அமெரிக்கா: கைதிகளின் கூடாரமா? – அ.பாக்கியம்
உலகத்தின் ஒட்டுமொத்த சுதந்திரத்தின், மனித உரிமையின் சொந்தக்காரன் நான்தான் என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் பிரச்சாரங்கள் போலியானது என்பது அனைவரும் அறிந்ததே.
ராணுவ மேலாதிக்கத்தை வைத்துக்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளில் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதாகத் தலையிட்டு பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
உலகத்தில் தனது ராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யும் முதல் நாடு அமெரிக்கா தான். 2022 ஆம் நிதியாண்டில் அமெரிக்காவின் ஆறு பாதுகாப்பு துறை அமைப்புகளுக்கு (departments of defence) ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி 1.64 ட்ரில்லியன் டாலர் ஆகும்.
அமெரிக்காவின் காவல்துறை மட்டுமே பெறக்கூடிய நிதி ஒதுக்கீடு உலக ராணுவத்தில் அதாவது அமெரிக்கா சீனாவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடிக்கிறது .
நியூயார்க் நகர காவல் துறை (NPYD) 8.4(80லட்சம்) மில்லியன் மக்களுக்கு சேவை செய்கிறது. இதற்காக ஒதுக்கப்படும் நிதி 5.5 பில்லியன் டாலர் ஆகும். 98.17(சுமார் 10 கோடி) மில்லியன் மக்கள் தொகை கொண்ட வியட்நாம் நாடு இதே அளவுக்கான தொகையைதான் ஒட்டுமொத்த ராணுவத்திற்கும் செலவு செய்கிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பார்வையில் வடகொரியா ராணுவ மயமாக்கப்பட்ட ஒரு சர்வாதிகார நாடாகும். சுமார் 26(2 கோடி 60 லட்சம்) மில்லியன் மக்கள் வாழும் வடகொரியாவின் மொத்த ராணுவ பட்ஜெட் சுமார் 1. 6 டாலர் ஆகும். ஆனால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) 3.85 (38 லட்சம்) மில்லியன் மக்கள் தொகை வசிக்கும் நகரத்திற்கான காவல்துறை ஆகும். இந்த காவல்துறைக்கு ஆண்டு பட்ஜெட் 1. 9 பில்லியன் டாலர் ஆகும். வடகொரிய நாட்டில் ஒட்டு மொத்த ராணுவ செலவைவிட அதிகமானது.
ஒட்டுமொத்தமான சமூகத்தையே கட்டுப்படுத்த கூடிய அளவுக்கு காவல்துறை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக கருப்பின மக்களுக்கு எதிராக செயல்படும் முறைகள் அனைத்தும் மனித உரிமை மீறல்களை ஆகும்.
உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு 4% மட்டுமே. ஆனால் கைதிகளில் 20 முதல் 25 சதம் வரை அமெரிக்காவின் பங்காக இருக்கிறது. ஒப்பீட்டு அளவில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் சீனாவை சர்வாதிகார நாடு என்றும், மனித உரிமைகளை மீறும் நாடு என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் உலக மக்கள் தொகையில் 18.5% பங்கு உள்ள சீனாவின் கைதிகள் 15 சதவீதம் மட்டுமே. 194 நாடுகள் உள்ள கைதிகளை ஒப்பிட்டால் அமெரிக்காவின் சிறை கைதிகள் அதைவிட அதிகமாக இருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போர் நடந்த உச்சகட்ட காலத்தில் சோவியத் யூனியனில் போர் கைதிகளையும் சேர்த்து 2.5 மில்லியன் கைதிகள் இருந்துள்ளார்கள். அமெரிக்காவின் கைதிகள் இதை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.
பெரும்பாலானவர்கள் வன்முறை காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்த கைதிகளில் 67% பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். ஜாமின் பெறுவதற்கான தொகை என்பது ஒரு ஏழையின் 8 மாத ஊதியமாக இருப்பதால் வசதியற்றவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத நிலைமை உள்ளது.
முதலாளித்து வர்க்கத்தின் சிறந்த நலன்களுக்காக, பொருளாதார சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அமெரிக்க அரசு, காவல் துறையையும் சிறைவாசத்தையும் நம்பி இருக்கிறது.
அமெரிக்க தனியார் சிறைகளில் உள்ள கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் புலம்பெயர்ந்தோர் அடைக்கப்பட்டுள்ள தனியார் தடுப்பு சிறைகள் நிலைமை மோசமாக உள்ளது.
2019 ஆம் ஆண்டில், 1,16,000 ( பிப். 4, 2021 அன்றைய ஐக்கிய நாடுகள் செய்திகள்) அமெரிக்கக் கைதிகள் தனியாரால் இயக்கப்படும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது மொத்த கைதிகளில் 16 சதவிகிதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. 2021 ஆண்டு செப்டம்பர் வரை மெக்ஸிகோ எல்லையில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை அமெரிக்க அதிகாரிகள் தடுப்புச் காவலில் வைத்துள்ளனர். அவர்களில், 45,000 குழந்தைகள் உட்பட, 80 சதவீதம் பேர் தனியார் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான தடுப்பு சிறைகள் தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டு இயக்கப்படுகின்றன. செலவுகளைக் குறைப்பதற்கும், லாபத்தை அதிகரிப்பதற்கும், தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு குறைந்தபட்ச தரங்கள் இல்லாமல் கட்டமைக்கின்றன. இதன் விளைவாக மோசமான, கடுமையான உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது.
அரசின் கண்காணிப்பு குறைபாடுகளால் தடுப்பு சிறைகளில் வசதிகள் குறைவாகவும், குழப்பமான நிர்வாகம் நடப்பதற்கும்,மனித உரிமைகளை மீண்டும் மீண்டும் மீறுவதற்கும் வழிவகுக்கிறது.
சிறைச்சாலை உணவு மற்றும் சுகாதார சேவைகளை நடத்துவதற்கான ஒப்பந்தங்களை தனியார் பெருநிறுவனங்களுக்கு கொடுக்கிறார்கள். இந்தத் தொழில்களில் சிறைத் தொழிலாளர்களைச் குறைந்த கூலிக்கு சுரண்டுவது மூலம் அதிக லாபத்தை தனியார் நிறுவனங்கள் அடைகிறது.
2017 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, சிறைத் தொழிலில் பெரும்பாலான நிறுவனங்கள் கைதிகளுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 86 சென்ட் முதல் $3.45 வரை ஊதியம் வழங்குகிறார்கள். குறைந்தபட்சம் ஐந்து அமெரிக்க மாநிலங்களில் இது போன்ற சிறைத் தொழில்கள் உள்ளன. இங்கு உள்ள சிறைக்கைதிகள் தனியார் நிறுவனங்களால் அடிமைகளைப் போன்றே நடத்தப்படுகிறார்கள்.
பல பன்னாட்டு நிறுவனங்களும் இலாபத்தை அதிகரிக்க, அமெரிக்க சிறைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி பெரும் லாபத்தை ஈட்டுகின்றனர். தொற்றுநோயின் உச்சத்தில் COVID-19 ஐ எதிர்த்துப் போராட, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகள் முககவசம் மற்றும் கைசுத்திகரிப்பு பொருட்களை தயாரித்தனர்.
தனியார் நிறுவனங்கள் கைதிகளைக் கொண்டு நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளிலும், தீயணைப்பு பணிகளிலும், ஏராளமான கட்டுமான பணிகளிலும், பண்ணைகளிலும் வேலை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறார்கள். ஏலம் எடுப்பதன் மூலமாக இந்த செய்திகளை பயன்படுத்தி குறைந்த கூலி கொடுத்து அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். என்னதான் வேலை செய்தாலும் விடுதலையான பிறகு கைதிகளுக்கு வேலை கிடைப்பதில்லை.
மனித உரிமைகளை பற்றியும், உலக சுதந்திரத்தை பற்றியும் பேசிக்கொண்டே நாட்டோ அமைப்புகள் மூலமாக உலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர யுத்தங்களை கொடுத்தும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்தும் உலக மக்களின் வாழ்வை சீரழித்து வருகிறது அமெரிக்கா.
அதே நேரத்தில் உள்நாட்டில் மக்களை காவல்துறையின் கட்டுப்பாட்டுகுள்ளும், சிறைத் தொழில்கள் மூலமும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் நலன்களை பேணி காத்து வருகிறது.
– அ. பாக்கியம்