பாலாவின் கவிதைகள்
பட்ஜெட்
**********
வருடா வருடம்
வளர்கிறது
வறட்சியும், வாக்குறுதிகளும்.
இளைஞர்கள்
***************
ரசிக்கவும் ருசிக்கவும்
நேரமின்றி – இயங்கிடும்
இயந்திரங்கள்…….
கொரானா காலம்
**********************
உயிர் காத்திரு
காத்துதவு
கடவுளாவாய்!!
சுதந்திரக் கொண்டாட்டம்
******************************
தேசியக் கொடி ஏற்றும் நேரம்
முப்படைகளும்
முச்சந்தியில்!
இயற்கை
************
முடித்து வைப்பதற்காகவே
அனைத்தையும் தொடங்குகிறது
இயற்கை!
பிட்காய்ன்…
*************
தகிக்கும் கோடை,
தார் பாலை,
கார் சாலையில்
அதோ தூரத்தில்
நீர்….
அள்ளிப் பருகச்
சென்றுகொண்டிருக்கிறேன்.
அதுவும்
அருகில்
வந்து கொண்டே
இருக்கிறது…….
விரைவு உணவு எனும் எமன்
முப்பத்தி இரண்டு
வயது முடிந்த
முன்னாள் மாணவருக்கு
இறுதித் தீர்ப்பு
எழுதினார்கள்
இருதயத்தில்
அடைப்பு என்று!
இந்தியாவே ஆடும்
கிரிக்கெட்டை ஆடி
ஓய்ந்த அவன்…
உலகம் வியந்த
உசேன் போல்ட்டை
உரசிப் பார்த்த அவன்…
கட்டுடல்
கருத்துப் போக
கடினமாய் உழைத்தவன்..
காலனை நோக்கி
கடிது செல்ல
காரணம் என்ன?
விரைவு உணவு
விஷமானதோ?
விதி என்று
விட்டுவிட
மதியில்லை….
108
*****
பல மதத்தினரும்
படையெடுத்து
வந்திருந்தாலும்
பார்த்த அனைவரும்
ஒருமித்து
உச்சரித்துக்
கொண்டிருந்தனர்
ஒரே மந்திரத்தை..
சாரை சாரையாய்
சாலையெங்கும்
நான்கு சக்கர
ஊர்திகளின்
அணி வகுப்பு
நீண்ட பாம்பு போல்..
பரபர வென்று
பறக்கும்
பட்டாம்பூச்சி போல்
இரு சக்கரங்களின்
இரைச்சல்கள்…
கலைந்த
எறும்புக் கூடு போல்
திக்கு தெரியாது
ஊசாடும் மக்கள்..
படையணித்
தலைவன் போல்
மிடுக்காய்
மிரட்டிக் கொண்டிருக்கும்
காக்கி உடை கனவான்
பிற நேரங்களில்
காணது விட்ட
கடவுளை
விழாக் காலங்களில்
கண்டுவிட்ட
திருப்தி
கண்டவர் கண்களில்..
ஏக்கம்
காணாதவர் நெஞ்சில்..
கொரானாவை
ஒதுக்கி விட்டு
ஓடி உரசிக் கொண்டு
பார்த்தால்,
சிதறிக் கிடந்தன
சித்திரை திருநாளுக்காய்
வாங்கியிருந்த
சில கனிகள்..
மாதத் தவணை
கட்டி முடிக்கப்படாது
உருக் குலைந்த வாகனம்…
உடன்
கை கால்கள்
இடம் மாறி,
தலைகீழாகக் கிடக்கும்
குருதி கொப்பளிக்கும்
ஓர் உடல்…
எதாவது சில துளிகள்
நீர் கிட்டாதா என்று
இறுதி ரயில் பிடிக்கும்
பிரயாணியாய்
நம்பிக்கையற்று….
எல்லோரும்
ஒருமித்து
உச்சரித்துக்
கொண்டிருந்தனர்
போராடும்
உயிரைக்
காப்பாற்றி விட,
கலாம் கண்டு
கொடுத்த,
108 எனும்
மகா மந்திரத்தை
அலைபேசியில்
யாரிடமோ!
-பாலா
பொள்ளாச்சி
வரலாற்றில் மறைக்கப்பட்ட புதுச்சேரியின் பெண் புரட்சியாளர் சரஸ்வதி சுப்பபையா – சிந்துஜா சுந்தர்ராஜ்
புதுச்சேரியில் பெண் உரிமைகள், சம ஊதியம், வாக்குரிமைக்காகவும் குரல் எழுப்பிய முதல் பெண்மணிகளில் சரஸ்வதி சுப்பையாவும் ஒருவர்.
1523 முதல் 1815 வரை, புதுச்சேரி பல்வேறு காலனித்துவவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது: போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இறுதியாக பிரெஞ்சுக்காரர்களில் முடிவற்றது. சரஸ்வதி கம்யூனிஸ்ட் தலைவர் வி சுப்பையாவின் மனைவி ஆவார், அவர் யூனியன் பிரதேசமான புதுவையில் பிரெஞ்சு காலனித்துவவாதிகளுக்கு எதிராகவும், சுதந்திர போராட்டத்திற்கும் தலைமை தாங்கினார். சுப்பையா அரசியல் சுதந்திரத்திற்காக போராடினார் என்றால், சரஸ்வதி பெண்களுக்கான சமூக சுதந்திரத்திற்காக போராடினார்.
சடகோபன் மற்றும் சூடாமணி தம்பதிக்கு இரண்டாவது மகளாக அக்டோபர் 22, 1924 அன்று வேலூரில் உள்ள ஆர்ணியில் பிறந்தார். கல்வியில் படுச்சுட்டி. அவர் தனது இடைநிலையை முடித்தார், அதன் பின் இரண்டாம் உலகப் போர் நடைப்பெற்றதால் அவர் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போனது.
1943ல் சுப்பையாவை மணந்த பிறகு சரஸ்வதி புதுச்சேரிக்கு வந்தார். திருமணமான நான்கு மாதங்களிலே சுப்பையா நாடு கடத்தப்பட்டார். அதனால் வேலூருக்கேத் திரும்பிய சரஸ்வதி 1945ல் தான் யூனியன் பிரதேசத்திற்குத் திரும்பினார்.
சரஸ்வதி 1946 ல், ‘பிரெஞ்சு இந்தியப்
பெண்கள் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். பின் ஏப்ரல் 9 அன்று அனைத்துப் பெண்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தார். இந்த மாநாட்டில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதாக யூனியன் பிரதேசத்தின் வரலாற்றாசிரியர் ஏ லட்சுமிதாத்தாய் கூறியுள்ளார். புதுச்சேரி வரலாற்றில் முதல் பதிவு செய்யப்பட்ட அமைப்பு சங்கம் இது தான். சுதந்திரத்திற்கு பின் 1950ல், யூனியன் பிரதேச பெண்களுக்கு புதுவையில் வாக்குரிமை வழங்கியது.
எங்கள் கிராமமான சண்முகபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் குழுவை என் அம்மா தனலட்சுமி மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார். அனைவரும் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தனர். இந்த மாநாட்டில் தான் பெண்களுக்கான வாக்குரிமைக்கான கோரிக்கையை சரஸ்வதி எழுப்பினார், ”என்று புதுச்சேரியின் எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சீனு தமிழ் மணி பெடரல் என்ற இணைய இதழுக்கு கொடுத்த போட்டியில் தெரிவித்திருந்தார். “யூனியன் பிரதேசத்திற்கு முழு சுதந்திரம் மற்றும் இரு பாலினருக்கும் சமமான ஊதியம் போன்ற தீர்மானங்கள் இங்குதான் நிறைவேற்றப்பட்டன,” என்று மேலும் கூறினார். சரஸ்வதி சுப்பையா National Federation of Indian Women என்ற அமைப்பில் தலைவராகவும் பணியாற்றினார் என்பது கூடுதல் செய்தி.
1959 ஆம் ஆண்டு, சரஸ்வதி காசுகடை தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி பிரதிநிதிகள் சபைக்கு முதன் முதலில் ஓரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது அதுவே. அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. 1959ஆம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினாராக பணியாற்றினார். 1968ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் முதல் பெண் துணை மேயராக பணியாற்றினார் என்பதும் சிறப்பான ஓன்று. சரஸ்வதி ஜூன் 4, 2005 அன்று இறந்தார்.
“உள்ளாட்சித் தேர்தலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சரஸ்வதி மிகுந்த ஆர்வம் காட்டினார். தனது வாழ் நாள் முதல் இறக்கும் வரை ஒரு வலுவான இடதுசாரி சித்தாந்தவாதியாக இருந்த சரஸ்வதி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். அப்படிப்பட்ட தலைவர்களை இன்று அரசியலில் பார்ப்பது மிக கடினம்,” என்கிறார் தொழிற்சங்கவாதி முத்துக்கண்ணு.
சரஸ்வதி சுப்பையா அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி புதுச்சேரி அரசின் மகளிர் திலகம் விருது பெற்ற முதல் பெண்மணி ஆவார். ஆக புதுச்சேரி வரலாற்றில் சரஸ்வதி சுப்பையாவிற்கு என்று ஓர் தனியிடம் உண்டு என்பதை இந்த 75வது சுதந்திரத்தின கொண்டாட்டத்தில் பெண்களின் எழுச்சியை புதுச்சேரியில் வித்திட்ட அவருக்கு வீரவணக்கம் சொல்லி வரும் காலங்களிலும் பெண் உரிமைகளை மீட்டெடுப்போம் என்று சொல்லி பயணிப்போம் .
– சிந்துஜா சுந்தர்ராஜ்
‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ – பிரதமரின் பிரச்சாரம் நமக்கு விடும் எச்சரிக்கை – பிருந்தா காரத்
‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ – பிரதமரின் பிரச்சாரம் நமக்கு விடும் எச்சரிக்கை
பிருந்தா காரத்
இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவின் போது, நமது சுதந்திரத்தை சாத்தியமாக்கித் தந்துள்ள பெண்கள், ஆண்கள் என்று ஏராளமான தியாகிகளுக்கு எண்ணற்ற குடும்பங்கள் மூவர்ணக் கொடியைத் தங்களுடைய வீடுகளில் பறக்க விட்டு மரியாதை செலுத்தப் போகின்றன. ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற அந்த அறிவிப்பு வெற்றுமுழக்கம் அல்லது சடங்கு என்பதற்கு அப்பாற்பட்டுச் செல்வதற்கு நம்முடைய வரலாறு, நமக்கான சுதந்திரத்தை வென்றெடுப்பதில் எவையெல்லாம் முக்கியமானவையாக இருந்தன என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நமது மூவர்ணக் கொடி இந்திய அரசியலமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையது. அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை இறுதி செய்வதற்காக ராஜேந்திரபிரசாத் தலைமையில் பன்னிரண்டு பேர் கொண்ட தற்காலிகக் குழு ஒன்றை 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைத்தது. ‘தேசியக்கொடி குழு’ என்று அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், மௌலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரி, கே.எம்.முன்ஷி, கே.எம்.பணிக்கர், ஃபிராங்க் அந்தோணி, பட்டாபி சீதாராமையா, ஹீராலால் சாஸ்திரி, பல்தேவ் சிங், சத்யநாராயண் சின்ஹா, எஸ்.என்.குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். ஏற்கனவே இருந்த மூவர்ணக் கொடியை சர்க்காவிற்குப் பதிலாக அசோக சக்கரம் என்ற முக்கியமான மாற்றத்துடன் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்வது என்று அந்தக் குழுவின் உறுப்பினர்கள் முன்மொழிவார்கள் என்பது நன்கு அறிந்த ஒன்றாகவே இருந்தது.
காங்கிரஸ் கட்சி மூவர்ணக் கொடியை முதன்முதலாக 1931ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழியாக ஏற்றுக் கொண்டிருந்தது. நடைமுறையில் அந்தக் கொடி காங்கிரஸ் கட்சியையும் தாண்டி இந்திய சுதந்திரப் போரில் அனைவருக்குமான முக்கியப் பதாகையாக மாறியது. அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் அந்தக் கொடியை சுதந்திர இந்தியாவிற்கான தியாகத்தின் சின்னம் என்று குறிப்பிட்டே பேசினர். அந்த விவாதத்தில் கலந்து கொண்ட எச்.கே.காண்டேகர் ‘அடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகளை இழந்த எத்தனையோ பேர் சுதந்திரத்திற்காக தங்களுடைய உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். ஆங்கிலேயப் பேரரசு அந்தக் கொடியை அழிப்பதற்கென்று தன்னுடைய ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தியது. ஆயினும் நாம் தொடர்ந்து அதனைப் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறோம்’ என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
இந்திய சுதந்திரப் போரட்டத்தில் மூவர்ணக் கொடி தவிர்த்து பிற கொடிகளும் குறிப்பிடத்தக்க வகையில் இடம் பெற்றிருந்தன. எடுத்துக்காட்டாக ஆங்கிலேயப் பேரரசிற்கு எதிராக நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்டங்களில் போராட்டம், தியாகம் ஆகியவற்றின் அடையாளம் என்று தாங்கள் கருதிய செங்கொடியை கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளும், அவர்களுக்கான ஆதரவை வழங்கி வந்தவர்களும் தங்களுடைய கரங்களில் ஏந்திச் சென்றனர். அந்தச் செங்கொடி சென்னையில் 1923ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர் பேரணியில் முதன்முதலாக ஏற்றப்பட்டது. பின்னர் அது நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் சென்று சேர்ந்தது.
ஆதிவாசிகள் பலரும் தங்கள் சொந்தக் கொடிகளை ஏந்தியே ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து கிளர்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டிருந்தனர். ஆதிவாசிகளின் குரல்களில் ஒன்றாக அரசியல் நிர்ணய சபையில் இருந்த ஜெய்பால் சிங் முண்டா ‘ஒவ்வொரு (ஆதிவாசி) கிராமத்திற்கும் அதற்கென்று சொந்தக் கொடி உள்ளது. வேறு எந்த பழங்குடியினராலும் மற்றவரின் கொடியை நகலெடுத்து வைத்துக் கொள்ள முடியாது. ஒருவரின் கொடியை யாராவது எதிர்க்கத் துணிவார்கள் என்றால் தங்களுடைய கொடியின் மாண்பைக் காப்பதற்காக குறிப்பிட்ட பழங்குடியினர் தங்களுடைய கடைசி சொட்டு ரத்தம் வரை சிந்திப் போராடுவார்கள் என்பதை உங்களிடம் உறுதியளித்துக் கூறுகிறேன். இனிமேல் அந்தக் கிராமங்கள் அனைத்திலும் இரண்டு கொடிகள் இருக்கப் போகின்றன. எங்களிடம் கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாக ஒரு கொடி இருந்து வருகிறது. இனிமேல் இந்த தேசியக் கொடி மற்றொரு கொடியாக, நமது சுதந்திரத்தின் குறியீடாக எங்களிடம் இருக்கும்…’ என்று உரையாற்றினார். மூவர்ணக் கொடி தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு இன்றளவிலும் தேசிய இயக்கத்தின் போது காணப்பட்ட வேறு பல கொடிகளும் உயிர்ப்புடனே இருந்து வருகின்றன. அநீதிக்கு எதிரான போராட்டங்களில் பெருமைக்குரிய அடையாளமாக செங்கொடி தொடர்ந்து இருந்து வருகின்றது.
தேசியக் கொடியின் நிறங்கள் எந்தவொரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாமல் மூவர்ணக் கொடி மதச்சார்பற்ற கொடியாகவே இருந்தது. தேசியக் கொடிக்கான தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய ஜவஹர்லால் நேரு ‘கொடியின் முக்கியத்துவத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ள சிலர் அது வகுப்புவாத அடிப்படையில் இருக்கிறது என்று கருதி வருகின்றனர். அவர்கள் கொடியின் இந்தப் பகுதி இந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அந்தப் பகுதி அந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றே நம்புகிறார்கள். ஆனால் முதன்முதலாக கொடி வடிவமைக்கப்பட்ட போதே நிறங்களுக்கென்று எந்தவொரு வகுப்புவாத முக்கியத்துவமும் தரப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்றார். மற்றொரு உறுப்பினரான ஷிபன் லால் சக்சேனா ‘அந்த மூன்று நிறங்களுக்கென்று வகுப்புவாதம் சார்ந்த தனித்த முக்கியத்துவம் எதுவுமில்லை என்பதை தெளிவான வார்த்தைகளில் நாங்கள் அறிவித்திருக்கிறோம். அந்தக் கொடியை வகுப்புவாதக் கொடி என்று இன்றைக்கு வகுப்புவாத வெறி பிடித்து அலைபவர்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை’ என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் கொடியில் உள்ள காவி நிறம் தியாகம், துறத்தல் போன்றவற்றை குறிப்பிடுகிறது என்றும் இயற்கையுடனான நெருக்கத்தை பச்சை நிறமும், அமைதி, வன்முறையற்ற செயல்களை வெள்ளை நிறமும் குறிப்பிடுகிறது என்றும் கொடியின் நிறங்களுக்கான பொருள் குறித்து ஆக்கப்பூர்வமான விளக்கங்கள் தரப்பட்டன. உறுப்பினர்கள் அனைவருமே அந்தக் கொடி வகுப்புவாதம் கொண்டதாக இல்லை என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ‘எப்போதும் விழித்திருந்து, இயங்கி, முன்னேறுங்கள். கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், முஸ்லீம்கள், ஹிந்துக்கள், பௌத்தர்கள் என்று அனைவரும் தங்களுக்கான பாதுகாப்பான இடத்தைப் பெறும் வகையிலான சுதந்திரமான, நெகிழ்வான இரக்கமுள்ள, கண்ணியமான, ஜனநாயக சமுதாயத்திற்காக உழையுங்கள் என்றே நம்மிடம் இந்தக் கொடி கூறுகிறது’ என்று தன்னுடைய விளக்கத்தில் கூறினார்.
அந்த விவாதத்தின் மூன்றாவது அம்சம் சமூக நீதி மற்றும் ஒடுக்குமுறை, பசியிலிருந்து விடுதலை தொடர்பாக அமைந்திருந்தது. சுதந்திரத்தின் அடையாளம் என்று கொடியை விவரித்த நேரு ‘நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பட்டினி, பசியுடன் உடுக்க ஆடையின்றி இருப்பது உள்ளிட்ட வாழ்க்கைத் தேவைகள், வளர்ச்சிக்கான வாய்ப்பின்மை போன்றவற்றுடன் இருக்கும் வரையிலும் முழுமையான சுதந்திரம் என்ற ஒன்று இருக்கப் போவதில்லை’ என்றார். அந்தக் கருத்தே மற்ற பலரின் உரைகளிலும் எதிரொலித்தது. உணர்ச்சிவசப்படாத மிகவும் நிதானமான சிந்தனையில் – எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகின்ற ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற பிரச்சாரம் வீடற்றவர்கள், நிலமற்றவர்கள், சொற்ப வருமானம் உடையவர்கள் என்ற காரணத்திற்காக கோடிக்கணக்கான குடும்பங்களை ஒதுக்கி வைக்கும் என்றே தோன்றுகிறது. அரசியல் நிர்ணயசபை வெளிப்படுத்திய உணர்வுகளைப் பொய்யாக்குகின்ற வகையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ள தீவிரமான முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தேவைப்படுவதாக உள்ளது.
அரசியல் நிர்ணயசபை 1947 ஜூலை 22 அன்று மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொண்ட போது நடைபெற்ற விவாதங்களில் நாட்டின் சுதந்திரத்திற்கான தியாகம், அதை அடைவதற்கான ஒற்றுமை, சமூக மற்றும் பொருளாதார நீதி போன்ற அம்சங்களே இடம் பெற்றிருந்தன. மூவர்ணக்கொடியை ஏற்றுக் கொண்டிராத ஆர்எஸ்எஸ் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் அமைப்பும் அந்த சமயத்தில் இருந்தது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகை ‘விதியின் வசத்தால் ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் நம்முடைய கைகளில் இந்த மூவர்ணக் கொடியைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்துக்கள் ஒருபோதும் அந்தக் கொடியை மதிக்க மாட்டார்கள், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘மூன்று’ என்ற வார்த்தை தீமையைக் குறிப்பதாகவே உள்ளது. மூன்று நிறங்களுடன் உள்ள இந்தக் கொடி நிச்சயமாக மிகவும் மோசமான உளவியல் விளைவுகளை உருவாக்கி, நாட்டிற்குத் தீங்கையே விளைவிக்கும்’ என்று 1947ஆம் ஆண்டில் எழுதியிருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனக் கொடியாக இருந்த காவிக் கொடியே இந்திய தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்சிடம் இருந்த விருப்பம், மனுஸ்மிருதியின் அடிப்படையிலேயே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பிடம் இருந்த விருப்பத்தைப் போலவே இருந்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட இரண்டே நாட்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பிறகு அந்தத் தடையை நீக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட பல நிபந்தனைகளுக்குள் தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கும் இடமிருந்தது. அப்போது உள்துறைச்செயலராக இருந்த எச்.வி.ஆர்.ஐயங்கார் அது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கருக்கு 1949 மே மாதத்தில் கடிதம் ஒன்றை எழுதினார். ‘அரசின் மீதான விசுவாசத்தில் எந்தவொரு பாகுபாடும் காட்டவில்லை என்று நாட்டைத் திருப்திப்படுத்துவதற்கு தேசியக் கொடியை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வது மிகவும் அவசியம்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய நிலைமையில் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை.
இப்போது அந்த வரலாற்றை தேசத்திற்கு நினைவூட்டுபவர்களைப் பார்த்து ‘பிரச்சனையை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்’ என்று ஆர்எஸ்எஸ் கூறி வருகிறது. அதுபோன்று கூறப்படுகின்ற கருத்து முற்றிலும் தவறானது என்று கூறுவதற்குக்கூட ஆர்எஸ்எஸ் தயாராக இல்லை. ஆர்எஸ்எஸ் தலைவரான கல்லாட்கா பிரபாகர் பட் ‘ஹிந்து சமாஜம் ஒன்றுபட்டால், பகவ த்வஜம் (காவிக் கொடி) தேசியக் கொடியாக மாறும்’ என்று சமீபத்தில் கூறியிருக்கிறார்.
ஒரு தேசமாக இந்தியாவின் அடிப்படையாக இருக்கின்ற சில விழுமியங்களைப் பிரதிபலிக்கின்ற தேசியக்கொடியானது ஆர்.எஸ்.எஸ்சைப் பொறுத்தவரை வெறுக்கப்படுகின்ற ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரப் போராட்டம் குறித்த அந்த விழுமியங்கள் மதச்சார்புகளுக்கு அப்பாற்பட்டு மதச்சார்பற்ற குடியுரிமையுடன் இணைக்கப்பட்டுள்ள தேசபக்திக்குள் வேரூன்றி இருக்கின்றன. அத்தகைய விழுமியங்கள் மீது இன்றைக்கு அதிகாரத்தில் வீற்றிருப்பவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் தங்களுக்கான பங்கை ஆங்கிலேயர்களின் பிரித்தாளுகின்ற கொள்கையை வலுப்படுத்துகின்ற வகையிலே வைத்துக் கொண்டிருந்தவர்கள் நடத்தி வருகின்ற தாக்குதல்களிலிருந்து அவற்றைப் பாதுகாத்து, நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற இயக்கம் இருந்திட வேண்டும். அரசியலமைப்பின் முகப்புரையில், இந்த மதத்தை அல்லது அந்த மதத்தைச் சார்ந்த மக்களாகிய நாங்கள் என்று இடம் பெறாமல் ‘இந்திய மக்களாகிய நாங்கள் (“ஹம் பாரத் கே லோக்) என்பதாக இடம் பெற்றிருக்கின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வார்த்தைகளுக்கு இணையானதாகவே கொடி ஏற்றும் செயல் இருக்க வேண்டும்.
https://www.ndtv.com/opinion/what-pms-har-ghar-tiranga-campaign-should-alert-us-to-3241768
2022 ஆகஸ்ட் 10
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
கொடிப் பயணம் கவிதை – நா.வே.அருள்
அன்று…
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
சுதந்திரம் இருக்க
தெருவில் பறந்தது
தேசியக் கொடி
இன்று…
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
கொடிகள் பறக்க.
தெருவில் நசுங்கும்
வாங்கிய சுதந்திரம்.
நாங்கள் விடுதலையின் புத்திரர்கள்
வீர நடை போடுகிறோம்.
குடியாத்தத்திலிருந்து
கொடியை
ஒரு குழந்தையைப் போல
ஏந்தி வருகிறோம்.
மாநிலம் முழுவதும்
சுற்றி வருகிறோம்
மாபெரும் சுதந்திரம்
பற்றி வருகிறோம்
கொடிகாக்கும் குமரர்களாய்க்
கூடி வருகிறோம்.
நதியைப் போல நடந்து வருகிறோம்
கடலைப் போல எழுந்து வருகிறோம்
கதிரைப் போல சுடர்ந்து வருகிறோம்
பாரதியின் தாழ்வாரத்தில் பதியமிட்டு
பாரதிதாசனின் பலகணியில் ஒளிரவிட்டு
பட்டுக்கோட்டைப் பாட்டில் பறக்கவிட்டு
தமிழ்ஒளி நெஞ்சத்தில் தழையவிட்டு
பாலசரஸ்வதி கலைக்கூடத்தில் நடனமிட்டு
சங்கரய்யா நல்லகண்ணு கரங்கள் தொட்டு
தாரிகாமி கொடியேற்ற
இந்திய ஒற்றுமையை
ஏந்தி வருகிறோம்.
குருதிக் குளியலுக்குப் பிறகு
இந்தியத் தாய் உடுத்திய
ஒற்றை உடைதான்
தேசியக் கொடி!
அந்த உடைக்குள்தான்
விடுதலையின் புத்திரர்கள்
இழைகளாக இருக்கிறார்கள்.
தேசியக் கொடி….
தியாகிகளின்
நெஞ்சங்களில் நடந்த நெசவு
அதிகாரத்தின் கைக்குட்டையாவதில்லை
உறங்காமல் விழித்திருக்கும்
ஒற்றைக் கணதான்
அசோகச் சக்கரம்!
வெள்ளையனை விரட்டியடித்த
வீரத் தழும்புகளுக்கு
கட்டுப் போட்டுக் காய்ந்த சிவப்புதான்
காவி நிறம்.
சாதிகளற்று சங்கமமாகி
துரோகிகளை அடையாளம் காட்டும்
தூய வெள்ளை
வளர்ச்சிக்கான பாலமாகி…
பசியில் கருத்திருக்கும் பச்சை
கண்ணீரும் வியர்வையும் குருதியும்
கலந்த
மூவண்ணங்களின்
முடி மகுடம்தான் கருநீலம்!
கர்ம வீரர்களின்
கடைசிப் போர்வை
இது கொடியல்ல…
ஒவ்வொருவர் கண்ணுக்குள்ளும்
உறைந்திருக்கும் உயிர்த்துணி.
ஆகஸ்டுக் காற்றில் அசைந்து
மையம் கொண்ட புயல்களின்
மலரும் நினைவுகளில்.
உலக அழகென
கம்பத்தின் உச்சியில் அசையும்
கடைசி இந்தியனின் கனவு
தேசியக் கொடியின் அட்சயப் பாத்திரத்திலிருந்துதான்
ஆயிரமாயிரம் அம்மணக் கம்பங்களுக்கு
ஆடை கிடைக்கிறது!
தேசியக் கொடியின் நிழலிலிருந்து
உருவாகும்
மின்சாரத் தீப்பந்தம் கண்டு
கொலைகாரர்கள் நடுங்குகிறார்கள்
கொள்ளைக்காரர்கள் பதுங்குகிறார்கள்
துரோகிகள் ஒதுங்குகிறார்கள்
தேசியக் கொடியின்
தேசிய கீதம் இதுதான்….
“அடிமைகள் கைப்பற்றும்போது
கம்பம் கழுமரமாகும்!
விடுதலை வீரர்களின் விரல்பட்டால்
கம்பம் கொடிமரமாகும்!”
– நா.வே.அருள்
மாநிலக் குழு உறுப்பினர்
தமுஎகசவின் 15 ஆம் மாநில மாநாட்டையொட்டி எழுதிய கொடிப்பயணக் கவிதை
சம்சுல் இஸ்லாமின் முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர்
“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின் சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”
சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே இவ்வாறு சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாகக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.
சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை. வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், 1990வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார். 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதீய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டபின்புதான், இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட, “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ்ட் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.”
சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.
சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும் இணைந்தகொண்டிருப்பத துரதிர்ஷ்டவசமாகும். இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்எஸ்எஸ்-உடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக்கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதீய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும் உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர் இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்” என்று வீர சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் உறுப்பினர் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார். மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.
இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார். விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு தேசியவாதி என நம்புகிறேன், மகாத்மா காந்தியும் நாட்டிற்காக ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்,” என்று கூறியிருக்கிறார்.
சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள் வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர் என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள், அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட எழுதிய எழுத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாலே, அவர் குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர், இந்து மகா சபா, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாக சார்ந்திருக்கிறார்.
சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை மக்கள் எதிர்கொண்டிருந்த சமயத்தில், சாவர்க்கர் பிரிட்டிஷாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவினை அளித்தார்.
இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார். சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு அறியலாம்.
“இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட, இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும், அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும், கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி மற்றும் போர்த்தந்திர கருவிகள் உற்பத்தி என அனைத்திலும் பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். .. ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.
இதன் விளைவாக, நாம் விரும்பினாலும் சரி, அல்லது விரும்பாவிட்டாலும் சரி, யுத்தத்தின் அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே, இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது, தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு கூறியதுடன் மட்டும் நில்லாது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ப்பதற்கும், அதன்மூலம் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கும் துணை போனார்.
சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார். அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம் காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும், ஏன், காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள் இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை பெற்று சுமார் நூறாண்டுகளானபின்னரும், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும் சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடும் என்று நம்புகிறோம். இந்தப் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின் 1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவற்றின் ஆபத்துக்களையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.
சாவர்க்கர் குறித்து கூறப்படும் ஏழு சரடுகளைக் கூறி அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் தக்க ஆவணச்சான்றுகளுடன் இந்தப் புத்தகத்தில் கட்டுரையாளர் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.
சாவர்க்கரை வீரரா அல்லது ஐந்து கருணை மனுக்கள் எழுதிக்கொடுத்து பிரிட்டிஷாரின் அடிமையாகச் சேவகம் செய்தவரா என்பதையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரா என்பதையும் இந்தப்புத்தகத்தைப் படித்திடும் ஒருவர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும்.
பாரதி புத்தகலாயத்தின் சார்பில் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் (Savarkar Unmasked) என்னும் இந்நூல் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவர விருக்கிறது.
இந்துத்துவாவை உருவாக்கிய சாவர்க்கரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டும்.
நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி – ச.சுப்பாராவ்
காலா பாணி
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த 2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள் ? என்று கேட்கிறார். இன்னும் சில நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்குப் போனால் கடந்த சில வருடங்களாக உங்கள் வேலை, உணவுப் பழக்கம், தூக்கம் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன. சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிக்கு இந்த நோய் இருந்ததா என்ற பழைய கதை தேவை. எனவே தனி மனிதனின் நோயைத் தீர்க்க அவனது பழைய வரலாறு அவசியம்.
சமூகத்தின் நோயைத் தீர்க்க சமூகத்தின் பழைய வரலாறு அவசியம் என்று அந்த நூலாசிரியர் சொல்லியிருப்பார். நான் அதற்கு முன்பிருந்தே வரலாற்று நூல்களை மிக ஆர்வமாகப் படிப்பேன் என்றாலும், மேற்சொன்ன கருத்தைப் படித்த பிறகு கூடுதல் அக்கறையோடும், கவனத்தோடும் வரலாற்று நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியான தேடலில் சமீபத்தில் கிடைத்தது தான் டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் காலா பாணி என்ற வரலாற்று நாவல்.
இந்திய விடுதலை இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது கட்டபொம்மன், மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த எதிர்ப்பியக்கங்கள்தான். ஏற்கனவே டாக்டர் ராஜேந்திரன் அந்த வீர வரலாற்றை 1801 என்ற நாவலாக எழுதியிருக்கிறார். அது பரவலான கவனத்தையும் பெற்றது. மருது சகோதரர்களுடம் 512 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட கிழக்கிந்தியக் கம்பெனி சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருதுவின் புதல்வன் 12 வயது சிறுவன் துரைசாமி உட்பட 73 பேரை நாடு கடத்தியது. பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் நாடுகடத்தப்பட்ட முதல் அரசர் னஉடையணத் தேவன்தான். இப்படி நாடு கடத்தப்பட்டவர்களை கம்பெனி காலா பாணி என்ற குறிப்பிட்டது.
காலா பாணிகள் 11.02.1802 அன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பி 66 நாட்கள் பயணத்தில் பினாங்கு வந்து சேர்கிறார்கள். இதில் உடையணத் தேவன் மட்டும் பிரி்ககப் பட்டு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார். 19.09.1802 தனது முப்பத்திநான்காவது வயதில் தனிமைச் சிறையில் இறந்து போகிறார் உடையணத் தேவன். அந்தக் கண்ணீர்க் கதைதான் காலா பாணி. இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழகத்திலிருந்து தான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவும் படைப்பு. படைப்பிற்கு உதவிய துணைநூல்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏராளமான ஆவணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இன்று வந்து கொண்டிருக்கும் பல டாக்கு ஃபிக்ஷன் போல் கூகுள் செய்து உட்கார்ந்த இடத்திலிருந்து எழுதப்பட்டதல்ல. உடையணத் தேவனின் மதுரை சக்கந்தி அரண்மனையிலிருந்து, பினாங்கு, பென்கோலன் என்று உடையணத் தேவனின் அந்த இறுதிப்பயண இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். கட்டபொம்மன், உடையணத் தேவன் போன்றோரின் இன்றைய வாரிசுகளிடம் நேர்காணல் செய்திருக்கிறார். உடையணத்தேவனின் வாளைக் கையில் ஏந்திப் பார்த்திருக்கிறார். கள ஆய்வு ஒரு நாவலுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை, அதுதான் நாவலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டும் நாவல்.
காலா பாணி அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து தமிழகம், தமிழகம் மட்டுமல்ல, அன்றைய உலகம் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தைத் தருகிறது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சியின் சிறைத் தகர்ப்பை அறிந்து அதைப் போல கோயம்புத்தூரில் ஒரு சிறை உடைப்பை போராளிகள் நடத்துகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. சோஸ் லெப்டினென்ட், ஆப்காரி காண்ட்ராக்டர், மிஸ்தீஸ், பேஷ்குஷ் கலெக்டர், இஸ்திமிரார் என்று எத்தனை எத்தனை புதுப் புது வார்த்தைகள் ! கம்பெனி பதவிகள், அதிகாரப் படிநிலைகள், அலுவலக நடைமுறைகள், எந்தப் பதவியில் உள்ளவர் வரும் போது எத்தனை குண்டு முழங்க வரவேற்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்கள், அன்றைய மருத்துவ முறைகள், பானர்மேனின் சமாதி பினாங்கில் இருப்பது, என்று ஏராளம் ஏராளமான தகவல்கள்.
துலுக்கப் பெண்ணை சாகிபா என்றும், மலாயா பெண்ணை நயோன்யா என்றும், மராட்டிய பெண்ணை மாதுஸ்ரீ அல்லது பாயி சாகேப் என்றும். வெள்ளைக்காரியை மேம் சாகிபா என்றும், பிரெஞ்சுக்காரியை மதான் என்றும் தமிழ் பெண்ணை நாச்சியார் என்றும் அழைக்க வேண்டும் என்ற ஓரிடத்தில் ஒரு படை வீரன் சொல்கிறான். இந்தியாவைச் சுற்றியுள்ள சின்னச் சின்னத் தீவுகளில் கம்பெனியின் ஆட்சி, அங்கு அடிமையாகவும், கைதியாகவும் போய் வாழ்நாள் முழுதும் துன்பத்தில் உழலும் தமிழர்கள், சந்தர்ப்பவசத்தால் சற்றே வசதியான வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள், அவர்கள் தம் சக தமிழர்களுக்குச் செய்யும் மிகச் சிறிய உதவிகள் எல்லாமே மிகையின்றிச் சொல்லப்பட்டுள்ளன.
ஆனால் நாவலில் ஆடம்பரமான மொழிநடை, வர்ணனைகள் எதுவும் கிடையாது. இயல்பான மொழி. ஆசிரியர் தனது மொழித் திறமையைக் காட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் வலிந்து மிகையாக எதையும் எழுதவில்லை. ஆனாலும், பெரிய உடையணத் தேவன் தன் சகாக்களோடும், கம்பெனி அதிகாரிகளோடும் கையறு நிலையில் பேசும் போது எனக்கு கண் கலங்குகிறது. அதுவும் அந்த கடைசி மூன்று பக்கங்கள்….
அன்றாடம் நான் பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே மதுரையின் கோட்டையின் மிச்சத்தைப் பார்ப்பேன். என் மதுரைக் கோட்டை என்று என்னையறியாமல் பெருமிதம் கொள்வேன். நாவலைப் படித்து முடித்த அன்று அந்தக் கோட்டை மதிலைப் பார்த்த போது அந்த பெருமிதம் இல்லை. நாடு கடத்தப்பட்ட உடையணத் தேவனைக் கடைசியாகப் பார்ப்பதற்காக அந்தக் கோட்டை வாசலில் நின்று அவரது மனைவி மருதாத்தாள் கெஞ்சிக் கதறியதும், காவலன் அவளை விரட்டி விட்டு கோட்டைக் கதவை இழுத்து மூடியதும் தான் கண்முன் நின்றன. முதன் முறையாக என் மதுரைக் கோட்டை மதிலைப் பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.
பழைய வரலாற்றைச் சொல்வதன் வழியே, இன்றும் நாம் கைவிடக் கூடாத ஏகாதிபத்திய எதிர்ப்பை ரத்தமும், சதையுமாகச் சொல்லிய டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ. ப அவர்களின் கரம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.
நூல்: காலா பாணி
ஆசிரியர்: டாக்டர். மு. ராஜேந்திரன், இ.ஆ.ப
வெளியீடு: அகநி வெளியீடு
விலை: ரூ650.00
பக்கம்: 536
நூல் அறிமுகம்: மு.கோபி சரபோஜியின் அந்தமான் – செல்லுலார் சிறை ஒரு வரலாறு – செ.கா
நம்மில் பலரும் நன்கு அறிந்த அந்தமான் கூண்டுச் சிறைகள் (cellular jail) நாட்டின் விடுதலைப் போராட்டத்தோடு நெருங்கிய தொடர்புடையது. தேசிய நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒன்று.
இது
“அடிமைத்தனத்தின் சின்னமா ?”
“ஒப்பற்ற சுதந்திரப்போராட்டத்தை நினைவூட்டும் சின்னமா ?”
“ஈவு இரக்கமற்ற ஆங்கிலேய ஆதிக்கத்தின் குறியீடா ?”
எப்படி எடுத்துக் கொள்வது ? இதற்கான பதில் , வரலாற்றை எந்த கண்ணாடி அணிந்து பார்க்கிறோம் என்பதில் இருந்தே கிடைக்கிறது. ஜப்பானிடம் இருந்து பின் சுதந்திர இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தமானில்தான் இந்தியாவின் முதல் தேசியக் கொடி , நேதாஜி தலைமையில் 1943 டிச.23ல் பறக்கவிடப்பட்டது. தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்த இந்நிகழ்வில் 1:30 மணி நேர உரையின் முடிவில்தான் அவரது புகழ் பெற்ற “டெல்லி சலோ” முழக்கம் எழுப்பப்பட்டது.
சுருக்கமாக 15 அத்தியாயங்களில் செறிவாகவும் , முழுமையாகவும் அந்தமான் சிறை குறித்து விளக்கியிருப்பது நூலாசிரியரின் கடுமையான பணிக்கு சான்று பகர்கிறது.
“கத்தியின்றி , இரத்தமின்றி பெறப்பட்ட சுதந்திரம் எங்கள் சுதந்திரம்” என போலிவேசம போட்டு பிதற்றித் திரியும் போலித்தனம் என்று ஒழிகிறதோ அன்றுதான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை நம் தலைமுறைகள் முழுமையாகவும் , உண்மையாகவும் அறிந்துகொள்ள முடியும் . அத்தகைய அறிதலுக்கு வகை செய்யும் வழிகளில் ஒன்றாக இரத்தம் சிந்தியும் பெற்றதுதான் எங்கள் சுதந்திரம் என உரக்கச் சொல்ல ஆசைப்பட்டேன்.அந்த ஆசையின் வெளிப்பாடுதான் இச்சிறிய தொகுப்பு!” என்று நூலாசிரியர் தமது உரையில் முன்னரே குறிப்பிட்டு விடுகிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் பின் அத்தியாங்கள் ஒவ்வொன்றும் துணை புரிகின்றன.
1858 மார்ச் 10ல் திறந்தவெளிச் சிறையாக செயல்படத் தொடங்கிய சிறை , பின்னாளில் ஏன் ஏழு பிரிவுகள் , 696 சிறிய அறைகளாக மாறியது என்பதற்கு நூலாசிரியர் தருகிற விளக்கம் ஏற்புடையதாக இருக்கிறது.
அதுபோலவே , இன்றும் அங்கே இஸ்லாமியக் குடியிருப்பு அதிகமாக இருப்பதற்கான காரணத்தை , வரலாற்றில் “மாப்ளமார் கலகத்தில்” இருந்து எடுத்து தந்திருப்பதும் சிறப்பானதாக இருக்கிறது.
அதுபோலவே ஆந்திரா ரம்பா பழங்குடியினர் கலகமும், தலைமையேற்று நடத்திய அல்லூரி சீத்தாராம ராஜூவின் போராட்டங்களுக்கும் , இந்த சிறைக்குமான தொடர்பும் நாம் அவசியம் தெரிந்தாக வேண்டிய ஒன்று.(அண்மையில் ராஜமவுலியின் Pan இந்தியத் திரைப்படமான RRR படத்தின் ட்ரைலர் ஒன்லைனும் காட்சியமைப்பும் இதைத் தான் நினைவூட்டின)
சிறைக்குள் நடந்த உச்சகட்டக் கொடுமைகள் , அவற்றுக்கு எதிராக அணியமான கைதிகளின் தொடர் கிளர்ச்சிகள் , ஆங்கில அரசைப் பணிய வைத்த உண்ணாவிரதப் போராட்டங்கள் , சிறைக்கூடம் தத்துவங்களை வளர்த்தெடுத்த சிந்தனைக்கூடமாக மாறியதன் பின்னணி , “ஆசியா ஆசியர்களுக்கே” என்று முழங்கிய ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு,அவர்களால் சீரழிந்த உள்ளூர் கிராமங்கள் என நாம் அதிகம் கேட்டிராத பல தகவல்களை கோர்வையாக சுவைபட எடுத்துக் கூறியிருக்கிறார்.
அதிகபட்சம் ஒண்ணரை மணிநேரத்திற்குள் வாசித்துவிடலாம். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
நூல்: அந்தமான் – செல்லுலார் சிறை ஒரு வரலாறு
ஆசிரியர்: மு.கோபி சரபோஜி
விலை: ரூ. 60/-
பக்கங்கள்: – 56
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
ஜான் டன் ஆங்கில கவிஞர் மொழி பெயர்ப்பு கவிதை – தமிழில்: தங்கேஸ்
கவிதைச் சூழல்
(ஷேக்ஸ்பியரின் சமகால கவிஞரான ஜான் டன் எழுதிய பத்து சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்றாக. (Death be not proud (Holy Sonnet 10) ) விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. காதல் கவிதைகளும் பெண் ஈர்ப்புக் கவிதைகளும் எழுதிக் கொண்டிருந்த ஜான் டன் தன் பிற்கால வாழ்க்கையில் ஒரு உண்மையான மத போதகராக மாறிய பின்பு முற்றிலும் கிறிஸ்த்துவ மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல் (Sonnet ) இது . மரணமென்பது வாழ்வின் முடிவல்ல இறைவனின் சொர்க்கத்தில் எல்லையின்மையில் வெளியில் தூய ஆன்மாவின் ஆனந்தம் தொடரும் என்கிற ரீதியில் எழுதப்பட்ட பதினான்கு வரிகளை கொண்ட பாடல் இது)
John Donne
Death be not proud (Holy Sonnet 10)
கர்வம் வேண்டாம் மரணமே I
ஆனாலும் அத்தனை கர்வம்
உனக்கு வேண்டாம் மரணமே |
அறியாதவர்களோ உன்னைப் பார்த்து
அகில உலகச் சக்கரவர்த்தி
அதி பயங்கர கு௹பி என்று அடைமொழியிட் டு
நடு நடுங்குகிறார்கள்
ஆனால் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் நீ
அத்தனை ஆனந்தப்படத் தேவையில்லை
ஓர் இரகசியம் தெரியுமா உனக்கு?
மெய்யாகவே நீ கொல்லும் மனிதர்கள்
யாரும் சாவதில்லை
ஓய்வையும் உறக்கத்தையும்
ஓவியம் தீட்டுகிறேன்
அட ஆச்சரியம் உன் முகம் தோன்றுகிறது ஓவியத்தில்
அம்முகத்திலிருந்து பீறிட்டு பிரவாகமெடுக்கிறது ஆனந்தம்
ஆகச் சிறந்த மனிதர்கள் உன்னோடு பயணிக்கும் போது
அவர்களின் எலும்புகளோ
பூமிக்குள் போகின்றன
அவர்களின் ஆன்மாவோ எல்லையின்மைக்குள் பறக்கின்றது
பெருமிதத்தால் பெருத்து விடாதே மரணமே
நீ சுதந்திரமானவனா சொல் ?
அடிமை தானே நீ ?
விதிக்கும் அகாலத்திற்கும்
இரத்த வெறி கொண்ட அரசர்களுக்கும்
தற்கொலை என்ணம் கொண்ட வீணர்களுக்கும்
நீ அடிமை தானே மரணமே..?
உன் சகவாசம் என்ன?
விஷத்துடனும் போர்க்களத்துடனும் போக்கிடமற்ற நோய்களுடனும் தானே
ஓ… அதிகர்வி மரணமே !
விரல்களின் வருடல்களிலேயே
உயிர்களுக்கு தூக்கத்தைத் தருபவன் என
ஆணவத்தில் ஆர்ப்பரிக்க வேண்டாம்
பாப்பி மரங்களின் போதை நெடியும்
மந்திரவாதியின் உச்சாடனங்களும் கூட
எங்களுக்குத் தூக்கம் தருபவை தானே.
இறுதி என்பது என்ன?
இங்கே சிறு துயிலில் விழுகிறோம்
அங்கே எல்லையின்மையில் எழுகிறோம்
பிறகு எங்களுக்கேது இறப்பு?
உண்மையில் அது உனக்குத்தானே?
மூலம்: ஜான் டன்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்