குடும்ப ஒற்றுமையின் அவசியம் கட்டுரை – இல.சுருளிவேல்

குடும்ப ஒற்றுமையின் அவசியம் கட்டுரை – இல.சுருளிவேல்




குடும்பத்தில் கணவன் மனைவி சண்டையில் வரும் சில சம்பவங்களை முக்கியமாக கோபத்தில் வரும் வார்த்தைகளை ஒரு தாளில் எழுதி வைத்து என்றாவது ஒரு நாள் அதனை அசை போட்டால் ஒன்று சிரிப்பு வரும் அல்லது வெறுப்பு வரும். வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், புதிய அனுபவங்கள் என வந்து கொண்டேதான் இருக்கிறது. மறக்க வேண்டிய விஷயங்களை நீண்ட காலமாக மனதில் வைப்பதும், மறக்கக் கூடாத பல நல்ல விஷயங்களை மறந்து விடுவதும் மனிதனுள் ஏற்படுகிறது. மகிழ்ச்சியை ஏற்கும் மனம், துக்கங்களையும் துயரங்களையும் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை. இன்றைய சமூகம் நாகரீகம் என்ற பெயரில் மனித உறவுகளை இழந்து வருகிறது. நுகர்வு கலாச்சாரங்கள் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பங்களுக்கு தரப்படும் முக்கியதுவம் கூட மனித உறவுகளுக்கு கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாக குடும்ப அமைப்பில் பெரிய மாற்றங்களைக் காண முடிகிறது. தனிக்குடும்ப கலாச்சாரங்கள் அதிகரித்து வருவதால் வாரிசுகளுக்கு ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி பேசக்கூட ஆள் இல்லையெனத் தோன்றுகிறது. இன்றைய கல்விமுறை வேலைவாய்ப்புக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருவது போன்று தோன்றுகிறது. சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் கல்வி மிக அவசியமாக தேவைப்படுகிறது. இல்லையென்றால் நீதிமன்றங்களில் இவ்வளவு குடும்ப வழக்குகள் நிலுவையில் இருக்குமா. நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா. தற்போது கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறிய சண்டைகள் கூட பெரிய அளவில் விரிசலை உண்டு பண்ணுவதையும் பார்க்கலாம். மிகப்பெரிய நோய், போதை பழக்கம், ஒழுக்கமின்மை, தொடர் குடும்ப வன்முறை காரணமாக கணவன் மனைவி பிரிகிறார்கள் என்றால் கூட சரியான காரணமாக கருதலாம். ஆனால் சரியான காரணங்கள் இல்லாமலேயே “நான்” என்ற அகம்பாவத்தினால் பல குடும்பங்கள் பிரிந்து வாழ்கின்றன. இதில் நன்கு படித்தவர்கள், பதவியில் உள்ளவர்கள், முக்கிய பிரபலங்களும் அடங்குவர். இதில் காதல் திருமணங்களும், நிச்சயிக்கப்பட்டத் திருமணங்களும் அடங்கும்.

நம் நாட்டில் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் உணர்ச்சிவசத்தால் பேசிய வார்த்தைகள் மறு உருவம் பெற்று வெறுப்பினை உண்டாக்கி தம்பதியர் நிரந்தரமாக பிரிவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்நிலை வளர்ந்த நாடுகளில் மட்டும் இருந்து வந்தது. தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. தற்பொழுது அதிகரித்து வருகிறது. ஊரறிய திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் பிரிந்து செல்வதும் அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தொடங்கி விட்டனர். பெண்கள் ஆண்களை தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பதும், ஆண்கள் பெண்களை அடக்கியாள நினைப்பதும் குடும்ப வன்முறைக்கு மூல காரணமாக இருக்கிறது. தம்பதியரின் விருப்பங்கள் நிறைவேறாதபோது அவர்கள் உணர்ச்சிவசமான பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதுவே அவர்களுக்கு வாழ்வின் இறுதிவரை நிம்மதியற்ற வாழ்க்கையாகிவிடுகிறது. குடும்ப சீரழிவுக்கு வர்த்தக ரீதியாக எடுக்கப்படும் சினிமா, டிவி சீரியல்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்திய கலாச்சாரம் உலகுக்கே முன்மாதிரியாக இருந்து வருகிறது. குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். கணவன் மனைவி உறவு என்பது வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியமானதாகும். ஒற்றுமை என்பது பணத்தால் மட்டும் ஏற்படுவதில்லை. நல்லகுணங்கள், வெளிப்படைத்தன்மை, எல்லையற்ற அன்பு, புரிதல்கள் ஆகியவற்றால் ஏற்படுவதாகும். உதாரணமாக, மிகக்குறைவான வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் உண்டு. அதிகமான வருமானம் இருந்தும் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு. ஒற்றுமைக்கு இலக்கணமாக விளங்கும் குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கும். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஒற்றுமையின் மூலம் தீர்வு காணமுடியும் . அங்கு அமைதியும் ஆரோக்கியமான சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சிறிய சண்டை சச்சரவுகள் வருவது இயல்புதான். அதனை ஒருபோதும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தில் ஒரு குழந்தையை போல் இருக்க வேண்டும். அதாவது குழந்தையை அடித்தாலோ, திட்டினாலோ அக்குழந்தை உடனே அல்லது ஓரிரு நாட்களில் மறந்து விட்டு இயல்பு நிலைக்கு வந்து விடும்.

பெரியவர்கள் அப்படி அல்ல. ரோசம் என்ற பெயரில் குரோத புத்தியை வளர விடுகிறார்கள். அதற்கு சில பெற்றோர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். சிலர் உறவினர்கள் துணையோடு பழிவாங்கவும் முயற்சி செய்கிறார்கள். மறக்கவேண்டிய விஷயங்களை சீரியஸாக எடுத்துக் கொண்டால் நம் மனம் குப்பைத் தொட்டியாகிவிடும். இங்கு இருவருக்கும் உச்சகட்ட புரிதல் தேவைப்படுகிறது. பெற்றோரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் குழந்தைகள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடக்கும் போது குழந்தைகள் மனரீதியாக மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இது எதிர்கால தலைமுறையினருக்கு பின் உதாரணமாக அமைந்து விடும். என்றைக்குமே நமது முடிவுகள் ஒற்றுமைக்காகவும், பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணக்கூடியதாக இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான உறவுகளுக்கு வழிவகுக்கும். எனவே நம் மனம் ஒரு பூந்தோட்டமாக இருப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு பலாக்கணி போல. அதாவது பலாக்கணியை சுவைக்க வேண்டும் என்றால் பழத்தை பிசிர் கையில் ஒட்டாமல் அழகாக எடுத்துச் சுவைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதற்குப் பொறுமையும், அதை அழகாக எடுத்து சாப்பிடும் கலையையும் கற்க வேண்டும். பலர் பழத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் குத்தி குதறி கொஞ்ச பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு வேகமாக எரிந்து விடுகின்றனர். பழத்தை முழுமையாக ரசித்து ருசித்துச் சாப்பிட பழக வேண்டும். அதற்கு பொறுமையும், ஆர்வமும் அவசியம். இந்தக் கலையை கணவன், மனைவி இருவரும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நூறு சதவீதம் இனிக்கும். இருவரில் யாராவது ஒருவர் கற்று இருந்தால் வாழ்க்கை ஐம்பது சதவீதமாவது இனிக்கும். நாளுக்கு நாள் சுவை அனுபவம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், இருவரும் அந்தக் கலையை கற்கவில்லை என்றால் வாழ்க்கை முழுவதும் கசப்பு மட்டும்தான் மிஞ்சும். வாழ்க்கையின் சுவையை அனுபவிக்காமலேயே போய்விடுவோம். ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழும் கலையை கற்றுக் கொள்வோம். ஆண்துணை அல்லது பெண்துணை இல்லாத குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பு இல்லை.

எனவே, வாழ்க்கை துணையின் அவசியத்தை உணர்ந்து வாழ வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி என்ற உறவைவிட, பொறுப்புள்ள நண்பர்கள் வாழ்வின் இறுதிவரை சேர்ந்து வாழும் இடமாக குடும்பம் இருந்தால் குடும்பமும் கோவில்தான்.

முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204