நூல் அறிமுகம்: சுனில் கிருஷ்ணனின் காந்தியைச் சுமப்பவர்கள் – பாவண்ணன்
புதிய கோணங்கள் புதிய காட்சிகள்
பாவண்ணன்
காந்தியடிகளின் காலத்தில் வாழ்ந்த மற்ற தலைவர்களுக்கும் காந்தியடிகளுக்கும் இடையில் முக்கியமானதொரு வேறுபாடு இருக்கிறது. மற்றவர்கள் அனைவரும் நாட்டு விடுதலைக்காகவும் மக்களின் பொதுவான வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதுவதற்காகவும் உழைப்பவர்களாக இருந்தனர். காந்தியடிகள் இவர்களைவிட ஒரு படி மேலே சென்று, தனிமனித வாழ்க்கைத்தரத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டார். வாழ்க்கைத்தரம் என்பதை போதிய அடிப்படை வசதிகளோடு வாழ்வது என்னும் வரையறையிலிருந்து ஒழுக்கத்தோடும் சத்தியத்தோடும் நேர்மையோடும் வாழ்வது என்னும் வரையறைகளையும் இணைத்துக்கொண்டார்.
இந்த வரையறைகளை ஒவ்வொரு கணமும் காந்தியடிகள் தன் செயல்கள் வழியாக நினைவூட்டியபடியே இருந்தார். அவற்றிலிருந்து ஒருபோதும் பிசகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கதராடைகளை அணிவதையும், இராட்டையில் நூல்நூற்பதையும் வலியுறுத்தியதுபோலவே தீண்டாமையைக் கைவிடுவதையும் சத்தியத்தைக் கடைபிடிப்பதையும் அவர் வலியுறுத்தினார். ஒரு கண்காணிப்புக்கோபுரத்தின் மீதிருக்கும் விளக்கிலிருந்து பொழியும் வெளிச்சத்தைப்போல காந்தியடிகளுடைய சொற்கள் மக்களுக்குத் திசைகாட்டியபடி இருந்தன. அரசியல் களம் என்னும் எல்லைக்கு அப்பால் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக தகவமைத்துக்கொள்ளும் விழைவையும் விசையையும் அவர் வழங்கினார். அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்த பிறகும் கூட அவரோடு உரையாடுவதற்கான தருணங்களை இந்த விழைவும் விசையும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.
கணக்கற்ற இத்தகு தருணங்கள் பெருகப்பெருக, கதைத்தருணங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. காந்தியடிகளை மையப்பாத்திரமாக்கி பல நூறு கதைகளை எழுதிப் பார்க்கும் சாத்தியங்கள் உருவாகின்றன. ஒவ்வொரு கதையும் காந்தியடிகளை மதிப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. காந்தியடிகளை நேர்மறையாகத்தான் மதிப்பிட வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. எதிர்மறையாகவும் மதிப்பிடலாம். அந்தச் சுதந்திரத்துக்கு யாரும் குறுக்கில் நிற்பதில்லை. ஆனால் எப்படி முன்வைத்தாலும் அது ஒரு படைப்புக்குத் தேவையான தர்க்கத்தின் அடிப்படையில் எழுதி நிறுவப்பட வேண்டும்.
காந்தியை ஒரு கதைப்பாத்திரமாகக் கொண்டு தமிழில் பல்வேறு எழுத்தாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன். இன்றைய வாழ்வில் காந்தியடிகள் என்னவாக நமக்கு எஞ்சுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் விதமாக நீண்டதொரு முன்னுரையும் இத்தொகுதிக்கு எழுதியுள்ளார். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய எண்ணங்களும் நிலைபாடுகளும் நம் முன் ஒரு பெரிய சவாலாகவே காட்சி தருகின்றன. இன்னும் பல தலைமுறைகளுக்கு அவர் வாழ்க்கை ஒரு பேசுபொருளாக நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.
கடந்த நூற்றாண்டில் ஐம்பதுகளில் ஜம்புநாதன் என்பவரின் முயற்சியால் ‘காந்தி கதைகள்’ என்னும் தொகுதி வெளிவந்தது. அவை அனைத்தும் காந்தியடிகளின் வாழ்க்கையிலே பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகள். காந்தியடிகளே நேரிடையாக எழுதிய குறிப்புகளிலிருந்தும் காந்தியடிகளோடு பழகிய பல ஆளுமைகள் எழுதிவைத்த குறிப்புகளிலிருந்தும் திரட்டியெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டவை. சுனில் கிருஷ்ணன் தொகுப்பிலிருக்கும் கதைகள் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. கற்பனையை அடிப்படையாகக் கொண்டவை. ஊகங்களின் அடிப்படையில் அமைந்த உரையாடல்களைக் கொண்டவை. அதே சமயத்தில் காந்தியடிகளை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டவை. தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளில் ஏழு சிறுகதைகள் காந்தியடிகளின் மரணத்தை மையமாகக் கொண்டிருப்பது ஒரு விசித்திரமான ஒற்றுமை.
சுனில் கிருஷ்ணனின் ஆரோகணம் ஒரு முக்கியமான சிறுகதை. மகாபாரதத்தில் பதினெட்டாவது பருவமாக இடம்பெற்றிருக்கும் சுவர்க்க ஆரோகணப் பருவத்தின் சாயலை இச்சிறுகதை கொண்டிருக்கிறது. தருமரின் இறுதி யாத்திரையையும் சொர்க்கத்துக்குச் செல்வதையும் மகாபாரத ஆரோகணம் விவரிக்கிறது. தருமருக்கு வாய்த்த இறுதி யாத்திரையைப்போல காந்தியடிகளுக்கு ஓர் இறுதி யாத்திரை வாய்த்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற வினாவிலிருந்து தன் கதைத்தருணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சுனில் கிருஷ்ணன். இறுதி யாத்திரையின் முக்கியமான அம்சமே, தன் மனம் கொண்டிருக்கும் பற்றுகளை உதறிவிட்டுச் செல்வதுதான். மண்ணுலகில் வளர்த்துக்கொண்ட பற்றுகளை மண்ணிலேயே உதறிவிடுவது.
காந்தியடிகள் உதறும் பற்றுகள் எதுவாக இருக்கும் என்று அறிந்துகொள்ளும் ஆர்வமே இக்கதையைப் படிக்கத்தூண்டுகிறது. முதலில் அவர் தன் ஆருயிர் மனைவி கஸ்தூர் பா மீது கொண்டிருந்த பற்றைத் துறக்கிறார். இரண்டாவதாக வாழ்நாள் முழுதும் விரும்பி உச்சரித்த ராமநாமத்தின் மீதான பற்றைத் துறக்கிறார். இறுதியாக வாழ்நாள் முழுதும் திருத்திச் சரிப்படுத்திவிடலாம் என நினைத்து தோல்வியுற்ற மூத்த மகன் ஹரிலால் மீதான பற்றைத் துறக்கிறார். இறுதியில் மலைச்சிகரங்களுக்கு அப்பால் பாற்கடலைப்போல வெள்ளைச்சமவெளியை அவர் பார்க்கிறார். தொடுவானம் என்பதே இல்லாத வெண்மை. ‘திருவாளர் காந்தி’ என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு காந்தி திரும்பிப் பார்த்தார்.
அங்கே யமன் நின்றிருந்தார். “உங்களுக்காக சொர்க்கத்தின் தாழ்கள் திறந்திருக்கின்றன. நீங்கள் உங்கள் வாழ்வில் துறந்த எல்லா இன்பங்களும் அங்கே உங்களுக்குக் காத்திருக்கின்றன” என்று அவர் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். ஆனால் காந்தியடிகளுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல விருப்பமில்லை. அதனால் யமனிடத்தில் தன்னை நரகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறார். நரகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, அங்கிருக்கும் நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன. எங்கும் சீழ் வடியும் புண் உடையவர்கள். ஆயினும் அவற்றைப் பார்த்து முகம்சுளிக்காமல் அங்கேயே நிற்கிறார். பிறகு தன் சேவை அத்தகையவர்களுக்கே தேவைப்படுகிறது என அறிவித்துவிட்டு காந்தியடிகள் நரகத்துக்குள் சென்றுவிடுகிறார். பிறர் துன்பம் கண்டு இரக்கமும் கொள்கிற, பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி அவற்றை நீக்குவதற்குரிய வழியை உருவாக்குகிற ஒரு தோன்றாத்துணைக்கான கனவும் ஏக்கமுமே சுனில் கிருஷ்ணனை இக்கதையை எழுதத் தூண்டியிருக்கக்கூடும்.
கலைச்செல்வி எழுதிய ஆடல் மற்றொரு முக்கியமான சிறுகதை. சுடப்பட்டு கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்துவிட்ட காந்தியடிகளின் உயிர் பிரியவிருக்கும் தருணத்தில் அவர் கண்கள் வானின் மேகக்கூட்டத்திடையில் தென்படும் கஸ்தூர் பா வின் முகத்தைக் கண்டடைகின்றன. அந்த இறுதிக்கணத்தில் இருவரும் ஒருவரோடொருவர் உரையாடிக்கொள்கிறார்கள். கேள்விகள். பதில்கள். விளக்கங்கள். விவாதங்கள். கோரிக்கைகள். மெல்ல மெல்ல அந்த உரையாடல் ஒரு முடிவைத் தொடுகின்றது. இறுதியாக அடுத்த பிறவியிலும் எனக்கு நீ துணையாக வருவாயா என்னும் கேள்விக்கு இருவருமே ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என சொல்லிக்கொள்கிறார்கள். கசப்புகளையும் துன்பங்களையும் கடந்து ஒருவர் மீது ஒருவர் கொள்கிற விருப்பத்தையும் ஈடுபாட்டையும் நாம் எப்படி புரிந்துகொள்வது? அந்த இயற்கையின் ஆடல் என்பது நம் புரிதல் எல்லைக்கு அப்பாலிருக்கும் புதிர்.
ஜெயமோகனின் நீரும் நெருப்பும் காந்தியடிகள் ஒரு பிரச்சினை சார்ந்து தன் அணுகுமுறையைத் தனித்தன்மை மிக்கதாக எப்படி மாற்றி அமைத்துக்கொள்கிறார் என்பதை உணர்த்துகிறது. அந்தத் தனித்தன்மையே அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சமாகும். காந்தியடிகள் 1918இல் ஸ்பேனிஷ் ப்ளூ என்னும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிறார். எந்த நேரமும் மரணம் வந்து தொட்டுவிடும் என்பதுபோல அவர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அந்த உண்மை நிகழ்ச்சியை தன் போக்கில் விரித்தெழுதுகிறார் ஜெயமோகன். தன்னால் அவரை நோயிலிருந்து மீட்கமுடியும் என சொல்லிக்கொண்டு ஒரு பைராகி அங்கே வந்து சேர்கிறார்.
தன் வைத்திய வழிமுறை அனல்வழிப்பட்டது என்று அவர் தெரிவிக்கிறார். அவருடைய உயிராற்றலில் அணைந்துகொண்டிருக்கும் நெருப்பை மீண்டும் சுடர்விடச் செய்து பிழைக்க வைத்துவிட முடியும் என்று சொல்கிறார். காந்தியடிகளின் மனம் அந்த வைத்திய முறையை ஏற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறது. பைராகியின் உரையாடலை அசைபோடுவதன் வழியாக, அனல் வழிமுறைக்கு மாற்றாக நீர் வழிமுறையை அவர் தேர்ந்தெடுக்கிறார். கடைநிலை மக்களுக்கு அவர் ஆற்றவேண்டிய கடமைகள் சுட்டிக் காட்டப்பட்டதும் அவருடைய உடலில் துடிப்பு படரத் தொடங்குகிறது. மறுநாள் காலையில் மருத்துவத்தைத் தொடங்குவதற்கு ஆவலோடு வந்த பைராகி புன்னகையுடன் வெளியேறிவிடுகிறார். நீரும் நெருப்பும் வெறும் மருத்துவ வழிமுறையாக மட்டுமன்றி, படிமங்களாக மாறிவிடுகின்றன.
பி.எஸ்.ராமையா எழுதிய பதச்சோறு சிறுகதையை காந்தியுகத்துக் கதை என்றே சொல்லவேண்டும். இது குமுதம் என்னும் பெண்ணைப்பற்றிய சிறுகதை. ஹரிஜன நலநிதியைத் திரட்டுவதற்காக தமிழகத்துக்கு வந்த காந்தியடிகள் குமுதம் வாழ்ந்த ஊருக்கும் வந்தார். அப்போது அவருடைய தந்தையார் சிறுமியாக இருந்த குமுதத்திடம் ஐந்து ரூபாய்த் தாளைக் கொடுத்து காந்தியடிகளிடம் ஒரு கையெழுத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனுப்பிவைத்தார்.
காந்தியடிகளோ ‘என் கையெழுத்துக்கு விலை ஐந்து ரூபாய் என்று யார் சொன்னது? தொடர்ந்து “அதற்கு மேல் கொடுக்கமுடியாத ஏழைகளுக்குத்தான் அந்தத் தொகை. உன்னைப் பார்த்தால் செல்வச்சிறுமியைப் போல இருக்கிறது. நீ அணிந்திருக்கும் நகைகளை நிதியாகக் கொடுப்பாயா?” என்று கேட்டார். அக்கணமே தான் அணிந்திருக்கும் ஆபரணங்களைக் கழற்றிக் கொடுத்துவிட்டாள் சிறுமி. “இதையெல்லாம் என்னிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்று வேறு நகைகளப் போட்டுக்கொள்ளக் கூடாது. அதற்குச் சம்மதம் என்றால்தான் நான் இவற்றை எடுத்துக்கொள்வேன்” என்று காந்தியடிகள் சொன்னார். அதைக் கேட்டதும் “இனி ஒருபோதும் நகைகளை அணியமாட்டேன்” என்று உறுதி அளிக்கிறாள் அச்சிறுமி.
அவள் வளர்ந்து பெரியவளான பிறகு திருமணத்தின்போதும் அதற்குப் பிறகும் அவளுக்கு இச்சபதத்தால் பிரச்சினை உருவாகிறது. ஆயினும் தான் காந்தியடிகளுக்கு அளித்த வாக்குறுதியின் காரணமாக அனைத்தையும் அவள் மனத்துணிவுடன் எதிர்கொள்கிறாள். காந்தி யுகத்தில் ஏதோ மந்திரசக்திக்குக் கட்டுண்டவர்கள்போல அணிந்திருக்கும் ஆபரணங்களை உள்ளார்ந்த அன்போடு கழற்றி அன்பளிப்பாக வழங்கிய பல பெண்கள் இந்தியாவெங்கும் வாழ்ந்திருக்கிறார்கள். இச்செய்தியை பலருடைய சுயசரிதைகளில் பார்க்க முடிகிறது. காந்தியடிகளை ஓர் இலட்சிய மனிதர் என்று சொன்னால், இப்படி அன்பளிப்பாக ஆபரணங்களை அளித்த பெண்களை இன்னொரு வகையான இலட்சியப்பெண்கள் என்றே சொல்லவேண்டும். இந்த அதிசயக்காட்சியை பி.எஸ்.ராமையா தன் கதைக்குரிய தருணமாக அமைத்துக்கொண்டார். குமுதத்தின் நகையணியா குணத்தின் காரணமாக, அவள்மீது மணவிலக்கு வழக்கு தொடுத்து நீதிமன்றத்துக்கு இழுக்கிறான் அவள் கணவன். அப்போதும் அந்த இலட்சிய மனைவி கொண்ட கொள்கையில் உறுதியாகவே இருக்கிறாள்.
புதுமைப்பித்தனின் புதிய நந்தன் மற்றொரு முக்கியமான சிறுகதை. இச்சிறுகதையில் காந்தியடிகள் நேரடிப் பாத்திரமாக இடம்பெறவில்லை. அவர் தன் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆதனூர் என்னும் ஊருக்கு வர இருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக ஊர்மக்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் போடப்பட்டிருந்த மேடைக்கு அருகில் காத்திருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் நிகழும் எதிர்பாராத விபத்தொன்றை கதைத்தருணமாக மாற்றியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
பிராமண குடும்பத்தில் எம்.ஏ.படித்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு காந்திய வழியை தன் வாழ்க்கைப்பாதையாக வகுத்துக்கொண்டவன் ராமனாதன். சேரியில் வாழும் பெண்ணொருத்தியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பவன். அதே ஊரில் சேரியில் பாவாடையாகப் பிறந்து நகரத்துக்குச் சென்று ஜான் தானியலாக வளர்ந்து தோழர் நரசிங்கமாக மாறுகிறான் ஒருவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தந்தையைப் பார்க்க ஊருக்கு வந்திருக்கிறான். ஊருக்குள் மகாத்மா வரவிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு அவரைக் காண்பதற்காக பார்வைத்திறன் இல்லாத கிழவ்னொருவன் சேரியிலிருந்து மேடையை நோக்கி நடந்துவருகிறான். அந்த நேரத்தில் சிவனின் நெற்றிக்கண்ணென ஒளிவிட்டு விரைந்து கடந்துபோகும் ரயில் அவன் மீது மோதிவிடுகிறது. அவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஓடி வந்த நரசிங்கமும் ராமனாதனும் பலியாகிவிடுகிறார்கள்.
காந்திய வழியில் சமூக எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர் ஒருவர். அதே எதார்த்தத்தை வேறு வழியில் புரிந்துகொண்டவர் இன்னொருவர். இவ்விரு கூட்டத்தையும் சேராத அப்பாவி மனிதர் மற்றொருவர். மதம் அல்லது சனாதனம் என்னும் ரயிலின் வேகம் எல்லாரையும் இரையாக்கிக்கொள்கிறது. அது யாரையும் பொருட்டாகக் கருதவில்லை. மதம் எல்லோரையும் இரக்கமின்றி அரைத்துக் கூழாக்கிவிட்டு நிற்காமல் போய்க்கொண்டே இருக்கிறது. புதுமைப்பித்தனின் கதைகளில் வழக்கமாகத் தென்படும் கசப்பின் சாரம் இக்கதையிலும் ஒட்டியிருக்கிறது. விடுதலையை ஒட்டிய காலத்தில் மதத்தின் பேரால் நிகழ்ந்த உயிரிழப்புகளைப்பற்றிய செய்தியைப் படித்த பிறகு புதுமைப்பித்தனின் கசப்பில் படிந்திருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சூடாமணி, அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், சரவணக்கார்த்திகேயன், தேவிபாரதி, ஜி.நாகராஜன், நகுல்வசன் போன்றோரின் சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எல்லாச் சிறுகதைகளும் தனித்தன்மை மிக்க புதியதொரு கோணம் வழியாக காந்தியடிகளைப் பார்க்க முனைகின்றன.
நூல்: காந்தியைச் சுமப்பவர்கள்
தொகுப்பாசிரியர்: சுனில் கிருஷ்ணன்
விலை: ரூ 300
வெளியீடு: பரிசில் புத்தக நிலையம் 235, எம் எம் டி ஏ காலனி, அரும்பாக்கம், சென்னை -600106.