குடும்ப ஒற்றுமையின் அவசியம் கட்டுரை – இல.சுருளிவேல்

குடும்ப ஒற்றுமையின் அவசியம் கட்டுரை – இல.சுருளிவேல்




குடும்பத்தில் கணவன் மனைவி சண்டையில் வரும் சில சம்பவங்களை முக்கியமாக கோபத்தில் வரும் வார்த்தைகளை ஒரு தாளில் எழுதி வைத்து என்றாவது ஒரு நாள் அதனை அசை போட்டால் ஒன்று சிரிப்பு வரும் அல்லது வெறுப்பு வரும். வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், புதிய அனுபவங்கள் என வந்து கொண்டேதான் இருக்கிறது. மறக்க வேண்டிய விஷயங்களை நீண்ட காலமாக மனதில் வைப்பதும், மறக்கக் கூடாத பல நல்ல விஷயங்களை மறந்து விடுவதும் மனிதனுள் ஏற்படுகிறது. மகிழ்ச்சியை ஏற்கும் மனம், துக்கங்களையும் துயரங்களையும் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை. இன்றைய சமூகம் நாகரீகம் என்ற பெயரில் மனித உறவுகளை இழந்து வருகிறது. நுகர்வு கலாச்சாரங்கள் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பங்களுக்கு தரப்படும் முக்கியதுவம் கூட மனித உறவுகளுக்கு கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாக குடும்ப அமைப்பில் பெரிய மாற்றங்களைக் காண முடிகிறது. தனிக்குடும்ப கலாச்சாரங்கள் அதிகரித்து வருவதால் வாரிசுகளுக்கு ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி பேசக்கூட ஆள் இல்லையெனத் தோன்றுகிறது. இன்றைய கல்விமுறை வேலைவாய்ப்புக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருவது போன்று தோன்றுகிறது. சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் கல்வி மிக அவசியமாக தேவைப்படுகிறது. இல்லையென்றால் நீதிமன்றங்களில் இவ்வளவு குடும்ப வழக்குகள் நிலுவையில் இருக்குமா. நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா. தற்போது கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறிய சண்டைகள் கூட பெரிய அளவில் விரிசலை உண்டு பண்ணுவதையும் பார்க்கலாம். மிகப்பெரிய நோய், போதை பழக்கம், ஒழுக்கமின்மை, தொடர் குடும்ப வன்முறை காரணமாக கணவன் மனைவி பிரிகிறார்கள் என்றால் கூட சரியான காரணமாக கருதலாம். ஆனால் சரியான காரணங்கள் இல்லாமலேயே “நான்” என்ற அகம்பாவத்தினால் பல குடும்பங்கள் பிரிந்து வாழ்கின்றன. இதில் நன்கு படித்தவர்கள், பதவியில் உள்ளவர்கள், முக்கிய பிரபலங்களும் அடங்குவர். இதில் காதல் திருமணங்களும், நிச்சயிக்கப்பட்டத் திருமணங்களும் அடங்கும்.

நம் நாட்டில் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் உணர்ச்சிவசத்தால் பேசிய வார்த்தைகள் மறு உருவம் பெற்று வெறுப்பினை உண்டாக்கி தம்பதியர் நிரந்தரமாக பிரிவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்நிலை வளர்ந்த நாடுகளில் மட்டும் இருந்து வந்தது. தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. தற்பொழுது அதிகரித்து வருகிறது. ஊரறிய திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் பிரிந்து செல்வதும் அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தொடங்கி விட்டனர். பெண்கள் ஆண்களை தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பதும், ஆண்கள் பெண்களை அடக்கியாள நினைப்பதும் குடும்ப வன்முறைக்கு மூல காரணமாக இருக்கிறது. தம்பதியரின் விருப்பங்கள் நிறைவேறாதபோது அவர்கள் உணர்ச்சிவசமான பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதுவே அவர்களுக்கு வாழ்வின் இறுதிவரை நிம்மதியற்ற வாழ்க்கையாகிவிடுகிறது. குடும்ப சீரழிவுக்கு வர்த்தக ரீதியாக எடுக்கப்படும் சினிமா, டிவி சீரியல்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்திய கலாச்சாரம் உலகுக்கே முன்மாதிரியாக இருந்து வருகிறது. குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். கணவன் மனைவி உறவு என்பது வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியமானதாகும். ஒற்றுமை என்பது பணத்தால் மட்டும் ஏற்படுவதில்லை. நல்லகுணங்கள், வெளிப்படைத்தன்மை, எல்லையற்ற அன்பு, புரிதல்கள் ஆகியவற்றால் ஏற்படுவதாகும். உதாரணமாக, மிகக்குறைவான வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் உண்டு. அதிகமான வருமானம் இருந்தும் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு. ஒற்றுமைக்கு இலக்கணமாக விளங்கும் குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கும். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஒற்றுமையின் மூலம் தீர்வு காணமுடியும் . அங்கு அமைதியும் ஆரோக்கியமான சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சிறிய சண்டை சச்சரவுகள் வருவது இயல்புதான். அதனை ஒருபோதும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தில் ஒரு குழந்தையை போல் இருக்க வேண்டும். அதாவது குழந்தையை அடித்தாலோ, திட்டினாலோ அக்குழந்தை உடனே அல்லது ஓரிரு நாட்களில் மறந்து விட்டு இயல்பு நிலைக்கு வந்து விடும்.

பெரியவர்கள் அப்படி அல்ல. ரோசம் என்ற பெயரில் குரோத புத்தியை வளர விடுகிறார்கள். அதற்கு சில பெற்றோர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். சிலர் உறவினர்கள் துணையோடு பழிவாங்கவும் முயற்சி செய்கிறார்கள். மறக்கவேண்டிய விஷயங்களை சீரியஸாக எடுத்துக் கொண்டால் நம் மனம் குப்பைத் தொட்டியாகிவிடும். இங்கு இருவருக்கும் உச்சகட்ட புரிதல் தேவைப்படுகிறது. பெற்றோரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் குழந்தைகள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடக்கும் போது குழந்தைகள் மனரீதியாக மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இது எதிர்கால தலைமுறையினருக்கு பின் உதாரணமாக அமைந்து விடும். என்றைக்குமே நமது முடிவுகள் ஒற்றுமைக்காகவும், பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணக்கூடியதாக இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான உறவுகளுக்கு வழிவகுக்கும். எனவே நம் மனம் ஒரு பூந்தோட்டமாக இருப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு பலாக்கணி போல. அதாவது பலாக்கணியை சுவைக்க வேண்டும் என்றால் பழத்தை பிசிர் கையில் ஒட்டாமல் அழகாக எடுத்துச் சுவைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதற்குப் பொறுமையும், அதை அழகாக எடுத்து சாப்பிடும் கலையையும் கற்க வேண்டும். பலர் பழத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் குத்தி குதறி கொஞ்ச பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு வேகமாக எரிந்து விடுகின்றனர். பழத்தை முழுமையாக ரசித்து ருசித்துச் சாப்பிட பழக வேண்டும். அதற்கு பொறுமையும், ஆர்வமும் அவசியம். இந்தக் கலையை கணவன், மனைவி இருவரும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நூறு சதவீதம் இனிக்கும். இருவரில் யாராவது ஒருவர் கற்று இருந்தால் வாழ்க்கை ஐம்பது சதவீதமாவது இனிக்கும். நாளுக்கு நாள் சுவை அனுபவம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், இருவரும் அந்தக் கலையை கற்கவில்லை என்றால் வாழ்க்கை முழுவதும் கசப்பு மட்டும்தான் மிஞ்சும். வாழ்க்கையின் சுவையை அனுபவிக்காமலேயே போய்விடுவோம். ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழும் கலையை கற்றுக் கொள்வோம். ஆண்துணை அல்லது பெண்துணை இல்லாத குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பு இல்லை.

எனவே, வாழ்க்கை துணையின் அவசியத்தை உணர்ந்து வாழ வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி என்ற உறவைவிட, பொறுப்புள்ள நண்பர்கள் வாழ்வின் இறுதிவரை சேர்ந்து வாழும் இடமாக குடும்பம் இருந்தால் குடும்பமும் கோவில்தான்.

முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204

Aangiri Shortstory By Karkavi ஆங்கிரிசாமி குறுங்கதை - கார்கவி

ஆங்கிரிசாமி குறுங்கதை – கார்கவி

இவர்தான் ஆங்கிரிசாமி… இவர் பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு அந்த காலத்து வேலைனு அப்பப்ப பீத்திக்கிர அளவுக்கு ஒரு ஆபிசுல பியுனா இருக்கார்……

அழகான பொண்டாட்டி லவ்லிரோசா ஆனா.. அவருக்கு எப்போதும் அவளமட்டும் புடிச்சதே இல்ல….

எப்போதும் வேலை உண்டு வீடு உண்டுனு பணத்த சேக்குரதுல மட்டும்தான் குறியா இருப்பாரு…

தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்லிகிட்டு கோவத்த நுனி மூக்குலயே வச்சிக்கிட்டு திரிவார்…

இப்படியே சண்டையுமா, மனஸ்தாபமா போன இவங்க வாழ்க்கைல ரெண்டு குழந்தை வந்து பிறந்தாங்க….. அவங்தான் ஆதிரன், ஆதிரா…. இவங்க ரெண்டு பேரும்ணா ஆங்கிரிசாமிக்கு கொள்ள பிரியம்… ஆனா மனைவிய மட்டும் எரிஞ்சி விழ எப்படி கத்துக்கிட்டாரனு தெர்ல….

யார பாத்தாலும் அடியில நெருப்பு வச்சமாறி இருக்குரதால அவரோட அழகான பேரு அரவிந்த்சாமி இப்பலாம் ஆங்கிரிசாமி யா ஆகிடாப்ல…..

என்னதான் வெளில, மனைவிகிட்ட கோவப்பட்டாலும் புள்ளைங்ககிட்ட சக்கரையா கரஞ்சிடுவாரு நம்ம சாமி்… அதபாத்து நம்ம லவ்லிரோசா மனச ஆறுதல் படுத்திக்குவா…

பசங்களுக்கும் பத்து வயசு வந்துச்சு.. ஈரத்தோட டம்ளர் தந்தாளும் கோவபடுற சாமிக்கு ரொம்ப கஸ்டமான நிலை வந்துச்சு….

நேரம் தவறாம சோறுபோடும், அக்கரையா பாத்துக்குர அழகு ரோசாக்கு உடம்புல நோவு.. ..

காலம் போக போக சத்தம் குறைய ஆரம்பிச்சது அன்புகாட்டுன புள்ளைங்க எல்லாம் அடுத்தடுத்த அன்பு தேடி போயிட்டாங்க

ஒருநாள் எல்லாத்தையும் இழந்தது போல ஒரு சூழ்நிலை… காரணம் ரோசா தவறிட்டா…

அழகு மல்லி…அவளுக்கு புருசனா உயிரு…அம்மா அப்பா பாத்துவச்சாலும் குனிஞ்ச தல நிமிராம புருசன ஏத்துகிட்டா..மல்லிகைப்பூ வலிக்காம தலையில வச்சி எடுப்பா..இப்ப ஊரே கொண்டு வந்துருக்கு பாக்க அவ இல்ல…

ஓரமா ஒரு சேர்ல உட்காந்துருந்த சாமிகிட்ட ஆறுதல் சொல்லகூட யாரும் கிட்ட வரல…ஏன்னா அவர் குணம் அப்டி..தூரமா நின்னு புள்ளைங்களுக்கு ஆறுதல் சொல்லி வநத வங்க இறுதிசடங்க முடிச்சிட்டு போனாங்க….

வந்தவங்கலாம் போனாலும் இன்னும் ரோசா அந்த வீட்டுலதா இருக்கா அந்த அடுப்பங்கரையா…பாத்ரம் கழுவ சத்தமா… வார்க்கோல்ல கைரேகையா… இப்படி பாக்ர இடமெல்லாம் நிரம்பி இருந்த ரோசாவ நனச்சிகிட்டே வாசல் வர போனான் சாமி….

எப்போது அடுத்த வீட்டு சுவத்துல உச்சா போனாலே அந்த தெரு நாய கல்லால அடிப்பான்…இப்ப “ச்ச்ச்ச” னு கூப்டு கைல குடிக்க கொடுத்த டீ ய அந்த நாய்க்கு ஊத்துனான்…. அத குடிச்சிகிட்டே அவன் கைய புடிச்சது அந்த நாய்….மனசுல தேங்கிங்கிடந்த கோவம் எல்லாம் கண்ணீரா வழிஞ்சி ஓடுனது அந்த வாசலோட ஆங்கிரி சாமிக்கு……….

“இருக்கும் பொழுது தெரியாத அருமை அவங்க இல்லாதப்ப புரிஞ்சாலும் பயனில்ல அப்டிங்கரதுக்கு நம்ம ஆங்கிரிசாமி…ஒரு நல்ல எடுத்துக்காட்டு………

Naraiyan Book By Thamizhkavi Bookreview By Karuppu Anbarasan நூல் மதிப்புரை: தமிழ்க்கவியின் "நரையன்" - கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: தமிழ்க்கவியின் “நரையன்” – கருப்பு அன்பரசன்




“அன்றைக்குப் பிறகு அவளின் புருஷன் அவளை தொடுவதே கிடையாது”

என்னவாக இருக்கும்..? அவளே சொல்கிறாள். நேர்மையான மனதோடு அவசியம் வாசியுங்கள்.

செப்டம்பர் 10, 1993, வெள்ளிக்கிழமை காலை எப்பொழுதும்போல் அவனுக்கும் அவளுக்கும் விடிந்தது.. விடிந்தது என்னவோ அந்த வீட்டில் அவர்கள் இருவருக்கும் என்றாலும் வீட்டின் எல்லா வேலைகளையும் அந்த நிறைமாத கர்ப்பிணி மட்டுமே… அவனும் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே இந்தக் காலத்தில் அவளுக்கு செய்யவேண்டிய கடமையாக நினைத்து கொண்டு அவளின் மன உணர்வை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் வழக்கம்போல் அலுவலகம் செல்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக அவளுக்கு வலி ஏற்பட.. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவளை பிரசவ பகுதிக்குள் அட்மிட் செய்கிறார்கள்.. மூன்றாவது மாதத்திலிருந்து அந்த பெண்மணிக்கு தொடங்கிய மருத்துவ பரிசோதனை அடங்கிய நோட்டுப் புத்தகமும் அங்கே மருத்துவர்களின் மேசையில் அட்மிட் செய்யப்படுகிறது… நாள் முழுவதும் வைத்திருந்து வலி குறைந்தது கூடுவது காரணமாக அவருக்கு செயற்கையாக தொடர் வலி தருவதற்கு மறுநாள் தயாராகிறார்கள் மருத்துவர்கள்..

தலைமை மருத்துவர் அங்கே வந்து அந்த மருத்துவ பரிசோதனை புத்தகத்தை பார்த்த பொழுது அதில் இன்னும் 15 நாட்களுக்கு தேதி தள்ளி குறித்திருப்பதை கண்டுபிடிக்கிறார். உடனடியாக அந்தப் பெண்ணுக்கு செயற்கையாக வலி வருவதற்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது… (நல்லா பார்த்தாங்க டீடெயிலு..!) அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் அவரது கணவன் வீட்டுக்கு வந்து சேர்கிறான்… அந்த பிரசவத்திற்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதது போல… ஏதோ அந்த இரண்டு நாளையும் அவள் அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டதைப்போல நினைத்துக் கொண்டு.

மீண்டும் இன்று வலி ஏற்பட, இதை தன் கணவருக்கு சொன்னால்.. எரிச்சலோடுதான் கேட்பார் என்று பயந்துகொண்டு பக்கத்தில் குடியிருக்கும் மீராவுக்கு தகவல் சொல்ல, மீரா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் அவளின் கணவனை அழைத்து அவளின் நிலையை சொல்கிறார். மீண்டும் அதே மருத்துவமனை.. மருத்துவமனையில் அந்த பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை எண் மட்டுமே மாற்றப்பட்டது.. மற்றபடி கடந்த வாரம் நடைபெற்ற அனைத்தும் முறையாக நடத்தினார்கள்.

அந்தப் பெண்மணிக்கு தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இடுப்பு வலி.. அப்பாடா எப்படியும் இன்னிக்கு குழந்தை பெற்றிடுவார் இன்னொரு நாளைக்கு நாம வரத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டு வெளியே காத்திருக்கிறார் அவரின் கணவர்.. வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய வலி அன்று பகலும் இரவும் தொடர்கிறது.. சனிக்கிழமை காலை வருகிறார் மருத்துவர்.. செவிலியர்களும் அவரை பரிசோதனை செய்து இன்று இரவுக்குள் பிரசவம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள்..

கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய அவரின் பிரசவவலி கூடிக்கொண்டே இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை வரையும் வலி அதிகரித்துக் கொண்டே.. வெள்ளி சனி ஞாயிறு என மூன்று நாட்களும் அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை வராண்டாவில் நடக்கிறாள் படுக்கையில் படுக்கிறாள்.. நடக்கிறாள் படுக்கையில் மீண்டும் படுக்கிறாள்.. அவனுக்கோ ஒருபுறம் எரிச்சலாகவும் இன்னொருபுறம் வேதனையாகவும்.. உணர ஆரம்பிக்கிறான் அவளின் வேதனையை அவளின் கண்கள் வழியாக.

வலி ஞாயிற்றுக்கிழமையும் தொடர அந்த வலியின் உச்சமாக ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த பெண்ணுடைய குரல் மட்டுமே.. அழுகை ஒலி மட்டுமே.. அது அலறலாக எழும்ப மருத்துவமனையின் அமைதியை கிழித்துக்கொண்டு இருக்கிறது.. மருத்துவமனை வெளியில் அவன் மட்டுமே தனியாக அமர்ந்து அந்த வலியான அழுகையின் சத்தத்தை கேட்கும் மனவலிமை இல்லாதவனாக.. மருத்துவமனைக்குள் பசித்த பூனையைப் போன்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருக்கிறான்.. காதல் மணம் புரிந்த தம்பதி தான் இருவரும்.. அவளின் அலறல் அவருடைய மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது.. பிரசவ வலியின் வேதனை பெரும் துயரம் அன்று இரவு முழுவதும் அவனை கண்மூட விடவில்லை.. அவனுடைய அடிவயிற்றில் உருவமற்று ஏதோ ஒன்று சதையைக் கிழித்துக்கொண்டு குடல் வழியாக நெஞ்சாங்கூட்டை நெருங்குவதை போன்று அந்த நேரம்ததை உணர்கிறான்..

ஒவ்வொரு நிமிடமும் அறிய முடியாத அச்சம் பயம் இயலாமை அவனுக்குள் புகுந்து அவன் உடலையும் சிந்தனையையும் எதையோ செய்து கொண்டிருக்கிறது.. ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்கிற உதறல் அவனுக்குள் ஒவ்வொரு நாழிகையும் அதிகரித்துக்கொண்டே.. தூங்காத இரவாக ஞாயிற்றுக்கிழமை அவனின் மன வலுவை சிதைத்துக் கொண்டே இருக்கிறது.. அந்தப் பெண்ணின் வேதனை மிகுந்த வலிகொண்ட அலறல் அவனுடைய விழி ரப்பையின் முடிகளை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்து கொண்டே.. இன்னொரு உயிரை கொண்டு வருவதற்காக ஓருயிர் படும் அவஸ்தை அவனுடைய இருதயத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது.. அந்த பெண்மணியின் குரல் மட்டுமே அழுகையாக இரவு முழுவதும்..

திங்கள் கிழமை புலர் காலைப் பொழுதின் 5 முப்பத்தி நான்கு மணிக்கு குழந்தையின் அழுகுரல் ஒலி அமைதியாக உறங்கிக் கிடந்த கதிரவனை மெல்ல வெளியே வா என்று தாயின் குருதி படிந்த தன் இதழ்களால் தாயின் வயிற்றுச் சூட்டின் கதகதப்போடு முத்தம் ஒன்றினை பதிக்கிறான் வாஞ்சையாக.

பிரசவ வலியின்.. வேதனையின்.. அழுகையின்.. துன்பத்தை அந்த இரவு மிகப் பெரும் காதலாக தன் மனைவி மீது கொள்ளச் சொல்லி அவனுக்குள் நிகழ்த்திவிட்டு சென்றது. புதிய ஒரு உயிரின் இதயம் துடிப்பதற்கு தாயின் இதயம் எத்தனை வேகமாக துடித்திருக்கும் ரத்தம் தெறித்திட அழுதிருக்கும் என்பதை.. வலித்திருக்கும் என்பதை அன்றுதான் முழுவதுமாக உணரத் தொடங்கினான். அவன்தான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கருப்பு.. பிரசவ வலியால் துடித்தவராக எனது இணையர் சுமதி.. அவளின் உயிர் சுமந்த இன்னொரு உயிராக மகன் சத்தியபாரதி..

நரையன் தொகுப்பில் இடம் பெற்றிருக்கக் கூடிய “கொடுத்த இன்பம்” சிறு கதையை வாசிக்கும் பொழுது அன்று நான் அறிந்த அத்தனை வலிகளையும் உணர முடிந்தது. பெரும்பாலும் எந்த ஆணுமே தன்னுடைய மனைவி பேறுகாலத்தில் அவளின் தாய் வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லும் பொழுது அருகிலிருந்து பார்ப்பது என்பதும் அருகில் இருந்து அவளுக்கு தேவையான பணிவிடைகளை செய்வது என்பதுவும் குறைந்து போயிருக்கிறது. உலகமயமாக்கலும் நுகர்வு கலாச்சாரமும் நம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கும் இக்காலத்தில் கணவன் மனைவி உறவுகளுக்குள் மிகப்பெரியதொரு இடைவெளியினை அமைத்தும் உரையாடல்களையும் குறைத்தும் வைத்திருக்கிறது.

பேறுகால பெண்களுக்கு தேவைகள் என்பது பெரும்பாலும் ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும். அவளுடைய மன உணர்வுகளின் தேவை உணரமுடியாமல் தனித்து விடப்பட்டு எல்லாமும் மருத்துவமனைகளிலும் அங்கு பணி புரியும் செவிலியர்கள் இடமும் அவைகள் ஒப்படைக்கப்படுகிறது பேறுகாலத்தில் இக்காலங்களில். குழந்தை பிறப்பிற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அந்தப் பெண் படக்கூடிய பெரும் துயரங்களை வலிகளை அதன் அவஸ்தைகளை நேரில் பார்க்கக் கூடிய ஆண்களுக்கு மீண்டும் தன்னுடைய மனைவியை குழந்தை பிறப்பிற்குகான கருவியாக்கி உட்படுத்த மாட்டான் அவள் மீது நிஜமான நேசம் கொண்டவனாக இருந்தால்.

அன்பின் அடையாளம் புது உயிர்களை படைப்பது என்றாலும் புது உயிர்களை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவது என்றாலும் இயற்கையின் அற்புதங்களில் மேன்மை களில் அழகில் சிறப்பு வாய்ந்தது என்றாலும் அதில் அந்தப் பெண்உயிர் மட்டும் படக் கூடிய வலிகளை சொல்லிமாளாது.. எழுதி மாளாது.. எந்த எழுத்துக்குள்ளும் அடங்க முடியாத வலி குழந்தை பிறக்கும் பொழுது இருக்கக்கூடிய அந்த உயிரின் வலி. அந்த வலியை விட நூறு மடங்கு மகிழ்வு இன்னொரு உயிர் இந்த மண்ணில் வந்து தன் முதல் அழுகையோடு காற்றை சீண்டும் போதும் போதும், தாயின் பச்சை இரத்தத்தின் ஈரத்தோடு நிலத்தைத் தீண்டும் போதும். வயிற்றில் பிள்ளையை சுமந்திருக்கும் பெண்ணும்; மழையைத் தேக்கி வைத்திருக்கும் கருமேகமும் எப்பொழுது மடை திறப்பார்கள் என்று எவருமே அறிய முடியாது.. இயற்கையின் படைப்புகளில் இந்த இருவருமே பேரழகானவர்கள்.

பெண்கள் அனைவருமே இந்த வலியினை கடந்து வந்திருந்தாலும் சக பெண்ணொருத்திக்கு இப்படியான வலி ஏற்படும் பொழுது எல்லா பெண்களுமே தனக்கான வலியாக நினைத்து அந்தப் பெண்ணுக்கு சுகமான பிரசவத்தை நடத்தி முடிக்க ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும், ஆலோசனைகளையும் பேரன்போடு செய்திடும் அக்கறையில் இருக்கும் மனித உள்ளங்களின் அழகுதான்
எல்லாவற்றிலும் பேரழகு.

அப்படியான பேரழகுகளை இந்த “கொடுத்த இன்பம்” கதையில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார். கதையில் சுகந்தியும்.. சுகந்திக்கு வலி ஏற்படும் பொழுது உடனிருந்து துடித்திடும் பெண்களும் பேரழகானவர்கள்.

“தான் அவளுக்கு கொடுத்துப் பெற்ற இன்பத்தை, இப்படித் திரட்டித் தந்திருக்கிறாள் என்று வியப்புறும் ஆண்களுக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை அவள் பட்ட துன்பம்.. அதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யப் போவதுமில்லை ஆண்களின் உலகம்.

இதுநாள் வரையிலும் எத்தனை பெண்களோடு கலவியில் ஈடுபட்டோம்.. காதலிப்பதாக சொல்லி படுக்கையறை சுகத்தோடு முடித்துக்கொண்ட பெண்கள் எத்தனை பேர் என்பவையெல்லாம் ஆண்களின் உலகம் சூழ்ந்து நிற்கும் பொழுது பெருமையாக பேசியும். அவைகளை எழுத்திலும் கொண்டு வந்து பெண் உடல் குறித்தான தம் பார்வைகளை ஆண் திமிரோடு பொதுவிலும் வைப்பார்கள் வெட்கம் ஏதுமில்லாமல் கௌரவம் என்றே.. கேட்கும் வாசிக்கும் நாமும் இவைகள் எல்லாவற்றையும் மிகச்சாதாரணமாக கடந்து போய்க்கொண்டே இருப்போம்..

குழந்தைப் பருவம் தொடங்கி பதின்பருவத்தை ஊடுருவி கட்டாயத் திருமணத்திற்கு விருப்பமின்றி தலையசைத்து, திருமண உறவில் மனம் ஒன்றாத சூழலில் அதனை பக்குவமாக புரிந்து ஏமாற்றி அனுபவித்த ஆண் உடல்கள் எத்தனை எத்தனை என்பதையும்.. தான் மனமுவந்து கலவியில் ஈடுபட்ட ஆணிடம் நம்பி பல உண்மைகளை பகிர்ந்து கொண்டாலும் அந்த ஆணின் பார்வையில் தன்னை யாராக பார்க்கிறான் என்பதையும் இங்கு வெடிப்புறப் பெண்கள் பேசத் தொடங்கிவிட்டால் ஆண்களின் உலகம் முற்றாக பொதுவில் நிர்வாணப்படுத்தப்பட்டு கேவலப்பட்டு நிற்கும். அந்த வேலையினை “கற்பெனப்படுவது” என்கிற சிறுகதையில் ஆழமாகவும் காத்திரமாகவும் பேசி பொதுக் குளத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் தமிழ்க்கவி அவர்கள்.

கலவியும் காதலும் இரு பாலருக்கும் பொதுவானது ஆனால் அவை குறித்து பேசுவது என்பது இங்கு ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாக மாறி இருக்கும் சூழலில் இந்த கதையில் பெண் ஒருவர் வலியோடு தான் கடந்து வந்த வாழ்வினைப் பேசுவார். “கற்பெனப்படுவது” இருபாலருக்குமானதே .

“பெண்ணுக்குள் என்ன உண்டு” என்கிற சிறுகதையிலும்.. அறிமுகமானவர்கள், அந்நியோன்யமானவர்கள் என நினைத்து பெண் பிள்ளைகளை அவர்களின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிடும் பொழுதினில் அங்கே இருக்கக்கூடிய ஆண்களால், மனதளவிலும் உடலளவிலும் பெண் குழந்தைகளின் உடல் என்னவாக இருந்தது.. எப்படிப் பார்க்கப்பட்டது.. நிகழும், தொடரும் கொடுமைகளை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை கதைக்குள் பெரும் வலியோடு கொண்டு கொண்டு வந்து இருக்கிறார் சிறுகதையாசிரியர்.

“சாவை நோக்கி” சிறுகதையில் எழுத்தாளரின் நேரடி கள அனுபவங்களிலிருந்து பெண் புலிகளின் மெச்சத் தகுந்த, மரியாதைக்குரிய, அனைவராலும் போற்றப்படுக்கூடிய வீரம் ஆண்களுக்கும் நிகரானது என்பதை சொல்கிறது. இலக்கு மட்டுமே குறிக்கோளாக கொண்ட போராளிகளின் நிகழ்கால சூழ்நிலை கணக்கில் எடுக்காமல் நேற்றைய நிலையிலிருந்து வடிவமைத்த திட்டத்தின் அடிப்படையில் செல்ல முற்படும் பொழுது எத்தகைய பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்.
அக் கதையில் வரக்கூடிய கடைசி வாக்கியம்..

“பிள்ளை… நான் சாகலாம்.. நீ சாகலாம்.. “நாங்கள்” சாகக் கூடாது என்பதை மறந்திட்டியா..” இதில் வரக்கூடிய அந்த “நாங்கள்” என்கிற வார்த்தை ஆழம் மிகுந்ததாக அர்த்தம் பொதிந்ததாக அமைந்திருக்கிறது. அர்த்தமற்று மனித இழப்புகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது “சாவை நோக்கி” சிறுகதை.

ஒப்பாரி என்கிற சிறுகதையில்.. செத்துப்போன பரமசிவத்தின் கடந்த கால வாழ்க்கையும்.. அவர் உடல் நலிவுற்றதும் மனைவி மற்றும் பிள்ளைகளால் சந்திக்கும் பாடுகளையும்.. கதையின் உச்சமாக மனைவியின் ஒப்பாரி வீடியோ படமாக்குவதாகும்.

சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு “நரையன்”.. தலைப்பின் பெயரில் இருக்கக்கூடிய சிறுகதை குறித்து நான் இங்கு எதுவும் சொல்லப் போவதில்லை. மிகவும் அழகிய நேசம் மிகுந்த வலிமிகுந்த கதை இது. அந்த உணர்ச்சியை அதிலிருக்கும் பேரன்பை நீங்கள் வாசிக்கும்போது அனுபவியுங்கள்.

தொகுப்பில் இருக்கக்கூடிய 15 கதைகளில் “காணி வைத்தியம்” என்கிற கதைக்குள் மட்டும் என்னால் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை..

“சிவில் பாதுகாப்பு” கதையோ காவல்துறையின் நிகழ்கால செயல்பாடுகளை பகடி செய்யக்கூடிய அளவில் இருக்கிறது.

“மாற்றங்கள்” என்ற கதை உலக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நம்முடைய நிலத்திற்குமான தொடர்பு எப்படி வகை மாற்றம் செய்து ஆளும் அரசுகளால் கள்ளத்தனமாக மக்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை பேசுகிறது.

கதைகள் சொல்லும் அட்டைப்படத்துடன் அழகிய முறையில் வடிவமைத்து ஆசிரியரின் 15 கதைகளை தேர்வு செய்து தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள் நடு வெளியீட்டகத்தார்.. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இலங்கைவாழ் தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளை அவர்களின் மொழியிலேயே கதையாக நம் கையில் கொடுத்து பல கதைகளின் வழியாக அமைதியாக இருக்கும் குளத்திற்குள் ஒரு கல்லினை வீசி அதிர்வினை ஏற்படுத்தி இருக்கும் தமிழ்கவி என்கிற தமயந்தி அவர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

நூல்: நரையன்
வெளியீடு: நடு_வெளியீடு
ஆசிரியர்: தமிழ்க்கவி
பக்கங்கள்: 128.
இந்திய விலை: 140/-
இலங்கை விலை: 400/-

கருப்பு அன்பரசன்.

Nadai vandi coffee Poem By Kannan நடை வண்டி காபி கவிதை - கண்ணன்

நடை வண்டி காபி கவிதை – கண்ணன்




நடை வண்டி காபி
*************************
தற்போது தள்ளுவண்டி
‘டீ காபி டீ காபி’
கூவி விற்கிறது
குழந்தை
காற்றில் கைமாறும்
காகிதம்
‘காபி சரியில்லை
என் காசைக் கொடுங்க’
அடுத்த கணமே
திரும்ப வந்தது காசு
குழந்தையின் தராசுமுள்
எப்போதும்
சாய்வதேயில்லை

நூல் விமர்சனம்: இரா. நாறும்பூநாதனின் யானைச் சொப்பனம் – விஜிரவி

நூல் விமர்சனம்: இரா. நாறும்பூநாதனின் யானைச் சொப்பனம் – விஜிரவி




திருநெல்வேலி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தாமிரபரணி ஆறு, பாரதி மணிமண்டபம், இருட்டுக்கடை அல்வா போன்ற பொதுவான சில விஷயங்களே… அதைத் தாண்டி நெல்லையின் வரலாற்றுச்சின்னங்கள், வரலாற்று மனிதர்கள் போன்ற அடிப்படைத் தகவல்களை முகநூலில் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் எழுதியதை ‘’யானைச் சொப்பனம்’’ என்ற நூலாக ஆக்கியிருக்கிறார்கள் நூல்வனம் பதிப்பகத்தார். மிக எளிய விஷயங்களை கூட கட்டுரையாக்கி இருப்பது சுவாரஸ்யம் தருகிறது. நாம் தினமும் உபயோகிக்கும் ஊக்கு, மருதாணி, தலைக்கு தேய்க்கும் சீயக்காய், வாழ்த்து அட்டைகள், பிள்ளையார் எறும்பு, பவுண்டன் பேனா, பந்திசாப்பாடு போன்றவற்றை சில கட்டுரைகளில் பாடுபொருளாக்கியிருக்கிறார் ஆசிரியர். புதுமைப்பித்தனைப் பற்றி அறியாத பல விஷயங்கள், ஜோல்னா பையில் அம்சங்கள் என சுவாராயம் கூட்டுகிறது புத்தகம்.

சில கட்டுரைகள் சிறுகதை வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. தமிழ் வார இதழ்களில் வெளிவரும் தொடர் கதைகளை அழகாக பைண்டு செய்து வைத்து ஒரு நூலகம் போல உருவாக்கி, கேட்பவர்களுக்கு படிக்கத் தந்து, ‘’புத்தகம் படிக்கப் படிக்கத்தான் உயிர்பெறும். வெறுமனே அலமாரியில் இருந்தால் உயிரற்று தான் இருக்கும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் எழுதிய ஆசிரியரும் உயிர் பெறுவார்’’ என்று சொல்லும் பாடலிங்கம் அண்ணாச்சி ஓர் அழகிய கதாபாத்திரமாக மிளிர்கிறார் இந்த புத்தகத்தில் மட்டுமல்ல…. நிஜ வாழ்விலும் கூடத்தான். அதிலும் புத்தகத்தை திருப்பித் தரும் வாசகர்களிடம் அதிலிருந்து சில கேள்விகளை கேட்பார் என்ற தகவலும் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

தன் கணவன் ஆசை ஆசையாய் வாங்கி போட்ட நான்கு பவுன் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து மீட்க முடியாமல், அது ஏலத்துக்கு வரும்போது ‘’ஒரே ஒரு தடவ அந்த வளையலை கண்ணுல காட்டுங்க… தொட்டுப் பாத்துக்குறேன். அதை என்னால மீட்க முடியாது. ஆனால் அதைப் பார்க்கிறப்போ என்னுடைய செத்துப்போன புருஷனின் ஆசை முகம் அதுல தெரியும்’’ என்று சொல்லும் போது அங்கயற்கண்ணி யோடு சேர்ந்து நமது கண்களும் கலங்கும். ஒரு அருமையான சிறுகதையை படைத்திருக்கிறார்.

அதைப்போல நிஜ சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட ‘’ஒரு இந்திய குடிமகனின் கதை’’யும் தரமான ஒரு சிறுகதை என்பதில் ஆச்சரியமில்லை. கதை சொல்லியும் அந்த ரகம் தான். கேரளா எழுத்தாளர்களுக்கு அம்மண்ணில் கிடைக்கும் மரியாதையும், வரவேற்பும் தமிழ் எழுத்தாளர்களுக்கு இங்கு இல்லை என்ற ஏக்கத்தை ஒரு கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். கி ராஜநாராயணனின் புகழ்பெற்ற சிறுகதையான ‘’கதவு’’, கோவில்பட்டி, நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி வீட்டில் நடந்த ஜப்தி சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது என்கிற விஷயமும் தெரிய வருகிறது.

நெல்லையின் பெருமிதமாய் வாழ்ந்து, பலரால் அறியப்படாமலேயே மறைந்து போன தொல்லியல் ஆய்வாளர் செந்தில் சிவகுமாரன், அயோத்திதாச பண்டிதர், ஆப்ரஹாம் பண்டிதர், பேராசிரியர் டேவிட் பாக்கியமுத்து பற்றிய ஆசிரியரின் ஆதங்கம் சுமந்து சில கட்டுரைகள். எட்டயபுரத்தின் அருகே பிதப்புரம் கிராமத்தில் மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயரால் ஒரு நூற்பாலை கட்டத் திட்டமிடப்பட்டு, எட்டயபுரம் மன்னரால் ஆதரவு அளிக்கப்பட்டு, கட்டிட வேலையும் ஆரம்பிக்கப்பட்டு, ஆங்கிலேய அரசால் தடுக்கப்பட்ட வரலாற்றை ‘’ வெள்ளையனை எதிர்க்க வித்தூன்றிய இடம் ‘’ கட்டுரையில் காண முடிகிறது. நொடித்துப் போன தன் தந்தையை எண்ணி,

‘’ ஈங்கு இதற்கிடை எந்தை பெருந்துயர்
எய்தி நின்றனன் தீய வறுமையான்;
ஓங்கி நின்ற பெரும்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியில் இழந்தனன்’’

என அந்த மகாகவி மனம் நொந்து பாடுகிறான். வறிய நிலைக்கு குடும்பம் செல்ல, படிப்பைக் கூட தொடர முடியாமல் உள்ளம் வெதும்பி,

‘’எந்த மார்க்கமும் தோற்றிலது: என்செய்வேன்
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே’’
என்ற பாரதி தன் இளம் வயதிலேயே ஆங்கிலேயரை விஷம் போல வெறுத்தான். ஒருவேளை நூற்பாலை துவக்கப்பட்டு, பாரதியும் மேற்படிப்பு படித்திருந்தால், தமிழகத்திற்கு ஒரு கவிஞன் கிடைத்திருப்பான். ஆனால் உணர்ச்சி கொப்பளிக்கும் ஒரு தேசியக் கவி கிடைக்காமலேயே கூடப் போயிருக்கலாம் என்ற ஆசிரியரின் வரிகளின் யோசிக்க வைக்கின்றன.

மொத்தம் ஐம்பத்தி ஒன்பது கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில்.முகநூல் பதிவுகள் என்பதால் சிலது சிறியனவாகவும், சிலது பெரிதாகவும் இருக்கின்றன. நெல்லைத் தமிழில் வாசிப்புக்கு சுவை கூட்டி , நெல்லை வரலாற்றின் ஆவணங்களை உள்ளடக்கிய படைப்பு இது.

நூல் : யானைச் சொப்பனம்
ஆசிரியர் ; இரா. நாறும்பூநாதன்,
பதிப்பகம்; நூல் வனம்
விலை; 120