க.பாண்டிச்செல்வியின் கவிதை

க.பாண்டிச்செல்வியின் கவிதை




பயணக் குறிப்பற்றவளின் துர் கனா
*****************************************
முன் ஜாமப்
பொழுதொன்றில்
வெள்ளை வண்ண
இரட்டைக் குதிரை வண்டியில்
தென்றலாய்த் தவழ்ந்து வருகிறான் .
துளிர்த்த பச்சையம் மாறா காதல் நினைவுகளை ஏந்தியவாறு,
பதின்ம வயதில் அவள் மறுதலித்த
காதலொருவன்
கிழக்கு வாக்கில்.

பின் ஜாமப் பொழுதொன்றில்
செவலை நிறக் குதிரையொன்றில்

இழந்துவிட்ட வலியை
சுமந்து வருகிறான்
குற்றவுணர்வோடு
மித வேகத்தில்
அவள் காதலை நிராகரித்தவன்
மேற்கு வாக்கில்.

நடுச்சாமப் பொழுதொன்றில்
அடர் கருப்பு குதிரையின் மேல்
அழுது சிவந்த கண்களுடன் ஆர்ப்பரித்து வருகிறான்
துர் மரணமடைந்த கணவன்
வடக்குவாக்கில்

விடிகின்ற பொழுதொன்றில்
பழுத்த காயங்களுக்கு
ஒத்தடம் கொடுப்பதாக ஓடி வருகிறான்
சாரட் வண்டியில் தனித்திருப்பதையறிந்தவன்
தெற்குவாக்கில்.

காற்று ஒலிப்பான்களுக்கிடையே
நடத்துனர் உரத்த குரலில் உசுப்பிவிடுகிறார்
அவளை .
கனவிலிருந்து விழித்தவள்
கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்
இறுக பற்றியாவாறு கேட்கிறாள்
இது எந்த ஊர் என….

– க.பாண்டிச்செல்வி

விலங்குகளின் பிராத்தனை கவிதை – சாந்தி சரவணன்

விலங்குகளின் பிராத்தனை கவிதை – சாந்தி சரவணன்




யானை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!

குதிரை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!

ஒட்டகத்தின் மீது சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில்
புன்னகை!

மனிதரோடு சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடிந்தது
பக்கத்து தெருவின்
குப்பை தொட்டியில்
சவமாய்க் கிடந்தாள்
சிறுமி!

“மனித குணம் மாறாதா?”

பிராத்தனை செய்தன
வன விலங்குகள்.

திருமதி. சாந்தி சரவணன்
9884467730

பழனித்தாத்தா சொன்ன கதைகள் : ”நிலாச்சோறு” கட்டுரை – முனைவர் ம. அபிராமி

பழனித்தாத்தா சொன்ன கதைகள் : ”நிலாச்சோறு” கட்டுரை – முனைவர் ம. அபிராமி




வானம் அன்று பிரகாசமாகக் காட்சியளித்தது நேரம் ஆக ஆகப் பௌர்ணமி நிலா முழு வெள்ளித் தட்டு போல வெளிப்பட்டு புது மணப்பெண் போல் மேகத்தில் சிறிது மறைந்தும் வெளிப்படும் விளையாட்டு காட்டியது.

வீட்டின் வெளியில் குதிரை வண்டி வந்து நின்றது. சாரு கிளம்பிட்டியா அம்மாவின் குரல் சாரு புத்தாடை அணிந்து கொண்ட மகிழ்ச்சியோடு ஓடிவந்தாள் குதிரை வண்டியில் அப்பொழுது சமைத்த சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம் பொரித்த வத்தல் அடங்கிய பாத்திரங்கள் ஏற்றப்பட்டன.

அப்பா, அம்மா, சாரு, பழனித்தாத்தா, எதிர்வீட்டு அத்தை, பாட்டி, மாலா, பக்கத்துவீட்டுக் கௌரி, சித்தி பரிமளா, அத்தை என அனைவரும் வண்டியில் ஏறினர்.

குதிரை இவ்வளவு சுமைகளையும் தாங்கிக்கொண்டு நடக்கமுடியாமல் நகர்ந்த

வந்தாயிற்று தேவநாத பெருமாள் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது, கூட்டத்தில் நின்று சாமி தரிசனம் முடித்தாயிற்றும் கோயில் பின்புறம் உள்ள கெடிலம் ஆற்றுக்கு அனைவரும் சென்றனர், ஆற்றின் கரையோரம் முழுவதும் கும்பல் கும்பலாக மக்கள் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்,

சாரு குடும்பம் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து. அமர்ந்தனர். கொண்டுவந்த சாப்பாட்டை நடுவில் வைத்துச் சாமி கும்பிட்டன.ர் சாருவுக்கு மனதில் பல சந்தேகங்கள். வெட்டவெளியில் வாளியில் கொண்டுவந்த சாப்பாட்டை மூடியைத் திறந்து வைக்கின்றனர். சிறுசிறு பூச்சிகள் விழாதா?

லூசு லூசுபடியாக யோசித்துக் கொண்டிருந்த அவளின் கவனத்தைச்

”சாரு உருண்டையைக் கையில் வாங்கு” என்ற அம்மாவின் குரல் கலைத்தது.

சாப்பாட்டைக் கையில் வாங்கிய சாரு சாப்பிடாமல் கையில் உள்ள சாப்பாட்டு உருண்டையைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக இருந்தாள். இதனைப் புரிந்துகொண்ட பழனித்தாத்தா

”சாரு இது நிலாச்சோறு. நிலவு ஒளியில் அமர்ந்து சாப்பிட்டால் அறிவு வளரும். அழகு கூடும். சாப்பிடு” என்றார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட சாரு மகிழ்ச்சியாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

பௌர்ணமி அறிவியல் பயன்கள் குறித்துத் தாத்தா பேச ஆரமித்தார். ”சிறுவயதில் பெரியவர்கள் கூறும் காரணங்கள் புரிவதில்லை. நாம் வளர்ந்த பிறகு அதற்குரிய காரணங்களை அறியும்போது வியப்பாக உள்ளது.

பௌர்ணமி என்பது பூமி சூரியனைச் சுற்றி வருவது போல, நிலவும் பூமியைச் சுற்றி வருகிறது. நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வலம் வருவதற்கு ஒன்பதரை நாட்கள் ஆகின்றன. பொதுவாகச் சூரியனிடமிருந்து தான் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது. பின் நிலவானது சூரியனிடமிருந்து வாங்கிய ஒலியைப் பூமியில் பிரதிபலிக்கிறது.

இந்தப் பவுர்ணமி நிலவொளியில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன இதனால்தான் அக்காலத்தில் பெரியவர்கள் பௌர்ணமியில் நிலாச்சோறு சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுவந்தனர்.

நிலவொளியில் சாமி கும்பிட்டுச் சிறிது நேரம் உணவில் நிலவொளி படும்படி இருக்க வேண்டும். அப்பொழுது நிலவின் கிரணங்கள் அதில் படிந்து சத்து மிகுந்ததாக மாறும். அவ்வுணவை நாம் உண்ணும் பொழுது அந்தச் சத்துக்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

தேனீக்கள் கூட நாள் முழுவதும் கொண்டுவரும் தேனியைச் சேமித்துப் பௌர்ணமி அன்று அவற்றை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்பதை இங்கு யோசித்துப் பார்க்க வேண்டும்.”

முனைவர் ம. அபிராமி,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி

பல்லக்கு கவிதை – இரா.கலையரசி

பல்லக்கு கவிதை – இரா.கலையரசி




ஊரில் இருந்த மனிதரெலாம்
ஊருக்குள் நடமாடினர்.
“கள்ளழகர் குதிரை கூட
கள்ளத்தனமாய் எட்டிப் பார்க்க”
காவல் கருப்பு அதட்டியது.

“கருவறை கசகசப்பிற்கு
சிறிது ஓய்வு கொடுத்து”
காற்று வாங்கிட வெளியேறினார்
கனிமுக அழகன் சிவன்.!

தினமும் பூச் சொரியும்
சின்னன் கூடையில்
குதூகலமாய்க் குதித்ததபடி
எட்டிப் பார்க்கின்றன பூக்கள்!
திருநீறு, குங்குமம் விற்கும்
திருநாவு முகமெங்கும் பரவசம்!

வாசலில் கோலங்கள்
ஆலம் விழுதாய் விரிகின்றன.
நாதஸ்வரம், தவில்களை
மூச்சை பிடித்தும், விரல்கள்
அழுத்தியும் வரும் இசை
மெலிதான மல்லிகை
மணமாய் காற்றை நிரப்புகின்றன.!

உற்சவ மூர்த்தியாய்
முன்பொருமுறை வந்த ஞாபகம்
சிவனுக்கு வந்த நொடி!
தள்ளிக் கொண்டு முன்னேறியது
தண்ணீர் லாரியைக் கண்டது போல்
பக்த பெருமக்களின் வெள்ளம்.!

“கூட்ட நெரிசலில் சிக்கிய
குழந்தை ஒன்று
சிவனின் கழுத்து” ஆபரணமாகியது!
தோள் மேல் அமர்ந்தபடி
கூட்டத்தை பார்த்து ரசிக்கிறாள்.

கழுத்து நீண்ட கொக்காக
எட்டிப் பார்க்கிற விளிம்புகள்!
வயிறு நிறைந்த வாத்தின்
அடிவயிறு துருத்தியதாய்
அகன்று ஒய்யாரமாய் இருக்கிறது
அந்த அழகிய “பல்லக்கு”

“அள்ளிச் செருகிய கொண்டையை
வட்டமிட்டபடி ருத்ராட்சக் கொட்டைகள்!
பட்டாடை பகட்டாய் பவிசாய்
கைகளின் இடுக்கில் ஒளிகிறது.
“அடிமையின் தோள்கள் திண்ணமாக
அடிமை வேலை பார்க்கிறது”!

சலித்த சிவனின் கண்கள்
காட்சிகளைப் பதிவேற்றம் செய்ய
தலையைத் தட்டிய ஒருவன்
“புள்ளய குடுய்யா”னு பிடுங்க
பல்லக்கு தூக்கும் மனிதரை
தொடர்கிறார் சிவன்
“என்னத்தச் சொல்ல”

என்றபடி கருவறை நோக்கி.!

சிறுகதைச் சுருக்கம் 97 ரோஜாக்குமாரின் ‘ஸ்தானம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 97 ரோஜாக்குமாரின் ‘ஸ்தானம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

ஜோதி விநாயகம் நினைவு பரிசுத் திட்டத்தில் 1997ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதையாக திரு பாலுமகேந்திரா அவர்களால் தெரிவு செய்யப்பட்ட கதை இது.

ஸ்தானம்
ரோஜாகுமார்

சந்தைக் கடந்து பள்ளிக்கூடம் போகும்போதெல்லாம் குதிரையையும், வண்டியையும் பார்ப்பான் ஜமால். பள்ளிக்கூடத்திலிருந்து வீடுவரை ஓடிவந்துவிட்டுப் போவான். எப்போதாவது அம்மா வீட்டில் இருப்பாள். இல்லை என்றால் அவள் வேலைக்குப் போய்விட்டதை உறுதிப்படுத்திக் கொள்வான்.

குதிரை வண்டிக்கார அமீர்பாய் அவித்தெடுத்த கானாப் பயிறை பெரியதான தகரத் தட்டில் ஆவிபறக்கக் கொட்டிவைத்தார். கானாப் பயிறு குதிரைக்கு நல்ல தீனி. தின்று கொண்டே நீண்டவால் முடியைப் படரவிட்டுச் சிலிர்த்து ஆட்டும். கானாப் பயிறிலிருந்து ஒருவித ருசித்தன்மை வெளிப்படும். ஜமாலுக்கும் ஆசை வந்தது. கொஞ்சம் கானாப் பயிறு தின்ன வேண்டும்என்று தான் ஆசைப்பட்டதை நிறைவு செய்ய என்ன செய்வது? வண்டியில் அமர்ந்திருந்த அமீர்பாய் கால்களைக் கீழே ஊன்றி சாட்டைக்குச்சியைச் சரிசெய்து கொண்டிருந்தார். நீளமாகக் கிழித்த தோல் நாரைப் பட்டு நூல்கொண்டு இறுக்கமாகக் கட்டியவரின் கவனம் பூராவும் அதிலிருந்தது. அவர் அந்தப் பக்கம் திரும்பியிருந்தார். மெல்ல மெல்லத் தகரத்தட்டை நெருங்கியவுடன் குதிரை கனைத்துவிடுமோ என்று பயந்தான். அது அவனைக் கண்டு கொள்ளாமல் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.

விருட்டென்று குனிந்து கானாப் பயிறை அள்ளினான் ஜமால்.

“டேய்..”

அமீர்பாய் சாட்டைக் குச்சியுடன் வந்தார். அள்ளிய விரல்கள் விரிய கானாப் பயிறு தட்டில் சிதறியது. சாட்டையடி விழப்போவது திண்ணமாகிவிட்டது. ஜமால் அரண்டு போய் நின்றான்.

“என்னடா?”

“பயறு’ உள்ளும் புறமும் நடுங்கியபடி இரண்டடி பின்னகர்ந்தான். அகல விரிந்த விழிகள் அச்சத்தில் ஆழம் போயின.

“வாடா..”

ஆவிபறக்க அள்ளிய கானாப் பயிறை “இந்தா: என்று நீட்டினார். அமீர்பாயின் கை பெரியது. விரல்கள் நீளமானவை. ஜமாலுக்கு பசியாசை. பயிறை எப்படி வாங்குவது? மேல் சட்டையின் கீழ்ப் பொத்தானைக் கழற்றி ஒரு பகுதியை ஏந்தினான். அதில் பயிறைப் போட்ட அமீர்பாய் அவனின் நிலையைக் கண்டு சிரித்தார். ஜமாலின் அடிவயிறு சுட்டது. இருந்தபோதிலும் பொறுக்கும்படியான இதமான சூடாகவே இருந்தது.

“போ, தின்னு.”

அதன்பிறகு அமீர்பாயிடம் பரிச்சயம் ஏற்பட்டுவிட்டது. குதிரையைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அக்கறையாக விசாரிக்க ஆரம்பித்தான். அவனிடம் சொல்வதற்கென்ற சிறுசிறு வேலைகள் ஏதாவதொன்றிருக்கும் அவருக்கு. சாயா வாங்கி வருவான். அமீர்பாயிடம் போலவே குதிரையிடமும் ஜமால் நெருங்கினான்.

“குருத கடிக்குமா?”

“கடிக்காது, முட்டும்”.

“முட்டுமா?” ஆச்சரியத்துடன் குதிரைக்கு முன்னும் பின்னும் வந்து தேடலாய்ப் பார்த்தான். கொம்பைக் காணோம். அதை அவரிடம் கேட்டபோது அவர் சிரித்தார். தன்னைக் கேலி செய்வதாய் உணர்ந்து வெட்கப்பட்டான். ஜமாலுக்கு ஒரு சந்தேகம் வந்தது. கழுழை போட்டால் விட்டை, மாட்டுக்கு சாணி ஆட்டுக்குப் புழுக்கை, ஆணைக்குக் கூட லத்தி என்று தெரியும். குதிரைக்கு என்ன? அமீர்பாயைக் கேட்டால் கேலி செய்து சிரிப்பார் என்று விட்டுவிட்டான்.

பள்ளி விடுமுறை நாளின்போது அமீர்பாய் பெரியாஸ்பத்திரி வரை குதிரை வண்டியில் கூட்டிக்கொண்டு போனார். தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார். குதிரை ஓடும்போது மிதிபடும் தார்ச்சாலை பூப்பூவாய் சிதறுவது கண்டு புளகித்தான். பள்ளிக்கூடத்திற்கு போவதற்கு முன்பும் பின்புமாக வண்டிக்குவர ஆரம்பித்தான்.

ஒரு நாள் பெரியாஸ்பத்திரிக்கு குதிரை வண்டியைத் தேடிக் கொண்டு போனான். அவ்வழியில் போனபோது அவனின் அம்மா பாத்துமுத்து மரத்தடியில் சில பெண்களுடன் அமர்ந்திருப்பதைப் பார்ததான். அங்கே போய் நின்றான்.

மற்ற பெண்களிடம் ஏதோ சொல்லி அம்மா அழுதாள். பின்னால் நின்றபடியே ஜமால் கேட்டான்

“ஏம்மா அழுகறே?”

பாத்துமுத்து எழுந்து மகனை இழுத்துக் கொண்டு மேலும் அழுதாள். தூக்குப் போணியில் கஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த ஒருத்தி கேட்டாள் “ஒங்கொப்பா குடிச்சிட்டுக் கொடுமைப்படுத்தலாமா? ஒங்கொம்மா பாவமில்லையா?”

அப்பன் குடிப்பது அவனுக்குத் தெரியும். கொடுமைப்படுத்துவதுதான் தெரியவில்லை. கொடுமை என்றால் அடிப்பதா திட்டுவதா தெரியவில்லை. குதிரை கழிவு போடும் போதும் மூத்திரம் பெய்யும் அந்த வீச்சும் ஒருவகையானது. அதைவிடக் கூடுதலான வீச்சம் குடித்துவிட்டு வரும் அப்பனுடையது. இருந்தபோதிலும் குதிரை நல்லது. புல்லும் பயிறும் போட்டால் போதும் போகச் சொல்லும் இடத்துக்கெல்லாம் ஓடும்.

பஸ்ஸோ லாரியோ விபத்துக்குள்ளானால் அங்கே போய்ப்பார்ப்பான். அடிபட்டது அப்பனாக இல்லையே என்று வருத்தமிருக்கும். ஜமாலின் அப்பனுக்குச் சாயாக் கடைதான் முதலில். ஏதோ ஒரு வழியில் சூதாடப்போனான். அப்படியே குடிக்கவும் ஆரம்பித்துவிட்டான். ஒரு ஆட்டத்தில் கடையும் கடையிலுள்ள தளவாடச் சாமானகள் பிரிதொரு ஆட்டத்திலும் போய்விட்டது. அதோடு அம்மாவின் கருகமணியில் கிடந்த பூசாந்திரத்தையும் இழக்க வேண்டியதாகிவிட்டது.

இப்போதெல்லாம் அப்பன் வீட்டுக்கு வரும் நேரம் எதுவென்று தெரியவில்லை. அம்மா தலைக்குக் கையை வைத்துத் தூங்குவாள். அது சாந்துத் தட்டை தூக்கிப் போவது போலான பாவனையில் இருக்கும். அவளின் பாதங்களில் விரிவு விரிவாய்ப் பித்த வெடிப்பு. எப்படி அந்தச் சூட்டில் படியேறிச் சாந்துத் தட்டைத் தூக்குகிறாளோ? பாவம் ஜமாலுக்கு அழுகை வருவதில்லை. இறுகியே இருப்பான்.

ஆங்கிலப் புத்தகமும் அறிவியல் புத்தகமும் அமீர்பாய் வாங்கித் தந்தார். பள்ளிக்கூடம் விட்டு புத்தகங்கள் படிப்பதைக் குதிரை வண்டியிலேயே வைத்துக் கொண்டான். ஒரு மதிய வேளையில் சவாரி போய்விட்டுத் திரும்புகையில் போக்குவரத்துக்குறைவான சாலை என்பதால் அமீர்பாய் அவனை வண்டியோட்டச் சொன்னார். அவரைப் போலவே கடிவாளத்தைப் பிடித்தான். உலகையே செலுத்துவதானதோர் எண்ணம். ஜமாலின் அருகிலிருந்த அமீர்பாயின் பெருமிதமும் அளவிட முடியாததுதான்.

ஒரு சமயம் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்தை இறக்கிவிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான்.

“ஜமாலு, ஜமாலு” சாலையின் சரிவிலிருந்து கத்தியபடி மேலேறி வந்துகொண்டிருந்தான் அவனின் அப்பன். சவாரி போகும்போது ஒரு முறையாவது அம்மா பார்க்க வேண்டும் என்று ஆசையிருந்தது அவனுக்கு. அப்பன் இப்படிக் குறுக்கே வந்து மறிப்பதைக் கண்டு அசூசைப்பட்டான்.

கடிவாளத்தை இறுகப்பற்றி ஒரு பக்கமாய் குதிரையின் முகத்தைச் சுண்டி வைத்துக் கொண்டான்.

“காசு குடு.”

“எங்கிட்ட ஏது காசு?”

“ஒங்கொம்மாவும் நீயும் சம்பாரிக்கிறீயல்ல, குடுடா” நீண்டபடியிருந்த அவனது வலது கைவிரல்கள் பறிப்பதுபோல் பாவனை காட்டின.

ஜமால் இல்லை என்று மறுத்தான். கடிவாளத்தைப் பிடித்தபடி ஜமால் கீழே குதித்தபோது கைலி டர்டர்ரென்று கிழிபட்டது. எரிச்சலில் அப்பனின் மீது ஆத்திரப்பட்டுக் கத்தினான். “போ.”

சிவப்பேறிய கண்களில் கொடூரமிருந்தது. விடுவதாயில்லை. ஜமாலின் சட்டையைப் பிடித்து இழுத்தான். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்க்கக் கூடினர். ஒருவர் அவனிடமிருந்து அப்பனைப் பிரித்தார். அப்பன் அவரைத் திட்டினான். அந்தரங்க வார்த்தைகள் யாவும் அணி வகுத்து வந்தன.

“யோவ், சின்னப் பய கிட்ட வம்பு பண்றியே. ஒனக்கு அறிவிருக்கா? போய்யா.”

“யோவ், நான் யாரு தெரியுமா ஒனக்கு?”

அவர் அவனை அலட்சியப்படுத்தினார். ச்சை குடிகாரப்பயலே போடா என்றிருந்தது அவரின் நோக்கு.

மறுபடியும் ஓங்கிக் கத்தினான் “யோவ் நான் யாருன்னு தெரியுமா ஒனக்கு?”

அவர் அவனைச் சட்டை செய்யவில்லை. நெருங்கி அறைவது போல் முறைத்தார். ஜமாலை வண்டியில் ஏறச் சொன்னார் அப்பனைப் பற்றி அவனிடமே குடி கெடுத்த பயல் என்று சமாதானம் சொல்லிவிட்டுக் கேட்டார்.

“நீ அமீர்பாயோட மகன்தானே?”

அப்பன் அவனையும் அந்த மனிதரையும் வெறித்தான்
சற்றும் தயக்கம் காட்டாது ஜமால் “ஆமா” என்றான்
வண்டி போனது.

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.