1977ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தற்போதைய 2024ஆம் ஆண்டு தேர்தல் இந்தியாவைப் பொருத்தவரை மிக முக்கியமான தேர்தலாக இருக்கப் போகிறது
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 7 ராஜீவ் காந்தியும் மஞ்சள் புரட்சியும் – பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ராஜீவ் காந்தி ஆவார். அக்டோபர் 31, 1984ல் இந்திரா காந்தி இறந்ததை அடுத்து பிரதமராகப் பொறுப்பேற்றார். ராஜீவ் காந்தி அமெரிக்கக் காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போது “நான் இளைஞன், எனக்கு ஒரு கனவு உண்டு, அது இந்தியாவை வலுவான, சுதந்திரமான தன்னம்பிக்கை அடிப்படையில் வளர்ந்து உலக நாடுகளில் முன்வரிசைக்குக் கொண்டு செல்வதற்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்” என்றார். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியினை அடைய அனைத்து துறைகளின் மேம்பாட்டின் அவசியம், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உண்டாக்கவேண்டும் என்றார். ராஜீவ் காந்திக்கு முன்பாக 35 ஆண்டுகளாக இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த பெரிய மாற்றமும் அடையவில்லை. எனவே மக்களின் அடிப்படைத் தேவைகளை அளிக்கத் தொழில்நுட்ப மாற்றங்கள் வழியாக இவற்றை அளிக்க முற்பட்டார். தகவல் தொழில்நுட்பம் இவற்றிற்கான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி, தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் மென்பொருள், அணுக்கரு வளர்ச்சி, பாதுகாப்பு, ஆயுத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பயங்கர வாதத்தை ஒழிப்பது, ஏழை-பணக்காரர் பேதத்தை அகற்றுதல், அமைதியான வாழ்வினை உறுதி செய்தல், கல்வி மேம்பாடு, சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், வேளாண் வளர்ச்சி, தொழில் மேம்பாடு, சுயச்சார்பு இந்தியாவினை உருவாக்குதல், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு, நீதி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு போன்றவற்றின் மீது கவனம் செலுத்தினார். இதற்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நாட்டின் இறையாண்மையையும் நல்லிணக்கத்தையும் காக்கக் கல்வி அவசியம் என்று உணர்ந்த ராஜீவ் காந்தி புதிய கல்வி முறையினைக் கட்டமைத்தார். இனம், ஜாதி, பிறப்பு வருணம், பாலினம், செல்வம், போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி சமூக நீதியினை நிலைநாட்ட ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, ‘நம்முடைய முதன்மைக் குறிக்கோள் வறுமையினை ஒழிப்பது, சமூக நீதி மற்றும் சுயச்சார்பினை தோற்றுவிப்பதாகும்”. என்றார். பட்டியல் இனத்தவர், பழங்குடியினரின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்து பெண்களுக்கான அதிகாரம் அளிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது (Shasi Skumar shingh 2021).
ராஜீவ் காந்தி பிரதம மந்திரியானதும் வி.பி.சிங்கை நிதி அமைச்சராக்கினார். மார்சு 1985ல் தாக்கல்செய்யப்பட்ட நிதி அறிக்கையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீதிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கினார், வர்த்தகத்தில் இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டது, இயந்திரத் தளவாடங்கள் உற்பத்தி, நூற்பாலைகள், கணினி உற்பத்தி, மருந்து உற்பத்தி போன்றவற்றை பெருக்க எளிமையான உரிம முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தனிநபர் வரி, நிறுவன வரி குறைக்கப்பட்டது. இம்முயற்சியினால் நாட்டின் உற்பத்தி பெருகியது. நடுத்தர மக்களும், வணிகர்களும் இதனால் அதிகம் பயனடைந்தனர். ஆனால் இடதுசாரி இயக்கங்கள் அரசின் முயற்சிகள் பணக்காரர்களுக்குச் சாதகமானது என்று குறிப்பிட்டது. அரசின் புதிய முயற்சியினால் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் நுகர்வுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனையானது. தொழில் துறை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் ராஜீவ் காந்தி ஆட்சியில் பயனடைந்தனர். வறுமை பெருமளவிற்குக் குறைந்தது. அதேசமயம் நாட்டின் சில பகுதிகளில் மழை பொய்த்ததன் காரணமாக வேளாண்மை தோல்வியைக் கண்டு பட்டினி சாவுகள் காணப்பட்டது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாட்டின் முக்கிய விவசாயத் தொழிற்சங்கங்களான ஷேத்காரி சங்கதனா (மகாராஷ்டிரா மாநிலம்), இந்திய விவசாயச் சங்கம் (பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள்) துவக்கப்பட்டது (Ramachandra Guha 2017).
கணினி தொழில்நுட்ப வளர்ச்சியினை ஏற்படுத்த அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டு அடிப்படையில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டைச் சென்றடையச் செய்தார். 1984ல் கணினி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி, மென்பொருள் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியது. 1986ல் கணினி மென்பொருள் ஏற்றுமதி, வளர்ச்சி மற்றும் பயிற்சி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன் விளைவு இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியானது ரூ.100 கோடியாக 1988ல் அதிகரித்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மென்பொருளின் பங்களிப்பு அதிகரித்தது. 1990களில் தகவல் தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் பரந்து வளர்ந்தது. ராஜீவ் காந்தி இதனால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தந்தையாகக் கருதப்படுகிறார்.
நடுத்தர மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியா இதற்கு முன்பு மகாலநோபிசின் உத்திகளை அடிப்படையகாகக் கொண்டு மூலதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கிலே இருந்தது. நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி செய்வதற்கு எந்தவிதத்திலும் ஊக்கமளிக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்யத் தனியார் துறை சிறந்ததாக இருக்கும் என்ற அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டது. தனியார் முதலீடுகள் கொண்டுவர அதற்கான சூழலை உருவாக்கினார். இதற்காக வரிகள் குறைக்கப்பட்டது, முதல் முயற்சியாக இடுபொருட்களின் மீதான மறைமுக வரியும் குறைக்கப்பட்டது. தொழில் தொடங்க உரிமம் பெறும் முறை ரத்து செய்யப்பட்டது. 1987ல் இந்தியப் பத்திரங்கள் மற்றும் மாற்றுக் கழகம் உருவாக்கப்பட்டது. பங்குச் சந்தை முறைப்படுத்தப்பட்டது. தகவல் தொடர்பு அனைவருக்கும் குறிப்பாகக் கிராமப்புறங்களிலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதற்காகத் தனியார்த் துறை முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டது. இதனால் வேளாண்மைத் துறை பயன் அடைந்தது.
இந்தியாவை 21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய முதலீடு தேவையின் அவசியத்தை உணர்ந்தவர், இறக்குமதி மீதான காட்டுப்பாட்டை விலக்கிக்கொண்டார். இந்தியாவின் முக்கியத் துறையான வேளாண்மையினை வேகமாகவும் சீராகவும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகப் பசுமைப் புரட்சியினை மழைமறைவுப் பகுதிகளில் விரிவாக்கம் செய்தார். இதற்காக எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியினை மேம்படுத்தத் தொழில்நுட்ப இயக்கம், பருப்பு வகைகளை உற்பத்தி செய்யத் தேசிய திட்டத்தை முன்னெடுத்தார்.
ராஜீவ் காந்தி காலத்தின் முக்கியமாக வறுமை, பசியின்மை, ஆகியவற்றினை போக்க மாநிலங்களுக்கு இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட வலியுறுத்தப்பட்டது. வறுமையில் வாழ்பவர்களுக்குக் குடியிருக்க வீடு கட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூகத்தில் பொருளாதார அளவில் நலிவுற்றவர்களுக்கு வீடுகட்டித்தருதல், குடிநீர் இணைப்பு வழங்குதல், கழிவு நீர் வெளியேற்றம், குளியல் அறை, கழிப்பறை, சாலை விளக்குகள், போன்ற வசதிகள் செய்து தரப்பட்டது (Prabhaakaran 2008). இதற்கு அடித்தளமாகத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு வங்கிக் கடன், இறக்குமதித் தீர்வையை குறைத்தல், மென்பொருள் ஏற்றுமதி, தொழில் தொடங்க அனுமதி ரத்து, அயல் நாட்டு நிறுவனங்களைத் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது, கணினி ஏற்றுமதிக்குச் சிறப்பு மண்டலங்களை அமைப்பது போன்றவற்றை முன்னெடுத்தார்.
ராஜீவ் காந்தி இந்திய அரசின் அதிகாரிகள் சாமானிய மக்களுக்கு எதிராகவும் பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள் போன்றவர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் எனவே இவர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது என்ற கருத்திலிருந்தார். இந்த நிலையினைப் போக்க அதிகாரத்தைப் பரவலாக்கக் குறிப்பாகக் கிராமப்புறங்கள் மேம்பாடு அடைய உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.
வேளாண்மையின் வளர்ச்சிக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1980களில் முதன் முதலாக இந்தியாவில் வறுமை குறையத் தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் அடைந்த உயர் வளர்ச்சியாகும். 1991க்கு பிறகு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வர்த்தகம், தொழில், நிதி துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை மூன்றும் நகர்ப்புறங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதனால் 1991க்கு பிறகு நகர்ப்புற வறுமை குறையத் தொடங்கியது. கிராமப்புறங்களில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு (வேளாண் விளைபொருட்கள் உட்பட) நர்புறங்களில் இதற்கான தேவையை அதிகரித்தது இது கிராமப்புற மக்களின் வருவாயினை உயர்த்தி வறுமையின் தீவிரத் தன்மையினைக் குறைந்ததது. 2004-05 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புற வறுமை 15 விழுக்காடு குறைந்தது இது நகர்ப்புறங்களில் 5 விழுக்காடாகக் காணப்பட்டது (Pulapare Balakrishna 2022). இதற்கான அடித்தளத்தை ராஜீவ் காந்தியால் வித்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டவணை: வேளாண் உற்பத்தி வளர்ச்சி
வேளாண் பயிர் | 1950-60 | 1960-70 | 1970-80 | 1980-90 |
நெல் | 4.53 | 2.12 | 1.73 | 4.08 |
கோதுமை | 5.79 | 7.73 | 4.15 | 4.29 |
சோளம் | 7.84 | 3.90 | 0.64 | 3.20 |
பருப்பு | 3.80 | -0.47 | -1.18 | 2.45 |
மொத்த உணவு தானியங்கள் | 4.35 | 2.63 | 1.76 | 3.31 |
எண்ணெய் வித்துகள் | 3.05 | 2.41 | 1.34 | 6.01 |
கரும்பு | 5.62 | 2.54 | 2.27 | 4.38 |
பருத்தி | 4.54 | 2.03 | 2.69 | 3.23 |
சணல் | 5.60 | 0.32 | 2.13 | 1.28 |
Source: GoI (2004): “Agricultural Statistics at a Glance,” Government of India.
1980களில் வேளாண் துறையில் அனைத்து பகுதிகளிலும் வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி சாதகமாகக் காணப்பட்டது. தென்னிந்திய மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளில் பிரதான உணவான அரிசியானது 1980களில் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இதற்கு முக்கியமாகத் தொழில்நுட்ப மேம்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தனியார் துறை நிறுவனங்கள் குறைவான விலையில் தண்ணீர் குழாய்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், ஆழ்துளைக் கிணறுகள், குழாய் நீர்ப் பாசனம் பெருமளவிற்குப் பயன் பாட்டிற்கு வந்தது, விவசாயிகள் பாரம்பரிய ரகங்களிலிருந்து நவீன ரகங்கள் பயிர்செய்யத் தொடங்கியது, ஒன்றுக்கு மேற்பட்ட சாகுபடி போகங்கள் செய்யப்பட்டது போன்றவை உணவு உற்பத்தியினை 1980களில் அதிகரிக்க முக்கியக் காரணமாக விளங்கியது. இதன் விளைவு கிராமப்புறங்களில் விவசாயக் கூலி அதிகரித்து கிராமப்புற வறுமை குறையத் தொடங்கியது. இது இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது (Koichi FUJITA ue.org/files/events/Fujita_green_rev_in_india.pdf).
பசுமைப் புரட்சியின் விளைவால் நெல், கோதுமை உற்பத்தி பெருமளவிற்கு அதிகரித்தது ஆனால், சமையல் எண்ணெய்யின் தேவை அதிகரித்த அளவிற்கு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. ஆண்டுக்குச் சராசரியாக 125 லட்சம் டன் சமையல் எண்ணெய் தேவை இருந்தது ஆனால் இந்தியாவில் 75 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் இந்தியா அர்ஜெண்டினா, மலேசியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தது. சமையல் எண்ணெய்க்காகச் சூரியகாந்தி, கடுகு, நிலக்கடலை, ஆமணக்கு, நைஜர், ஆளிவிதை போன்ற பயிர்களிலிருந்து சமையலுக்கான எண்ணெய் பெறப்பட்டது. இவ்விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் குறையும். எனவே ராஜீவ் காந்தி மஞ்சள் புரட்சிக்கான அடித்தளத்தினை அமைத்தார். இதன் முக்கிய நோக்கம் புதிய வகை எண்ணெய் வித்து ரகங்களைப் பயன்படுத்தி எண்ணெய் உற்பத்தியினை அதிகரிப்பதாகும். எண்ணெய் வித்து தொழில்நுட்ப இயக்கம் 1986ல் துவக்கப்பட்டது. இதனால் 1985-86ல் 10.8 மில்லியன் டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது 1998-99ல் 24.7 மில்லியன் டன்னாக அதிகரித்தது. 1985ல் எண்ணெய் வித்து சாகுபடி பரப்பு 19.0 மில்லியன் ஹெக்டேராக இருந்தது 1996ல் 26.0 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. இதன்படி 36 விழுக்காடு சாகுபடி பரப்பும், 125 விழுக்காடு உற்பத்தியும் இக்கால கட்டத்தில் அதிகரித்தது. அதிக விளைச்சல் தரும் உயர் ரக விதைகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பொன்ற அடிப்படையில் சாகுபடி செய்ததால் இக்கால கட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 570 கிலோவாக இருந்தது 926 கிலோவாக அதிகரித்துக் காணப்பட்டது. இத்துடன் 200 மேற்பட்ட விதை ரகங்கள் பயிரிடப்பட்டது. இதனால் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியானது 1985ல் ரூ.700 கோடி மதிப்பிற்குச் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது 1995-96ல் ரூ.300 கோடியாகக் குறைந்தது (ICAR 2022). எண்ணெய் வித்து தொழில்நுட்ப இயக்கம் துவக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் இந்தியா அதிக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது 1993-94ல் சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்த நாடாக மாற்றமடைந்தது. 1993-94ல் இந்தியா தனக்குத் தேவையான சமையில் எண்ணெய்யில் 97 விழுக்காடு இந்தியாவிலேயே உற்பத்தி செய்துகொண்டது, 3 விழுக்காடு மட்டுமே இறக்குமதி செய்தது. எண்ணெய் வித்துக்களின் வளர்ச்சியானது 1980களில் மற்ற உணவு உற்பத்தியினை விட அதிக அளவிற்குப் பதிவாகியுள்ளது.
ராஜீவ் காந்தி ஆட்சியில் வேளாண் வளர்ச்சிக்காக 1985ல் ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது, 1988ல் SAFAL என்கிற அமைப்பு பழம் மற்றும் காய்கறிகள் சில்லறை விலையில் விற்பனை செய்யத் துவக்கப்பட்டது. 1990ல் தேசிய வேளாண்மை அறிவியல் கழகம் தொடங்கப்பட்டது. 1989ல் ஐ.ஆர் 64 என்ற நெல் ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதுபோல் பாசுமதி நெல் ரகமான புசா பாசுமதி-1 அறிமுகப்படுத்தப்பட்டது.
அட்டவணை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு – ஆண்டிற்கு)
பொருளாதாரம் | 1950-1964 | 1965-1979 | 1980-1990 |
ஓட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி | 3.7 | 2.9 | 5.8 |
தொழில துறை | 7.4 | 3.8 | 6.5 |
வேளாண் துறை | 3.1 | 2.3 | 3.9 |
மொத்த முதலீடுஃஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி | 13.0 | 18.0 | 22.8 |
Source: https://www.princeton.edu/~kohli/docs/PEGI_PartI.pdf
– பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 5 இந்திரா காந்தியும் பசுமைப் புரட்சியும் (1966-1977 மற்றும் 1980-1984) பேரா.பு.அன்பழகன்
இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி மறைவிற்கு பிறகு இந்தியாவின் பிரதமராக 1966ல் பொறுப்பினை ஏற்றார். இந்திரா காந்தி பதவி ஏற்பதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் தொடர் பஞ்சம், உணவு கையிருப்பு குறைந்திருந்தது, அதிக அளவிற்கு உணவு இறக்குமதி, அந்நியச் செலாவணி கையிருப்பு வற்றிப்போனது, அதிக அளவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, விலை உயர்வு போன்றவை காணப்பட்டது. இதனால் சாஸ்திரியால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் கைவிடப்பட்டு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை இந்திரா காந்தி முன்னெடுத்தார்.
இதன்படி வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க நீர்ப்பாசன நிலப்பரப்பினை அதிகரித்தல், அதிக அளவிற்கான இடுபொருட்களைப் பயன்படுத்துதல், விவசாய கடன் வசதியினைச் செய்து தருதல், விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையினை அளிப்பது, சந்தை படுத்துதலுடன் தொடர்புடையச் சேமிப்பு கிடங்கினை உருவாக்குதல், போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருதல் போன்றவை ஆகும். நுகர்வோருக்கான உணவு கிடைப்பதற்கு உறுதிசெய்யப் போதுமான அளவிற்குக் காப்பு இருப்பினை (Buffer Stock) ஏற்படுத்துதல், பொதுவிநியோக முறையினை விரிவுபடுத்துதல், சரியான சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் நாடு முழுமைக்கும் பின்பற்றப்பட்டன. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக்கா குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது. வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம், உயர் விளைச்சல் தரும் விதை ரகங்களை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்லப்பட்டது. பசுமைப் புரட்சி அரசின் தலையாய முன்னுரிமையாக இருந்தது. எனவே உயர் ரக விதைகள், அரசு மானியங்கள், மின்சார வசதி, நீர் மேலாண்மை, உரம், கடன் போன்றவற்றைப் பெற வசதி செய்து தரப்பட்டது.
அட்டவணை: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள்.
ஆண்டு | செயல்பாடுகள் |
1967 | நாகார்ஜூன சாகர் அணை தெலுங்கானாவில் கட்டப்பட்டது |
1968 | இந்தியாவின் முதல் உள்நாட்டு உயர் நெல் விதை ஜெயா அறிமுகப்படுத்தப்பட்டது |
1969 | 14 முதன்மை வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு கருத்து உருவாக்கப்பட்டது |
1970 | காப்புரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. |
1971, 1972 | புதிய மாம்பழ வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது |
1980 | 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது |
1982 | தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி துவக்கப்பட்டது |
1984 | தேசிய தோட்டக்கலைக்கு கழகம் தோற்றுவிக்கப்பட்டது |
ஆதாரம்: ICAR, 2022.
இந்தியப் பொருளாதாரம் 1960களின் இடையில் பெரிய பொருளாதார நெருக்கடியினைச் சந்தித்தது. 1965, 1966 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பருவமழையானது பொய்த்துப் போனது எனவே வேளாண்மையில் தோல்வி ஏற்பட்டிருந்தது. இதனால், தேக்க நிலை காணப்பட்டது. மொத்த வேளாண் உற்பத்தி 17 விழுக்காடும், உணவு தானிய உற்பத்தி 20 விழுக்காடும் குறைந்தது. இதனால் பணவீக்கம் 1965-1968களுக்கிடையே 12 விழுக்காடாக அதிகரித்தது (1963ல் 2 விழுக்காடு மட்டுமே பணவீக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது). இதில் உணவுப் பொருட்களின் விலையானது ஆண்டிற்கு 20 விழுக்காடு அதிகரித்தது. பணவீக்கம், வறட்சி, 1962ல் சீனாவுடன் போர் மற்றும் 1965ல் பாக்கிஸ்தானுடன் போர் போன்றவற்றால் செலவு அதிகரித்தது. அரசின் பற்றாக்குறை உச்ச அளவாக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.3 விழுக்காடாக 1966-67ல் காணப்பட்டது.
செலுத்து நிலை இருப்பு நிலையானது 1956-57லிருந்து சாதகமற்ற நிலை (வருமானம் குறைவாகவும் செலுத்துதல் அதிகமாகவும் இருப்பது) தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்நியச் செலாவணி இருப்பானது 1964-65 மற்றும் 1966-67ல் 340 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பாக இருந்தது. இது அடுத்து இரண்டு மாதங்களுக்கு இறக்குமதியினை எதிர்கொள்ளும் அளவிற்கே இருந்தது. இதுபோல் வெளிநாட்டு உதவி முதல் மூன்று ஐந்தாண்டு திட்ட காலங்களில் மட்டுமே அதிகரித்திருந்தது. 1960களில் கடைசிக் காலங்களில் உணவு பற்றாக்குறையினை எதிர்கொள்ள அதிக இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுச் செலுத்து நிலை இருப்பில் பலவீனம் அடைந்தது. 1951-52ல் வெளிநாட்டு நிதி உதவியானது தேசிய வருமானத்தில் 0.86 விழுக்காடாக இருந்தது 1956-57ல் 1.05 விழுக்காடாகவும், 1957-58ல் 2.37 விழுக்காடாகவும், 1960-61ல் 2.86 விழுக்காடாகவும், 1965-66ல் 3.8 விழுக்காடாகவும் அதிகரித்திருந்தது. ஏற்றுமதி-கடனுக்கான ரொக்கம் திரும்பச் செலுத்துதல் மற்றும் வட்டிக்கான விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது (முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 0.8 ஆக இருந்தது, இரண்டாவது திட்டத்தில் 3.9 ஆகவும் மூன்றாவது திட்டத்தில் 14.3 ஆகவும், 1966-67ல் 20.6 ஆகவும், 1966-67ல் 27.8ஆகவும் அதிகரித்தது). இதனால் 1966-1969ஆண்டுகளுக்கிடையே ஆண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதிக அளவிற்கான பணவீக்கம் (விலை உயர்வு), குறைவான அந்நியச் செலாவணி இருப்பு, குறைவான உணவு கையிருப்பு, அதிக இறக்குமதி காணப்பட்டது. அமெரிக்கா, இந்திய-பாக்கிஸ்தான் போரை அடிப்படையாகவும், இந்தியாவானது அமெரிக்க-வியட்நாம் போரில் வியட்நாமிற்கு சாதகமான நிலைப்பாட்டிலிருந்ததால் பி.எல்.480 ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது போன்ற நிலைகள் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவினைக் கண்டது. அமெரிக்கா, உலக வங்கி, பன்னாட்டு பணநிதியம் போன்றவை வர்த்தக, தொழில் கட்டுப்பாட்டில் சீர்திருத்தம், பண மறுமதிப்பீடு செய்வது, புதிய வேளாண்மை அணுகுமுறை தேவை என வலியுறுத்தியது. எனவே வேளாண்மையில் புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது, பண மறுமதிப்பீடு (36.5 விழுக்காடு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது), வர்த்தகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இவை எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு நிலைமையினை சரிசெய்ய இயலவில்லை. இச்சீர்திருத்தங்கள் நீண்ட காலத்திற்கே பயனளிப்பதாக இருந்து. எனவே அரசு தலையிடும் கொள்கையினை கடைப்பிடித்தது. இதனால் அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்தது. வேளாண் உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து உணவு கையிருப்பு அதிகரித்து உணவு இறக்குமதியினைச் சார்ந்த நிலை குறையத் தொடங்கியது. அரசு வரியினை அதிகரிப்பதற்குப் பதில் அரசு செலவுகளைக் கட்டுப்படுத்தியது குறிப்பாக மூலதனச் செலவு 1966-67 மற்றும் 1970-71ல் 50 விழுக்காடு குறைத்தது. இதனால் தொழில் வளர்ச்சி சரியத் தொடங்கியது. இது 1970களின் மத்தியில் வரைத் தொடர்ந்தது. 1951 மற்றும் 1966ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 7.8 விழுக்காடு தொழில் வளர்ச்சி இருந்தது, 1966-1974ஆண்டுகளுக்கிடையே 4.99 விழுக்காடாகக் குறைந்தது.
தொடர்ந்து மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாக்கிஸ்தானுடன் போர் (1965), தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் (1965-66 முதல் 1966-67முடிய) கடும் வறட்சி, 1966ல் ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகக் குறைந்தது மற்றும் பணவீக்கம் அதிகரித்தது போன்ற காரணங்களால் 1966-67 முதல் 1968-69முடிய ஆண்டு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டது. 1967-69ல் காங்கிரஸில் உட்கட்சி பிரச்சனையினால் இந்திரா காந்தி வலதுசாரி இயக்கத்தின் உதவியுடன் ஆட்சியினைத் தக்கவைத்துக் கொண்டார். நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் (1969-1974) வேளாண்மையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1971ல் பாராளுமன்ற தேர்தலில் ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை இந்திரா காந்தி முன்வைத்தார். இத்துடன் பொதுத் துறை வளர்ச்சி, கிராமப்புற நில உச்சவரம்பு, வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வினை களைவது, சமஸ்தானங்களின் சிறப்புச் சலுகைகளை ரத்து செய்தல் போன்றவற்றை முன்னிறுத்தித் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இத் தேர்தலில் இந்திரா காந்தி அமோக வெற்றியினைப் பெற்றார். இதன்பின் நீண்டகால நோக்கில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 21 ஜூலை 1969ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன, இதே ஆண்டில் முற்றுரிமை கட்டுப்பாட்டு வர்த்தக பயன்பாட்டுச் சட்டம் கொண்டு வந்தது. இதனால் முற்றுரிமை நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்டது. இதே ஆண்டில் இந்தியச் சமஸ்தானங்களுக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்த்தை விலக்கிக்கொண்டார். 1972ல் காப்பீடு தேசியமயமாக்கப்பட்டது, 1973ல் நிலக்கரி தொழில் தேசியமயமாக்கப்பட்டது. இதே ஆண்டு கோதுமை மொத்த விலை நிலையினை தேசிய அளவில் பின்பற்றப்பட்டது. 1973ல் அன்னியச் செலாவணி மாற்று முறைப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அயல்நாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டது. அதேசமயம் நலிவுற்ற தொழிற்சாலைகள் அரசு ஏற்று நடத்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தையும், நில உச்சவரம்பையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கைகளால் பொதுமக்களிடமும் குறிப்பாக ஏழை, நடுத்தர கிராமப்புற, நகர்ப்புற மக்களிடையேயும், இடதுசாரிகளிடமும் நன்மதிப்பினை பெறமுடிந்தது. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டமானது (1974-1979) உணவு உற்பத்தி மற்றும் எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக (ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது) இந்த திட்டம் ஓராண்டுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்டது.
எல்.கே.ஜா தலைமையில் பொருளாதார, நிருவாக நடவடிக்கைகளை ஆராயவும், ஆபித் உசைன் தலைமையில் வர்த்தகத்தை ஆயவிடவும் குழு அமைத்தால். இதன் பலன் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலமான 1960களின் மத்தியிலிருந்து 1980களின் இறுதி முடிய இந்தியப் பொருளாதாரம் பெருமளவிற்குச் சாதனைகளைக் கண்டது. 1960களின் மத்தியில் கிழக்கு பாக்கிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) பிரிவினை காரணமாக இனப்படுகொலைகள் நடந்தேறியது. இதனால் 10 மில்லியன் மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தடைந்தனர். 1971ல் பாக்கிஸ்தானுடன் போர், 1972 மற்றும் 1974ல் இரண்டு பஞ்சங்கள், 1973ல் பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது இதனால் இறக்குமதி செலவு அதிகரிக்க தொடங்கியது, பெட்ரோல் விலை இரண்டு மடங்காக அதிகரித்தது, இதனைத் தொடர்ந்து பொருட்களின் விலை உயர்வு, 1978-79ல் சுதந்திரத்திற்குப்பின் கடுமையான பஞ்சம் போன்றவை நிகழ்ந்தது.
இந்திரா காந்தி இந்த அறைகூவல்களை கையாள்வதற்கு பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்தார். குறிப்பாக உணவு தட்டுப்பாடு அடிக்கடி ஏற்பட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதித்தது. எனவே நீண்டகால நோக்கில் பசுமைப் புரட்சியினை 1966ல் நடைமுறைப்படுத்தினார். இதன்படி அதிக விளைச்சல் தரக்கூடிய உயர் ரக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இயந்திரங்களை பயன்படுத்துதல் போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. துவக்கத்தில் கோதுமைக்கான புதிய மெக்சிகன் விதைகள் (சோனால 64 மற்றும் லர்மா ரோஜே 64) குறுகிய காலப் பயிர் செய்வது அறிமுகப்படுத்தப்பட்டது பின்னால் இந்தியாவில் புதிய வகை விதைகள் பயன்படுத்தப்பட்டது. இதுபோல் நெல்லுக்கு புதிய உயர் விளைச்சல் தரும் ரகமான ஐ.ஆர் 8, அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவு உற்பத்தி அதிக அளவிற்கு உயர்ந்தது (ICAR 2022). இதன் மூலம் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது, வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டது. இந்திரா காந்தி உணவு உற்பத்திக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த முதல் அரசியல் தலைவராகும். வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. அப்போது பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததால் பல்வேறு வேளாண்மை சீர்திருத்தங்களை எளிதில் நடைமுறைப்படுத்த முடிந்தது. இதனால் 1967-68 மற்றும் 1970-71ஆம் ஆண்டுகளுக்கிடையே உணவு உற்பத்தி 35 விழுக்காடு அதிகரித்தது. உணவு இறக்குமதியானது 10.3 மில்லியன் டன்னிலிருந்து 3.6 மில்லியன் டன்னாகக் குறைந்தது. உணவு கையிருப்பானது 73.5 மில்லியன் டன்னிலிருந்து 89.5 மில்லியன் டன்னாக இவ்வாண்டுகளில் அதிகரித்தது. இது 1978ல் 110.25 மில்லியன் டன்னாகவும், 1984ல் 128.8 மில்லியன் டன்னாகவும் அதிகரித்தது. இதனால் இந்தியா உணவிற்காக அயல் நாடுகளிடமிருந்து கையேந்தும் நிலைமை மாறி உணவு பாதுகாப்பினை உறுதி செய்தது. உணவுப் பஞ்சம் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்ளும் துணிவும் உருவானது (Bipan Chandra et al 2008). அதேசமயம் விவசாயிகளிடையே ஏற்றத் தாழ்வு அதிகரித்துக் காணப்பட்டது. இதற்கு முக்கியக் கரணம் பசுமைப் புரட்சியானது வளமான பகுதியான பஞ்சாப் மற்றும் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் கோதுமையும், ஆந்திரப் பிரதேசம் (பிரகாசம் மாவட்டம்) மற்றும் தமிழ்நாட்டில் (தஞ்சாவூர் மாவட்டம்) பகுதிகளில் புதியவகை நெல் விதை ரகங்கள் மற்றும் செயற்கை உரங்கள் பயன்படுத்தி வேளாண் சாகுபடி செய்தனர். இதன் விளைவு அதிக அளவிற்கு உணவு உற்பத்தி அதிகரித்தது. இதனால் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் நெல், கோதுமை விலை வீழ்ச்சி அடைந்தது. எனவே விவசாயப் பணிகள் துவக்கும் போது குறைந்த பட்ச ஆதார விலை அறவிக்கப்பட்டது. இக் குறைந்த பட்ச ஆதார விலையானது அதன் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்டது. இதைத் தவிர அரசு பொது விநியோகத்திற்காக நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் மையங்கள் வழியாக நெல், கோதுமையினைக் கொள்முதல் செய்தது. இக் கொள்முதல் விலையானது குறைந்த பட்ச ஆதார விலையினை விட அதிகமாக இருந்ததது. விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்கு வங்கிகள் கடன்களைத் தாராளமாக வழங்கியது. இதனால் விவசாயிகள் லாபம் பார்க்கத் தொடங்கினர். வேளாண்சாரப் பொருட்களின் தேவை அதிகரித்தது, வேலைவாய்ப்பு பெருகியது, வறுமை பெருமளவிற்குக் குறைந்தது. கிராமப்புற மேம்பாடு அடையத் தொடங்கியது. அதே சமயம் வேளாண் இடுபொருட்களில் ஒன்றான தொழிலாளர் கூலி அதிகரித்தது.
பசுமைப் புரட்சியின் ஒரு முக்கிய விளைவு சிறு விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களையும், மேம்படுத்தப்பட்ட விதைகள், இதர இடுபொருட்களை பயன்படுத்தத் தொடங்கியதால் விளைச்சல் பெருகி வருமானம் அதிகரித்தது. இதன் விளைவு நிலமற்ற விவசாயிகள் அதிகரிப்பு அதிக அளவில் குறைந்தது. வேளாண்மையில் வருமானம் அதிகரித்ததால் விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபடுத் தொடங்கினர். வேளாண் நிலத்தின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து குத்தகையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதே சமயம் தொழிலாளர் கூலி அதிகரித்தது, வேளாண்மையில் தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் அதனைச் சார்ந்த தொழில்கள் பெருகியது (டிரக்டர் உற்பத்தி, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி உற்பத்தி, மோட்டர் பம்பு உற்பத்தி, போக்குவரத்து வாகன உற்பத்தி, வாகன பழுது பார்த்தல்). பசுமைப் புரட்சி குறிப்பிட்ட மாநிலங்களில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் விவசாயத் தொழிலாளர்களின் தேவை அதிகரித்தது புலம்பெயரும் விவசாயத் தொழிலாளர்கள் பெருகினர். இதனால் கிராமப்புற வருமானம் பெருகத் தொடங்கியது, வேளாண் சாரா தொழில்களை நோக்கி கிராமப்புறத் தொழிலாளர்கள் நகரத் தொடங்கினர். அதே சமயம் அளவிற்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது, அதிக அளவிற்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டதால் நிலத்தின் தன்மை குறைந்தது, சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டது.
இந்திரா காந்தியின் முதல் ஆட்சி காலகட்டத்தில், இந்தியா சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகள் கழிந்தும் வறுமையின் தாக்கம் குறையவில்லை. 1960களின் மத்தியில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கடும் வறட்சி நிலவியது, உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. 1962ல் சீனாவுடன் போர், 1965ல் பாக்கிஸ்தானுடன் போர் இதன் காரணமாகப் பாதுகாப்பு செலவு அதிகரித்தது. இதனால் மேற்கத்திய நாடுகளின் உதவியினைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வறுமையினை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது. இத்துடன் 1960களில் எப்போதும் இல்லாத நிலையில் மக்கள் தொகை அபரீதமாக வளர்ச்சியடைந்தது (1971ல் 548.2 மில்லியன் மக்களில் 80 விழுக்காட்டினர் கிராமங்களிலிருந்தனர். இவர்களில் 68.3 விழுக்காடு வேளாண்மையினைச் சார்ந்து வாழ்ந்தனர், வேளாண்மை தொழிலாளர்கள் 37.8 விழுக்காடாக அதிகரித்திருந்தது). பெரும்பான்மையான தொழிலாளர்கள் பங்கேற்பானது வேளாண்மையினைச் சார்ந்திருந்தது. இவர்கள் அதிக அளவில் வறுமையிலிருந்தனர். இந்திரா காந்தி பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றவுடன் வறுமையினை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டினார். வறுமை நகர்ப்புறங்களைவிடக் கிராமப்புறங்களில் அதிக அளவிலிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் கிராமப்புறங்களில் நான்கில் மூன்று பங்கு மக்கள் வேளாண்மையினையும் அதனைச் சார்ந்த தொழிலையும் சார்ந்து வாழ்ந்ததாகும். எனவே வறுமையினை ஒழிக்க ‘கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்’, ‘சிறு விவசாயிகள் வளர்ச்சி முகவர்கள் திட்டம்’, ‘குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் திட்டம்’, ‘கிராமப்புற வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம்’, ‘வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ போன்றவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு முறையே 25 விழுக்காடு மற்றும் 33.3 விழுக்காடு மானியங்கள் வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவிற்கு முறைசார் கடன்களைப் பெற்றனர். இதனால் விவசாயிகளின் வருமானம் பெருகி வறுமை குறைந்தது. வேளாண்மையில் புகுத்தப்பட்ட சீர்திருத்தங்களினாலும், வறுமை ஒழிப்பு திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப் படுத்தியதாலும் வறுமையின் தீவிரம் குறைந்தது (Balakrishnan 2022). 1965-66ல் கிராமப்புற வறுமை 53.9 விழுக்காடாக இருந்தது 1977-78ல் 39.1 விழுக்காடகக் குறைந்தது. (Montek Ahluwalia 1985).
ஒட்டுமொத்த பார்வையில் இந்திரா காந்தி தன்னுடைய முதல் காலகட்டத்தில் வேளாண்மை நில உடமையின் மீதான உச்ச வரம்பு குறைக்கப்பட்டது, கண்டறியப்பட்ட உபரி நிலங்களை நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கும் குறு விவசாயிகளுக்கும் வழங்கும் சட்டத்தைப் பல மாநில அரசுகள் நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டது, சமுதாயத்தில் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் குறைந்த விலையில் உணவு தானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தியது, சிறுதொழில், விவசாயம், சாலை போக்குவரத்து இயக்குபவர்கள் மற்றும் சுயமாக வேலை செய்பவர்களுக்குக் கடன் கிடைக்க வழிசெய்யும்பொருட்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது, இதனால் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டது, இதன் விளைவு 1951ல் நிறுவனம் சாரா கடனின் பங்கானது 92.7 விழுக்காடாக இருந்தது 1971ல் 68.3 விழுக்காடாகக் குறைந்தது மாறாக நிறுவனம் சார் கடனின் பங்கானது 7.3 விழுக்காடாக இருந்தது 32.7 விழுக்காடாக இவ் ஆண்டுகளில் அதிகரித்தது (ICAR 2022). 1966-67ல் விவசாயிகள் வங்கிகளிடம் 2.2 விழுக்காடு மட்டுமே கடன் பெற்றிருந்தனர் இது அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு 9.1 விழுக்காடாக அதிகரித்திருந்தது (Abheek Barman 2016). ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடன் அளவு 1967ல் 8.5 விழுக்காடாக இருந்தது 1984ல் 18.6 விழுக்காடாக அதிகரித்தது (Tadit Kundhu 2016). திட்டக்குழுவினைச் சிறப்பாகக் கட்டமைத்துத் திட்டமிடலைச் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டது என பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டார்.
இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயண தலைமையில் தேசிய அளவில் ஊழல், தவறான நிர்வாகம் ஆகியவற்றிற்கு எதிராகப் பிரச்சாரமும் போராட்டமும் தீவிரமாக நடைபெற்றது. இப்பிரச்சனையினைக் கையாள இந்திரா காந்தி ஜூன் 25, 1975ல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். இதனை நியாயப்படுத்த இந்திரா காந்தி சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களும், வறுமையில் வாழ்பவர்களையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல தொடர் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தவும், உள்நாட்டு நலனையும், பிற நாடுகளின் தலையீட்டைக் கட்டுப்படுத்தவும் நெருக்கடி நிலையினை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார். இதன் விளைவு தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். பதுக்கல் காரர்கள், வரி ஏய்பவர்கள் இச்சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையத் தொடங்கியது. உணவு கையிருப்பு அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கிராமப்புற ஏழைகளை மேம்படுத்த ஜூலை 1, 1975ல் 20அம்ச திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு கடன் அளித்தல், சிறு விவசாயிகளுக்கும், கிராமப்புற கைவினைஞர்களுக்கும் மாற்றுக் கடன் அளித்தல், கொத்தடிமைத் தொழிலாளர்களை ஒழித்தல், நடப்பில் உள்ள நில உச்சவரம்பை நடைமுறைப்படுத்துதல், கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கு வழங்குதல், நலிவடைந்த நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருதல், விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலியினை வழங்குதல், கைத்தறி துறைக்குச் சிறப்பு உதவி, பொது விலையினைக் குறைத்தல், வரி ஏய்ப்பு மற்றும் கடத்தல்களைத் தடுத்தல், உற்பத்தியினை அதிகரித்தல், பொருட்களின் பகிர்வினை முறைப்படுத்துதல், வருமான வரியின் உச்ச வரம்பை அதிகரித்தல், முதலீட்டில் தாராள நடைமுறையினைப் பின்பற்றுதல் போன்ற வேளாண் சார் அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. இதனால் உடனடியாக விளைவுகள் பொருளாதாரத்தில் ஏற்படத் தொடங்கியது.
20அம்ச திட்டத்தினால் உணவுப் பொருட்கள் விலை குறைந்தது, இன்றியமையாத பொருட்களின் இருப்பு தாராளமாக இருந்தது. வரி ஏய்ப்பு, பதுக்கல், கடத்தல் போன்றவை குறைந்தது. ஒட்டுமொத்த குறிக்கோளகக் கிராமப்புற ஏழைகளை மேம்படுத்துவது என்பதாகும். இது ஓரளவிற்கு பயனளித்ததது. 3 மில்லியன் வீடுகள் நிலமற்ற விவசாயிகளுக்கும், பட்டியல் இனத்தவருக்கும் வழங்கப்பட்டது. 1.1 மில்லியன் ஏக்கர் உபரி நிலங்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இது உபரி நில இருப்பில் 10.1 விழுக்காடு மட்டுமே. விவசாயக் கடன் வசூல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக நிலமற்ற விவசாயக் கூலிகள் மற்றும் சிறு விவசாயிகளிடம் இது பின்பற்றப்பட்டது. கூட்டுறவு நிதி நிறுவனங்கள், தேசிய வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்பட்டது. குறைந்தபட்ச கூலியினை விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால் 20அம்ச திட்டம் லஞ்சம், திறமையற்ற நிருவாக நடவடிக்கைகள், அரசியல் தலையீடு போன்றவற்றால் பெரும் வெறியுடன் அமையவில்லை. நீதியரசர் ஷ அவர்களின் தலைமையில் அமைந்த கமிஷன் அவசரக்கால பிரகடனத்தில் நடந்தவற்றைப் பற்றி ஆராய்ந்தபோது முறைகேடுகள், விதிமீறல்கள், தவறான நடைமுறைகள், அட்டூழியங்கள், பழிவாங்கல் போன்றவை நடைபெற்றதாக்கக் குறிப்பிட்டது.
இந்திரா காந்தி 1980ல் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதம மந்திரி ஆனார். இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார உத்தியின் மாற்றங்களால் இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை உணர்ந்து தாராளமயப் பொருளாதார கொள்கைகளை அரைமனதுடன் நடைமுறைப்படுத்தினார். இந்திரா காந்தி பன்னாட்டு நிறுவனங்களின் பங்கினால் இந்தியாவின் சுயச்சார்பு பாதிக்கப்படும் என்று கருதினார். இந்தியாவின் 6 வங்கிகளை தேசியமயமாக்கினார். இக்காலகட்டத்தில் ஆண்டுக்கு 4 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்தது. ஆறாவது ஐந்தாண்டு திட்டம் (1980-1985) வறுமையை ஒழிப்பது, வேளாண்மையில் சுயச்சார்பினை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவு வேளாண்மை உற்பத்தி அதிமாக உயர்ந்தது. இதனால் விலை உயர்வானது (பணவீக்கம்) 1984ல் 7 விழுக்காடாகக் குறைந்தது. இந்த நிலையில் அக்டோபர் 31, 1984ல் இந்திரா காந்தி சுட்டுக்கொள்ளப்பட்டார்.
அட்டவணை: இந்திரா காந்தி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு)
பொருளாதாரம் | 1952-1966 (இந்திரா காந்தி ஆட்சிக்கு முன்பு) | 1967-1984 (இந்திரா காந்தி ஆட்சி) |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | 3.57 | 3.96 |
வேளாண்மைத் துறை | 1.98 | 3.31 |
தொழில் துறை | 6.45 | 4.29 |
சேவைத் துறை | 4.46 | 4.63 |
Source: Tadit Kundu (2016): “How India fared Under Indira Gandhi,” Mint, 30.11.2016.
இந்திரா காந்தி 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரின் பங்கு அளப்பரியது. அரசியல் ரீதியாக 1969ல் காங்கிரஸ் உடைந்தது, 1971ல் பங்களாதேஷ் பிரச்சனை, இதன் தொடர்பாக அமெரிக்காவின் நெருக்குதல், 1966ல் பஞ்சாப் சபா உருவானது. 1975ல் நெருக்கடிக்கால பிரகடனம், இதன் மீதான விசாரணைக் கமிஷன் போன்றவை அரசியல் ரீதியான சவால்களாக இருந்தது. 1960களின் பிற்பகுதியில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, 1970களில் ஏற்பட்ட எண்ணெய் (குருடாயில்) நெருக்கடி, போன்றவற்றால் விலை உயர்ந்தது. உணவுப் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாகப் பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்து உணவு உற்பத்தியில் சுயச்சார்பு அடைய செய்தது. உணவு பாதுகாப்பிற்கு வழிவகுத்தது. பொதுத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நேருவின் வழியினையே பின்பற்றினார். கிராமப்புற, நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள், சிறுபான்மையினர், மகளீர் பாதுகாப்பு உறுதி செய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்தார். அதே சமயம் நிர்வாக தோல்வி, அரசியல் பழிவாங்கல் போன்ற நடவடிக்கை அதிகமாக இவர் காலத்தில் காணப்பட்டது.
1980களில் இந்திய வேளாண்மை சீர்திருத்தினால் உணவு உற்பத்தி பெருகி இருந்தாலும், பசுமைப் புரட்சியின் விளைவுகள், பெருமளவிற்கு வட்டார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருந்தது மேலும் இது இந்தியாவின் கிராமப்புற மாவட்டங்களில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. பெரும்பான்மையான மழை மறைவு விளைநிலங்களில் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தவில்லை. தண்டேக்கர் மற்றும் ராத் அவர்களின் ஆய்வின்படி 40 விழுக்காடு கிராமப்புற மக்களும் 50 விழுக்காடு நகர்ப்புற மக்களும் வறுமையிலும் அடிப்படை வாழ்க்கை மட்டத்தினை பெறமுடியாமலும் இருந்தனர். இந்தியாவின் கிராமப்புற ஏழைகள் தங்கள் வருவாயில் 80 விழுக்காடு உணவிற்காகச் செலவிட்டனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் வேளாண் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. இதனால் ஏழை, விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வாழ்நிலைக்கான நம்பிக்கையினை உருவாக்கித்தந்தது.
– பேரா.பு.அன்பழகன்