ற வன்முறையாகவே இருக்கும்.
https://www.newsclick.in/History-how-Hijab-Vanished-Reappeared-Symbol-Dissent
நன்றி: நியூஸ்க்ளிக்
தமிழில்: தா.சந்திரகுரு
உங்களைக் கைகூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் அன்புள்ள ஆசிரியரே! தயவுசெய்து இதைமட்டும் செய்யாதீர்கள் – ரவீஷ் குமார் | தமிழில்: தா.சந்திரகுரு
இன்று பள்ளி மாணவி ஒருவர் அனுப்பி வைத்திருந்த செய்தி என்னை மிகவும் குற்ற உணர்வுக்குள்ளாக்கியது. வேறொருவரின் செயல்களுக்காக நான் ஒருபோதும் இதுபோன்று குற்ற உணர்வுக்கு உள்ளானதாக என்னுடைய நினைவில் எதுவுமில்லை. நம்மிடையே இருக்கின்ற வெறுப்புணர்வை விதைக்கின்ற வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மூலமாகப் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், நம்முடைய குழந்தைகளை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடியாது போய் விடும். அந்த மாணவி எனக்கு அனுப்பி வைத்திருந்த செய்தியில் பாதிப்பேர் ஹிந்துக்கள், பாதிப்பேர் முஸ்லீம்களாக இருக்கின்ற தங்கள் வகுப்புக்கென்று இருக்கும் குழுவிடம் வகுப்புவாதம் கொண்ட செய்தியொன்றை ஆசிரியர் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஹிந்தி ஆசிரியர் மனதைப் பாதிக்கின்ற வீடியோ ஒன்றை மக்களைப் பிளவுபடுத்துகின்ற செய்தியுடன் இணைத்து தங்களுடைய குழுவில் பகிர்ந்து கொண்டிருந்தார் என்றும் அந்தச் சிறுமி குறிப்பிட்டிருந்தார்.
‘ஆசிரியரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் சிறுமி ஒருவளின் தொண்டை மீது கத்தியை வைத்திருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவை நன்கு கவனித்த என்னால் முஸ்லீம் பையன் ஒருவன் மீது தவறுதலாகக் குற்றம் சாட்டும் வகையில் அது இருப்பதைக் காண முடிந்தது. உண்மையில் போலிச் செய்தியொன்றைப் பரப்பி மாணவர்களுக்கிடையே வகுப்புவாத மோதலை உருவாக்க அந்த ஆசிரியர் முயன்றுள்ளார். இதில் நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அந்தச் செய்தி வேண்டுகோளுடன் இருந்தது. ஆசிரியர்களை வணங்கி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி வருகின்ற நாட்டில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களிடம் ஹிந்து-முஸ்லீம் என்ற விவாதத்தைப் பரப்புவதைப் பற்றி என்ன சொல்ல?
வீடியோவில் உள்ள சிறுவன் முஸ்லீம் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அந்தச் சிறுமியை அவன் கொல்ல முயற்சி மேற்கொள்வதாகவும் வீடியோவைப் பகிர்ந்திருந்த அந்த ஹிந்தி ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். பகிரப்பட்ட அந்த வீடியோவுடன் ‘ஜாகோ (எழுந்திரு) ஹிந்து, இது நாம் ஒன்றுபட வேண்டிய நேரம். நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும்’ என்ற வேண்டுகோளும் இணைந்திருந்தது.
ஆசிரியர் அனுப்பி வைத்த வாட்ஸ்ஆப் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை நான் பார்த்தேன். குஜராத்திலிருந்து வெளியான அந்த வீடியோ வகுப்புவாத தொனியுடன் தில்லி பள்ளிகளில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவானது உண்மையா அல்லது போலியா என்று ஆய்வு செய்ய முனைந்துள்ள அந்தச் சிறுமியின் மனதில் அந்த வீடியோ ஏற்படுத்தியிருக்கின்ற விளைவை சற்றே கற்பனை செய்து பாருங்கள். வீடியோவைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியரால் அந்த வீடியோ குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்க முடியாதா? எந்தவொரு கொடூரமான செயலும் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாகவே இருக்கும் என்பதை குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இப்படித்தான் பயன்படுத்திக் கொள்வதா?
சிறிது நேரம் கழித்து அந்த ஆசிரியர் பகிர்ந்து கொண்ட வீடியோ குறித்து பள்ளி முதல்வர் ‘ஒரு தவறு நடந்து விட்டது, இனிமேல் மீண்டும் அதுபோன்று நடக்காது’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அந்த ஆசிரியரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றே நினைக்கிறேன். குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியரை நம்பவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். நாம் அனைவருமே தற்செயலாக தவறான குழுக்களுக்கு செய்திகளை அனுப்பி வைத்திருக்கின்றோம் என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதே நமக்குப் போதுமானதாகும்.
ஆனாலும் இதுபோன்று பகிரப்படுகின்ற செய்திகள் நன்கு சரிபார்க்கப்பட வேண்டும். அந்த ஆசிரியர் கடந்த காலங்களில் இதுபோன்ற வகுப்புவாதக் கருத்துகள் அல்லது பரிந்துரைகள் ஏதேனும் செய்திருக்கிறாரா என்பதை மாணவர்களுடன் கலந்து பேசி பள்ளி முதல்வர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற ஆசிரியர்கள் யாராவது இதுபோன்ற செய்திகளை தங்கள் பள்ளிக் குழுக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதையும் அவர் கண்டறிய வேண்டும். ஆசிரியர்களின் மனநிலை குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
இங்கே அந்த ஆசிரியர், மாணவி, அவரது தந்தை அல்லது தில்லியில் உள்ள அந்தப் பள்ளியின் பெயர்களை தவிர்த்திருக்கிறேன் என்றாலும் அந்த மாணவி அனுப்பி வைத்த செய்தியில் இருந்த ‘நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்ற கடைசி வரியைத் தவிர்ப்பது உண்மையில் மிகவும் கடினமான காரியமாகவே உள்ளது.
அன்புள்ள ஆசிரியரே, தயவுசெய்து உங்களுக்கு இது போன்ற வெறுப்பு நிறைந்த செய்திகளை அனுப்பி வைப்பவர்களிடமிருந்து – அது உங்களுடைய கணவராக இருந்தாலும்கூட – நீங்கள் விலகியே இருங்கள். மற்றவர்களை மிகவும் மோசமாக வெறுக்கின்ற ஒருவரால் நிச்சயம் உங்களையும் நேசிக்க முடியாது. இந்த மாணவர்கள் – அவர்கள் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது வேறு எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – உங்களுடைய குழந்தைகள். அவர்களை உங்கள் இதயத்திற்கு நெருக்கமாக இறுகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எட்டு அல்லது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களின் வயது என்னவாக இருக்கும்? உங்களிடம் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனம் இருக்க வேண்டாமா?
ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைத்திருக்கும் அன்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்து நீடித்திருக்கும். பாட்னாவில் உள்ள எனது பள்ளியில் முன்னர் கற்பித்து வந்த உதய்ப்பூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என்னுடைய ஆசிரியர்கள் இருக்கின்ற பழைய புகைப்படம் ஒன்றை இன்று எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான கிரேசி மைக்கேலும் இருந்தார். அவரைப் பார்த்த ஒரேயொரு பார்வையே என்னிடம் புன்னகையை வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. அதுதான் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு. அந்தப் புகைப்படத்தில் இருந்த ஆசிரியர்கள் – அப்போது என்னிடம் கடுமையாக நடந்து கொண்டவர்களும்கூட – என்னை உணர்ச்சிவசப்பட வைத்தனர். அதனால்தான் இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
‘காந்தி கொலையாளி’ நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் – தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு
நாதுராம் கோட்சே சாவர்க்கரைச் சந்திக்கச் சென்றது குறித்தோ அல்லது அவர்களுக்கிடையிலான அந்த அறிமுகச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பது குறித்தோ குறிப்பிட்ட பதிவுகள் எதுவுமில்லை. ரத்னகிரிக்கு 1929ஆம் ஆண்டு கோட்சே சென்ற தருணத்தில் அவருக்கும் சாவர்க்கருக்கும் இடையில் தொடர்பு உருவாகி வளர்ந்ததாக கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவின் கூற்றிலிருந்து தெரிய வருகிறது.
‘முதன்முதலாக ரத்னகிரிக்கு நாங்கள் வந்த போது சாவர்க்கர் தங்கியிருந்த இடமே இப்போது நாங்கள் தங்கியிருக்கும் இடமாக தற்செயலாக மாறியுள்ளது. பிறகு அதே தெருவின் மறுமுனையில் இருந்த மற்றொரு வீட்டில் அவர் தங்கினார்’ என்று கோபால் நினைவுபடுத்திக் கூறியிருந்தார்.
கோட்சேவின் இளமைப் பருவத்தில் சாவர்க்கர் அவ்வளவு நெருக்கமில்லாதவராகவே இருந்து வந்தார். ரத்னகிரிக்கு கோட்சேவின் குடும்பம் குடிபெயர்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சாவர்க்கரை முதன்முதலாகச் சென்று சந்தித்த போது கோட்சேவிற்கு உத்வேகம் அளித்தவராகவே சாவர்க்கர் இருந்தார். இருந்த போதிலும் சாவர்க்கரை முழுமையாகப் பின்பற்றுபவராக கோட்சே மாறியதற்கான நம்பகமான ஆதாரங்களில் பெரும்பாலானவை 1930ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே கிடைக்கின்றன.
சாவர்க்கரை முதன்முதலாகச் சந்தித்தபோது கோட்சேவிற்கு வயது பத்தொன்பது. ஒல்லியாக இருந்த போதிலும், தன்னைக் காட்டிலும் உயரமாக இருந்த சாவர்க்கரை விட ஆரோக்கியமானராகவே கோட்சே இருந்தார். கட்டுப்படுத்தப்பட்ட நடத்தையுடனிருந்த கோட்சே அமைதி, பணிவு கொண்டவராக இருந்தார். அந்தமானில் இருந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு திரும்பிய புரட்சியாளராக சாவர்க்கரால் அவர் முழுமையாக ஈர்க்கப்பட்டிருந்தார்.
கோட்சேவின் அரசியல் நம்பிக்கைகள் – அவ்வாறு எதுவும் இருந்திருக்குமென்றால் – தெளிவற்றே இருந்தன. அவர் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். அந்தக் கூட்டங்கள் சிலவற்றில் உரையாற்றவும் செய்திருந்தார். ஆயினும் அடிப்படையில் தனது எதிர்காலத்தைப் பற்றி இன்னும் தீர்மானித்துக் கொண்டிராத ஒருவராகவே அவர் இருந்து வந்தார். அரசியல் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட அவர் தன்னை சுதந்திரப் போராட்ட இயக்கத்துடன் இணைத்துக் கொண்டார்.
சாவர்க்கரைப் பின்பற்றுபவராக, ஹிந்துத்துவாவை ஆதரிப்பவராக கோட்சேவை மாற்றியது ஒன்றும் சுமுகமாக நடைபெற்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் அவரது அவதானிப்புகள் ஹிந்து வகுப்புவாத தத்துவத்தின் விசித்திரமான விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாத வகையிலேயே இருந்துள்ளன.
‘பள்ளிகள், கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற காந்தியின் அழைப்பின் பேரில் மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு ஆஜராகப் போவதில்லை என்ற என்னுடைய முடிவை அவரிடம் [சாவர்க்கரிடம்] தெரிவித்தபோது அவர் மிகவும் எரிச்சலடைந்ததாகவே எனக்குத் தோன்றியது. இரண்டு அல்லது மூன்று முறை அவர் அந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு என்னிடம் வற்புறுத்த முயன்றார். என்னிடம் அவர் படிப்பைத் தொடர்வது எந்த அளவிற்கு முக்கியம் என்று விளக்கினார்’ என்று பின்னர் ஒருமுறை கோட்சே கூறியிருந்தார்.
சாவர்க்கரின் ஆலோசனை பெரியவர் ஒருவரின் நல்ல அர்த்தமுள்ள அறிவுரையாகத் தோன்றக்கூடும். ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை இந்தியாவில் இருந்த பெரும் எழுச்சியிலிருந்து விலக்கி வைத்துக் கொள்ள அவரிடமிருந்த ஆர்வத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அது அவ்வாறான அறிவுரையாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்க கோட்சே மறுத்து விட்டார். அவர் அதன் மூலமாக பிரிட்டிஷ் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் முகாமில் இருந்து கோட்சேவை வெளியேற்றுவதற்கான சாவர்க்கரின் முதல் வெளிப்படையான முயற்சியை முறியடித்திருந்தார்.
சாவர்க்கர் மேற்கொண்ட மனமாற்ற முயற்சி குறித்து தொடக்கத்தில் கோட்சே சுயநினைவுடன் இருந்ததையே அவருடைய அந்த ஆரம்பகட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் அது விரைவிலேயே முறிந்து போனது. மகாராஷ்டிராவின் முன்னாள் பிராமண ஆட்சியாளர்களான பேஷ்வாக்களின் உண்மையான தொடர்ச்சி என்று பலராலும் – குறிப்பாக சித்பவான் பிராமணர்களால் – காணப்பட்டு வந்த ஒருவருடன் நெருக்கமாக இருப்பதில் அவர் ஒருவேளை மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.
சாவர்க்கரைப் போலவே, பேஷ்வாக்களின் வாரிசுகள் என்று தங்களைக் கருதிக் கொண்ட மேல்தட்டு பிராமணர்களின் துணைக்குழுவிலிருந்து வந்தவராகவே கோட்சேவும் இருந்தார். கோட்சேவின் பார்வையில் அந்த பிராமணர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சாதியரீதியான பிணைப்பு, மற்ற ஹிந்துக்களைக் காட்டிலும் குறிப்பிட்ட அளவிலான மேன்மை உணர்வை அவருக்கு கொடுத்திருக்கும் என்றே தோன்றுகிறது.
பிராமணர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வருகின்ற வழக்கமான புரோகித சலுகைகளைத் தவிர, போர்க்களத்தில் வீரத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்ற இந்தியாவின் அரிய பிராமண சமூகங்களில் ஒன்றாக சித்பவன் பிராமணர்கள் இருந்தனர். இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்த அவர்கள், இந்தியாவில் முகலாயர், பதான் ஆட்சியாளர்களுக்கு எதிரான நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்டிருந்தனர். அந்த உண்மையே ஹிந்து தேசியவாதத்தின் தேவைகளின் அடிப்படையில் தங்களுடைய வரலாற்றை மறுவிளக்கம் செய்ய அவர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது; அவர்கள் முஸ்லீம் ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஹிந்து எதிர் பாரம்பரியத்தை நிலைநிறுத்துபவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டனர்.
எவ்வாறாயினும், ஹிந்து மறுமலர்ச்சி குறித்த ஆர்வமுள்ளவர்களிடம் சாவர்க்கர் தூண்டிய பெருமையொன்றும் கோட்சேவைப் பொறுத்தவரை புதியதாக இருக்கவில்லை. பூனாவுடன் பரம்பரைத் தொடர்பு இருந்ததால், அந்த உணர்வை – தெளிவற்றதாக இருந்தாலும் – கோட்சே நன்கு அறிந்தே இருந்திருப்பார். பூனாவை ஹிந்து தேசிய மறுமலர்ச்சியாளர்களுக்கான மேடையாகவே பாரம்பரிய சித்பவன் பிராமணர்கள் கருதி வந்தனர். பூனாவிற்கு அப்பால் இருக்கின்ற மலைகளில் பிறந்து வளர்ந்த சிவாஜி முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைகளுக்கு எதிராக தனது கொரில்லா பிரச்சாரத்தை நடத்தினார்.
சிவாஜி போர்வீரர் சாதியில் பிறந்த மராத்தியர் என்றாலும் முதல்வர்கள் அல்லது பேஷ்வாக்களாக வந்த அவரது வாரிசுகள் சித்பவன் பிராமணர்களாகவே இருந்தனர். சிவாஜிக்குப் பிறகு இறுதியில் 1818ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் அடிபணியும் வரை முகலாயர்கள், பதான்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி வந்த பேஷ்வாக்களுடைய கட்டுப்பாட்டு மையமாக பூனாவே செயல்பட்டு வந்தது.
பூனாவின் சித்பவன் பிராமணர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தலைவர் திலக், 1897ஆம் ஆண்டில் பூனாவின் பிரிட்டிஷ் பிளேக் கமிஷனராக இருந்த டபிள்யூ.சி. ராண்டின் படுகொலையில் ஈடுபட்ட சபேகர் சகோதரர்கள் – தாமோதர் ஹரி சபேகர், பாலகிருஷ்ண ஹரி சபேகர், வாசுதேவ் ஹரி சபேகர் – போன்ற இந்தியப் புரட்சியாளர்களை உருவாக்கியிருந்தனர்.
கோட்சேவின் மூதாதையர்கள் சித்பவன் பிராமண சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் பூனாவுக்கு அருகிலுள்ள உக்சன் கிராமத்தில் பூசாரி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனாலும் கோட்சே கீழ்நிலை நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே இருந்து வந்தார். அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் அரபிக் கடலின் கரையில் சாவித்திரி நதியால் உருவான கழிமுகப் பகுதியில் உள்ள பாறைக் கடற்கரை நிலமான ஹரிஹரேஷ்வரில் இருந்து அந்தக் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர் என்று குடும்பத்தின் பரம்பரை குறித்த வரலாறு குறிப்பிடுகிறது.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ராமச்சந்திர கோட்சேவிலிருந்து தொடங்கிய கோட்சே குலத்தைச் சேர்ந்த அனைத்து சித்பவன் பிராமணர்களின் வம்சாவளிகளின் தொகுப்பான கோட்சே குல்வ்ரிதாண்ட் பரம்பரைப் படியில் நன்கு அறியப்பட்டுள்ள முன்னோர்களின் எட்டாவது ஏணியில் கோட்சேவின் தந்தையான விநாயகராவ் இருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் பேஷ்வாக்களின் ஆட்சியின் போது உக்சன் கிராமத்தில் இருந்த மற்ற சித்பவன் குடும்பங்களைப் போலவே ராமச்சந்திர கோட்சேவின் வழித்தோன்றல்களும் முக்கியத்துவம் பெற்று நிலமானியங்களைப் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர, இடைப்பட்ட தலைமுறைகளைப் பற்றி அதிகமாக வேறொன்றும் அறியப்படவில்லை. பரம்பரை பரம்பரையாக அவர்களிடமிருந்த விவசாய நிலங்கள் பிரிக்கப்பட்டுக் கொண்டே வந்ததால், விநாயகராவின் தந்தை வாமன்ராவ் மிகச் சொற்ப அளவிலான நிலத்தையே பெற்றார்.
தனது முன்னோர்களைப் போலவே விவசாயத்துடன் அர்ச்சகர் தொழிலையும் கலந்து வாமன்ராவ் வாழ்ந்து வந்தார். ஆயினும் அவரிடம் நவீன கல்வியை அவரது மகன் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. எனவே தனது மகன் ஆரம்பக் கல்வியை முடித்தவுடன் பூனாவில் இணையான நிறுவனம் ஒன்றை அவர் நிறுவினார். அவர்கள் குடும்பத்தில் மெட்ரிகுலேஷன் படித்து முடித்த முதல் ஆளாக விநாயகராவ் இருந்தார். அதற்குப் பின்னர் அவருக்கு தபால் துறையில் அரசு வேலை கிடைத்தது. மாற்றத்திற்கு உட்பட்டதாக அவரது பணி இருந்ததால், விநாயகராவ் தனது மூதாதையர் கிராமத்தை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. இருப்பினும் அவருக்கு சிறிய அளவிலே விவசாய நிலம், விசாலமான வீடு இன்னும் அங்கே இருந்து வந்தது.
சாவர்க்கரின் குழுவிற்கு கோட்சே அந்த வயதில் மாறியதை அல்லது சேர்ந்து கொண்டதை உண்மையான சித்பவனின் இயல்பான பாதை என்று விளக்குவதற்கு அவரது பின்னணி போதுமானதாகவே இருந்தது. தனது கடந்த காலம், சாதி பற்றி அவருடைய கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் கோட்சே என்ற அந்த இளைஞர் காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட தீவிர பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகள், உள்ளூர் எதிரிகள் என்று அழைக்கப்பட்ட முஸ்லீம்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஹிந்துக்களைத் தயார்படுத்துவது என்ற பெயரில் சாவர்க்கரால் மேற்கொள்ளப்பட்ட காலனித்துவ ஆட்சியுடன் சமரசம் செய்து கொள்ளும் அணுகுமுறை ஆகியவற்றிற்கு இடையே என்று இரண்டு உலகங்களிலும் சுதந்திரமாகப் பயணித்து ஊசலாடிக் கொண்டிருந்ததாகவே தெரிய வருகிறது.
ஆனால் கோட்சேவிடம் இறுதியில் சாவர்க்கரின் வழியே வெற்றி பெற்றது. தனது சொந்த வழியில் தன்னுடைய சாதி சகோதரர்களிடையே அதிகமான ஆறுதலை கோட்சே கண்டடையத் தொடங்கினார். அவர்களுடைய மறுமலர்ச்சித் திட்டத்துடன் அவர் ஒருங்கிணைக்கப்பட்டார். அந்தக் குழு சிலர் மதம் சார்ந்து இயங்குபவர்களாக, சிலர் மதச்சார்பற்றவர்களாக என்று ஒரு கலப்பான குழுவாக இருந்தது. சாதி விசுவாசத்தால் சாவர்க்கரின் தலைமையைச் சார்ந்திருப்பதன் மூலம் மட்டுமே அவர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தனர்.
சுதந்திரப் போராட்ட இயக்கத்திலிருந்து தான் விலகியதற்கான காரணம் தன்னுடைய மகன் அதிகாரிகளைத் தொந்தரவு செய்வதை விரும்பாத, அரசாங்க ஊழியராக இருந்த தந்தையின் அச்சத்தில் வேரூன்றியதாகவே இருந்தது என்று கோட்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு கூறியிருந்தார். ‘எனது செயல்பாடுகள் அவரது வேலையைப் பாதிக்கக்கூடும் என்று என்னுடைய தந்தை அஞ்சினார், எனவே என்னிடம் சட்டங்களை மீறுகின்ற வகையில் இருக்கின்ற எந்தவொரு இயக்கத்திலும் பங்கேற்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்’ என்று கோட்சே விவரித்திருந்தார்.
சாவர்க்கரின் வற்புறுத்தல் அல்லது கோட்சே குடும்பத்தினரின் அழுத்தம் என்று இரண்டு காரணங்களில் எது, தேசியவாத கிளர்ச்சியாளர்களுடனான தொடர்பைக் கைவிடுவதற்கான கோட்சேவின் முடிவில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்த அறியப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. அவரது தந்தை காங்கிரசின் தலைமையிலான போராட்டக் கூட்டங்களில் கோட்சே பங்கேற்கத் தொடங்கியதிலிருந்தே தனது அச்சங்களை அவரிடம் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் கோட்சே தன்னை சாவர்க்கர் வேறு வழியில் அழைத்துச் செல்லும் வரை தன்னுடைய தந்தையின் அச்சத்தை எப்போதும் புறக்கணித்தே வந்திருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது.
சாவர்க்கரின் வழி மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது. மிகவும் உறுதியுடன் வலிமையாக அவர் பேசி வந்தார் என்றாலும், தனது மனதில் உள்ளவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதில் இருந்து அவர் எப்போதும் பின்வாங்கிக் கொண்டவராகவே இருந்தார். ஆங்கிலேயர்கள் குறித்து தன்னிடமிருந்த சமரச உணர்வை மறைப்பதற்காக மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட பேச்சுகளில் அவர் ஈடுபட்டார். ‘சிறைவாசத்தின் போது அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதியளித்திருந்ததால் பாரிஸ்டர் சாவர்க்கர் அரசியலை மிகவும் அரிதாகவே விவாதித்து வந்தார்’ என்று கோட்சே அதுகுறித்து விவரித்தார். அதுபோன்ற வாய்ச்சவடால்கள் குறிப்பிட்ட வகையிலான அரசியலை கணிசமாக, வலுவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அப்போது அவரால் அறிந்து வைத்திருக்க முடியாது.
காந்தியால் உருவான கவலைகளே அந்த அரசியலுக்கான அடையாளமாக இருந்தன. ஒரு பழமைவாதியாகவும் இல்லாமல், முற்போக்குவாதியாகவும் இல்லாமல் இரண்டின் பொதுவான சாராம்சம் கொண்டவனாக தான் இருப்பது போல காந்தி தன்னைக் காட்டிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரால் பரிந்துரைக்கப்பட்ட சமூக மாற்றங்களும், மக்களிடமிருந்து அவர் கோரிய அரசியல் செயல்பாடுகளும் ஆச்சாரமான ஹிந்துத்துவத்தை சீர்குலைக்கும் வகையிலேயே இருந்தன.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை இந்தியக் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று, கீழ்நிலையில் இருந்த பிராமணர் அல்லாத விவசாயக் கலாச்சாரங்களை உண்மையான ஹிந்து மதம் என்று வடிவமைத்ததன் மூலம், தங்களுடைய கடந்த கால மேலாதிக்கத்தை புதுப்பிக்க கனவு கண்டு வந்த ஹிந்து மேல்தட்டினரிடம் காந்தி அச்சத்தை உருவாக்கியிருந்தார். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடி ஆண்களுக்குச் சமமான நிலைக்கு பெண்களைக் கொண்டுவர முயல்வதன் மூலம் அத்தகைய ஹிந்துக்கள் காலனித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான காந்தியின் முயற்சியைக் கூட ஆழ்ந்த கவலையுடனே பார்த்தனர்.
பிராமண மேலாதிக்கத்தைத் தகர்க்க முயன்ற காந்தி தன்னை சமூக சீர்திருத்தவாதி என்று சொல்லிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதுவும் அவர்களுடைய பாதுகாப்பின்மை உணர்வை அதிகரித்திருக்க வேண்டும். தன்னை ஒரு சனாதானி, ஆச்சாரமான ஹிந்து என்றே காந்தி உறுதியாக நம்பி வந்தார்.
காந்தி மீதிருந்த அந்தப் பார்வையை நீக்குவதே சாவர்க்கர் அரசியலின் முக்கிய பகுதியாக இருந்தது. அப்போதுதான் தனது அரசியலில் வெற்றியடைய முடியும் என்று சாவர்க்கர் நினைத்திருக்கக் கூடும். சாவர்க்கருக்கென்று சில அனுகூலங்களும் இருந்தன. பாரம்பரியமாக இருந்து வருகின்ற மேல்தட்டு சமூகத்தினரின் மேலாதிக்கத்தை மாற்றியமைக்காமலேயே, பல்வேறு சாதி ஹிந்துக்களை ஒன்றிணைப்பதற்காக தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையிலான தேசியவாதத்தின் எதிரிகளாக முஸ்லீம்களை முன்னிறுத்தி அரசியலில் பிராமணர்களின் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் வகையில் அவரிடமிருந்த உத்வேகத்தை தாங்களும் பகிர்ந்து கொண்டிருந்தவர்களிடம் அவர் முன்வைத்த பார்வை எளிதில் சென்றடைந்தது.
ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவது, சமூகத்தின் மையத்தில் இருந்து பிராமணர்களை வெளியேற்றுவதன் மூலம் ஹிந்து மதத்தை அரசியல் ரீதியாக மறுவரையறை செய்வது என்று மேற்கொண்ட முயற்சிகள் மூலமாக அவர்களை அச்சுறுத்திய காந்தி அவர்களிடம் அதற்கான சாத்தியங்களை உருவாக்கியிருந்தார். சித்பவன் பிராமணர் பிரிவினரைப் பொறுத்தவரை – குறிப்பாக சமகால சமூக அரசியல் அமைப்பில் தங்களுடைய பாரம்பரிய சிறப்புரிமை நிலைக்கும், தங்களுடைய தற்போதைய உண்மையான நிலைக்கும் இடையே உள்ள இடைவெளியுடன் சமரசம் செய்ய முடியாதிருந்தவர்களுக்கு – அவ்வாறு உருவாகியிருந்த கவலை அந்தக் காலத்தில் அவர்களிடமிருந்த நிரந்தர உணர்வாகவே இருந்தது. இழந்த பெருமையை மீட்டெடுக்க அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த போது காந்தியின் கவர்ச்சி அவர்களை ஈர்க்கவில்லை.
காந்தியின் மீதான அந்த வெறுப்புக்கு மிகவும் குறுகிய, சாதிய நோக்கும் ஒரு காரணமாக இருந்தது. பனியாவாக அதாவது வணிகர்கள் மற்றும் பணம் கொடுத்து வாங்குகின்ற சாதியைச் சார்ந்தவராக, பம்பாய் மாகாணத்தில் இருந்த சமூக கலாச்சார மண்டலமான குஜராத் பகுதியைச் சார்ந்தவராக காந்தி இருந்தார். அப்போது மகாராஷ்டிராவில் இருந்த அந்தப் பகுதி பாரம்பரியமாக பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பகுதியாகவே இருந்து வந்தது. மகாராஷ்டிரர்களில் ஒரு பிரிவினரிடம் குஜராத்திகள் குறித்து எப்போதும் மோசமான பார்வையே இருந்து வந்தது. அதுமட்டுமல்லாது பனியாக்களை சூழ்ச்சி நிறைந்தவர்கள் என்றே பிராமணர்கள் பலரும் கருதி வந்தனர்.
https://scroll.in/article/1014167/gandhis-assassin-how-vd-savarkar-converted-nathuram-godse-to-his-anti-muslim-cause
நன்றி: ஸ்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
பொய் மனிதனின் கதை 8 – ஜா. மாதவராஜ்
“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டு விடும்”
அடால்ப் ஹிட்லர்

“விக்கிலீக்ஸ் மிகச் சரியாகத்தான் சொல்லும். நான் ஊழலற்றவன் என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது” என்று குஜராத் முதல் மந்திரியாய் இருந்த நரேந்திர மோடி 2011 மார்ச் 22ம் தேதி ஊடகங்களிடம் சொல்லி புளகாங்கிதம் அடைந்தார். “மக்களிடம் கேட்டறிந்தே அந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றும் தெரிவித்தார். இதனை அவரது வலைத்தளத்திலும் பதிவு செய்தார். அதே நாளில் குஜராத்தில் பண்டிட் தீனதயாள் பல்கலை கழகத்தில் பேசும்போதும், “நான் ஊழலற்றவன் என அமெரிக்கா சொல்லி விட்டது.” என்று தம்பட்டமும் அடித்துக் கொண்டார்.
விஷயம் என்னவென்றால் விக்கிலீக்ஸிலிருந்து மைக்கேல் ஓவன் என்பவர் 2006ம் ஆண்டில் மோடியை சந்தித்து உரையாடியிருந்தார். குஜராத் கலவரங்களால் ஏற்பட்ட களங்கத்தால் மோடியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்து விட்டிருந்தது. அதையொட்டி மனித உரிமை மீறல் குறித்தும், மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடந்த உரையாடல்களின் அடிப்படையில் மோடி குறித்த ரிப்போர்ட் ஒன்றை விக்கிலீக்ஸுக்கு ஓவன் அனுப்பி இருந்தார்.
2011 மார்ச் 22ம் தேதி வெளியான ஹிந்து நாளிதழில் அந்த ரிப்போர்ட் பற்றிய தகவல்கள் குறித்த செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. ”குஜராத்தின் பொது வாழ்க்கையில் ஊழலை குறைத்தவர் போன்ற பிம்பத்தை மோடி வெற்றிகரமாக கட்டமைத்திருந்தார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதைத்தான் அப்போது குஜராத் முதலமைச்சராய் இருந்த நரேந்திர மோடி இங்கு முதலில் குறிப்பிட்டபடி தன் இஷ்டத்திற்கு திரித்துக் கொண்டார். அப்போது யாரும் பெரிதாய் அது பற்றி அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை. 2013ம் ஆண்டில் பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், மோடியின் விசுவாசிகளும், பிஜேபி தொண்டர்களும், இந்துத்துவ வெறியர்களும் மோடி குறித்து நாடெங்கிலும் பற்ற வைத்த கதைகளில் அதற்கு கை, கால், வாய் எல்லாம் முளைத்திருந்தது.
“அமெரிக்கா மோடியைக் கண்டு பயப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு மோடி ஊழல் செய்யாதவர் என்று தெரியும்.” என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சொன்னதாக டுவீட்டரில் தொடர்ந்து செய்திகள் பரப்பி விடப்பட்டன. மோடிக்கு அது குறித்தெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமோ, வெட்கமோ இருக்கவில்லை.
2002ம் ஆண்டிலிருந்து குஜராத் முதலமைச்சராக இருந்த காலமெல்லாம் அவர் ஊழலற்றவர் என்ற பிம்பத்தை எப்படி கட்டமைத்திருந்தார் என்பதை முதலில் தெரிந்து கொண்டு இந்தக் கதையை தொடர்வோம்.
‘சுஜலாம் சுபலாம் யோஜனா’ என குடிநீர், விவசாயத்திற்கான நீர் வளத்தை விரிவுபடுத்தும் திட்டம் செப்டம்பர் 2004ம் ஆண்டு குஜராத்தில் கொண்டு வரப்பட்டது. திட்டங்களுக்கு பேர் வைப்பதில் எல்லாம் ஒரு குறையும் இருக்காது. டிசம்பர் 2005ற்குள் 4904 கிராமங்கள், 34 நகரங்களுக்கு அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு இருந்தது. அதற்கான மொத்தச் செலவு 458.50 கோடி என நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு காண்டிராக்டருக்கு ஒரு காண்ட்ராக்டுதான் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த திட்டம் 2008ம் ஆண்டு வரையிலும் கூட நிறைவேற்றப்படவே இல்லை. 911 கோடி ருபாய் செலவு செய்தும் 2524 கிராமங்கள், 19 நகரங்களில் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. விதிமுறைகளுக்கு எதிராக 106 காண்ட்ராக்டுகளை 16 காண்டிராக்டர்களுக்கு மொத்த மொத்தமாய் வழங்கி இருந்தது மோடியின் அரசு. வரையறுக்கப்பட்டதை விட அதிக நிதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டும் இருந்தது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (The Comptroller and Audit General of India – CAG) அறிக்கையில் அதில் நடந்த ஊழல்களும், முறைகேடுகளும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

குஜராத்தில் 2002ம் ஆண்டிற்கு பிறகான மோடி அரசின் நிர்வாகத்தின் லட்சணத்திற்கு ஒரு பதம் அது. ஆனால் “நான் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன்” என 2007 டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மோடி தைரியமாக மார்தட்டி பிரச்சாரம் செய்தார். மூலை முடுக்கெல்லாம் இந்த வாசகங்கள் நிரம்பிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
அரசு அலுவலகங்களில், கீழ்மட்ட அளவில் லஞ்சத்துக்கு எதிரான தீவீரமான கண்காணிப்புகள் இருப்பதாய் காட்டிக்கொண்டு, அங்கங்கு சில அதிகாரிகளை கைது செய்து ஊழலுக்கு எதிரான தனது வேகத்தைக் காட்டிக் கொண்டார். ஊழலுக்கு எதிரான பெரும் யுத்தத்தை தான் தொடங்கி விட்டதாகவும், அதனை ஒழித்துக் கட்டாமல் விட மாட்டேன் என்றும் வாளை சுழற்றிக் கொண்டிருந்தார்.
மக்களின் பார்வைக்கு வராமல் உயர் மட்ட அளவிலான பெரும் ஊழல்கள் நடந்து கொண்டு இருந்தன. கார்ப்பரேட்களுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.
தொழில் வளர்ச்சி என்ற பேரில் டாட்டா, அதானி உட்பட பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலங்களை வழங்கியதில் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு இழப்புகள் ஏற்பட்டு இருந்தன. பெரும் முறை கேடுகள் நடந்திருந்தன. ‘Corrupt Modi’ என்னும் ஒரு இணையதளமே உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊழலும் கதை கதையாய் சொல்லப்பட்டு இருக்கிறது.
2007ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் துவங்கப்பட்ட Gift City (Gujarat International Finance Tech City) திட்டம் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை. 12.26 லட்சம் சதுர அடி நிலம் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தம் 2700 கோடி மதிப்புள்ள நிலத்தை, சதுர அடிக்கு ரூ.1/- என கணக்கிடப்பட்டு ‘Gift’ போல கொடுக்கப்பட்டது.
முதலமைச்சராயிருந்த காலத்தில் அரசு விமானங்களையோ, வணிக ரீதியான விமானங்களையோ ‘ஏழைத்தாயின் மகனான’ மோடி பயன்படுத்தவில்லை. உயர் தர வசதிகளுடன் கூடிய தனி விமானங்களையே பயன்படுத்தி வந்தார். அவைகள் எல்லாம் அவரால் சலுகைகள் வழங்கப்பட்ட பெருமுதலாளிகளுக்குச் சொந்தமானவை. அதெல்லாம் ஊழல் கணக்கிலேயே இல்லை.
குஜராத் அரசின் இளம் வருமானத்துறை அதிகாரிகளுக்கான பணி நியமனத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றது. சர்ச்சைகள் எழுந்தன. சட்டசபையில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. காந்திநகரில் கோச்சிங் செண்டர் நடத்தி வந்த கல்யாண்சிங் சம்பவத் என்பவர், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களிடம், வேலை பெற்றுத் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. விசாரனையில் அவர் பணம் பெற்றது தெரிய வந்தது.
அந்த கல்யாணசிங் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதும், பிஜேபியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாயின. “பிஜேபி கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பிஜேபி எப்படி பொறுப்பாக முடியும். கல்யாணசிங் பிஜேபியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை” என விஜய் ருபானி கை கழுவிக் கொண்டார். அந்த ருபானி பின்னாளில் குஜராத் முதலமைச்சரானார். இதுபோல இடைத்தரகர்கள் மூலம் நடந்த பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரவே இல்லை.
சஹாரா குரூப் கம்பெனியிலிருந்து மோடியே 55 லட்சம் ருபாய் லஞ்சமாகப் பெற்றதாகவும் கூட ஒரு செய்தி கசிந்து கொண்டிருந்தது.

எந்த துறையையும் மோடி அரசு விடவில்லை. மீன்வளத்துறை அமைச்சராயிருந்த புருஷோத்தம் சோலங்கி டெண்டர் அறிவிக்காமல் முறைகேடாக லஞ்சம் பெற்று தனக்கு வேண்டியவர்களுக்கு காண்ட்ராக்ட் விட்டதாக இஷாக் மராடியா என்பவர் 2013, ஜனவரி 5ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். 400 கோடிக்கு மேலாக ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் போலீஸ் இதனை விசாரிக்கக் கூடாது எனவும், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவரது வக்கீல் மூலமாக கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் காந்திநகர் காவல்துறையே அந்த குற்றச்சாட்டை விசாரித்து 2015ம் ஆண்டில் புருஷோத்தம் சோலங்கி மீது எந்த தவறும் இல்லையென அறிக்கை கொடுத்தது. உயர்நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்தது. ஷோலங்கி மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.
2018ம் ஆண்டில் தன் மீது நடக்கு விசாரனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என புருஷோத்தம் சோலங்கி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
2019ம் ஆண்டில் மே மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடுத்த இஷாக் மராடியா மீது ஒரு கொலை வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தன்னை அச்சுறுத்தவும், பழிவாங்கவுமே அரசு நடவடிக்கை எடுப்பதாக இஷாக் தெரிவித்தார்.
அதே சோலங்கி மீது தேர்தல் நேரத்தில் லஞ்சம் கொடுத்ததாய் ஆதாரங்களோடு தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகள் 2019ம் ஆண்டில் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன, காவலாளி ஒருவரைக் கொல்ல முயன்றது மற்றும் பார்லர் ஊழியர் ஒருவரை அடித்தது போன்ற ரவுடித்தனங்களால் அவரது மகன் குஜராத் மாநிலம் அறிந்த பிரபலம். இந்த தகவல்களோடும் சேர்த்துப் பார்த்தால் மோடியின் குஜராத் அரசு எத்தகையது என்பது விளங்கும்.
திசை திருப்புவது, குற்றம் சுமத்துபவர்களை அச்சுறுத்துவது, குற்றம் நிரூபிக்கப்படாமல் போக வைப்பது என ஆட்சியில் இருந்த பிஜேபி தன் அதிகாரத்தை பிரயோகித்து உண்மைகளை விழுங்கியது.
மொத்தம் 17 முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்திய போது, “காங்கிரஸ் என்ன யோக்கியமா” எனவும், “குஜராத் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது” எனவும் முத்திரை குத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டன.
லோக் ஆயுக்தா சட்டத்தின் பிரகாரம் குஜராத் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் அமைப்பை செயல்பட விடாமல் வைத்திருந்த பெருமை மோடியைச் சேரும். முடிந்தவரை அதனை நீர்த்துப் போகச் செய்திருந்தார். அவர்தான் அகில இந்திய அளவில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கடுமையாக்கப் போராடிய அன்னா ஹசாரேவை ஆதரிக்கவும் செய்தார். “நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நேரில் பார்க்காத நமக்கு, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் அகிம்சை வழியின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது” என ட்வீட்டினார். தனது இணைய தளத்தில் எழுதவும் செய்தார்.
குஜராத்தில் நடந்த இந்த ஊழல்களுக்கு எதிரான சத்தங்கள் எல்லாம் மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில் வெளிவந்த ஊழல்களை எதிர்த்து நாடெங்கும் எழும்பிய சத்தங்களில் அடிபட்டுப் போனது. நாடே அன்னா ஹசாரேவின் பஜனையில் மூழ்கிப் போனது.
ஊழலின் ஊற்றுக் கண்ணாய் இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள், ஊழலை ஒழிப்பதற்கான வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்றார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க கார்ப்பரேட்களே அவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருந்தார்கள். பெரும் நாடகமொன்று நாட்டு மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது. காங்கிரஸ், மன்மோகன்சிங் மீது மக்களின் கோபம் திரும்பியது. ஊழல் பேர்வழி மோடி கார்ப்பரேட்களின் அரவணைப்பில் பாதுகாப்பாக வலம் வந்தார்.
சரி, இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம்.
“மோடி ஊழலற்றவர் என்பதை அறிந்து அமெரிக்காவே பயப்படுகிறது” என்றாலும் யார் கேட்க போகிறார்கள்? அமெரிக்கா வந்து மறுக்கப் போகிறதா என்னும் மூர்க்கத்தனமான தெனாவெட்டில் வெளியிடப்பட்ட சங்கிகளின் ட்வீட்களுக்கு விக்கிலீக்ஸே பதில் அளித்தது.

“மோடி ஊழலற்றவர் என விக்கிலீக்ஸின் எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை” என்றும் “மோடியின் ஆதரவாளர்கள் தவறான செய்திகளை உக்கிரமாக பரப்புகிறார்கள்” என்றும், ”நரேந்திர மோடியின் பிஜேபி தவறான செய்திகளை பரப்புகிறது. அசாஞ்சே ஒருபோதும் மோடி ஊழலற்றவர் எனச் சொல்லவில்லை” என்றும் அடுத்தடுத்து டுவீட்டரில் விக்கிலீக்ஸில் மறுப்புகளை தெரிவித்தது.
ஒன்றிரண்டு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், “இந்தியாவுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.”, ”மோடி நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறார்” “பிரதம வேட்பளரான அவருக்கு இது பின்னடைவு” என்றெல்லாம் பேசினார்கள். எழுதினார்கள்.
சகலத்தையும் உதிர்த்த பிஜேபிக்கும், மோடிக்கும் கொஞ்சம் கூட உறைக்கவில்லை. “அமெரிக்காவின் சர்டிபிகேட் ஒன்றும் மோடிக்குத் தேவையில்லை.” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அவர்களே களத்தில் இறங்கினார்கள்.
”மோடி ஊழல் கறை படியாதவர்” என்று அவர்களே தொடர்ந்து விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
“இந்த தேசம் தான் என் குடும்பம். தனிப்பட்ட முறையில் எனக்கென்று குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்?” என மோடி நாட்டு மக்களிடம் தன்னைப் புனிதராகக் காட்டிக் கொண்டார்.
ஆனால் அவருக்கு குடும்பம் இருந்தது. இந்திய கார்ப்பரேட்கள்தான் அவரது குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசமான பிரதம சேவகன் அவர். நாடு, மக்கள் எல்லாம் பிறகுதான்.
அவரது 56 இஞ்ச் மார்பைத் திறந்து பார்த்தால் அங்கே அம்பானியும், அதானியும், டாடாவும் காட்சியளிக்கக் கூடும்.
References:
* I am glad that America admits Modi is incorruptible: Hon’ble CM ( Narendara Modi websidte)
* Modi supporters aggressively pushed fake Assange Endorsement (Published in Outlook on 17th Mar 2014)
* Narendra Modi’s incorruptibility: What WikiLeaks cable actually said (Ashish Mehta in GovernanceNow on Mar 20, 2014)
* Sujalam gets CAG rap (Written by Kapildev, DNA dated Feb 20, 2009)
* Kalyan sinh Champawat on remand for allegedly duping Talati job applicants (Desh Gujarat, Feb 18, 2014)
* Big Corporates got govt land cheap: CAG (Indian Express, Gandhi Nagar dated Apr 03, 2013)
* Rs 400 crore Fisheries scam: Gujarat HC rejects plea filed by BJP Minister (Ahmedanbad Mirror, Nov 05, 2021)
* 17 Scams that Narendra Modi does not want Lok Ayukta to probe (DNA, Aug 27, 2011)
* Anna-led movement reinforces confidence in non-violence – Narendra Modi (The Economic Times, Aug 28, 2011)
* Wikileaks never said Modi was incorruptible (Counter view dated Mar 18, 2014)








