மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: இலையும், மண்கட்டியும் – தமிழில் ச. சுப்பாராவ்
ஒரு வயலில் ஒரு அரசமரத்தின் இலையும், ஒரு மண்கட்டியும் இருந்தன. அவை இரண்டும் நண்பர்கள். இரவு, பகல் எந்த நேரமும் இரண்டும் சேர்ந்தே இருக்கும்.
இந்த இரண்டின் நட்பையும் பார்த்து எல்லோரும் பொறாமைப்பட்டார்கள். மழையும், காற்றும் இவர்கள் இருவரையும் பிரித்து விடுவது என்று சதியாலோசனை செய்தன. காற்று இலையை வெகு தூரத்திற்கு பறக்கச் செய்து விடுவது என்றும், மழை பலமாகப் பெய்து மண்கட்டியை கரைத்து விடுவது என்றும் முடிவு செய்தன.
இலைக்கும், மண்கட்டிக்கும் இந்த சதி பற்றி நண்பர்கள் மூலம் தெரிந்து போனது. இரண்டும் இந்த ஆபத்திலிருந்து தப்ப யோசனை செய்தன. திட்டமிட்டபடி மழை முதலில் தாக்கியது. மண்கட்டி அழ ஆரம்பித்தது. ‘நண்பனே ! நமது நீண்ட கால நட்பு முடியப் போகிறது. இந்த மழையின் வேகத்தில் நான் கரைந்து போய்விடுவேன் போலிருக்கிறதே !’ என்று கதறியது.
இலை, ‘நான் இருக்கும் வரை உனக்கு எந்த ஆபத்தையும் வர விடமாட்டேன்,’ என்றது புன்னகையுடன். சொல்லிவிட்டு, மண்கட்டியின் மீது உட்கார்ந்து மழை நீர் அதன் மீது விழாமல் பாதுகாத்தது. சிறிது நேரத்தில் மழை சோர்வடைந்து நின்றது. இப்போது காற்றின் முறை. அது வேகமாக வீச ஆரம்பித்ததும், இலை நடுங்கியது. ‘மண்கட்டி நண்பா ! இந்த காற்றின் வேகத்தை என்னால் சமாளிக்க முடியவில்லையே ! இந்த காற்று நம்மை பிரித்து விடும் போல் இருக்கிறதே !‘ என்று அழுதது.
‘கவலைப்படாதே நண்பனே ! நான் இருக்கிறேன், என்றது மண்கட்டி. சொல்லி விட்டு அது இலையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.
காற்று சிறிது நேரத்தில் களைப்படைந்து நின்றது. ஆபத்துகளிலிருந்து தப்பிய மண்கட்டியும், இலையும் புன்னகை செய்து கொண்டன. அவர்களின் நட்பின் ஆழமும், ஒருவரது பலத்தை மற்றவரைக் காக்கப் பயன்படுத்திய விதமும் எல்லோரையும் வியப்படைய வைத்தன.