Ingirundhavargal Poem By Era Ashok kumar இங்கிருந்தவர்கள் கவிதை - இரா. அசோக்குமார்

இங்கிருந்தவர்கள் கவிதை – இரா. அசோக்குமார்




ஆற்றங்கரை நாகரீகத்தின் காலம் தொட்டு
தங்கியிருந்த வீட்டின் வாசலில்

இப்பொழுது
எங்கிருந்தோ
வந்து நிற்கின்றன
ஆதிக்கக் கால்கள் !

பட்டா இல்லாத
வீடென்று புல்டோசரின்
நாக்குகள் விழுங்குகின்றன ..

பட்டாம்பூச்சியின் சிறகில்
பாறை வந்து விழுந்தது..

பள்ளிக்கூட நோட்டில்
பரிதவிப்பாய் ஒட்டிக் கிடக்கிறது
பாதி எழுதிமுடித்த
வீட்டுப் பாடங்கள் ..

கிழிந்த சட்டையில்
கிழியாமல் கிடக்கிறது
வேர்வைக் கூலியான
நூறு ரூபாய் தாள் ..

இருபது முறைக்கு மேல்
தைத்த செருப்புகள் பல
இரும்பு போல கிடக்கின்றன..

சிதறிய ரேசன் அரிசியில்
வண்டுகள் தானாய்
வெளியேறிக் கொண்டிருக்கின்றன ..

கதவாகத் தொங்கிய
கோணிப்பை
புல்டோசரின் பல்லில்
சிக்கியது
பார்த்த கண்களுக்கு என்னவோ
என்னை இடிக்காதே என்று
மன்றாடுவதாகவே தோன்றியது..

அது
எந்த வர்ணமும் இல்லாத
சுவர் ..
எனவே
உடனே சாய்க்கப்பட்டது

அவசரமாக இடிக்கப்பட்ட
வீட்டினுள் நசுங்கிப் போயின
நாளைய கனவுகள் !

இந்நகரம்
தன் நகங்களில் அழுக்கை
சுமந்த கரம்
சுத்தம் செய்த நகரம் ..

அக்கரங்களை
நகரம் விட்டு
நகரச் சொல்வது
முட்கள் கொடுக்கப்படுகின்றன !
பன்னீரைத் தயாரிப்பவர்கள்
கண்ணீரில் கரைகின்றனர் !

வளமைக்கு
கோபுரம் வடிவமைப்பவர்
வறுமையின்
வேலியில்
வதைபடுகின்றனர் !

நாளையின் விடியலை
ஏற்றி வைப்பவர்கள்
என்றைக்கும்
இருட்டைப் பூசிக் கொள்கின்றனர் !

கண்ணீரும் வியர்வையும்
அவர்களுக்குப் புதிதல்ல
ஆனால் இப்போது
துடைப்பதற்குக் கூட
சக்தி இல்லாத நிலை !

உருகி ஓடாத
உயிரும் உழைப்புமே
அவர்களின்
மூலதனம் ! ..

பூட்ஸ் கால்களால்
அறுக்கப்பட்டன
அவர்கள்
வாழ்வின் நரம்புகள் ..

கட்டிடங்கள் உயர்ந்து நின்றபோது
மனிதம் ஏனோ
மண்ணில் விழுந்தது

தன்னை நம்பி
நாளும் உழைத்தவனை
இம்மண்ணை விட்டுத்
தள்ளி வைக்காதீர்

உலக அதிகாரமே
உணருங்கள் ..
உங்கள் உதடுகளின்
புன்னகையை
உடைந்து கிடக்கும்
உள்ளத்திற்கும் கடத்துங்கள்

கூரையின் உள்ளே
கூனிக்கிடக்கும்
இதயத்திற்கும்
இன்ப இசையை பரப்புங்கள் !

மனிதனின் கரம் பற்ற
ஒரு மனிதன் வேண்டும் !
கரம் பற்றி கரம் பற்றியே
நாம் மனிதனாக வேண்டும் ..

இங்கிருக்கும்
சாதியைத் தூக்கி எறியுங்கள்
இங்கிருக்கும்
தீண்டாமையைத் தூக்கி எறியுங்கள்
இங்கிருக்கும்
அநீதிகளைக் களையுங்கள்

இங்கிருந்தவர்களை
மட்டும்
இங்கேயே விட்டு விடுங்கள்.