நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு – ச. சுப்பாராவ்
புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
வரலாற்றை எழுதுவது மிகவும் சிரமமான வேலை. மிகப் பழங்காலத்து வரலாறு என்றால் அது குறித்து போதிய தகவல்கள் கிடைக்காது. கிடைக்கும் தகவல்களை எந்த அளவு நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதும் மற்றொரு பிரச்சனை. சமீபத்திய வரலாற்றை எழுதுவதில் வேறுவிதமான பிரச்சனை வரும். ஏராளமான தரவுகள் கிடைக்கும். எதை எடுத்துக் கொள்வது, எதை தள்ளுவது என்பது பிரச்சனையாக இருக்கும். மற்றொன்று சமீபத்திய வரலாறு எனும் போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே சிலர் இன்னும் நம்மிடையே இருக்கக் கூடும்.
நேரில் பார்த்தவர்கள், அது குறித்து படித்து அறிந்தவர்கள், சொல்லக் கேட்டவர்கள் என்று ஏராளமான ஆட்களின் நினைவுகளில் அந்த வரலாற்று நிகழ்வு பசுமையாகப் படிந்திருக்கும். அதை ஆவணப்படும் போது மிக மிக அதிகமான கவனம் தேவைப்படும். அப்படி மிகக் கவனம் எடுத்து ஆவணப்படுத்தும் வரலாற்று நூல்களே இன்றைய தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமுறைக்கும் வரலாற்றை எடுத்துச் சொல்லும் வாயில்களாக நிற்கின்றன. அத்தகையதொரு நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது ஒரு இனிய அனுபவம். செய்தியாளர் பி.என்.எஸ்.பாண்டியன் அவர்கள் எழுதிய ஊரடங்கு உத்தரவு என்ற நூல்தான் அது.
புதுச்சேரி தமிழகத்தோடு ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டினருக்கு புதுச்சேரி என்றால் மிக மேலோட்டமாக பாரதியார், அரவிந்தர், மது, கேபரே என்று ஒரு சில விஷயங்கள் மட்டுமே நினைவிற்கு வரும். புதுச்சேரி பற்றி பெரிதாக அக்கறை காட்டாத தமிழர்களுக்கு இந்தப் புத்தகம் சொல்லும் வரலாற்றுச் செய்தி மிக வியப்பானதாகக் கூட இருக்கும்.
1979ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க விரும்புவதாக சொல்லப் போக, புதுச்சேரி முழுவதும் அரசியல் வேறுபாடு கடந்து அதற்கு எதிராகப் போராட்டம் நடக்கிறது. ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கி சூடு என்று பெரிய அளவில் நடக்கும் போராட்டம் பத்து நாட்கள் கழித்து மொரார்ஜி தான் கூறியதைத் திரும்பப் பெற்றதோடு முடிகிறது. இந்தப் போராட்ட வரலாற்றின் பதிவே இந்த 256 பக்க நூல்.
வெறும் பத்து நாட்களின் கதையாக இல்லாமல் புதுச்சேரியின் சுதந்திரப் போராட்ட வரலாறு, அங்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர்ந்த விதம், புதுச்சேரிக்கும் பிரான்ஸிற்கும் உள்ள கலாச்சாரத் தொடர்பு, அதன் காரணமாக இன்றும் புதுச்சேரியில் நிலவும் ஒரு தனித் தன்மை கொண்ட கலாச்சாரம், அந்தக் கலாச்சாரம் குறித்து அந்த மக்களின் பெருமித உணர்வு, எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார் பாண்டியன்.
இந்த நூலின் மிகப் பெரிய பலமே, எந்த சார்பு நிலையும் எடுக்காது உள்ளது உள்ளபடி அப்படியே வரலாற்றைப் பதிவு செய்திருப்பதுதான். போராட்டக் களத்தில் நின்று போராடிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கூற்றுகள் அப்படியே பதிவாகி உள்ளன. புதுச்சேரி இணைப்பு தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடந்த விவாதங்கள், உள்துறை அமைச்சரின் பதில்கள் எல்லாம் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக உள்ள பிரெஞ்சிந்திய புதுச்சேரி – ஒரு பார்வை என்ற கட்டுரை மிக முக்கியமானது. பிரபஞ்சனின் முன்னுரையும், திருமாவேலனின் அணிந்துரையும் புத்தகத்திற்குள் நாம் நுழைய நம்மைத் தயார்படுத்துகின்றன.
நூலில் குறிப்பிடப்படும் இந்தப் போராட்டம் நடந்த காலத்தில் நூலாசிரியர் ஐந்து வயது சிறுவனாக இருந்திருக்கிறார். இந்தப் போராட்டம் குறித்து அவ்வப்போது கேள்விப்பட்டதை வைத்து மிக விரிவாக ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்துள்ளார்.
ஒற்றைத் தலைமை, ஒற்றைக் கலாச்சாரம், இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மைகளை ஏற்க மறுப்பது போன்ற பல்வேறு மோசமான அம்சங்கள் தலைதூக்கும் இக்காலகட்டத்தில் இந்தியாவின் மிகச் சிறிய ஒரு யூனியன் பிரதேசத்தின் மக்கள் தமது தனித்தன்மைக்கு ஆபத்து வந்த போது அத்தனை வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு போராடி, ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கை மாற்றி, அதைப் பணியச் செய்த வரலாற்றைச் சொல்லும் இந்த நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
எழுத்தாளர் பிரபஞ்சனின் இறுதிநாட்களில் அவர் கூடவே இருந்து கவனித்துக் கொண்டவரான சிறந்த இலக்கியவாதியான பி.என்.எஸ்.பாண்டியன் இந்த நூலின் வழியே ஒரு சிறந்த வரலாற்று ஆய்வாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
அவருக்கு எனது வாழ்த்துகள்.
நூல்: ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
ஆசிரியர்: பி.என்.எஸ்.பாண்டியன்
வெளியீடு: வெர்சா பேஜஸ் வெளியீடு.
விலை: ரூ200. 00
பக்கங்கள்: 256