நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!
கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏட்டில் வரலாறு பதியப்படாத காலத்திலும் மனிதன் வாழ்ந்தானே. இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் மனிதன் தோன்றியபோது மேற்கூறிய பேதங்கள் எதுவும் இல்லையே.
முதன் முதலில் தென் ஆப்பரிக்காவில் மனித இனம் தோன்றியது. அந்த ஆரம்ப காலகட்டங்களில் ஆடை பற்றிய சிந்தனையெல்லாம் யாருக்கும் எழவில்லை. அதற்கு அங்குள்ள தட்பவெட்ப நிலையும் கூட ஓரு காரணம். அதன் பின் அங்கிருந்து இடம்பெயரந்த மக்கள் ஐரோப்பா, சைபீரியா போன்ற குளிர் பிரதேசத்தில் குடியேறினர்.
கடும் வெப்பத்தை பார்த்தவர்களுக்கு – குளிரை எதிர்கொள்ள – உடலைத் தயார் படுத்த வேண்டிய தேவையிருந்தது. மனித உடலை இயற்கையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவே ஆடைகள் தோன்றின. விலங்கை வேட்டையாடி மாமிசத்தை உட்கொண்டவர்கள், அதன் தோலை கடும் குளிரில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள தோலை உடுத்திக் கொண்டனர். இப்படி தான் உலகின் முதல் ஆடை உருவானது.
இதனை மனிதன் எவ்வாறு கண்டுபிடித்தான். குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகள் எப்படி அந்த குளிரை தாக்கிக் கொள்கின்றன என்பது பற்றி சிந்திக்கையில், அவற்றின் தோலும் அதன் மேல் இருந்த அடர்த்தியான ரோமங்களும் குளிரிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளவை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்கிறான். கூர்மையான கற்கள், மரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவற்றில் துளையிட்டு தனது உடல்பாகங்களுக்கு ஏற்றவாறு நார்கள், கொடிகள் மூலம் இறுக்கிக் கட்டி ஆடையாக்கிக் கொண்டான்.
ஆடை பற்றிய வரலாறு என்ன சொல்கிறது? ஆடையை வடிவமைக்க மனிதர்கள் எந்த பொருளை பயன்படுத்தினர் என்ற கேள்விக்கு நாம் துருக்கியிலுள்ள கட்ல்ஹோக் செல்ல வேண்டும். கட்ல்ஹோக் உலகின் மிகப் பழமையான மனித நாகரிகங்களில் ஒன்று. கிமு 7100 முதல் கிமு 5700 வரை மக்கள் வாழ்ந்த நாகரிகம் அது. கட்ல்ஹோக் மக்கள் ஆளி(Flax) செடிகளை விளைவித்து அதிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை எடுத்துப் பயன்படுத்தினர் என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அது தான் நாம் இன்று பயன்படுத்தும் கைத்தறி ஆடையான லினன்(Linen).
ஜார்ஜியாவின் காகசஸ் மலைகளில் உள்ள ஒரு பழங்கால குகையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் 34,000 வருடங்களுக்கு மேல் பழமையானதாகக் கருதப்படும் ஆளி இழைகளைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு தான் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட துணி மற்றும் நூலின் பழமையான மாதிரிகளைக் குறிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகில் முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய ஆடை ஆர்மீனயாவில் அரேனி குகையில் கண்டு எடுக்கப்பட்ட ஓரு பெண்ணின் பாவாடை. இது சுமார் 5900 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கோலால் (Straw) பின்னப்பட்ட இந்தப் பாவாடைதான் இதுவரை நடந்த அகழாய்வில் கிடைத்த தொன்மையான ஆடை. இதைப் போன்றே உலகின் பழமையான கால்சட்டை சீனாவிலுள்ள யாங்காய் கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் குதிரை சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட கால்சட்டை என ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.
அப்படியே வரலாற்றை இன்னும் புரட்டினால் அது நம்மை எகிப்து நோக்கி பயணிக்க வைக்கிறது. எகிப்தியர்கள் ஆடை வடிவமைப்பில் முன்னோடிகளாக திகழ்ந்து உள்ளனர். எகிப்தியர்கள் நாணல், பாப்பிரஸ், பனை போன்ற செடிகளிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை கண்டுபிடித்தனர். எகிப்தியர்கள் கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்கான ஆடைகளைப் பயன்படுத்தினர். உலகில் முதன் முதலில் நெசவு செய்யப்பட்ட ஆடை எகிப்தில் உள்ள தார்கன் என்று இடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாயந்த இந்த ஆடைக்கு “தார்கன் ஆடை”என்று பெயர். கடந்த 2015ம் ஆண்டு கார்பன் டேட்டிங் செய்ததில் இதன் வயது கிமு 3482-3102 வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆடைகளின் வரலாற்றில் நாம் ஆசியா நோக்கி நமது பயணத்தை தொடரலாம். ஆசியா என்றதும் சீனா தான் முதலில் கண்ணிற்கு தெரிவது. சீன வரலாற்றின் படி , கிமு 27-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசி ஹிஸ் லி ஷி தான் பட்டு நூலை (silk) நெசவு நாராக கண்டுபிடித்த முதல் நபர்.அந்தக் கதை கொஞ்சம் சுவாரசியமானது.
பேரரசி ஒரு நாள் மல்பெரி மரத்தின் கீழ் தேநீர் குடிக்கும் போது, ஒரு பட்டுப்பூச்சிக் கூடு (cocoon) அவரது கோப்பையில் விழுந்து. அது மெல்ல பிரிந்து நூல் அவிழத் தொடங்கியது. அதைப் பார்த்த ராணி அரண்மனையில் உள்ளவர்களை அது குறித்து ஆராய உத்தரவிட்டார்.
இப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான், பட்டாடைகள் ஆசியா முழுவதும் உள்ள பிற பகுதிகளை சென்ற அடையத் தொடங்கின. பட்டு நூல்கள் மிக வலுவாகவும், பளப்பாகவும், விலையுயர்ந்தாகவும் இருந்தது. இதை அறிந்த சீனர்கள் பட்டுடன் செடி ,கொடிகளிலிருந்து இயற்கை சாயத்தை கண்டுபிடித்து பல வண்ணங்களான பட்டு ஆடைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பட்டும், சாயமும் உலகம் முழுதும் அறியப்பட்டது.
இந்திய துணைக் கண்டத்தில் ஆடைகளின் வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தையது. இந்தியர்கள் உள்ளூரில் வளர்க்கப்பட்ட பருத்தியால் ஆன ஆடைகளை அணிந்துள்ளனர். ஹரப்பா காலத்தில் கிமு 2500-ல் கூட பருத்தி பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்ட முதன்மையான இடங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அருகிலுள்ள தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்கள் மற்றும் கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களில் காணப்படும் மனித கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம். ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
இந்திய வேதாகமங்களில் (Scripture) உடைகளை மனித உடலைச் சுற்றி போர்த்தக்கூடிய உருவங்களே காணப்படுகிறது. பாரம்பரிய இந்திய உடைகள் பெரும்பாலும் உடலைச் சுற்றி பல்வேறு வழிகளில் கட்டப்பட்டன.
தென் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் நெசவு செய்ததும் சாயம் ஏற்றுவதும் நம் முன்னோருக்கு தெரிந்து இருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் பயன்படுத்தியத்தன் சான்று கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான நூற்புக்கதிர்கள்,அரிக்கமேட்டில் கிடைத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட நூற்புக்கதிர்கள், கொடுமணலில் கிடைத்த நூற்பு உருளைகள் போன்றவை தமிழகத்தில் பண்டைக்காலத்தில் நெசவு செய்யப்பட்டதற்கான ஒரு மிகப் பெரிய சான்று.
இப்படி ஒவ்வொரு மனிதச் சமூகங்களிலும் ஒவ்வொரு நாகரிங்களிலும் அந்தச் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப ஆடைகள் மற்றும் நாகரிகங்களின் வளர்ச்சி நடைபெற்றது. நாகரிக வளர்ச்சியையும் சமூக மாற்றங்களையும் இன்றும், நமக்கு ஆடைகள் அடையாளம் காட்டுகின்றன அல்லவா ?
சிந்துஜா சுந்தர்ராஜ்