து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




இப்போதெல்லாம்..
***********************
இப்போதெல்லாம் நான் உறங்கிவிடுகிறேன் இரவில்..
படுக்கையில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுருக்கும் நோயாளியின் ஆறுதல்..

இப்போதெல்லாம் நான் பசித்து உண்கிறேன்..
புளித்த ஏப்பகாரனின் வாக்குமூலம்..

இப்போதெல்லாம் நான் கிறித்துவ போதகன்
வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் பிரகடனம்..

இப்போதெல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடியாகிறது..
தற்கொலையில் உயிரிழந்த விவசாயிகளின் ஏளனப் பார்வை..

இப்போதெல்லாம் நான் கோமாளி வேடம் நடிப்பதில்லை எங்கும்..
வேட்டி அவிழ்ந்து அம்மணமான கலைஞனின் அறியாமை

இப்போதெல்லாம் நான் சாலையை இருபுறம் திரும்பிப் பார்த்துக் கடக்கிறேன்..
சவக்குழிக்குள் குடும்பஸ்தனின் அங்கலாய்ப்பு.

புத்தம் புது பூமி வேண்டும்
******************************
புத்தம் புதுபூமி பிறந்திட வேண்டும்..
அழகிய நீல வானம் விரிந்திட வேண்டும்..
மின்னும் மழைத்துளிகள் உரசிட‌வேண்டும்..
பசுமை பூத்து நிலமெங்கும் செழித்திட வேண்டும்..

மனிதர் மனம் மகத்துவம் சமைத்திட வேண்டும்.
மெய்மை தாங்கிய சொல் உதிர்த்திட வேண்டும்.‌
பொய்யே இல்லா உலகு படைத்திட வேண்டும்..
கள்ளமில்லா நெஞ்சு வார்த்திட வேண்டும்

மனிதம் என்ற ஆடையை
மனிதர் உடுத்திட வேண்டும்..
வாய்மை என்ற ஒன்றே
வாழ்வாய் மலர வேண்டும்
மத வெறி அற்ற பூமி
மண்ணில் மலர வேண்டும்
சாதிகளற்ற சமத்துவம்
பூமியில் வாய்க்க வேண்டும்

உயிர்களிடத்தில் அன்பு
உயர் கல்வி ஞானப் பெருக்கம்

தன்னிகரில்லா தனித்துவம்
தரணி முழுவதும் தமிழ்
வேண்டும் வேண்டும் இவையாவும்
விரைவு கொண்ட விடியல் வேண்டும்..

அடக்கம் செய்வோம் வன்முறை தனை
*********************************************
போதுமே இனி வன்முறை..
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடலாம்
தேங்கியகழிவுகளை..

பரந்து பட்ட பூமியிது..
அமைதி நாடுவோம் நனி…

வேண்டாமே போர்.
போதுமே கண்ணீர்…
அணையுமோ அனல் தகிக்கும் செந் நீர்.‌.

குருதியுண்ட வீச்சத்தின் நீச்சத்தில்
திணறுகிறது தேசத்தின் மூச்சு..

போதுமே வன்முறை…
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடலாம் இனி

வாழ்வென்பது பெரும் பேறு
வழக்கொழிந்து கிடக்கிறது சகமனிதர் பாடு

போதுமே வன்முறை.
அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திடுவோம்…
குப்பைகளை…

து.பா.பரமேஸ்வரி.
சென்னை…

மாற்றம் கவிதை- சக்தி ராணி

மாற்றம் கவிதை- சக்தி ராணி




மறைவாய் நின்றே…
எட்டிப்பார்க்கும் குழந்தையின்
ஏக்கம்…புரிவதில்லை…
கற்பனையும்…எதிர்பார்ப்பும்
கலந்த வாழ்வில்… ஏமாற்றம்
சந்திக்கும் தினசரி வாடிக்கையாளர்…
நான் என்றே…

கடைவீதியில்…வானுயர்ந்த கட்டிடம்…
குளிரூட்டப்பட்ட…அறைகளூடே
நகரும் படிக்கட்டுடைய…நிலையில்

நம் வாழ்க்கை இங்கே..
நகரப்போவதில்லை என்றே…பார்வையில்
பதில்கள் சொன்னாலும்..

பசிக்கும் பசிக்கு…விடை தெரியாமலும்
வியாபாரம் இல்லா வாழ்வில்…தன்
வாழ்க்கையை வியாபாரமாக்கி…அமர்ந்திருந்தே

விற்பனையாகும்… ஒன்றிரண்டு
ஆடைகளில்…ஒட்டாமல் எட்டிப் பார்க்கிறது
என்…வறுமை…

சாலையோரம் கடந்து செல்பவர்களும்…
சாலையிலே வாழ்வை நகர்த்துபவர்களையும்…அன்றாடம்
பார்க்கிறேன்…இயலா வாழ்வில்…
இயன்றதை செய்தே…
வாழ்வு நடத்தும் அருமையை…

நீளா பாதையில்…நீண்ட எண்ணங்களோடு
பயணிக்கிறேன்…மேற்பார்வை பார்க்கும்
கண்கள்… கொஞ்சம் கீழ் வசிக்கும்
எங்களையும் பார்த்து செல்லுங்கள்…

எங்கள் ஏக்கங்கள்…தீராத தீயாய்…
தொடர்ந்தாலும்… தீர்க்கும் மருந்தாய்…
இளைப்பாற வையுங்கள்…இன்றியே
ஏக்கம் குறைக்க ஏற்றி வையுங்கள்…
வளமை வாழ்வை கண்ணாரக்காண…

– சக்தி ராணி

உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி

உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி




“உழவுமாடுகளோடு
உதவாமலே
போன நிலங்களை
விளைநிலங்களாக
சமநிலைப் படுத்திக்கொண்டிருக்கிறார்
உணவுக் கடவுள் ”

“மாடுகள்
முன்னோக்கி
இழுத்துக்கொண்டு போக
பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்
பக்தன்
கைகளில்
கடவுளுக்கே
வழிகாட்டும்
மூக்கனாங்கயிற்றைப் பிடித்தவாறே ”

“பசியோடு
உலகத்தின்
உணவுகளையே
இழுத்துப் போகும்
மாடுகளின்
உணர்வுகளுக்காக
தானும்
பசியோடு நடக்கிறான்
பாய்மரப்
படகுகளைப்போல ”

“கொழ கொழச் சேற்றையெல்லாம்
புரதச் சத்து
உணவுகளாக
மாற்றிக்கொண்டிருக்கும்

உழுது வாழும்
மாடுகளும் உழவனும் ”

கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இந்தியாவை  உலகில் பசி-பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இந்தியாவை உலகில் பசி-பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




தமிழில்: ச.வீரமணி

அக்டோபர் 13 அன்று 2022ஆம் ஆண்டுக்கான உலகப் பசி-பட்டினி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், உலகில் பசி-பட்டினி நிறைந்த நாடுகளில் சென்ற ஆண்டு 101ஆவது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 107ஆவது இடத்திற்குச் சரிந்திருக்கிறது. இந்த அட்டவணையானது  மக்களின் பசி-பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மை நிலைமைகளைக் காட்டக்கூடிய ஒன்றாகும். இந்த அட்டவணையின்படி இந்தியா, அதன் அண்டை நாடுகளில் உள்ள மக்களின் நிலைமைகளை விட மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் உலகில் கீழ்நிலையில் உள்ள பல நாட்டு மக்களின் வாழ்நிலைமைகளைவிட இந்தியாவில் மக்களின் வாழ்நிலைமைகள் மோசமாக இருக்கின்றன. உலகப் பசி-பட்டினி அட்டவணையில், தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவைவிட மோசமாகவுள்ள ஒரேயொரு நாடு யுத்தத்தால் சின்னாபின்னமாகியுள்ள ஆப்கானிஸ்தானம் மட்டுமேயாகும்.

உலகில் மிகவும் அதிக அளவில் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியுள்ள நாடாகவும், உணவுப் பாதுகாப்பில்லாத மக்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை ஸ்தாபனத்தின் மதிப்பீடானது, இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் 22 கோடிக்கும் மேலான மக்கள் தொடர் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருப்பதாகவும், 62 கோடிக்கும் மேலான மக்கள் அரைப்பட்டினி நிலைக்கும் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. உலக அளவில் பார்த்தோமானால், உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் தொடர் பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள் மற்றும் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பசி-பட்டினி மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை நிலை ஏற்படக் காரணம் மோடி அரசாங்கத்தின் கேடுபயக்கும்  கொள்கைகளேயாகும். 2016இல் பணமதிப்பிழப்பு அறிவித்ததிலிருந்து 2020இல் கோவிட் பெருந்தொற்றின்போது சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட காலம் வரையிலும் மோடி அரசாங்கம், மக்களின் வாழ்வாதாரங்களின் மீது ஏற்படுத்திய கொடூரமான தாக்குதல்கள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவைகளாகும்.

மக்களின் துன்ப துயரங்களைச் சுட்டிக்காட்டி அறிக்கைகள் எதுவும் வெளிவருமானால், இந்தியாவின் சித்திரத்தைச் சீர்குலைப்பதற்காகவே இவ்வாறு அறிக்கைகள் வெளியாகியிருக்கிறது என்று கூறி, இந்த அரசாங்கம் உடனடியாக அதனை மறுப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. இப்போது ஐ.நா.மன்றத்தின் உலகப் பசி-பட்டினி அட்டவணை வெளியாகியுள்ள சமயத்திலும் அரசாங்கம் அதேபோன்றே செயல்பட்டிருக்கிறது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பின்மை மிக மோசமான அளவிற்குச் சென்றிருப்பதை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அதனைச் சரி செய்திட நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், அதனை ஏற்க மறுத்து, பசி-பட்டினி குறித்து “பிழையான கருத்து” என்று கூறியிருக்கிறது.

இந்தியாவில் வறுமையோ, பசி-பட்டினிக் கொடுமையோ இல்லை என்று உலகம் நம்ப வேண்டும் என்று பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் விரும்புகிறது. மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்தே, வறுமையை மதிப்பீடு செய்வதற்காக, அதிகாரபூர்வ வறுமைக்கோட்டை வரையறுக்கும் வேலையை கைவிட்டு விட்டது. மக்களின் உண்மையான வாழ்நிலைமை குறித்து தரவுகள் தயாரிக்கும் வேலையை கைவிட்டுவிட்டது அல்லது அவ்வாறு தரவுகள் தயாரிக்கப்பட்டாலும் அதனை வெளியிட அனுமதிப்பதில்லை.

நாட்டில் ஏழை மக்கள் படும் துன்ப துயரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டவரக் கூடாது என்பதற்காகவே மோடி அரசாங்கம் அதிகாரபூர்வ தரவுகளில் அனைத்துவிதமான தில்லுமுல்லு வேலைகளிலும் இறங்கி இருக்கிறது. உலக சுகாதார ஸ்தாபனம், இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 47 லட்சம் பேர் இறந்ததாக மதிப்பிட்டுள்ள அதே சமயத்தில், மோடி அரசாங்கமோ இவ்வாறு கணக்கெடுத்திருப்பது பிழையானது என்று கூறியிருக்கிறது. மாறாக, அரசின் மதிப்பீட்டின்படி இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைத்து அளிக்கப்பட்டது. சமீபத்தில் அரசாங்கம் அளித்த மாதிரி பதிவு முறை தரவு (Sample Registration System data), கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அநேகமாக அதீத இறப்புகள் இல்லை என்கிறது.

இதேபோன்றே, தொழிலாளர் தரப்பு ஆய்வறிக்கைகளும் (official periodic labour force surveys), கோவிட் சமூக முடக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும் வேலையின்மையில் உயர்வு இல்லை என்றே காட்டுகிறது. வறுமையை மதிப்பீடு செய்வதிலும் கூட, புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள பலபரிமாணங்கள் வறுமை அட்டவணை (Multidimensional Poverty Index) என்னும் புதிய அட்டவணை, இந்தியாவில் வறுமை நிலை முக்கியமற்ற நிலைக்கு (insignificant level) வீழ்ச்சியடைந்துவிட்டது என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், நாட்டிலுள்ள புள்ளிவிவர முறையே, அரசுக்காக பிரச்சாரம் செய்திடும் கருவியாக மாற்றப்பட்டுவிட்டது. நாடு ‘சொர்க்க பூமி’யாக விளங்குகிறது என்று காட்டுவதற்கு எதுவெல்லாம் ஆதாரமாக இருக்குமோ அது மட்டுமே அரசுத்தரப்பில் வெளியிடப்படுகிறது.

இந்தியாவில் வறுமை மற்றும் பசி-பட்டினிக் கொடுமை  தொடர்பாக மதிப்பிடும் மிகவும் முக்கியமான தரவு, தேசிய மாதிரி சர்வே அலுவலகம் நடத்திடும் தேசிய நுகர்வு செலவின ஆய்வுகளேயாகும். முன்னெப்போதும் இல்லாத விதத்தில் மோடி அரசாங்கம் 2017-18இல் இது தயாரித்த ஆய்வறிக்கையை வெளியிடாமல்  நிறுத்தி வைத்தது. அதன்பின்னர் நுகர்வு செலவினம் குறித்து ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவே இல்லை.

சமீப காலங்களில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியும் கோடிக்கணக்கான மக்களை வறுமை நிலைக்கும், உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கும் தள்ளியுள்ள நிலையில், பொது விநியோக முறையை விரிவுபடுத்த வேண்டும், அது மிகவும் முக்கியமாகும் என்பதை மோடி அரசாங்கம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், சென்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  அரசாங்கம் கிராமப்புற மக்களில் குறைந்தபட்சம் 75 விழுக்காட்டினருக்கும், நகர்ப்புற மக்களில் 50 விழுக்காட்டினருக்கும் மான்ய விலையில் உணவு தானியங்களை அளித்திட வேண்டும் என்பது அரசமைப்புச்சட்ட விதியாகும்.  சென்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு ஏற்கனவே 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்து 2021இல் எடுத்திருக்க வேண்டிய மக்கள் கணக்கெடுப்பு இன்னமும் தொடங்கப்படவே இல்லை. இவ்வாறு கணக்கெடுப்பு நடத்தாததால், 12 கோடி பேர் இச்சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படாமல் இருக்கின்றனர்.

நிலைமைகளை மேலும் மோசமாக்கும் விஷயம் என்னவென்றால், ஆதார் பதிவு செய்கிறோம் என்ற பெயரிலும், டிஜிடல் செய்கிறோம் என்ற பெயரிலும் 4.4 கோடிக்கும் மேலான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் இது மிகவும் தீவிரமாகச் செய்யப்பட்டிருக்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்படுவோர், 2011இல் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை நினைவுகூர்வது பயன் அளித்திடும். எனினும், ஏழை மக்களின் ரேஷன் கார்டுகள் மிகப் பெரிய அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய இடத்தில் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயர்களை ஆட்சியாளர்கள் சேர்த்துள்ளார்கள். இவ்வாறு சேர்க்கப்பட்டதற்கு எவ்விதமான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

கோவிட் நெருக்கடி ஏற்பட்ட சமயத்திலும்கூட, அரசாங்கம் தன்னுடைய கையிருப்பில் 10 கோடி டன்களுக்கும் மேலான உணவு தானியங்களை இருப்பு வைத்திருந்த போதிலும் கூட, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இருந்து வந்த பயனாளர்களுக்கு மட்டுமே உணவு தான்யங்களை விநியோகம் செய்தது. பொருளாதார நெருக்கடியால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட,  பல லட்சக்கணக்கான மக்களுக்கு மான்ய விலையில் உணவு தானியங்களை அளித்திடுவதற்கான முயற்சி எதையும் எடுத்திடவில்லை. பொது விநியோக முறையை நாடு முழுவதற்கும் அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திரும்பத் திரும்பக் கோரி வந்தது. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் பல லட்சம் பேர்களாக அதிகரித்த நிலையில் இது அவசியம் தேவைப்பட்டது.  ஆயினும் உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழிந்த உணவு தானியங்களைப் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திறந்த விடாமல், பொது விநியோக முறையை விரிவுபடுத்தாமல், ‘ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு’ என்னும் திட்டத்தைக் கொண்டுவருவோம் என்று கூறிக்கொண்டிருந்தது.

சமீப ஆண்டுகளில்  உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரித்து, உயர் பணவீக்கம் ஏற்பட்டிருப்பதால், உணவுப் பாதுகாப்பின்மையும், பசி-பட்டினி நிலைமையும் அதிகரித்திருக்கின்றன. 2022இல் பல மாதங்களில் இதே கால கட்டத்தில் சென்ற 2021இல் இருந்த விலைவாசிகளை விட உணவுப் பொருள்களின் விலைகள் 7-9 விழுக்காடு அதிகரித்திருந்தன. இந்தக் காலகட்டத்தில் மோடி அரசாங்கம் எரிபொருள் மீது கடுமையாக வரி விதித்தது. இவ்வாறு எரிபொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால்தான் உணவு உட்பட அனைத்தின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன. மேலும் ஒன்றிய அரசாங்கம் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலமாக சாமானிய மக்கள் மீதும், சிறிய உற்பத்தியாளர்கள் மீதும் வரிச் சுமையைக் கடுமையாக ஏற்றி இருக்கிறது. இவ்வாறு வசூலிக்கும் ஜிஎஸ்டி வரிகளில் நியாயமாக மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய பங்கையும் அளிப்பதில்லை. பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை அளிப்பதுடன் அவற்றின் கடன்களையும் தள்ளுபடி செய்யும் அதே சமயத்தில், சாமானிய மக்கள், அவர்கள் வாங்கும் பொருள்கள் மீதும் வரி விதிக்கிறது.  பொருளாதாரத் தாராளமயத்தின் காரணமாக உரங்கள், சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள் முதலியனவற்றிற்கு இறக்குமதியையே அதிகம் சார்ந்திருப்பதால், சமீப ஆண்டுகளில் இந்தப் பொருள்களின் விலைகள் உலக அளவிலான பண வீக்கத்திற்குக் காரணமாக அமைந்தன.

புள்ளி விவரங்களைக் காட்டி நாட்டின் உழைக்கும் மக்களை முட்டாள்களாக்கிட முடியாது. இந்த அரசாங்கத்தின் கேடுபயக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களை எப்போதும் மக்கள் மறக்கமாட்டார்கள். வேலையின்மை, வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை இன்றைய தினம் எரியும் பிரச்சனைகளாக மாறி இருக்கின்றன. இத்தகைய மக்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களுக்கு இந்த அரசாங்கத்தைப் பதில் சொல்ல வைத்திடுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் நாட்டிலுள்ள அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது மக்களை அணிதிரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டிருக்கிறது.

(அக்டோபர் 19, 2022)
நன்றி: ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’

நூல் அறிமுகம் : அல்லி உதயனின் ’அரண்’ நாவல் – தங்கேஸ்

நூல் அறிமுகம் : அல்லி உதயனின் ’அரண்’ நாவல் – தங்கேஸ்




நூல் : அரண் 
ஆசிரியர் : அல்லி உதயன்
விலை : ரூ. 150.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

தேனி மாவட்டத்தில் தமுஎகசவை கட்டி எழுப்பிய முன்னத்தி ஏர்களில் ஒருவரும் ,,  நாற்பது ஆண்டு காலமாக தனது செம்மையான  எழுத்துக்களால்   , சமான்யர்களை கதை மாந்தர்களாக்கி  இலக்கியத்தில் அவர்களை  உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் அரிய படைப்பாளியுமாகிய   தோழர் அல்லி உதயன் அவர்கள்  இந்த முறை  தனது ‘’ அரண்  ‘’என்ற அற்புதமான நாவலோடு வாசகர்களை சந்திக்க வந்திருக்கிறார்.

பாரதி புத்தகாலயத்தால்  வெளியிடப்பட்டுள்ள இந் நாவல் மொத்தம் 159 பக்கங்கள் கொண்டது. விலை ரூ 150/. ஆகும். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர்  க. பாலபாரதி அவர்கள் இதற்கு ஒரு உணர்வு பூர்வமான உயர்தரமான முன்னுரை அளித்திருக்கிறார்., 

அந்த முன்னுரையை வாசிக்கும் போதே அவர் இந்த நாவலை எவ்வளவு தூரம் இரசித்து  இரசித்து வாசித்திருக்கிறார் என்பது புரிய  வருகிறது.

நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் போது நமது மனநிலையும் அவ்வாறு தான் உள்ளது  என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இலக்கியம் அழகியலோடு இணைந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம்  கட்டுடைத்து  எளிமையையே உண்மையின் சாரத்தில் அழகாக்க முடியும் என்று  இந்த நாவலில்  நாவலாசிரியர் நிருபித்திருப்பதாக  தோழர்   பாலபாரதி அவர்கள் பாராட்டியிருப்பதும் மிகையல்ல  என்பதை நீங்கள் இந்த  நூ​லை வாசிக்க வாசிக்க புரிந்து கொள்ள முடியும்..

அடக்கு முறைக்கு எதிராக பஞ்சாலைத் தொழிலாளர்கள் தாங்களாகவே ஒன்று திரண்டு நடத்தும் தற்காப்பு போராட்டத்தின் வரலாறு தான். இந்த நாவலின் மையம்.ஆகு.ம்.

தங்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு தொழிற் சங்கம் அமைத்துக் கொள்ளவும் பல ஆண்டு காலம் வழங்கப்படாத ஊதிய உயர்வும் கோரிய தொழிலாளர்கள்  முதலாளியால் அலட்சியம் செய்யப்படுகிறார்கள். 

உரத்துக் கேட்டவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அல்லது கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். அப்படி படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவன் தான் கூலித்தொழிலாளியான முத்து மாடத்தியின் கணவனான வடிவேல்

 வைரவன் முதலாளியை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக படுகொலை செய்யப்படுகிறான். 

அவனது இரு நூறு ரூபாய் மதிப்புள்ள கைக் கடிகாரத்திற்காக அவன் கொலை செய்யப்பட்டான் என்று மக்கள் காரணம் சொல்கிறார்கள். 

ஆனால் முத்து மாடத்திக்கு மட்டும் உண்மை என்னவென்று தெரியம். முதலாளியின் அதிகாரம்  தான் அவளது கணவனின் உயிரை  பறித்ததென்று . 

ஆனால் முதலாளித்துவத்தின் அதிகாரம் தான் தொழிலாளி வர்கத்தின் உரிமையையும்  உயிரையும் எப்போதும் பறிக்கும் உயிர்க்கொல்லி என்று அவள் புரிந்து கொள்வதற்கு போதிய காலம் தேவைப்படுகின்றது 

அந்தக் காலம்  அவளுக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர்  ஊருகாலன் பொட்டலில் பஞ்சு மில் தொழிலாளர்களின் ஒன்று திரட்ட போராட்டத்திம் மூலம் கனிந்து வருகிறது. முதலாளிகள் தொழிலாளியைக் கொல்வது  என்ற பார்வை அகன்று முதலாளித்துவம்  தொழிலாளி வர்க்கத்தை கபளீகரம் செய்யும் சூட்சமம் அங்கே புலப்படுகிறது.. உழைப்பாழியை ஒதுக்கி விட்டு அவர்களது உழைப்பை மட்டும் ஸ்ட்ரா போட்டும் உறிஞ்சும் ஒரு மூன்றாந்தரத் சித்தாந்தம் தான் முதலாளித்துவம் என்பது புரியவருகிறது.

சித்தாந்தத்தால் சித்தாந்தத்தை எதிர்த்து வெற்றி பெறுவது எப்படி என்று  தொழிற் சங்கத் தோழர்கள் பாடம் கற்பிக்கிறார்கள். மிகக் குறைந்த காலத்திலேயே முத்து மாடத்தி தீரமிக்க போராளியாக உருவெடுக்கிறாள். அதாவது வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்தும் அளவிற்கு. 

முன்னூறு பேர்களுக்கும் குறையாத கூட்டத்திற்கு தினமும் உணவு  சமைத்துப் போடும் வேலையை போராட்டத்தின் வடிவமாகமும் கைக்கொள்ளுகிறாள். 

அதன் தொடர்ச்சியாக பல தலைவைர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலும் சித்திக்க ஆகச் சிறந்த பெண் தலைமையாக முத்து மாடத்தி தன்னை வளர்துக் கொள்கிறாள். 

நான்கு  பேர்களுக்கு முன்னால் நன்றி சொல்வதற்கே நடு நடுங்கியவள் இப்போது  பெரிய பெரிய தலைவர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் இரண்டாயிரம் தொழிலாளர்களுக்கு மத்தியில் மைக்கில் தங்கு தடையின்றி தொழிற்சங்க உரையாற்றுகிறாள். 

எல்லாம் கனவு போல இருக்கிறது ஆனால் கற்றுக் கொள்பவர்களுக்கு காலம் கற்றுக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது.என்பது தான் எத்தனை உண்மை..

தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்ட பின்  மில் நிர்வாகம் தன் பிடிவாதத்தை விட்டு கீழே இறங்கி வருகிறது. அவர்களின்  கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறது.

போராட்டம் வெற்றி பெற்ற பின் தொழிலாளர்கள் முத்து மாடத்தியின் மகள் தனத்திற்கும் முத்துக்கண்ணணுக்கும் திருமணத்தை தாங்களே முன்னின்று நடத்துகிறார்கள்..

மதுரையிலிருந்து தலைவர் ஜோதி ராமுடன் பெருந்தலைவர் வாசுதேவனும் வந்து வாழ்த்துகிறார்.

‘’ அட்சய பாத்திரம்   நவீன மணிமேகலைஎங்கள் அன்னை  எங்கள் பசி தீர்த்து எங்களைக் காத்து போராட்டத்தை வென்றெடுத்த எங்கள் குலதெயவ்ம் தோழர் முத்து மாடத்தி வாழ்க வாழ்கவென்று கூட்டம் உணர்ச்சி சுழிப்பில் உற்சாகமாய கத்துகிறது..

முத்து மாடத்தி வெற்றி பெற்ற பெண் தோழராக மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறார்.

நாவலாசிரியரின் நோக்கமும் அது தான் என்று புரிகிறது.

நாவலாசிரியரை நாம் பாராட்டுவதற்கு பல காரணங்கள் இந்த நாவலில் காணக்கிடைக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானவைகள் என்றால் 

பெண்களை வையத் தலைமை கொள்ள வைக்கும் பாரதியின் கனவை இதில் நனவாக்கியிருப்பது. தான் முக்கியமானதாகும். இந்த நாவல் முழுவதையும் நாம் வாசிக்கும் போது மனதில் நிறைவாக நிற்பவர்கள் பெண்கள் தான். முத்து மாடத்தி நாகவல்லி சுப்பக்காள் என்ற பாத்திரங்கள் ஆளுமை கொண்டவைகளாக இருக்கின்றன.

அடுத்ததாக சமான்யர்களின் சரித்திரத்தை பேசும் நாவல் என்று கூட இதைச் சொல்லலாம். கூலித் தொழிலாளிகள் பஞ்சாலைத்தொழிலாளிகள்  விவசாயக்கூலிகள் லோடுமேன்கள் என எங்கு பார்த்தாலும் எளிய மனிதர்களே இந்த நாவலில் காணக்கிடைக்கிறார்கள்.. அவர்களின் கோபமும் தாபமும் நேசமும் மனிதாபிமானமும் வர்க்கப்புரிதல்களும் பேச்சுக்களும் ஏடாசிகளும்  மண்மணத்தோடு வாசிப்பாளர்களை திகைக்க வைக்கின்றன.

ரெங்கண்ணன் , அறிவண்ணன் , மொக்க ராசு ,நாகவள்ளி ,சுப்பக்கா முத்துக்கண்ணன்,  செண்பக பாண்டியன், ராசம்மா , வேலுத்தம்பி மலைச்சாமி ,ராவுத்தரம்மா ,சின்னச்சாமி ,முத்துச்சாமி,  கேரளபுத்திரன் என்று இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எளிய மொழி நடை இந்த நாவலின் இன்னொரு சிறப்பம்சமாகும்

கதை மாந்தர்கள் தேனி மாவட்டத்தின் வட்டார வழக்கான எளிய மொழியையே எங்கேயும் பேசுசிறார்கள். நாவலாசிரியர் மொழியை எளிய பாத்திரங்களின் வழியாக பேசவைக்கும் போது கூடுதல் அடர்த்தியும் மண்வாசமும் உடன் வந்து இணைந்து கொள்கின்றன.

’எம் பொண்ணு மக்கா உங்க பசியமர்த்துறதுதே எங் கொடுப்பினை .ஒங்க பாட்டுக்குச் சீசுவான்னு பார்க்குறதைப் பாருங்க சாமிகளா ‘’ என்று முத்து மாடத்தி ஆரம்பித்து வைக்கும் வட்டார வழக்கு மொழி நாவல் முழுவதும் தங்கு தடையின்றி பயணிக்கிறது.

**  இது லேசில்ல முத்து மாடத்தி தலைமை ஆபிஸிலிருந்து வந்திருந்த ஆங்கர் சொன்னார்

‘’ தொழிற் சங்க போராட்டங்கள்ளல இதெல்லாம் பழகிப்போச்சு

அல்லாரும் மதியக்கஞசிய அலுமினியம் ஈயம்னு தூக்குச்சட்டியில தான் கொண்டாருவாங்க ….அதப்பிடிச்சிக்கிட்டு சாயந்திருங்கள்ல ஊர்வலமாப் போனாக …அப்ப நிதே இதுக்குத் தலமயான்னு வழிமறிச்சு தாக்குனாய்ங்க..’’

என்று முக்கியமான பாத்திரங்கள் பேசுவதாகட்டும் .தேனி வட்டார வழக்கு  மொழி மிகச் செழுமையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எதார்த்த வாதம்  இதன் மகுடம் என்று சொல்லலாம்

எந்த இடத்திலும் ஆசிரியர் எதார்த்தத்திற்கு புறம்பான பகட்டான மொழியையோ மனிதர்களையோ படைத்துக்காட்டவேயில்லை. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சோ வென்று பெய்யும் அடைமழையைப்போல கதை நிகழ்வதும் பாத்திரங்கள் பேசுவதும் நாமும் இந்தக் கதை மாந்தர்களோடே வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது.

போராட்டத்தின் வடிவமும் உண்மையான தோழர்களின் பங்கேற்பும்

இந்த நாவலை உண்மையாக கண்முன் நிறுத்துகின்றன.

நியாயமான கோரிக்கைகளுக்காக அனுபவமிக்க அர்ப்பணிப்புள்ள தொழிற்சங்க தலைவர்களின் சீரிய தலைமையின் கீழ்  தொழிலாளத் தோழர்கள் முன்னெடுக்கும் நியாயமனான போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெறுகின்றன.

முதலாளித்துவம் தனது அத்தனை மூர்க்கத்தையும் முயன்று பார்த்து விட்டு கடைசியில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சமரசத்திற்கு இறங்கி வருவது..ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த வர்க்கப் போராட்டம் மகத்தான தலைவர்களையும் மகத்தான தோழர்களையும் இந்த மண்ணில் உருவாக்கி விட்டே மறைந்து போகிறது.

வாழ்ந்த தோழர்கள் நிஜப் பாத்திரங்களாகவே இந்நாவலில் பங்கெடுத்திருப்பது இதன் கூடுதல் சிறப்பு. .இந்த உத்தியை சிறப்பாக கைக்கொண்டதற்காக நாம் ஆசிரியரைப் பாராட்ட வேண்டும்.

மறைந்த மதுரைத் தோழர் ஜோதிராம் மற்றும் ராஜப்பா வெங்கடேசன் , ரேபேக்கா  ,கோமதி மற்றும் பெருந்தலைவர் வாசுதேவன் ஆகியோர் இப்பாத்திரங்களில் நிஜமாகவே நம் கண்முன்னால் நடமாடுவது நமக்கு அற்புதமான அனுபவத்தை தருகிறது.

தேனி மாவட்டத்தின் கடைவீதிகளும் ஊருகாலன் பொட்டலும் கொட்டக்குடி ஆறும் சந்தையும் வாழ்க்கையை குறை சொல்லாமல் வாழ்ந்து பார்க்கும் எளிய மனிதர்களும் நாவலை வேறு ஒரு உயர்ந்த தளத்திற்கு உயர்த்திச் செல்கின்றனர். என்பது உண்மை.

திரைப்படமாக எடுப்பதற்கு உகந்த நாவல் இது.

இந்த நாவல் திரைக்கதை அமைப்பதற்கும் திரைப்படமாக எடுக்கப்படுவதற்கும் உரிய அத்தனை கூறுகளோடும் உள்ளது. .நல்ல திரைக்கலைஞர்கள் இந்த நாவலை வாசித்தால் நிச்சயமாக இந்தப்படைப்பை திரையாக்கம் செய்ய முடியும் என்பதே என் கணிப்பு.

சுடு மண்ணில் விழுந்த மழைத்துளி நம் கண்முன்னரே ஆவியாகி மேலே செல்வதைப்போல அவர்களின் வாழ்க்கை நம் கண்முன்னர் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. 

இந்த அனுபவங்கள் எல்லாம் இன்று நாவல் எழுத வரும் இளம் படைப்பாளிகளுக்கு மகத்தான பாடங்களாகும்

மகத்தான படைப்புகளின் சாரம் வாழ்க்கையின் அனுபவம் தான் என்பது நம் கண்முன்னர் விரிந்து கொண்டே செல்கிறது. இப்படி ஆழ்ந்து அனுபவிக்க அதிசயிக்க எத்தனையோ சிறப்பம்சங்கள் இதில் இருந்தாலும் போதுமான  நியாயமான விமர்சனங்களை  இந்த நாவலின் மீது வைப்பது வாசகர்களாகிய  நமது கடைமையாக இருக்கிறது.

முதலாவதாக முத்து மாடத்தியை தவிர மற்ற அனைத்து பாத்திரங்களும்  நம் மனதில் அழுத்தமாகப் பதியவில்லை என்பது தான் கொஞ்சம் கசப்பான உண்மை

 முத்து மாடத்திக்கு அடுத்து ஒரளவாவது நம் மனதில் அழுத்தம் திருத்தமாக பதிவது சுப்பக்காள் பாத்திரம்தான். ஏனையோர்கள் செய்தி சொல்வோர்களாக கதையை நகர்த்திச் செல்வோர்களாக மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். என்று சொல்ல வேண்டும்

மிகப் பிரமாண்டமான சமூக நாவலாக  வளர்ந்திருக்க வேண்டிய இந்த நாவல்  சமூக பொருளாதார வரலாற்றுக் காலகட்டங்களை ஆலமரமாக கிளை பரப்பி பேசாமல் முத்து மாடத்தியை மட்டுமே சுற்றியே  பின்னப்பட்டு  பயணிப்பதால் ஒரு நெடுங்கதை போலத் தோற்றம் தருகிறது.

போராட்டத்தின் ஆரம்பமே பஞ்சு மில்லில்  சங்கம் வைக்க அனுமதியும் ஊதிய உயர்வு கோருதலும் தான் என்றால் அதற்கான காரணங்கள் அழுத்தம் திருத்தமாக உள்ளே கூறப்படவில்லை. 

ஒரு நியாயமான போராட்டத்திற்கு அத்தனை இடர்களையும் தாண்டி ஒரு ஊரே ஒத்துழைப்பு தருகிறது என்பதை அழகாக சித்தரித்துச் செல்கிறது நாவல். இந்த நாவலை வாசிக்கும் நாமும் இந்தப் போராட்டதில் மறைமுகமாக பங்கு பெறுகிறோம். .போராட்டம் இறுதியில் வெற்றி பெற வேண்டுமென்று மனதார ஆசைப்படுகிறோம். அது படைப்பாளியின் படைப்பின் மேன்மையை பறை சாற்றுவதாக உள்ளது.

.ஊருகாலப் பொட்டலிலும் பந்தல் மேடைகளிலும் தேனியின் வீதிகளிலும் கதை மாந்தர்களோடு உடன் பயணிக்கிறோம். இவை அனைத்தும் நாவலாசிரியரின் கருத்தாழமிக்க கை வண்ணத்திற்கு கிடைத்த வெற்றியாகும்

கட்டுக்கடங்காத காட்டாறு என்பது  கங்கு கரை காணாது பொங்கும் புதுப்புனலோடு  எண்ணற்ற உயிர்களோடும் உயிரற்றவைகளோடும் பொருட்களோடும் கடலை நோக்கிய செல்லும் ஒரு அதிசயப் பயணம் என்றால் ஒரு அற்புதமான நாவலும் அவ்விதமே. என்று சொல்ல வேண்டும்.

 வாழ்க்கை என்பது கூட ஒரு  காட்டாறு தான். இந்தச் சமூகத்தின்  அத்தனை கூறுகளையும் தன்னுள் பொதித்துக் கொண்டு காலமென்னும் கடலில் முன்னேறிச் செல்லும் காட்டாறு தான் அது. 

எண்ணற்ற கிளை நதிகள் அதற்குள் வந்து கலக்க வேண்டும். நொங்கும் நுரையோடும் .படித்துறை தோறும் பயணித்து பலப் பல  பெயர்களோடு ம்அது கடலில் போய் கலக்கும்  போது ஒரு நிறைவு ஏற்படுகிறது.

இந்த நாவலும் கூட அப்படி ஒரு பயணத்தை தான் துவக்கியிருக்கிறது. அது கடலைச் சென்றடைவதற்கு இன்னும் பலகாத   தூரம் பயணிக்க வேண்டுமென்றாலும் அது அதன் பயணத்தை துவக்கி விட்டது என்பதை அறிந்து மனதார வாழ்த்தி வரவேற்போம்.

அல்லி உதயன் தோழருக்கு 

அன்புடன்
தங்கேஸ்
தமுஎகச
தேனிமாவட்டம்

மு. தனஞ்செழியனின் கவிதைகள்

மு. தனஞ்செழியனின் கவிதைகள்




கவிதைகள் என்பார்கள்

அறுபட்ட கழுத்துடன்
இருக்கும்
ஒரு பட்டாம்பூச்சிக்கு
நத்தையின் ஓடு
முளைக்கிறது
அது
நகர்ந்து கொண்டாவது
வாழும் என.

**********
சொர்க்கத்தைப்
பற்றி
கவலையில்லை இனி
நரகத்தை
பற்றியும் தான்.
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அதற்கு மேல் என்ன.

********
ஒரு பறவைக்குப் பசி
அதன் சிறகுகள் உடைந்திருக்கின்றன
நீங்கள் எறியும்
நெல்மணி
அதன் பசிக்கு
தூரமாய் உள்ளது.

*******
தீ நிறத்தில்
ஒரு பழம்.
ஒரு பறவைஅதைக் கொத்திவிட
அதன் அலகு
தீப் பற்றியது.

********
சுடுகாட்டில்
ஒரு வீணை.
யாரோ இசைக்கிறார்கள்.
எல்லாத் திசைப் பக்கமும்
தேடிப் பார்த்தேன்
பூக்கள் உதிர்ந்திருந்த
கல்லறையின்
கீழிருந்து
அதிர்ந்துக்கொண்டிருந்தது.
தோண்டிப் பார்த்தேன்
நரம்புகள்
அறுந்து போன
ஒரு வீணை
புதைந்து
கிடந்தது.

*********
பறவை ஆவதெல்லாம்
அவ்வளவு சுலபமில்லை
அதற்கு,
ஒரு வானமும்,
ஒரு வேடனும் வேண்டும்.

– மு தனஞ்செழியன்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




குற்றம் கூறாதீர் அவளை..
*******************************
எப்போதும் எவரிடத்தும் கையேந்தும்..
அவளைக் குற்றவாளியாகக் கூற வேணாம்..
அர்த்தநாரி அவள்..
ஆடவர் கூட்டத்திலும் ஆணாக முடியாது..
தங்கையர் நடுவிலும் நிலைத்திருக்க இயலாது..

அவள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய வேணாம்
சமூகத்தின் உதாசீனத்தில் கண்ணீர் விடாது கலந்து வாழ்பவள் அவள்..
ஆணாதிக்க அசூயத்தில் தகவமைத்துக் கொள்பவள் அவள்..

அவள் பொருட்டும் பழி கூற வேணாம்.
பிழைப்புக்கு வழியில்லை
உழைப்பு வழங்கவும் மனிதர் இல்லை..
பணியுண்டு அது அவளுக்கில்லை..
பிறப்பின் பிணியுண்டு
அதில் அவளுக்குப் பங்குமில்லை..

கையேந்திக் கரம் நீட்டும் அவளை
ஒருபோதும் புறக்கணிக்க வேணாம்.
பசியுண்டு அவளுக்கும்..
மானமுண்டு அவள் வாழ்விற்கும்..
உரிமையுண்டு இந்தக்‌ காணிநிலமெங்கும்

இனி..
கையேந்தி சிரம் மீது கரம் வைக்கும்
அவளை வசைபாடிக் குற்றம் கூறாதீர்!!

கதையல்ல நிஜம்
************************
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்
அவளது குலுங்கும் சிரிப்பின் மௌன மொழி..
குமுறும் அடிவயிற்றின் ஆற்றவியலா வெறுப்பின் வலி..

அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்
பெற்ற பிள்ளையதன் பசியமர்த்த
மனதின் பாரத்தை மறைத்து
வலிய ஏற்கும் உடல் மீதான வன்மபாரமது.
சுகமல்ல..
அது ஒரு சுமை..

வயோதிக பெற்றோர்க்கு மருந்தாக வேண்டி
அரக்கர் கூட்டத்திற்கு விருந்தாகும் ..
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்..

முடமான குடும்பத்திற்கு
நான்கு கரமாக உருமாறும் அவளை
கரையான் கூட்டம் களித்து அரித்திட
தன்னை விரும்பியே வழங்கி நிற்கும்
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்..

இறப்பென்பது ஒருமுறையே நமக்கு..
அவளுக்கோ..
ஒவ்வோர் இரவும் மரணித்து
மீண்டு..
மீண்டும் ஒவ்வோர் விடியலிலும் மறுபிறவியெடுக்கும்..
அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்..

அவளுடன் சமரசம் செய்யாவிடிலும்
பரவாயில்லை
சக மனுஷியாகக் கருதாமல்

நொறுக்காதீர்கள் அவளை.
ஆம்..
அவளை ஒருபோதும் ஒன்றுமே சொல்லாதீர்கள்..

து.பா.பரமேஸ்வரி
சென்னை.

அக அரசு கவிதைகள்

அக அரசு கவிதைகள்




1.
தம் பிள்ளைகளின்
வயிற்றுப் பசியையோ
தான் பட்ட பாட்டைப்
பிள்ளைகள் பட்டுவிடாமல்
படித்து மேல வந்துவிட
அடி வயிற்றில் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த
நீண்ட கால ஏப்பத்தை பெரு மகிழ்வுடன்
வெளியேற்றி விடுகிறாள் தாய்
வேப்பங்கொட்டை பொறுக்கியாவது…

2.
சாலையிலிருந்து லாவகமாக
வானத்தைத் தொடும் வித்தையறிந்த
அசுர மனித மனம் படைத்தோர்
அதி விரைவான வாகனத்தில் கடக்கும் போது உரசியதில்
சிதைந்த நாயை அடக்கம் செய்ய
எங்கிருந்தோ வர வேண்டியுள்ளது ஒரு மனிதப் புனிதம்,
கண்களை மூடிக் கொள்வோம்
கடந்து செல்வோரெல்லாம்…

3.
ஓசியில் வாங்கி
நெருக்கடி நெருக்கிக் கொண்டிருந்த
போதிலும்
எத்தனையோ முறை
அலைபேசியை வைத்து விடட்டுமானு கூறிக்கிட்டே நானும் எம்மகளும்
அன்பில் கண்ணைக் கழுவிக் கொண்டிருந்ததில்,
அணைந்துதான் போனது
அலைபேசி…
அலையலையாய்
தன் நினைவு உள்ள வரை
உயரும் உன் நினைவு!

4.
சேர்த்துப் பார்த்துக் கட்டியபோது
கிடைத்த கொஞ்சம் பரவசத்தையும் மிஞ்சும்
பந்தாவையும்
பக்கத்தில்
நின்று பல தோரணைகளில்
தீட்டியதும் உணர்ந்த உற்சாகத்தையும்
நானெனப் பிளந்த ஆணவத்தையும்
நறுக்கெனக் கிள்ளி
மகிழ்ச்சியில் உச்சிதனை முகர வைக்கும்
குழந்தைகளின்
சிறுகையால் அளாவி தூவிய
வண்ணச்சாயம்!

5.
மற்ற நாட்டின் வளர்ச்சிக்காக
எண்ணிலடங்கா
காந்தி தாள்களை
கொட்டிக் கொடுக்க வண்ண
விளக்கிலான
நவீன விமானத்தில்
செல்பவரைக் கண்டு
பளிச்சொளி முகத்துடன்
கை கொட்டி மத்தாப்பாய் சிரிக்கிறாள் சிறுமி
சீமண்ணெய் விளக்கு அணைந்தது கூட தெரியாமல்!

6.
சாலையில் பயணிப்பவர்கள்
மீதுள்ள எல்லையில்லா
அரவணைப்பினாலோ
அல்லது ஆர்வக்கோளாறிலோ
வேக வேகமாக
ஊஞ்சல் போல் சாலையையும் சேர்த்து
ஆட்டிவிடுகிறது
ஜுலைக்_காற்று…

–அக அரசு

பகல்வேட்டை கவிதை – புதியமாதவி

பகல்வேட்டை கவிதை – புதியமாதவி




பகல்வேட்டை
****************
என் வனம் உன் ராஜாங்கம் அல்ல.
பூத்துக்குலுங்குவதும்
பூமியதிர பொருமுவதும்
அருவியின் ஆர்ப்பரிப்பும்
காட்டாற்று வெள்ளமும்
உன் கட்டுப்பாட்டுக்குள் வராது.
வனத்தில் புலிகள் உண்டு.
காட்டுப்பன்றிகள் உண்டு.
நரிகளும் உண்டு.
வேட்டையாட வந்தவன் நீ.
புலியாக வா
உன் ஓவ்வொரு பார்வையும்
பாய்ச்சலாய் இருக்கட்டும்.
உன் கூரிய நகங்களால்
வேட்டையாடு.
தொங்கும் தசைகள் கிழித்து
புசி.
அப்போதும் பசி அடங்கவில்லையா
என் கருப்பைக் கிழித்து
கனவுகள் எடுத்து வீசு.
பாறையில் கசியும் ரத்தம்
பருகியது போக மீதியைத் தொட்டு
உன் மேனி எங்கும் பூசிக்கொள்.
மறந்துவிடாதே
வனத்தின் யட்சி
விழித்துக்கொள்ளும்
இரவு வருவதற்குள் புறப்பட்டு விடு.
பகல்வேட்டை பகற்கனவு.

-புதியமாதவி