வலியிலிருந்து லாபம் கட்டுரை – அ.பாக்கியம்
(தமிழ் மார்க்ஸ் ஸ்பேஸில் 27.01.23. அன்று ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)
ஆக்ஸ்பாம் ஒரு தன்னார்வ அமைப்பாகும். பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் சுதந்திரமான, நியாயமான சமுதாயத்தை நிலை நாட்டவும் பாடுபடுவதாக அந்த அமைப்பில் நோக்கங்கள் தெரிவிக்கிறது.
இந்த அமைப்பு உலகம் முழுவதும், இந்தியாவிலும் ஆய்வுகளை நடத்தி அவ்வப்போது வெளியிடுவது பல தாக்கங்களை உருவாக்கி இருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக உள்ளடக்கி ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. சமத்துவமின்மையின் பலி, வலியிலிருந்து லாபம் என்ற அறிக்கைகள் ஏராளமான விவரங்களை தெரிவிப்பதுடன் இந்தியா சந்திக்கக்கூடிய நெருக்கடிகளை அம்பலப்படுத்தியும் உள்ளது.
பொதுவான ஏற்றத்தாழ்வுகள், ஏற்றத்தாழ்வுக்கான காரணிகள், நிதி ஒதுக்கீடுகள், கோவிட் கால ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள், வரி விகிதங்கள் ஏற்படுத்தும் தாக்கம், ஆகியவற்றை ஆய்வு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு தலைப்புக்கும் உடனடி தீர்வுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதிலும் குறிப்பாக முதலாளித்துவ கொள்கைகளை கடைபிடிக்கக்கூடிய நாடுகளிலும் இந்தியாவிலும் அதிகரித்து உள்ளது. உலகின் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 300 கோடி மக்கள் வைத்திருக்கும் சொத்துக்களை விட அதிகமாக உள்ளது. ஏழை நாடுகளில் மருத்துவ வசதி இல்லாமல் வருடத்திற்கு 56 லட்சம் மக்கள் மரணமடைகிறார்கள்.
21 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் 10 சதவீத பணக்காரர்களிடம் 60 சதவீதமான சொத்துக்கள் உள்ளதது. 2021-ம் ஆண்டின் கணக்கின்படி 1% பணக்காரர்களிடம் 40.5% சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அடித்தட்டில் உள்ள 50 சதவீதமான மக்கள் 3 சதவீதம் சொத்துக்களை மட்டுமே வைத்துள்ளனர். ஏற்றத்தாழ்வுகள் மலைக்கும் மடுவுக்குமாக அதிகரித்துள்ளது.
சமத்துவமின்மையின் வகைகள்.
ஏற்கனவே வர்க்கம், பாலினம், சாதி, மதம், பிரதேசம் ஆகிய வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அறிவியல் வளர்ச்சி சமத்துவமின்மையை குறைப்பதற்கு பதிலாக லாபத்தை குறிக்கோளாக கொண்டிருக்க கூடிய அமைப்பில் டிஜிட்டல் டிவைட்(Digital Divide)என்ற புதிய வகையும் சேர்ந்துள்ளது. இவையெல்லாம் சமத்துவமின்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்படும் களமாகும்.
வலியிலிருந்து லாபம்:
அரசாட்சி உட்பட அனைத்தும் செல்வந்தர்களின் கையில் இருப்பதால் அவர்களுக்கான உலகமாகவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று நோய் காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு பில்லியனர் உருவாகிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் ஒவ்வொரு 33 மணி நேரத்தில் 10 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டார்கள். 2022 ஆம் ஆண்டு மற்றும் 263 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்றார்கள்.
இந்தியாவில் 21 பில்லியனர்கள் கையில் 70 கோடி மக்களின் சொத்துக்கள் அளவு குவிந்திருக்கிறது. கடந்த 23 ஆண்டுகள் பெற்ற லாபத்தை விட பெருந்தொற்று நோய் காலத்தில் அதாவது 24 மாதத்தில் அதிக லாபத்தை பெரும் முதலாளிகள் சுரண்டியுள்ளார்கள்.
2020 மார்ச் 20 ஆம் தேதி முதல் 2021 நவம்பர் 30 வரை பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு ,23.14லட்சம் கோடியிலிருந்து 53. 16 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது என்றால் தொற்று நோயை விட இவர்களின் லாபவெறிதான் மக்களை சாகடித்தது. இந்தியாவில் இக்காலத்தில் டாலர் பணக்காரர்கள் 102 இருந்து 142 ஆக உயர்ந்துள்ளார்கள் அதாவது 39 சதவீதம் பணக்காரர்கள் அதிகமாகியுளானர் .
84 சதவீதம் குடும்பங்கள் இந்தியாவில் தொற்று நோய் காலத்தில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறார்கள். 4 வினாடிக்கு (நிமிடத்திற்கு அல்ல) ஒருவர் இந்த சமத்துவமின்மையால் மரணம் அடைந்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டில் மட்டும் 4.6 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டில் விழுந்தனர். இது பெருந்தொற்று நோய் காலத்தில் உலகில் உருவான ஏழைகளில் சரிபாதியாகும்.
பாலின அசமத்துவம்:
தொற்று நோய் இல்லாத காலத்தில் சமூக வளர்ச்சிப் போக்கில் பாலின சமத்துவத்தை அடைய 99 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று பொதுவான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்று நோயின் தாக்கத்தால் பாலின சமத்துவம் அடைவதற்கு 135 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. இவை ஒரு மேலோட்டமான மதிப்பீடு என்றாலும் தொற்று நோய் காலத்தில் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
2020 ஆம் ஆண்டு மட்டும் பெண்கள் 59.11 லட்சம் கோடி வருவாய் இழப்புகளை சந்தித்து உள்ளனர். 2019 ஆம் ஆண்டு பெண்கள் உழைப்பாளிகளை விட தற்போது 1.3 கோடி பெண்கள் உழைப்பாளிகள் குறைவாக இருக்கிறார்கள்.
டிஜிட்டல் அசமத்துவம்:
நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், கருவிகளும் வசதியானவர்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் செல்போன்கள் ஆண்களிடம் 61% இருந்தது. பெண்களிடம் 31% இருந்தது. இன்டர்நெட்களை ஆண்கள் பயன்படுத்துவதை விட பெண்கள் 33 சதவீதம் குறைவாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.
பழங்குடி பட்டியல்யினத்தினர் கணினியை ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், பட்டியலின சாதியினர் 2 சதவீதம் குறைவாகத்தான் கணினியை பயன்படுத்துகிறார்கள்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மற்றும் தேசிய மாதிரி ஆய்வு மையத்தின் விபரப்படி 2021 இல் நிரந்தர வருமானம் உள்ளவர்கள் 95 சதவீதம் செல்போன்களை பயன்படுத்துகிற பொழுது, வேலை கிடைக்காதவர்கள் 50 சதவீதம் மட்டும்தான் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.
கணினியை பயன்படுத்துவதிலும் கிராமத்திற்கும் நகரத்திற்குமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளது. தொற்றுநோய் காலத்திற்கு முன்பு கிராமப்புறத்தில் கணினியை 3% பயன்படுத்தினர். நோய் காலத்திற்குப் பிறகு இது 1% குறைந்துவிட்டது.
ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வது 82 சதவீதமான பெற்றோர்கள் சிக்னல் கிடைக்காமல், இன்டர்நெட்டின் வேகம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். 84 சதவீதம் அரசு பள்ளி ஆசிரியர்கள் இணையம் இல்லாமல் கல்வி போதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
சமத்துவமின்மையின் குறைப்பதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்படுவதை விட லாப நோக்கம் அசமத்துவமின்மையை அதிகப்படுத்தியது.
தீமையின் வடிவம் தனியார்மயம்:
முதல்முறையாக இந்த அறிக்கையில் சமத்துவமின்மை அதிகம் ஆவதற்கு தனியார் மையம் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர். கல்வியில் தனியார் மையம் ஆதிக்கம் செலுத்துவது சமமான கல்வி கிடைக்காமல் இருக்க காரணமாகியது. தனியார் பள்ளிகளில் 52% பெற்றோர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர். 35 சதமான குழந்தைகள் படிப்பை தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். 57 சதமான மக்கள் அதிக கட்டணத்தை செலுத்தி படிக்க வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதேபோன்று மருத்துவ செலவுகள் உள்நோயாளிகளுக்கு ஆறு மடங்கு அதிகமாகவும், புறநோயாளிகளுக்கு மூன்று மடங்கு அதிகமாகவும் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. மக்களின் அடிப்படை வசதிகளை தனியார்மயமானால் அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.
அரசும் நிதி ஒதுக்கீடை வெட்டியது:
இந்தியாவில் 21- 22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 10% நிதியை பொது சுகாதாரத்தில் குறைத்தார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) பொது சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படக்கூடிய நிதியின் அளவு 1.2 முதல் 1.6 மட்டும்.
கடந்த 22 ஆண்டுகளில் பொது சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டில் 0.09% மட்டும்தான் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று கல்வித் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதம் மட்டும்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளில் 0.07% மட்டும்தான் நிதி உயர்வு ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட செலவு, தேசிய சமூக உதவித் திட்டம் ஆகியவற்றிற்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு ஒட்டு மொத்த செலவில் 0.6 சதவீதம் மட்டும்தான் ஒதுக்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகள் 1.5% ஒதுக்கப்பட்டதிலிருந்து சரிபாதியாக வெட்டப்பட்டுள்ளது.
தொற்று நோய் காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு பக்கம் கொள்ளை அடிக்க,ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கீட்டை வெட்டி மக்களை மரணப் குழிக்கு தள்ளியது.
அண்டை நாடுகளுடன் ஒப்பீடு:
சமத்துவமின்மை குறியீட்டை குறைப்பதற்கான அர்ப்பணிப்பு (commitment to two reduce inquality index) என்ற திட்டத்தின் அடிப்படையில் பல நாடுகள் தொற்று நோய் காலத்தில் ஏற்பட்ட மத்துவத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் இந்தியாவில் இந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. சுகாதார செலவினத்தில் இந்தியா இரண்டு இடம் பின்னுக்குப் போய் கடைசி ஐந்து நாடுகளில் ஒன்றாக மாறியது.
இந்தியா மொத்த செலவில் சுகாதாரத்திற்காக ஒதுக்குவது 3.64% மட்டுமே. ஆனால் பிரிக்ஸ் நாடுகளான சீனா, ரஷ்யா 10 சதவிகிதம் பிரேசில் 7.7 சதவீதம், தென் ஆப்பிரிக்கா அதிகபட்சமாக 12 9% செலவழிக்கிறது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான 4.3, வங்கதேசம் 5.19, இலங்கை 5.88, நேபாளம் 7.8 சதவீதங்கள் செலவழிக்கிற பொழுது இந்தியாவின் நிலைமை படுமோசமாக இருக்கிறது.
வரி சுமை ஏழை மக்களுக்கு:
தொற்று நோய் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30% வரியிலிருந்து 22 சதவீத வரியாக ஒன்றிய அரசு குறைத்தது. தொழில் வளர்வதற்காக ஊக்கப்படுத்தக்கூடிய முறையில் இது குறைக்கப்படுவதாக மோடி அரசு அறிவித்தது. தொழில் வளரவில்லை மாறாக 1.5 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டது.
இந்தியாவில் 50 சதவீத ஏழை மக்கள் தான் அதிகமான ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்கள். கீழ்த்தட்டில் உள்ள 50 சதவீதமான இந்தியர்கள் 64. 3 ஜிஎஸ்டி வரியை செலுத்துகிறார்கள் பணக்காரர்கள் 3 முதல் 4 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார்கள். தொற்று நோய் காலத்தில் பல லத்தின் அமெரிக்க நாடுகளில் பணக்காரர்களுக்கு செல்வ வரி போடப்பட்டது. இந்தியாவில் மட்டும் சலுகை கொடுக்கப்பட்டது.
எனவே ஆக்ஸ்ஃபார்ம் அறிக்கை உலகில் ஏற்பட்டுள்ள அசமத்துவம் இன்மையை பளிச்சென படம் பிடித்து காட்டியுள்ளது தொற்றுநோய் காலத்தில் இந்த அசமத்துவமின்மை மிகப் பெரும் அளவுக்கு அதிகரித்து உள்ளது என்பதே அபாயகரமான முறையில் இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
செல்வ வரியை விதிப்பது உடனடி தீர்வு. இந்தியாவில் 98 பில்லியனர்களுக்கு 4% வரி விதித்தால் 17 ஆண்டுகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை நிதி பற்றாக்குறை இன்றி நடக்கலாம். பள்ளிக் கல்விக்கான அனைத்து செலவுகளையும் ஈடு கட்டலாம். ஆண்டுக்கு பத்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இரண்டு சதவீதம் வரி விதித்தால் பட்ஜெட் வரவில் 121% அதிகரிக்கும்.
செல்வந்தர்களுக்கான அரசு இவற்றையெல்லாம் செய்யாது. அறிக்கைகள் அரசுக்கு ஆலோசனை சொன்னாலும் அது மக்களுக்கான அறைகூவலாக எடுத்துக் கொண்டு செல்வந்தர்களுக்கான ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தி உழைப்பாளி மக்களுக்கான அதிகாரத்தை நிலை நாட்டுவது மூலமாகத்தான் சமத்துவமின்மையை போக்க முடியும் இவைதான் சோசலிச நாடுகளிலும் நடந்து வருகிறது. தற்போது முற்போர்காளர்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தென்னமெரிக்க நாடுகளில் இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் நடந்து வருகிறது.
அசமத்துவத்தை தகர்த்து சமத்துவம் நோக்கி முன்னேறுவதற்கு உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம்.
அ.பாக்கியம்