நூல் அறிமுகம்: ஏ.ஜி.நூரானியின் ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் தமிழில்: ஆர். விஜயசங்கர் – பெரணமல்லூர் சேகரன்
நூல் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்
ஆசிரியர் : ஏ.ஜி.நூரானி
தமிழில்: ஆர். விஜயசங்கர்
விலை : ரூ.₹ 800/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் வழக்கறிஞருமான ஏ.ஜி. நூரானியின் ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ எனும் நூலின் தமிழாக்கத்தை பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர் மூலம் பாரதி புத்தகாலயம் அழகுற அச்சிட்டு பதிப்பித்துள்ளது.
இந்நூலின் 25 தலைப்புகளில் 626 பக்கங்களும் பின்னிணைப்புகள் 198 பக்கங்களும் என 824 பக்கங்கள் படிப்பதற்கு முதலில் மலைப்பாக இருந்தாலும் படிக்கப் படிக்க அறியப்படாத புதிய புதிய செய்திகளாக தொடர்ந்து கொண்டே போகிறது. சுரங்கப்பாதை போல போய்க் கொண்டேயிருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்தது போன்ற உணர்வை இறுதியில் பெற முடிகிறது.
சில மிரட்டும் மொழிபெயர்ப்பு நூல் போலன்றி மூல தமிழ் நூலை வாசிப்பது போன்ற உணர்வே மேலிடுகிறது. அவ்வகையில் வெகு நேர்த்தியாக மொழி பெயர்த்துள்ள ஆர். விஜயசங்கர் அவர்களையும் அவருக்கு உறுதுணையாக இருந்த கமலாலயன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்நூலின் முகவுரையின் இறுதியில் நூலாசிரியர் “எதையும் சீர்தூக்கிப் பார்த்து சிந்திப்பதற்காகப் படியுங்கள்” என்று கூறியிருப்பது பொருள் பொதிந்தது. மேலும் மொழிபெயர்ப்பாளர் உரையில் நோக்கம் குறித்துக் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சம் “அறிவுப் பூர்வமற்ற ஒன்று நாட்டிற்கு எவ்வளவு அபாயகரமானது, அரசியல் அமைப்பு அல்ல என்று கூறிக்கொண்டே ஒரு அரசியல் கட்சியைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றித் தன்னுடைய இந்து ராஷ்டிரக் கனவை நோக்கி ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு விரைவாக நகர்கிறது என்கிற வரலாற்றை தமிழ் வாசகர்கள் அறியச் செய்வதுதான் இந்த மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது வெற்றி அடைந்துள்ளது எனலாம். இரண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்பாளர் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை. அது வெற்றி அடைந்திருக்கிறது என்பதை நூல் முழுவதையும் படித்தபின் உணர முடிகிறது.
இந்திய சுதந்திரப் போரில் பங்கு பெற்று ரத்தம் சிந்தி, சிறைப்பட்டு, இளமையை இழந்து, சித்திரவதைக்குட்பட்டு குடும்பத்தை இழந்த தியாகிகளுள் இஸ்லாமிய மக்கள் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்துள்ளனர் என்பதை வரலாற்று ஆவணங்கள் பறை சாற்றுகின்றன. இந்தியச் சுதந்திரப் போரின் முக்கியமான கட்டமான சிப்பாய் கலகம் என சொல்லிக் கொடுக்கப்பட்ட சிப்பாய் புரட்சியில் இஸ்லாமியர்களின் பங்கு மகத்தானது என்பதை ‘அறிமுகம்’ எனும் முதல் தலைப்பிலேயே அறியலாம். இப்பகுதியில் இந்துக்களைக் காட்டிலும் இஸ்லாமியர்களைக் கண்டே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதிகம் அஞ்சினர் என்பதையும் ஆகவேதான் அவர்கள் மீது அதிகமான அடக்குமுறை ஏவப்பட்டது என்பதையும் டெல்லி மண்டலத்தில் இருந்த முஸ்லீம்களின் அசையா சொத்தில் நான்கில் ஒரு பங்கு அதிக வரிகள் வாயிலாகப் பறிக்கப்பட்டதும் அதே நேரத்தில் இந்துக்களின் மீது 10 சதவீத வரியே விதிக்கப்பட்டது என்பதையும் தெரியப்படுத்துகிறார் நூலாசிரியர். மேலும் பிரிட்டிஷாரின் பிரித்தாள் சூழ்ச்சியில் சிக்குண்ட பல தலைவர்களை நூலில் பார்க்க முடிகிறது. பஞ்சாப் சிங்கம் என போற்றப்பட்ட லாலா லஜபதிராய் இந்து மகா சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றியதும் அதுசமயம் “இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பாலும் ஒரு இந்து அமைப்பு என்பதை மறைப்பதில் பயனேதும் இல்லை” எனப் போட்டு உடைப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இந்துக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியல் பார்வை, தேசத்தின் மீது மத-கலாச்சார ஒற்றைத் தன்மையைத் திணிக்க வேண்டும் என்கிற ‘சர்வாதிகார’ ஆசை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை என்பதையே லஜபதிராயின் கண்ணோட்டம் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
“ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு பவுத்தம் இந்தியாவின் பெரும் மதமாக இருந்தது என்னும் வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பரின் கூற்று சிந்திக்கத் தக்கது. பவுத்தம் கடுமையான தாக்குதலைச் சந்தித்திருக்கும் என ஊகிக்க முடிகிறது.
பவுத்தத்தை அழித்து, இஸ்லாத்தை அழித்து இந்துத்துவாவைக் கட்டி எழுப்ப சாவர்க்கர் துவங்கி வரிசையாக பணியாற்றி அவர்கள் அளவில் வெற்றி முகமாக பயணித்துக் கொண்டிருப்பது வெள்ளிடை மலை. இந்துத்துவம் மதக்கோட்பாடு அல்ல. அது ஓர் அரசியல் கோட்பாடு அந்தக் கோட்பாட்டினைப் புதிதாகப் படைத்தார் சாவர்க்கர்.
“நான் ராமர் என்ற காரணியைத் திறம்படப் பயன்படுத்தாமலிருந்தால், டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் தோற்றிருப்பேன்” என்று அத்வானி கூறியதாகவும், “இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் முகமதியா இந்துக்கள் தான், இந்தியாவிலிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்டி இந்துக்கள் என்று நான் கூறுகிறேன். கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் அவர்களுடைய மதமாக ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் தாம் அவர்கள். எனவே முஸ்லிம்களையோ இந்துக்களையோ அவர்களுக்கே உரிய தனி அடையாளங்களுடன் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் இந்துமத மயமாக்கப்பட வேண்டும்” என 1991-ஜனவரி 12ல் பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி பேசியிருப்பதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையில் சமரசம் என்பதே கிடையாது. சிறுபான்மையினர் சரணாகதி அடைய வேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஓர் இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்ட திருத்தத்தை செய்யவேண்டியதில்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதைப் போன்றே ஆட்சி செய்தால் போதும். இதைத்தான் நரேந்திர மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார். ஜனநாயகமற்ற இந்திய மண்ணின் மீது போடப்பட்டிருக்கும் ஜோடனைதான் ஜனநாயகம். மோடியின் திட்டமான நிறுவனங்களில் இந்துத்துவாவாதிகளை நிரப்புவது, யோகிகளை முதலமைச்சர்களாக்குவது, காபினட் முறையை முடக்குவது, ஆட்சிப் பணியைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வருவது, நீதித்துறையைத்தன் செல்வாக்கிற்குள் கொண்டு வருவது என தனது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு.
மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவர்களின் அமைப்பு 1998-டிசம்பர் 4 அன்று வெளியிட்ட கடிதத்தில் “நாடு சுதந்திரம் பெற்ற 50 ஆண்டுகளை விட அதிகமான தாக்குதல்கள் ஜனவரி 1998 முதல் கிறிஸ்தவ சமூகத்தின் மீது நடந்து வருகின்றன. கன்னியாஸ்திரீகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிரியார்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பைபிள் எரிக்கப்பட்டுள்ளது. மதாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
கல்வி நிலையங்கள் தாககப்பட்டிருக்கின்றன. மத நம்பிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர்.”
என குறிப்பிடப்பட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது.
இது கோல்வால்கரின் சிந்தனைக் கொத்தில் குறிப்பிட்டுள்ள ‘முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்தாம் உள்நாட்டு அபாயங்கள் என்பதை ஒத்துள்ளன.
ஆர் எஸ் எஸ்ஏன் உருவாக்கப்பட்டது எனும் தலைப்பில் நூராணி ஆதாரங்களை அடுக்குகிறார்.
“ஒரு புறத்தில் அன்னிய நிர்வாகத்தின் அரசியல் ஆதிக்கமும் மறுபுறத்தில் முஸ்லிம்கள் செய்யும் சித்திரவதையும் கத்தரிக்கோலின் இரு கத்திகளுக்கு இடையே நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்துக்களை முஸ்லிம்களாக்குவதற்காக அவர்கள் நம்மீது தொடுத்திருக்கும் தாக்குதல்களையும் நம் மகள்களையும், மருமகள்களையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வதையும் குறித்து நான் பேசத் துவங்கினால் என் உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த இயலாது. எனவே நான் அவை குறித்து அதிகம் பேசவில்லை. கிறிஸ்தவர்கள் நம்மை காயப்படுத்துகிறார்கள். இந்தத் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் நம்மை ஒரு அமைப்பாக்க வேண்டும். இந்த ஒரு நோக்கத்திற்காகத்தான் 1925 ஆம் ஆண்டில் ஆர். எஸ். எஸ். உருவாக்கப்பட்டது.”
மறு ஆண்டே மோதிலால் நேரு தன் மகன் நேருவுக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.
“மதரீதியான வெறுப்பும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதும் சகஜமாக நடக்கிறது. நான் முழுவதுமாக வெறுத்துப் போய்விட்டேன். பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைக்கிறேன். அதற்குப் பின் என் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்பதுதான் எனக்குக் கவலை. நான் காங்கிரசின் கவஹாத்தி மாநாட்டிற்காகக் காத்திருக்கிறேன். அதுவரை பேசப் போவதில்லை. மாளவியா – லாலா கும்பல் பிர்லாவின் பண உதவியுடன் காங்கிரசைக் கைப்பற்ற நினைக்கிறார்கள்.”
தாராள பண உதவி செய்பவர் பிர்லாவாக மட்டும் இருக்க முடியாது. ஆர். எஸ். எஸ் பங்கும் இல்லாமல் இருக்க முடியாது.”
இந்திய தேசியத்தின் மீதான உறுதிப்பாடு எனும் தலைப்பில் 1886ல் நடந்த இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டின் அறிக்கையில் “காங்கிரஸ் என்பது உலகியல் நலன்களை சார்ந்த சமூகமேயன்றி ஆன்மீக நம்பிக்கைகளுக்கானது அல்ல என்பதால் அரசியல் பிரச்சனைகளைப் பேசுவதில் அதிலிருக்கும் ஒருவர் மற்றவரை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதே அவர்களின் தகுதி. இந்த நாட்டில் அவர்களின் பொது நலன்கள் ஒரே மாதிரியானவை என நாங்கள் கருதுகிறோம்; இந்துக்களும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், பார்சிகளும் தத்தமது மத சமூகங்களின்
பிரதிநிதிகளாக இருந்து பொதுவாழ்வில் எழும் மதம் சாராத பிரச்சனைகளை விவாதிக்கலாம்” என மதச்சார்பின்மை நிலை தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ். அனைத்து அமைப்புகளிலும் ஊடுருவிக் கால் பரப்பியதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.
“ஆர்.எஸ்.எஸ்.ஸின் யுக்தி பலனளிக்காது. அதற்கு இந்தியா முழுவதிலும் 1500 கிளைகளும் 2 லட்சம் உறுப்பினர்களும் இருப்பதாக அக்டோபர் 25, 1942 அன்று கோல்வால்கர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதன் உறுப்பினர்கள் குடிமைச் சமூகம் மற்றும் ராணுவத்தின் அனைத்து முக்கியச் சேவைகளிலும் ஊடுருவி விட்டனர். நம்பத் தகுந்த அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், குமாஸ்தாக்களையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரிலிருந்த துப்பாக்கி தொழிற்சாலையிலும், கமாரியாவிலிருந்த ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையிலும் ஷாகாக்களை அமைத்தது. எனினும் பிரிட்டிஷ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாய் ஆங்கில அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். வெண்சாமரம் வீசி வந்தது.
இன்றைய பாசிச அரசின் வித்து அக்காலத்திலேயே ஐரோப்பிய பாசிஸ்டுகளின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ். வயல்களில் விதைக்கப்பட்டது. சாவர்க்கரின் ஹிட்லர் மீதான புகழ்ச்சி ஹிட்லரை ஒரு ஹீரோவாக வழிபடுவதற்கு இட்டுச் சென்றது. அவர்களின் கருத்துகளுக்கு வங்காளமும் பம்பாய் மாகாணமும் நல்ல விளைநிலமாக இருந்தன. 1931ல் மூஞ்சே இத்தாலிக்குச் சென்றதும், முசோலினியைச் சந்தித்ததும் வரலாற்றில் திருப்புமுனைகளாயின. போர்க்கொள்கையும், இனவாதமும் இருதரப்பையும் இணைத்த சபையானது.” எனும் குறிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவேதான் “இத்தாலிக்கு ஃபாசிஸ்டுகள் எப்படியோ, ஜெர்மனிக்கு நாஸ்திகர்கள் எப்படியோ, அப்படி இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ். என்றாக வேண்டும் என்றுதான் ஆர்.எஸ். எஸ். நம்புகிறது என்று 1933லேயே உளவுத் துறையின் அறிக்கை எச்சரித்துள்ளது உற்று நோக்கத்தக்கது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி எழுதி அம்மணமானது அனைவரும் அறிந்ததே. 1913, நவம்பர் 14ல் சாவர்க்கர் சமர்ப்பித்த கடிதத்தில் “நான் எந்தத் திறன் அடிப்படையில் வேண்டுமானாலும் அரசுக்குச் சேவகம் செய்யத் தயாராயிருக்கிறேன். அரசு எனும் பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதைத் தவிர ஊதாரி மகனுக்கு என்ன வழி?”
இப்படிக் கேவலப்பட்ட சாவர்க்கர் காந்தி கொலை வழக்கில் வழக்கைத் தவிர்ப்பதற்காக பிப்ரவரி 22-1948 அன்று மும்பையில் காவல் துறை ஆணையருக்கு “அரசாங்கம் சொல்லும் எந்தக் காலம் வரையிலும் நான் மதவாதம் அல்லது அரசியல் சார்ந்த எந்தப் பொது நிகழ்விலும் கலந்து கொள்வதைத் தவிர்ப்பேன்” என்றார். சாவர்க்கர் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கிச் செல்லத் தயாராக இருந்தார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. உண்மையான எந்த தேச பக்தரும் இவரை மன்னிக்க மாட்டார். ஆனால் காலக் கொடுமையால் சாவர்க்கர் வழிபாட்டிற்குரியராகவும் ஆக்கப்பட்டிருக்கிறார் எந்த மனிதரின் கொலைச் சதியில் சாவர்க்கர் ஈடுபட்டாரோ அவருடைய படத்திற்கு நேராக பாராளுமன்ற மைய மண்டபத்தில் சாவர்க்கரின் படமும் மாட்டப்பட்டிருக்கிறது என்னும் ஆதங்கம் நூலாசியருடையது மட்டுமல்ல. நம்முடையதும்தான்.
1996ல் கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ என்கிற புத்தகம் இன்றளவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பைபிளாகப் போற்றப்படுகிறது. கோல்வால்கரின் பட்டியலில் ஏராளமான ஹீரோக்களின் பெயர்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லை என்னும் நூலாசிரியர் பண்டைக்கால இந்தியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது என்று மும்பையின் ரிலையன்ஸ் ஹர்கிசோன்தாஸ் மருத்துவமனையில் மோடி ஆற்றிய
உரைக்கு இவரே ஊக்க சக்தியாக இருந்துள்ளார் என்கிறார்.
கோல்வால்கரின் சிந்தனைக் கொத்து என்ற நூலின் 10 மற்றும் 11ஆம் அத்தியாயங்களை விஞ்சும் வகையில் ‘உள்நாட்டு அபாயங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட 12ஆம் அத்தியாயத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்று உள்நாட்டு அபாயங்களாகக் குறிப்பிடுவதையும் அதனடிப்படையில் இப்போதும் அவ்வாறே நாடாளும் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் இம்மூன்று பிரிவினரையும் பரம எதிரிகளாகக் கருதுவதையும் பார்க்க முடிகிறது.
“ஆர்.எஸ்.எஸ்.ஸினை ஓர் அபாயகரமான அமைப்பாகவும் ஃபாசிஸம் என்கிற சொல்லின் கறாரான பொருளுக்கு உகந்ததாகவுமே” நேரு கருதினார் எனும் நிலையில் இத்தகைய அபாயத்தை மக்கள் மத்தியில் நேரு ஏன் அம்பலப்படுத்தவில்லை எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.
நேருவின் அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அமைச்சராக இருந்தது ஏற்க இயலாத முரண். “உங்கள் வீட்டின் மேல் பக்வா ஜண்டாதான் பறக்கிறது . மூவண்ணக் கொடி இல்லை என்பதே எனக்குத் தெரியாது. தேசியக் கொடியல்லாத வேறு ஒரு கொடியை ஓர் அமைச்சர் பறக்க விடுவது எனக்கு விசித்திரமாகத் தெரிகிறது” எனப் பேசிவிட்டு நேருவால் எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடிந்தது என்பதும் உளவுத் துறையின் பணி குறித்த கேள்வியும் விடையின்றித் தொக்கி நிற்கின்றன. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய களையை ஆல் விருட்சமாக விட்டதில் நாட்டை ஆண்டவர்களுக்குப் பங்கு இருந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
‘ஆர்.எஸ்.எஸ்.ஸும் காந்தி படுகொலையும்’ எனும் தலைப்பிலான கட்டுரையில் ஒரு கொலைகாரன் அரசியல் வசைபாடுவதை ஒரு நீதிபதி ‘கண்ணீர் மல்கக்’ கேட்டது யாரும் கேட்டிராத செயல் எனக் குறிப்பிடும் நூலாசிரியர் கொலைக் குற்றவாளி நாதுராம் கோட்சேக்கு எதிராக பெரும் ஆதாரங்கள் இருந்தன எனப் பட்டியலிடுவதும் குறிப்பிடத்தக்கவை.
காந்தியின் படுகொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு 04.02.1948ல் தடை விதித்த காங்கிரஸ் அரசு குறுகிய காலத்திற்குள்ளாகவே ஜூலை11,1949 அன்று தடையை நீக்கியது.
ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம் என்னும் அரசியல் அமைப்பைத் துவக்கியது. “ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு முறை தவறிப் பிறந்த குழந்தைதான் ஜனசங்கம்” என்று நேரு கூறியது வரலாற்றுப் பதிவு.
1957-ஜனவரி 7 தேதியிட்ட ‘ஆர்கனைசர்’ இதழில் ‘இந்தியக் கலாச்சாரம்’ குறித்த தீர்மானத்தில்..”தேசியத்தை வளர்ப்பதற்காக நாட்டில் வாழும் அனைவரும் ஒரே கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டுமென்று பாரதீய ஜனசங்கம் உறுதியேற்கிறது. இந்தக் கடமையை நிறைவேற்ற சமுதாயமும் அரசாங்கமும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” குறித்து அன்று பட்டியலிடப்பட்டவற்றை இன்று மோடி அமுலாக்கி வருகிறார் எனின் மிகையன்று. பா.ஜ.க. சமீப காலங்களில் வெளியிட்டு வரும் தேர்தல் அறிக்கைகள் போன்ற ஆவணங்களில் வெளிப்படுத்திய கொள்கைகள் அந்தப் பழைய ஆவணத்தில் கலாச்சார தேசியம் என்ற பெயரில் கூறிய கருத்துக்களின் மறுபதிப்புக்கள்தான் என தெளிவுபடுத்தியுள்ளார் நூலாசிரியர். ஒரு நாடு, ஒரு மக்கள், ஒரு கலாச்சாரம் என்கிற கருத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய உணர்வை முடுக்கி வலுப்படுத்துவது அதிகாரம் குவிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியினால்தான் முடியும். கூட்டாட்சித் தத்துவம் தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் எனும் ஜனசங்கத்தின் 1965ஆம் ஆண்டின் கொள்கை விளக்கத்தைக் குறிப்பிட்டு அதுவே ‘பழைய கள் புதிய மொந்தை’ யாக பா.ஜ.க.வின் கொள்கையாக இருப்பதை உணர முடிகிறது.
பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கும் கோயபல்ஸ் பாணியில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் சங்பரிவாரங்களும் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
“விவாகரத்து பெற்ற ஒரு இஸ்லாமியப் பெண் இரண்டாண்டுகளுக்குள் பிள்ளை பெற்றால் அக்குழந்தை அவளுடைய முதல் கணவனால் உண்டானதாகக் கருதப்பட வேண்டும் என குரான் கட்டளையிடுகிறது” எனும் பொய்யைக் கோல்வால்கர் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையென கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைப் பரப்பினார்.
நச்சரவமான ஆர்.எஸ்.எஸ். மீது கடும் தொடர் நடவடிக்கையை நேருவும் அவரைத் தொடர்ந்து வந்த பிரதமர்களும் மேற்கொள்ளவில்லை. இடதுசாரிக் கட்சிகளைத் தவிர பிற எதிர்க்கட்சிகளின் பார்வையும் ஆர்.எஸ்.எஸ். மீது மென்மைத்தன்மை மிக்கதாகவே இருந்தது. எனவேதான் 1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் துவங்கிய முழுப் புரட்சி இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸால் எளிதாக இணைய முடிந்தது.
மேலும் “1974ல் பீகாரில் தான் துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.ஸின் உதவியை ஜெ.பி. ஏற்றுக் கொண்டது பெரிய சோகமாகிறது. அப்படிச் செய்ததன் மூலம் ஒரு வாசகர் சக்திக்கு அவர் கவுரவத்தை வழங்கிவிட்டார் என்கிறார் நூலாசிரியர்.
1975ல் இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலைப் பிரகடனத்தின் பின்னணியில் 1977ல் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தியைத் தோற்கடித்து காங்கிரஸ் அல்லாத அரசை அமைக்க மாற்றுக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் இணைந்தது கொள்கை அடிப்படையில் முரணானது. புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையில் 85 உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது சாதாரண விசயமல்ல. கொள்கை அடிப்படையில் எதிரும் புதிருமான தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படுதல் சாத்தியமற்றது. அதிகாரப் போட்டி வேறு. எனவே ஜனதா அரசு 1979ல் கவிழ்ந்தது. பாரதீய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
1980ல் உருவான பாரதீய ஜனதா கட்சி இன்றளவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாட்டு அணிதான். ஆர்.எஸ்.எஸ். என்பது தாய். பா.ஜ.க. அதனுடன் தொப்புள் கொடியினால் இணைக்கப்பட்ட குழந்தை. பா.ஜ.க. தோன்றிய முதல் பத்தாண்டுகளுக்குள்ளாகவே இந்துத்துவம் என்பதை வெளிப்படையாக பரப்புரை செய்யத் துவங்கியது.
பா.ஜ.க. 1981ல் பொய்ப் பரப்புரை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டது. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்திலிருக்கும் அனைத்து தலித் குடும்பங்களும் இஸ்லாமிய மதத்தினைத் தழுவக் காரணம் இஸ்லிமியத் தலைவர்களும் பணமும்தான் என்று குற்றம் சாட்டப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர். ஆனால் இந்திய அரசின் பட்டியலின் மக்கள் மற்றும் பழங்குடியினர்க்கான பிராந்திய ஆணையரின் அறிக்கை இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என அம்பலப்படுத்தியது என்பதை நிறுவுகிறார் நூலாசிரியர். மீண்டும் 1985ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக 1986ல் இயற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் விவாகரத்துச் சட்டம் பாபர் மசூதியின் பூட்டுக்களைத் திறக்க பிரதமர் ராஜீவ் காந்தியைத் தூண்டியதாகவும் அதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் புத்துணர்ச்சி பெற்று இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே இருந்த உறவைக் கெடுத்ததாகவும், நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளின் அடிப்படையைத் தகர்த்ததாகவும் பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர் என்பது புலனாகிறது.
பாபர் மசூதியை அகற்ற வேண்டும் என்று ஏப்ரல் 8,1984 அன்று சங்பரிவாரமான விஸ்வ இந்து பரிஷத் அறைகூவல் விடுத்தது. ரத யாத்திரையும் துவக்கப்பட்டது. ராமர் கோயிலைக் கட்டுவதற்காக 2000க்கும் மேற்பட்ட ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ராம்ஷிலா என்கிற பெயரில் பூஜையால் புனிதப் படுத்தப்பட்ட செங்கற்களை அயோத்தி நோக்கி சுமந்து செல்லும் இந்த இயக்கத்தை வி.எச்.பி நடத்தியது. கருணை ததும்பும் ராமனின் பிம்பம் திரிசூலம், வில், அம்பு ஏந்திய வீரனைப்போல மாற்றி வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகளை வி.எச்.பி. வெளியிட்டது.
1990, ஆகஸ்ட் 7 அன்று அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்துவதாக பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார். கூர்மையாக எதிர்வினையாற்றிய அத்வானி ரத யாத்திரை திட்டத்தை அறிவித்தார். ரத யாத்திரையின்போது பீகாரில் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்யவும் விபி.சிங்.அரசுக்கான ஆதரவை பா.ஜ.க. வாபஸ் பெற்றது. வி.பி.சிங் அரசு வீழ்ந்தது.
1991, ஜுன் 21ல் காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசு பொறுப்பேற்றது. அப்போதே காவி உடையணிந்த பா.ஜக. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தது இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே ஆண்டு கணிசமான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் பா.ஜ.க.வில்
இணைந்த செய்தியை விவரிக்கிறார் நூலாசிரியர்.
மீண்டும் ரத யாத்திரை.
“அத்வானியின் ரத யாத்திரை பி.ஜே.பி.யால் எடுக்கப்பட்ட முடிவல்ல. அது ஆர்.எஸ்.எஸ்.ஸினால் வடிவமைக்கப்பட்ட யுக்தி” எனும் நூலாசிரியர் கட்சியின் சின்னமான தாமரையைப் பெரிய அளவில் சுமந்து சென்ற அந்த டொயோட்டா ரதம் அவர்களின் அரசியல் நோக்கத்தை அறிவித்தது என்கிறார்.
1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அன்றைய பிரதமர் நரசிம்மராவிற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் அனைத்து அதிகாரங்களை வழங்கியிருந்த போதிலும் அவர் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். உலகின் முன் இந்தியா வெட்கித் தலை குனிந்தது. ஆர்.ஏஸ்.எஸ், வி.எச்.பி. பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்டன. உ.பி. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பா.ஜ.க. அரசுகள் கலைக்கப்பட்டன. குதிரைகள் பறந்த பிறகு லாயம் பூட்டப்பட்டன.
அரசியல் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது, ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் இயற்றுவது என்னும் இந்துத்துவ நிகழ்ச்சி நிரல்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கவனம் சென்றது. இன்றளவும் படிப்படியாக அவை நிறைவேறறப்பட்டு வருவது கண்கூடு.
பா.ஜ.க.வை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அதன் தலைவர் சுதர்சன் பேசியவை அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவையே.
“முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கடலில் தூக்கி எறிய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதென்பதால் அவர்களை இந்திய மயமாக்க வேண்டும். இந்துத்துவம் என்பதன் மறைமுகம் அது.
சங்க பரிவாரம் என்னும் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் அங்கங்கள் குறித்து பாரத் பூஷன் குறிப்பிடும் பட்டியல் மிக நீளமானது. அப்பட்டியல் முழுவதையும் வாசித்தால் இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலத்தின் தன்மைக்கேற்ப சங் பரிவாரம் எடுத்துள்ள பல அவதாரங்களை அறியலாம். குஜராத் அரசு தன் ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் மீதிருக்கும் தடைய நீக்கும் விதமாக அரசுப் பணியாளர் நடத்தை விதிகளைக் திருத்திய தையும் அதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும் பிரதமர் வாஜ்பாய் ஆதரவுடன் தடையை நீக்கியதையும் இந்நூல் விளக்குகிறது.
2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிய முஸ்லிம்களின் படுகொலையும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
“குஜராத் படுகொலையினால் மோடி அரசியல் ரீதியாக பாதிப்படைவதற்குப் பதிலாக, அத்வானியை ஓரம் கட்டிவிட்டு பிரதமர் பதவிக்கான பா.ஜ.க.வின் வேட்பாளரானார். அத்வானி செய்த உதவிக்குப் பரிசாக முக்கியமான நேரத்தில் அத்வானியைத் தகுந்த சடங்குகளுடன் பரணில் தூக்கிப் போட்டார் என்னும் வார்த்தைகள் அர்த்த அடர்த்தி மிக்கவை.
“காங்கிரசும் பாகிஸ்தானும் ஏதோ ஆபத்தான செயலில் ஈடுபட்டிருப்பதால் டிசம்பர் 12 அன்று நடக்கவிருக்கும் தேர்தலின்போது குஜராத்தியர் கவனமாக இருக்க வேண்டும்” என்று மோடி பேசியதன் தீய எண்ணத்தையும் அப்பட்டமான பொய்களையும் கலந்து சேற்றை வாரி இறைப்பதில் மோடி எந்த அளவிற்கு இறங்கிச் செல்லத் தயங்க மாட்டார் என்பதையே இந்த பேச்சுக்கள் காட்டுகின்றன என்கிறார் நூலாசிரியர்.
“பிப்ரவரி 27 அன்று கோத்ராவில் நடந்த ரயில் படுகொலையைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு மாநில நிர்வாகம் மறைமுக ஆதரவு அளித்தது மட்டுமன்றி, முதல்வர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வி.எச்.பி/பஜ்ரங் தளத்தின் அதிரடிப் படையினர்க்கு வேலையை முடிக்க 24 மணி நேரம் கொடுத்தது.” எனும் தி டெலிகிராப் பத்திரிகை செய்தியை ஆதாரமாக்கிப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
2005-ஜுன் 15ல் நீனா வியாஸ்’தி இந்து’ பத்திரிக்கையில்..”மக்களுக்குப் பதில் சொல்ல பா.ஜ.க கடமைப்பட்டதல்ல; நாட்டுக்கு நல்லது எது என தமக்குத் தெரியும் என்று நினைத்த சூப்பர் தேசியவாத, சூப்பர் தேசபக்தக் கூட்டம் ஒன்றிற்குத்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது என்பதை அக்கட்சி மிகத் தெளிவாக உணர்த்தி விட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை என்பதை மறந்து விடாதீர்கள். பா.ஜ.க. எப்போதாவது தன் சொந்த பலத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ். என்கிற தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைப்புதான் நாட்டை ஆளும். ஜனநாயக இந்தியா என நாம் இன்று அறிந்து வைத்திருக்கும் ஒன்று பழைய கதையாகி விடும்.” என்று தீர்க்கதரிசனமாக எழுதியிருக்கிறார் என்பதை இன்றைய யதார்த்தக் களநிலவரம் மெய்ப்பிறக்கிறது.
இந்துஸ்தான் டைம்ஸ் 2005-அக்டோபர் 24ல் “பா.ஜ.க சரியான வழியில் செல்கிறதா என்பதைக் கண்காணித்து உறுதி செய்வதுதான் எங்கள் வேலை” என்று மோகன் பகவத் பேசியதாக குறிப்பிடப்பட்டிருப்பது சாதாரண விசயமன்று. ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வுக்குப் பரிந்துரைத்த 5 அம்சங்களாக 1. இந்துத்துவக் கொள்கைக்கு முதன்மை 2. அமைப்பை பலப்படுத்துவது 3. தொண்டர்களுக்கும் பயிற்சி அளிப்பது 4. நன்னடத்தை 5.கலந்தாலோசனை செய்வதற்கான கட்சி அமைப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இவை இன்றளவும் ஆர்
எஸ்.எஸ், பா.ஜ
க.வால் பின்பற்றப்படும் அன்றாட நடைமுறை வேலைகள் என்பது அனைவரும் அறிந்ததே.
“பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சுதர்சன் சொன்னதும் “12 மகன்களைக் கொண்டிருக்கும் ஒரு தம்பதியரின் சந்ததி 1200 ஆண்டுகளில் 1200 ஆகப் பெருகியிருக்கும். 11 மகன்களைக் கொண்ட குடும்பம் 1100 சந்ததிகளை உருவாக்கியிருக்கும். மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கு 38 வாரிசுகள் இருப்பர். ஆனால் இரண்டே மகன்களைக் கொண்ட குடும்பத்தினுடைய சந்ததி பூஜ்யத்திலேயே இருக்கும்” என பீதி கிளம்பியதும் “இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாட்டினைக் கைவிட வேண்டும்” என்று பேசியதும் மதவெறிப் பரப்புரைதானே!
ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்வதற்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழியைக் குறிப்பிடும் நூலாசிரியர், இவ்வுறுதி மொழியை ஏற்றபின் அந்நபர் பிரதமர் ஆகும்போது ஏற்கும் உறுதி மொழியையும் குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். எப்படி மக்களை ஏமாற்றுகிறது என் விவரிப்பது முக்கியமானது.
ஆர்.எஸ்.எஸ் கூறும் அகண்ட பாரதத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான் நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும் என்பதை மோகன் பகவத் வாய்வழி அறியமுடிகிறது. அவர் சொல்கிறார்: “தேசப் பிரிவினை தீர்மானமானதல்ல. அதனை ரத்து செய்வது பாகிஸ்தான் உட்பட அனைத்து தரப்புகளின் நலனுக்கு உகந்தது என்பதால் நாங்கள் அதைச் செய்வோம். காந்தாரம் என்று ஒரு காலத்தில் அறியப்பட்ட ஆப்கானிஸ்தானத்தில் ரத்த ஆறு ஓடியிருக்கிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், திபெத், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நிலையைப் பாருங்கள். அகண்ட பாரதத்திலிருந்து அவை பிரிந்து சென்ற பிறகு என்ன மகிழ்ச்சியைக் கண்டன?”
இந்நூலின் முக்கியமான இன்றைய தேவையான பகுதியாக விரிகிறது ‘மோடியின் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். ராஜ்யம்”. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற முழக்கத்தை முன்வைத்து நேருவின் மரபினை முற்றிலும் அழித்து எதிர்க்கட்சிகளே இல்லாத ஓர் ஆட்சியை அமைக்கும் எண்ணத்துடன் சர்வாதிகாரியாகக் காய்களை நகர்த்தி வருகிறார் மோடி.
“கிறிஸ்துவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றுவதில் ஆர்.எஸ்.எஸ் பிரதான கவனம் செலுத்துகிறது. வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், ஏகல் வித்யாலயா, சேவா பாரதி, விவேகானந்தா கேந்திரா, பாரத் கல்யாண் பரிஷத், ஃபிரண்ட்ஸ் ஆஃப் டிரைபல் சொசைட்டி, ஆகிய ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் ஆதிவாசிகள் மத்தியில் பணிபுரிவது இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் சில துளிகள்:
மார்ச் 2015ல் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் காவி ஆட்சியாளர்களின் ருசிக்கேற்றபடி மாற்றியமைக்கப்பட்டது. மதச்சார்பற்ற நாட்டைத் தகர்த்து ‘ஏகத்தலைவர்’ கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு இந்து நாட்டை உருவாக்க படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அரசியல் முக்கியத்துவம் இல்லாதவர்களாக்கி ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசின் உதவி ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளுக்குப் புது வேகமளித்தது. 2012க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டிற்கு 2000 என்கிற விகிதத்தில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2015க்குள் இந்தியா முழுவதிலும் 51,335 ஷாகாக்கள் தினசரி பயிற்சி நடத்தும் நிலை ஏற்பட்டது என டைம்ஸ் ஆஃப் இந்தியா மூலம் விவரிக்கிறார் நூலாசிரியர்.
அறிவியலுக்குப் புறம்பான பழமைவாத மூடநம்பிக்கை கருத்துக்கள் விதைக்கப்படுவது இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. “பறந்து கொண்டிருக்கும் விமானங்களை மாயமாய் மறையச் செய்யும் வேதியியல் சூத்திரத்தினை மகரிஷி பரத்வாஜ் என்பவர் எழுதிய வைமாணிக சாஸ்திரம் பரிந்துரைத்தது. மனிதர்களைக் குளோனிங் முறையில் தயாரிக்க முடியும் என்பதன் முதல் சான்றுதான் கௌரவர்கள் என்றும் புற்றுநோயை கோமியத்தால் குணப்படுத்த முடியும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தை ஆளும் பா.ஜ.க.வினர் கூறி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளதும் இந்தியாவின் பின்னோக்கிய பயணத்தை உணர்த்துகிறது.
“நாடு முழுவதும் கல்வியைக் காவி மயமாக்கும் பணியைச் செய்து வருகிறேன். அதனை விரைவில் செய்து முடிக்க நினைக்கிறேன். உலக வளர்ச்சிக்கு நமது வல்லுநர்கள் என்ன பங்களித்திருக்கின்றனர் என்று நாம் உலகிற்குச் சொல்லிக் கொடுப்போம்” என்று தீனா நாத் பாத்ரா எனும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தத்துவவியலாளர் உயர்கல்வித்துறை ஆலோசகராகி இவ்வாறு கூறியிருப்பதை எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடியும்?
2016-ஜூலை 27 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூத்த நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனைகளைப் பெற்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மூலம் தெளிவுபடுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே அடியில் இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அறங்காவலர் குழுவை மாற்றியமைத்து தனக்கு விருப்பமானவர்களை நியமித்ததை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது இவ்வத்தியாயம்.
நிதியமைச்சகம் நடத்திய பொருளாதார மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட ஜீன் ட்ரேஸ் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போதே பேச்சாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் ஏ. சேதுமாதவனைப் பதவியிலிருந்து இறங்கிச் சொல்லிவிட்டு அந்த இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். கருத்தியலாளர் ஒருவரை நியமித்தது மோடி அரசு.
2015-ஆகஸ்ட்3 நாளிட்டு ஏசியன் ஏஜ் பத்திரிகைச் செய்தி:-
“மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மதக்கலவரங்கள் அதிகரித்துவிட்டன; 2015ன் முதல் 6 மாதங்களை அதற்கு முந்தைய ஆண்டின் 6மாதங்களோடு ஒப்பிடும்போது மதக் கலவரங்கள் அதிகரித்திருக்கின்றன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.”
2015-அக்டோபர் 29 அன்று மதச்சார்பின்மைக்காக வீரமாகப் போராடி வரும் சமஹத் அமைப்பின் பதாகையின் கீழ் திரண்ட 53 வரலாற்றியலாளர்கள் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டனர் இது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராதது. பலர் பல விருதுகளைத் திரும்ப மத்திய அரசிடமே கொடுத்ததும் நிகழ்ந்தது.
இந்திரா காந்தி தேசியக் கலைகளின் மையத்தின் அறங்காவலர் குழு மாற்றியமைக்கப்பட்ட போது அதன் தலைவரான இந்தியாவின் வெளியுறவுத் துறையின் மதிப்புமிக்க தூதுவராக இருந்த சின்மயா காரேகான் நீக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் ராம் பகதூர் ராய் நியமிக்கப்பட்டார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அமுலாகும் திட்டங்களைக் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய ஒரு சர்வேயில் கிடைத்த தகவலாக இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டவை அதிர்ச்சி தருகின்றன. அவை: “பாடப் புத்தகத்தில் மாற்றம் செய்வது; சூரிய நமஸ்காரம்; பசுவதை கண்காணிப்பு; ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதன் மீதிருந்த தடையை நீக்குவது; நகரங்களின் பெயர்களை மாற்றுவது; நிறுவனங்களின் பெயர்களை மாற்றுவது”
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படுகொலைக்கு நியூயார்க் டைம்ஸ் நேரடியாக குற்றம் சாட்டியது இந்தியப் பிரதமர் பதவிக்கு வெட்கக்கேடானது. ஆனால் அவருக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. மருத்துவர் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோரைக் கொன்ற ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பே கௌரி லங்கேஷையும் சுட்டுக் கொன்றது. சனாதன் சன்ஸ்தா என்பதும் சங் பரிவாரம் என்னும் நிலையில் பிரதமரிடம் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும். வழக்கமான கள்ள மௌனம்தான்.
2018ல் இறுதி ஆட்டம் எனும் அத்தியாயத்தில் 2014ல் அடைந்த தேர்தலில் அடைந்த பலன்களை 2019ல் அடைவதிலும், ஒரு கட்சி ஆட்சி முறையை அமைப்பதிலும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார் மோடி. சுருக்கமாகச் சொன்னால் 2025ல் நடக்கவிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டுக்கு இந்தியாவைத் தயார் செய்கிறார் என்னும் நூலாசிரியரின் வார்த்தைகள் அர்த்த முக்கியத்துவம் வாய்ந்தவை எனின் மிகையன்று.
குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குஜராத் அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியச் சுதந்திரதினப் பவளவிழாவை முன்னிட்டு விடுவிக்கப் பட்டிருப்பதும் அவர்களுக்கு மலர்மாலையும் இனிப்பும் கொடுத்து கொண்டாடியிருப்பதும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலானது. இது சட்டப் போராட்டம் நடத்திய பில்கிஸ் பானுவிற்கு மட்டுமல்லாமல் சட்டத்தை நம்பும் அனைவருக்குமே மாபெரும் அதிர்ச்சிதான். அதைவிட கூடுதலான அதிர்ச்சி சட்டப் போராட்டம் நட்த்திய சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத், மற்றும் காவல் துறை உயர் அலுவலர் சிரீ குமார் ஆகியோர் சர்வாதிகாரமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஜனநாயகத் தூண் இடிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் “ஆர்.எஸ்.எஸ். சார்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனம் கல்கத்தாவில் நடத்திய நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் கே.கே. ஷர்மா தன் சீருடையிலேயே கலந்து கொண்டது எப்படி? என் எழுப்பியிருக்கும் கேள்வி ஒவ்வொரு இந்தியரும் எழுப்ப
வேண்டிய கேள்வி தானே!
தி டெலிகிராப் பத்திரிகையில் 2018-மார்ச் 11ல் “இந்தியாவின் புவியியல் பரப்பில் 96 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதாக அதன் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் கூறியதாகக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கதும் எச்சரிக்கை கொள்ள வேண்டியதும் ஆகும். மேலும் நாட்டிலிருக்கும் 37190 இடங்களிலுள்ள பூங்காக்களில் 58976 ஷாகாக்களை தினசரி நடத்துவதாகக் கூறும் அதன் ஆண்டறிக்கை புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.ஸும் வன்முறையும் எனும் அத்தியாயத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதவெறி வன்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை அதன் ஆக்டோபஸ் கரங்கள் நச்சு விதைகளைத் தூவியபடியே வளர்ந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கே ஆபத்தானது.
கலவரம் குறித்து டொனால்ட் ஈ. ஸ்மித் “உயிர்களையும் உடைமைகளையும் அதிகம் இழப்பவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்தான்.” எனக் குறிப்பிடுவது உள்ளங்கை நெல்லிக்கனி. 1961ல் நடைபெற்ற ஜபல்பூர் கலவரமாகட்டும், 1970ல் நடைபெற்ற பிவாண்டி கலவரமாகட்டும் 1979ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாம்ஷெட்பூர் கலவரமாகட்டும், 1982 மண்டைக்காடு கலவரமாகட்டும், 1992ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு மற்றும் இடிப்பைத்தொடர்ந்த கலவரமாகட்டும், 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்த குஜராத் கலவரமாகட்டும் ஸ்மித்தின் கூற்றே காட்சிகளாயின.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் சந்ததிகளாக சங் பரிவார காவிக் கும்பலை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்தியாவின் மாநிலங்களின் தன்மைகளுக் கேற்ப பற்பல அவதாரங்களில் வலம் வரும் இந்துத்துவா அமைப்புகளின் பட்டியல் மிக நீண்டது. அவை ஒவ்வொன்றுமே மதவெறி என்னும் நஞ்சு தேங்கிய கொடுக்குகளைக் கொண்டவை. அனைத்துக்கும் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். செயல்படும் விதத்தையும் ஆதாரமான நிதியைக் கையாள்வது குறித்தும் விரிவாகக் குறிப்பிடும் நூலாசிரியர் இறுதியில் “ஆர்.எஸ்.எஸ்தான் நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார அமைப்பு என்கிறார்.
பின்னிணைப்பாக நூலாசிரியர் தரும் 200 பக்கங்கள் முக்கிய ஆவணங்கள். ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் என்பதற்கான அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள். ஆர்.எஸ்.எஸ். தோன்றியதிலிருந்து அதன் சர்சங்சாலக்குகள் என உயர் பதவியை வகித்தவர்கள் கையாண்ட ஆவணங்கள் தரப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சுதந்திர இந்தியா என அரசுகளுக்கு எழுதிய கடிதங்கள் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. சாவர்க்கரின் சரணாகதியாகும் மன்னிப்புக் கடிதங்கள், மகாத்மா காந்தியின் படுகொலையின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கக் கோரிய கடிதங்கள், இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலைப் பிரகடனத்தையொட்டி கைதான ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விடுதலை பெற வேண்டி எழுதிய கடிதங்கள் என அனைத்தும் இடம் பெற்றுள்ளன. அக்கடிதங்கள் மூலம் ஆர்.எஸ்எஸ். தனக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் எந்த அளவிற்கும் கீழிறங்கிச் செல்லும் என்பதை உணர முடிகிறது.
நூல் நெடுகிலும் ஆதாரங்களின் அணிவகுப்பும் பின்னிணைப்பான ஆதாரங்களும் ‘ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நூல் உண்மையான தேச பக்தி கொண்டோர் மற்றும் மனித நேயத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் வீடுகளின் நூலக அலமாரியில் இடம் பெற வேண்டிய நூல். வரலாற்று ஆவணமாகப் பாதுகாப்பதன் மூலம் நாமும் நமது தலைமுறையும் மதச்சார்பற்ற இந்தியாவைப் படைக்க துணை நிற்கும் எனின் மிகையன்று.
– பெரணமல்லூர் சேகரன்
(கைபேசி எண்
9442145256)
நூல் அறிமுகம் : தீஸ்தா செதல்வாட் நினைவோடை (அரசமைப்புச் சட்டத்தின் காலாட் படை வீரர்) – அ.பாக்கியம்
தீக்கதிர் 15.10.2018
புத்தக மேசை
தீஸ்தா செதல்வாட் நினைவோடை,
தமிழில் : ச.வீரமணி – தஞ்சை ரமேஷ்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018,
பக் : 232, விலை ரூ.200,
தொலைபேசி: 044 – 24332424
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com
அரசமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் என்பது புத்தகத்தின் துணைத் தலைப்பாக இருந்தாலும், வாசிப்பின் முடிவில் ஒரு காலாட்படை வீரர் அசாத்தியமான சாதனைகளை நிகழ்த்தியிருப்பதாகவே கருத்து ஏற்படுகிறது. தீஸ்தா செதல்வாட் தனது நினைவோடைகளை பதிவு செய்திருந்தாலும் அவை கள எதார்த்தங்களை கண் முன்னால் நிறுத்துகிறது.
காவல்துறை அமைப்பு, உயர் அதிகாரிகள், அரசு நிர்வாகம், அரசியல் இயக்கத் தலைமை, புகழ் பெற்ற வழக்குரைஞர்கள், பெரும் ஊடக நிறுவனங்கள், நீதித்துறை ஆகிய அமைப்புகள் அழுகி முடை நாற்றம் எடுத்துச் சிதைந்து கொண்டிருப்பதை இந்த நினைவோடைகள் மூலமாக நிறுவியிருக்கிறார்.
மேற்கண்ட அரசமைப்புகள் நடுநிலை என்றும் மக்களுக்கானது என்றும் அரிதாரங்களை அள்ளி அள்ளி பூசிக் கொண்டாலும் ஆளும் வர்க்கத்திற்கும், வகுப்பு வாதிகளுக்கும் சேவகம் செய்வதே வர்க்கக் கடமையாக உள்ளதை அம்பலப்படுத்தியுள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்று விடலாம் என்று களமிறங்கிய தீஸ்தா செதல்வாட் அது சாத்தியமில்லை, மக்கள் இயக்கமும், விழிப்புணர்வும் அதற்கு அவசியமானது என தனது களத்தை விரிவுபடுத்திக் கொண்டுள்ளார்.
இன்றளவும் அவர் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு வருகிறது. மிரட்டல்கள், பாதுகாப்பற்ற பயணங்கள், இணையதள ரவுடிகளின் வசவுகள் என தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகிக் கொண்டே போராட்டக் களத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது
புத்தகத்தின் முதல் பகுதியில் வகுப்புவாத கலவரங்களின் நிகழ்வுகளை எதார்த்தமாகச் சொல்கிறபோது வாசிப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கிறது.
குஜராத் கலவரங்களை பற்றி புத்தகம் அதிகமாகப் பேசியிருந்தாலும் கலவரங்களின் அடிப்படை அரசியல் பொருளாதாரத் தையும் விளக்கியுள்ளார்.
1970ம் ஆண்டுகளில் மும்பையில் பிவண்டி-மகத்ஜல்கோன் கலவரத்தில் பலர் கொல்லப் பட்டனர்.
சிவசேனா தலைவர் பால்தாக்ரேவின் “வந்தேறிகளைப் பற்றி” வெறுப்பு பேச்சுகளே கலவரத்திற்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்டது.
1970ம் ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அதிகம் சேர ஆரம்பித்தனர். 1984ம் ஆண்டு வரைசிவசேனா இந்துத்துவா பற்றியோ, இந்து ராஷ்ட்டிரம் பற்றியோ வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
1984ம் ஆண்டு மே மாதம் மும்பையில் பிவண்டியில் மதக்கலவரங்களை சிவசேனாவினர் திட்டமிட்டு உருவாக்கினர்.
சிபிஐ விசாரித்த வழக்குகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தது.
எனினும் குஜராத் கலவரத்தில் செதல்வாட் தலைமையிலான அமைப்பு 69 பெரும் வழக்குகளையும் 150 தண்டனைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
நூல் அறிமுகம்: ஆர்.விஜயசங்கர் எழுதிய சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது. (கட்டுரை) வெற்று பிம்பத்தை போட்டு உடைக்க – என்.சிவகுரு நூலாற்றுப்படை தீக்கதிர்
வெற்று பிம்பத்தை போட்டு உடைக்க.
என்.சிவகுரு / நூலாற்றுப்படை / தீக்கதிர்
சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது.
ஆர்.விஜயசங்கர்.
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.100
ஒரு புத்தகம் வாசிக்கும் போது ஏற்படும் உணர்வுகள், நம்மில் பல சிந்தனை மாற்றங்களை உருவாக்கும். நாம் பல ஆண்டு காலம் தேக்கி வைத்திருந்த பழைய நம்பிக்கைகளை உடைக்கும்.
அதுவும் சரித்திர ஆதாரங்களோடு தருவிக்கப்பட்டால், புத்துணர்ச்சி உருவாகும். எதிரிகளை எந்த களத்திலும் நேரிடையாக சந்திக்க புது உத்வேகம் கிடைக்கும். அம்மாதிரியான நூலை நமக்கு தந்துள்ளார் ஆர்.விஜயசங்கர்.
79 பக்கங்களில் பல்வேறு தரவுகளோடு வலதுசாரிகள் இன்று கட்டமைக்கும் பிம்பத்தை போட்டு உடைக்க இது ஒரு கருத்து பேராயுதம். கலாச்சார தேசியம் இந்துத்துவ சக்திகளின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் சாவர்க்கர். அவர் இந்தி யாவை இந்துத்துவ நாடாக மாற்றிட பல முக்கிய கருத்தோட்டங்களை பரப்பியவர். சனாதன குடும்பத்தில்
(சித்பவன பிராமணர்) பிறந்து தீவிர இந்துத்துவ சிந்தனையை தன்னுடைய இளமை காலத்திலேயே வரித்து கொண்டவர்.
இந்தியா என்பது கலாச்சார ரீதியாக இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டிய ஒரு நாடு. மற்றைய மதத்தினர் அனைவருமே அயல் நாட்டினர்; இங்குள்ளவர்களை துரத்தி விட்டு, வஞ்சகமாக நாட்டை பிடித்தனர் என்று பேசிய வர். உதாரணமாக, முகலாய ஆட்சியை பற்றிய அவரின் மதிப்பீடு இது தான்: “பழைய முகலாய வம்சாவளியின் ஆட்சி இந்த மண்ணின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அப்பட்டமான பலாத்காரம் மூலமாக திணிக்கப்பட்டது. மேலோட்டமாக பார்த்தால் இது சரி என்றே தோன்றும். ஆனால் அதுவா உண்மை… அந்த உண்மையை இந்த புத்தகத்தில்ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார் நூலாசிரியர்.
இந்து கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டால், இந்து இனம் விரும்பும் வரையில் கிறித்துவர்கள், முஸ்லிம்கள் இங்கு இருக்கலாம் என்பது தான் சாவர்க்கரின் கொள்கையின் சாரம். இதிலிருந்து தான் அவரின் கலாச்சார தேசியத்தை நாம் உள்வாங்க வேண்டும். அது எவ்வகையானது என்பதை இந்த நூல் பேசுகிறது. தேசியம் எனும் கருத்தாக்கத்தை ஒரு மதம் சார்ந்த கலாச்சாரத்தோடு முன்வைத்து பிற்போக்கு கொள்கைகளை முன்வைத்தார்.
இன்று பாஜக பேசும் இந்த கொள்கைக்கு அடித்தளம் இட்டவர், தீவிர இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தியதும் இவரே. அந்தமான் சிறையின் வீரரா? தற்போதுள்ள ஆளும் பாஜக தங்களின் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக வினாயக் தாமோதர் சாவர்கரையே முன்னிறுத்துகிறது. அதாவது தங்களின் மேல் உள்ள தீராப்பழியை இவரை வைத்தே துடைக்க பார்க்கிறது.
இந்தியாவின் சுதந்திர போராட்டத் தில் மக்களை திரட்டியோ, பெரும் போராட் டங்களையோ நடத்தியதாக அவர்களிடம் எதுவும் இல்லாத போது, சாவர்கார் அந்த மான் சிறையில் அடைக்கப்பட்டு, பெரும் துன்ப துயரங்களுக்கு ஆளாகி, அதனாலேயே இங்கே பேரெழுச்சி உருவானதைப் போல ஒரு பெரிய பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அவர் அந்தமான் சிறையில் இருந்தது, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் சிட்டகாங் எழுச்சியில் புரட்சிகாரர்களை போல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி உயிர் துறக்கவில்லை. பகத்சிங்,குதிராம் போஸ் ஆகியோரை போல உயிரே போனாலும் சரி என்று தியாகம் செய்யவும் இல்லை என்பதை ஆய்வாளர் சுபோரஞ்சன் தாஸ்குப்தா கூறுகிறார் எனும் ஆதாரம் இந்நூலில் உள்ளது.
மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் மானினி சாட்டர்ஜி சாவர்கரின் சிறைவாசம் எப்படிப்பட்டது இரு வரிகளில் அழகுற கூறு கிறார்: “அவரின் சிறை வாழ்க்கை, ஏகாதி பத்திய எதிர்ப்பை ஆழமாக்கவில்லை, மாறாக அதை முடித்து வைத்து விட்டது.” அவர் மேலும் சொல்கிறார்: “சிறையின் சூழல் மனிதத் தன்மையற்றது, ஆனால் சாவர்க்கரை போல், மற்றைய எவரும்
மன்னிப்பு கோரவில்லை. கம்பீரமாக கொடுமைகளை எதிர்த்து நின்றனர். உயிர் துறந்தனர். விடுதலை வேள்வியில் தங்களை அர்ப்பணித்த னர்.” சிறைக் கைதிகளின் ஒப்பீடு இந்த நூலின் முக்கியமான சிறப்பு அந்தமான் சிறையில் சாவர்க்கரோடு இருந்த 8 போராட்ட தியாகிகளை பற்றி இதில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
அந்த பக்கங்களை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது, சர்வ நிச்சயமாக கண் கலங்க வைக்கும். அதில் இதோ ஒரு உதாரணம்… சத்ரா சிங்; சிறையில் போராட்டம் நடந்த காலத்தில் இவர் கண்காணிப்பாளரை அடித்துவிட்டார். அதற்காக அவர் மயக்கமடையும் வரை அடித்துவிட்டர்கள், அவரைஒரு கொட்டடிக்குள் தள்ளினர். இரண்டு ஆண்டுகள் அவரை தொடர்ந்து சித்ரவதை செய்தனர். அவருக்கென்று கம்பி வலையைக்கொண்டு வராண்டாவில் ஒரு கூண்டு அமைக்கப்பட்டது. அதற்குள்ளேயே தான் உண்பதும், உறங்கு வதும், இயற்கை உபாதைகளை தீர்த்து கொள்வது… கற்பனைக்கு எட்டாத துன்பம், கொடுமை. ஆனால் சாவர்க்கரோ ஏன் நீங்கள் போராட்டங்களுக்கு தலைமை ஏற்கவில்லை என கேட்டபோது பின்வருமாறு பதிலளிக்கிறார்:
மதச்சார்பின்மையைக் கைவிடும் குஜராத் அரசு – தமிழில்: ச.வீரமணி
வரும் 2022-23 கல்வியாண்டு முதல் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதை கற்பிக்கப்படும் என்று குஜராத் மாநில அரசின் கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது, அரசு மதச்சார்பின்மைக் கொள்கையை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகள் எதுவும் எவ்விதமான மத போதனைகளையும் அளிக்கக்கூடாது என்பது அனைத்து மதச்சார்பற்ற அரசுகளின் அடிப்படைக் கொள்கையாகும்.
இந்தக் கொள்கையை அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் முதலான பல நாடுகள் பின்பற்றுகின்றன. தனியார் பள்ளிகள் எவ்விதமான மத போதனைகளையும் அளித்திட சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசுப் பள்ளிகளுக்குக் கிடையாது. பகவத் கீதை என்பது ஒரு மதஞ்சார்ந்த நூலாகும். இது, இந்து மதத்தின் பாரம்பர்யங்கள் மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் வாழ்க்கை முறை மற்றும் நடத்தையை மேற்கொள்ளவேண்டும் என்று கோருகிறது. அதன் மதப் பின்னணியை ஓரங்கட்டிவிட்டு, மாணவர்களுக்கு அறநெறி மற்றும் நெறிமுறைகளைக் கூறும் ஒரு நூலாக அதனைச் சித்தரித்திட முடியாது. கடவுளால் உண்டாக்கப்பட்ட இந்துக்களில் நால் வர்ணப் பிரிவை எவராலும் மாற்ற முடியாது என்கிற கீதையின் சில அம்சங்கள் குறித்து இந்துக்களிலேயே விமர்சிப்பவர்கள் உண்டு. கீதை படுபிற்போக்குத்தனமான ஒன்று என்பது குறித்தோ அல்லது அது சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறது என்பது குறித்தோ உண்மையில் பிரச்சனை கிடையாது. அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த அறிவுரைகளை எப்படி அளித்திட முடியும் என்பதே முன்னுக்கு வந்திருக்கும் பிரச்சனையாகும்.
அரசமைப்புச்சட்டத்தின் கீழ், அடிப்படை உரிமைகள் குறித்து விவரித்திடும் 28(1)ஆவது அத்தியாயம் கூறுவதாவது: “அரசின் நிதி உதவியின்கீழ் இயங்கிடும் எந்தவொரு கல்வி நிறுவனமும் மதஞ்சார்ந்த எந்தவிதமான அறிவுரையையும் அளித்திடாது.” அரசாங்கத்தால் நடத்தப்படாத கல்வி நிலையங்களில் அல்லது அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனங்களில், ஏதேனும் மதஞ்சார்ந்த அறிவுரைகள் அளிக்கப்படுமானால், அதனைச் செவிமடுக்கும் மாணவர் வயதுக்கு வராதவராக (மைனராக) இருந்தால், அவருடைய பாதுகாவலரின் அனுமதியைப் பெறாமல், அத்தகைய அறிவுரைகளைச் செவிமடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அது மேலும் கூறுகிறது. எனவேதான், பகவத் கீதை தொடர்பான குஜராத் அரசு மேற்கொண்டுள்ள முடிவு, அரசின் நிதியின்கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் எவ்விதமான மதஞ்சார்ந்த அறிவுரைகளும் அளிக்கப்படக்கூடாது என்கிற நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரான ஒன்றாக மாறுகிறது.
குஜராத் பாணியை இப்போது இதர பாஜக ஆளும் மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. கர்நாடகப் பள்ளிக் கல்விக்கான அமைச்சர், கல்வியாளர்களுடன் கலந்தாலோசனை செய்து, பள்ளிகளில் பகவத்கீதை அறிமுகப்படுத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். “பகவத் கீதை, இந்துக்களுக்கானது மட்டுமல்ல, அது எல்லோருக்குமானது” என்றும் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். இதே கர்நாடக அரசாங்கம்தான் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதைச் சட்டவிரோதமாக்கி இருக்கிறது. ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், “பகவத் கீதை நமக்கு அறநெறிகளையும், நெறிமுறைகளையும் போதிக்கிறது. ஒவ்வொரு மாநில அரசாங்கமும் இதுபற்றிச் சிந்தித்திட வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.
இந்திய அரசமைப்பின் ஆணிவேராக விளங்கும் மதச்சார்பின்மையை வேரறுத்திட வேண்டும் என்பதற்கான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியே இவ்வாறு அரசுப்பள்ளிகளில் இந்து மதம் சம்பந்தமான புத்தகங்களையும், புராணங்களையும் புகுத்துவதற்கான முயற்சிகளாகும். பள்ளிப் பாடப்புத்தகங்களில் கீதையைப் புகுத்துவதனை நியாயப்படுத்திட “இந்தியக் கலாச்சாரம் மற்றும் அறிவு முறைகள்” பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை குஜராத் கல்வி அமைச்சர் மேற்கோள் காட்டியிருக்கிறார். இதேபோன்றே அரசின் பல துறைகளிலும் அரசின் நிதி உதவியுடன் இந்து மத அடையாளங்களைப் புகுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதும், இந்து மதக் கோவில்களைப் புதுப்பித்திட நடவடிக்கைகள் மேற்கொள்வதும் வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு பிரதமர் காசி விஸ்வநாத் கோவிலுக்கான பாதையைத் துவக்கி வைத்திருப்பது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அரசு, நாட்டு மக்களில் பெரும்பான்மையாகவுள்ளவர்களின் மதத்திற்கு ஆதரவும் அரவணைப்பும் அளிப்பதும், அதற்கு அரசின் நிறுவனங்களிலும் அமைப்புமுறைகளிலும் சலுகைகள் அளிப்பதும் நாட்டில் ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மை தொடர்பாக பெயரளவில் செயல்படுவதென்பதற்கும் முடிவுகட்டிவிட்டது. ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’), மதமாற்றம் மற்றும் கால்நடைகள் வெட்டப்படுவதற்குத் தடை முதலானவற்றிற்கு எதிரான சட்டங்கள் சிறுபான்மை மக்களைக் குறிவைத்தே பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்றே ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள, குடியுரிமைத் திருத்தச் சட்டமானது ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு அவருடைய மதத்தையும் பரிசீலித்திட வேண்டும் என்று விதி ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்தில், பகவத் கீதையைப் பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் சேர்த்திருப்பதை, அங்கே பிரதான எதிர்க்கட்சியாக இருந்துவரும் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், “பள்ளிப் பாடப் புத்தகங்களில் பகவத்கீதையை அறிமுகப்படுத்தியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால், அரசாங்கம்தான் கீதையிலிருந்து முதலில் பாடம் படிக்க வேண்டியது அவசியமாகும்,” என்று கூறியிருக்கிறார். இதேபோன்றே ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளரும், “நாங்கள் குஜராத் அரசின் முடிவை வரவேற்கிறோம். இது மாணவர்களுக்குப் பயனளிக்கும்” என்று கூறியிருக்கிறார்.
குஜராத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு அளித்திருக்கும் பிரதிபலிப்பு ஒரு புதிய எதார்த்த நிலையைக் காட்டுகிறது. அதாவது, அங்கே இந்துத்துவா மிகவும் உறுதியாக ஒரு மேலாதிக்க நிலைக்கு உயர்ந்திருப்பதை இது காட்டுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டும் என்று விரும்புகிற இடது மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும், இந்த எதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் தங்கள் போராட்ட உத்திகளை வகுத்திட வேண்டும்.
(மார்ச் 23, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டும் அம்சங்கள் – தமிழில்: ச.வீரமணி
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று முக்கிய அம்சங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. முதலாவது, உத்தரப்பிரதேசத்தில் பாஜக இரண்டாவது முறையாகவும் ஆட்சி அமைத்திட தீர்மானகரமான முறையில் வெற்றி பெற்றிருப்பதும், அதேபோன்று உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் அது தன் அரசாங்கங்களைத் தக்க வைத்துக்கொள்வதிலும் வெற்றி பெற்றிருப்பதுமாகும். பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குறைந்த பெரும்பான்மையே பெற்றிருந்தபோதிலும், அவற்றின் வாக்கு சதவீதம் 3.65 சதவீதம் அளவிற்கு உயர்ந்து, 45 சதவீதமாகி இருக்கிறது. சாதிக் குழுக்களையும், கூட்டணிகளையும் மிகவும் திறமையாகக் கையாண்டது, பணத்தை வாரி இறைத்தது, சமூக ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது போன்ற பல்வேறு காரணிகள் இவ்வெற்றிக்குத் துணை புரிந்திருக்கின்றன. ஆனாலும், மக்கள் மத்தியில் ‘இந்து உணர்வை’ மேலோங்கச் செய்திருக்கும் பிரதான அம்சத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது
இந்துத்துவா – மனுவாத சவால்
பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் கடந்த சில ஆண்டுகளில் உயர் சாதியினர் மட்டுமல்லாமல், மக்கள் தொகையில் கணிசமான பிரிவினர் மத்தியில் ‘நாம் இந்துக்கள்’ என்கிற உணர்வு விதைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களை முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராகவும் திருப்பிவிடக்கூடிய விதத்தில் இவர்கள் மத்தியில் இந்துத்துவா கருத்துக்களையும் ஏற்க வைத்திருக்கிறார்கள். பாஜக, உயர் சாதியினர், மற்றும் (முஸ்லீம்கள், யாதவர்கள் மற்றும் ஜாட் இனத்தவர்களைத் தவிர)இதர அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரையும், தலித்துகளையும் வென்றெடுத்திருக்கிறது என்று வளர்சமூகங்களின் ஆய்வு மையத்தின்-லோக்நிதி அமைப்பு நடத்திய (Centre for the study of Developing Socidtids-Lokniti) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்துக்கள் மத்தியிலேயே தங்களுடைய குறிப்பிட்ட சாதி அடையாளத்தை உயர்த்திப்பிடிப்பது என்பது பாஜக-வினருக்குப் பலன் அளிக்கக்கூடிய ஒன்றாக மாறி இருக்கிறது.
இவ்வாறு உணர்வுக்குத் தள்ளப்பட்ட மக்களிடமிருந்து இத்தகைய உணர்வை முறியடிக்க வேண்டிய நிலைக்கு சமாஜ்வாதிக் கட்சி-ராஷ்ட்ரிய லோக்தளம் தள்ளப்பட்டது. உத்தரப்பிரதேசம், இந்தி பேசும் மக்கள் மத்தியில் இதயம் போன்ற பகுதியாகும். இம்மாநிலம் முழுவதும் இதேபோன்ற ‘நாம் இந்துக்கள்’ என்னும் உணர்வு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில், ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டமும், வேலையின்மை மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிரமங்களும் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தபோதிலும், அவை மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கிற ‘இந்துக்கள் ஆதரவு’ உணர்வை மாற்றக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இல்லை. இத்தகைய சமூக எதார்த்தமானது, இந்துத்துவா சித்தாந்தத்தினை எதிர்த்து முறியடித்திடவும், இதற்கு மாற்று சமூக-கலாச்சார-தத்துவார்த்தக் கட்டமைப்பைக் கட்டி எழுப்புவதற்குத் தேவையான அளவிற்கு அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பணியினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதற்கு இடதுசாரிகளின் கேந்திரமான பங்களிப்பு தேவைப்படுகிறது. இந்துத்வா-மனுவாத சவாலை எதிர்த்து முறியடித்திடக்கூடிய அதே சமயத்தில் அதனுடன் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும், ஒரு மாற்று ஜனநாயக-மதச்சார்பற்ற சமூக-கலாச்சார விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கக்கூடிய போராட்டத்தையும் இணைத்து எடுத்துச் செல்ல வேண்டியதும் அவசியமாகும். இவை, இதர ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படையாகவும் இருந்திட வேண்டும்.
இரண்டாவது அம்சம்
இத்தேர்தல் முடிவுகள் வெளிக்கொண்டுவந்திருக்கும் இரண்டாவது அம்சம், தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகும். குறிப்பாக பஞ்சாப்பின் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ், அங்கும் படுதோல்வி அடைந்திருக்கிறது. இதர மாநிலங்களைப் பொறுத்த வரையிலும் கூட, உத்தரகண்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசின் செயல்பாடு, முந்தைய தேர்தல்களில் இருந்த நிலைமைகளைவிட, வாக்கு சதவீதத்திலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையிலும் மோசமான இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில், பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெறும் 2.3 சதவீத வாக்குகளையே பெற்று, இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. முன்பு அதற்கு இங்கே ஏழு இடங்கள் இருந்தன.
இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த இடங்களில் எல்லாம் பாஜக மிகப்பெரிய அளவில் ஆதாயம் அடைந்திருக்கிறது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி முன்பிருந்த பலத்துடன் ஒப்பிடுகையில் அது வெறும் எலும்புக்கூடாக மாறியுள்ளபோதிலும், அது இப்போதும் தான் ஒரு வலுவான பிரதான கட்சி என்கிற நினைப்புடன் நடந்துகொள்ளும் போக்கைக் கடைப்பிடிப்பது தொடர்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக-விற்கு சரியான முறையில் எதிர்ப்பை அளிக்கக்கூடிய விதத்தில் சமாஜ்வாதி-ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி உருவாகியிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துள்ள அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சி மட்டும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது குறித்து வேறெந்தவிதத்தில் விளக்கிட முடியும்? காங்கிரஸ் கட்சி, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் எதிராகவும், மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்யும் வேறு சில மாநிலங்களிலும் அவற்றுக்கு எதிரான நிலை எடுத்திருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துத்துவா சித்தாந்தத்துடன் சமரசம் செய்துகொள்ளும் போக்கைக் கடைப்பிடிப்பதையும் பார்க்க முடிகிறது. காந்தி குடும்பத்தை முழுமையாக சார்ந்திருப்பதிலிருந்து ஒரு முறிவை ஏற்படுத்திக்கொண்டு, புதியதொரு வலுவான தலைமையை உருவாக்குவது எப்படி என்பதில் காங்கிரஸ் கட்சி தீராத குழப்பத்தில் சிக்கியுள்ளதுபோன்றே தெரிகிறது. பாஜக-விற்கு ஒரு வலுவான எதிர்ப்பை அளித்திட, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்துவரும் பாஜக-விற்கு எதிரான சக்திகளை அணிதிரட்டுவது அவசியம். இதில் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மூன்றாவது அம்சம்
மூன்றாவது அம்சம், இந்தத் தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருப்பதாகும். அது, தில்லியில் எப்படி இதர கட்சிகளைத் துடைத்தெறிந்துவிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றதோ அதே போன்று இங்கேயும் பிரதிபலித்திருக்கிறது. இங்கே ஆம் ஆத்மி கட்சி, சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மற்றும் அவர்களுக்கிடையே காணப்படும் பல்வேறு இனத்தினர் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றிருப்பதைக் காட்டுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை பஞ்சாப்பில் அமைந்திடும் ஆம் ஆத்மி அரசாங்கம், முதல் அடியை எடுத்து வைத்துக் காட்டியிருக்கிறது.
மார்ச் 16, 2022
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
நூல் அறிமுகம்: அ. மார்க்ஸின் ’இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும்’ – சு. அழகேஸ்வரன்
பிளவுவாத அரசியலுக்கு எதிரான நூல்
சமீபத்தில் பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதிய இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும் என்ற நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் 1970 களில் ஏற்பட்ட தாராளவாத பொருளாதாரவாதத்தின் வீழ்ச்சி, அணு ஆயுதங்கள் ஏற்படுத்திய பேரழிவு குறித்த அச்சம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு முதலியவை மதத்தின் இருப்பை உறுதிப்படுத்திவிட்டதாகக் கூறுகிறது. மேலும் தேசியம் என்பதின் மீதான ஈர்ப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இடத்தை மதவாத தேசியம் கைப்பற்றியுள்ளது. இந்த மதவாத தேசியம் மதங்கள் தாம் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் அதிகாரம் பெறுவதாகவும், அதுவே சிறுபான்மையாக உள்ள இடங்களில் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி துன்புறுத்துவதற்கு காரணமாகியுள்ளது. எனவே மதங்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது என்கிறது இந்த நூல் முன்னுரை.
அத்துடன் தமிழகத்தில் பரவிய இஸ்லாமும், கிறிஸ்தவமும் சாதி மற்றும் தீண்டாமை வேறுபாடுகளைத் தாண்டி கல்வியைப் பொது சொத்தாகியதால் சிறுபான்மை மதத்திற்கும் பிறருக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியது. தவிரவும் திராவிட இயக்கம் சிறுபான்மை மக்களுடன் நல்லுறவை பேணியதால் தமிழகத்தில் சமயம் பொறை நிலவியது. இதுவே மதவாத சக்திகள் தமிழகத்தில் இன்று வரை காலூன்ற முடியாமல் தடுத்து வருகிறது என்று தொடங்கும் இந்நூல் மதங்களின் தோற்றம், பரவல் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த புதிய பார்வையை வழங்குகிறது.
இதற்கு பௌத்த மற்றும் இந்துமத ஆய்வாளர் டேவிட் கெல்னரின் மனித வாழ்வில் மதங்களின் பங்கு குறித்த கருத்துக்கள் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மானுட வாழ்வில் மதத்தின் பங்கு இறை நம்பிக்கை, இறப்பிற்கு பிந்தைய வாழ்வு என்பதுடன் முடிவடைவதில்லை. அதற்கும் அப்பால் பிறந்த குழந்தையை ஆசிர்வதித்து, பெயரிட்டு அதைச் சமூக உறுப்பினர்களில் ஒருவராக ஏற்று பின்னாளில் அவரது திருமணத்தை ஆசீர்வதித்து அந்த தம்பதியினரை குடும்பமாக அங்கீகரிக்கிறது. மதத்தின் அந்த ஏற்புகளுக்கு அரசும், சட்டங்களும் சட்டபூர்வ நிலைமை வழங்குகிறது. இவற்றையே நாம் கெல்னர் கருத்துக்களின் சுருக்கமாகக் கொள்ளலாம். மேலும் இவையெல்லாம்தான் மதத்தை எளிதில் முடிவுக்கு கொண்டுவர முடியாமைக்கான காரணங்களாக உள்ளதாகவும் இந்நூல் சுட்டுகிறது.
இந்து மதம்:
இந்து மதத்தின் ஆகப்பெரிய பலவீனம் அதன் தோற்றத்திலேயே அடங்கியுள்ளது. அது வருண வேறுபாட்டில் தொடங்கி சாதி, தீண்டாமை ஆகிய அனைத்திற்கும் நடைமுறையில் மட்டுமின்றி கோட்பாடு ரீதியாகவும் இடம் கொடுத்தது. மேலும் இந்து மதத்திற்கு மறைநூல் ஒன்று இல்லாததின் காரணமாக இந்து மதத்தை ஏற்றவர்கள் முன்வைத்த கருத்துக்களில் பெரிய வேறுபாடுகளைக் காண முடிகிறது என்பது உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது.
மேலும் அயோத்தியில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை முன்வைத்து, இராமர் கோவில் இடிக்கப்பட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று இந்துத்துவவாதிகளின் உற்சாகமாக வாதிட்டதை இந்நூல் மறுக்கிறது. இந்த அகழாய்வில் கிடைத்த தூண்கள் முதலானவை பௌத்த கட்டுமானங்களில் உள்ள தூண்களில் பானியிலேயே உள்ளன. எனவே அவற்றை பாதுகாத்து வைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனும் குரல்கள் பல திசைகளிலுமிருந்து ஒலித்ததை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.
அவற்றுடன் இந்துமத காப்பிய வர்ணனைகள் மற்றும் துர்கா பூஜை குறித்த சர்ச்சைகளுக்கும் இந்நூல் எதிர்வினை ஆற்றுகிறது. இந்துமதக் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் மிகவும் தொன்மையானவை. அவை மத நூல்கள் அல்ல. அந்த காப்பியங்களில் பெண்களின் அங்க அழகுகள் வர்ணிக்கப்பட்டுள்ளது ஒரு காப்பிய மரபின் அடிப்படையில்தான். இந்த மரபு தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையிலும் தொடரத்தான் செய்கிறது. எனவே இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள் குறித்த வர்ணனைகளை ஆபாசங்களாகப் பார்க்கக்கூடாது.
அதேவேளையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோர் அரசியல் சார்ந்தே இவற்றின்மீது விமர்சனங்களை வைத்தார்கள். அந்த அரசியலும் நமது சூழலுக்கு தேவையான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்.
அதேபோல் அசுரகுலத் தலைவன் மகிஷாசுரனை கொன்றொழித்த மகிஷாசுர மர்தினியை (துர்கை) கொண்டாடும் வகையில் துர்கா பூஜை நடத்தப்படுகிறது. உண்மையில் ஓரங்கட்டப்பட்ட உள்நாட்டு மக்களை கொன்று ஒடுக்கியதை விவரிப்பதுதான் இந்த மகிஷாசுரன் மர்த்தினி வரலாறு. இதற்கு மாறான கதையைச் சொல்லி துர்கா பூஜை கொண்டாடுவது எம் சமூகத்தை இழிவுபடுத்துவதாகவே உள்ளது என்று பழங்குடியினர், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களில் உரிமைகளுக்காக நிற்பவர்கள் சொல்லி வருகிறார்கள். அத்துடன் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் எல்லைப்பகுதிகளில் மகிஷாசுரனை தெய்வமாகவும் வழிபடுகிறார்கள். ஆனால் இதே கருத்தை பிரச்சாரம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை நியாயப்படுத்தி அன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணி நாடாளுமன்றத்திலும் பேசினார். இவை அடிப்படை சட்ட விதிகளுக்கு எதிரானது என இந்நூல் வாதிடுகிறது.
சமணம்:
உயிர்ப்பலிகளை ஏற்றுக்கொண்ட கங்கைச் சமவெளி வைதீகம், பௌத்தம்-சமண எழுச்சிக்கும் பிந்தைய காலத்தில் அவற்றை கைவிட்டன. உயிர்ப்பலி மறுப்பு எனும் கொல்லாமை உட்பட எளிய மக்களின் பசிப்பிணி அகற்றள், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைதள் ஆகிய கொள்கைகளை சமணம் மட்டுமே முழு உறுதிப்பாட்டுடன் கடைப்பிடித்தது. எனவே பிற மதங்களுடன் ஒப்பிடும்போது, சமணம் வீழ்ச்சி அடைவதற்கு அதுவே காரணமாக அமைந்தது. ஆனாலும் சமணம் இந்தியா முழுவதும் எண்னையும், எழுத்தையும் பரப்பியது. பிராமி எனும் தொல் வடிவ எழுத்தை இந்தியாவிற்கு கொடையாக அளித்தது போல் தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்களை வழங்கியது. பாட்டுக்களை சீர்களாகப் பிரிப்பது, எழுத்து, சொல்லாராய்ச்சி மற்றும் அகராதி உருவாக்கப் பணிகளை சமணமே செய்தது என்பதை இந்நூல் மீள் பதிவு செய்கிறது. மேலும் பாஜக எம்பி தருண் விஜயும், துக்ளக் ஆசிரியர் சோ வும் திருக்குறளை இந்துத்துவ வலைக்குள் கொண்டு வர முயற்சித்ததை சுட்டிக்காட்டி அது சமண நூல்தான் என்று நிறுவுகிறது.
பௌத்தம்:
பௌத்தம் நீண்டநாள் நீடித்ததற்கு காரணம், அதை மீளுருவாக்கம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய முறைகள், பண்டைய பொருளாதாரத்திலும், இலக்கண உருவாக்கத்திலும் பௌத்தத்தின் பங்களிப்புகளை இந்நூல் விளக்குகிறது.
தொடக்க கால பௌத்தம் இறுதி விடுதலை என்பதற்கு மட்டுமே அழுத்தம் கொடுத்தது. உலகியல் சார்ந்த விடயங்களை பொருத்தமட்டில் சமூக சடங்குகளுக்கும், பக்திக்கும் இடமற்ற மறுவாழ்வு ஒன்றை மட்டுமே முன்வைத்தது. ஆனால் அது வெகுஜனத் தன்மையை அடைந்தபோது சமூக ஏற்பை அளிக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் போனது ஒரு குறையாகவே இருந்தது. எனவே இந்த காலியிடத்தை பூர்த்தி செய்ய பிற மதக் கருத்துக்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டது. இதன் காரணமாகவே பௌத்தம் ஒப்பீட்டு ரீதியில் அதிக காலம் நீடித்தது.
மேலும் தமிழகத்தில் பௌத்த மீளுருவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எனவே கெல்னர் கூறிய கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.
பௌத்தம் உருவாக்கிய பொருளாதார மாற்றங்களைப் பொருத்தமட்டில், அந்த காலத்தில் வணிகர்கள் தொலைதூரத்திலிருந்து வணிகம் செய்து வந்தனர். அவர்கள் பௌத்த துறவிகள் வசித்த குகைளுக்கு பொருளாதார உதவிகளை செய்தனர். பௌத்த மடங்கள் மிக முக்கியமான வாடிக்கையாளர்களாகவும், வணிகர்களின் பொருட் கிடங்குகளாகவும் இருந்தன. பின்னர் இந்தியா, சீனா எல்லைப் பகுதிகளில் விவசாயக் குடியிருப்புகளை உருவாக்கியதில் பௌத்தம் முக்கியப் பங்காற்றியது. இந்த குடியிருப்புகள் வழியாக பண்ட மாற்றங்கள் நடைபெற்றது. இது அடிப்படை பொருளாதாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பின்னர் தொலைதூரம் வணிகம் முடிவுக்கு வந்தது. எனவே தமது மதக் கடமைகளையும், பொருளாதாரச் செயல்பாடுகளையும் நிறைவேற்றி முடித்திருந்த பௌத்த மடங்கள் மறையத் தொடங்கின.
தமிழ் இலக்கண உருவாக்கத்தைப் பொருத்தமட்டில் பௌத்த மரபில் வந்த இலக்கண நூலான வீரசோழியம் எட்டு சுவைகளுடன் ‘சாந்தம்’ என்ற சுவையையும் கூடுதலாக இணைத்தது. மேலும் அக்காலகட்டத்தில் பௌத்த நாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பால் ஏற்பட்ட மொழி மாற்றங்களை ஏற்று, தமிழ் இலக்கணத்தை இந்நூல் விளக்குகிறது.
சைவம்:
தமிழகத்தில் சைவ எழுச்சி பெற்ற பின்புலம், முஸ்லிம் மன்னர்களால் கட்டப்பட்ட காசி மடம் குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளது.
சைவக் குரவர்களில் ஒருவரான குமரகுருபர சுவாமிகள் சர்வ சமய மாநாட்டில் கலந்துகொண்டு சைவ தத்துவங்களை விளக்கியதில் கவர்ந்த ஒளரங்கசீப்பின் தமையன் தராஷிகா காசியில் ஒரு மடத்தை கட்டிக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சுவாமிகள் நேபாளத்தில் சாரங்கி என்ற ஊரில் துணை மடத்தை அமைத்தார். ஆனால் முஸ்லிம் ஆட்சியாளர்களின் உதவியால் உருவாக்கப்பட்ட குமரகுருபர மடம் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது. ஆனால் சாரங்கி மடம், சைவ மடங்களின் உள்விவகாரங்களின் காரணமாக அவர்களது கையை விட்டு போய்விட்ட உண்மைகள் தமிழறிஞர் கு.அருணாச்சலத்தின் நூலை முன்வைத்து சொல்லப்பட்டுள்ளது.
ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தை இருண்ட காலம் என சித்தரித்ததுடன் சமண பௌத்த நூல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்கிற மும்மூர்த்திகள் மற்றும் மாணிக்கவாசகர், மெய்கண்டார் முதலான சைவர்களின் பணிகளில் காரணமாக தமிழ் சைவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் வசமானது. இந்தப் பின்னணியில்தான் சைவம் மடங்கள் பெரும் செல்வத்துடன் உருவாக்கப்பட்டது.
இஸ்லாம்:
இஸ்லாம் வணிகச் சூழலில் உருவான மதம். சம்பாதித்த பொருளில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு அளிப்பதோடு நிறுத்திக்கொண்டது. அளவுக்கு மீறிய சொத்து சேகரிப்பு குற்றமாகக் கருதப்படவில்லை. ஆனால் சமூக சமத்துவத்தை பொறுத்தமட்டில் இஸ்லாமிற்கு நிகராக எந்த மதத்தையும் சொல்லிவிட முடியாது. ஒரு காலத்தில் மேலை கிறிஸ்துவ வரலாற்றறிஞர்கள் ‘இஸ்லாம் வாளோடு மதம்’ என்று கதை பரப்பியதை தற்போது இந்துத்துவவாதிகள் செய்து வருகிறார்கள். உண்மையில் மதமாற்றம் என்பது இரண்டு கட்டங்களைக் கொண்டது. ஒரு மதத்தில் ஈர்ப்பு கொண்டு அதை ஏற்பது முதல் கட்டம். இரண்டாவது நிலையில்தான் அவர்கள் அந்த மதத்தின் நம்பிக்கைகள் அனைத்தையும் மதித்து இறுக்கமாக கடைப்பிடிக்கிறார்கள். இதன்படி பார்க்கும்போது இந்தியாவில் இஸ்லாம் படிப்படியாகத்தான் பரவியது. முஸ்லிம் அரசுகள் இஸ்லாம் பரவலில் பங்கேற்ற போதிலும் அதை வன்முறையில் செய்யவில்லை.
இன்று இஸ்லாம் மிகக் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் அது இஸ்லாமுக்குள் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இஸ்லாமிய புனித நூல்கள் மறு வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் திருக்குர்ஆனில் தந்தைவழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என்று அஸ்மா பர்னால் முன்வைக்கும் வாதங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. மதத்தில் நின்று உரையாடுவதற்குரிய ஒரு உரைசார் உத்தியை இவரது வாசிப்பு வழங்குவதில் இதுவே முக்கியமான போக்காக இனம் குறிக்கப்படுகிறது.
அடுத்ததாக, இன்று உலகம் முழுவதும் பரவி வரும் தப்லிக் ஜமாத் இயக்கம் அரசியல் பற்றி பேசாமல் ஒரு நல்ல முஸ்லிமாக இருப்பது எப்படி என்பதை மட்டுமே வலியுறுத்தி வருகிறது. இவ்வாறாக அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பது நல்லதல்ல என்று இஸ்லாம் அறிஞர்களில் சிலர் விமர்சித்து வருவதை இந்நூல் கவனப்படுத்துகிறது. ஆனால் இவ்வியக்கம் பயங்கரவாதத்தின் நுழைவாயிலாக உள்ளது என்று குற்றஞ்சாட்டி சவுதி அரேபிய அரசு சமீபத்தில் தடை செய்துள்ளது. எனவே இந்த இயக்கம் குறித்து கூடுதல் வாசிப்பு தேவை.
கிறிஸ்தவம்:
அடிமைப் பட்டவர்களின் மதமாக உருப்பெற்ற கிறிஸ்தவம் பின்னாளில் ஒரு விரிவாக்க மதமாக, காலனியாதிக்க மதமாகத் தோற்றம் கொண்டு மிகப்பெரிய மானுட அழிவிற்கு காரணமானது என்று கூறும் இந்நூல், டால்ஸ்டாய் எழுதிய நூலை திருச்சபை ஏற்காததற்கான காரணங்களை விளக்குகிறது. இயேசுவிற்கு பிறகு உருவான கிறிஸ்தவம் தொடக்கத்தில் அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களை ஏற்று தன் பயணத்தை தொடங்கியது. ஆனால் பின்னர் மத அதிகாரமும், அரசதிகாரமும் தனது அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள மனிதர்களை அற வாழ்விலிருந்து விலக்கி பொருளாதாய வாழ்விற்கு உரியவர்களாக மாற்ற விரும்பியது. இயற்கை அதீதங்களையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் மீண்டும் புகுத்தி இயேசுவால் தூய்மை செய்யப்பட்டிருந்த இறைவன் கட்டளைகளை கரைப்படுத்தியிருந்தன என்பதை டால்ஸ்டாய் கண்டுகொண்டார். எனவே இடைப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்ட அழுக்குகளை நீக்கி தூய்மை செய்து அதை ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ என்ற நூலாக எழுதினார். அதனால்தான் திருச்சபை அதை ஏற்கவில்லை.
அடுத்ததாக, தமிழகத்தில் சகோதரி லூசியானா திருச்சபையின் ஆதரவுடன் ஆற்றிய பணிகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சேவையாற்றிய ஐம்பது ஆண்டுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு யாரும் மாறவில்லை என்பதை கவனப்படுத்துகிறது. மேலும் பிரஷ்யாவிலில் பிறந்து, தரங்கம்பாடிக்கு வந்த ஸ்டுவர்ட்ஸ் பாதிரியார் பணிகளையும், அவரோடு தொடர்புடைய வரலாறு குறித்து எழுதப்பட்டுள்ள ஆ.மாதவையாவின் ‘கிளாரிந்தா’ நாவல் குறித்த திறனாய்வும் இடம்பெற்றுள்ளது.
இறுதிப்பகுதி வா.வே.சு. ஐயரால் எழுதப்பட்டுள்ள நூல் குறித்தது. ஔரங்கசீப்பிற்கு எதிராக போராடிய குருகோவிந்த் சிங் குறித்து எழுதப்பட்டுள்ள அந்த நூல் இஸ்லாத்திற்கு எதிராக மத வெறுப்பையோ, அவதூரையோ வெளிப்படுத்தாமல், அந்த மதத்தின் நெறிகளுக்கு உட்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை விளக்குகிறது.
இவற்றையெல்லாம் தொகுத்து பார்க்கும்போது, இந்நூல் மதம் குறித்த மார்க்ஸ் கூறிய கருத்துக்களை இந்தியச் சூழலில் நின்று விளக்குவதாகவே இருக்கிறது. அறிவொளி காலத்தில் எழுந்த தத்துவப் போக்கு மதத்தையும், தத்துவத்தையும் பிரித்து நிறுத்த வேண்டும் என்றது. தத்துவியலார் எனில் துர்க்கைம் மதத்தின் இடத்தை தேசியம் கைப்பற்றி விட்டது என்றார். சமூகவியலாளர்களோ மதம் என்பதின் இடத்தை அரசியல் கைப்பற்றும் என்று நம்பினார்கள். ஆனால் மார்க்ஸ் மட்டுமே மதத்தை அவ்வாறு குறைத்து மதிப்பிட முடியாது என்றார். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் தொடரும் வரை மதமே நிவாரணியாக அமையும். எனவே மனிதத் துயரங்களை எதிர்ப்பதற்காக வர்க்க ஒற்றுமையைக் கூர்மைப்படுத்துவதுதான் நமது பணி என விளக்கினார் என்றும், அந்த கருத்து நிரூபிக்கப்பட்டுவிட்டது என்கிறது இந்நூல்.
மேலும் இந்நூல் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்ற மார்க்சிய அறிஞர்கள் மதம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளை நவீன கருத்தாக்கங்கள் ஊடாக விரிவுபடுத்தி புதிய எல்லைகளை கண்டடைகிறது. அத்துடன் இந்துத்துவவாதிகளாலும், பொதுப் புத்தியில் நின்று பேசுபவர்களாலும் உருவாக்கப்பட்ட சர்ச்சைகளின் போது, இடையீடு செய்யப்பட்டவைகளின் தொகுப்பாகவும் இந்நூல் திகழ்கிறது. எனவே பிளவுவாத அரசியலை முன்னெடுக்கத் துடிக்கும் சக்திகளை எதிர்கொள்வதற்கு இந்நூல் பயன்படும் மதிப்பு கொண்டது.
சு. அழகேஸ்வரன்
அலைபேசி – 9443701812
நூல்: இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும்
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
விலை: 190
பக்கங்கள்: 214
தமிழ்நாட்டில் தோல்வி காணும் ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத திட்டங்கள் – சசிகாந்த் செந்தில்
மாவட்ட நீதிபதி என்ற முறையில் முதன்முதலாக மங்களூரு மாவட்டச் சிறைச்சாலையில் நான் மேற்கொண்ட ஆய்வு என்னுடைய கண்களைத் திறந்து விட்டது. அந்தச் சிறையிலிருந்த இரண்டு பகுதிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று முழுமையாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சிறைக்குள்ளிருந்த அனைத்து வகையான கைதிகளையும் முஸ்லீம்கள், ஹிந்துக்கள் என்று அந்த இரண்டு பகுதிகளும் தங்களுக்குள்ளாகப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தன. வகுப்புவாத வெறி மட்டுமே அந்த இரண்டு பகுதிகளுக்கிடையில் பொதுவானதாக அந்தச் சிறைக்குள்ளாக நிறைந்திருந்தது. அங்கிருந்த சில பகுதிகள் மிகவும் தீவிரமான களமாக சிறை அதிகாரிகளால்கூட அணுக முடியாதவையாக இருந்ததால் அந்த அதிகாரிகள் என்னை மிகவும் எச்சரித்தனர். ஆனாலும் விடாப்பிடியாக அங்கிருந்த மனிதர்களின் கதைகளையும், வகுப்புவாத திட்டங்கள் காஸ்மோபாலிட்டன் பன்மைக் கலாச்சாரத்தை சிதைத்து எவ்வாறு செழித்து வருகின்றன என்பதையும் அறிந்து கொள்வதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாகவே இருந்தேன்.
பல்வேறு நபர்களுடன் தொடர்புகளை உள்ளடக்கி அந்த மாவட்டத்தில் எனக்கு கிடைத்த அந்த இரண்டு ஆண்டு நீண்ட பதவிக்காலம் வகுப்புவாதப் பிரச்சனை குறித்த முறையான புரிதலை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வகுப்புவாதத் திட்டங்களின் தோற்றம், தக்க வைத்தல் என்று அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனே இருந்து வருகின்றன. அதிலிருந்து கிடைக்கின்ற படிப்பினைகள் இன்று தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கவையாகவும் இருக்கின்றன.
அதை இங்கே நேரடியாகவே முன்வைக்கிறேன்: குறிப்பிட்ட இடத்தை வகுப்புவாதமயமாக்குகின்ற செயல்பாடுகள் மக்களைத் துருவமயப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகச் செயல்முறை மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று ஒற்றை நோக்கத்துடனே மேற்கொள்ளப்படுகின்றன. அந்தச் செயல்பாடுகள் ஒருபோதும் பெரும்பான்மையினரைப் பாதுகாப்பது அல்லது சிறுபான்மையினரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுவதில்லை. மூடிய அறைகளுக்குள்ளாக வலதுசாரி தீவிரவாதிகளுடன் பலமுறை நடைபெற்ற உரையாடல்கள் ஒரு விஷயத்தை எனக்குத் தெளிவுபடுத்திக் காட்டியிருந்தன. ‘தர்மம்’ பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்களிடமிருந்த ஆர்வம் உண்மையில் கேலிக்கூத்தாகவே இருந்தது. மக்களை துருவமயப்படுத்துவதை தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கான கருவி என்று அவர்கள் நன்கு கண்டறிந்து கொண்டுள்ளனர். அதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஹிந்து வலதுசாரி அமைப்புகள் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளன. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) என்பது அறிவுசார்ந்து இயங்கக் கூடியவர்களை மற்றும் நேரடியாகக் களத்தில் வேலை செய்பவர்களைக் கொண்டது. பாரதிய ஜனதா கட்சி என்பது அதன் அரசியல் பிரிவு. மேலும் அதன் பல துணை அமைப்புகள் முன்னணியில் நின்று செயல்படுகின்ற அமைப்புகளாக இருக்கின்றன.
அவர்களிடம் இருக்கின்ற வகுப்புவாத திட்டம் ஒன்றன் பின் ஒன்று என்று நான்கு தனித்தனி நிலைகளைக் கொண்டதாக இருக்கின்றது.
நிறுவன அமைப்புகளை உருவாக்குதல்
இந்த நிலை அனைத்து நிலைகளிலும் முதன்மையானதாக, தனக்கென்று தேவைப்படுகின்ற காலத்தை எடுத்துக் கொண்டு நிகழக்கூடியதாக உள்ளது. இதைத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அடுத்த நூறு ஆண்டுகளில் அமைதியாகச் சாதித்துக் கொள்ள நினைத்தது. இளைஞர்கள் சிலர் உள்ளூர்ப் பள்ளி மைதானங்களில் பானை வயிற்றுடன் இருக்கின்ற சிலரைத் தவறாமல் சந்தித்து வருவதைக் கவனித்திருக்கலாம். இந்த அமைப்புதான் அதுபோன்ற இடங்களில் கட்டப்படுகிறது. சேவை, ஒழுக்கம், தேசியவாதம் என்ற பெயரில் வகுப்புவாத வெறியர்களை உருவாக்குவதற்கான களமாக ‘ஷாகாக்கள்’ (கிளைகள்) என்றழைக்கப்படுகின்ற அமைப்பு அவர்களிடம் இருக்கின்றது. ஷாகாவில் கலந்து கொண்ட எவருடனும் பேசிப் பார்த்தால் ‘அது வகுப்புவாத வெறுப்பு கொண்டதாக இருக்கவில்லை. சேவை, தேசபக்தி பற்றி மட்டுமே பேசுவதாக உள்ளது’ என்று உறுதியுடன் அவர்கள் கூறுவதைக் கேட்க நேரிடும். இது போன்ற விஷயங்களில் அறிவார்ந்த உரையாடலை உருவாக்குவது, சமூக-பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்களை தங்களுடைய வெளிப்படையான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள துணை அமைப்புகளில் நியமித்துக் கொண்டு செயல்படுவது போன்றவையே ஷாகா என்ற அந்த அமைப்பின் செயல்பாடுகளாகும்.
இந்தக் கட்டமைப்பின் இரண்டாம் கட்டமாக ‘ஹனுமன் சேனா’, ‘ஹிந்து முன்னணி’, ‘ஹிந்து ஜாக்ரன் வேதிகே’ போன்ற துணை அமைப்புகளின் வளர்ச்சி அமைந்துள்ளது. இதுபோன்ற துணை அமைப்புகள் அனைத்தும் தங்களை நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்கின்ற முன்னணி அமைப்புகளாகும். அவை அரசு நிர்வாகத்தையும், மக்களையும் இலக்காகக் கொண்டு வகுப்புவாதச் சாயல் கொண்ட பிரச்சனைகளை உருவாக்குகின்றன. ‘உயர்தட்டில்’ இருப்பவர்களால் புதிய அடையாளம், ஏற்றுக்கொள்ளல் போன்றவை உறுதியளிக்கப்பட்டுள்ள மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி, வர்க்கத்தைச் சார்ந்தவர்களாலேயே இந்த துணை அமைப்புகள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளன. அவர்களால் நிகழ்த்தப்படுகின்ற வன்முறையின் பெரும்பகுதி இந்த துணை அமைப்புகளிடமே விடப்பட்டுள்ளதால் ஆர்எஸ்எஸ் எந்தவொரு வன்முறையையும் பரப்புவதில்லை என்ற கருத்து ஓரளவிற்கு உண்மை என்பதாகவே பலருக்கும் தோன்றும். அவர்களால் வழக்கமாக நடத்தப்படுகின்ற கூட்ட அமர்வுகளில் நேரடி நடவடிக்கைக்கான நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. தங்களுக்கான கணிசமான நிதியுதவி, ஆதரவை ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் இருந்தே இந்த துணை அமைப்புகள் பெற்றுக் கொள்கின்றன.
மக்களிடையே ஆர்எஸ்எஸ்சின் இத்தகைய நிறுவனக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதை தமிழ்நாடு போன்ற மாநிலங்களால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த, பக்தி நிறைந்த ஹிந்துவான ஜெயலலிதா அவர்களுடைய இந்தக் கட்டமைப்பை அனுமதிக்கக் கூடாததன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டவராகவே இருந்தார். தன்னுடைய பதவிக்காலத்தில் ஆர்எஸ்எஸ் வழக்கமாக நடத்துகின்ற அனைத்து ஊர்வலங்களுக்கும் தடை விதித்திருந்த அவர் 2014ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் தினத்தைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டை தடுத்தும் நிறுத்தினார். அவரது மறைவிற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் உடனடியாகச் செயல்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் தனது ஷாகாக்களின் எண்ணிக்கையை 1,355ல் இருந்து 2,060 என்று அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ஷாகாக்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரமாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
அவர்களுடைய அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு தமிழ்நாட்டில் உச்சக்கட்டத்தை எட்டாமலிருப்பதே ‘வேல் யாத்திரை’ (ரத யாத்திரை போன்றது) போன்று மாநிலத்தில் துருவமுனைப்பை ஏற்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆனாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்நாட்டில் கணிசமான வேலைகளைச் செய்து வருவதோடு தொடர்ந்து அதில் தீவிரமாக ஈடுபட்டும் வருகிறது. போதுமான நிறுவன பலத்தை அடைகின்ற போது அவர்களுடைய அமைப்பு ‘துருவமுனைப்பு நிலை’ என்ற இரண்டாவது நிலைக்கு நகர்கிறது.
துருவமுனைப்பை உருவாக்குதல்
தாங்கள் ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற பொதுவான உணர்வை பெரும்பான்மை சமூகத்தினரிடையே உருவாக்குவதைச் சுற்றியே இந்த அடுத்த கட்டம் அமைகின்றது. நிர்வாகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் வகையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்தக் கட்டம் எட்டப்படுகிறது. ஹிந்து மத நூல் குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ‘கறுப்பர்கூட்டம்’ என்ற யூடியூப் சேனலைச் சுற்றி தமிழ்நாட்டில் பாஜகவால் உருவாக்கப்பட்ட சர்ச்சை; மனுஸ்மிருதி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்ட கருத்துகளைச் சுற்றி உச்சஸ்தாயியில் எழுப்பப்பட்ட குரல்கள் இந்தக் கட்டத்தை எட்டுவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன.
கால்நடைகளைக் கொண்டு செல்வதற்குத் தடை, தார்மீகக் கண்காணிப்பு, கட்டாய மதமாற்றம் குறித்த புகார்கள், பொது இடங்களில் காவிக் கொடிக்கம்பங்களை நிறுவுவது என்று நிர்வாகத்தைத் தலையிடத் தூண்டுகின்ற பிரச்சனைகளை எழுப்புவதிலேயே அவர்களுடைய துணை அமைப்புகள் தங்களைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்கின்றன. அவர்கள் நிர்வாகம் எடுக்கின்ற நடவடிக்கைகளை – பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிராக ஒருசார்புடையதாக நிர்வாகம் இருக்கிறது, அது தங்களுடைய வகுப்புவாத உணர்வுகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று நிர்வாகத்திற்கு எதிரான உணர்வை பொதுமக்களிடையே உருவாக்குகின்ற வகையிலேயே பயன்படுத்திக் கொள்கின்றனர். நிர்வாகம் ‘சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துகின்ற’ வகையில் தன்னை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்கிறது என்பதைக் காட்டுகின்ற பிரச்சாரமும் அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ரேஷ்மாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மரணம் கட்டாய மதமாற்றத்தின் காரணமாக நடந்தது என்று குற்றம் சாட்டினார். மக்களைத் துருவமயப்படுத்துவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டாகவே அவரது அந்தச் செயல்பாடு அமைந்திருந்தது. அந்தச் சிறுமியின் வீடியோ மற்றும் பிற விவரங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) மற்றும் சிறார் நீதிச் சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்ற உண்மையை முற்றிலுமாகப் புறக்கணித்தே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை செயல்பட்டிருந்தார்.
‘இந்த வழக்குடன் தொடர்புடைய சிறுபான்மை கிறிஸ்தவ நிறுவனத்தை மூட வேண்டும், மாநிலத்தில் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்த அவர் முழுக்க முழுக்கப் பொய்களின் அடிப்படையில் அந்த மரணத்தைச் சுற்றி மாபெரும் பிரச்சாரத்தை உருவாக்கினார். அந்தக் கட்சி மதரீதியான சிந்தனைகள் குறித்து சமூகத்திற்குள் இருந்து வருகின்ற ‘அலட்சியத்தை’ சீர்குலைப்பது குறித்து மட்டுமே கவலைப்படுவதை இதுபோன்ற விவகாரங்கள் அவர்களால் பெரும்பாலும் தர்க்கரீதியான முடிவுக்கு எடுத்துச் செல்லப்படாமல் இருப்பதிலிருந்தே நம்மால் அறிந்து கொள்ள முடியும். சமூகத்தில் உள்ள அந்த அலட்சியம் நீங்கிய பிறகு அவர்களுடைய கட்சி அடுத்த பிரச்சனைக்குச் சென்று விடும். ஆயினும் அவர்களுடைய பிரச்சாரம் சமூகத்திற்குள் வகுப்புரீதியாக துருவமயப்படுத்தப்பட்ட கிருமிகளைச் செலுத்தி, தொடர்ந்து சமூகத்தில் அதற்கான பலனை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதாகி விடும்.
வெளித்தோற்றத்தில் தங்களை யாருக்கும் தீங்கு விளைவிக்காதவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஷாகா உறுப்பினர்கள் நேரடியாக வீடுகளுக்கே செல்வதன் மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகரித்துக் கொள்கின்றனர். தாம்பூலம் (ஹிந்துக்கள் பின்பற்றுகின்ற மங்களகரமான வாழ்த்து) வழங்குவதன் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சேரிகளில் உள்ள பதினெட்டு லட்சம் வீடுகளில் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது நன்கு அறிந்த ஒன்றாகவே உள்ளது. பிரச்சாரப் பொருட்களும் அதிக அளவிலே அச்சிடப்பட்டு அவர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் பிரச்சார இதழான ‘ஹிந்து சங்க செய்தி’ நாற்பதாயிரம் பிரதிகளுக்கு மேல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாமல், தேவைப்படுகின்ற பொருட்கள், நிதி உதவியை மட்டுமே வழங்கி வருகிறது. துணை அமைப்புகளில் உள்ளவர்கள் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்ற போது அவர்களைப் பாதுகாப்பதில் பாஜகவின் தீவிரமான பங்கு இருப்பதைக் காண முடிகிறது. அனைத்து குற்றச் செயல்களிலிருந்தும் தன்னைத் தனியாக விடுவித்துக் கொள்கின்ற பாஜக இந்த மும்முனை அணுகுமுறையின் மூலமாக நடத்தப்படுகின்ற துருவமுனைப்புத் திட்டத்தின் பலனை அரசியல் ரீதியாக அறுவடை செய்து கொள்கின்ற நிலையில் தன்னை இருத்திக் கொள்கிறது.
துருவமுனைப்பிற்காக மிகச் சாதாரணமாக மேற்கொள்ளப்படுகின்ற எளிமையான முயற்சிகளாக இருக்கின்ற இதுபோன்ற செயல்கள் சிறுபான்மை சமூகத்திடம் பழிவாங்கும் செயல்களைச் தூண்டிவிடுவதன் மூலமாக தங்களை இயல்பானவையாக்கிக் கொள்ளும் வரையிலும் தொடர்கின்றன. சிறுபான்மை சமூகத்திடம் உருவாகின்ற பழிவாங்கும் செயல்கள் மூலமாக துருவமுனைப்பு இயல்பாக்கப்பட்ட பிறகு துருவமுனைப்பு சுழற்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலே கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் அது இரண்டு சமூகங்களுக்கிடையில் நேரடியாகத் தாக்கிக் கொள்வது, கொலைகளைச் செய்வது என்ற கட்டத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. நிகழ்கின்ற ஒவ்வொரு மரணமும் அடுத்த நகர்விற்கான ஆதாரப் புள்ளியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. இறந்த உடல்களைக் கொண்டு நடத்தப்படும் ஊர்வலங்கள் பெரும்பான்மையினரிடம் உள்ள ‘தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற உணர்வை அதிகரிக்கவும், நிர்வாகத்திற்குப் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களே 2002ஆம் ஆண்டு குஜராத்திலும், அதற்குப் பிறகு 2008 ஆகஸ்ட் மாதத்தில் கந்தமாலிலும் அவர்களுடைய கீழ்த்தரமான, கொலைகாரத் திட்டங்களுக்காக வேலை செய்தன. அவர்களுடைய பிரச்சாரத்தைப் பெருக்கிக் காட்டுவதில் ஒற்றைத்தன்மை கொண்ட சமூக ஊடகத்தின் பங்கு நன்கு அறியப்பட்டதாகவே இருக்கிறது. அது குறித்து ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்றுதல்
துருவமுனைப்புக் கட்டம் சாதகமான நிலைமையைக் களத்தில் உருவாக்கித் தரும் போது, தேர்தல்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வகுப்புவாதப் பிரச்சனைகளை அவர்கள் முன்னிலைப்படுத்திப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிறுபான்மை சமூகத்தினருடன் இணைந்து கொள்வது, ஊழல்களில் ஈடுபடுவது, பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாக்க அரசாங்கமும், நிர்வாகமும் தவறியுள்ளது என்பது போன்ற பிரச்சாரங்களே அவர்களால் தேர்தல்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்றதொரு மிகவும் ஆபத்தான கலவையான பிரச்சாரத்திற்கு பெரும்பான்மை சமூகத்தில் உள்ள தாராளவாதிகள்கூட இரையாகி விடும் போது அந்தப் பிரச்சாரம் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் சென்று முடிவடைகிறது.
மனிதவளம் சார்ந்த ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு வழங்கிட, தேர்தல்கள் குறித்த நுண்ணிய மேலாண்மை, கருத்துகளை உருவாக்கும் கலையை பாஜக மிகவும் கச்சிதமாக உருவாக்கி வைத்திருக்கிறது. சங்பரிவாரத்தைக் கொண்டு வாக்குச்சாவடி நிர்வாகம் மிக விரைவிலேயே தொடங்கி விடுகிறது. ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலை அவர்கள் மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்கின்றனர். ஏ-பட்டியலில் பொதுவாக வலதுசாரி சக்திகளுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களும், சி-பட்டியலில் எந்தவகையான பிரச்சாரத்தையும் பொருட்படுத்தாது வாக்கே அளிக்காதிருப்பவர்களும் இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் பெரும்பாலும் பிற சமூகங்கள், மதங்களைச் சேர்ந்தவர்களே இருப்பார்கள். பி-பட்டியலானது எந்த முடிவும் எடுக்காது இருப்பவர்களைக் கொண்ட பட்டியலாக இருக்கும். இந்த பி-பட்டியலில் இருக்கின்ற பலரையும் ஏ-பட்டியலில் இருப்பவர்களாக மாற்றும் பொறுப்பு ஆர்எஸ்எஸ்காரர்களிடம் அளிக்கப்படுகிறது.
வாக்குச்சாவடி நிர்வாகத்தை தேர்தல்களின் போது நடைபெறுகின்ற வாக்குப்பதிவு கண்ணோட்டத்தில் மட்டுமே பயன்படுத்துபவையாக மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. ஆனால் அதேவேளையில் வலதுசாரிகள் வாக்குச்சாவடி நிர்வாகத்தை கருத்து திணிப்பு மற்றும் உருவாக்கத்திலிருந்து தொடங்கி பின்னர் வெளிப்படையான துருவமுனைப்பு என்பதாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதுவே இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடாக உள்ளது. வாக்குச் சாவடிகளில் எத்தனை பேர் ஏ-பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்ற கணிப்புகளைக் கணக்கிடுவதற்காக பாஜகவின் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின் போது கடைசி வாக்கு எண்ணப்படும் வரை அங்கேயே தங்கியிருப்பதைக் காண முடியும்.
நிறுவனங்களின் மீதான தாக்குதல்
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதும், பெரும்பான்மை சமூகத்தின் மீதான தங்களுடைய வெளிப்படையான சார்புநிலையை வெளிப்படுத்துவதற்காக ஜனநாயக நிறுவனங்களை முற்றிலுமாகக் கைப்பற்றிக் கொள்ளும் வகையில் அவர்களால் அரசு இயந்திரம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்கும், சிறுபான்மை மதத்தவரில் தீவிரமாக இயங்குபவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும் வகையிலும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில்தான் அதிகாரத்துவ அமைப்பு ஒருபக்கச்சார்பற்ற நிர்வாகத்தை வழங்குவது, அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பது போன்ற செயல்களைச் செய்யத் தவறுகின்ற அமைப்பாக மாறுகின்றது.
வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்காக எதிர்மறையான, நேர்மறையான ஊக்கங்களை அளிப்பதன் மூலம் ஊடகங்கள் போன்ற பிற நிறுவனங்களும் கைப்பற்றப்படுகின்றன. ‘சிறுபான்மையினர் குற்றவாளிகள்’ என்ற கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்ய கூடுதல் முயற்சிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆளும் கட்சியிடம் தனக்குள்ள விசுவாசத்தை நிரூபித்துக் கொள்ள அதிகாரத்துவ அமைப்பு முயல்கிறது. இவ்வாறு நிறுவனங்கள் கைப்பற்றப்பட்ட பிறகு அமைப்பின் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை இழந்து போகின்ற சிறுபான்மைச் சமூகம் சுயமாகச் செயல்பட முயல்கின்றது. அதன் விளைவாக அதுபோன்ற நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகி விடுகின்றன.
இந்த நான்கு நிலைகளையும் கடந்த பிறகு, சிறுபான்மையினரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையிலே பல்வேறு சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அந்தச் சுழற்சி நீட்டித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. இரு குழுக்களிடமும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டு அதிகாரத்துவ அமைப்பு நிலைமையை மீட்டெடுக்கும் வரை இந்த சுழற்சி ஒரு வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஆயினும் அது சமூக கட்டமைப்பிற்கு, குறிப்பாக இளைஞர்களிடம் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. வகுப்புவாதமானது தனிப்பட்ட குடும்பங்களை, மாவட்டம் அல்லது மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். தார்மீக எதேச்சாதிகாரத்தை நோக்கிய ஆபத்தான இந்தச் சுழல் மிக விரைவில் பரவி பெரும்பான்மை சமூகத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதன் விளைவாக எந்தவிதமான மனச்சஞ்சலமும் இல்லாமல் அப்பட்டமான ஆணாதிக்க கருத்துகளை வெளிப்படுத்துகின்ற புதிய தார்மீகக் காவலர்கள் உருவாக்கப்படுவார்கள். சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை நிறைந்த சூழ்நிலையால் ஏற்படுத்தப்படும் அதிகபட்ச சுமையை பெண்களும், பொருளாதாரமுமே தாங்கும் நிலை ஏற்படும்.
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது சமூக-பொருளாதார அடிப்படையில் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. வகுப்புவாதத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் பிற இடங்களிலிருந்து இந்த மாநிலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. தங்களுடைய துருவமுனைப்பு முயற்சிகளுக்கு அதிக ஆதரவை தமிழ்நாட்டில் இதுவரையிலும் பெற முடியாத வலதுசாரிகள் தமிழ் மொழி, தமிழ்க் கடவுளர்கள் தொடர்பாக புதிய கதைகளுடன் தங்களுடைய முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். அவை அம்பேத்கரிய-பெரியாரிய திராவிட சிந்தனை கொண்ட தலைவர்களுக்கு எதிராக அறிவுஜீவித்தனமற்ற தோரணைக்கான எடுத்துக்காட்டாகவே இருக்கின்றன.
முடிவெடுக்காது இருப்பவர்களை ஹிந்துத்துவா எல்லைக்குள் கொண்டு வருவதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. தமிழ்நாடு இதுபோன்ற சமிக்ஞைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து இந்த பிற்போக்குச் சக்திகளை அண்ட விடாமல் தொலைவிலேயே வைத்திருக்க வேண்டும். தேர்தல்களில் வலதுசாரி சக்திகளுக்கு ஏற்படுகின்ற அரசியல் தோல்வியைக் கொண்டு தமிழ்நாடு தன்னுடைய விழிப்புணர்வை முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடாது. மாநிலத்திற்குள் ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகளின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணித்து வரப்பட வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் ஆர்எஸ்எஸ்சின் துருவமுனைப்படுத்தும் திட்டம் தங்கள் குழந்தைகள், குடும்பங்கள் மீது ஏற்படுத்தப் போகின்ற நீண்டகால விளைவுகளைப் பற்றி அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதன்முதலாக மங்களூர் சிறையில் நான் பார்த்த அங்கே அடைக்கப்பட்டிருந்த இரு சமூகத்தினர்களில் எழுபது சதவிகிதம் பேர் நமது குடும்பங்களில் உள்ள வாலிபர்களைப் போல வயதில் மிகவும் சிறியவர்களகவே இருந்தனர். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் மட்டுமே துருவமுனைப்பை ஏற்படுத்துவது அந்தக் கட்சிக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.
எனவே அந்தக் கட்சி தன்னுடைய வியூகத்தை மறுசீரமைத்துக் கொண்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் இந்த அரசியலைப் பார்த்திருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை (உடுப்பியில் ஒரு முறை காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர்) தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து அவர்களுடைய பாணி, முறையை இறக்குமதி செய்து கொள்வதற்கான வாய்ப்பை இழந்து விடாமல் மாநிலத்தை வகுப்புவாதமயமாக்குவதில் இரவு பகலாக அவரும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரையிலும் சங்பரிவாரம் மேற்கொண்டிருக்கும் வகுப்புவாத முயற்சிகள் அனைத்தையும் தமிழ்நாடு முறியடித்துக் காட்டியுள்ளது. தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக இயக்கத்தால் சித்தாந்த ரீதியாக உந்தப்பட்டு இயங்கி வருகின்ற இந்த மாநில அரசு பாஜகவை கட்டுப்படுத்துகின்ற வீரனாக இருக்கும் என்றே நம்புகிறோம்.
நன்றி: நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு
தமிழில்: தா.சந்திரகுரு
நூல் மதிப்புரை: ச. தமிழ்ச்செல்வனின் தெய்வமே சாட்சி – அய். தமிழ்மணி
பெண் மையமும்., ஆண் மயமும்.
– அய்.தமிழ்மணி
நூல்: தெய்வமே சாட்சி
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 160 பக்கங்கள்
விலை: 150/-ரூபாய்
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யும்: thamizhbooks.com
“ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்பார்கள். நாட்டார் தெய்வங்களுக்குப் பின்னால் சந்தேகத்திற்கு இடமின்றி உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் ஒளிந்திருக்கிறது. இதை ’அவர்கள்’ புரிந்து கொண்டுள்ளதால் தான் இவ்வளவு வேகவேகமாகத் தலையிடுகிறார்கள். நாம் எப்படி சும்மா இருக்கமுடியும்.?” என்று முடிகிற இந்நூலின் கடைசிப் பத்தியின் வார்த்தைகளே இந்நூலுக்கான சாட்சியாக மேலெலும்பி நிற்கிறது.
ஆடி மாத வாக்கில் எங்கள் ஊரில் மழைக்கு கஞ்சி காய்ச்சி வணங்கி ஊரெல்லாம் ஊற்றுவார்கள். இன்னமும் கூட நடைமுறையில் தான் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபொழுது எங்கள் தெருவில் குடியிருந்த அணைப்பட்டிக் கிழவியிடம் இதைப்பற்றிக் கேட்டிருக்கிறேன்.
அவர் கதை சொல்லுவதில் வல்லவர். ஒரு கணத்தில் அனைவரையும் ஈர்த்துவிடுவார். சீலக்காரியம்மன் முத்தாலம்மன் கச்சையம்மன் என அம்மன் கதைகளோடு மாயாஜால தந்திரக் கதைகளும் அவர் சொல்லுவார். அவரிடம் விதவிதமான கதைகள் அடங்கிக் கிடந்தன. நாங்களும் பொழுது கிடைக்கும் பொழுதெல்லாம் அவர் வீட்டில் தான் அடங்கிக் கிடப்போம் அவரது கதைகளுக்காக., கதைப் பொக்கிஷம் அவர். இப்போது எங்கள் நெனப்புகளில் மட்டுமே இருக்கிறார். மழைக் கஞ்சி காய்ச்சுவது குறித்து அவர் சொன்ன கதை.,
“ஒரு காலத்துல மழ மும்மாரி பொழிஞ்சு மக்க எல்லாரும் செழிப்பாச் சந்தோசமா இருந்தாகலாம். எல்லாங் கெடைக்குதேங்கிற மெதப்புல., மண்ணும் பயிரும் கொழிக்கக் காரணமாயிருந்த மழைய மறந்துட்டாகலாம்., அதனால அந்த மழ மேகமெல்லாஞ் சேந்து ஒன்னாக் கூடிப் பேசுனாகலாம்..” நாங்களும் ஆவலோடு கண்கள் விரிய ம் எனக் கொட்டுவோம்.
“அதுல ஒரு மேகஞ் சொல்லுச்சாம்., இந்த மனுசப் பயலுகப் பாத்தியா., இன்னக்கி நம்மனாலதேன் நல்லாருக்காங்க., ஆனாத் துளிகூட நம்ம நெனப்பு இல்லையே., நன்றி இல்லாத இவெய்ங்கள என்னான்னு பாக்கணும்., ன்னுச்சாம்”
“இன்னோரு மேகஞ் சொல்லுச்சாம்., அவெக எப்படி இருந்தா நமக்கென்ன., நம்ம வேல விழுகுறது., அதச் செய்வோம்., இதப் போயிப் பேசிக்கிட்டு., ன்னுச்சாம்”
“அதுக்கு எல்லா மேகங்களும் ஒன்னாச் சேந்துக்கிட்டு., அந்த மேகத்தத் தள்ளி வச்சுருச்சாம்., அது மட்டுமில்லாம இனி இந்த ஒலகத்துல இந்த மனுசனுகளுக்கா நாம யாரும் பேயக்கூடாதுன்னு முடிவு செஞ்சாங்களாம்.”
“பாட்டி அப்ப மிருகங்கல்லாம் என்னா பண்ணும்..” என்ற என் கேள்விக்கு.,
“அதுகளுக்கென்னா அதுக் பொழப்ப அதுக பாத்துக்கிருங்க., நீ கதைக் கேளுடா..” எனத் தொடர்ந்தார்.
“அந்த முடிவுக்குப் பெறகு பல வருசமா ஒத்தத்துளி மழ இல்லியாம்., கொளம் குட்ட எல்லாம் வத்திருச்சாம்., ஆடு மாடு கன்டுக., கோழி குஞ்சுகன்னு எல்லாம் செத்து விழுந்துச்சாம்., தர பூராங் கட்டாந்தரயாகி புல்லு பூண்டு கூட மொழக்கிலயாம். மக்க பட்டினியால துடிச்சாகலாம்.. ஆரம்பத்துல மழயத் திட்டித் தீத்தவக., ஒரு நேரத்துல., அய்யா மழச்சாமி எங்களக் காப்பாத்துங்கன்னு மனசெறங்கி வேண்டுனாகலாம்.,” விரிந்து கிடந்த எங்கள் விழிகளுக்குள் அப்படி அப்படியே ஊடுருவி விட்டுத் தொடர்ந்தார்.
“நம்ம வேலைய நாம செய்வோம்ன்னு ஒரு மேகஞ் சொல்லுச்சுல நெனவு இருக்கா., ம்., அந்த மேகம் மட்டும்., மக்களோட இரஞ்சலுக்கு எரக்கப்பட்டு., பொழி பொழின்னு பொழிஞ்சுச்சாம்.,” எங்களுக்குள்ளும் சந்தோசம் பொழிய ஆவலாய்க் கேட்டோம். அவரும் பேரார்வத்துடன்.,
”தள்ளிவச்ச மேகம் இப்படிப் பொழிஞ்சா., மத்த மேகமெல்லாம் சும்மா இருக்குமா., அந்த மேகமெல்லாஞ் சேந்து., ஒனக்குப் பொழியிற பாக்கியம் இனி இல்லன்னு சொல்லி சாபம் விட்டாகலாம்., சொந்தக் கூட்டமே இப்படிச் செஞ்சதால., தூரமா எங்கேயோ போயிருச்சாம் அந்த நல்ல மேகம்.,”
“திடீர்ன்னு விழுந்த மழைய நம்பி இருந்தத வெதச்ச சனங்க திரும்ப மழையக் காணோமேன்னு., மழ வந்த தெச நோக்கிக் கும்பிட்டாகலாம். அந்தக்கூட்டத்துல ஒரு மனுசனுக்குள்ள அந்த நல்ல மேகம் எறங்கி., ஒங்க பவுசுல எங்கள மறந்துட்டீங்க., அதுனாலதே நாங்க ஒதுங்கிட்டோம்., இனி வருசா வருசம் ஆடில எங்கள நெனச்சு நீங்க ஊரே சேந்து வேப்பங்கொல கட்டி கஞ்சி காய்ச்சி ஊருக்கே ஊத்துங்க., எங்க மனங்குளுந்து உங்க மனசு நெறைய வெப்போம்ன்னு., அப்ப இருந்துதேன் இப்படிக் கஞ்சி காய்ச்சி ஊத்துறாக.,” ன்னு சொல்லி முடித்தார்.
“பாட்டி இதெப்ப நடந்துச்சு..”
“அதெனக்குத் தெரியாது., இது எம்பாட்டி சொல்லித்தேன் எனக்குத் தெரியும்., எம்பாட்டிக்கு அதோட பாட்டி சொல்லிருக்காலாம்., இல்லைன்னா என்னயப் போல ஒரு பாட்டி சொல்லிருக்கலாம் என்றார்.
சரி இந்தப் பாட்டிகதை என்ன சொல்ல வருகிறது. தோழர் தமிழ்ச்செல்வன் சொன்ன “அவர்கள்” என்கிற அவர்களின் மழைக்கடவுளை மறுத்து இயற்கையை முன்னிறுத்துகிறது. இதில் மதச் சார்போ சாதிச் சார்போ இல்லை. இயற்கையை வழங்கிய கொடையை மதிக்க வேண்டும் என்கிறது. ஆனால் இன்று சில குழு மனிதர்கள் இதற்குள்ளும் புகுந்து வருணபகவானே என குலவையிடுவதைப் பார்க்க முடிகிறது. அவ்வரு(ர்)ண குலவை எனபது இந்நூலில் கூறியது போல..
” கிபி 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பெருவீச்சுடன் புறப்பட்ட பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாகத் இத்தெய்வங்களைப் பெருமதக் கடவுள்களின் அம்சங்களாகவும் அவதாரங்களாகவும் திரித்து உள்வாங்கிக் கொண்டது பிற்கால வரலாறு. சுடலைமாடன் யாரு..? சிவபெருமான் அம்சமடா..” என்பதைப் போல மழைன்னா வருணபகவான் என அன்றாடம் உழைக்கும் விவசாயக்குடும்பங்களின் இயற்கை மீதான கைகூப்பலை திரித்து வைத்திருக்கிறார்கள்.
நான் இந்த மழைக்கதையைக் கூறியதற்கு காரணம் இந்நூலில் எழுதப்பட்டுள்ள பெரும்பாலான அம்மன்களின் வாக்குகள் வறட்சியைப் போக்கி செழிப்பைத் தருவேன் என்கிற கனவின் வாக்குகளாகவோ மற்றும் சாமியாடிகளின் வாக்குகளாகவோ இருக்கிறது.
இதன் வாயிலாக ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும்., குற்றம் செய்தால் மண்ணும் மனசும் பாழ்பட்டுவிடும் என்பதும். அது வாழ்வியலைப் பாதிக்கும் என்பதுமாகும்.
இதன் போக்கில் இன்னும் சற்று உள்ளே போனோமானால் பெண்ணைத் தெய்வமாக வணங்க வேண்டும் என்கிற சமூகக் கருத்துக்கு எதிரான ஆணின் குற்ற அல்லது ஆதிக்கச் செயல்களின் பரிகாரமாகவும் பார்க்கலாம்.
ஆணுக்குக் கீழாக பெண்ணை வைத்தல் என்பது மனித குல வளர்ச்சியில் சொத்துடமை வாரிசுரிமை என்ற இடத்தில் வந்து நிற்கிறது. எனக்கான வாரிசு என்ற ஆண் மனோபாவத்திலிருந்து பெண்ணே இங்கே சொத்தாக மாற்றப்படுகிறாள். இன்னும் ஆணின் பேராசை என்கிற வல்லாதிக்கமானது சொத்தை அபகரிப்பது வீரம் என்ற இடத்திலிருந்து பெண்களின் மீது பாய்கிறது. இது இன்று தனிமனிதனில் ஆரம்பித்து பெண்ணை குடும்ப கவுரவமாகச் சித்தரிப்பு செய்து வைத்திருக்கிறது.
பெரும்பாலும் இந்நூலில் சொல்லப்பட்ட கதைகள் எல்லாமே கடந்த சில நூற்றாண்டுகளுக்கு உள்ளானதாகவே இருக்கிறது. ”அவர்கள்” என்கிற அவர்களின் சமூக மற்றும் கருத்தியல் ஊடுருவலுக்குப் பின்னால் இக்கதைகள் நிகழந்தவையாக இருக்க முடியும் என்ற சிந்தனகளை ஏற்படுத்துகிறது.
அவர்களின் வர்ணாசிரம அதர்மத்தின் பாடாக ஆண்மனம் சிதைக்கப்பட்டிருப்பதையும் பெண்களின் அத்தனை உரிமைகளும் காவு வாங்கப்படுவதும் என அதற்கான வழிநிலைகள் இன்னும் தொடரவே செய்கின்றன. கூடவே சாதி இதற்கு முதல் பெருப் பங்குதாரராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த ஆணவப்படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ( பொள்ளாச்சி மட்டுமல்ல இன்னும் பல ஊர்களைச் சொல்லலாம் ), சேலம் ஆத்தூர் இராஜலட்சுமி படுகொலை ( ராஜலட்சுமி மட்டுமா..? ) என அப்படியே இந்திய எல்லைக்குள் விரிந்தால் காஷ்மீர் மாநிலத்தில் கோயிலுக்குள் சிறுமி கற்பழிப்பென்று தேசம் முழுக்க எத்தனை எத்தனை அத்துமீறல்கள். அப்படியே உலக எல்லை என விரிந்தால் சொல்லவே வெட்கமும் வேதனையும் கொந்தளிப்பும் வந்து சேர்ந்துவிடுகிறது என்ன பொழப்புடா என மனதிற்குள்.
ஆனால் தோழர் ச.தமிழ்ச்செல்வனின் நாம் எப்படி சும்மா இருக்க முடியும் என்கிற வார்த்தைகள் நாம் எதையாவது இவைகளுக்கு எதிராகச் செய்துவிட வேண்டும் எனத் தெம்பூட்டுகிறது.
குறிப்பாக இந்நூலின் ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னாலும் தோழர் தமிழ்ச்செல்வனின் பார்வை.,
“ஜென்னியும் ஒரு துர்க்கையம்மன் தான்.” என்ற இடத்திலிருந்து துவங்கி..”
“வாழ்க்கையை மேலும் அழகாக மாற்றுவதற்குத் தானே காதலே., வாழ்வையே பலி கொடுப்பதற்கா காதல்.?”
“பெண்ணை வைத்து வாழத் தெரியாத ஆண் முண்டமே உனக்கெல்லாம் எதற்கடா பெண் வாரிசு..”
“முத்தாலம்மனின் தொடர்ச்சி தானே கண்ணகி – முருகேசனின் கொலை”
“உண்மையில் ஒரு பாவமும் அறியாத அப்பெண்களின் கதறல் தான் கால வெளியெங்கும் காற்று வெளியெங்கும் நிரம்பித் ததும்பி நம்மை மூச்சு முட்ட வைக்கிறது..” என இதைப் போல எவ்வளவோ சொல்லிச் செல்கிறது.
ஆனாலும் இந்நூலின் கூறாக இந்நூலில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு பத்திகளை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
ஒன்று..
“இப்படியெல்லாம் நுட்பமாக யோசிப்பவர்களாகவும் கற்பனை வளம் மிக்கவர்களாகவும் தான் மக்கள் இருக்கிறார்கள். நம்பிக்கை சார்ந்த விசயங்களில் இப்படி இருக்கும் மக்கள் தங்கள் ஏழ்மைக்கு காரணம் என்ன .? யார்.? என்று யோசிப்பதில்லை.”
இரண்டு..
“நாம் வாழும் காலத்தின் ஆதிக்கச் சிந்தனைகளே நம் காலத்தின் சிந்தனையாக எல்லாவற்றின் மீதும் ஏறி நிற்கும் என்கிறது மார்க்சியம்”
இந்த இரண்டு பத்திகளுக்குமான தொடர்பினை ஏற்படுத்திவிட்டால் நாம் எதை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான கட்டியம் என்ன என்பது தெளிவாகிவிடும்.
இந்நூலில் உள்ள கதைகளும் அவைகளுக்குச் சாட்சியாகிவிடும்.
இந்நூலின் வாயிலாகச் சமூகத்தின் சாட்சியாக முக்கியமான பணி செய்திருக்கிறார் தோழர் ச.தமிழ்ச்செல்வன்.