இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 5 இந்திரா காந்தியும் பசுமைப் புரட்சியும் (1966-1977 மற்றும் 1980-1984) பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 5 இந்திரா காந்தியும் பசுமைப் புரட்சியும் (1966-1977 மற்றும் 1980-1984) பேரா.பு.அன்பழகன்




இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி மறைவிற்கு பிறகு இந்தியாவின் பிரதமராக 1966ல் பொறுப்பினை ஏற்றார். இந்திரா காந்தி பதவி ஏற்பதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் தொடர் பஞ்சம், உணவு கையிருப்பு குறைந்திருந்தது, அதிக அளவிற்கு உணவு இறக்குமதி, அந்நியச் செலாவணி கையிருப்பு வற்றிப்போனது, அதிக அளவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, விலை உயர்வு போன்றவை காணப்பட்டது. இதனால் சாஸ்திரியால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் கைவிடப்பட்டு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை இந்திரா காந்தி முன்னெடுத்தார்.

இதன்படி வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க நீர்ப்பாசன நிலப்பரப்பினை அதிகரித்தல், அதிக அளவிற்கான இடுபொருட்களைப் பயன்படுத்துதல், விவசாய கடன் வசதியினைச் செய்து தருதல், விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையினை அளிப்பது, சந்தை படுத்துதலுடன் தொடர்புடையச் சேமிப்பு கிடங்கினை உருவாக்குதல், போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருதல் போன்றவை ஆகும். நுகர்வோருக்கான உணவு கிடைப்பதற்கு உறுதிசெய்யப் போதுமான அளவிற்குக் காப்பு இருப்பினை (Buffer Stock) ஏற்படுத்துதல், பொதுவிநியோக முறையினை விரிவுபடுத்துதல், சரியான சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் நாடு முழுமைக்கும் பின்பற்றப்பட்டன. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக்கா குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது. வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம், உயர் விளைச்சல் தரும் விதை ரகங்களை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்லப்பட்டது. பசுமைப் புரட்சி அரசின் தலையாய முன்னுரிமையாக இருந்தது. எனவே உயர் ரக விதைகள், அரசு மானியங்கள், மின்சார வசதி, நீர் மேலாண்மை, உரம், கடன் போன்றவற்றைப் பெற வசதி செய்து தரப்பட்டது.

அட்டவணை: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள்.

ஆண்டு செயல்பாடுகள்
1967 நாகார்ஜூன சாகர் அணை தெலுங்கானாவில் கட்டப்பட்டது
1968 இந்தியாவின் முதல் உள்நாட்டு உயர் நெல் விதை ஜெயா அறிமுகப்படுத்தப்பட்டது
1969 14 முதன்மை வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு கருத்து உருவாக்கப்பட்டது
1970 காப்புரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.
1971, 1972 புதிய மாம்பழ வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது
1980 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது
1982 தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி துவக்கப்பட்டது
1984 தேசிய தோட்டக்கலைக்கு கழகம் தோற்றுவிக்கப்பட்டது

ஆதாரம்: ICAR, 2022.

இந்தியப் பொருளாதாரம் 1960களின் இடையில் பெரிய பொருளாதார நெருக்கடியினைச் சந்தித்தது. 1965, 1966 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பருவமழையானது பொய்த்துப் போனது எனவே வேளாண்மையில் தோல்வி ஏற்பட்டிருந்தது. இதனால், தேக்க நிலை காணப்பட்டது. மொத்த வேளாண் உற்பத்தி 17 விழுக்காடும், உணவு தானிய உற்பத்தி 20 விழுக்காடும் குறைந்தது. இதனால் பணவீக்கம் 1965-1968களுக்கிடையே 12 விழுக்காடாக அதிகரித்தது (1963ல் 2 விழுக்காடு மட்டுமே பணவீக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது). இதில் உணவுப் பொருட்களின் விலையானது ஆண்டிற்கு 20 விழுக்காடு அதிகரித்தது. பணவீக்கம், வறட்சி, 1962ல் சீனாவுடன் போர் மற்றும் 1965ல் பாக்கிஸ்தானுடன் போர் போன்றவற்றால் செலவு அதிகரித்தது. அரசின் பற்றாக்குறை உச்ச அளவாக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.3 விழுக்காடாக 1966-67ல் காணப்பட்டது.

செலுத்து நிலை இருப்பு நிலையானது 1956-57லிருந்து சாதகமற்ற நிலை (வருமானம் குறைவாகவும் செலுத்துதல் அதிகமாகவும் இருப்பது) தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்நியச் செலாவணி இருப்பானது 1964-65 மற்றும் 1966-67ல் 340 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பாக இருந்தது. இது அடுத்து இரண்டு மாதங்களுக்கு இறக்குமதியினை எதிர்கொள்ளும் அளவிற்கே இருந்தது. இதுபோல் வெளிநாட்டு உதவி முதல் மூன்று ஐந்தாண்டு திட்ட காலங்களில் மட்டுமே அதிகரித்திருந்தது. 1960களில் கடைசிக் காலங்களில் உணவு பற்றாக்குறையினை எதிர்கொள்ள அதிக இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுச் செலுத்து நிலை இருப்பில் பலவீனம் அடைந்தது. 1951-52ல் வெளிநாட்டு நிதி உதவியானது தேசிய வருமானத்தில் 0.86 விழுக்காடாக இருந்தது 1956-57ல் 1.05 விழுக்காடாகவும், 1957-58ல் 2.37 விழுக்காடாகவும், 1960-61ல் 2.86 விழுக்காடாகவும், 1965-66ல் 3.8 விழுக்காடாகவும் அதிகரித்திருந்தது. ஏற்றுமதி-கடனுக்கான ரொக்கம் திரும்பச் செலுத்துதல் மற்றும் வட்டிக்கான விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது (முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 0.8 ஆக இருந்தது, இரண்டாவது திட்டத்தில் 3.9 ஆகவும் மூன்றாவது திட்டத்தில் 14.3 ஆகவும், 1966-67ல் 20.6 ஆகவும், 1966-67ல் 27.8ஆகவும் அதிகரித்தது). இதனால் 1966-1969ஆண்டுகளுக்கிடையே ஆண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதிக அளவிற்கான பணவீக்கம் (விலை உயர்வு), குறைவான அந்நியச் செலாவணி இருப்பு, குறைவான உணவு கையிருப்பு, அதிக இறக்குமதி காணப்பட்டது. அமெரிக்கா, இந்திய-பாக்கிஸ்தான் போரை அடிப்படையாகவும், இந்தியாவானது அமெரிக்க-வியட்நாம் போரில் வியட்நாமிற்கு சாதகமான நிலைப்பாட்டிலிருந்ததால் பி.எல்.480 ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது போன்ற நிலைகள் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவினைக் கண்டது. அமெரிக்கா, உலக வங்கி, பன்னாட்டு பணநிதியம் போன்றவை வர்த்தக, தொழில் கட்டுப்பாட்டில் சீர்திருத்தம், பண மறுமதிப்பீடு செய்வது, புதிய வேளாண்மை அணுகுமுறை தேவை என வலியுறுத்தியது. எனவே வேளாண்மையில் புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது, பண மறுமதிப்பீடு (36.5 விழுக்காடு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது), வர்த்தகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இவை எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு நிலைமையினை சரிசெய்ய இயலவில்லை. இச்சீர்திருத்தங்கள் நீண்ட காலத்திற்கே பயனளிப்பதாக இருந்து. எனவே அரசு தலையிடும் கொள்கையினை கடைப்பிடித்தது. இதனால் அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்தது. வேளாண் உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து உணவு கையிருப்பு அதிகரித்து உணவு இறக்குமதியினைச் சார்ந்த நிலை குறையத் தொடங்கியது. அரசு வரியினை அதிகரிப்பதற்குப் பதில் அரசு செலவுகளைக் கட்டுப்படுத்தியது குறிப்பாக மூலதனச் செலவு 1966-67 மற்றும் 1970-71ல் 50 விழுக்காடு குறைத்தது. இதனால் தொழில் வளர்ச்சி சரியத் தொடங்கியது. இது 1970களின் மத்தியில் வரைத் தொடர்ந்தது. 1951 மற்றும் 1966ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 7.8 விழுக்காடு தொழில் வளர்ச்சி இருந்தது, 1966-1974ஆண்டுகளுக்கிடையே 4.99 விழுக்காடாகக் குறைந்தது.

தொடர்ந்து மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாக்கிஸ்தானுடன் போர் (1965), தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் (1965-66 முதல் 1966-67முடிய) கடும் வறட்சி, 1966ல் ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகக் குறைந்தது மற்றும் பணவீக்கம் அதிகரித்தது போன்ற காரணங்களால் 1966-67 முதல் 1968-69முடிய ஆண்டு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டது. 1967-69ல் காங்கிரஸில் உட்கட்சி பிரச்சனையினால் இந்திரா காந்தி வலதுசாரி இயக்கத்தின் உதவியுடன் ஆட்சியினைத் தக்கவைத்துக் கொண்டார். நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் (1969-1974) வேளாண்மையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1971ல் பாராளுமன்ற தேர்தலில் ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை இந்திரா காந்தி முன்வைத்தார். இத்துடன் பொதுத் துறை வளர்ச்சி, கிராமப்புற நில உச்சவரம்பு, வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வினை களைவது, சமஸ்தானங்களின் சிறப்புச் சலுகைகளை ரத்து செய்தல் போன்றவற்றை முன்னிறுத்தித் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இத் தேர்தலில் இந்திரா காந்தி அமோக வெற்றியினைப் பெற்றார். இதன்பின் நீண்டகால நோக்கில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 21 ஜூலை 1969ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன, இதே ஆண்டில் முற்றுரிமை கட்டுப்பாட்டு வர்த்தக பயன்பாட்டுச் சட்டம் கொண்டு வந்தது. இதனால் முற்றுரிமை நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்டது. இதே ஆண்டில் இந்தியச் சமஸ்தானங்களுக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்த்தை விலக்கிக்கொண்டார். 1972ல் காப்பீடு தேசியமயமாக்கப்பட்டது, 1973ல் நிலக்கரி தொழில் தேசியமயமாக்கப்பட்டது. இதே ஆண்டு கோதுமை மொத்த விலை நிலையினை தேசிய அளவில் பின்பற்றப்பட்டது. 1973ல் அன்னியச் செலாவணி மாற்று முறைப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அயல்நாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டது. அதேசமயம் நலிவுற்ற தொழிற்சாலைகள் அரசு ஏற்று நடத்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தையும், நில உச்சவரம்பையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கைகளால் பொதுமக்களிடமும் குறிப்பாக ஏழை, நடுத்தர கிராமப்புற, நகர்ப்புற மக்களிடையேயும், இடதுசாரிகளிடமும் நன்மதிப்பினை பெறமுடிந்தது. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டமானது (1974-1979) உணவு உற்பத்தி மற்றும் எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக (ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது) இந்த திட்டம் ஓராண்டுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்டது.

எல்.கே.ஜா தலைமையில் பொருளாதார, நிருவாக நடவடிக்கைகளை ஆராயவும், ஆபித் உசைன் தலைமையில் வர்த்தகத்தை ஆயவிடவும் குழு அமைத்தால். இதன் பலன் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலமான 1960களின் மத்தியிலிருந்து 1980களின் இறுதி முடிய இந்தியப் பொருளாதாரம் பெருமளவிற்குச் சாதனைகளைக் கண்டது. 1960களின் மத்தியில் கிழக்கு பாக்கிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) பிரிவினை காரணமாக இனப்படுகொலைகள் நடந்தேறியது. இதனால் 10 மில்லியன் மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தடைந்தனர். 1971ல் பாக்கிஸ்தானுடன் போர், 1972 மற்றும் 1974ல் இரண்டு பஞ்சங்கள், 1973ல் பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது இதனால் இறக்குமதி செலவு அதிகரிக்க தொடங்கியது, பெட்ரோல் விலை இரண்டு மடங்காக அதிகரித்தது, இதனைத் தொடர்ந்து பொருட்களின் விலை உயர்வு, 1978-79ல் சுதந்திரத்திற்குப்பின் கடுமையான பஞ்சம் போன்றவை நிகழ்ந்தது.

இந்திரா காந்தி இந்த அறைகூவல்களை கையாள்வதற்கு பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்தார். குறிப்பாக உணவு தட்டுப்பாடு அடிக்கடி ஏற்பட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதித்தது. எனவே நீண்டகால நோக்கில் பசுமைப் புரட்சியினை 1966ல் நடைமுறைப்படுத்தினார். இதன்படி அதிக விளைச்சல் தரக்கூடிய உயர் ரக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இயந்திரங்களை பயன்படுத்துதல் போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. துவக்கத்தில் கோதுமைக்கான புதிய மெக்சிகன் விதைகள் (சோனால 64 மற்றும் லர்மா ரோஜே 64) குறுகிய காலப் பயிர் செய்வது அறிமுகப்படுத்தப்பட்டது பின்னால் இந்தியாவில் புதிய வகை விதைகள் பயன்படுத்தப்பட்டது. இதுபோல் நெல்லுக்கு புதிய உயர் விளைச்சல் தரும் ரகமான ஐ.ஆர் 8, அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவு உற்பத்தி அதிக அளவிற்கு உயர்ந்தது (ICAR 2022). இதன் மூலம் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது, வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டது. இந்திரா காந்தி உணவு உற்பத்திக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த முதல் அரசியல் தலைவராகும். வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. அப்போது பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததால் பல்வேறு வேளாண்மை சீர்திருத்தங்களை எளிதில் நடைமுறைப்படுத்த முடிந்தது. இதனால் 1967-68 மற்றும் 1970-71ஆம் ஆண்டுகளுக்கிடையே உணவு உற்பத்தி 35 விழுக்காடு அதிகரித்தது. உணவு இறக்குமதியானது 10.3 மில்லியன் டன்னிலிருந்து 3.6 மில்லியன் டன்னாகக் குறைந்தது. உணவு கையிருப்பானது 73.5 மில்லியன் டன்னிலிருந்து 89.5 மில்லியன் டன்னாக இவ்வாண்டுகளில் அதிகரித்தது. இது 1978ல் 110.25 மில்லியன் டன்னாகவும், 1984ல் 128.8 மில்லியன் டன்னாகவும் அதிகரித்தது. இதனால் இந்தியா உணவிற்காக அயல் நாடுகளிடமிருந்து கையேந்தும் நிலைமை மாறி உணவு பாதுகாப்பினை உறுதி செய்தது. உணவுப் பஞ்சம் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்ளும் துணிவும் உருவானது (Bipan Chandra et al 2008). அதேசமயம் விவசாயிகளிடையே ஏற்றத் தாழ்வு அதிகரித்துக் காணப்பட்டது. இதற்கு முக்கியக் கரணம் பசுமைப் புரட்சியானது வளமான பகுதியான பஞ்சாப் மற்றும் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் கோதுமையும், ஆந்திரப் பிரதேசம் (பிரகாசம் மாவட்டம்) மற்றும் தமிழ்நாட்டில் (தஞ்சாவூர் மாவட்டம்) பகுதிகளில் புதியவகை நெல் விதை ரகங்கள் மற்றும் செயற்கை உரங்கள் பயன்படுத்தி வேளாண் சாகுபடி செய்தனர். இதன் விளைவு அதிக அளவிற்கு உணவு உற்பத்தி அதிகரித்தது. இதனால் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் நெல், கோதுமை விலை வீழ்ச்சி அடைந்தது. எனவே விவசாயப் பணிகள் துவக்கும் போது குறைந்த பட்ச ஆதார விலை அறவிக்கப்பட்டது. இக் குறைந்த பட்ச ஆதார விலையானது அதன் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்டது. இதைத் தவிர அரசு பொது விநியோகத்திற்காக நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் மையங்கள் வழியாக நெல், கோதுமையினைக் கொள்முதல் செய்தது. இக் கொள்முதல் விலையானது குறைந்த பட்ச ஆதார விலையினை விட அதிகமாக இருந்ததது. விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்கு வங்கிகள் கடன்களைத் தாராளமாக வழங்கியது. இதனால் விவசாயிகள் லாபம் பார்க்கத் தொடங்கினர். வேளாண்சாரப் பொருட்களின் தேவை அதிகரித்தது, வேலைவாய்ப்பு பெருகியது, வறுமை பெருமளவிற்குக் குறைந்தது. கிராமப்புற மேம்பாடு அடையத் தொடங்கியது. அதே சமயம் வேளாண் இடுபொருட்களில் ஒன்றான தொழிலாளர் கூலி அதிகரித்தது.

பசுமைப் புரட்சியின் ஒரு முக்கிய விளைவு சிறு விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களையும், மேம்படுத்தப்பட்ட விதைகள், இதர இடுபொருட்களை பயன்படுத்தத் தொடங்கியதால் விளைச்சல் பெருகி வருமானம் அதிகரித்தது. இதன் விளைவு நிலமற்ற விவசாயிகள் அதிகரிப்பு அதிக அளவில் குறைந்தது. வேளாண்மையில் வருமானம் அதிகரித்ததால் விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபடுத் தொடங்கினர். வேளாண் நிலத்தின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து குத்தகையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதே சமயம் தொழிலாளர் கூலி அதிகரித்தது, வேளாண்மையில் தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் அதனைச் சார்ந்த தொழில்கள் பெருகியது (டிரக்டர் உற்பத்தி, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி உற்பத்தி, மோட்டர் பம்பு உற்பத்தி, போக்குவரத்து வாகன உற்பத்தி, வாகன பழுது பார்த்தல்). பசுமைப் புரட்சி குறிப்பிட்ட மாநிலங்களில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் விவசாயத் தொழிலாளர்களின் தேவை அதிகரித்தது புலம்பெயரும் விவசாயத் தொழிலாளர்கள் பெருகினர். இதனால் கிராமப்புற வருமானம் பெருகத் தொடங்கியது, வேளாண் சாரா தொழில்களை நோக்கி கிராமப்புறத் தொழிலாளர்கள் நகரத் தொடங்கினர். அதே சமயம் அளவிற்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது, அதிக அளவிற்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டதால் நிலத்தின் தன்மை குறைந்தது, சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டது.

இந்திரா காந்தியின் முதல் ஆட்சி காலகட்டத்தில், இந்தியா சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகள் கழிந்தும் வறுமையின் தாக்கம் குறையவில்லை. 1960களின் மத்தியில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கடும் வறட்சி நிலவியது, உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. 1962ல் சீனாவுடன் போர், 1965ல் பாக்கிஸ்தானுடன் போர் இதன் காரணமாகப் பாதுகாப்பு செலவு அதிகரித்தது. இதனால் மேற்கத்திய நாடுகளின் உதவியினைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வறுமையினை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது. இத்துடன் 1960களில் எப்போதும் இல்லாத நிலையில் மக்கள் தொகை அபரீதமாக வளர்ச்சியடைந்தது (1971ல் 548.2 மில்லியன் மக்களில் 80 விழுக்காட்டினர் கிராமங்களிலிருந்தனர். இவர்களில் 68.3 விழுக்காடு வேளாண்மையினைச் சார்ந்து வாழ்ந்தனர், வேளாண்மை தொழிலாளர்கள் 37.8 விழுக்காடாக அதிகரித்திருந்தது). பெரும்பான்மையான தொழிலாளர்கள் பங்கேற்பானது வேளாண்மையினைச் சார்ந்திருந்தது. இவர்கள் அதிக அளவில் வறுமையிலிருந்தனர். இந்திரா காந்தி பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றவுடன் வறுமையினை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டினார். வறுமை நகர்ப்புறங்களைவிடக் கிராமப்புறங்களில் அதிக அளவிலிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் கிராமப்புறங்களில் நான்கில் மூன்று பங்கு மக்கள் வேளாண்மையினையும் அதனைச் சார்ந்த தொழிலையும் சார்ந்து வாழ்ந்ததாகும். எனவே வறுமையினை ஒழிக்க ‘கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்’, ‘சிறு விவசாயிகள் வளர்ச்சி முகவர்கள் திட்டம்’, ‘குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் திட்டம்’, ‘கிராமப்புற வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம்’, ‘வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ போன்றவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு முறையே 25 விழுக்காடு மற்றும் 33.3 விழுக்காடு மானியங்கள் வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவிற்கு முறைசார் கடன்களைப் பெற்றனர். இதனால் விவசாயிகளின் வருமானம் பெருகி வறுமை குறைந்தது. வேளாண்மையில் புகுத்தப்பட்ட சீர்திருத்தங்களினாலும், வறுமை ஒழிப்பு திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப் படுத்தியதாலும் வறுமையின் தீவிரம் குறைந்தது (Balakrishnan 2022). 1965-66ல் கிராமப்புற வறுமை 53.9 விழுக்காடாக இருந்தது 1977-78ல் 39.1 விழுக்காடகக் குறைந்தது. (Montek Ahluwalia 1985).

ஒட்டுமொத்த பார்வையில் இந்திரா காந்தி தன்னுடைய முதல் காலகட்டத்தில் வேளாண்மை நில உடமையின் மீதான உச்ச வரம்பு குறைக்கப்பட்டது, கண்டறியப்பட்ட உபரி நிலங்களை நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கும் குறு விவசாயிகளுக்கும் வழங்கும் சட்டத்தைப் பல மாநில அரசுகள் நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டது, சமுதாயத்தில் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் குறைந்த விலையில் உணவு தானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தியது, சிறுதொழில், விவசாயம், சாலை போக்குவரத்து இயக்குபவர்கள் மற்றும் சுயமாக வேலை செய்பவர்களுக்குக் கடன் கிடைக்க வழிசெய்யும்பொருட்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது, இதனால் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டது, இதன் விளைவு 1951ல் நிறுவனம் சாரா கடனின் பங்கானது 92.7 விழுக்காடாக இருந்தது 1971ல் 68.3 விழுக்காடாகக் குறைந்தது மாறாக நிறுவனம் சார் கடனின் பங்கானது 7.3 விழுக்காடாக இருந்தது 32.7 விழுக்காடாக இவ் ஆண்டுகளில் அதிகரித்தது (ICAR 2022). 1966-67ல் விவசாயிகள் வங்கிகளிடம் 2.2 விழுக்காடு மட்டுமே கடன் பெற்றிருந்தனர் இது அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு 9.1 விழுக்காடாக அதிகரித்திருந்தது (Abheek Barman 2016). ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடன் அளவு 1967ல் 8.5 விழுக்காடாக இருந்தது 1984ல் 18.6 விழுக்காடாக அதிகரித்தது (Tadit Kundhu 2016). திட்டக்குழுவினைச் சிறப்பாகக் கட்டமைத்துத் திட்டமிடலைச் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டது என பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டார்.

இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயண தலைமையில் தேசிய அளவில் ஊழல், தவறான நிர்வாகம் ஆகியவற்றிற்கு எதிராகப் பிரச்சாரமும் போராட்டமும் தீவிரமாக நடைபெற்றது. இப்பிரச்சனையினைக் கையாள இந்திரா காந்தி ஜூன் 25, 1975ல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். இதனை நியாயப்படுத்த இந்திரா காந்தி சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களும், வறுமையில் வாழ்பவர்களையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல தொடர் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தவும், உள்நாட்டு நலனையும், பிற நாடுகளின் தலையீட்டைக் கட்டுப்படுத்தவும் நெருக்கடி நிலையினை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார். இதன் விளைவு தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். பதுக்கல் காரர்கள், வரி ஏய்பவர்கள் இச்சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையத் தொடங்கியது. உணவு கையிருப்பு அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கிராமப்புற ஏழைகளை மேம்படுத்த ஜூலை 1, 1975ல் 20அம்ச திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு கடன் அளித்தல், சிறு விவசாயிகளுக்கும், கிராமப்புற கைவினைஞர்களுக்கும் மாற்றுக் கடன் அளித்தல், கொத்தடிமைத் தொழிலாளர்களை ஒழித்தல், நடப்பில் உள்ள நில உச்சவரம்பை நடைமுறைப்படுத்துதல், கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கு வழங்குதல், நலிவடைந்த நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருதல், விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலியினை வழங்குதல், கைத்தறி துறைக்குச் சிறப்பு உதவி, பொது விலையினைக் குறைத்தல், வரி ஏய்ப்பு மற்றும் கடத்தல்களைத் தடுத்தல், உற்பத்தியினை அதிகரித்தல், பொருட்களின் பகிர்வினை முறைப்படுத்துதல், வருமான வரியின் உச்ச வரம்பை அதிகரித்தல், முதலீட்டில் தாராள நடைமுறையினைப் பின்பற்றுதல் போன்ற வேளாண் சார் அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. இதனால் உடனடியாக விளைவுகள் பொருளாதாரத்தில் ஏற்படத் தொடங்கியது.

20அம்ச திட்டத்தினால் உணவுப் பொருட்கள் விலை குறைந்தது, இன்றியமையாத பொருட்களின் இருப்பு தாராளமாக இருந்தது. வரி ஏய்ப்பு, பதுக்கல், கடத்தல் போன்றவை குறைந்தது. ஒட்டுமொத்த குறிக்கோளகக் கிராமப்புற ஏழைகளை மேம்படுத்துவது என்பதாகும். இது ஓரளவிற்கு பயனளித்ததது. 3 மில்லியன் வீடுகள் நிலமற்ற விவசாயிகளுக்கும், பட்டியல் இனத்தவருக்கும் வழங்கப்பட்டது. 1.1 மில்லியன் ஏக்கர் உபரி நிலங்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இது உபரி நில இருப்பில் 10.1 விழுக்காடு மட்டுமே. விவசாயக் கடன் வசூல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக நிலமற்ற விவசாயக் கூலிகள் மற்றும் சிறு விவசாயிகளிடம் இது பின்பற்றப்பட்டது. கூட்டுறவு நிதி நிறுவனங்கள், தேசிய வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்பட்டது. குறைந்தபட்ச கூலியினை விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால் 20அம்ச திட்டம் லஞ்சம், திறமையற்ற நிருவாக நடவடிக்கைகள், அரசியல் தலையீடு போன்றவற்றால் பெரும் வெறியுடன் அமையவில்லை. நீதியரசர் ஷ அவர்களின் தலைமையில் அமைந்த கமிஷன் அவசரக்கால பிரகடனத்தில் நடந்தவற்றைப் பற்றி ஆராய்ந்தபோது முறைகேடுகள், விதிமீறல்கள், தவறான நடைமுறைகள், அட்டூழியங்கள், பழிவாங்கல் போன்றவை நடைபெற்றதாக்கக் குறிப்பிட்டது.

இந்திரா காந்தி 1980ல் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதம மந்திரி ஆனார். இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார உத்தியின் மாற்றங்களால் இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை உணர்ந்து தாராளமயப் பொருளாதார கொள்கைகளை அரைமனதுடன் நடைமுறைப்படுத்தினார். இந்திரா காந்தி பன்னாட்டு நிறுவனங்களின் பங்கினால் இந்தியாவின் சுயச்சார்பு பாதிக்கப்படும் என்று கருதினார். இந்தியாவின் 6 வங்கிகளை தேசியமயமாக்கினார். இக்காலகட்டத்தில் ஆண்டுக்கு 4 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்தது. ஆறாவது ஐந்தாண்டு திட்டம் (1980-1985) வறுமையை ஒழிப்பது, வேளாண்மையில் சுயச்சார்பினை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவு வேளாண்மை உற்பத்தி அதிமாக உயர்ந்தது. இதனால் விலை உயர்வானது (பணவீக்கம்) 1984ல் 7 விழுக்காடாகக் குறைந்தது. இந்த நிலையில் அக்டோபர் 31, 1984ல் இந்திரா காந்தி சுட்டுக்கொள்ளப்பட்டார்.

அட்டவணை: இந்திரா காந்தி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு)

பொருளாதாரம் 1952-1966

(இந்திரா காந்தி ஆட்சிக்கு முன்பு)

1967-1984

(இந்திரா காந்தி ஆட்சி)

மொத்த உள்நாட்டு உற்பத்தி  3.57 3.96
வேளாண்மைத் துறை 1.98 3.31
தொழில் துறை 6.45 4.29
சேவைத் துறை 4.46 4.63

Source: Tadit Kundu (2016): “How India fared Under Indira Gandhi,” Mint, 30.11.2016.

இந்திரா காந்தி 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரின் பங்கு அளப்பரியது. அரசியல் ரீதியாக 1969ல் காங்கிரஸ் உடைந்தது, 1971ல் பங்களாதேஷ் பிரச்சனை, இதன் தொடர்பாக அமெரிக்காவின் நெருக்குதல், 1966ல் பஞ்சாப் சபா உருவானது. 1975ல் நெருக்கடிக்கால பிரகடனம், இதன் மீதான விசாரணைக் கமிஷன் போன்றவை அரசியல் ரீதியான சவால்களாக இருந்தது. 1960களின் பிற்பகுதியில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, 1970களில் ஏற்பட்ட எண்ணெய் (குருடாயில்) நெருக்கடி, போன்றவற்றால் விலை உயர்ந்தது. உணவுப் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாகப் பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்து உணவு உற்பத்தியில் சுயச்சார்பு அடைய செய்தது. உணவு பாதுகாப்பிற்கு வழிவகுத்தது. பொதுத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நேருவின் வழியினையே பின்பற்றினார். கிராமப்புற, நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள், சிறுபான்மையினர், மகளீர் பாதுகாப்பு உறுதி செய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்தார். அதே சமயம் நிர்வாக தோல்வி, அரசியல் பழிவாங்கல் போன்ற நடவடிக்கை அதிகமாக இவர் காலத்தில் காணப்பட்டது.

1980களில் இந்திய வேளாண்மை சீர்திருத்தினால் உணவு உற்பத்தி பெருகி இருந்தாலும், பசுமைப் புரட்சியின் விளைவுகள், பெருமளவிற்கு வட்டார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருந்தது மேலும் இது இந்தியாவின் கிராமப்புற மாவட்டங்களில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. பெரும்பான்மையான மழை மறைவு விளைநிலங்களில் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தவில்லை. தண்டேக்கர் மற்றும் ராத் அவர்களின் ஆய்வின்படி 40 விழுக்காடு கிராமப்புற மக்களும் 50 விழுக்காடு நகர்ப்புற மக்களும் வறுமையிலும் அடிப்படை வாழ்க்கை மட்டத்தினை பெறமுடியாமலும் இருந்தனர். இந்தியாவின் கிராமப்புற ஏழைகள் தங்கள் வருவாயில் 80 விழுக்காடு உணவிற்காகச் செலவிட்டனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் வேளாண் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. இதனால் ஏழை, விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வாழ்நிலைக்கான நம்பிக்கையினை உருவாக்கித்தந்தது.

– பேரா.பு.அன்பழகன்

நாம் எதிர்காலக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது கட்டுரை – விஜய் பிரசாத் (தமிழில் : கி.ரமேஷ்)

நாம் எதிர்காலக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது கட்டுரை – விஜய் பிரசாத் (தமிழில் : கி.ரமேஷ்)




அன்பு நண்பர்களே,

சமூக ஆய்வு நிறுவனம் ட்ரைகாண்டினெண்டலின் சார்பில் வாழ்த்துகள்.

2022, ஏப்ரலில் ஐ. நா. வானது உலக நெருக்கடி எதிர்ப்புக் குழுவை உணவு, சக்தி, நிதிக்காக உருவாக்கியது. இந்தக் குழுவானது உணவுப் பணவீக்கம், எரிபொருள் பணவீக்கம், நிதித் துன்பம் (financial distress) ஆகிய மூன்று பெரும் நெருக்கடிகளைப் பின் தொடர்வதற்காக அமைக்கப்பட்டது.  2022 ஜூன் 8 அன்று வெளியிடப்பட்ட இரண்டாவது அறிக்கையானது, கோவிட் 19 பெருந்தொற்றுத் தாக்கிய இரண்டாண்டுகளுக்குப் பிந்தைய நிலையைக் குறிப்பிட்டது:

உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்று 60 சதவிகிதத் தொழிலாளர்கள் பெருந்தொற்றுக்கு முன்னால் வாங்கிய உண்மை ஊதியத்தை விடக் குறைவாகப் பெறுகிறார்கள்; ஏழை நாடுகளில் 60 சதம் மிகவும் தீவீரமான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளன அல்லது அதைப் பெறும் உச்சகட்ட ஆபத்தில் உள்ளன; வளரும் நாடுகளுக்கு தமது சமூகப் பாதுகாப்பு இடைவெளியை இட்டு நிரப்ப ஆண்டுக்கு 1.2 ட்ரில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது; நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய முன்பு இல்லாத அளவுக்கு ஒரு வருடத்துக்கு 4.3 டிரில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது.

இது துன்பத்திலிருக்கும் உலக நிலைமை குறித்துத் துல்லியமான ஏற்கக்கூடிய விளக்கம்.  நிலைமை இன்னும் மோசமாகவே போகப் போகிறது.

உலக நெருக்கடி எதிர்ப்புக் குழுவின்படி, பெருந்தொற்றின் போது அளித்த நிவாரண நிதியை ஏற்கனவே பெரும்பாலான முதலாளித்துவ நாடுகள் திரும்பப் பெற்று விட்டன.  ‘சமூகப் பாதுகாப்பு அமைப்புகளும், பாதுகாப்பு வலைகளும் போதுமான அளவு விரிவுபடுத்தப்படாவிட்டால் பட்டினியை எதிர்நோக்கும் வளரும் நாடுகளின் ஏழைக் குடும்பங்கள் ஆரோக்கியம் தொடர்பான செலவைக் குறைக்கக் கூடும்; பெருந்தொற்றின் போது தற்காலிகமாகப் பள்ளிகளை விட்டு வெளியேறிய குழந்தைகள் இப்போது நிரந்தரமாக வெளியேறும்; அதிகமான மின்சாரக் கட்டணங்களால் சிறு, குறு தொழில்முனைவோர் தமது தொழில்களை மூடி விடக் கூடும்’.

 

ரெனாட்டோ குட்டுசோ, லா உக்கிரியா, 1974.

2024 இறுதிவரை உணவு, எரிபொருள் விலைகள் உச்சத்திலேயே இருக்குமென்று உலக வங்கி கூறுகிறது. கோதுமை, எண்ணை வித்துக்களின் விலைகள் உயர்ந்து விட்டதால், முன்னேறிய நாடுகள் உட்பட,  தொழிலாளர் குடும்பங்கள் தமது உணவைத் தவிர்க்கத் டங்கி விட்டதாக உலகம் முழுவதிலிருந்தும் செய்திகள் வருகின்றன. இந்தப் பதற்றமான உணவு நிலைமையானது, ஐ.நா. பொதுச்செயலாளரின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நிதியின் சிறப்புத் தூதரான நெதர்லாண்டைச் சேர்ந்த குவீன் மாக்சிமாவை, ‘உலகில் இன்னும் அதிகமான நிலையின்மை வருவதற்கான மூலமாக இருக்கும்’ என்று கணிக்க வைத்துள்ளது. அடமான கடன்கள் (mortgage payments) மீது அதிகரிக்கும் வட்டி விகிதங்கள், பற்றாக்குறை ஊதியங்களின் தாக்கத்தைக் கணக்கில் கொண்டால் நாம் இப்போது ‘ஒரு சரியான புயலில்’ மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று உலகப் பொருளாதார அமைப்பு மேலும் கூறுகிறது. சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிரிஸ்டலினா ஜார்ஜிவா கினோவா கடந்த மாதம் ’வானம் இருண்டு விட்டதெனக்’ கூறினார்.

 

இந்த மதிப்பீடுகளெல்லாம் வலுமிக்க உலக நிறுவனங்களான சர்வதேச நிதியம், உலக வங்கி, உலகப் பொருளாதார அமைப்பு, ஐ.நா. (ராணியிடமிருந்து கூட) ஆகியவற்றிடமிருந்து வருகின்றன.  அவர்களெல்லாம் நெருக்கடியின் கட்டமைப்பு இயல்பைப் புரிந்து கொண்டாலும் கூட, அவர்கள் அதன் அடிப்படையில் இருக்கும் பொருளாதார நிகழ்வுகள் பற்றியோ அல்லது நிலைமைக்கு போதுமானபடி பெயர் வைப்பதிலோ கூட நேர்மையாக இருப்பதற்குத் தயங்குகிறார்கள். உலக முதலீட்டு நிறுவனமான கார்லைல் குழுமத்தின் தலைவர் டேவிட்.எம்.ரூபன்ஸ்டீன் அவர் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, அவர்களது பணவீக்க ஆலோசகர் ஆல்பிரட் கான் அவர்களை மக்களை பயமுறுத்தும் ‘ஆர்’ (Recession – மந்தநிலை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருக்குமாறும், அதற்குப் பதிலாக ‘வாழைப்பழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.  அந்த வழியில், ரூபன்ஸ்டீன் தற்போதைய நிலையில், ‘ நாம் வாழைப்பழ நிலையில் இருக்கிறோம் என்று கூற விரும்பவில்லை, ஆனால் நாம் இன்றிருக்கும் நிலையில்  அந்த நிலை தொலைவில் இல்லை என்று மட்டும் கூற முடியும்’ என்றார்.

வாழைப்பழம் என்பது போன்ற இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மார்க்சியப் பொருளாதார நிபுணர் மைக்கேல் ராபர்ட்ஸ் ஒளிந்து கொள்வதில்லை. மூலதனத்தின் மீது உலக சராசரி இலாப விகிதம் 1997லிலிருந்து சிறு பின்வாங்கல்கள் தவிர வீழ்ச்சி அடைந்து வருவதாக அவர் ஆய்வில் தெரிவிக்கிறார்.  இந்தப் போக்கு 2007-08 உலகளாவிய நிதி நெருக்கடியால் மேலும் அதிகரித்து 2008இல் பெரும் மந்தநிலைக்கு இட்டுச் சென்றது.  அதிலிருந்து உலகப் பொருளாதாரம் ஒரு ‘நீண்ட மந்தநிலையின்’ பிடியிலிருக்கிறது, (பெருந்தொற்றுக்கு சற்று முன்னால்) 2019இல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இலாபம் மிகவும் குறைவாக இருந்தது என்று அவர் வாதிடுகிறார்.

 

யில்டிஸ் மொரான் (துருக்கி), மதர், 1956

‘முதலாளித்துவத்தில் இலாபம்தான் முதலீட்டை ஊக்குவிக்கிறது’ என்று எழுதுகிறார் ராபர்ட்ஸ். ‘எனவே, வீழ்ச்சியடையும், குறைந்த இலாபமீட்டல் என்பது பலன் தரும் முதலீடு குறைந்த அளவில் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றது’.  உற்பத்தி செயல்பாட்டில் முதலீடு செய்வதற்கு பதிலாக முதலாளித்துவ நிறுவனங்கள் பங்கு மற்றும் பிணைச் சந்தைகள், கிரிப்டோ கரன்சிகளின் கற்பனை உலகத்துக்குள் சென்று விட்டன என்று ராபர்ட்ஸ் கூறுகிறார்.  இந்த ஆண்டு கிரிப்டோ கரன்சி சந்தை 60% சரிந்து விட்டது.  வடக்குலகில் இலாபம் சரிந்து வருவதால் முதலாளிகள் தெற்குலகில் இலாபத்தைத் தேடவும், அவர்களது நிதி, அரசியல் மேலாதிக்கத்துக்கு மிரட்டலாக இருக்கும் எந்த நாட்டையும் (குறிப்பாக சீனா, ரஷ்யா) அடித்துத் தள்ளவும், தேவையானால் இராணுவத்தைப் பயன்படுத்தி அதைச் செய்யவும் இட்டுச் சென்றுள்ளது.  

பணவீக்கம் செல்லும் பாதை மிகவும் கொடுமையானது.  ஆனால் பணவீக்கம் என்பது ஒரு ஆழமான பிரச்சனையின் அடையாளம்தானே தவிர அது காரணமல்ல.பிரச்சனை என்பது வெறும் உக்ரைன் போரோ, பெருந்தொற்றோ அல்ல, மாறாக புள்ளிவிவரங்களால் நிரூபிக்கபட்டதும் ஆனால் பத்திரிகை சந்திப்புகளில் மறுக்கப்படுவதுமாகும்:
நீண்டகால மந்தநிலையில் மூழ்கியிருக்கும் முதலாளித்துவ முறையால் தன்னை சரிசெய்து கொள்ள முடியாது.  இந்த ஆண்டு ட்ரைகாண்டினண்டால் வெளியிடப்பட்ட, மார்க்சிய பொருளாதார நிபுணர்கள் சுங்குர் சவ்ரானும் இ. அஹ்மத் டொனாக்கும் எழுதிய ‘நெருக்கடியின் கோட்பாடு’ இந்த விஷயங்களைத் தெளிவாக நிறுவும்.

இப்போதைக்கு முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடானது பணவீக்க நெருக்கடி போன்று எந்தப் பொருளாதார நெருக்கடியையும் சரிப்படுத்தும் எந்த முயற்சியும் 1923இல் ஜான் மேனார்ட் கீன்ஸ் எழுதியது போல், ‘முதலீட்டாளரை ஏமாற்றமடைய வைக்கக்கூடாது’.  செல்வந்தர்களான பணப்பத்திரம் வைத்திருப்பவர்களும் பெரும் முதலாளித்துவ நிறுவனங்களும் வடக்குலகின் கொள்கைச் சாய்மானத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களது பண மதிப்பு- சிறுபான்மை வைத்திருக்கும் பல ட்ரில்லியன் டாலர் பணம் – பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.  கீன்ஸ் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதியதைப் போல அவர்கள் ஏமாற்றமடைய முடியாது.  

அமெரிக்காவும் ஐரோப்பிய மண்டலமும் எடுக்கும் பணவீக்கத்துக்கு எதிரான கொள்கைகள் அவர்களது நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தின் சுமைகளைக் குறைக்க முடியாது, நிச்சயமாகக் கடன் சுமையால் தத்தளிக்கும் தெற்குலகின் சுமையைக் குறைக்க முடியாது.  அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பொவெல் தமது நிதிக் கொள்கை ‘சற்று வலியைக் கொடுக்கும்’, ஆனால் ஒட்டுமொத்த மக்களுக்கும் கொடுக்காது என்று ஒப்புக் கொண்டார்.  அமேசானின் ஜெஃப் பெசோஸ் ‘பணவீக்கம் என்பது குறைந்த செல்வமுடையவர்களை பெரிதும் பாதிக்கும் ஒரு பிற்போக்கு வரி’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார்.  வடக்கு அட்லாண்டிக்கில் உயரும் வட்டி விகிதங்கள் அப்பிரதேசத்தில் இருக்கும் சாதாரண மக்களுக்குப் பணத்தை மேலும் செலவுமிக்கதாக ஆக்குவது மட்டுமல்ல, அது தெற்குலகு தமது தேசியக் கடன்களைத் திரும்பச் செலுத்த டாலர்களைக் கடன் வாங்குவதை முற்றிலும் இயலாததாக்குகிறது.  உயரும் வட்டி விகிதங்களும், தொழிலாளர் சந்தையை இறுக்குவதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் வளரும் நாடுகளின் மீதும் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல்கள்.

வடக்குலகின் அரசுகளின் வர்க்க நலன் குறித்துத் தவிர்க்க முடியாதது எதுவும் கிடையாது.  வேறு கொள்கைகளுக்கு வாய்ப்புண்டு; அவற்றில் சிலவற்றைக் கீழே கொடுக்கிறோம்:

* உலகப் பணக்காரர்களுக்கு வரி விதிக்கவும்.  உலகில் 2,668 பில்லியனர்கள் இருக்கிறார்கள், அவர்களது சொத்து மதிப்பு $12.7 ட்ரில்லியன்கள்; அவர்கள் சட்டவிரோத வரிப் பாதுகாப்பிடங்களில் குவித்து வைத்திருக்கும் சொத்தைச் சேர்த்தல் அது $40 ட்ரில்லியன்.  இந்தச் சொத்தைப் பயன்மிக்க சமூகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.  ஆக்ஸ்ஃபாம் குறிப்பிடுவது போல மிகவும் பணக்காரரான முதல் பத்துப் பேரிடம் உலகின் மக்கட்தொகையில் 140% அளவுள்ள 3.1 பில்லியன் மக்களிடம் இருப்பதை விட அதிகமான சொத்து உள்ளது.

* கற்பனையையும் தாண்டி உயர்ந்திருக்கும் பெரும் கார்ப்பரேஷன்களின் மீது வரி  விதிக்க வேண்டும்.  அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் இலாபங்கள் பணவீக்கத்தையும், நிவாரண அதிகரிப்புகளையும் தாண்டி 37% அதிகரித்துள்ளன.  முன்னணி நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லியின் தலைமை அமெரிக்கப் பொருளாதார நிபுணரான எலன் செண்ட்னர், “அமெரிக்க உழைக்கும் வர்க்கம் ஈட்டிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ‘முன்னெப்போதும் இராத அளவுக்கு” நீண்ட மந்தநிலையின் போது சரிவு இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.  மேலும் அதிகமான இலாபம் – ஊதிய சமநிலையை அவர் கோருகிறார்.

* இந்த சமூகச் செல்வத்தை பட்டினியையும், கல்வியின்மையையும் ஒழித்தல், சுகாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்குதல், பொதுப் போக்குவரத்தில் கார்பன் இல்லாத வடிவங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் செலவழிக்க வேண்டும்.

* பணவீக்கத்தை அதிகரிக்கும் உணவு, உரம், எரிபொருள், மருந்துகள் போன்ற பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும்.


பார்படோசைச் சேர்ந்த பெரும் எழுத்தாளர் ஜார்ஜ் லாமிங் (1927-2022) சமீபத்தில் நம்மிடமிருந்து மறைந்தார்.  அவரது 1966 கட்டுரையான ‘மேற்கிந்திய மக்கள்’ என்ற கட்டுரையில் அவர் சொல்கிறார், “நமது எதிர்காலத்தின் வடிவமைப்பு முடிவுறாமல் இருப்பது மட்டுமல்ல; அதற்கான சாரக்கட்டுக் கூட எழுப்பப்படவில்லை.’  இது ஒரு வலிமையான தொலைநோக்குப் பார்வை கொண்டவரின் வலிமையான உணர்வு.  அவர் மேற்கிந்தியத் தீவுகளில் கரீபியனில் இருக்கும் அவரது தாய்மண் அவரது மக்களை பெரும் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கக் கூடிய உயர்தன்னாட்சி பெற்ற பிரதேசமாக உருவாக்கப்படும் என்று நம்பினார்.  அவ்வாறு நடக்கவில்லை.  வினோதமாக, அந்தப் பிரதேசம் சர்வதேச நிதியத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்த சர்வதேச நிதியத்தின் ஜார்ஜீவா கினோவா இந்த வாக்கியத்தைத் தனது சமீபத்தியக் கட்டுரையில் மேற்கோள் காட்டினார்.  ஜார்ஜிவோ கினோவாவும் அவரது ஊழியர்களும் லாமிங்கின் உரையை முழுமையாகப் படிக்கவில்லை என்று தோன்றுகிறது.  அந்தப் பத்தி 1966இல் எவ்வளவு விளக்கமாக இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது:இந்த அரங்கில் வலிமையான பொருளாதார நிபுணர்களின் குழு இருக்கிறது என நான் நம்புகிறேன்.  அவர்கள் பிழைப்புக்காக புள்ளியியலைக் கற்பிக்கின்றனர்.  அவர்கள் சுதந்திரத்துக்கு ஒப்பீட்டு விலையை எதிர்பார்த்து எச்சரிக்கின்றனர் . . . (நான்) ஒரு சாதாரண பார்பாடியன் தொழிலாளியின் கதையை நீங்கள் மனதில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அவர் கடந்த பத்தாண்டுகளாக யாரைப் பார்க்கவில்லை என்று, ‘விஷயங்கள் எப்படி இருக்கின்றன’ என்றும் இன்னொரு மேற்கிந்தியரால் கேட்கப்பட்ட போது,  அவர் பதிலளித்தார்: ‘புல்வெளி பசுமையாக இருக்கிறது, ஆனால் அவர்கள் என்னை ஒரு சிறிய கயிற்றால் கட்டிப் போட்டு விட்டார்கள்’.

விஜய பிரசாத்
தமிழில் : கி.ரமேஷ்

பணவீக்கம் : உழைக்கும் மக்கள் மீது கொடூரமான தாக்குதல் – தமிழில் : ச.வீரமணி

பணவீக்கம் : உழைக்கும் மக்கள் மீது கொடூரமான தாக்குதல் – தமிழில் : ச.வீரமணி



நாடு, பணவீக்கச் சூழலில் சிக்கியிருப்பதன் விளைவாக மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு விலைவாசிகள் நாளும் உயர்ந்துகொண்டிருப்பது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் வாழ்க்கையில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மே மாதத்தில் சில்லரைப் பணவீக்க விகிதம் 7.8 விழுக்காடு அளவிற்கு இருந்தது. கடந்த எட்டாண்டுகளில் இதுவே மிகவும் அதிகபட்ச அளவாகும். உணவுப் பொருள்களின் பணவீக்கமும் 8.38 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதுவும் கடந்த 17 மாதங்களில் அதிகபட்ச அளவாகும். இதே போன்றே மொத்த விலைவாசிக் குறியீட்டெண் பணவீக்கமும் ஏப்ரல் மாதத்தில் 15.08 விழுக்காடாக உயர்ந்தது. இதுவும் நடப்புத் தொடரில் உச்சபட்ச அளவாகும்.

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் சாமானிய மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்குக் கூறுவது என்ன? இவற்றின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், கோதுமை, காய்கறிகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்திருக்கிறது என்றே அர்த்தமாகும். ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்றும், பெயரளவுக்கே உண்ண முடியும் என்றே அர்த்தமாகும். அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வாங்கித்தர இயலாது என்பதும், குறைந்தபட்சம் ஒரு நாகரிகமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான பொருள்களை வாங்க முடியாது என்பதுமேயாகும். வட இந்தியர்களின் பிரதான உணவாக விளங்கும் கோதுமை மாவு (atta) விலை, கடந்த ஓராண்டில் மட்டும் (2021 மே முதல் 2022 மே வரை) 13 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. பாலின் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு மேலும், சமையல் எண்ணெய்களின் விலைகள் லிட்டருக்கு 200 ரூபாய்க்கு மேலும், காய்கறிகளின் விலைகள் பல மடங்கும் உயர்ந்திருக்கின்றன.

பணவீக்கம் என்பதன் அர்த்தம், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதாகும். வீதிகளில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள், சிறிய அளவில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். இது சிறிய மற்றும் நுண்ணிய வர்த்தகப்பிரிவினரையும் பாதித்திருக்கிறது.

பணவீக்கச் சுழலில் விலைவாசி உயர்வுக்கு மிகவும் முக்கிய காரணியாக விளங்குவது எரிபொருள்களின் விலை உயர்வாகும். ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீது வரிகளை உயர்த்திக்கொண்டே இருப்பது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி இருக்கின்றன. உக்ரேன் யுத்தம் துவங்குவதற்கு முன்னரே இவற்றின் விலைகள் உயர்ந்துவிட்டன. உக்ரேன் யுத்தம் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டே இருப்பது, அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கும் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

பெட்ரோல் மீதான வரியில் 96 விழுக்காடும், டீசல் மீதான வரியில் 94 விழுக்காடும் செஸ் வரி மற்றும் சர்சார்ஜ் வரி என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும். இவையெல்லாவற்றையும்விட மிகவும் குரூரமான விலை உயர்வு என்பது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வாகும். சாமானிய குடும்பத்தினருக்கு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 431 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது 76 விழுக்காடு உயர்வாகும். வணிகரீதியாக வழங்கப்படும் 19 கிலோ கிராமுக்கான சிலிண்டரின் விலை இப்போது 2,397 ரூபாயாகும். அதாவது 126 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது.

பணவீக்கம் தொடர்பாக மோடி அரசாங்கம் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் மிகவும் அலட்சியமான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்திற்கான சில்லரைப் பணவீக்கம் தொடர்பான விவரங்கள் வெளியான அன்றைய தினமே, நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், இது பணக்காரர்களைப் பாதிப்பதோடு ஒப்பிடும்போது ஏழைகளுக்கு மிகவும் குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கையில், “இந்தியாவில் பணவீக்கத்தின் தாக்கம் உயர் வருமானம் பெறுபவர்களைப் பாதித்த அளவிற்கு, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களைப் பாதிக்கவில்லை என்றே கிடைத்திருக்கும் சாட்சியங்கள் காட்டுகின்றன,” என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும் அந்த அறிக்கையின் முடிவில், நுகர்வு செலவினமானது மக்கள் தொகையில் உயர்நிலையில் உள்ளவர்களில் 20 விழுக்காட்டினருக்கும், மத்திய நிலையில் உள்ளவர்களில் 60 விழுக்காட்டினருக்கும், அடித்தட்டு நிலையில் உள்ளவர்களில் 20 விழுக்காட்டினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறியிருக்கிறது.

இந்த அறிக்கை இவ்வாறு முடிவுக்கு வந்திருப்பதில் உள்ள போலித்தனத்தை ஓர் அம்சத்திலிருந்து தெளிவாக உணர முடியும். மாதாந்திர பொருளாதார அறிக்கை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு நுகர்வு வர்க்கங்களுக்கிடையேயும் பணவீக்கத்தின் பாதிப்பு விகிதம் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மிகவும் புத்திசாலித்தனமாக மழுப்பியிருக்கிறது.

பணவீக்கம் பணக்காரர்களையே அதிக அளவில் பாதித்திருக்கிறது என்று கூறப்படும் சிந்தனையை நீக்கிட வேண்டும். ஏனெனில் பணவீக்கம் ஊதியம் பெறுவோரையும், குறைந்த சேமிப்பு உள்ளவர்களையும் நேரடியாகத் தாக்குகிறது. குறிப்பாக உணவுப் பணவீக்கம் அவ்வப்போது உணவுப் பொருள்களை வாங்குபவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. பணக்காரர்களும், உயர் மத்திய வர்க்கத்தினரும் தங்களுடைய நிதி மேலாண்மை மற்றும் பங்குச்சந்தைகள் மூலமாக வருமானங்களுக்கு வேலைகட்டிடமுடியும். அதன் மூலம் தங்கள் வருமானத்தைப் பெரிய அளவில் பாதுகாத்திட முடியும்.

பணவீக்கம் பொதுவாக வருமானத்தை ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு மாற்றுவதற்கே இட்டுச்செல்கிறது. ஏனெனில் ஏழைகள் தங்கள் உண்மையான வருமானத்தில் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கு, பணக்காரர்களுக்கு இருப்பது போன்று எவ்விதமான வாய்ப்பும் கிடையாது. கார்ப்பரேட்டுகள் சந்தையின் மீது கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் அவர்கள் பணவீக்கத்தால் ஏற்படும் உயர் இடுபொருள் செலவினங்களின் சுமையை எளிதாக நுகர்வோருக்கு மாற்றிவிடுவார்கள். அதன்மூலம் அவர்கள் தங்கள் லாப விகிதத்தில் இழப்பு ஏற்படாது தக்க வைத்துக்கொள்வார்கள். மேலும், பணவீக்கத்தின் காரணமாக, சேமிப்பாளர்களின் உண்மையான வட்டி வருவாயும் வீழ்ச்சி அடைகிறது.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பெட்ரோலியப் பொருட்களின் மீதான அனைத்துவிதமான சர்சார்ஜ் வரிகளையும் ரத்து செய்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. இது ஒன்றுதான் பெட்ரோல், டீசல் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திட வழியாகும். மேலும் அவர்கள், அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும், குறிப்பாக சமையல் எண்ணெய்கள் மற்றும் தான்யங்களை பொது விநியோக முறையில் அளிப்பதன் மூலம் பொது விநியோக முறையை வலுப்படுத்திட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள். மேலும் கோவிட் பெருந்தொற்று ஈராண்டு காலமாகக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக, வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கமாக அளித்திட வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள்.

விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தணிப்பதற்கும் இந்நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இதுவே இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்திற்கும் முன்னுரிமை நிகழ்ச்சிநிரலாக மாற வேண்டும். இதன் அடிப்படையில்தான் இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் வரும் மே 25-31 தேதிகளுக்கிடையே இக்கோரிக்கைகள் மீது போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக இத்தகைய போராட்டங்களும் இயக்கங்களும் நாடு முழுதும் பரப்பப்பட்டு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

(மே 18, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி