சக்திராணியின் கவிதைகள்

சக்திராணியின் கவிதைகள்




அன்பு
********
எப்போதும் என் வீட்டிற்கு
விருந்தாளியாக வரும்
குழந்தை…
இப்போதெல்லாம் வருவதே இல்லை…

ஏன் என்ற கேள்வி என் உள்ளம்
கேட்ட போதும் விடையெல்லாம்
கண்டுபிடிக்க முடியவில்லை…
என் அகக்கண்களுக்கு…

இருந்தும்…அவள் விரும்பி சாப்பிடும்
நொறுக்குத்தீனியும்…
விளையாட்டு பொம்மைகளும்
உயிரற்று கிடக்கின்றன…
என்னைப்போல்…

ஊருக்கு சென்றிருந்தால் கூட…
கைபேசியில் உரையாடிடுவாள்…
உள்ளம் மகிழ புன்னகையில்…
உறவை ஒன்றாகச் சேர்த்திடுவாள்…

விடையற்ற வினாவுக்கு…விடை
தேடும் முயற்சியில் நாட்கள் நகர்ந்து…
வருடங்களான போதும்…
காத்திருப்பதும்…அழகாகத்தான்
இருக்கின்றன…அன்பு மனதிற்கு…

பிடித்தவர்களை…பிடியில் வைத்திருப்பதல்ல…அன்பு…

அவர்களின்
அர்த்தமற்ற…செயல்களிலும்…
அன்பாய் வாங்கும் பொருட்களிலும்…
நினைவுகளாய் வாழ்ந்து கொண்டிருப்பதே அன்பு…

நம்பிக்கை
****************
தோல்வியால்…துவண்டபோது…
எக்கரமும் ஆறுதலாய் இல்லா வாழ்வில் …
என் மீது
நான் கொண்ட நம்பிக்கை…

அன்பை மட்டும்…கண்ட
விழிகள்…சுயநல உபயோகம்
எண்ணி அழுத நொடியில்
எனக்காக நான் கொண்ட நம்பிக்கை…

இயலா செயலென…பலர்
சொன்ன போதும்…இயன்றதை
செய்து சில வெற்றிகளை
அனுபவித்த போது…எனக்காக
நான் கொண்ட நம்பிக்கை…

மாற்றம் எதிர்பார்த்த…வாழ்வில்
ஒட்டு மொத்த மாற்றமும்…
எதிர்மறையாய் அனுபவித்த போதே
எனக்காக நான் கொண்ட நம்பிக்கை…

பேசிய வார்த்தைகளில்…
பொய்யிருந்தும்…எதிர்த்துப் பேச முடியா நிலையில்…
மௌனமாய்
என் மனதில் நான் கொண்ட நம்பிக்கை…

எனக்கான நம்பிக்கை அனைத்தும்…
எனக்குள்ளே புதைந்திருக்க…
வேறென்ன நம்பிக்கை …என் வாழ்வின்
பயனாய் அமைந்துவிடப்போகிறது…
என்றே…என் நம்பிக்கை எனக்காய்…

முகமூடி
**********
நான் நானாக இருக்கிறேன்…என்பதில்
தொடங்கிய எண்ணம்…
ஏறக்குறைய…என் வயதிற்கேற்றாற்போல்
என்னுடனே…தொடர்கின்றன… வார்த்தைகளில்…

எனினும்…என் முகம் கொண்ட மாற்றம்
மனதில் பல எண்ணங்கள் புகுத்த…
பல முகமூடிகளை
விழித்ததும்…
அணிந்து கொள்கிறேன்…

குட்மார்னிங் சொல்ல முடியா
தருணம்…சொல்லியே ஆக வேண்டிய
கட்டாயத்தில் ஒரு முகம்…

புன்னகைக்க இயலா மனிதரிடம்…
போலிப் புன்னகை டோக்கன்
போட்டே…புன்னகை பரிசாய் ஒரு முகம்…

சினம் கொண்ட மனம்…
சிரிக்காமல் சென்றதில்லை ஒருபோதும்…

எச்செயலும் பிடிக்கவில்லை…
செய்வதற்கே…எனினும் எல்லாம் பிடித்தது போல் செய்யும் கரங்களுக்குள்
ஒழியும்…உண்மை முகம்…

தகுந்த நேரத்தில் தகுந்த…முகம்
அணிந்தே…பிறர் போற்றும்…
ஒப்பற்ற வார்த்தைகளில்…என்
நன்றி உரித்தே என்பதில்…
கடந்து விடத்துடிக்கும் ஒரு முகம்…

எண்ணற்ற முகங்கள் முகமூடியாய்
இருந்தும்…முகம் சுளிக்காமல்
பேசுவதில்…முகமூடிகள்…
கிழிக்கப்படுவதில்லை…இங்கே…

எனினும்…முகத்திற்கான…
அகங்கள் தவிர்க்கப்படுகின்றன…
தெரிந்தும் தெரியாதது போல்…

நடிப்பு
*********
கதறி அழும்…
நான்கு சுவர்களுக்கு
மத்தியில்… யாருக்கும் தெரியாமல்…அழுது விட்டு
வெளியில் வந்து புன்னகைப்பதில்
கலந்து விடுகிறது நடிப்பு…

பிடிக்காத விஷயங்களும்…
பிடித்ததாய் செய்யும் போதே…
பிடித்தலுக்குள் பிடித்துப்போய்விடுகிறது நடிப்பு…

காரசாரமான விவாதங்களுக்காக…
காத்திருக்கும் நபரிடம்…கை குலுக்கி
கடந்து விடும் போது…
கலந்து விடுகிறது…நடிப்பு…

உண்மை விளக்கும் உன்னத உரையில்
சுயநலமான சொற்களுக்கு மத்தியில்
சுயம் தேடி அழைவதில்…சுயமாய்
நடிக்கிறது நடிப்பு…

உயிரானவனின் உதவி வேண்டலில்…
எல்லாம் இருந்தும்…இல்லை என்றே…
ஒற்றை வார்த்தையில் உண்மை
மறைப்பதில்…உறைந்து கிடக்கிறது நடிப்பு…

எல்லாம் நடித்து விட்டு…ஏதும் அறியாதவனாய்….கண்ணாடி பார்த்தே…
நானும் நல்லவன் தான் என்றோ…
எனக்குள் நல்லவன் இருக்கிறான்
என்பதோ…ஆகச்சிறந்த நடிப்பு…

இல்லத்தரசி
***************
இவள் இல்லாமல்
ஓர் அணுவும் அசையாது இல்லத்திலே…இல்லை என்ற சொல்லும் கண்டதில்லை இவள்
ஞாலத்திலே…

காலையிலே…டீயில் துவங்கிய
வேலை ஒவ்வொன்றாய்…
அடுக்கடுக்காய்…இவள் உயரம்
தாண்டிய போதும்…
ஒருபோதும்…இவள் சலிப்பை
வேலையில் காட்ட எண்ணியதில்லை…விடுமுறை
கொடுங்கள் என்றோர்…
வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை…

சட்டை…எங்கே…ஷூ..எங்கே
எனக் கேட்கும் கணவனுக்கு…
கண் முன்னே இருக்கும் பொருள்
தேட…நேரமில்லா பொழுதில்
இவள் நேரம் செலவழிக்க
தவறியதில்லை…

படுக்கையில் புரளும் குழந்தைக்கு
இல்லா அக்கறை…பள்ளியில்
என்னவெல்லாம் கேட்பார்களோ…என
பலமுறை புத்தகப்பைகளை சரிசெய்து…எடுத்து வைப்பதில்
இவள் அக்கறைக்கு ஈடு இணை
எதுவுமில்லை…

இட்டலி அவிப்பதிலும்…சாம்பாரின்
சுவையை இரசிப்பதிலும்…
யாருக்கெல்லாம் இவை பிடித்திருக்கும் என்பதில் இவள்
போடும் கணக்குகளில்…இவள்
பிடித்தம் என்னவோ…என்பதை
மறந்தே…ருசிக்கிறாள்

குக்கர் இசை…ஒருபுறம் இருக்க
பிடித்த பாடல் எங்கோ ஒரு முனையில் காதுகளைத் துளைக்க…
மனம் லயித்து கேட்க துடிக்கும்
இசையில்… குக்கர் இசைக்கே
முன்னுரிமை அளித்து காரியம்
சாதிக்கிறாள்…

விடைபெறா குழந்தையின் அழுகையை நிறுத்தி பள்ளிக்கு
அனுப்பி…டாட்டா காட்டி…கணவனுடன் அனுப்பி
வைத்தே… வேலையெல்லாம்
முடிந்தது என்ற எண்ணத்திற்கு
முட்டுக்கட்டையாய்…

பாத்திரங்கள்…ஒருபுறம்…
துணி மூட்டைகள் … மறுபுறம்…
பயன்படுத்திய பொருளெல்லாம்…
ஆங்காங்கே…என வீடு முழுதும்
நிறைந்திருக்க… அனைத்தும்
சுத்தம் செய்தே…வீட்டை முறைப்படுத்தில்
முறைதவறியதில்லை…இவளது
செயல்கள்…

எல்லாம்..முடித்த பின்னே…
சற்றே அமர்வோம் என சிந்திக்கும் வேளையிலே…ஏம்மா…டீ போடுறீயா…என்ற மாமனாரின்
குரலுக்கு செவிசாய்த்தே… மீண்டும்
அடுக்களைக்குள் நுழைந்தே
இல்லா வேளையை…இழுத்துப் போட்டு செய்வதில் இன்னல் கண்டதில்லை இவள் ஒருபோதும்…

மாலை நேரத் தேநீரும்…மதி மயக்கும்
இசையும்…ஒருபுறம் கேட்டாலும்…
குழந்தைகள்…இசையும்…தேடலும்
ஆங்காங்கே சிந்தனைக்கோர்
விருந்தாய் காலம் கடத்த தவறுவதில்லை…இவள்
வாழ்க்கையிலே…

இல்லம் முழுதும் வெளிச்சமாய்…
இன்முகம் எனும் வருகையாய்…
இரவை வரவேற்று… மீண்டும்
அடுத்த விடியலுக்கு காத்திருந்து…
நகர்வதில் இவள்…போல்
சிறப்புடையோர்…யாருமில்லை…

இல்லத்தரசி என்றோர் பெயருக்கு
பொருத்தமாய்…இல்லம் காக்க
வேறொரு… உறவுமில்லை…

– சக்திராணி