இடைவெளி கவிதை – சுதா

இடைவெளி கவிதை – சுதா




இரு ஒரு நிமிடம்,
நான் பேசுகிறேன், என நீ
துண்டிக்கும் அத்தனை
அழைப்பிலும் பலநிமிடங்கள்
எண்ணக்குவியல்களும்
பலமணிநேரத்தின் பிதற்றல்களும்
சிதறிக் கிடக்கின்றன…

இரவும் பகலும் மாறி மாறி
வந்தபோதும் எனக்கான
ஒரு நிமிடம் மட்டும் இன்னும்
உன் கடிகார முட்கள் சுட்டவில்லையோ…

நேரம் இருந்தால் நானே
பேசுவேன் என நீ சொன்ன போது,
ஓடாது நிற்கும் என் வீட்டு கடிகாரம்
கண் முன்னே நின்றது…
நீயும் என்னைப் போல் தான்
எனச் சொல்லாமல் சொல்லியது…

ஒவ்வொரு உரையாடலிலும்..
அப்புறம் வேற என்ன,என்பதில்
அடுத்த நொடி அறுந்து
விழும் தூரத்தில் பல்லாயிரம் அடி
பள்ளத்தாக்கில் தொங்கி நிற்கிறது
நம் ஒரு நிமிட நட்பு…

– சுதா