உழைப்பாளி கல்லீரல் – பேரா.சோ.மோகனா
என்னைத் தெரியுமா?
கல்லீரல் என்றால் ஏதோ சாப்பிட என்று எப்போதும் சாப்பாடு நினைவாகவே இருக்க வேண்டாம். சாப்பாட்டுடன் தொடர்புடைய நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். ஓர் ஆச்சரியமான உறுப்பு என்றும் கூட கூறலாம். ஏன் தெரியுமா? “எம்பேரு கல்லிரல்பா.! நா.. ஒனக்காக முக்கியமா 500 வேலை செய்யறேன்பா. நா அதே செய்யாட்டி நீ போயிடுவே..! அத்தோட கொசுறா சும்மா 35 , 000பணிகள் ஒன் தேவைக்கு ஏத்தாப்பல செய்யறேன்பா..!” இப்படிதான் கல்லீரலைக்கேட்டால் சொல்லும்.
நான் யார் ..நான் யார் ? மாயாவி
நம்ம கல்லீரல் பயங்கரமான உழைப்பாளி, சுமார் 36,000 பணிகளை அனாயசமாக, சும்மா போகிறபோக்கில் செய்கிறது. இது இல்லாமல் நாம வாழவே முடியாதுங்க..! ஆனால் கல்லீரலின் மீள் வளர்ச்சி என்பதும், நாம் எதிர்பார்க்காதவகையில் அனாயசமானது. ஆமாப்பா, இதன் 80 % சேதமடைந்தாலும் கூட, சாதாரணமாக பணி செய்வார் கல்லீரல். அதுபோலவே, 80 % வெட்டி எடுத்துவிட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்துவிடுவார். இதன் மீள்திறனும், தாக்குப் பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான்.
உடலின் பெரிய உறுப்பு
கல்லீரலும் இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இது இல்லாவிட்டால் நம்பாடு அம்போதான். இது கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றில் பெரும்பகுதியை அடைத்துக் கொண்டு, கொழுக் மொழுக்கென்று இரு பகுதிகளாக இருக்கிறது. வலது பகுதி, இடது பக்கத்தைவிடப் பெரியது. கல்லீரலும் மூளையும் எடையில் சமமானவர்கள். அதாவது 1400 கிராம்..! அதற்காக கல்லீரல் இடத்தில் மூளையையும், மூளை உள்ள இடத்தில் கல்லீரலையும் வைக்க முடியாது.
உடலின் ஆற்றல் களன் நானே !
நம் உடலின் முக்கிய வேதி தொழிற்சாலையும், சுத்திகரிப்பு தொழிற்சாலையும் இதுதான். ஆமாப்பா..! நீங்கள் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையற்றதும், தீங்கு விளைவிப்பவையும் இருந்தால், அவற்றை உடனடியாக வெளியேற்றுகிற வேலையைச் செய்வது கல்லீரல்தான். அது மட்டுமல்ல நீங்கள் உண்ணும் உணவை, உடலுக்கு வேண்டிய வடிவத்தில் மாற்றிக் கொடுப்பவரும் கல்லீரலார்தான். நம் உடனடி தேவைக்குப் போக, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிளைகோஜனாக சேமித்து வைக்கப்பதும் கல்லீரலில்தான். உடலின் அவசர தேவையின் சேமிப்புக் களன் கல்லீரலே. உடலில் தேவைக்கேற்ப, தேவையான இடத்தில் தேவையான அளவு, தேவையான நேரத்தில், குளுகோஸை அவ்வப்போது விநியோகம் செய்வதும் இவர்தான்.
நீங்கள் ஓர் ஓட்டப் பந்தய வீரர் என்றால் மட்டுமல்ல, பைரவர் (நாய்) துரத்தும்போது நீங்கள் ஓடினாலும் கூட, அந்த ஓட்டத்தின்போது, உடல் தசை செயல்படத் தேவையான குளுகோஸை அதற்குத் தந்து உதவுவது கல்லீரல் தான். இல்லாவிட்டால், நீங்கள் அம்பேல்தான்.
அபாயம் அகற்றும் ஆபத்பாதவன்! உங்களின் உடலில் பாக்டீரியா இருந்தாலும் சரி, பாய்சன் இருந்தாலும் சரி, அது உடலுக்கு தேவையற்றது, தீங்கானது என்றால், பாகுபாடு பார்க்காமல், உடனடியாக வெளியேற்றுவது கல்லீரலின் பணியே. நீங்கள் எவ்வளவு மதுபானம் அருந்தினாலும், விஷம் குடித்தாலும் அவற்றை வெளியே அனுப்பும் வேலையைச் செய்வது இவர்தான். நம் உடலுக்கு வேண்டாத பொருள் அனைத்தையும் பிரித்து, கரைத்து இரத்தத்தின் வழியே சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற உதவுகிறது. கல்லீரல் மருந்து, மாத்திரை, வைரஸ், பாக்டீரியா, விடம், போன்றவற்றைக் கரைக்காவிட்டால், சிறுநீரகம் அவற்றை வெளியேற்ற முடியாது. உடலில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் யூரியாவையும் சேகரித்து அனுப்புகிறது.
கொழுப்பு சீரணம் நம்மாலே
அண்ணாச்சி, நமக்கெல்லாம் வறுத்தது, பொரித்தது, சிப்ஸ், உருளை வறுவல் என்றுதான் பிடிக்கும். அனைத்து உணவுப் பொருளையும் நல்லா, நெறைய எண்ணெய் ஊற்றி, சும்மா மொறு மொறுன்னு வறுத்து சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்னு சொல்ற ரகம் நாம.! ஆனா நீங்க என்ன எண்ணெய் பொருள் சாப்பிட்டாலும் சரி, இந்த பெரீய்ய தலீவன் கல்லீரல் இல்லாட்டி ஒண்ணும் ஆவாதுங்கோ..! ஆமாம், எண்ணெய்ப் பொருள்களை சீரணம் செய்வது இவர்தான். இதிலுள்ள பித்தப்பையின் சுரப்பி நீரான, பித்தநீர்தான், எண்ணெய் மற்றும் கொழுப்பை உடைத்து சீரணம் செய்பவர்.
மஞ்சள் காமாலை;
அதனால்தான், மஞ்சள் காமாலை வந்தால், மருத்துவர் உடனடியாக, பால் பொருள்கள், எண்ணெய் வஸ்துக்களை நிறுத்தச் சொல்கிறார். ஏனெனில் மஞ்சள் காமாலை, என்பது ஹெபடிடிஸ்(Hepatitis) A, B & C போன்ற வைரஸ்களால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவது. ஆனா நாம என்ன செய்வோம் தெரியுமா? நாட்டு வைத்தியரிடம் சென்று, மருந்தை வாங்கி, அதனை நல்ல கெட்டியான ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடுவோம். நல்ல நாட்டுக்கோழி கறி வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுவோம். அத்தோடு, கல்லீரலுக்கு நல்ல வெடிகுண்டு வேட்டு வைப்போம்.
வைட்டமீன்களின் சேமிப்புகளன்:
கல்லீரல் புரதத்தை உடல் உட்கிரகிக்கும் எளிதான அமினோ அமிலங்களாக மாற்றித்தருகிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E & k யின் சேமிப்பு கிடங்கும் இதுதான். அது மட்டுமில்ல நண்பா, உங்களுக்கு ரொம்ப கொழுப்பு இருக்கிறதா? கோபித்துக் கொள்ளாதீர்கள்..! கொலஸ்டிராலைத்தான் சொல்கிறேன். அதன் உற்பத்திக்களனும் இங்கேதான். இரத்தம் உறைவதற்கான உதவி செய்பவரும் இவரே..! நாம் சாப்பிடும் வலிநிவாரணி உட்பட, அனைத்து வகை மருந்துகளையும் பிரித்து பிரித்து ஆய்பவர் இவரே.!
கல்லீரல் பாதுகாப்பு
கல்லீரலில் இரண்டு பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. அதன் உதவியால்தான் இத்தனை பணிகளும் நடக்கின்றன. இந்த உறுப்பில் 96 % நீர்தான் உள்ளது. இதன் மீள் திறனும், பணிப்பளுவும் அளப்பரியது. எனவே நல்ல உணவு உண்டு, நிறைய நீர் அருந்தி, நல்ல உடற்பயிற்சி செய்து கல்லீரலை காக்க வேண்டியது மிக மிக அவசியம். உங்கள் கல்லீரல் நல்ல வேலை செய்யலைன்னா, தோலும், கண்ணும், நகமும் மஞ்சளாகிவிடும். மலம் வெள்ளையாக இருக்கும். இதனைக் கண்டறிவது எளிதே.! சில வைரஸ் பாதிப்புகள், சில மருந்துகள், மதுபானம் போன்றவை கல்லீரலை சிர்ரோசிஸ் (cirrhosis) வந்து செயலிழக்க செய்துவிடும். மாசு கலந்த காற்று, மன அழுத்தம், உடல் பருமனும் கூட கல்லீரலைப் பாதிக்கும். சர்க்கரை நோய், மன அழுத்தம், உடல் பருமன், மஞ்சள் காமாலை போன்றவை, கொழுப்பு கல்லீரல் உருவாக வழி வகுக்கும்.
பாதிக்கப் பட்ட கல்லீரலை, கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் சரி செய்யலாம். குடும்பத்தினர்/இரத்த உறவினர்தான், கல்லீரல் தரவேண்டும். கல்லீரலும் கூட புற்று நோய் பாதிப்புக்கு ஆட்படும். கல்லீரல் மாற்று சிகிச்சை செய்ய இந்தியாவில் ரூ 10-12 லட்சம் ஆகிறது. ஆனால்அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சரியாக கவனித்தால் 89% பபேர் ஓராண்டு வரையிலும், 75% பேர் 5ஆண்டுகள் வரையிலும் காப்பாற்றப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் புதிய கல்லீரல் நோயாளிகளின் எண்ணிக்கை 10,00,000. உலகில் ஆண்டுதோறும் 35 மில்லியன் மக்கள் கல்லீரல். நோயினால் இறந்து போகின்றனர். இந்தியாவில் இறப்பை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள் பட்டியலில் கல்லீரல் நோய் உள்ளது.
இப்போது கல்லீரல் புற்றுநோயும் உயிர்குடிப்பான் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் இப்போது இது அதிகம் வருகிறது என மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
▪ 1997 ல் லண்டனில் 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் இவர் நன்றாக உள்ளார். இதுதான் உலகிலேயே, கல்லீரல் மாற்று சிகிச்சை செய்த குறைந்த வயது.
▪ அப்பல்லோ மருத்துவ மனையில் மட்டுமே, கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 க்கு மேற்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
▪ அமெரிக்காவில் சிரோசிசால் இறப்பவர்கள் வருடத்திற்கு, 25,000.
▪ இந்தியாவில் சிர்ரோசிஸ் இறப்பு: 2007 ல் 1 ,776 ;2008 ல் 1 ,965 ;2009: 2048. இது தெரிந்த கணக்கு. நம்ம கிராமத்தில் மருத்துவமனைக்கு வராமல் உயிர்விடுபவர்..?