‘நோன்பு’ சிறுகதை – மணவை கார்னிகன்
அன்று இரவு 12 மணி ஆகியும் இந்திரனுக்கு தூக்கம் வரவில்லை. ஒரு பாம்பு மிதமிஞ்சிய உணவை உட்கொண்டு நெளிவதைப்போல. தெளிந்தும் புரண்டும் படுத்திருந்தவனுக்கு, தூக்கம் மிகப்பெரிய வரமாக இருந்தது.அவன் பக்கத்தில் படுத்திருந்த அந்தோணிக்கு, அந்த வரம் கிடைத்து வெகுநேரமாகிவிட்டது. ஜெபமாலையை வலது கையில் வைத்தவாறே வரத்தின் ஸ்பரிசத்தால் குறட்டையெல்லாம் வருகிறது. பகல் முழுதும் வண்டி இழுத்து அழுத்து போனவனுக்கு படுத்ததும் தூக்கம் உடனே வந்துவிடும் ஆனால் அன்று இரவு அப்படி வரவில்லை.
அன்சார் பாயின் அறிவுறுத்தலின்படி உறக்கம் வரவில்லை என்றால் உனக்கு பிடித்த கடவுளின் பெயரோ, அல்லது உனக்கு பிடித்தவர்களின் பெயரோ, 108 முறை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இரு. உறக்கம் நன்றாக வரும் என்பார். எண்ணுவதற்கும் ஒரு வழியும் சொல்லியிருந்தார். ஒரு விரலுக்கு இரண்டு ரேகை கோடு அது மூன்று பாகமாக இருக்கும். மேலிருந்து கீழ் வந்து. பிறகு கீழிருந்து மேல் வந்தால் ஐந்து, ஒரு விரலுக்கு ஐந்து என்றால், ஐந்து விரலுக்கு இருபத்தி ஐந்து. நான்கு கைவிரல் நூறு. மீதம் எட்டு சுலபம்தானே! என்பார் அன்சார் பாய்.
அன்று இரவு அப்படியும் சொல்லி பார்த்துவிட்டான். வரவே வராது என்ற முடிவுக்கு போய்விட்டான். வீட்டிற்கு வெளியே சென்று வைத்திருந்த பீடிகட்டில் இருந்து ஒவ்வொன்றாய் எடுத்து புகைத்தபடி இருந்தான். அவன் சிந்தையில் ஏதோ ஒடிக்கொண்டே இருந்தது.
“டேய் எதுக்கு இந்த வேலை உன்னால் முடியது பேசாம எப்பவும் போல இருந்துரு” அவன் மனம் சொன்னது.
பீடியின் இறுதிக் கங்கு விரலை முத்தமிட்டது. உதறித் தள்ளிய பீடியைப் பார்த்தவாறு நின்றான். விடிந்தால் வண்டி இழுக்கணும், ஊரு ஊராகச் சுற்றித் திரியணும், அதற்கெல்லாம் உடம்புல தெம்பு வேண்டும்.
“நம்மால முடியாதுப்பா” என்று நினைத்து வீட்டிற்குள் சென்றான்.அவனோடு சேர்த்து ஐந்துபேர் அந்த வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.
இப்போது அந்தோணி, இத்திரனின் படுக்கை இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்.
“அண்ணே, தள்ளிப்படுங்க என்றான்”
வேண்டாவெறுப்பாக ஒரு உருளில் சரியானது அவனது இடம்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டுப் படுத்தான் இந்திரன்.மணி சரியாக 2.30 யை தொட்டது. முதலாளியும் அவனோடு வேலை செய்யும் இரண்டு வேலையாளும் இஸ்லாமியர்கள், இவர்களுக்காக உணவு தயார் செய்ய வெள்ளச்சாமி விழித்துவிட்டார். முதல்நாள் நோன்பு என்பதால் கொஞ்சம் பரபரப்பாக இருந்தார். முதலாளி அன்சார்பாயை எழுப்பி விட்டு ஒழையை அடுப்பில் போட்டார் வெள்ளச்சாமி.
“இந்திரே(ன்) கண்ண தேய்த்துத் தேய்த்துச் சிவந்து கெடக்கு பாயண்ணே. நைட்டெல்லாம் தூங்காம உருண்டுக்கிட்டே கிடந்தான்” என்று குற்றம் சாட்டிய வெள்ளச்சாமியைப் பார்த்து, “ஏம்பா நாம்மளா அவன நோம்பு இருக்கச் சொன்னோம்? அவனா நானும் நோம்பு இருக்குறேன்னு சொன்னான். அவன இங்க வரச்சொல்லு வெள்ள” என்றார் முதலாளி.
இப்போது உறக்கத்தின் வரம் கிடைத்து நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான் இந்திரன்.
“டேய் பாயண்ணே கூப்றாரு எந்திரிடா டேய் டேய்..இவ்வளவு நேர முழிச்சிருந்துட்டு இப்ப தூக்கத்தப் பாரு”.
“வெள்ள விடுப்பா தூங்கட்டும்” என்றார் முதலாளி.
– மணவை கார்னிகன்