ஓசூரில் நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு : மொத்த விற்பனை எவ்வளவு தெரியுமா !!
ஓசூரில், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 11வது புத்தக திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. 12 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த புத்தக திருவிழா ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 110 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
மொத்த விற்பனை.
புத்தக திருவிழாவில் 25 ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 10 ஆயிரம் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புத்தகங்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து 12 நாட்கள் நடந்த இந்த புத்தகத்தில் திருவிழாவில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி: மாலை முரசு
முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி – கமலாலயன்
முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி – புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி – ஓசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுப்பு – 31-12-2021 காலை 09.30 முதல் ஜனவரி 1, 2022 இரவு 09.30 வரை … ஒரு நேரடிப் பதிவு – கமலாலயன்
இன்றைய காலைப்பொழுதில் எழுந்தபோது வெளியே நிலவிய கடும் குளிர் பயமுறுத்துவதாக இருந்தது. ஓசூரின் சிறப்பு என்று இங்கே தொடர்ந்து பொழியும் மழையையும், இதமான குளிர்ந்த தட்பவெப்ப நிலையையும் தயக்கமில்லாமல் சொல்லலாம். இந்த ஆண்டில், தொடர்ந்து பெய்த பெரு மழையைத் தாங்கிக்கொண்டதுபோல், குளிரைத் தாங்க முடியவில்லை. அவ்வளவு சில்லிட்டுப் போகவைக்கும் குளிர் காற்று ! இன்று காலை ஒன்பது முப்பது மணியிலிருந்து நாளை – ஜனவரி முதல் நாளன்று இரவு ஒன்பதரை மணிவரை தொடர்ந்து முப்பத்தி ஆறு மணி நேர மாரத்தான் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் நண்பர் சிவகுமார் அழைப்பு விடுத்திருந்தார். ஓசூரின் செயலூக்க மிக்க மாநகராட்சி ஆணையர் திரு பாலசுப்பிரமணியம் கண்காட்சியைத் திறந்து வைக்க இசைவு தெரிவித்திருப்பதாக அழைப்பிதழ் கூறியது.
இந்த 36 மணிநேரம் என்ற அம்சம் எனக்கு ஆவலைத் தூண்டியது. சரி, என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட்டு வருவோமே என முடிவு செய்து காலையில் குளிருக்குத் தகுந்த ஆடைகளுடன் புறப்பட்டுப் போனேன். நடந்து போவது- அதிலும் இந்தக்காலைநேரக்குளிரில், ராமநாயக்கன் ஏரிக்கரை யோரம் சில்லிடும் காற்றில் உடலசிலிர்க்க நடப்பது ஓர் அரிய அனுபவம். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இதை நான் தவறவிடுவதில்லை. காலை ஒன்பது மணிக்கெல்லாம் பேருந்து நிலையத்தை அடைந்தபோது, அங்கு கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. சிவகுமார், சந்துரு, சத்தியமூர்த்தி, அரிசசந்திரன் உள்பட அறிவியல் இயக்கத்தின் முன்னணி ஊழியர்கள், செஞ்சோலை பதிப்பக நண்பர்கள்,’வசந்தம் வெளியீட்டகம்’ அருணன் புத்தகங்களின் விற்பனையாளர்கள் என ஒரு பெரும் தொண்டர் குழாம் பரபரவென்று கண்காட்சித் தொடக்க நிகழ்வுக்கான வேளைகளில் மூழ்கி யிருந்தனர்.’
வீரம் விளைந்தது ‘என்ற புகழ்பெற்ற சோவியத் நாவலை இளையோருக்கான சுருக்கப் புத்தகமாகப் பத்திரிகையாளர் ஆதிவள்ளியப்பன் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியீட்டிருக்கிறது. அந்த நூல் கண்களில் பட்டது. ப. கு. ராஜனின் அணுவின் ஆற்றல், இரா. நடராசனின் அறிவியல் தேசம் நாவல்,உதயசங்கரின் ‘ பொம்மைகளின் நகரம் ‘ சிறார் நாவல்,ஒரே ஒரு ஊரிலே என்ற விழியனின் நாவல், துளிர் அறிவியல் சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பு மலர், துளிர் இதழ்,சிறகு இதழ் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அத்தனை வெளியீடுகளும் வரிசை வரிசையாகக் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
செஞ்சோலைப் பதிப்பகம் என்ற பெயர் இங்கு ஓசூர் வந்த பிறகு சமீபகால மாகக் கண்களில் பதிந்துவரும் பெயர். இடதுசாரித் தத்துவ நூல்களையும், வியட்நாம் தொடர்பான புதிய நூல்களையும், அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைத் தாங்கிய சிறு நூல்களையும் இவர்கள் வெளியீட்டுள்ளனர். பொதுவாக ரஷ்ய, சீனப் புரட்சி இலக்கிய நூல்கள்தாம் தமிழ் வாசகர்களுக்குப் பெரும்பாலும் அறிமுகமாகியுள்ளன. வியட்நாம் புரட்சி, அந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இலக்கியங்கள் மிக மிக அரிதாகவே தமிழில் கிடைக்கின்றன. இதைப்பற்றிய மணக்குறையை தோழர் சு. பொ. அகத்தி யலிங்கமும், நானும் பலமுறை பேசிப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது, செஞ்சோலை வெளியீடுகளில் மூன்று நான்கு நூல்களைப் பார்த்த போது மிகவும் மகிழ்வாக இருந்தது. ஹோசிமின் எழுதிய வியட்நாம் புரட்சி என்ற சிறிய நூலை முதலில் வாங்கினேன். அடுத்துப் போகும்போது மற்ற நூல்களை வாங்க எண்ணம்.
செம்மலர், தீக்கதிர் ஏடுகளில் தொடர்ந்து பல்லாண்டு காலம் அயராமல் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும், இடதுசாரித் தத்துவங்களையும் எளிய இனிய தமிழில் கட்டுரைகளாகத் தந்தவர் பேராசிரியர் அருணன் அவர்கள். இப்போது பணி ஓய்வுக்குப் பின், தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரியக் கொள்கைகளைப் பெரு முழக்கமிடும் குரலில் ஓங்கி ஒலித்து வரும் சொற்பொழிவாளர்.இவருடைய வசந்தம் வெளியீட்டகம் பதிப்பக நூல்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிராமணியம்- அன்று முதல் இன்று வரை என்ற பெருந்தொகுப்பு நூல்கள், கடவுள் பற்றிய நூல்வரிசை, கோட்சேயின் குருமார்கள், ஆர். எஸ். எஸ். எனும் மர்மதேசம் போன்று அருணன் எழுதிய புகழ்பெற்ற நூல்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்தன.
குளிர் சில்லென்று நெஞ்சை நிறைத்தாற்போல் உணர்ந்தேன். அது பனியின் விளைவால் மட்டுமன்றி, இத்தனை புத்தகங்களையும் ஒருசேரப் பார்த்ததால் கிடைத்த மனநிறைவினாலும் கூடத்தான்.இப்படியாக இன்று காலைப்பொழுது புத்தகங்களுடன் விடிந்தது; மனம் புத்துணர்வில் எழுந்தது.
ஓசூரில் புத்தக்கண்காட்சிகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய சிறப்பம்சம் எதுவெனில், கடந்த 2020 , 2021 ஆகிய இரு ஆண்டுகளிலும் கொரானா தீநுண்மிப் பெருந்தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டின் வேறெந்த நகரத்திலும் புத்தக்கண்காட்சிகள் நடத்தப்படாதிருந்த போதிலும், ஓசூரில் மட்டும் தகுந்த பாதுகாப்பு முன்னேற் பாடுகளுடன் தலா மூன்று நாள்கள் கண்காட்சிகளை நடத்தினார்கள். இந்த முன்னெடுப்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஓசுர் அனைத்துப்பகுதி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்ட தாகும்.
இந்த ஆண்டு, மூன்று நாள் கண்காட்சியில், ஓசூர் படைப்பாளிகளின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஓவிய-புகைப்படப் பதிவுகள் என அனைத்து வகைப் படைப்புகளையும் உள்ளடக்கிய ‘ வாசல் ‘ என்ற இலக்கியத்தொகுப்பு நூலை 10-ஆம் ஆண்டுப் புத்தகக் கண்காட்சி சார்பில் சிறப்பாக வெளியிட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டை, இப்படி 36 மணி நேரப் புத்தகக் கண்காட்சியுடன் வரவேற்கத் தயாராகி விட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களுக்கு நாம் நல்வாழ்த்துக் கூறுவோம். தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு புத்தாண்டைப் புத்தகங்களுடன் வரவேற்க பாரதி புத்தகாலயமும்,புத்தகம் பேசுது இதழும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. நல்ல முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் ! வாழ்த்து கள் .. !