வரலாற்று பாடப்புத்தகங்களை மாற்றி எழுத பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் – வரலாற்றிற்கு இழைக்கப்படுகின்ற அவமானம் – ஆர்.மகாலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுரு
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரலாறு தொடர்பான பள்ளிப் பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ‘சீர்திருத்தங்கள்’ குறித்த நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது ஏற்கனவே நன்கு நிறுவப்பட்டுள்ள அறிவுப்புலத்தின் மீதான தாக்குதல்களை மட்டுமல்லாது, வரலாற்றை மாற்றி எழுதுவது என்று அரசிடம் இருந்து வருகின்ற சந்தேகத்திற்கிடமான திட்டங்களுக்கு இணங்கிப் போகின்ற வகையிலான சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களையும் பரிந்துரைப்பதாக உள்ளது.
நவீன, முற்போக்கான சமுதாயத்தைப் பொறுத்தவரை வரலாற்றில் யார், எதை விட்டுச் சென்றிருக்கிறார்கள், எப்படிப்பட்ட வரலாற்று உணர்வு மக்களிடம் புகுத்தப்பட வேண்டும் என்பது குறித்து நிதானித்து சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. சலுகை பெற்ற ஒரு சிலர் பெரும்பான்மையான மக்கள் மீது மேலாதிக்கம் செய்வது, தலித்துகள், பழங்குடியினர், பெண்களை ஒடுக்குகின்ற வகையில் வரலாறு, பாரம்பரியம், கடந்தகால நடைமுறைகளைப் பயன்படுத்துவது, போலி நாட்டுப்பற்றுடன் பெரும்பான்மை ஹிந்து அடையாளத்தை பிணைத்துக் கொள்வது, சமூக உறவுகளின் மீது வர்க்கம், சாதி, பழங்குடி, மதம், பாலினம் போன்ற அடையாளங்கள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருவது என்று இருந்து வருகின்ற இந்தியச் சூழலில் அவ்வாறான சிந்தனைகள் குறிப்பாகத் தேவைப்படுவதாகவே இருக்கின்றன.
ஆனாலும் வரலாற்றை சமூகத்துவவாதக் கோரிக்கைகள் அல்லது அவற்றின் தேவைகளுடன் கொண்டு சென்று இணைக்க முடியாது. மற்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு இருப்பதைப் போலவே வழிகாட்டக் கூடிய வழிமுறைக் கருவிகளும், பகுப்பாய்விற்கான கட்டமைப்புகளும் வரலாற்றாசிரியர்களுக்கும் இருப்பதால் அத்தகைய நிபுணத்துவத்தைக் கொண்டிராதவர்களால் வரலாறு எது என்பதை நிச்சயமாகத் தீர்மானித்து விட முடியாது. எனவே வரலாறு குறித்ததாக இருக்கின்ற எந்தவொரு பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் பாடத்திட்டமும் வரலாற்றாசிரியர்களுக்கு மத்தியில் இருந்து வருகின்ற ஒழுங்குமுறை வரையறைகளை, பரந்த பொதுவான புரிதலை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இவ்வாறான சூழலில் கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ள ‘பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்த வரைவறிக்கை’யில் உள்ள பரிந்துரைகள் மீது நாம் அதிக அளவிலே கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. நாற்பத்தியாறு பக்கங்களுடன் உள்ள அந்த வரைவறிக்கையில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (NCERT), புனேவில் உள்ள மகாராஷ்டிரா மாநில பாடநூல் தயாரிப்பு மற்றும் பாடத்திட்ட ஆராய்ச்சி பணியகம் மற்றும் மகாராஷ்டிரா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (SCERT) போன்ற மாநில அளவிலான நிறுவனங்கள், ஏழு தனியார் நிறுவனங்கள், நான்கு பாட நிபுணர்கள் என்று அனைவராலும் வழங்கப்பட்டிருக்கும் பதிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக மின்னஞ்சல் மூலமாக வரைவறிக்கை தயாரிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்திய வரலாற்று காங்கிரஸின் (IHC) கருத்தும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அரசு நிறுவனங்களால் பள்ளி மாணவர்களுக்கென்று தயாரிக்கப்படுகின்ற பாடப்புத்தகங்களை ‘அரசியலமைப்பு விழுமியங்களை ஊக்குவிப்பது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவது’ என்ற வகையில் இருக்குமாறு சீர்திருத்தம், மறுவடிவமைப்பு செய்வதே அந்தக் குழுவின் பரிந்துரைகளின் நோக்கம் என்று வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படங்கள், கிராபிக்ஸ், QR குறியீடுகள். பிற ஒலி-ஒளி சார்ந்த பொருட்களின் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு ஆகியவற்றுடன் விளையாட்டுகள், நாடகங்கள், பட்டறைகள் ஆகியவற்றுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அருங்காட்சியகங்களுக்குச் செல்வது போன்ற புதுமையான கல்வியியல் பயன்பாடுகளை உள்ளடக்குகின்ற வகையில் பாடப்புத்தக வடிவமைப்பில் மாற்றங்களை அந்தக் குழு முன்வைத்துள்ளது.
வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி
வரைவறிக்கையின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் விவாதத்தைக் கிளப்பியுள்ள ஒரே பாடநூலாக வரலாற்றுப் பாடநூல் மட்டுமே இருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. அதுவொன்றும் தற்செயலானது அல்ல என்பதால் அதுகுறித்து வரலாற்றாசிரியர்கள் அதிக கவனம் செலுத்துவது முக்கியமாகிறது.
வரலாற்றைத் திரித்து காவிமயப்படுத்துகின்ற பாஜக அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் 2017 ஆகஸ்ட் 12 அன்று மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்
‘தேசிய வரலாறு, உள்ளூர் மற்றும் பிராந்திய வரலாறு, ‘போற்றப்படாத ஹீரோக்கள்’, வரலாற்றில் பெண்கள் போன்ற சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் வரைவறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தேசம் என்பது நவீனக் கருத்தாக இருப்பதாலும், கடந்த காலத்தை மிகவும் எளிமையான முறையில் முன்வைக்க முடியாது என்பதாலும் அறிக்கையில் உள்ள ‘தேசிய வரலாறு’ என்ற வார்த்தைப் பயன்பாடு வரலாற்றாசிரியர்களின் முன்னால் இருக்கின்ற முதல் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.
இந்திய வரலாற்று காங்கிரஸின் பொதுத்தலைவராக இருந்த சி.எஸ்.ஸ்ரீனிவாச்சாரி ‘ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பொதுவான அறிஞர்கள் என்று இவர்கள் அனைவருக்கும் மேலாக, பாடப்புத்தகங்களை எழுதுபவர்கள் தங்களைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வரலாறு என்பது ஒரு பிரச்சாரமோ அல்லது முரட்டுத்தனமான, மோசமான விளம்பரமோ கிடையாது’ என்று 1941ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த அமைப்பின் ஐந்தாவது அமர்வில் எச்சரித்திருந்தார்.
வழக்கமான, குறுகிய வரம்புகளுக்கு அப்பாற்பட்ட விரிவான, துணை தேசிய, தேசிய, சர்வதேசியச் சூழல்களை அறிந்து கொண்டு ‘உண்மையான வரலாறு’ குறித்து அப்போதே அவர் வெளிப்படுத்தியிருந்த அந்தக் கருத்துகள் வியக்கத்தக்க வகையில் சமகாலத்திற்கேற்றவையாகவே இருக்கின்றன. வரலாற்றை எழுதுவது குறித்து கவனமாக இருக்க வேண்டியது குறித்துப் பேசிய அந்த ஞானியின் அறிவுரையை எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இப்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருப்பது உண்மையில் வருத்தத்தை உண்டு பண்ணுவதாகவே உள்ளது.
இந்தியாவிற்கான பங்கைக் கொண்டு உலக வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக அல்லது இந்திய நாட்டின் ‘கிழக்கைப் பார்’ என்ற கொள்கைக்கு ஏற்றவாறு தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் தொடர்புகளை பள்ளிகளில் (அல்லது ஏதேனும் ஒரு நிலையில்) பொதுவரலாற்றுக் கல்வியாக சேர்ப்பதற்கான பரிந்துரைகளை – அவை எதேச்சையானவையாக, எளிமையானவையாக இருப்பதால் – தற்போதைய கொள்கை முன்னெடுப்புகள் தீர்மானிக்க முடியாது. இந்தியாவின் தொடர்புகள், பரிமாற்றங்கள், இடப்பெயர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு கிழக்கு, மேற்கு ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளுடன் இந்தியா கொண்டிருந்த தொடர்புகள் நிச்சயமாக ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும். அத்தகைய புரிதல் எதுவுமில்லாமல் நவீன காலத்தில் வணிகவியம், காலனித்துவ விரிவாக்கம் ஆகியவற்றின் எழுச்சியை உண்மையில் புரிந்து கொள்ள முடியாது.
இந்திய வரலாற்றைப் பற்றிய சரியான புரிதலானது உலக வரலாறு குறித்த ஆய்வுகளைச் சார்ந்தே இருக்கும் என்ற வாதத்தை முன்வைத்து உலக வரலாற்று ஆய்வைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று சி.எஸ்.ஸ்ரீனிவாச்சாரி விடுத்த அந்த வேண்டுகோளை முன்கூட்டியே எதிர்பார்த்ததாகவே 1939ஆம் ஆண்டு இந்திய வரலாற்று காங்கிரஸில் ஆர்.சி.மஜும்தார் ஆற்றிய தலைமையுரை அமைந்திருந்தது. ஆனால் புதுவகை ஊடகங்களால் உலகமே சுருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கூட அளவிலே உலக வரலாறு குறித்து கற்பிக்கின்ற முறைகளை நாம் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது முற்றிலும் முரண்பாடு கொண்ட செயலாகவே இருக்கிறது.
இந்தியாவின் வரலாறு வளமானதாக, பரந்துபட்டதாக உள்ளது. குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது காலகட்டங்கள் குறித்த முக்கியமான முன்னோக்குகளை உள்ளூர் அல்லது பிராந்திய வரலாறுகளால் நிச்சயமாக வழங்க முடியும். பிராந்தியம் குறித்த மாறாத, குறுகிய சமகாலப் புரிதல் என்று மஜும்தார் மற்றும் பிறரால் நிராகரிக்கப்பட்ட ‘மாகாணக் கண்ணோட்டம்’ என்பதிலிருந்து விலகிய வரலாற்றாசிரியர்கள் மாறிக் கொண்டே இருக்கின்ற அரசியல், மொழியியல், கலாச்சார செயல்முறைகளின் காரணமாக பிராந்தியங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த நுணுக்கமான விழிப்புணர்வு இருக்க வேண்டுமென்ற வாதத்தை முன்வைத்தனர். பள்ளிப் பாடப்புத்தகங்களின் மூலம் பிராந்திய உருவாக்கம், அடையாளம் ஆகியவற்றின் சிக்கலான தன்மையைக் கடத்துவது நமது கடமையாகும். இந்த வரைவறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளவாறு பிராந்திய பங்களிப்பை மட்டுமே கொண்டு ‘தேசிய வரலாறு, கௌரவம், ஒருமைப்பாடு’ ஆகியவற்றை முன்வைக்க முற்படுகின்ற செயல் வரலாற்றாசிரியர்களுக்கு – உண்மையில் வரலாற்றிற்கே தேவையற்ற, தகுதியற்ற செயலாகவே இருக்கும்.
பெண்களும் ‘புகழ்ந்து போற்றப்படாத ஹீரோக்களும்’
பெரும்பாலான வரலாற்று ஆதாரங்கள் குறிப்பாக நவீன காலத்திற்கு முந்தைய காலகட்டங்களில் ஆண்களால் எழுதப்பட்டவையாக பெரும்பாலும் ஆண்களைப் போற்றுகின்ற வகையிலே உருவாக்கப்பட்டவையாக இருப்பதால், பாடங்களில் பெண்களின் வரலாற்றுப் பங்களிப்புகளைச் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரை முக்கியமானதாகவே இருக்கின்றது. வேதங்கள், ஜாதகங்கள், உபநிடதங்கள், கல்வெட்டுகள், கலை குறித்த நூல்களை ஆய்வு செய்துள்ள ஏ.எஸ்.அல்டேகரின் ‘ஹிந்து நாகரிகத்தில் பெண்களின் நிலை’ போன்ற நூல்கள் இந்திய வரலாற்றாசிரியர்கள் அதை மறந்திருக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.
தாங்கள் வாழ்ந்த சூழலைப் பற்றிய புரிதல் இல்லாமல் மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே ‘தகுதியான பெண்கள்’ இருந்ததால் அவர்களைக் கணக்கிடுவதில் தடைகள் இருந்தன என்பதாக அடுத்த தலைமுறை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் திருமணம், குடும்பம், வீடு, உறவுகள் போன்ற சமூக நிறுவனங்களுக்குள் பெண்கள் வைக்கப்பட்டிருந்த விதம் குறித்த ஆழமான புரிதல், பாலினப் பாகுபாடுகளைக் கட்டுடைத்தல் போன்றவை நமக்கு வெவ்வேறு வடிவங்களில் பண்டைய காலங்களிலிருந்து இருந்து வந்திருக்கும் ஆணாதிக்கம், பாலினப் பாகுபாடு ஆகியவற்றின் வரலாற்று அடிப்படையை உணர்த்திக் காட்டுகின்றன.
தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற பள்ளிப் பாடநூல்கள் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள ‘பிரம்மவாதினி’ (பெண் சந்நியாசி) கார்கி வாச்சக்னவி, சாதவாஹனர் காலத்து கெளதமி பாலாஸ்ரீ, தமிழ் வைணவத் துறவி ஆண்டாள், காகதீய ஆட்சியாளர் ருத்ரம்மாதேவி, சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி சன்னம்மா மற்றும் பலரைப் பற்றி குறிப்பிடவே செய்கின்றன. அவை பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு இருந்து வருகின்ற கட்டமைப்பு வரம்புகளை மாணவர்கள் விமர்சன ரீதியாகப் பார்ப்பதற்கும் ஊக்குவிக்கின்றன.
வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் ‘புகழ்ந்து போற்றப்படாத ஹீரோக்கள்’ சேர்க்கப்பட வேண்டும் என்றுள்ள வரைவறிக்கையின் பரிந்துரை மிகவும் விசித்திரமானதாகவே உள்ளது. லட்சிய வரலாற்றாசிரியர் என்பவர் ‘தனது நாயகர்களின் கதையை இயல்பான முறையில் வெளிக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அவர்களைச் சுற்றி கதையைக் கட்டுகின்ற போக்கைக் காட்டக்கூடாது’ என்று கூறிய சி.எஸ்.ஸ்ரீனிவாச்சாரியின் பரிந்துரையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக நாம் நன்கு நிறுவப்பட்டிருக்கும் நடைமுறையிலிருந்து விலகிச் செல்வதாகவே தோன்றுகிறது.
வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் ‘குப்த்வன்ஷக் வீர்: ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யா’ என்ற தலைப்பில் 2019 அக்டோபர் 17 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்கந்தகுப்தாவை தலைசிறந்த அரசர் என்று போற்றியதுடன், வரலாறு அவருக்கு உரிய தகுதியை வழங்கிடவில்லை என்பதால் நமது வரலாற்றை தேசியவாதக் கண்ணோட்டத்தில் எழுதுவதை உறுதி செய்யும் வகையிலே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
மிக முக்கியமாக தற்போதுள்ள பாடப்புத்தகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள சில நபர்களுக்கு எதிரான அவதூறுகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த ஆட்சி மங்கள் பாண்டே, ராணி லக்ஷ்மிபாய், பண்டித ரமாபாய், பிர்சா முண்டா, தாதாபாய் நௌரோஜி, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, பெரியார் ஈ.வெ.ராமசாமி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, அல்லூரி சீதாராம ராஜு போன்றவர்களை விட்டுவிட வேண்டும் என்று முன்மொழிகிறதா என்ன??
காலனித்துவ அழுத்தங்கள், நவ ஏகாதிபத்திய கருத்துகள் இருந்த போதிலும், இருபதாம் நூற்றாண்டு இந்தியச் சூழலில் இருந்த வரலாற்றுப் புலமைத்துவம் நமக்கு கண்ணியமான, சுயாதீமான வரலாற்றுப் பாதையைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. 1970கள் மற்றும் 1980களில் எழுதப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும், 2006ஆம் ஆண்டு முதல் வெளிவந்துள்ள சமீபத்திய பாடப்புத்தகங்களும், பிராந்திய வேறுபாடுகள் அல்லது பெண்கள் மற்றும் பல்வேறு வரலாற்று நபர்களின் வரலாற்றுப் பங்கு குறித்த பிரச்சனைகளில் எளிதில் பாதிப்பை ஏற்படுத்துபவயாக உள்ளன. அணுகுமுறை மற்றும் விளக்கங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவான கல்விக் கருத்துக்களுடன் இணக்கமான தகவல்கள் மற்றும் விளக்கங்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தற்போது இருக்கின்ற பள்ளி வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் குறித்ததாக வரைவறிக்கையில் இடம் பெற்றிருக்கும் குறிப்புகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவையாகத் தோன்றவில்லை. இப்போதுள்ள பாடப்புத்தகங்கள் தகவல்களின் தொகுப்புகளை, உள்ளூர் மற்றும் பிராந்திய வரலாறுகளை, ஆண்கள், பெண்கள் என்று வரலாற்று நபர்களைத் தேர்வு செய்து கொண்டுள்ளவையாக உள்ளன என்றாலும் அவை நிச்சயமாக தன்னிச்சையான அல்லது வரலாற்று அடிப்படை எதுவுமில்லாத கருத்தாக்கங்களிலிருந்து வெளிவந்தவையாக இருக்கவில்லை. அதேபோன்று பாடப்புத்தகங்களில் உள்ள தகவல்களை அதிகரிப்பதன் மூலம் ஏற்படுகின்ற கற்பித்தல் தாக்கங்களைக் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமானதாகிறது.
வரலாற்று ஆதாரங்கள் மற்றும் தொல்பொருள் ஆதாரங்களைக் கொண்டு கடுமையான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் கடந்த காலத்தைப் பற்றி நம்மிடம் இருந்து வருகின்ற புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்குவது, மறுபார்வை கொள்வது, மறுபரிசீலனை செய்வது போன்ற செயல்பாடுகள் அவசியமான தேவையாகவே உள்ளன. ஆனால் அதே நேரத்தில் வரலாறு மற்றும் வரலாற்று தன்னுணர்வைக் கட்டமைக்கவும், மேம்படுத்தவும் நிகழ்காலச் சிந்தனைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதுவும் முக்கியமானதாகிறது. ‘தேசிய வரலாறு’ பற்றிய கருத்துகள் அல்லது இந்திய வரலாற்றின் பண்டைய மற்றும் இடைக்காலங்களை முறையே பூர்வீக/ஹிந்து, வெளிநாடு/முஸ்லீம் என்பது போன்ற கருத்துகளை ஒருங்கிணைப்பது அதனை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது.
கடந்த நூற்றாண்டாகத் திறம்பட்டவர்களின் முயற்சிகள் மற்றும் சுய-உணர்வுப்பூர்வமான விவாதங்கள் மூலம் இந்தியாவின் கடந்த கால வரலாற்றுப் புலமை அதிநவீனத்தின் உயர் மட்டத்தை எட்டியுள்ளது. அவ்வாறான சூழலில் வரலாற்றாசிரியர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிட முயலும் பிற்போக்கான போக்குகளை எதிர்த்து நிற்பது அவசியமாகிறது.
கற்பித்தல் பரிசீலனைகளை மனதில் வைத்துக் கொண்டு முறையியல் ரீதியாக கடுமையானதாக, முதன்மை ஆய்வுகளின் அடிப்படையிலான வரலாற்றுப் புலமையைப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் பிரதிபலிக்க வேண்டும். ‘சீர்திருத்தப்பட்ட’ புதிய பாடப்புத்தகங்களை நுழைப்பதற்காக தற்போதுள்ள பள்ளி வரலாற்றுப் பாடப்புத்தகங்களை நீக்கும் வகையிலே ‘உண்மை என்பதாகத் தோற்றமளிக்கின்ற’ தகவல்களைப் பயன்படுத்திக் கொள்வது சரியாகாது. தற்போது சொல்லப்பட்டு வருவதைக் காட்டிலும் வரலாறும், வரலாற்றை எழுதுவதும் உண்மையில் மிகத் தீவிரமான செயல்பாடுகளாகும். இதுவே வரலாற்றைக் கட்டமைக்கிறது என்று கட்டளையிட்டுக் கூறுவதன் மூலமாக தேசியப் பெருமையை நிலைநாட்டி விட முடியாது. அதுமட்டுமல்ல… வரலாற்றை வெட்டி-ஒட்டுகின்ற வகையிலான செயல்பாடாக நிச்சயம் குறுக்கி விடவும் முடியாது.
https://frontline.thehindu.com/cover-story/bjp-attempt-to-rewrite-textbooks-a-disservice-to-history/article38189091.ece
நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்: தா.சந்திரகுரு