என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி

என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி




எரித்தாயா புதைத்தாயா
என்ன செய்து என்னைத் தொலைத்தாய்?
எரிக்கும்போது
தீயின் நாக்குகளில்
பட்டுத்தெறித்த முத்தங்களை
என்ன செய்தாய்?
புதைத்த மண்ணில்
பூத்த பூக்களை விட்டுவிடு.
அந்த வாசனையில்
வாழட்டும்
தீண்டாமையின் காமம்.
என்ன செய்தாய் என்னை?
நீச்சல் பழகிய ஆற்றுவெள்ளத்தில்
மூச்சுத்திணறிய விடுதலை.
இறுகப்பற்றிய விரல்களின்
தீராத பசி.
பார்த்துக்கொண்டிருந்த
ஆற்றங்கரைப் படிக்கட்டுகளில்
இப்போதும்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
பச்சை மஞ்சளின் நிறம்.
ஹே சென்னிமல்லிகார்ஜூனா..
என்ன செய்தாய் ?
என்ன செய்து
என்னைத் தொலைத்தாய்!

– புதியமாதவி

Marathi Kavithai By Dharmasingh. மறதி கவிதை - ஐ. தர்மசிங்

மறதி கவிதை – ஐ. தர்மசிங்

“ஆகாயத்தின் அடிவாரத்தில் ஊஞ்சல் கட்டி
அனைவரையும் ஆனந்தமாக ஆடவிடுவோம்

அலைகளின் மேலே
நடை பழகும் வித்தையை
கண்டிப்பாகக் கற்றுத் தருவோம்

காற்றிலும் பறந்து மகிழ
வினோதமான சிறகுகளை
விலை குறைவாக வழங்குவோம்

பசி போக்கும் மாத்திரைகளை
இலவசமாக
வீடுகளிலேயே விநியோகிப்போம்

நகரும் வீடுகளை உருவாக்கி
எங்கேயும் வசிக்கும் உரிமையை
சட்ட வடிவமாக்குவோம்

ஒளியினைச் சேகரித்து
இருளில்லாப் பாதைகளில்
பயமின்றி உலவச் செய்வோம்

கார் மேகங்களைக் கட்டிப்போட்டு
ஒளிந்திருக்கும் மழைத்துளிகளை
அவிழ்த்து விடுவோம்”

இப்படித்தான்
முன்பும் சொன்னார்கள்
இப்போதும் சொல்கிறார்கள்
எப்போதும் சொல்வார்கள்

அவர்களுக்கு துல்லியமாகத் தெரியும்
எத்தனைமுறை ஏமாந்து போனாலும்
கரவொலிகளோடு
நாம்
காத்திருக்கும் இரகசியம்

நமது இரகசியமே
அவர்களின் முதலீடு

அவர்களின் முதலீடு
என்பது
நமது மறதி…

Thanmunai kavithaigal By Karkavi. தன்முனைக் கவிதைகள் - கார்கவி

தன்முனைக் கவிதைகள் – கார்கவி

மனிதனும் மண்ணும்
**************************
நீர் குழைத்த சேற்றில்
ஈரமானது வாழ்க்கை
ஏற்றத்திற்கு ஐம்பதும்
இறக்கத்திற்கு ஐம்பதும் ஆனது

ஈரமான மண்ணில்
ஓங்கி நிற்கும் கட்டிடங்கள்
கூரை மேய்ந்தவன் அவனே
தாரை ஊற்றியவன் அவனே

களத்து மேட்டு நெல்லி்ல்
பசியும் பட்டினியும்
பசுமையோடு உலவி வரும்
பச்சையம் நிறைந்த காற்று

நீர் பாய்ச்சிய மண்ணில்
பரிணாமம் விளைகிறது
பட்டினிகளில் கரங்களுக்கு
பெய்கிறது பசுமை மழை

உடலோடு ஒட்டிய மண்ணில்
உழைப்பு படிகிறது
இரத்தம் வடிதலும்
யுத்தம் பிறப்பதும் இயல்பாகிறது.

நம்பிக்கை
*************
பரிகாரங்களை முடித்த
பாவமான ஆண்மகன்
பக்கத்தில் அமர்கிறாள்
ஒரே நட்சத்திர பெண்மணி

கழுத்தில் மாலையிட்டு
தொட்டு தொட்டு பார்க்கிறான்
நவக்கிரகங்கள் தான்
இடை மறித்து நிற்கின்றன

அவனும் அவளும்
அருகருகே அமர்வு
அந்த செவ்வாய்
திரும்பினால் திருமணம்

நெடுந்தூரம் வேண்டி
கால் கடுக்க பயணம்
காதலித்திருந்தாள் அந்த
மைல்கள் அருகிலோ

உறவுகள் நினைத்திருந்தால்
நீ உற்று உற்று
கும்பிட வேண்டாம்
ஊமைக் கல்லை

காதலிசம்
*************
உன்னை நினைத்த பின்
உலகமே மறக்கிறது
உண்மை தெரிந்த பிறகு
காதலே மறக்கப்படுகிறது

நிலவுக்கு பெயர் வைத்தேன்
நீ என்று
உண்மையில் கரைவது
நான் மட்டும் தான்

ஆற்றோர அமர்வில்
காதல் பயணிக்கிறது
எறிந்த கல்லில்
எத்தனை எண்ணங்களோ

வறண்ட
நிலத்தலும்
சாகுபடி செய்யும் காதல்
வயது என்பதையும்
மறக்கிறது ஒரு காதல்

வானமெல்லாம் எண்ண மழை
தேங்குகிறது மனதில்
விருப்பத்திலும் விருப்பமில்லாமலும்
தேங்கும் பெற்றக்குளம்

Pambudan Oru Uraiyadal Children Story By Kumaraguru பாம்புடன் ஒரு உரையாடல் சிறார் கதை - குமரகுரு

பாம்புடன் ஒரு உரையாடல் சிறார் கதை – குமரகுரு

துரோகமறியாத பாம்புடன் சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.

பசித்தால் அதன் முட்டையை உண்ண சொல்லி பரிந்துரை செய்தது.

“முட்டைகளுக்குள் உன் குழந்தைகள் இருக்கிறார்களே! என்னால் உண்ண முடியாது” என்று மறுத்தேன்…

“நான் இன்னும் அடைகாக்கவேத் துவங்கவில்லை உயிர் உருவாக நாளாகும்! பரவாயில்லை பிறவா உயிரைவிட உயிருள்ளவரின் பசி போக்குதல் முக்கியம் அல்லவா?” என்று சொன்னது.

இந்த பாம்பினால் எப்படி இவ்வாறு சொல்ல முடிந்தது? எனக்கு புரியவேயில்லை? நான் குழம்பி கிடக்கிறேன். தாய்க்கு பிள்ளைதானே முக்கியம்? இது ஒரு விந்தையான பாம்பாக இருக்கிறதே?

“இல்லை பாம்பே!! ஆயிரம்தான் இருந்தாலும் உனது கருணைக்கு முன் என் பசி ஒன்றுமில்லை? நான் வேறு எதையாவது சாப்பிட்டு கொள்கிறேன்!” என்றேன்.

“நண்பரே!! நேற்று இந்த வழியாக ஒரு ஜே சி பி சென்றது, இந்த மரங்களும், என் புற்றும் எல்லாம் இன்னும் இரு நாட்களில் சுக்கு நூறாகி விடும்!! எப்படியும் உடையப் போகும் முட்டைகள்தானே, இரண்டை எடுத்து உண்ணுங்கள். ஒரு தவறும் இல்லை!” என்றது

சற்று கலங்கிதான் போனேன், “உள்ளே எத்தனை முட்டைகள் இருக்கின்றன பாம்பே?” என்று கேட்டேன்.

“இருபது இருபத்தைந்து முட்டைகள் இருக்கும் நண்பரே! எதற்காக கேட்கின்றீர்கள்?”

“முதலில் நான் இதுவரை பாம்பு முட்டைகளைச் சாப்பிட்டதில்லை. அடுத்து, இவ்வளவு கருணையுள்ள பாம்பை நான் சந்தித்ததில்லை. மேலும், உனக்கு என்னால் ஏதும் உதவ இயலுமா என்று யோசிக்கிறேன்?” என்றேன்

“எனக்கு உதவுவதால் எந்த பயனுமில்லை. எனது முட்டையின் தோல்கள் மிகவும் மெலிதானவை. அவற்றை ஓரிடம் விட்டு மற்றோர் இடத்துக்கு மாற்றவும் முடியாது?” என்று நான் கேட்கும் முன் பதில் தந்தது.

“சரி! ஆனால், என்னால் உன் முட்டைகளைக் காப்பாற்றித் தர முடியும் என்று இப்போது சொன்னால் நீ நம்புவாயா?” எனக் கேட்டேன்

“எப்படி என்று எனக்குத் தெரியும்?”

“அப்படியா? எப்படி என்று சொல்?”

“மஞ்சள் குங்குமம் கொண்டு வந்து இங்கே பூசி பால் ஊற்றி வைப்பாய். இந்த மூடர்கள் என் புற்றைக் கோயில் என்று சொல்லி இடிக்காமல் போவார்கள்! இதுதானேத் திட்டம்?” என்றது.

என் மூளையில் உதித்தத் திட்டத்தை எப்படி இது அப்படியே கூறியதென்று எனக்கு வியப்பாக இருந்தாலும், அதனிடம் அதை ஒப்பு கொண்டு, அதை போல் செய்யலாமா என்று கேட்கத் தோன்றியது…”ஆம்! அதேத் திட்டம்தான்… அதைத்தான் செய்ய போகிறேன்!” என்றேன்…

“வேண்டாம் நண்பா!! இயற்கை ஒரு முடிவையும் மனிதன் ஒரு முடிவையும் எடுத்து, முரண்பட்ட வாழ்வில் என் போன்று பல உயிரினங்கள் உலகெங்கிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையின் படைப்பு நியதியில் எதுவொன்றும் மேலில்லை, எலுவொன்றும் கீழில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட விசத்தைக் கூட எப்போது எங்கே யார் மீது பயன்படுத்த வேண்டுமென்று சொல்லி கொடுத்த இயற்கைக்கு எங்களை காக்கவும் தெரியும், அழிக்கவும் தெரியும். ஆனால், இந்த மனிதர்கள் ஏனோ அவர்களுக்காகப் பிற உயிர்களைக் கொல்லும பல்வேறு விஷ யுக்திகளைக் கையாள்கிறான். காடுகளையெல்லாம் அழிப்பதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், பேராசையில் எங்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்து கொண்டேயிருக்கிறான்.

கெடு சூழல் உருவாக்கித் தான் மட்டும் வாழ வேண்டுமென்ற முனைப்பில், காற்றிலெல்லாம் மாசைக் கலக்கிறான்! என் போன்ற உயிரினங்களெல்லாம் மனிதனைக் கண்டு அஞ்சி நடுங்கத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறான். இன்னொரு முட்டைப் பொறிக்கும் நேரம். என் குட்டி எங்கே யாரால் கொல்ல படுமோ எந்த காரின் வீலில் சிக்கி சாகுமோ என்ற பயத்தில், அஞ்சியஞ்சி வாழ்கிறோம்! எங்களால் எலிகளைக் கூட இப்போதெல்லாம் பிடிக்க முடிவதில்லை… இன்னும் சற்று காலம் சென்றால் நாங்கள் பாம்புகள் என்பதையே நாங்கள் மறந்துவிட வாய்ப்புமிருக்கிறது! உன்னால் எனக்கு செய்ய முடிந்த ஓருதவி இருக்குமேயானால், ஊரருக்கு வெளியே இருக்கும் ஏதாவதொரு வனத்தில் என்னை அழைத்து சென்று விடு! அது போதும்!” என்ற நெடிய உரையைக் கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது!

“நீ கண்ணீர் மல்க மன்றாடினாலும் இந்த மனுசப்பயல் மாற மாட்டான். ஆனால், எப்படி எல்லா பாம்புகளும் விசப்பாம்புகள் இல்லையோ அப்படிதான் எல்லா மனிதனும் பேராசைக்காரன் இல்லை. ஆனால், அந்த ஒரு சில பேராசைப் பிடித்த சுயநலவாதிகளால்தான் மனித இனமே நசுக்கப்படுகிறது. நீ எப்படி உன் பிள்ளைகளை எண்ணி வருந்தேகிறாயோ, மனிதர்களும் அதே போல் அவர்களின் பிள்ளைகளுக்கான வாழ்வை எண்ணி அஞ்சியஞ்சித் வாழ்ந்து வருகிறார்கள். உனக்கும் பெரும்பான்மை மனிதர்களுக்கும் ஒரே மாதிரி வாழ்வுதான். வா நாம் காட்டுக்கு போய்விடுவோம்… அங்கே ஜே.சி.பி வரும்வரை வாழ்ந்துதான் பார்ப்போம்!!” என்று நானும் பாம்போடு கிளம்பி விட்டேன்….

Palai Paravaiyin Kural Kavithai By Vasanthadheepan பாலைப் பறவையின் குரல் கவிதை - வசந்ததீபன்

பாலைப் பறவையின் குரல் கவிதை

தப்பு நடக்குது தப்பு நடக்குது
பாதிக்கப்பட்டவர் புலம்புகிறார்
மற்றவர்கள்
போரடிக்கிறார் என்கிறார்கள்
படகின் இருமருங்கிலும்
அழியும் கோலங்களை
தூறல் போடுகிறது
கனிகள் கனிந்திருக்கின்றன
பசி தீர்ந்த பறவைகள்
விநோதங்களைப் பாடுகின்றன
வழிப்போக்கர்கள் செல்லும்
வழியில் அந்தமரம்
நட்டவர் யாரென்று தெரியவில்லை
பினாமிகள் சொகுசாய் வாழ்கிறார்கள்
எடுபிடிகள் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள்
அடுத்த வேளை உணவு உனக்கும் எனக்கும் உத்தரவாதம் இல்லை
உன் கோபம் எனக்கும் இருக்கிறது
உன் வன்மம்
என்னையும் ஆட்டிப்படைக்கிறது
வஞ்சகத்தை வேரறுக்க
காலம் கூராகிக் கொண்டிருக்கிறது
அன்பாயிருங்கள்
நதி தவழ்ந்து செல்லட்டும்
வனத்தில் சகல ஜீவராசிகளும் வாழ்ந்து பெருகட்டும்
வாலை ஆட்டியது மகிழ்ந்தேன்
காலை நக்கியது குளிர்ந்தேன்
கடிக்க விரட்டுகிறது
வைதபடி ஓடுகிறேன்
கனவை வரைய பணிக்கிறான் ராட்சசன்
பல் வண்ணங்கள்
குவிந்து கிடக்கின்றன
வெண் வண்ணத்தில் வரைய முனைகிறேன்
கனவுகளைப் பின்தொடர்கிறது பிரமிப்பு
அறியாத தேசத்தின்
கதவுகள் திறக்கின்றன
ஒளிர் துகில் அணிந்த
ஒருத்தி வரவேற்கிறாள்.

– வசந்ததீபன்

Nizhal Paravai Poem By Thanges நிழல் பறவை கவிதை - தங்கேஸ்

நிழல் பறவை கவிதை – தங்கேஸ்

பசியோடு உன்னிடம் வருகிறேன்
ஏற்கனவே உன் கிளைகள முழுவதும்
பறவைகளின் கீச்சொலியால்
நிரம்பியிருக்கின்றன
விரல்களைப் பிடித்திழுக்கும் தரையில் அமர்ந்து கொள்கிறேன்
நிழல்கள் என்னைக் கொத்தி விளையாட ஆரம்பிக்கின்றன

தோளில் ஒன்றும் மார்பில் ஒன்றும்
தலையில் ஒன்றும்
அலகுகள் என்றும் சாபங்களை தருவதில்லை
நான் நதி நீரைப்போல
கரையும் நிழல்களை
கைகளில் அள்ளுகிறேன்
உள்ளங்கையில் மரகதப் புறாவின் குறுகுறுப்பு

பறக்க ஏங்குகிறது கட்டற்ற ஆசை
என் நிழலைப் பார்க்கிறேன்
அது ஏற்கனவே பறவையாகித்தான் இருந்தது

Kadavulai Thedi Poem By Priya Jeyakanth பிரியா ஜெயகாந்தின் கடவுளைத் தேடி கவிதை

கடவுளைத் தேடி கவிதை – பிரியா ஜெயகாந்த்




ஏழையின் தேடல் செல்வம் எனும் கடவுள்
செல்வந்தனின் தேடல் பாதுகாப்பு எனும் கடவுள்
மருத்துவனின் தேடல் நோயாளி எனும் கடவுள்
நோயுற்றவனின் தேடல் ஆரோக்கியம் எனும் கடவுள்

குழந்தையின் தேடல் தாய் எனும் கடவுள்
தாயின் தேடல் பாசம் எனும் கடவுள்
அனாதையின் தேடல் உறவு எனும் கடவுள்
துணையிழந்தவனின் தேடல் அன்பு எனும் கடவுள்

கண் இழந்தவனின் தேடல் பார்வை எனும் கடவுள்
ஊனமுற்றவனின் தேடல் ஊன்றுகோல் எனும் கடவுள்
பசித்தவனின் தேடல் உணவு எனும் கடவுள்
புசித்தவனின் தேடல் உறக்கம் எனும் கடவுள்

ஆசிரியரின் தேடல் சிறந்தமாணவன் எனும் கடவுள்
மாணவனின் தேடல் கற்றல் எனும் கடவுள்
அரசியல்வாதியின் தேடல் பதவி எனும் கடவுள்
தொண்டனின் தேடல் அங்கீகாரம் எனும் கடவுள்

போட்டியாளனின் தேடல் வெற்றி எனும் கடவுள்
வெற்றியாளனின் தேடல் பரிசு எனும் கடவுள்
படித்தவனின் தேடல் உத்தியோகம் எனும் கடவுள்
வியாபாரியின் தேடல் லாபம் எனும் கடவுள்

உழைத்தவனின் தேடல் கூலி எனும் கடவுள்
விதைத்தவனின் தேடல் மகசூல் எனும் கடவுள்
விவசாயியின் தேடல் மழை எனும் கடவுள்
மழையின் தேடல் மேகம் எனும் கடவுள்
நானும் தேடுகிறேன் என் கடவுளை !

Pavalar Karumalai thamizhazhan Poems 2 பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள் 2

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்




ஏழ்மையின் எதிர்பார்ப்பு
*******************************
வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு
வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு
தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்
தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை
வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே
ஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள்
எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள் !

பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை
பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை
முச்சந்தி தனில்நின்று கையை ஏந்தி
மூச்சுவிடும் வாழ்க்கையினை விரும்ப வில்லை
கச்சிதமாய் மதிப்பளித்துப் பணிகொ டுத்துக்
கரங்களிலே உழைப்பதற்கு வழியை செய்தால்
நிச்சயமாய் ஏழ்மையினை ஓட வைத்து
நிறைவாழ்வு வாழ்ந்திடுவோம் வாய்ப்ப ளிப்பீர் !

மாளிகையின் வசதிகளைக் கேட்க வில்லை
மகிழுந்து சொகுசுதனைக் கேட்க வில்லை
கேளிக்கைப் பொழுதுபோக்கைக் கேட்க வில்லை
கேள்விக்கு விடைதேடும் எங்க ளுக்கு
வாலியினை மறைந்திருந்து கொன்ற தைப்போல்
வளங்களினை சுருட்டுகின்ற கரமி ருந்து
கூலிக்காய் உழைக்குமெங்கள் உழைப்பிற் கேற்ற
கூலிதந்தால் போதுமெங்கள் ஏக்கம் தீரும் !

போனதெங்கே மனிதநேயம்
************************************
ஈரமண்ணாய் மனம்கசிந்து வீட்டுப் பக்கம்
இருப்போரின் துயரினிலும் பங்கு கொண்டு
வேரடியாய் அன்புதனில் கிளைய ணைத்து
வெறுப்பின்றிக் கூட்டமாக ஒன்றி ணைந்து
தூரத்தே அடிபட்டு வீழ்ந்த வர்க்கும்
துடிதுடித்தே ஓடிப்போய் உதவி செய்தும்
பாரத்தைப் பிறருக்காய்ச் சுமந்து நின்ற
பரிவென்னும் மனிதநேயம் போன தெங்கே !

சேற்றினிலே களையெடுக்கும் கரங்க ளாலே
சேர்ந்தணைத்துக் கபடுகளைக் களைந்தெறிந்து
நாற்றுகளை நட்டுவயல் வளர்த்தல் போல
நகையாலே வஞ்சமின்றி வளர்ந்த நட்பால்
வேற்றுமைகள் இல்லாத குடும்ப மாக
வேறுவேறு சாதியரும் நெஞ்ச மொன்றி
போற்றுகின்ற சோதரராய்ப் பிணைந்தி ருந்த
போலியற்ற மனிதநேயம் போன தெங்கே !

காடுகளாய் நம்முன்னோர் வளர்த்து வைத்த
கவின்மிகுந்த மரங்களினை வெட்டி வெட்டிக்
கோடுகளாய் மண்ணுடலைப் பிளக்க வைத்துக்
கொட்டிவந்த மழைவளத்தை அழித்த தைப்போல்
வாடுகின்ற பயிர்கண்டு வாட்டம் கொண்ட
வள்ளலாரின் மனிதநேயம் அழித்து விட்டோம்
பாடுபட்டு யாதும்ஊர் என்ற பண்பைப்
பாதுகாத்துத் தந்ததனைத் தொலைத்து விட்டோம் !

( 1 )
பக்கத்தில் குடியிருப்போர் முகத்தைக் கூட
பார்க்காமல் வாழுகின்ற வகையைக் கற்றோம்
துக்கத்தில் துடிப்போரின் குரலைக் கேட்டும்
துடிக்காமல் இயல்பாக நடக்கக் கற்றோம்
நக்கலாகப் பிறர்துயரில் வாடக் கண்டும்
நகைத்தவரை ஏளனமாய்ப் பழிக்கக் கற்றோம்
வக்கிரமே எண்ணமாகி அடுத்தி ருப்போர்
வயிறதனில் அடிப்பதையே தொழிலாய்க் கற்றோம் !

பிறர்வாழப் பொறுக்காத மனத்தைப் பெற்றோம்
பிறர்நெஞ்சைப் புண்ணாக்கும் கலையில் தேர்ந்தோம்
பிறர்போற்றப் பொதுநலத்தை மேடை மீது
பிசிறின்றிப் பேசிநிதம் கள்ள ராகப்
பிறர்பொருளை அபகரிக்கும் தன்ன லத்தால்
பிறர்காலை வெட்டுவதில் வல்ல ரானோம்
சிரம்தாழ்த்தும் பழிதனக்கே நாணி டாமல்
சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் !

சாதிகளின் பெயராலே சங்கம் வைத்தோம்
சாதிக்காய்த் தலைவரினைத் தேர்ந்தெடுத்தோம்
சாதிக்கும் சக்தியெல்லாம் ஊர்வ லத்தில்
சாதனையாய்ப் பகையுணர்ச்சி பெருக்கு வித்தோம்
வாதிக்கும் கருத்தெல்லாம் வாயா லன்றி
வாள்தடிகள் சங்கிலியால் மோதிக் கொண்டோம்
போதிக்கும் அன்புவிட்டு மதங்க ளென்னும்
போதையாலே மதம்பிடித்தே அலையு கின்றோம் !

( 2 )
அறிவியலில் உலகமெல்லாம் அற்பு தங்கள்
அரங்கேற்றக் கலவரங்கள் அரங்க மேற்றி
அறிவிலியாய்க் குறுமனத்தில் திகழு கின்றோம்
அணுப்பிளந்து அடுத்தகோளில் அவர்க ளேற
வெறியாலே உடன்பிறந்தோர் உடல்பி ளந்து
வீதியெல்லாம் குருதியாற்றில் ஓடம் விட்டோம்
நெறியெல்லாம் மனிதத்தைச் சாய்ப்ப தென்னும்
நேர்த்திக்கடன் கோயில்முன் செய்யு கின்றோம் !

வானத்தை நாம்வில்லாய் வளைக்க வேண்டா
வாடுவோரின் குரல்கேட்க வளைந்தால் போதும்
தேனெடுத்துப் பசிக்குணவாய்க் கொடுக்க வேண்டா
தேறுதலாய் நம்கரங்கள் கொடுத்தால் போதும்
தானத்தில் சிறந்ததெனும் நிதானத் தில்நாம்
தமரென்றே அனைவரையும் அணைத்தால் போதும்
மானுடந்தான் இங்குவாழும் சமத்து வத்தில்
மன்பதையே அமைதிவீசும் நேயத் தாலே !

Mounam Thantha Sorkal Poem By Dhayani Thayumanavan தயானி தாயுமானவனின் மெளனம் தந்த சொற்கள் கவிதை

மெளனம் தந்த சொற்கள் கவிதை – தயானி தாயுமானவன்




நாங்கள் எப்போதும்
எளிமையானவைகளையே…
முன்னிறுத்தினோம்.
உங்களை யாரென்று
அறியாமலேயே
கண்களினால்
அன்புசெய்தோம்.
உங்கள் சொற்களினால்
வசீகரிக்கப்பட்ட
நாங்கள் நாடோடிகள்.
எங்களுக்கான
குரல் இயற்கையினுடையது.
எங்கள் தார்ப்பாயின் வீடுகள்….
எப்போதும்
திறந்தே கிடந்தன.
உங்கள் சொற்பொழிவுகளைக் கேட்க….
எங்களுக்கு
கையூட்டு தரப்பட்டது.
அது
ஒரு வேளைப் பசிக்குப் போதுமானதாக.
நான் ஆசீர்வதித்துத் தருகிறேன்.
ஞானத்தையும்
கொஞ்சம் கொடு
இந்த மனித வடிவ
கழுதைகளுக்கு என்று.
வெள்ளிப் பணத்தைச் சுமந்து சென்று

உங்கள் முதலாளிகளின்
கஜானாவில் சேர்ப்பது
கடினமல்லவா?
எனவே
அந்த உறுதியையும்
உங்கள் உடல் பெறட்டும்….
என்றே
என் கழுதையை
வேண்டி நின்றேன்.
இப்போது புரிகிறதா?
கோப்பைகளுக்காக நாங்கள் அலைவதில்லை.
நாங்கள் கேட்காமலயே
எங்கள் மது கோப்பைகள்
நிரம்பிவிட்டன
சற்று முன்பு.